கடிவாளம் அறுந்துவிட்டதா …?- சிறுகதை-சி.புஷ்பராணி

அவளின்   தோழி  பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் கடுமையான நோயுடன் போராடுவதாகச்  சொன்னாள். மனதுக்குள் ஒருவித பதட்டம் எட்டிப்பார்த்தபோதும், எதுவுமே  பேசாது மௌனம் பூண்டாள்.

“நான்  நாளைக்கு அவனைப் பார்க்கப் போகின்றேன், வீட்டுக்கு  அனுப்பிவிட்டார்கள்; நீயும் வா  ,உன்னைக்கண்டால் சந்தோசப்படுவான்; இந்த  நேரத்தில் கோபமெல்லாம்  செல்லாது.. வா.”

உறுதியாக  மறுத்தவள், எங்கோ பார்வையைச் செலுத்திக்கொண்டிருந்தாள். அவன் நடமாட்டம் அருகி  வீட்டிலேயே இருப்பதாகவும் பின்னர் அறிந்தாள். வரிசைக்கிரமமின்றி அவன் பற்றிய ஞாபகங்கள்  கிளைவிட்டுப்  பிரவாகித்தன. இருவரும் ஒன்றாக அருகமர்ந்து  கவிதைகள் எழுதியது, நாட்டு  நடப்புக்கள்  கதைத்து, ஒரே  திசையில்  பயணித்தது, மகிழ்ந்தவை, கோபித்தவை என்று எல்லாமே ஒருமித்து ஒளிதெறிக்கக் கண் முன்னே விரிகின்றன.

‘எல்லாவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினேனே .. எப்படி உயிர் பெற்றன’? அவையெல்லாம்…அனலாகக்  கொதிக்கின்றாள். இப்போது அடிக்கடி அவன் நினைவு பீறிட உக்குருகிப் போகின்றாள்.

மௌனித்த அத்தனையும்  குதித்துக் கும்மாளமிட்டு அவளின்  ஒவ்வோர் அணுவையும் குத்தி  எடுக்கின்றதே.. தன்னைத்தானே ஏமாற்றி  மறுதலித்தவை, இனித்  திரும்பி வராதவை என்று  தெரிந்தும்,  ஒட்டு மொத்தமாக  அந்த  இனிமைகளைத்  தன்னோடு சேர்த்து அணைக்கத் துடிக்கும் கற்பனைகளில் பைத்தியம்போல   ஆகிவிட்டாள்.

“என் கண்கள் சிறியவை, உன்னைப்போல  பெரிய  அழகான  கண்கள்  எனக்கில்லை” என்றாள் அவனுடன்  பேசும்  பொழுதொன்றில். அவன்  எதுவுமே  சொல்லாமல்  புன்முறுவலுடன்  அவளை  ஊடுருவிப்  பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஒருநாள் அவளின் புத்தகமொன்றின்  பின்பக்கத்தில் ,’காவியக் கண்கள்; கனவுகாணும் கண்கள்.’  என்று  எழுதியிருந்தான். தன்னுடைய  கண்கள் பற்றிச் சொல்கிறானாக்கும் என்று  நினைத்தாள்.

“உன் கண்கள் பற்றித்தானே எழுதியிருக்கின்றாய்? ” சிரித்துக்கொண்டே கேட்டாள். இல்லையென்று  தலையை  ஆட்டியவன் அவள் கண்கள் பக்கம்  கைநீட்டினான்.

“இந்தக் கண்களில்தான் என் கடிவாளமே இருக்கின்றது. அது அறுந்துவிட்டால் என்னால்  தாங்க முடியாது.” ஒருவித கலக்கத்துடன்  மெதுவாகச் சொன்னான்.

அவர்களது  உறவு  முறிந்துவிடுமோ என்று கலக்கம் தோன்றும்போதெல்லாம், ‘கடிவாளம்  அறுந்துவிடாது’ என்பதையே மறைமுகமாகப்  பல  தடவைகளில்  வெளிப்படுத்தியிருக்கின்றாள், வாய் மூலமும், எழுத்துமூலமும்.

கடிவாளம் ஒரு நாள் அறுந்தேவிட்டது.

திடீரென்று அவன் லண்டன் போன செய்தி கேட்டுத் துடித்துப் போய்விட்டாள். வெடித்து வந்த அழுகையை  அமுக்கிவைத்தாள். வீட்டில் எல்லோரும்  தூங்கியபின், வெளியே வந்து வேப்பமரத்தின் வேரில் சாய்ந்து  குமுறிக் குமுறி அழுதாள்.

அவனிடமிருந்து  தந்திரமாக அவள்  பிரிக்கப்பட்டாள். யார் மூலமாவது பதில் அனுப்புவான் என்று காத்திருந்து  சோர்ந்துபோனாள். ஆயிற்று.. வருடங்கள் பாரத்துடன் ஓடிக்கொண்டேயிருந்தன. அவன் பற்றிய  நினைவுகளை உள்ளுக்குள் பதுக்கிவைத்தாள். பின்னர் தமிழ் நாட்டுக்கு  வந்துவிட்டானென்றும் எவர்  வழியாகவோ தெரிந்திருந்தாள்.

எட்டு  வருடங்களின் பின் பிரான்ஸிலிருக்கும் கணவனிடம்  வருவதற்காக இரண்டு வயது  மகனுடனும்,  தங்கையுடனும் கோடம்பாக்கத்தில்  தங்கியிருந்தாள்.  அன்று  கையில்  குழந்தையுடனும்,  தங்கையுடனும்  வீதியில்  வந்துகொண்டிருக்கும்போது, சைக்கிள்  ஒன்று  பக்கத்தில் பிரேக் பிடித்து  நின்றது. சிரித்தபடியே  அவன்  சைக்கிளில் அமர்ந்திருந்தான்.  “பையனா…..?” கேட்டவன் உடனே  குழந்தையைக்  கையில்  வாங்கிக்கொண்டான். குழந்தையை  வைத்துக்கொண்டு  சைக்கிளில் பறந்தான். போன வேகத்தில் குழந்தை  கைகளில் ஒரு சாக்கலேட் பெட்டியை இறுகப் பிடித்திருக்கத் திரும்பினான்.

எதுவுமே  தோன்றாமல் அவனையே பார்த்தபடி  அவள் நின்றிருந்தாள். எவ்வித சலனமும்  அவளிடமிருக்கவில்லை. அவனைப் பற்றிய எண்ணங்களை மூடி வைத்துவிட்டாள். அப்படித்தான்  நம்பவும்  செய்தாள்.

“நீங்கள் வந்திருக்கின்றீர்கள் என்று கேள்விப்பட்டு  ஓடி வந்தனான். “மகிழ்ந்து போயிருந்தான்.

“பின்னேரம் வீட்டுக்கு வாறன்.”

“வேண்டாம். வீட்டுக்காரர்கள் ஒரு மாதிரி. அங்கு  வரவேண்டாம்.”

வீட்டுச்  சொந்தக்காரர்கள் மீது பழியைப் போட்டு  அவசரமாக மறுத்தாள். அவன் முகம் இருண்டு போனது. திரும்பிப்  போய்விட்டான். அவனோடு திரும்பவும் பழகுவதை அவள் விரும்பவில்லை. கொஞ்ச நாட்களில்  பிரான்சுக்கு வந்துவிட்டாள்.

எந்த நேரமும்  கடுகடுவென்றிருந்த கணவனின் குணம் அவளுக்கு நாளுக்குநாள் வெறுப்பையே  தந்தது.  எல்லோருடனும் சிரித்துப் பேசும் அவன் இவளுடன் மட்டும்  இப்படி  நடப்பதை  ஒருவித கர்வமாக  எண்ணினான். தான் ஓர் ஆண்பிள்ளை என்பதன் நினைப்பன்றி வேறு எதுவுமில்லை. இதோடு அளவுக்கு மீறிய  குடிப்பழக்கம்  வேறு. நாளுக்கு நாள் இவன் பண்ணும் சித்திரவதைகள் பெருகப் பெருக, அவனைப்பற்றிய  ஞாபகங்கள் அவள் அனுமதியின்றியே எட்டிப்பார்த்தன. சில  வருடங்களின் பின் அவனும் பிரான்சுக்கு  வந்துவிட்டான் என்று அறிந்தபோது மனதுக்குள்  எதுவோ துளிர் விட்டது.

‘அவன் என் கண்களில் தென்படமாட்டானா……’என்ற ஆவல் அவளுள் எப்போதும்  ஓடிக்கொண்டேயிருந்தது. பாரிஸின் மூலை முடுக்கெல்லாம் தேவை கருதிச் சோர்வின்றித் திரிவது அப்போதைய அவள்  பழக்கமாயிருந்தது. அப்படி ஒருநாள் பாரிஸிலுள்ள  கடைத் தெருவொன்றில்  நடந்து  கொண்டிருந்தவள்  திடுக்கிட்டு  நின்றாள். நேரெதிரே அவன் வந்துகொண்டிருந்தான்.

இருவரும்  பார்த்துக்கொண்டே  மௌனம்  சாதித்தனர். “குண்டாகி  விட்டீர்கள்.” அவன்தான் பேச்சை  ஆரம்பித்தான். பன்மையில் அவன் பேசியது வித்தியாசப்பட்டுத் தெரிந்தது.  ‘ஓ..மரியாதை  தந்து  பேசுகின்றானாம்..’ தனக்குள் இதை ரசித்தாள்.

“எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியுமா..?” எதைப் பேசுவது என்பதில் இருவரும் ஒன்றுபோல் தயங்கினார்கள்.

அவனைப் பார்க்க வேண்டும் என்று இருந்த துடிப்பு அவள் பேச்சுக்கு வரவில்லை. தயக்கத்தை  உடைத்துக்கொண்டு அவன்தான் பேசினான், ” வாங்கோ… கோப்பி  குடித்துக்கொண்டே  பேசுவோம்.”

“இல்லை…..பிள்ளைகளைப்  பள்ளியிலிருந்து எடுக்கக் கெதியில் போக வேண்டும்..” அவசரமாக  மறுத்தாள்.

அவன்  வற்புறுத்தியதால் பக்கத்திலிருந்த ஓர் உணவகத்துக்குள் அவனைப் பின் தொடர்ந்தாள். இருவரும்  நேரெதிரில் அமர்ந்தார்கள். அவளின்   விருப்பப்படி தேநீர் வந்தது. ஒளி தெறிக்கும் அவன் கண்களுக்குக்  கூர்மை அதிகம். நேருக்கு நேர் அவன் விழிகளை நோக்க முன்பு போலன்றித் தயங்கினாள்.

இங்கேயும் அவன்தான் பேச்சை ஆரம்பித்தான். அவன் குரல் நெகிழ்ந்திருப்பது போலிருந்தது. அல்லது  அப்படித்  தோன்றுகின்றதா…? வில்லங்கமாக வரவழைத்த புன்முறுவல்  வேறு. அவளால் முறுவலிக்க  முடியவில்லை. வலிந்து புன்னகைப்பது அவள் சுபாவத்தில் இல்லை.

“மகன் வளர்ந்து விட்டாரா…? அதற்குப் பிறகு வேறு பிள்ளைகள்…?”

“பிறகு ஒரு மகள். மகளுக்கு நாலு வயது.”

அவனுக்கு ஒரு மகன் இருப்பதை அறிந்திருந்தும் அவள் அதுபற்றி  எதுவும்  கேட்கவில்லை.

அவனாகவே சொன்னான் .

“என் மகனுக்கு இரண்டு வயது. ஊரில் தாயுடன் இருக்கின்றான்.”

அவள் தொண்டைக்குள் ஏதோஅழுத்தியது. வெறுமனே ‘ம்’ கொட்டினாள்.

“உங்கள் டெலிபோன் நம்பரைத் தாருங்கள்.”ஆவலுடன்  கேட்டான்.

“வீட்டில் டெலிபோன் இல்லை.” (கைத்தொலைபேசி அப்போது கிடையாது.) பொய் பொய் என்று உள்மனம்  கத்துவதை அவள் பொருட்படுத்தவில்லை.

“சரி சந்திப்போம்.” விறுவிறு  நடையுடன்  சனநெரிசலுக்குள்  மறைந்துகொண்டிருந்தான். அவன் உருவம்  தெரியும்வரை பார்த்துக்கொண்டே  நின்றாள். ஒரு  முறை மட்டும் அவன் திரும்பிப் பார்த்தான்

டெலிபோன் நம்பர் கொடுத்திக்கலாமோ…”

‘அவனைச் சந்திக்கவேண்டும், பேசவேண்டும்.’ என்று மனம் விரும்பியபோதும், அவனுடனான  நட்பைத்  புதுப்பிக்க ஏனோ தயங்குகின்றாள். தன் மீதே  நம்பிக்கை  வைக்க  மறுக்கின்றாள். ஒருவித  போலித்தனத்துக்குள் தன்னைப் புதைத்துப் பெருமிதம்  கொள்கின்றாள்.

கணவனுக்கும்  அவளுக்குமான  சண்டை  சச்சரவுகள்  தீர்க்க  முடியாத  அளவுக்கு  உக்கிரமடைந்து  வெவ்வேறு  துருவங்களான  கருத்துவேறுபாடுகளுடன், அவனுடைய   கொடுமையான   சித்திர வதைகளும்  கலந்து அவள்  வேதனைப்படும்  இருண்ட நாட்களில்  மனம்  பகிர  எவருமின்றித்  தவிக்கையில், முன்பைவிட  அதிகமாக இவனைத்தான் நினைக்கின்றாள்.

பாரிஸ்  லாச்சப்பலில் உள்ள புத்தகக்  கடை ஒன்றில் அவனுடைய  கவிதைத் தொகுப்பொன்று கண்ணில்  படுகின்றது. பரபரப்புடன் மிக வேகமாகப் பக்கங்களைப் புரட்டுகின்றாள். தன்னைப்பற்றி ஏதாவது  எழுதியிருக்கின்றானா என்று ஒவ்வொரு பக்கமாகத் தட்டும்போதும் மனம்  படபடக்கின்றது. ‘ம்…….எதையும்  காணோமே…….’ ஏமாற்றம் கோபமாக வெடிக்கின்றது.

நடுப்பக்கத்தில் அவன் மகன் பற்றிய ஏக்கம் கொப்பளிக்கும்  கவிதையொன்று  கண்ணில்  படப் புத்தகத்தை  வீசிவிட்டு வெளியில் வந்தாள். ‘என்ன இது. அவனுடைய மகன் பற்றி  எழுதினால் நான் ஏன் கோபிக்கவேண்டும்..?’ஆனாலும் மனம் சமாதானம் கொள்ள அடம்பிடித்தது.

இன்னொரு  நாள் புத்தக வெளியீட்டு விழாவொன்றில் அவனைப் பார்த்தாள். இருவரும் எதுவுமே பேசவில்லை.

அன்று ரயிலில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராமல் அவனைக் கண்டாள்.

கோழைத்தனமாகத் தன்னைவிட்டு விலகியவன் என்ற ஆத்திரம்  இப்போதெல்லாம்  அடிக்கடி  வருகின்றது.  தீர்க்க முடியாத சிக்கலான வாழ்க்கையில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்  ஒவ்வொரு கணமும்  இந்தக் கோபம் இன்னும்  அதிகரிக்கின்றது. அவனிடம் அன்று  தனது  மனதைத் திறந்து  உக்கிரத்துடன்  கொட்டினாள்,

 “நீ  ஏன் எனக்கு எவ்வித பதிலும்  தராமலிருந்தாய்…?, எனக்காகக் காத்திரு என்று  ஒருவரி  எழுதியிருந்தால்,  உனக்காக  நான்  காலம்  முழுவதும்  காத்திருந்திருப்பேன். உன் கோழைத்தனத்தால் என் வாழ்வையே   வீணாக்கிவிட்டேன். என்னைக்  காதலித்த பெயர் மட்டும் உனக்கு வேணும். அதுதானே…?”

ஆங்காரத்துடன் வெடித்தவளைத்  திகைப்புடன்  பார்த்துக்கொண்டேயிருந்தான். அவன்  முகம் இறுகிப் போனது.

“என் அன்றைய  நிலைமையை எப்படி விளக்கினாலும் உன்னால்  புரிந்துகொள்ள  முடியாது..”

கோபத்துடன் சொன்னவன் திரும்பிப் பாராமல் போய்விட்டான்.

அதன் பின்  பல இடங்களில் அவனைக் கண்டும் அவள் பேச முயலவில்லை. மீண்டும்  எல்லாவற்றையும்  இறுக்கி மூடி வைத்தாள்.அது வெறும் பாசாங்கு என்று தெரியாமலே.

இப்போது  கணவனை விட்டுப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வாழ்கின்றாள். இதுவே  போதும்  என்ற  போலிக் கர்வத்தில் தன்னையே  தட்டிக்கொடுக்கின்றாள். தகிக்கும் கனவுகளை உள்ளே எரிய விட்டு.

நோய் வாய்ப்பட்டிருக்கும் அவனைப் போய்ப் பார்க்க  விரும்பாதது கோபத்தில் மட்டுமல்ல, என்பதை  அவள்  மட்டுமே அறிவாள். மெலிந்து வாடி, உருக்குலைந்து போயிருப்பவனை, பார்த்துக் கதறியழ அவள் துளிகூட  விரும்பவில்லை. அவளுக்குள் நிறைந்திருக்கும் அவனுடைய  உருவம் அப்படியே  இருக்கட்டும். தன்னை  மீறிப்  பெருகும்  கண்ணீரைக்  கட்டுப்படுத்த முனைகின்றாள்.

“போய்ப் பார்த்திருக்கலாமோ… என்னைக் கண்டால் மலர்ந்திருப்பானே.

அதிகாலை  நேரம் டெலிபோன் மணி அடித்தது. அவளது நண்பி தொலை பேசினாள்  .. அவன்  இறந்துபோன  செய்தியைத் துயரத்தோடு தெரிவித்தாள்.

அவளுக்குப் பேச்சே வரவில்லை. மூச்சையடக்குவது போலத்  துக்கம்  உடைத்துப் பெருக  வெடித்தழுதாள். பலவந்தமாகப்  பூட்டி வைத்திருந்த  எதுவெல்லாமோ பொங்கிப்  பிரவாகமெடுத்துக் கண்ணீராய்க்  கொட்டியது. இனி  அவனைப்  பார்க்கமுடியாது  என்ற  தீராத  துயரில்  உடைந்து  சிதறினாள்.

சி.புஷ்பராணி -பிரான்ஸ்

சி.புஷ்பராணி

(Visited 175 times, 1 visits today)
சி.புஷ்பராணி

நினைவுத்துளிகள்-டொமினிக் ஜீவா நினைவுக்குறிப்புகள்- சி.புஸ்பராணி

தோழர் மு. கார்த்திகேயன்  அவர்கள்  தலைமையில், பொதுவுடமைக் கட்சியில் தன்னை  இணைத்துக்கொண்ட,  டொமினிக் ஜீவா  அவர்கள்  ஆதிக்கசாதியினருக்கும், அவர்தம்  பிற்போக்குக்  கொள்கைகளுக்கும் எதிராகத் தன்  எழுத்துப்பணியை,  இறுதிவரை கைவிடாது மேற்கொண்ட   […]

 

One thought on “கடிவாளம் அறுந்துவிட்டதா …?- சிறுகதை-சி.புஷ்பராணி”

Comments are closed.