‘தலைமையைக் கொன்றவன்’-சிறுகதை-மாலினி

‘தலைமையைக் கொன்றவன்’ இது தான் அவனது இப்போதைய அடையாளம். அவன் அடைக்கலமாகிய நாட்டில் அவனது கைது பற்றித் தெரிந்தவர்கள் அப்படித்தான் அவனை அடையாளப்படுத்துகிறார்கள்  இப்போது. அந்தத் தலைமை  யார் என்ற பின்னணிகள்  எல்லாம்  அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த அவன் அவனது நாட்டின் தலைமையைக் கொன்றவன். இந்த அடையாளமின்றி அவனது கதையில்  அனேகமாக அவனுக்கு இனிப்பெயர் தேவைப்படாது. இனி அதுவே அடையாளமாக , அவனது பெயராகக் கூட  மாறிப் போகலாம். அல்லது எண்ணிகையில் ஒன்றாக  அடங்கியும் போகலாம்.

அவன்,  தான் அடைக்கப்பட்டிருக்கும் சிறு கூண்டு போன்ற அ(சி)றைக்குள் இலக்கற்றுச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். குறுக்கே நீட்டிப் படுத்தால் அவனது பாதமும் தலையும் சுவரை நெருக்கும் அளவு அகலம் மட்டுமே கொண்ட சிறுபகுதி அது. அதன் ஒரு பக்கச் சுவரையொட்டி ஒரு  படுக்கையும்  மறுபக்கச் சுவரோடு அவன் வைத்து உண்பதற்காக  ஒரு சிறு மேசையும் பலகைக் கதிரையும் போடப்பட்டிருந்தது.  கட்டிலின் கால்மாட்டுப்பக்கமாக ஒரு தட்டு மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்ட மிகமிகச் சிறிய அலுமாரி ஒன்று. படுக்கைக்கு  எதிர்ப்புறமாக  வாசலை  அண்மித்து  கேர்ட்டின் மூடிய ஒரு தடுப்பு. அதற்குள்  ஒரு வாஷ்பேஸினும், கொமேட்டும் .  இருபக்கமும்  அடுத்தடுத்த  செல்களுக்கான  தடுப்புச் சுவர்கள் வாசல் கதவுக்கு எதிர்ப்புறமாக சிறியதாக,  ஜன்னல் போன்ற ஒரு அமைப்பு.

அந்த ஜன்னலை , நீள நீளமாய்  பனைமட்டை அகலத்தில் சீமேந்தால் செய்யப்பட்ட கிறில் போல அமைத்து,  அதையும் ஒருவிரல் மட்டுமே சிரமமின்றி  நுழைக்கக்கூடிய அளவில்  பலமான இரும்புப் பின்னலால் உருவாக்கப்பட்ட நெற் ஒன்றினால்  மூடியிருந்தார்கள். அதில் தெரியும் சிறு துவாரங்கள் வழி அவனுக்குக் கிடைக்கும் வெளிச்சமும் இருட்டுமே அவனுக்கு இரவையும் பகலையும் உணர்த்திக் கொண்டிருக்கும். அவனைப்போல பாரதூரமான குற்றமாகக் கொள்ளப்படாத கைதிகளின் சிறை ஒருவேளை வேறு விதமாக இருக்கக் கூடும். ஆனாலும் அவனுக்கு அது பற்றியோ, இரவு பகல் மாறி வருவது  பற்றியோவெல்லாம்  இப்போது எந்தச் சிந்தனையும் இல்லை. அவை மாறிமாறி வருவதனால் இந்தச் சிறை வாழ்க்கையில்  அவனுக்கு ஏதும் மாறுதல்கள் நிகழ்ந்து விடப் போவதுல்லை என்பதையும் அவன் புரிந்திருந்தான்.

அவனது சிறுவயதில் ஒரு முறை,ஒரே முறை அப்பா அம்மாவுடன் கொழும்புக்கு வந்திருக்கிறான். அப்போது  தெகிவளையில்  zoo வுக்கும் போயிருக்கிறான். தனிமைப்படுத்தப்பட்ட  கூண்டுக்குள் அடைக்கப்பட்டு , உலக இயக்கங்களிலிருந்து விலகி காரணமற்று சுற்றிச் சுற்றி நடந்து  கொண்டிருக்கும் விலங்குகளை வேடிக்கை  பார்த்திருக்கிறான். இப்போது அந்த நிலையில் தான் தான் இருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அவைகளைப் போல தானும் கூட்டுக்குள்  அடைக்கப்பட்டிருந்தாலும், அந்த மிருகங்களுக்கும் தனக்கும் இடையில்  மிகப்பெரும் வித்தியாசம் இருப்பதாக எண்ணிக் கொள்வான். அவைகள் பயமற்றவை. இவன் பயந்து சோர்ந்து, விரக்தியில் வளைய வருகிறான்.

இடைக்கிடை  காரணமற்று உறுமிய அந்த   விலங்குகளைப் பார்த்துப் பயந்து அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவரது நெஞ்சுக்குள் முகம் புதைத்த நினைவு இன்றும் இருக்கிறது. அதன் பின் கொழும்பு என்று யாரும் கதைத்தாலே பலமான கம்பித் தடுப்புகளுக்குள் வளைய வரும், வாயைப் பெரிதாகத் திறந்து  தன் கூரிய பற்கள் தெரியக் கொட்டாவி விடும், இருந்தாற்போல் உறுமும் சிங்கம் புலி போன்ற  விலங்குகள் கண்முன் வந்து பயங்காட்டும். அவன் எபோதும் சிங்கத்தையும் புலியையும் கண்டு பயந்தான். அவை அல்லாதவைகளையும் கண்டு மிரண்டான். கொலையையும் இரத்தத்தையும் கண்டு மிரளுபவனாகவே தான்  வளர்ந்த பின்பும் இருந்தான்.

ஆனாலும், அந்தப் பயமே காலப்போக்கில் அவனிடம் ஒரு விதத் தாழ்வு மனப்பான்மையைத்  தோற்றுவிக்கத் தொடங்கியிருந்தது. தன் வயதொத்த சிறுவர்களைப் போலல்லாது தான் எப்போதும் அம்மாவின்  முந்தானைக்குள்ளோ, அப்பாவின் முதுகுக்குப் பின்னோ பதுங்குபவனாக, பாதுகாப்புத் தேடுபவனாக  உணரத்தொடங்கினான். அதனால் வயதொத்தவர்களிடம் தன் பெயரைத்தொலைத்து விட்டு    பயந்தாங்கொள்ளி என்ற. பட்டப்பெயரையும் பெற்றுக்கொண்டான். அதன் காரணமாகத் தன்னைப் பார்த்தே  வெறுப்பும் வெட்கமும் கொண்டான்.

இப்போது ஓய்வாக இருந்து யோசித்துப் பார்த்தால்,அது தான் அவனது இன்றைய இந்த நிலையின் தொடக்கப் புள்ளி அல்லது தூண்டற்புள்ளி என எண்ணத்தோன்றுகிறது அவனுக்கு. அதுதான், அனேகமாக அதுவேதான்  ‘பயந்தாங்கொள்ளி’ என்ற அந்த வார்த்தையே அவனது  மனதுக்குள்  ஒளித்திருந்து அவன் வளரும் போது  கூடவே வளர்ந்து இன்று இங்கே இந்த வெளிநாட்டு மண்வரை கூடவந்து ‘பயங்கரவாதி’ என்ற பெயருடன்  சிறைக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறது.

அவனைப் பொறுத்தவரை இலங்கையின் மிருகக்காட்சிச்சாலை தெகிவளையில் அமைந்திருக்கின்றது  என்பதெல்லாம் தெரியாது. கொழும்புக்குப் போகும் போது பார்த்த  zoo  கொழும்பில் இருக்கிறது என்பது வரைதான் அவன், தான் பிறந்தநாட்டின் தலைநகரை அறிந்திருக்கிறான் இன்றுவரை. ஆனாலும் அந்த எப்போதோ ஒருநாள் பார்த்த கொழும்பு  பற்றி, கூட்டில்  அடைபட்டுக் கிடக்கும் மிருகங்கள்  பற்றி  வேறும் அவனது மனதில் எழும் கற்பனைகளையும் கலந்து ஏதோ நேற்றுப் பார்த்த காட்சிகள் போல , அவனிடம் கதைகேட்கும் பிறந்த நகரத்தைத் தாண்டாத ஒரு கூட்டத்துக்குச் சொல்லி  நம்பவைக்கும் திறமையைக்கொண்டிருந்தான் .

அவனது கதைகேட்க அவனைச்சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அந்த  வாய்ப்பை, அவனது அப்பா  அவனுக்கு அமைத்துத் தந்திருந்த சிறு பலசரக்குக் கடை  தந்தது. நகரத்தை விட்டுத் தூரமாக மிகவும் பின்தங்கிய,அதிகமாக நகரத்தைத் தாண்டியிராத அநேகமக்கள் வாழ்ந்த அவனது கிராமத்தில் கடையில்  வியாபாரமாகிறதோ இல்லையோ அவனது கதைகேட்க எப்போதும் ஒரு கூட்டமிருந்தது. அவனும்  நாளுக்கொன்றாய்  இட்டுக்கட்டிய  பெரும் கதைசொல்லியாக,  அவன் சொல்லும் கதைகளில் எல்லாம் வரும்  வீரதீரம் மிக்க ஹீரோவாக தன்னையே உருவகித்துக்காட்டியபடி வருடங்களை வளர்த்துக்கொண்டிருந்தான்.

அந்தக் கதைகளில் அவனது அயலட்டைமக்கள் போகாத ஊர்களுக்கெல்லாம் அவன் போயிருந்தான். அப்படிப் போகும்போது சந்தித்த பலர் பற்றிய செய்திகள்,  ராணுவத்துக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பிவந்த சாகசங்கள்,  சிலமாதங்கள்  ஊருக்குத் தெரியாமல் ஒழித்துப் போய் பெடியன்களுடன் ஆயுதப்பயிற்சி  எடுத்துவந்த கதைகள், வீட்டில் எல்லாரும் நித்திரையானதன் பிற்பாடு எழுந்து  இரகசியமாக சென்றிக் காவலுக்குப்  போவதும், இராணுவமுகாம் வரை ஊர்ந்து சென்று உளவுபார்த்து வருவதும், இராணுவக்காரன் இரவில் எழுந்து   முள்ளுவேலிக்கரையில் மூத்திரம் பெய்ய, சிங்களவனின் சிறுநீரைத் தலையில் வாங்கிக் கொண்டு, அது  வாய் வழியாய் வழிய, தன்இனத்துக்காக அசையாமல்கிடந்த தியாகங்கள்  இப்படிப் பல இருக்கும். அப்படிச் சிலநேரம் ஊர்ந்து வரும் போது கூடவே ஐந்துதலை நாகமோ மூன்று மீற்றர் கட்டுவிரியனோ குட்டிகளோடு  அவனருகே ஊர்ந்துவந்த பயங்கரக்கதைகளும் , இவன் அவற்றின் மண்டையில் பெருவிரலை வைத்து அமத்திப் பிடிச்சு சுழட்டி அடித்துக் கொன்ற மயிர்க்கூச்செறியும் சாகசங்களும் என்று பல இருக்கும்.

அவனது இந்த வீரதீரத் தியாகக் கதைகளை அவனது கடையில் வெற்றிலை வாங்கிக் கொடுப்புக்குள் வைத்துக்  குதப்பிக் கொண்டு வாசலில் குந்தியிருந்து அரசியல் பேசிய வயதானவர்களும் ஒற்றை இனிப்புக்கும் சூயிங்கத்துக்கும் ஓடியோடி வந்த வாண்டுகளும் மட்டும் கேட்கவில்லை. கடையின் வீட்டுப்பக்க வாசல் சுவரில்  சாய்ந்து கொண்டு வெற்றிலை இடிக்கும் பெத்தாச்சியும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது.

“பகலில் பக்கம் பார்த்துப்பேசு இரவில் அதுக்கும் பேசாதே என்று சொல்லிச்சொல்லி வளர்த்தால் பாவிப்பயல் காதில விழுத்துறானா ? வாயிலவந்தபடி  புளுகித் திரியுறான். எந்தப் புத்துக்குள்ள எந்தப்பாம்பு ஒளிஞ்சு நிண்டு விசத்தைக் கக்கப் போகுதோ அம்மாளாச்சி?” என்று நாளாந்தம் புலம்பிக்கொண்டும் இருந்தார்.

பெத்தாச்சி  புலம்பும் போதெல்லாம் அவனுக்குக் கோபம்கோபமாக  வரும்.” சும்மா  வாயைப் பொத்திக்கொண்டு  கிடவெணை.” என்று கத்துவான்.  இப்போது பெத்தாச்சியை  நினைக்க  காலில் தொட்டு வணங்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஊரைத்தாண்டாத பெத்தாச்சி, இந்த உலகத்தை எவ்வளவு  தீர்க்கமாகக் கணித்து வைத்திருந்திருக்கிறது. ‘அதன் பேச்சைக் கேட்டிருக்கலாமோ ? கேட்டிருந்தால் இப்பிடி  நடந்திருக்காதோ?’ என்றெல்லாம்  இப்போது ஒவ்வொருநாளும் எண்ணிக் கொள்கிறான். ஆனாலும்  அவனைச்  சூழ்ந்த ஆபத்து கடையில் குழுமியிருந்து கதை கேட்டவர்களால் நேரவில்லை.

அவனுக்கு  இருபத்தொன்பது வயதான போது கல்யாணம் நடந்தது. கலியாணம் வரை அவனுக்கு வெளிநாட்டு ஆசை என்று பெரிதாக எதுவும் இருந்ததில்லை. அவனது இருபத்தொரு வயதில் ஒருமுறை  ஏஜென்சிக்குக்  காசுகட்டி ஏமாந்த பிற்பாடு அவன் இனி வெளிநாட்டுக்குப் போவதில்லை என்று முடிவுசெய்து கொண்டான்.  பிறகே அப்பா தனது  சேமிப்பில் அவனுக்காக இந்தக் கடையைப் போட்டுக் கொடுத்திருந்தார். அவனுக்கும்  குடும்பத்தோடும் ஊரோடும் இருப்பது தான் பிடித்துமிருந்தது.

அவனது மனைவிக்குத் தான், தான் ஒரு கடைக்காரனின் மனைவி என்று சொல்வதில் ஒருவிதத் தாழ்வுச் சிக்கல்  இருந்தது. வெளிநாட்டிலிருந்து வரும் உறவுகளின் படங்கள் அந்தச் சொர்க்கபுரி பற்றி அவளுக்குள் கனவுகளை  வளர்த்திருந்ததனால்  கணவனைத்தெண்டத் தொடங்கினாள்.  புதுமனைவியின் சிணுங்கலும் சீற்றமும்  கண்ணீரும் அவனை  மெல்லமெல்லக் கரைத்து கடையையும்  அவர்களுக்கு நிரந்தர வருமானத்தைத் தந்து  வளர்த்த தோட்டக்காணியையும் விற்க வைத்து ஊரிலிருந்து கிளப்பியது. கடந்த முறை மாதிரியான  தடங்கல்கள் இந்த முறை ஏதும் இடம்பெறவில்லை. எடுத்த எடுப்பில்  எல்லாம் பிசகற்று நேராக நிறைவேற, ஏறி    ஒருமாதத்தில் ஐரோப்பிய நாடொன்றில் வந்திறங்கினான் அவன். மனைவி வந்த அதிஷ்ரம் என அவனும் வீடும் மெச்சிக் கொண்டார்கள்.

அதைவிடப் பெரும் அதிஷ்ரம் இலங்கையில் போர் உக்கிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் அவன்  வந்திறங்கியது. உள்நாட்டு  ஊடகங்களை விட வெளிநாட்டு  ஊடகங்கள் போருக்கு முக்கியத்துவம் கொடுத்து  அலறிக்கொண்டிருந்த நேரத்தில் அகதியாகத் தன்னைப் பதிவுசெய்து கொண்டது. அதன் காரணமாக  இழுத்தடிப்புகள், அதிக விசாரணைகள் எதுவுமின்றி எடுத்த எடுப்பில் அவனுக்கு அகதிஅந்தஸ்துக்  கிடைத்தது.

அகதிமுகாம்களுக்குள் முடங்கி,வாழ்விட அனுமதி கிடைக்கும் வரை வேலைக்கான அனுமதியும்  தங்கியிருக்கும் நகரத்தை அல்லது கிராமத்தை விட்டு நகரமுடியாச் சட்டங்களும், தொழில்  அனுமதியின்மையும் வாழ்வாதாரத்துக்காக வாரம் ஒருமுறை கிடைக்கும் 35 யூரோவுக்குள் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து மிச்சம்பிடித்து வாரம் ஒருமுறை ஊருக்குத் தொலைபேச  ஐந்தோ பத்தோ  கொடுத்து தொலைபேசி அட்டை வாங்கவேண்டிய கட்டாயங்களும், வந்து இறங்கியதும் வந்த கடன் உட்பட  மேலும் பல தேவைகளுக்குப் பட்டியலிடும் உறவுகளுக்கு முகம் கொடுப்பதுமான எந்த அவலத்துக்கும் முகம் கொடுக்கத் தேவையில்லாததுமான என்று தொடராகப் பல அதிஷ்ரங்கள் அவனுக்கு  அமைந்ததாக அவன் இப்போது எண்ணிக் கொள்கிறான். அகதிவாழ்வின் ஆரம்ப சிரமங்கள் தெரியாததால், அவைகள் பற்றி மற்றவர்கள் சொல்லும் போது அவர்களை விட மேலானவனாக அதிஷ்ரம் கொண்டு பிறந்தவனாக அவன் தன்னை எண்ணிக் கொள்வான்.

ஊரில் கூட்டமாக இருந்து வெட்டிப்பேச்சும் வீரக்கதைகளும்  பேசிப் பழக்கப்பட்டவனுக்கு வெளிநாட்டு  வாழ்முறை வந்தவுடன் புரிந்துகொள்ள முடிதாததாக இருக்கும் என்பதை அவன் புரிந்து கொண்டிருக்கவில்லை.வேலை நேரம் தவிர்ந்த நேரங்களில் அவனுக்குப் பேசவும் கூட்டம் கூடவும் என  ஊரிலிருந்தது போல் அதிக மனிதர்கள் தேவைப்பட்டார்கள். அதற்கான இடங்களாக தமிழர்கள் கூடும் கடைகள் பார்களை அவன் தெரிவுசெய்து கொண்டான்.

நாடு  இனப்பிரச்சனையில் பற்றி எரியும் போது  நாடு கடந்து வந்தவனாகையால் அவனிடம் நாட்டுநிலைமை  பற்றிக்கேட்கும் இயல்பான ஆவலைப் பலரும் கொண்டிருந்தனர். அவன் வெளிநாட்டில் தமிழர்களுக்குக் கதைசொல்லும் ஒரு கதைசொல்லியாக மீண்டும் மாறத்தொடங்கினான். அவன்  கதையில்  பல கிளைக் கதைகள் இருந்தன. அந்தக் கிளைகள் பலவற்றின் சூப்பர்ஹீரோ  இவனாக  இருந்தான்.

ஊரில்  சொன்னது போல, முதல்தடவை வெளிநாட்டுக்குச் செல்ல முயன்று தோற்றுத் திரும்பி வந்த காலத்தை , ஆயுதப்பயிற்சிக்குச் சென்றதாக வீரப்புளுகு புளுகும் தேவை அவனுக்கு இப்போது இல்லை. இங்கிருப்போர்  யாவரும் அவனுக்குப் புதியவர்கள். அவனின் கடந்தகாலம் அறியாதவர்கள். அத்துடன் கூடவே ஊரில் இருப்போரை விட  தனிநாடு பற்றி, அதன் தேவை பற்றி, அதிகம் பேசுபவர்களாகவும், தமக்காய்  போராடுவோரைப் போற்றுவோராகவும் வெளிநாட்டுத்தமிழர்கள்  இருந்தது, அவனுக்குத் தன்னை அவர்கள் முன்னிலையில் உயர்த்திக்காட்டி  ஒரு உயர்அங்கீகாரம்  பெறும்  ஆவலைத் தூண்டியது. அதற்காகத்  தன்னை  ஒரு போராட்டவீரனாகச் சித்தரிப்பது முக்கியமாகவும், அது ஒரு பெரும் அந்தஸ்து போலவும் பட்டது.

நாளாந்தம் அவனிடம் கதை கேட்க யாராவது வாய்த்தார்கள் அல்லது கூட்டம் உள்ள இடம் தேடி அவன் செல்லத் தொடங்கினான். தன்னைச் சுற்றி எப்போதும் பரபரப்பான பேச்சும் கூட்டமும் இருப்பதற்கு ஏற்ற வகையான  கதைகளை அவன் கட்டமைத்துச் சொல்லத் தொடங்கினான். வெளிநாடு என்பதும், அங்கிருக்கும் தமிழர்கள்  என்பதும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்று போலத் தோன்றினாலும் அவர்கள் பல குழுக்களைச் சேர்ந்தவர்களாகவும் வேறுவேறு குழுக்களுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டு இன்னொன்றை உள்ளத்துள் எதிர்ப்பவர்களாகவும், மற்றும்  சில அரசகைக்கூலிகளாகவும், அதன் மூலம் வருமானம் பெறுவோராகவும்  இருப்பதை அறிந்திருக்கக் கூடிய அறிவையோ, அவர்களுடன் பழகிப் புரியும்  காலஎல்லைகளையோ, அதன் சூதானங்கலையோ அவன் கொண்டிருக்கவில்லை.

கூடவே, வந்ததும்  சிரமமின்றிப் பெற்றுக் கொண்ட வதிவிட அனுமதி, உடனடியாகக் கிடைத்த  வேலைவாய்ப்பு   போன்றவை இவற்றுக்காக வருடக் கணக்கில் காத்திருப்போருக்கு ஏற்படுத்தக் கூடிய  காழ்ப்புணர்ச்சியையும் அறியாதவனாக இருந்தான். தனக்கென அமைந்த அனைத்தையும் எப்போதும் எல்லோருக்கும் விதந்துரைத்தான். தஞ்சம் கோரி வெளிநாட்டுக்கு  வந்த மக்களிடம் எப்போதும் ஒருவிதப் போட்டி இருக்கும் என்பதுவும், தம்  இனத்துக்குள்  தமக்குப் பிடிக்காதோரை எதிரி  இராணுவத்துக்குக் காட்டிக் கொடுத்த  மக்களும் கொண்ட கூட்டத்தில் ஒருபகுதியினர் தான் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள் என எண்ணிப்பார்க்கும் அறிவெல்லாம் அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை .

“என்னைப் போல உடனே எல்லாம் கிடைக்கவேணும் என்றால் நீங்கள் இயக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.  இந்த இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கவேண்டும். அந்தத் தலைமையைப் போட்டுத் தள்ளியிருக்கவேண்டும். இந்தத் தலைமைக்குக் குறிவைத்திருக்கவேண்டும். அப்படி ஏதும் செய்திருந்தால் உண்மையிலேயே  நாட்டுக்குப் போவது சிரமம் என்பதை விளங்கிக் கொண்டு வெள்ளைக்காரனே கூப்பிட்டு விசா தந்திருப்பாங்கள்.” என்று தனக்குமுன் வந்து வாழ்விட அனுமதி தொழில்வாய்ப்பு அற்று ஏங்கிக் கிடந்தோருக்கு  அறிவுரைகளையும் அள்ளி வழங்கினான்.

இப்படியே தான் குடிக்கும் இடங்களில், கூடும் கடைமுனையில் என்று ஒவ்வோரிடமாய்  தனக்கெதிரான  காழ்ப்புகளின் விதைகளை ஊன்றி முளைவிடவைத்தான். அவை  சடைத்து வளர்ந்து அவனையே  காவுகொள்ளச் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்பதும் அறியாமல்.

அன்று அவனுக்குப் பொறிவைக்கக் குறிக்கப்பட்ட நாள். குடித்தால் பலரையும் போல அவனுக்கும் உளறாமல்  இருக்க முடியாது. கூடவே  வீரவசனம்  பேசாமலும்  அந்த மதுமயக்கத்தைக் கடக்க முடியாது அவனால்.  அவனைப்பற்றிய கணிப்பீடு அவனுக்கு இருந்ததோ இல்லையோ அவர்கள் அவனை, அவனின் பலவீனத்தைத் தெளிவாகவே கணித்து வைத்திருந்தார்கள்.

அன்றும் வழமை போல வேலை முடித்து மாலையில் அவன்  வழமையான கூட்டத்துடன்  பாருக்குப் போனான்.   ஊரில் பெயர் கூட  அறிந்திராத குடிவகை எல்லாம் இங்கு தன்னால் குடிக்க முடிவது கூட தான் செய்த அதிஷ்ரம் என்று நம்புபவன் அன்றும் அந்த அதிஷ்ரத்தைக் குடித்தான். கூடவந்தவர்கள் இன்னும் அதிகமாக  வாங்கி ஊற்றிய போது நிதானம் தவறும் வரை நிறைவாகக்  குடித்தான். நிதானம் தவறியதும் வழமை போல வீரப் பிரதாபங்களை உளறத் தொடங்கினான்.

“சும்மா வாய்க்கு வந்தபடி அவிழ்த்து விட்டு எங்களுக்குச் ஷோ காட்டாதே.” என்றான்  இவனுக்குச் சமமாய்  குடித்த  இன்னொருவன்.

“நீ இயக்கத்திலும் இருக்கவில்லை. ஒரு  …..  இலும்  இருக்கவில்லை.  உன்ர  முழங்கைக்குக்  கீழ  ட்ரெயினிங்  எடுத்துக் காச்ச  அடையாளமில்லை. துப்பாக்கி தூக்கிக் காய்த்த  வடுக்களில்லை. பயந்தாங்கொள்ளி   ………” என்றான்.

‘பயந்தாங்கொள்ளி’ அந்த வார்த்தை உச்சந்தலையில் ஷெல் அடித்தது போல குடிவெறியிலும் அவனைப் பலமாகத் தாக்கியது. இத்தனை வருடமாக அவனது காதுகளில் விழாதிருந்த வார்த்தை, வாழ்வை  மனிதர்களைக் கண்டு அவனைப் பயந்தோடவைத்த குரூரம்  நிரம்பிய அந்த வார்த்தை.  அவனை ஒன்றுமே  இல்லாத வெறும் ஒரு மொன்னையாக உணரவைத்த வார்த்தை. அந்த வார்த்தை தந்த அழுத்தத்திலிருந்து  மீண்டுவர அவனை அதிகம் பிரயத்தனப்படுத்திய வார்த்தை. அவனை முகமூடி போடவைத்த  வார்த்தை. அது  அவனது முகத்தில்  துப்பப்பட்ட போது அமிலத்தைக் காறி முகத்தில் உமிழப்பட்டது போல உணர்ந்தான்,அதிர்ச்சியானான்.

பயந்தாங்கொள்ளி  என்றவனைக் குடிவெறியில்  தாக்க முயன்றான். அவன் விலத்திக் கொண்டு மீண்டும்,

“பேயா…………….  நீ  ஒரு பயந்தாங்கொள்ளி.” என்ற போது  மிக ஆவேசமானான்.

“என்னை ஆரெண்டு நினைச்சாய்…………..? நான்…….. ஐயே போட்டுத் தள்ளினவன்.” பற்களை  நெருமி உறுமினான்.

“என்னடா மினிஸ்ரரைப் போட்டனியோ ?” தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்தான்,

“ஓம்…………..கொழும்பில அவங்களின்ர இடத்திலேயே வைச்சுப் போட்டனான்.”

கூட  இருந்தவர்கள் இப்போது உண்மையாகவே அதிர்ந்தார்கள். அவர்களின் முகத்தின் அதிர்ச்சி அவனுக்குத் திருப்தியாக இருந்தது.

“அவனை மட்டும் தானோ இல்லாட்டி……..?”

அவர்களின் அதிர்ச்சியைத் தொடர வைத்து தனது உயர்ந்த இடத்தைத் தக்கவைக்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு அடுத்த வார்த்தை ஆயுதத்தைப் பிரயோகித்தான்.

“நான்……….யும் கொல்லக் குறிவைச்சிருந்தன். அதுக்குள்ளே அவங்களுக்கு மூக்கில வேர்த்துப் போச்சு. இங்கால  வந்திட்டன். எல்லாம் அடங்கப் போவன், போய்ப் போடுவன் . “

அந்தக் குடிவெறி நாளின் இரவில் உளறியதுடன் அவன் அதை விடிந்ததும் மறந்து போனான். பாரின் மங்கிய ஒளிசாய்ந்த இருட்டில், மேசைக்குக் கீழே வைத்து அவர்கள் mobil-ல்  பதிவு செய்து கொண்ட  அவனது வாக்குமூலம் அவன்  திரும்பி நாட்டுக்குப்போய்  போடக் காத்திருப்பதாகச் சொன்னவரின் உளவாளியிடம்  சேர்க்கப்பட்டது.  கூடவே அவன் கொலையாளி என்பதும் தமக்குக் கொலைஅச்சுறுத்துகிறான்  பாதுகாப்புத் தேவை என்ற  வேண்டுகோளுடன் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டது. என்பவை எதுவுமே தெரியாதவனாக  அவனது நாட்கள் சாதாரணமாக அவன் கூடித் திரிந்த, குடித்துக் கும்மாளம் போட்டவர்களுடன் நகரத் தொடங்கின.

எல்லா நாட்களும் போல சாதாரணமாக அவன் எண்ணிப் பணியகத்தில் இயங்கிகொண்டிருந்த நாளொன்றில்   அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்காத விதமாக, தன் ‘தாய் நாட்டின் அரசியற் தலைமை  ஒன்றைக் கொன்றவன் .  இன்னோர் தலைமையைக் குறிவைத்துக் காத்திருப்பவன். அதற்காகவே  தங்கள் நாட்டில்  அடைக்கலம் தேடிப் பதுங்கியிருப்பவன். ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்த  ஒருஅமைப்பின்  பிரதிநிதி’ என்பதன் அடிப்படையில்   அவனது வாய்வழி வாக்குமூல ஆதாரங்களுடன் கைதுசெய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்டு விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட  போதோ, விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட்ட போதோ என்ன நடந்தது என்றே உணரமுடியாத நிலையில் பிரம்மை பிடித்துப் போய் அவன் இருந்தான்.    மொழிபெயர்ப்பாளர் வைத்து அவனது குற்றத்தை  விளங்கவைத்த போது  மிகப்பலமாக  அதிர்ந்து போனான்.

“ஐயோ நானில்லை. எனக்கு எதுவும் தெரியாது.” எனப் பெரும் கூச்சலிட்டான்.

பொதுவாக சிறுசிறு குற்றங்களைச் செய்வோர் நீதியின் முன் நிறுத்தப்படும் போது, குற்றத்தை ஒப்புக்கொள்வது போல், கொலை, பாலியல் வன்புணர்வு போன்ற பாரதூரமான குற்றங்களைச் செய்வோரில், மனச்சாட்சி உறுத்தி தாமாகச் சென்று சரணடைவோர் தவிர,  மற்றவர்களில் அநேகமானோர் குற்றம்  நிரூபிக்கப்பட்ட பின்பும்  தம்மை  நிரபராதியென்றே வாதாடிக் கொண்டிருப்பார்கள் என்பது காவல்துறையின் அனுபவங்களில்  எழுதப்படாத விதி  என்பதால், அவனது ஓலங்கள் எதுவும் எந்தக் காதுகளையும் எட்டவில்லை.

“நான் எந்தத்தப்பும் செய்யவில்லை. நான் கொழும்புக்கு மொத்தம் மூன்றே மூன்று முறைகளே வந்திருக்கிறேன்.  அந்த அமைச்சர்கள் பற்றி எனக்கு எந்த விபரமும் தெரியாது.” என்ற அவனது கதறல்  நீதிமன்றச் சுவர்களில், சிறைக் கம்பிகளில் மோதிமோதி  எதிரொலித்து.  ஆனாலும் தன் குரல்வழி  வாக்குமூலத்திடம் தோற்று இறுதியில் அவன்  ஓய்ந்துபோனான்.

அரசியல்வாதிகளின் செல்வாக்குக் கரங்கள்  நாடுகள் தாண்டியும் நீளும் சக்தி வாய்ந்தவை என்பதையும்  அவை புனைவுகளுக்கும்  உயிர் கொடுக்கும் வல்லமை கொண்டவை என்பதைக் காலம் கடந்து புரிந்து கொண்ட அவன் இப்போதெல்லாம் சாகவும் பயமற்றவனாக மாறிக்கொண்டு பேச்சுமறந்து போனவனாக  ஒடுங்கிப்போனான். அவனுக்காக வாதாட யாருமற்ற  தனித்ததேசத்தில்  அவன் யாருடனும் பேசிக்கொள்ள  விரும்புவதில்லை.

இந்தச் சிறைக்குள் இருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கில்லை. கிடைத்தாலும் சிறையை  விட, மரணத்தைவிட இந்த  மக்களுடன் கூடி வாழ்வது  மிகப் பயங்கரமாக  இருக்கக் கூடும் என்று எண்ணிப் பயந்தான். ஒருவேளை இந்தச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவனது விசா நிராகரிக்கப்பட்டு பிறந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால்…..  எனச் சிந்திக்கும்  தருணங்களில்   ‘ஐயோ  வேண்டாம் ‘ என  வாய் விட்டே  கதறுவான்.

திருப்பி அனுப்பப்பட்டால் அவன் அவனது நாட்டில் போய்  இறங்கும் போதே  கைது செய்யப்படலாம். பூஸா ,  நாலாம்மாடி என  தமிழ்இரத்தம்  தெறிக்கத் தெறிக்க பத்திரிகைகளில் வந்த செய்திகள் போல தானும்   செய்தியாகலாம். அதை விட இந்தத் தனிமைச் சிறையே போதும் என்ற முடிவுக்கு  வந்திருந்தான்.

“விசரா…………….  விசர்க்கதை உளறித் திரியாதேடா.” என்று அக்கறையோடு திட்டும் அப்பாவின் குரல்  இப்போது  மனதில் எழுந்து கண்ணீர் வரவழைத்தது.

“புள்ளை சும்மா பம்பலுக்குக் கதைச்சுத் திரிஞ்சால் அவனை எதுக்குத் திட்டுறியள் ?” எனும் அம்மாவின் கண்மூடித் தனமான பாசத்தின் மீது கோபம் வந்தது.

தனக்குத் தெரிந்த, தன்னைத் தெரிந்த ஊரில் அமைதியாக சந்தோசமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்வில்  இடையில் வந்து நுழைந்து கொண்டு வெளிநாட்டு ஆசை காட்டிக் கவிழ்த்துப் போட்டதாக  மனைவி மீது  கோபம் வந்தது. அவளை இனி வாழ்வில் நினைத்தே  பார்த்தல் கூடத் தப்பு என எண்ணிக் கொண்டான்.

தான்  ஓடி விளையாடி, பாத்திகட்டி, எண்ணெய்  இல்லாத  காலத்தில் துலாமிதிச்சு பச்சைப் பசேல் என்று வைத்திருந்த உயிர் போன்ற பரம்பனைக் காணியை பெத்தாச்சி  கண்ணீர்  வடித்துப் புலம்பப் புலம்ப விற்று நாட்டைப் பிரிந்ததன் சபிக்கப்பட்ட  தண்டனை தான் இதுவென  எண்ணத் தலைப்பட்டான்.

“நீ சொன்னதை நான் கேட்டிருக்கலாம் பெத்தாச்சி.” என்ற வார்த்தைகளைத் தனிமையோடும்  பெத்தாச்சியின்  நினைவுகளோடும் மட்டும் பேசிக் கொள்பவனாக மாறிப்போனான். ‘தலைமையைக் கொன்றவன்’ என்ற அடையாளம் கொண்டவன்.

மாலினி-ஜெர்மனி 

மாலினி

(Visited 178 times, 1 visits today)
 

2 thoughts on “‘தலைமையைக் கொன்றவன்’-சிறுகதை-மாலினி”

Comments are closed.