அகுஎகே -நைஜீரிய சிறுகதை- சினுவா ஆச்சுபி-தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

அவளுக்கும், அவளது சகோதரர்களுக்குமிடையே திடீரெனத் தோன்றிய மனக்கசப்பின் காரணமாக, சுவரின் ஒரு ஓரமாக  வைக்கப்பட்டிருந்த நோயாளிப் படுக்கையில் அகுஎகே சாய்ந்திருந்தாள். அவள், அவர்கள் முணுமுணுப்பதை அச்சத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் இதுவரை அவளுக்கு செய்யப் போவதைப் பற்றி எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை. எனினும் அது என்னவென்று அவள் அறிந்திருந்தாள். அவளது தாயின் தந்தை வசித்து வரும் எஸி எனும் பிரதேசத்துக்கு தன்னைக் கொண்டு செல்லும்படி வேண்டி நிற்பதுவே அவளுக்கு அவசியமாக இருந்தது.

எனினும், சகோதரர்களுக்கும், அவளுக்குமிடையே தோன்றியிருந்த மனக்கசப்பு விநோதமானதாக, எவ்வளவு தூரம் வளர்ந்திருந்ததென்றால், அவர்களுடன் கதைப்பதற்குக் கூட அவளது பிடிவாதம் இடம் கொடுக்கவில்லை. அவர்களால் முடிந்ததைச் செய்யட்டும். முன் தினமிரவு அவளது சகோதரர்களில் மூத்தவனான ஒஃபோடிலேக்கு அவளுடன் கதைக்கத் தேவைப்பட்டு, அவளருகில் வந்து நின்று எதுவும் கதைக்காமல், கண்ணீர் நிறைந்த கண்களால் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை மட்டுமே செய்தான். அவன் அழுவது யாரால்? அவன் அசிங்கத்தைச் சாப்பிடட்டும்.

பிறகு, இடைக்கிடையே அவளிடம் வந்து கலைந்து போகும் பாதித் தூக்கத்தில், தனது வியாதியைக் குறித்து எவ்வித உணர்வுமற்ற அகுஎகே தொலைவில் அமைந்திருந்த தனது பாட்டனாரின் வீட்டுக்குச் சென்றாள். மீண்டுமொரு தடவை அவள் அக் கிராமத்தின் அழகுராணியானாள்.

அகுஎகே அவளது தாயின் ஒரே மகளாகவும், கடைக்குட்டியாகவும் இருந்தாள். அவளுக்கு மூத்த சகோதரர்கள் ஆறு பேர் இருந்ததோடு, அவளது தந்தை அவள் சிறுமியாக இருக்கும்போதே செத்துப் போயிருந்தார். அவர் சொத்துக்கள் பல உள்ள செல்வந்தராக இருந்தபோதிலும், அவரது சில பிள்ளைகள் தமக்கேயுரிய பயிர்நிலங்களில் விதைத்திட்ட போதிலும், அவரது குடும்பத்தினர் அவர்களது உண்மையான தேவைகள் என்னவென்று அறிந்திருக்கவில்லை.

ஒவ்வொரு வருடத்திலும் பல தடவைகள் அகுஎகேயின் தாய், தனது பிள்ளைகளை எஸியில் வசிக்கும் தமது உறவினர்களைப் பார்க்க அழைத்துச் சென்று வந்தாள். அது சிறுவர்களின் நடை வேகத்தைப் பொறுத்து, உமோஃபியாவிலிருந்து முழுமையான ஒரு நாள் பயணமாக இருந்தது. சில சமயங்களில் அகுஎகே, தாயின் தோள் மீதிருந்தும், சில சமயங்களில் நடந்தும் பயணித்திருக்கிறாள். சூரியன் உச்சிக்கு வரும்  நேரத்தில் அவளது தாய், பாதையின் ஓரத்திலிருக்கும் மரவள்ளிச் செடியிலிருந்து இலைகளைப் பறித்து அவளது தலைக்கு நிழல் கிடைக்கச் செய்வாள்.

அகுஎகே, தனது தாயுடைய தந்தையின் வீட்டுக்குச் செல்லும் அப் பயணத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். பாட்டனார், வெண்ணிறத் தலைமயிரும், அடர்த்தியான மீசையும் கொண்ட பெரிய மனிதராவார். சில நேரங்களில் அம் முதியவர், நுனி கூர்மையாகத் தொங்கும்விதமாக தனது மீசையை கயிற்றைப் போல முறுக்கிக் கொள்வார். அவர் பனங்கள்ளைக் குடிக்கும்போது மீசையின் நுனியிலிருந்து துளிகளாய்ச் சிதறும். அகுஎகே அதைக் கண்டு அளவற்ற சந்தோஷத்தை உணர்வாள். முதியவர் அதனை அறிந்திருந்ததால், அவர் அவளது மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதற்காக இன்னும் கள்ளைக் குடித்துக் காட்டி விட்டு, வாயைக் கழுவிக் கொள்வார்.

அகுஎகே, அவரது தாயின் மறு உருவமாக இருக்கிறாளென அனைவரும் கூறியதால், அவர் தனது பேத்தியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர், அவளை அகுஎகே என அழைத்தது அபூர்வம். எப்பொழுதும் அவர் அவளை ‘அம்மா’ என்றே அழைத்து வந்தார். அவரைப் பொறுத்தவரையில், உண்மையிலேயே அவள், வாழ்க்கைச் சக்கரத்தில் அவரது தாயின் மீள் வரவாகும். எஸிக்குச் சென்று வந்தால், தனக்கு எதிலிருந்தும் மீண்டு விடலாமென அகுஎகே அறிந்திருந்தாள். அவளது பாட்டனார், அவளை மிரட்ட யாருக்கும், ஒருபோதும் இடமளித்திருக்கவில்லை.

சுவரின் எதிர்ப்புறத்திலிருந்து கேட்ட ஓசைகள் தற்போது அதிகரித்திருந்தன. சில நேரம், அயல்வாசிகள் அவளது சகோதரர்களிடம் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக இருக்கக் கூடும். அவ்வாறெனில் அனைவருமே இப்பொழுது இதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள். எல்லோருமே அசிங்கத்தை உண்ணட்டும். அவளால் எழுந்து கொள்ள முடியுமாக இருந்திருப்பின், அவளது கட்டிலருகே வைக்கப்பட்டிருக்கும் பழைய துடைப்பக் கட்டையை எடுத்து எல்லோரையும் அடித்துத் துரத்தியிருப்பாள். அவள், தனது தாய் உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என யோசித்தாள். அவ்வாறிருந்திருந்தால் இதெல்லாம் அவளுக்கு நடந்திருக்காது.

அகுஎகேயின் தாய் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமான போது, சடலத்தைப் புதைப்பதற்காக அவளது உறவினர்களுடன் அவளும் எஸிக்கு அழைத்து வரப்பட்டாள். தனது ஜீவிதத்தில் அநேகமான கஷ்டங்கள், கவலைகளைக் கண்டிருந்த முதியவர் ‘ஆண்டவன் என்னை விட்டுவிட்டு எனது பிள்ளைகளைக் கொண்டு செல்வதேனோ?’ எனப் புலம்பியவாறிருந்தார். எனினும் சில தினங்களுக்குப் பிறகு அவர் அறுவடைக்கு வந்திருந்தவர்களிடம், ‘நாங்கள் அனைவருமே ஆண்டவனின் சேவல்கள். சில வேளைகளில் அவன் குஞ்சொன்றை உணவாகத் தேர்ந்தெடுப்பான். சில வேளைகளில் வயதானதைத் தேர்ந்தெடுப்பான்’ எனக் கூறினார். அகுஎகேவுக்கு இந்தக் காட்சிகள் தெளிவாக ஞாபகம் வந்ததோடு மீண்டுமொரு தடவை அவள் அழத் தொடங்கினாள். முதியவர் அவளது அறுவெறுப்பான மரணம் பற்றிக் கேள்விப்பட்டதும் என்ன செய்வார்?

அகுஎகேயின் வயதையொத்த பிள்ளைகள் தமது முதலாவது பிரசித்தமான நடனத்தை, அவளது தாயின் மரணம் நிகழ்ந்த பிறகு வந்த முதல் கோடை காலத்தில் அரங்கேற்றினார்கள். அகுஎகே தனது நடனத்தின் மூலம் சமூகத்தில் மிக மேலான உணர்வுகளை உண்டு பண்ணியிருந்தாள். அவளது கரம்பற்றக் கேட்டு வந்தவர்களின் எண்ணிக்கை மேலும் பத்து மடங்கால் அதிகரித்திருந்தது. ஒவ்வொரு சந்தை தினத்திலும், ஒவ்வொரு இளைஞர்கள் அவளது சகோதரர்களுக்கு பனங் கள்ளைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். எனினும் அகுஎகே அவர்கள் அனைவரையும் தவிர்த்து விட்டாள். அவளின் சகோதரர்கள் அதனால் கவலையில் ஆழ்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவருமே, விஷேடமாக தமது தாயின் மரணத்துக்குப் பின்னர், தமது ஒரே தங்கையை மிகவும் நேசித்ததோடு, அவர்கள் தமது தங்கைக்கு மகிழ்ச்சியைப் பெற்றுக் கொடுப்பதில் ஒருவரோடொருவர் போட்டியிட்டனர்.

சிறந்த திருமண வாழ்க்கைக்காக இருக்கும் வழிகளை அவள் தவிர்ப்பதே அவர்களுக்கிருந்த ஒரே தொந்தரவாக இருந்தது. தம்மை மணமுடிக்க முன்வரும் அனைத்து இளைஞர்களையும் புறக்கணித்து விடும் பிடிவாதம் கொண்ட பெண்கள், இறுதியில் பெருந் துயரத்துக்கு ஆளாவார்கள் என்றும், ஒன்வுஎரோவின் கதையில் தனது கரம்பிடிக்க வந்த எல்லா நல்ல மனிதர்களையும் புறக்கணித்து விட்டு, இறுதியில் கட்டிளம் இளைஞர்கள் மூவரின் உருவத்தில் தன்னை அழிக்க வந்த கஞ்சனின் பின்னால் ஓடிச் சென்ற ஒன்வுஎரோவைப் போல எப்போதுமே துயரத்தில் ஆழ்ந்திருப்பார்கள் என்றும் அவளது மூத்த சகோதரனான ஒஃபோடிலே அவனால் முடிந்தளவு பலமாக அவளை எச்சரித்திருந்தான்.

அகுஎகே அதற்குச் செவிமடுக்கவில்லை. இப்பொழுது அவளது காவல் தெய்வம் அவளது எதிர்பார்ப்பைச் சிதறடித்து விட்டிருக்கிறது. அவளை வியாதியொன்றுக்கு ஆளாக்கி விட்டிருக்கிறது. இப்போது அவர்கள், அவளது வீங்கிக் கொண்டிருக்கும் வயிற்றை ஆரம்பத்தில் தாம் கவனிக்கவில்லை என  பொய்யாக மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவளைக் குணப்படுத்தவென பல பிரதேசங்களிலிருந்தும் மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். எனினும் அவர்களில் எவரதும் மூலிகைகளாலோ, வேர்களாலோ எந்தப் பலனும் இருக்கவில்லை. குறி பார்த்துச் சொல்லப்பட்டதற்கிணங்க, அகுஎகேயின் சகோதரர்கள் பனை மரமொன்றின் உயரே படர்ந்திருந்த கொடியொன்றைத் தேடி மரங்களினூடாகச் சென்றார்கள்.

‘அதனைக் கண்டதுமே, கைக் கோடரியொன்றை எடுத்து, அவ்வாறு தொங்கிக் கொண்டிருக்கும் கொடியை வெட்டி விடுங்கள். உங்களது தங்கையைப் பிணைத்துக் கொண்டிருக்கும் பூதம் அவளைக் கைவிட்டுச் சென்று விடும்’ என்று குறி சொல்பவன் கூறியிருந்தான். சகோதரர்கள் உமோஃபியாவுக்கும், அதனைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கும் அதைத் தேடிச் சென்று அவ்வாறான பனை மரமொன்றைக் கண்டு, அக் கொடியை மரத்தினின்றும் வேறாக்கினர். எனினும் அவர்களது தங்கை அப் பிணைப்பிலிருந்து விடுபடவில்லை என்பதோடு, நிலைமை இன்னும் மோசமான கட்டத்துக்குத் திரும்பியிருந்தது.

இறுதியில், அகுஎகே அப் பூமிக்கே அறுவெறுப்பான வீங்கும் வியாதியால் விழுங்கப்பட்டிருப்பதாகவும், அடுத்துச் செய்ய வேண்டியது பற்றியும் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கவலையோடு கலந்துரையாடி, முடிவெடுத்தார்கள். அகுஎகே அவளது சகோதரர்களது கலந்துரையாடலின் நோக்கம் என்னவென்று புரிந்து கொண்டாள். அவளது மூத்த சகோதரன், அவள் படுத்துக் கொண்டிருந்த அறையில் கால் வைத்ததுமே, அவள் குரலெழுப்பிக் கத்தத் தொடங்கியதோடு அவன் அங்கிருந்து ஓடிச் சென்று விட்டான்.

இந்த நிலைமை ஒரு நாள் முழுவதும் இருந்ததோடு, அவள் வீட்டில் வைத்தே இறந்து போய்விட்டால், கடவுளின் கோபம் முழுக் குடும்பத்தின் மீதும், இல்லாவிட்டால் முழுக் கிராமத்தின் மீதும் இறங்கி, அனைவரும் பாரிய விளைவொன்றை எதிர்கொள்ள வேண்டி வருமென கதை பரவியது. அவர்கள் உமோஃபியாவின் ஒன்பது கிராமங்களுக்கும் அவ் வியாதியைப் பரப்புகிறார்களென அயல்வாசிகள் வந்து அவளது சகோதரர்களை எச்சரித்திருந்தார்கள்.

அன்று அந்திவேளையானதும், அவர்கள் அவளை அடர்ந்த வனாந்தரத்துக்குள் கொண்டு சென்றனர். அவர்கள் அவளுக்கென அங்கு தற்காலிகக் குடிசையொன்றைக் கட்டி, படுக்கையொன்றையும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அப்பொழுது அவள் களைப்பாலும், கோபத்தாலும் அமைதியாக இருந்ததோடு, அவர்கள் அவளை அங்கே விட்டுவிட்டுச் சென்றார்கள்.

மறுநாள் காலைவேளையில், சகோதரர்களில் மூவர், அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாளா எனப் பார்ப்பதற்காக மீண்டும் காட்டுக்குள் சென்று பார்த்தார்கள். அவர்களை மிகுந்த கவலைக்குள் ஆழ்த்தும் விதமாக, குடிசை வெறுமையாக இருந்தது. அவர்கள் அதனை மற்றவர்களிடம் தெரிவிக்க ஓடிச் சென்றார்கள். அனைவரும் மீண்டும் வந்து, காட்டில் அவளைத் தேடத் தொடங்கினார்கள். அவர்களது சகோதரியின் எவ்வித அறிகுறியுமில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில், முன்பு நடந்திருக்கக் கூடிய விதத்தில், சந்தேகத்துக்கிடமின்றி காட்டு விலங்குகளுக்கு அவள் இரையாகியிருக்கக் கூடும்.

இரண்டு, மூன்று பௌர்ணமிகள் கடந்து சென்றதன் பிறகு, அவர்களது பாட்டனார், அகுஎகே குறித்து தான் கேள்விப்பட்ட தகவலை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்வதற்காக உமோஃபியாவுக்கு தூதுவனொருவனை அனுப்பி வைத்தார். சகோதரர்கள் அவள் மரணித்து விட்டதை உறுதிப்படுத்தும் தகவலைத் தெரிவித்ததும், அவன் திரும்பவும் எஸிக்குச் சென்றான். சகோதரர்கள் அனைவரையும் தன்னை வந்து சந்திக்குமாறு கட்டளையிட்ட தகவலை ஒன்றிரண்டு கிழமைகளுக்குப் பிறகு  மீண்டும் அனுப்பியிருந்தார் முதியவர்.

அவரது பேரன்கள் வந்து சேரும்போது அவர் தனது குடிலில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். சம்பிரதாய முறைப்படி அவர் அவர்களை வரவேற்றதன் பிறகு, அவர்களுக்கு அண்மையில் நிகழ்ந்திருந்த துர்பாக்கியம் குறித்தான நினைவுகளினால் மௌனமாக இருந்ததன் பிறகு, அவர் அவர்களது சகோதரி எங்கே எனக் கேட்டார். மூத்த சகோதரன் அகுஎகேயின் மரணம் குறித்து விபரித்தான். முதியவர் தனது வலது கையில் தலையை சாய்த்தவாறு அவன் அனைத்தையும் கூறி முடிக்கும்வரை செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

“அவ்வாறென்றால் அகுஎகே இறந்துவிட்டாள்?!” என அவர் கேள்வியே பதிலாகக் கூறினார்.

“நீங்கள் ஏன் எனக்கு தகவல் அனுப்பவில்லை?”

சகோதரர்கள் அனைவரும் மௌனமாக இருந்தார்கள். பிறகு தமக்கு அனைத்து சடங்குகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டியிருந்தது என மூத்த சகோதரன் கூறினான். முதியவர் தனது வாயைக் கழுவிக் கொண்டார். பிறகு திடீரென எழுந்து, தனது படுக்கையறையை நோக்கி மெதுவாக நடந்து சென்று, அலங்காரமாகச் செதுக்கப்பட்டிருந்த கதவைத் திறந்தபோது அங்கே அகுஎகேயின் ஆவி, புன்னகைக்காது, மகிழ்ச்சியைப் பிரதிபலிக்காது அவர்களது முன்பு காட்சியளித்தது. அனைவருமே எழுந்து நின்றதோடு, ஓரிருவர் அப்போதே குடிலுக்கு வெளியே ஓடிச் சென்று விட்டிருந்தார்கள்.

“எல்லோரும் திரும்பி வாருங்கள்” என முதியவர் சோகம் கலந்த புன்னகையோடு கூறினார்.

“இந்த இளம்பெண் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? எனக்கு பதில் தெரிய வேண்டும். ஒஃபோடிலே நீதான் மூத்தவன். நீ எனக்கு பதில் கூற வேண்டும். யாரிவள்?”

“இது எனது தங்கை அகுஎகே”

“இவள் உனது தங்கை அகுஎகே? ஆனால் அவள் வீங்கும் வியாதி தாக்கி செத்துப் போய்விட்டதாக நீ இப்போதுதானே கூறினாய்? செத்துப் போனவள் எப்படி மீண்டும் இங்கே இருப்பாள்?”

எங்கும் அமைதி நிலவியது.

“உங்களுக்கு, வீங்கும் வியாதி என்றால் என்னவென்று தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் அதைப் பற்றி ஏன் கேட்காமலிருந்தீர்கள்?”

“நாங்கள் முழு உமோஃபியா, அபாமே எல்லா இடங்களிலுமிருந்த மருத்துவர்களிடமும் கேட்டுப் பார்த்தோம்”

“நீங்கள் அவளை ஏன் என்னிடம் கொண்டு வரவில்லை?”

மீண்டும் பேரமைதி நிலவியது.

முதியவர் அதன்பிறகு, தான் அவர்கள் எல்லோரையும் ஒன்றாக அழைத்தது, அன்றிலிருந்து அகுஎகே தனது மகளாகிவிட்டதாகவும், அவளது பெயர் மடெஃபி என்பதையும் தெரிவிக்கவே என சில வார்த்தைகளில் கூறி முடித்தார். அவள் இனியும் உமோஃபியாவின் புதல்வியல்ல. இனி அவள் எஸியின் புதல்வி. அவர்கள் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“அவள் திருமணம் முடிக்கும்போது அவளுக்கான சீதனம் இனி எனது பொறுப்பாகும். உங்கள் சடங்கு, சம்பிரதாயங்கள் ஏதும் பாக்கியிருந்தால் இப்போது அதைச் செய்துவிட்டுப் போகலாம். காரணம், அகுஎகே உமோஃபியாவில் செத்துப் போய்விட்டாள் என்பதனால்” எனக் கூறி முடித்தார் முதியவர்.

தனது சகோதரர்களை வரவேற்கும் எந்த வசனத்தையும் உதிர்க்காது, மடெஃபி திரும்பவும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

000000000000000000

ஆசிரியர் குறிப்பு :

சினுவா ஆச்சிபி ( Chinua Achebe ) :

Chinua Achebe

எழுத்தாளர் சினுவா ஆச்சிபி பற்றி சிறியதொரு குறிப்பை முன்வைப்பது கடினம். ஆபிரிக்க இலக்கியத்தின் பிதாமகனென இவர் கொண்டாடப்படுகிறார். 1958 இல் வெளிவந்த சினுவா ஆச்சிபியின் Things Fall Apart நாவலின் மூலமாகவே ஆபிரிக்க நாவலும் ஆபிரிக்க இலக்கியமும் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன. ஆபிரிக்க நாவலாசிரியர்களிடையே மிகவும் அதிகளவில் பேசப்பட்டவர்

சினுவா ஆச்சிபி. இவரது முதலாவது நாவலின் தொகுப்புக்கள் உலகம் முழுவதும் 8 மில்லியனுக்கும் அதிகமாக

விற்பனையாகியிருப்பதோடு, 45 இற்கும் மேற்பட்ட மொழிகளில் அந் நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நைஜீரியாவினதும், உலகில் ஏனைய நாடுகளினதும் பல்கலைக்கழகங்களில் பேராசியராகக் கடமையாற்றிய இவருக்கு பல நாடுகளின் பல்கலைக்கழகங்களினது கௌரவ பட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது. நைஜீரியாவின் அதியுயர் விருதான நைஜீரியா தேசிய விருது இவருக்குக் கிடைத்துள்ளது. இவரது இலக்கியப் படைப்புக்கள் குறித்து எழுதப்பட்டுள்ளவை ஏராளம். அவற்றுள் மிகவும் விஷேடமானதாகக் குறிப்பிடப்படுவது, 1990

இல் இவரது அறுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச விழாவில் முன்வைக்கப்பட்ட Eagle on Iroko எனும் தொகுப்பாகும்.

No Longer At Ease , Arrow of God, A Man of the People ,The Anthills of the Savannah ஆகியன இவர் எழுதிய ஏனைய நாவல்களாகும். Girls at War and Other Stories இவரது ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பாகும். Beware Soul Brother'

இவரது காவிய நூலாக உள்ளதோடு, இவரது இலக்கிய மற்றும் விமர்சனக் கட்டுரைகள் Morning Yet on Creation Day எனும் பெயரில் தொகுப்பாக வெளிவந்துள்ளது. அதேபோல இவர் நைஜீரிய அரசியல் குறித்து எழுதிய படைப்புக்களும், இவரது சிறுவர் கதைகளும் கூட குறிப்பிடத்தக்கவை. புக்கர் பரிசு உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள இவர் 2013 ஆம் ஆண்டு தனது 82 ஆம் வயதில் அமெரிக்காவில் காலமானார்.

எம்.ரிஷான் ஷெரீப் – இலங்கை

எம்.ரிஷான் ஷெரீப்

(Visited 164 times, 1 visits today)