‘ராகுல்’ – சிறுகதை-மாலினி

காலையிலிருந்து கண்ணைச் செம்மிக் கொண்டிருந்தது ராகுலுக்கு. வலிப்பது போலும் சுற்றுவது போலும் தூக்கம் வருவது போலும் தலைக்குள் எதுவோ செய்தது. காலையில் தூக்கத்திலிருந்து எழும்பும் போதே அப்படித்தான் இருந்தது. முகத்தில் குளிர் நீரை அடித்து பெயருக்கு முகத்தை அலம்பி விட்டு பாடசாலைப் பையைக் கொழுவிக் கொண்டு வெளிக்கிட்டான்

வீதியிலிறங்கி நடக்கையில் இலையுதிர்கால மென்குளிருடன் கலந்த அதிகாலைப் பனிச்சாரல் முகத்தில் தூவிய போது கண் எரிவும் ஒரு விதமான மந்தக்குணமும் குறைந்திருந்தது போலிருந்தது. பாடசாலைக்குள் வந்து அமர்ந்த பின் மீண்டும் நிதானமற்று உணர்ந்தான். திரும்பவும் தலைக்குள் இனம்புரியாத எதுவோ செய்தது. இந்த உணர்வுகள் அவனுக்குப் புதிதல்ல. அண்மைய சிலகாலமாக நித்திரை விட்டு எழும் போது அவன் அடிக்கடி உணர்வது தான். அப்படிச் சிரமமாக உணரும் போது வரவேற்பறை ஓரத்தில் இருக்கும் சிறிய அலுமாரியில் அடுக்கிவைத்திருக்கும் போத்தல்களில் ஒன்றை எடுத்துத் திறந்து வாயில் கவிழ்த்து விட்டு மீண்டும் தூங்கி விடுவான். நேற்று இரவும் அப்படித்தான் தூங்கினான்.

இன்று தான் முதன் முதலில் பாடசாலை நாளில் இப்படியோர் நிலைமைக்கு முகம் கொடுக்க நேர்கிறது. மேசையில் தலைசாய்த்துப் படுக்கவேண்டும் போல உணர்ந்தான். இருந்தும் வகுப்புக்கு ஆசிரியர் வருமுன் பாடசாலை உபகரணங்கள் அனைத்தும் மேசையில் எடுத்து வைக்கப் பயிற்றப் பட்டிருந்தபடி எடுத்து வைத்தான். என்ன பாடம் எந்தக் கொப்பி என்று வாசிக்க முடியாமல் கண்கள் மயங்குவது போலிருந்தன. இன்ன இன்ன பாடத்துக்கு இன்னின்ன நிறத்தினாலேயே உறையிட்டிருக்க வேண்டும் என்ற பாடசாலை ஒழுங்கு அவனுக்கு இனங்காண இலகுவாக இருந்தது.

வகுப்புக்கு ஆசிரியர் வந்து பாடம் தொடங்கிய போதும் ஒரு முழு வாக்கியத்தையேனும் சரியாக உள்வாங்க முடியவில்லை அவனால். மேசை மீது சாயக் கெஞ்சிய தன் மந்த நிலையைத் தவிர்க்க முயன்று முயன்று முடியாமல் மேசை மீதே சாய்ந்து படுத்துக் கொண்டான். இரண்டு மூன்று முறை ஆசிரியர் அழைத்தது கனவில் கேட்கும் குரல் போலிருந்தது.

ஆசிரியர் அருகில் வந்து “உடல் நிலை சரியாக இல்லையா ராகுல்?” என இதமாக விசாரித்த போது , தலையை நிமிர்த்தாமலே “ஆமாம்” எனத் தலையசைத்தான்.

“வீட்டுக்குப் போகப் போகிறாயா?”

“ம். ஜா.”

“இரு. முதல்வரிடம் அனுமதி பெற்று வீட்டுக்கு ரெலிபோன் செய்கிறேன்.” என்று சொன்னதும் அவசரமாகச் சுதாரித்தான்.

“வீட்டில் யாருமிருக்க மாட்டார்கள். வேலைக்குப் போயிருப்பார்கள் நான் தனியாகப் போகிறேன்.”

“நிமிர்ந்திருக்கவே முடியாமலிருக்கும் இந்த நிலையில் உன்னைத் தனியாக அனுப்ப எனக்கு அனுமதியில்லை. வந்து அழைத்துச் செல்லும் படி உன் தந்தைக்கு அறிவிக்கிறேன். “

ஆசிரியர் அகன்றதும்,

“வீட்டில் அம்மா இல்லை. நீயும் அப்பாவும் மட்டுமே இருப்பது என்பதையோ, உனக்குப் பாடசாலை இல்லாத நாட்களில் அப்பா வேலைக்குப் போகும் நேரங்களில் நீ தனியாக வீட்டிலிருப்பதையோ பாடசாலையில் சொல்லாதே. சொன்னால், உன்னை அவங்கள் பிடிச்சுக் கொண்டு போய் விடுவாங்கள்.” என முதல் முறை பயணம் போகுமுன் ஆரம்பித்து ஒவ்வொரு முறை பயணம் போகும் போதும் அம்மா சொல்லிச் செல்வதும்,

“அப்பாவோட மட்டும் தான் இருக்கிறனி, அப்பா வேலைக்குப் போற நேரம் தனியா இருக்கிறனி என்டதையோ சூலையில (Schle-பாடசாலை) கீலையில சொல்லிப்போடாத. பிறகு அவங்கள் யூகன்ட் ஆம்ட் (Jugend amt- குழந்தைகள் சிறுவர்கள் உரிமைகள் , மற்றும் பாதுகாப்பு அலுவலகம் ) அது இதெண்டு என்னை இழுத்தலைப்பாங்கள்.” என்று அப்பா இடைக்கிடை அதட்டிச் சொல்வதும் நினைவு வந்தது அவனுக்கு. ஆனாலும் ‘இழுத்தலைப்பது’ என்றால் என்ன? அது எப்படி இழுத்தலைக்கும்? என்றெல்லாம் புரியும் அளவுக்கு ராகுலுக்கு தமிழ் தெரியாது. அவனுக்குத் தாய்மொழி கற்பிக்க வேண்டும் என்ற சிந்தனை பெற்றோருக்கும், கற்கும் ஆர்வம் அவனுக்கும் எப்போதும் இருந்ததில்லையாதலால் அம்மா அப்பா பேசுவதில் பல அவனுக்குச் சரிவரப் புரியாது. அது பற்றியும் அவனோ அவர்களோ அலட்டிக் கொள்வதில்லை. இருந்தும் , நிதானமிழந்த நிலையிலும் வீட்டில் அம்மா இல்லைஎன்பதைச் சொல்லக் கூடாது என்பது அவனுக்கு நிதானமாகவே நினைவிருந்தது.

அவனது அப்பா வந்து அவனை அழைத்துச் செல்லும் வரை ஆதரவும் கனிவுமாக விசாரித்துக் கொண்ட அவனது ஆசிரியை போல அருகிருந்து விசாரிப்பவளாக ஏன் என் அம்மா இல்லை என அந்த அரை மயக்க நிலையிலும் அவனுக்குள் ஏக்கமாய் எழுந்தது கேள்வி.

ராகுலைத் தந்தையுடன் அனுப்பி விட்டு, உடலில் காச்சலுக்கான வெப்பநிலை அற்ற அவனின் அரை மயக்க நிலை பற்றிய யோசனையுடன், தந்தையோடு தடுமாறித் தள்ளாடிச் செல்லும் ராகுலை ஜன்னல் கண்ணாடியூடாக அவதானித்தார் ஆசிரியர்.

ஐந்தாம் ஆண்டு மாணவனாக அவன் புதிதாக அந்தப் பாடசாலையில் சேரும் போது நான்காம் ஆண்டில் மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவன் என்பதை தேர்ச்சியறிக்கை உறுதி செய்தது. இருந்தும் அவனிடம் கல்வி தவிர வேறெதிலும் ஆர்வமும் உற்சாகமும் இருக்கவில்லை. எதனிலும் ஓட்ட மறுத்து விலகி நிற்பவனாகத் தான் அவர் அவனை அவதானித்திருக்கிறார்.

வகுப்பில் ஒரேயொரு ஆசிய மாணவன். மற்றைய இனத்தவரைப் போல இலகுவில் மற்றவர்களுடன் இணைந்து, இயல்பாகிக் கொள்ளாத இலங்கைக் குடும்பத்திலிருந்து வந்திருப்பவன் என்பதால் கூட அவன் மற்றவர்களுடன் இணைந்து பொருந்திப் போகப் பழக்கப்படவில்லையாக இருக்கக் கூடும். போகப்போக குடும்பத்தின் ஆதிக்கமற்று சுயமாகச் செயற்படும் போது இந்த விலத்தி ஒதுங்கும் தன்மை அவனை விட்டு விலகிவிடும் என எண்ணியிருந்தார்.

ஆனால் ராகுல் போகப் போக ஆசிரியரின் எதிர்பார்ப்பை எதுவுமில்லையாக்கி , தனது விலகி ஒதுங்கும் பாங்கை இன்னும் அதிகப் படுத்தினான். எத்தனை முயன்ற போதும் நேராக நிமிர்ந்து நின்று முகம் பார்த்துப் பதில் சொல்லும் பண்பைக் கூட அவரால் அவனுக்கு ஏற்படுத்த முடியவில்லை. அது மட்டுமல்லாமல் அவன் வரும் போது இருந்தது போலல்லாது படிப்பிலும் ஆர்வமிழந்து கொண்டிருந்தான். விரைவில் அவனது பெற்றோருடன் சந்திப்பு ஒன்றையும் ஏற்படுத்தி கலந்துரையாட எண்ணியிருந்தார். இன்றைய அவனது நிலை அந்தக் கலந்துரையாடலை அதிவிரைவில் ஒழுங்கு செய்ய வேண்டும் என அவர்மனதை உந்தியது.

ராகுலின் அப்பா வந்து அழைத்துப் போகும் போது “கவனமாகப் பாத்துக் கொள்கிறேன்”. என ஆசிரியைக்கு வாக்களித்தது போல அவர் செயற்படவில்லை. செயற்பட மாட்டார் என்பதும், செயற்பட முடியாது என்பதும் ராகுலுக்குத் தெரியும். அவனைப் பொறுத்தவரை வார்த்தைகள், வாக்குறுதிகள் எல்லாமே காற்றில் மிதக்கும் ஈசல் இறக்கைகளுக்கு ஒப்பானவை. அவற்றுக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை.

இப்போதெல்லாம் எவரிடமும் அணைப்பை ஆதரவை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் ராகுலும் இல்லை. அவன் அதைத் தாண்டி, அவர்களைத் தாண்டி, கல்வி, குறிக்கோள் என்ற மனதை ஒருமைப்படுத்தி இருக்கும் தூரத்து வெளிச்சப்புள்ளிகள் தாண்டி வெகுதூரம் சென்று விட்டான்.

அவனின் தேவையெல்லாம் பாடசாலை விட்டால் தான் புதிதாக தேடிக் கொண்ட நண்பர்களுடன் ஊர் கற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட சிலவற்றை அவர்களுடன் கூடிச் செய்யும் போது ஏற்படும் ‘திரில்லை’ அனுபவிக்க வேண்டும். அவனது கையிலிருப்பதை விட அநேகமான நேரங்களில் அதற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. அதையும் அவன் அப்பாவிடமிருந்து பாடசாலைத் தேவைக்கெனப் பொய் சொல்லியோ அல்லது அப்பா வீட்டிலில்லாத நேரங்களில் வெளியே சாப்பிடக் கொடுக்கும் பணத்தை சாப்பிடாமல் சேர்த்து வைத்தோ, அப்பா குடிமயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுதுகளில் மெதுவாகக் கையாடல் செய்தோ சமாளிக்கக் கற்றுக் கொண்டிருந்தான்.

அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு வந்து அவர்கள் வசிக்கும் பிளாட் வாசலில் இறக்கிய அப்பா,
” நான் ஒரு மணித்தியாலம் அனுமதி கேட்டுத் தான் வந்தனான். போகாட்டி வேலைக்கு வே ட்டு வைச்சிடுவாங்கள். நீ உள்ளே போய் படுத்திரு. பிறகு வந்து டாக்டரிட்டை கூட்டிப் போறன். ” என்றார். “எனக்கு டாக்ரரிட்ட போக தேவையில்லை.” என்று முணுமுணுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தவனுக்கு அப்பா வெளியேறிப் போகும் சத்தம் கேட்டது. அனேகமாக அவன் சொன்னதைக் கூட அப்பா காதில் வாங்கியிருக்க மாட்டார். எப்போதும் போல.

படுக்கையில் உருண்டான் . நேற்று இரவும் சாப்பிடாதது வயிற்றைக் காந்தியது. சாப்பிடலாம் எனச் சமயல றைக்குப் போனான். பாண் எடுத்து பிளேட்டில் வைத்து விட்டு பிரிஜ்ஜில் இருந்து சலாமி எடுத்து கொண்டு மூடும் போது அவன் நின்ற இடத்துக்கு நேராக வரவேற்பறையில் இருக்கும் அந்தச் சின்ன அலுமாரி கண்ணில் பட்டது.

நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டான். அப்பா தனக்காக, விதம் விதமாக , போத்தல்களாகவும் , ரின்களாகவும் தாராளமாக வாங்கி அடுக்கி வைத்திருந்தவைகளில் ஒன்றை எடுத்து மூடியை அகற்றி வாயில் சரித்தான். பசித்த வயிறு, முதல் மிடறு தான் போகும் இடமெல்லாம் காந்திக் கொண்டே இறங்கியது.. கடைசித் துளியும் உள்ளே இறங்கியதும் கிறுகிறுவென வந்தது. போய் படுக்கையில் சரிந்தான்.

மாலையில் அப்பா வரும் வரை அப்படியே தான் கிடந்தான். கைகாலைத் தாறுமாறாக எறிந்து படுக்கையில் கிடந்த மகனையும் அருகே திறந்து கிடந்த போத்தலையும் கண்டதும், குடிக்காமலே வெறியேறியது அப்பாவுக்கு .

“அட நாயே நாசமாப் போற நாயே. நீ குடிச்சுக் கிடிச்சுத் துலைக்க என்னை எல்லோ வந்து அள்ளிக் கொண்டு போகப் போறாங்கள்.” என்று கத்திக் கொண்டு அவனது வலது கரத்தின் அக்குள் பகுதியில் கைகொடுத்து ஆவேசமாக அவனைப் பிடித்திழுக்க, மயக்கமும் தூக்கமுமாக இருந்தவன் , பொத்தென்று படுக்கையிலிருந்து கீழே விழுந்து, சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கண்களைச் சுருக்கி அலங்க மலங்க விழித்தான். மீண்டும் ஆவேசமாக அவனது கமக்கட்டுப் பகுதியில் பற்றித் தூக்கி நிறுத்தி அடிக்க ஓங்கிய போது, நித்திரையும் குடிமயக்கமும் கொஞ்சம் விலக அவசரமாய் சுதாரித்து,
” அடித்தால் போலீசுக்கு டெலிபோன் அடிப்பேன். அப்பவும் வந்து அள்ளிக்கொண்டு தான் போகும்.” என்றான் மகன்.

அப்பா அவசரமாகப் பின்வாங்கினார். அப்பாவின் கோபம் இப்போது அம்மாவை நோக்கித் திரும்பியது. அவசரம் அவசரமாக இந்தியாவிலிருந்த ராகுலின் அம்மாவைத் தொலைபேசியில் அழைத்தார்.

“நீ பெத்துப் போட்டிட்டுப்போனது என்ன செய்திருக்கு எண்டு தெரியுமா உனக்கு ?”

அம்மா அழைப்பிலிருக்கும் போதே தன்குரலுக்குச் சுதியேற்ற, அதே அலுமாரியில் கிடந்த போத்தல் ஒன்றை எடுத்துத் திறந்து வாயில் கவிழ்த்தார். பின் ஒரு செருமலுடன்,

“நீ பொடியனை என்னோட விட்டிட்டுப் போய் ஆடிக்கொண்டு திரி. அது இங்க குடிச்சுக் கொண்டு திரியுது. பரதேசி.”

“என்னது குடிக்கிறானோ? “அவனின் அப்பாவுக்கு எப்போதும் தொலைபேசியை காதில் வைத்துப் பேசும் வழக்கம் கிடையாது. ஒலிபெருக்கியில் போட்டு விட்டுப் பேசுவது தான் வழக்கம். அடுத்த பக்கத்தில் தன் அம்மாவின் குரல் அதிர்வதை, பின் உடைவதை எந்த உணர்வுமற்று அவதானித்துக் கொண்டிருந்தான் ராகுல்.

“அவனைக் குடிக்க விட்டிட்டு நீ அங்கே என்ன செய்யிறாய் குடிக்காரப் பாவி?”

அம்மா, அப்பாவுக்குச் சளைக்காமல் ஆரம்பித்தாள். நேரிலும் பின் தொலைபேசியிலுமாக எப்போதும் பழக்கப்பட்டுப் போனதே மீண்டும் ஆரம்பிக்க ராகுலுக்கு அலுப்பும் சலிப்புமாக இருந்தது. அவனது நிலை பற்றி ஆளையாள் குற்றம் சாட்டுவதும் குறை கண்டு பிடிப்பதும் கேவலப்படுத்துவதும் குறியாக ஒருவருக்கொருவர் சளைக்காது ஈடுகொடுத்துக் கொண்டிருந்த தொலைபேசிப் போரை, அளவு கணக்கற்று நாற நாற அப்பா கொட்டிய சுந்தரத் தமிழ் வார்த்தைகளை, அது பொறுக்க முடியாது அம்மா ஓவென்று அலறிய ஓலத்தை, எல்லாம் ஒரு வித குரூரத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல் .

வழமை போல இருவருமே களைத் துப் போன பின் தான் தொலைபேசிக்கு ஓய்வு கொடுத்தார்கள். பின் அப்போது தான் நினைவு வந்த அவசரத்தில்,

“எனக்கு இப்ப இதெல்லாம் கதைக்க நேரமில்லை. அங்க ரெஸ்டாரென்ட் காரன் காத்திருப்பான். விட்டால் வேறை ஆரையேன் எடுத்துப் போடுவான். இரு வந்து கவனிக்கிறன் எல்லாம். அது வரைக்கும் வீட்டில இருந்தால் தானே குடிப்பாய்?” என்று அவனை வெளியே விட்டுக் கதவைப் பூட்டி விட்டு வெளியேறினார்.

இனி வேலை முடிந்து இரவு பன்னிரண்டுக்கு அண்மிய பொழுதில் அவர் திரும்பும் வரை வீட்டுக்குள் வரமுடியாது என்பது அவனுக்கு அநாதரவாக தெருவில் நிற்கும் உணர்வைக் கொடுத்தது. மிகப் பதட்டமாக உணர்ந்தான்.

சற்று நேரம் தங்கள் பிளாட்டின் வெளிப் புற்றரையருகே கிடந்த மரவாங்கில் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்ததை வழமை போல கீழ்வீட்டு வயோதிபப் பெண் சுருக்கம் விழுந்த கண்மடல்களை அகலமாக விரித்துத் தன் நீலக் கண்களைக் குறுக்கிப் பார்த்தாள். வெளிநாட்டுக் காரர் எல்லாம் வந்து தங்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைந்த வாழ்க்கை முறையை மீறி வாழ்வதாக, அதன் மூலம் தங்கள் நாட்டை மிக தவறான தரத்துக்கு இட்டுச் செல்வதாக நம்பும் அப்பெண் எப்போதும் போல் அந்தச் சந்தேகத்துடனேயே ராகுலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிலகாலமாகவே அவனின் தாய் அடிக்கடி அங்கில்லாமல் இருப்பது பற்றியும், பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கவேண்டிய சிறுவன் தனியாக இருப்பதான ஒருசந்தேகத்தையும் அவள் கொண்டிருந்தாள். அது ஊர்ஜிதமாகும் நாளில் சட்டத்துக்குப் புறம்பாக அவர்கள் வாழ்வதாக சட்டத்துறைக்கு அறிவிக்கவும் அவள் தயாராக இருந்தாள்.

0000000000000000000

ராகுலுக்குப் பசியெடுத்தது . அவனது காற்சட்டைப் பொக்கற்றினுள் இருந்த சிறிய பணப் பையில் போதிய பணம் இருந்தது. அவனுக்கு அடுத்த ரோட்டில் இருக்கும் கேபாப் கடையில் கேபாப் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது, நடந்தான். அதை அண்மியதும் அவ்விடத்தில் சந்தித்துப் பழக்கப் பட்ட தனது புதிய நண்பர்களின் நினைவு வந்தது. ஒரு முறை பார்வையைச் சுழற்றி அவர்களைத் தேடினான்.
அவனது நண்பர்கள் அண்மையில் சிரியாவிலிருந்து வந்து முகாமிலிருக்கும் அகதி இளைஞர்களாகவும் , அதிக கல்வியறிவற்ற, அடிமட்ட வேலை தேடி வந்த அல்பானிய இளைஞர்களுமாகவே இருந்தமையால் வேலையற்றுத் திரியும் அவர்களுக்கு எப்போதும் வீண்விரயம் செய்ய அதிக நேரமிருந்தது. அவர்கள், வீடு பற்றி, குடும்பம் பற்றி, கட்டுப்பாடுகள் பற்றி சொந்த விடயங்கள் பற்றி, அதிகமாக எதுவும் பேசாதவர்களாகவும் , அவர்களுக்கு அதிகம் பரீட்சயமற்ற ஜேர்மன் மொழி அறிந்தவன் என்பதால் தமக்கான மொழித் தேவையைப் பூர்த்தி செய்யும் ராகுலை மதிப்பவர்களாகவும், அடிக்கடி அவர்களது குடி , புகை என்ற சிறு பணத் தேவைகளைப் பூர்த்தி செய்பவன் என்பதால் அவனோடு அதிக நெருக்கம் காட்டுபவர்களாகவும் இருந்தார்கள்.

ஆதலால் ராகுலுக்கு அவர்களை, அவர்களோடு கூடியிருக்கும் நேரங்களைப் பிடித்திருந்தது. கூடவே, அவனது அம்மா கொண்டாடாத ராகுலை, அப்பா கொண்டாடாத ராகுலை, அம்மா அப்பா பிறந்து ஆறுமாதமே அவன் இருந்த வீட்டில் கூட இருந்த தங்கை தவிர தன்மனிதர் என எவரையும் அறியாத ராகுலை அவர்கள் கொண்டாடியது பிடித்திருந்ததால் அவன் அதிக நேரங்களை அவர்களுடன் சேர்ந்திருக்கவே விரும்பினான். அவனுக்குப் பதினெட்டு வயது நிறைவடையாத காரணத்தால், விற்பனை நிலையங்களில் வாங்க அனுமதியற்ற அல்ககோல் , சிகரட் போன்ற அவர்களிடம் கற்றுக்கொண்டவற்றை , அவர்கள் மூலம் வாங்க முடிவதால் அவனுக்கும், அவனுக்கு வாங்கும் போது அதன் கூலியாக அவர்களுக்கும் வாங்க அவன் பணம் தருவதால் அவர்களுக்கும் கூடியிருத்தல் பிடித்தது.

பொதுவாகவே அவன் அவர்களை அவ்விடத்தில் தான் காண்பது வழக்கம் . அவ்விடத்தில் தான் அவனும் அவர்களும் முதன் முதலில் அறிமுகமாகியும் இருந்தார்கள். இன்று வீட்டுக்குள் செல்ல முடியாத காரணத்தால், எண்ணிக்கையற்ற மக்கள் வாழும் பிரபஞ்சத்தில் தான் எவருமற்று தனித்து எறியப்பட்டவன் என்று எண்ணத் தலைப்பட்ட அவனுக்கு, எவருடையதாவது அருகாமை வேண்டும் போலிருந்தது. ஆதலால் அவன் அவர்களைப் பெரிதும் எதிர்பார்த்தான்.

கேபாப் கடையிலிருந்து வெளிப்பட்டு, படிகளில் இறங்கும் போதே “ஹே… ராகுல்….” என்ற உற்சாகக் கூவலில் கையில் பார்சலுடன் நிமிர்தான் ராகுல். கூட்டமாக வந்து மொய்த்துக் கொண்டு “செர்வூஸ் ” என்று சொல்லிக் கை கொடுத்தார்கள். அவனும் பற்றிக் குலுக்கினான். கைமுட்டியை மடக்கி நீட்டினார்கள். அவனும் தன் கைமுட்டியால் நட்புடன் மோதிக் கொண்டான் . “கொலேகே…. கொலேகே” என தமக்குத் தெரிந்த அரைகுறை டொச்சில் அவனது தோளணைத்துக் கொண்டாடினார்கள். அவன் குளிர்ந்து போனான்.

அவர்களைக் கண்டதும் அவனுக்கு மீண்டும் குடிக்கவும் புகைக்கவும் தோன்றியது. அது அப்பா அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவதானித்திருந்ததால், அவர்கள் எப்போதும் போல் அதனாலும் தனக்கு வெறுப்பான விதத்தில் சண்டை போட்டுக் கொண்டதால், தன்னை விட்டு விட்டுச் சென்று விட்ட அம்மாவின் குரல் தான் குடிப்பதாக அப்பா கத்தியதைக் கேட்டதும் உடைந்திருந்ததை உணர்ந்திருந்ததால், தூக்கத்தில் கிடந்த தன்னை இழுத்து அப்பா கீழே விழுத்தியிருந்ததால், இலையுதிர்காலத் தூவானக்குளிர் இரவில் தன்னை வெளியே விட்டு வீட்டைப் பூட்டிச் சென்றதால் அவனுக்கு இப்போது கட்டாயம் குடிக்க வேண்டும் போல் தோன்றியது. அதன் மூலம் அவர்களைப் பழிவாங்குவது போல எண்ணத் தலைப்பட்டான்.
கேப்பாப் வாங்கியது போக தன்னிடமிருந்த மீதிப் பணம் முழுவதையும் கொடுத்து, அனைவர்க்குமாக மதுபானப் போத்தல்களை வாங்கிவரச் சொன்னான். நகர மையத்தை அடுத்து அமைந்திருந்த சிறிய ஓய்வுப்பூங்காவை நோக்கிப் போனார்கள். அதன் இடது பக்க மூலையில் சற்று உயரமான பூஞ்செடிகளும் காஹபூட்டே என்று சொல்லப்படும் அதிமுட்களோடு பற்றை போலப் படர்ந்த ரோஜாச்செடிகளும் மூடலிட்டிருந்த மறைவில் போடப்பட்டிருந்த சீமெந்து இருக்கைகள் இரண்டையும் நிறைத்துக் கொண்டு அமர்ந்தார்கள்.

வெளிப்படையாகக் குடிப்பதாலோ புகைப்பதாலோ அவர்களுக்கு எந்தவிதமான சட்டப் பாதிப்பும் இருக்கப்போவதில்லை. ஆனால் ராகுலுக்கு இருந்தது, பதின்மூன்று வயதில் குடிப்பதற்கும், புகைப்பதற்கும் அனுமதியற்று இறுக்கப்பட்டிருக்கும் சட்டத்தை மீறும் பட்சத்தில், ராகுலை விட, ராகுலுக்கு வாங்கிக் கொடுத்ததன் காரணமாக தண்டனை பெறும் சந்தர்ப்பமும் மிகப்பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டிய நிலையும் அவர்களுக்கே இருந்தது என்பதாலும் அவர்கள், ராகுலுடன் சேர்ந்திருக்கும் பொழுதுகள் எப்போதும் அந்த மறைவிடத்துக்குள் மறைந்து கொண்டே குடித்தார்கள். புகைத்தார்கள், அவற்றுடன் கூடவே, தான் வாங்கிவந்த கேப்பாப்பையும் உண்டான் ராகுல்.

000000000000000

முன்பனிக்காலம் விரைவாக இருட்டத் தொடக்கி விடுவதால் , ஒன்பது மணிப்பொழுதே நடுச்சாமம் போல இருண்டு , ஆளரவமற்றுக் கிடந்தது. அதற்கு மேலும் பூங்காவின் வெளிச்சமற்ற மறைவில், மொபைல் போனின் வெளிச்சத்தை மட்டும் நம்பியிருத்தல் , காவல்த் துறையை வலிந்து அழைக்கும் செயல் என்பதுணர்ந்து அவரவர் பிரிந்து செல்லத் தயாராகினர். ராகுலும் வேறு வழியற்று தமது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

விட்டுக் கதவைப் பூட்டினால் வாசலிலேயே காத்திருப்பானாக அவனது அப்பா நம்பிய, அப்பாவின் காலத்தைய இலங்கைச் சிறுவனாக ராகுலால் இருக்க முடியவில்லை. உண்டு ,குடித்து, புகைத்து விட்டு வந்த அந்தப் பிஞ்சு உடலுக்கு நேராக நடப்பதே சிரமமாக இருந்தது. தமது பிளாட்டை அண்மிக்கும் போது அப்பா கதவு பூட்டிச் சென்றதும் நினைவிலிருந்து மங்கியது. அடிவயிற்றை ஒருமுறை உருட்டிப்பிசைந்து வாயில் நீர் சுரந்தது. உடல் எங்காவது விழுந்து படுக்கத் தவித்தது. தொடர்மாடியின் அடித்தளப் படிகளில் காலை வைக்கும் போதே கண்களை மின்ன குடலைச் சுருட்டிக் கொண்டு வந்தது. பெரும் சத்தத்துடன் தொடர் மாடி வராந்தா நிறைய வாந்தியெடுத்தான், மீண்டும் மீண்டும் மூன்று நான்கு முறை உடலைச் சுருட்டி வெளியே கக்கியவன் களைத்து மயங்கி வாந்திக்குள்ளேயே குப்புற விழுந்தான். தன் பிறப்பைக் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால் பெற்றோரைத் திட்டினான். அப்படியே தூங்கிப் போனான்.

அவனது வயதுக்கு முரணான இயல்பைப் பலநாட்களாக அவதானித்துக் கொண்டிருந்த கீழ்வீட்டுக் கிழவி சிறுவனின் நிலை கருதியும் மற்றும் தம் நாட்டை வேற்று நாட்டவர் ஒழுங்கு சீர்குலைப்பதை சீர்செய்யும் கடமை சொந்தநாட்டுக்காரரான தமக்கே உரியது என்ற கரிசனையுடனும் காவல் துறையைத் தொடர்பு கொண்டாள்.

0000000000000000000

ராகுல் கண்விழித்த போது இரண்டு நாட்களைத் தூக்கத்திலும் மயக்கத்திலும் கடந்திருந்தான். வெண் விரிப்பும், கட்டில் அமைப்பும் சாளரங்களின் அகலமும் திரைச்சீலை வண்ணமும் அவன் இருந்த அறை வைத்திய சாலை போன்று தோன்ற. எழுந்து உட்கார்ந்தான். இப்போது மயக்க உணர்வு முற்றிலும் தெளிந்திருந்தது. எங்கிருக்கிறேன் என்றறியும் ஆர்வம் இல்லாத விட்டேற்றி மனநிலையில் இருந்தான்..

அறை திறந்து உணவுத்தட்டை மேசையில் வைத்து , நட்பாகப் புன்னகைத்து நலம் விசாரித்த தாதி, சாப்பிட்டு விட்டு ஆயத்தமாகும் படி பணித்து விட்டுச் சென்றாள் . எங்கே எனக் கேட்கும் ஆவல் இல்லாமல் கட்டளைக்குக் கீழ்ப்படியும் யந்திரமாக இயங்கினான். போனவள் சற்று நேரத்தில் அழைத்துச் செல்ல வந்தாள்.
அந்தக் கட்டடத்தின் இன்னோர் பகுதிக்கு அழைத்துச் சென்றாள். உள்ளே நுழையும் போதே சிநேகமாகவும் புன்னகையுடனும் வரவேற்று, காலைவணக்கம் சொல்லி நலம் விசாரித்தவர்கள், குழந்தைகள் சிறுவர் மனவளச்சிகிச்சையாளர், மற்றும் குழந்தைகள் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகப் பிரதிநிதிகள் என்பதை எப்போதும் எதையும் போல ராகுல் அறிந்திருக்கவில்லை. அறியும் ஆவலும் கொண்டிருக்கவில்லை.

அவர்கள் மிகமிக இயல்பாக அவனுடன் பேசத் தொடங்கினார்கள். உரையாடலினூடே, அவனது உடல் மொழியிலிருந்து கூட , அவர்கள் அவனை அவனது பின்னணியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதறியாமல் அவர்களது வினாக்களுக்கு விடையளித்துக்கொண்டிருந்தான் ராகுல்.

தன் அப்பாவையும் அம்மாவையும், தங்கையையும் தவிர உறவென்ற ரீதியில் எவரையும் தெரிந்திருக்கவில்லை. அவனுக்கு அறிவு தெரிந்த நாள் முதலாய் அம்மா அப்பா கூடியிருந்து உண்டதையோ , கூடியிருந்து குழந்தையுடன் சிரித்து விளையாடியதோ அவனுக்கு ஞாபகத்தில் இல்லை.

அவன் எழும் போது அப்பா வேலைக்குப் போயிருப்பார். மாலை வேளைகளில் வந்து டிவி யை போட்டு விட்டு சோபாவிலிருந்து சாப்பிடத்தொடங்கும் அப்பா, சாப்பிட்டு முடிய ரெஸ்டாரென்ட் வேலை என மீண்டும் போவார். எப்போது திரும்பி வருவார் என்பது ராகுலுக்குத் தெரியாது. அனேகமாக அது அவன் தூங்கிய பிறகாக இருக்கும். அப்பா போன பின் தொலைபேசியுடன் தொலைக்காட்சி முன் அமரும் அம்மா அனேகமாக அவன் தூங்கும் வரை அவைகளுடன் இருப்பதையே அவன் எப்போதும் கண்டிருக்கிறான். புத்தி தெரிந்த நாள் முதலாய் அவனும் அதையே விரும்பினான். அதுவன்றி எப்போதாவது இருவரும் பேசத்தொடங்கினால் அது சண்டையாகி, பெரும் கூப்பாடாகி அவனை அதிகமாகப் பயமுறுத்தும். அந்த நேரங்களில் சோபாக்களின் இடுக்குக்குள் ஒன்றிக் கொண்டு அவன் பயத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்.

அப்பா அம்மாவின் சண்டைகள் கொஞ்சமாகப் புரியத்தொடங்கிய காலத்தில், அப்பா இலங்கை என்றொரு நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் , இந்தியா என்றொரு நாட்டைச் சேர்ந்த அப்பாவை விட அதிகம் படித்த பட்டதாரியான அம்மா, அப்பா பெரும் உத்தியோகத்திலிருப்பதாக நம்பிக் கல்யாணம் செய்து கொண்டதும், அம்மாவுக்கீடான பேச்சுத் துணைக்குக் கூட லாயக்கில்லாத அப்பாவால் அம்மாவின் வாழ்க்கையே நாசமாகிப் போனதாக இருவரின் சண்டைகளுக்குப் பின்னால் அம்மா வைக்கும் ஒப்பாரிகளிலிருந்து ராகுல் புரிந்து கொண்டிருக்கிறான்.

எப்போது அவர்களது சண்டைகள் ஆரம்பித்தன என்று தெரியாத போதும் சண்டைகளும் ராகுலும் ஒன்றாகவே பத்து வருடம் வரை வளர்ந்தார்கள். அவனுக்குப் பத்து வயது முடியும் போது ஒரு தங்கை பிறந்த சிலமாதங்களில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உச்சமாகி வெடித்த சண்டையில் அம்மா தங்கையைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்கு விமானமேறி விட்டாள். பாடசாலையைக் காரணம் காட்டி, ராகுலைக் கூட்டிச் செல்ல முடியாததாகவும் அவனை அப்பாவுடன் இருக்கும் படியும் அறிவுரை சொல்லிவிட்டு.

அம்மா போன ஆரம்ப நாட்களில் அப்பா முன்பை விட அதிகம் குடித்தார். “நான் ஏன் குடிக்கிறேன் தெரியுமாடா ராகுலு? கவலை டா கவலை. அதை மறக்கத்தான் குடிக்கிறன். உன்ர அம்மா அந்த ஏமாத்துக்காரி விட்டிட்டுப் போட்டாள் என்ற கவலை. பொம்பிளைகளை ஒருநாளும் நம்பிப் போடாதயடா. அவளவை ஏமாத்துக்காரியள்.” சொல்லிச் சொல்லி அப்பா குடித்தார்.

பாடசாலை இல்லாத நேரங்களில் அப்பா அவனை உள்ளே வைத்து வீட்டைப் பூட்டி வேலைக்குச் செல்கையில் தனியாக இருக்கும் போது அப்பாவைப் போல அவனுக்கும் அம்மா விட்டு விட்டுப் போன கவலை வந்தது. தனியாக வீட்டுக்குள் இருக்க பயமுடன் அழுகை வந்தது. அப்போது தான் அப்பா கவலையை மறக்க குடித்த அந்தப் போத்தலைத் திறந்து கொஞ்சமாகக் குடித்துப் பார்த்தான். குடித்துக் கொஞ்ச நேரத்தில் கவலை போன மாதிரியும் பயம் வராத மாதிரியும் இருக்க நித்திரை வந்தது. பின் மெல்லமெல்ல அவனுக்கு அது பழக்கமாகத் தொடங்கியது. பயமும் கவலையும் அழுகையும் வரும் நேரங்களில் எல்லாம் அதைக் குடித்து விட்டுப் படுப்பதும், மகன் மெல்ல மெல்ல அம்மா இல்லாததை ஏற்று வாழப் பழகி விட்டதாக எண்ணி ஆசுவாசப் பட்டுக் கொண்ட அப்பா ஒரு வேலைக்குஇரண்டு வேலை செய்து வந்த களைப்பில் மனச் சலிப்பில் தூங்கிப் போவதுமாக ராகுலை அந்தப் பழக்கம் ஆட்கொண்டது,

போய், ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கு ஒரு தடவை, வரும் அம்மா ஏதோ ஒவ்வொரு நோய் சாட்டுடன் தங்கையை அழைத்துக் கொண்டு வைத்தியரிடம் செல்வதும் ராகுலின் பாடசாலைக்கு ஏதோவொரு தேவையை ஏற்படுத்திச் செல்வதுமாக, தான் ஜெர்மனியில் வாழ்வதான ஆதாரங்களை உருவாக்கிவிட்டு, தன் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் குழந்தைகளுக்கான உதவித் தொகையை எடுத்துக் கொண்டு ஒரு கிழமையிலோ இரண்டு கிழமைகளிலோ கிளம்பி விடுவார்.

அம்மா நிற்கும் நாட்களில் அப்பா இல்லாத போது அப்பா பற்றி அவனிடம் அதிகமாக விசாரிப்பாள். அப்பா வந்ததும் இருவரும் மூர்க்கமாகச் சண்டை போடுவார்கள். அம்மாவுக்கு தன்னைப்பற்றி கொள்மூட்டியதாக அப்பா ராகுலை அடிப்பார். பின் அம்மா தன் வாழ்வே குடிகாரப் படிக்காத முட்டாளால் பறிபோனதாக அழுது கொண்டு இந்தியாவுக்குப் போய் விடுவாள்.

வளர வளர ,அப்பா முழு முட்டாளைப் போல கதைப்பதாகத்தான் ராகுலுக்கும் தோன்றியது. அப்பாவுடன் கதைப்பது பிடிக்காமலும் மரியாதையற்றதாகவும் போயிற்று. ஒருநல்ல அம்மாவால் குழந்தையை விட்டு இருக்க முடியாது எனவும் தோன்றிற்று. நல்ல அம்மா இல்லையாக அவனுக்குத் தோன்றிய அம்மாவையும் முட்டாளான அப்பாவையும் அவனுக்கு முற்றாகவே பிடிக்காமல் போயிற்று. என்பதுட்பட அவனதும் இதுவரையான சிறு சரித்த்திரத்துக்குள் முதல் முறையாக அவனிடம் அக்கறையுடன் அவனைப்பற்றி, அவனது உள்ளக் கிடக்கைகள் பற்றி விசாரித்த அவர்களிடம் ஒப்புவித்தான் ராகுல்.

ராகுலிடம் நாளுக்கு நாள் நாசுக்காக நடாத்திய விசாரணைகளில் பெற்றுக் கொண்ட தகவல்களும், அவனுக்காக பரிந்துரைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மனவளச் சிகிச்சைகளுமாக சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒரு மாதம் வரை கடந்தபின் பெற்றோர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் மீது இறுக்கப்பட்டிருந்த சட்டக் கடமைகளும் , பிள்ளையின் நிலைமையும் அவர்களைக் கொஞ்சமேனும் மாற்றியிருக்கக் கூடும் என்ற நம்பிக்கையுடன் ராகுலைப் பெற்றோருடன் அனுப்பிவைக்கக் குறிக்கப்பட்ட நாளன்று , அவனைப் பராமரிக்கவேண்டிய முறை பற்றியும், அது பற்றிய தங்கள் கண்காணிப்பு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும் என்ற அறிவுறுத்தலுடனும் அவர்கள் அவனைப் பெற்றோரிடம் கையளிக்கும் நேரம் வரை அமைதியாகவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் ராகுல் .

பராமரிப்பு நிலைய அதிகாரி, அவனை அணைத்து, வாழ்த்தி,” போய்வா ராகுல் ” என்ற போது முதல் முறையாக நிமிர்ந்தான். தீர்க்கமாகப் பார்த்தான். பின் திடமான குரலில் சொன்னான்,

“நான் இவர்களுடன் போகவில்லை. இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. இவர்கள் பெற்றோர் இல்லை ” என்று.

அவனது சிறுவர் பாதுகாப்பு மையப் பொறுப்பாளர் உட்பட பெற்றோர் ஈறாக அனைவருமே அதிர்ந்து பார்க்கும் போதே நிதானமான குரலில் தீர்மானமாக,

“நான் kindar heim (சிறுவர் பராமரிப்பு நிலையம் ) இலேயே இருந்து கொள்கிறேன். எனக்கு அதுதான் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் பிடித்துமிருக்கிறது.”

என்று சொன்னபோது அவனது கண்களில் முதல் முறையாக உயிர் ஒளிர்ந்துகொண்டிருந்தது .

மாலினி

மாலினி-ஜெர்மனி

(Visited 168 times, 1 visits today)