“இம் மலைகள் எவை பற்றிச் சிந்திக்கின்றன”-இஸ்மாயில் காதரே-கவிதை

கவிஞர் பற்றிய குறிப்பு:

இஸ்மாயில் காதரே

அல்பேனிய தேசத்து எழுத்தாளரான இஸ்மாயில் காதரே, 1936 இல் பிறந்தார். தனது நாவல்களால் அறியப்பட்ட இவர், தனது கவிதைகள் மூலமாக எழுத்துலகில் பிரவேசித்தவர். 1960களில் கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்ட இவர், ’கூடஞு எஞுணஞுணூச்டூ ணிஞூ tடஞு ஈஞுச்ஞீ அணூட்தூ’ எனும் தனது முதல் நாவல், நூலாக வெளிவரும்வரை சிறுகதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். 1963 இலிருந்து இவர் ஒரு நாவலாசிரியராகவும் அறியப்பட்டிருக்கிறார்.1996 இல் பிரான்ஸின் ’அரசியல் விஞ்ஞானம் மற்றும் நீதிக் கல்லூரி’யின் ஆயுட்கால உறுப்பினர் ஆனார். ஆங்கிலம் வழியாக  அறியப்பட்ட இஸ்மாயில் காதரே இன்று உலகப் புகழ்பெற்ற முன்னணி இலக்கியப் படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.

 

000000000000000000000000000000000

ரிஷான் ஷெரீப்

நெடுஞ்சாலைக்கும் அப்பால் வெகுதொலைவில்
சூரியன் அஸ்தமிக்கையில்
மிக உயர்ந்த இம் மலைகள்
எவை பற்றிச் சிந்திக்கின்றன
இரவாகுகையில் குறிபார்க்கும்
ஓர் மலையேறியினது நீண்ட துப்பாக்கி
நூறு மைல் நீள நிழலை நிலத்தின் மீது எறிகிறது

நீள்துப்பாக்கியின் நிழலானது அவசரப்படுத்துகிறது
மலைகள், சமவெளிகள், கிராமங்களுக்கு மேலே இருந்து
துப்பாக்கிக் குழல்களின் நிழலானது
அந்திப் பொழுதினூடாக துரிதப்படுத்துகிறது
மலைச் சரிவு நெடுக நானும் கிளம்பிச் செல்கிறேன்
மனதில் ஒரு எண்ணத்துடன்
எங்கேயோ

அந்திமயங்கும் நேரத்தில்
எண்ணத்தின் நிழலும் நீள்துப்பாக்கியின் நிழலும்
ஒன்றையொன்று குறுக்கேயும் நேருக்கு நேராகவும்
மோதிக் கொள்கின்றன
0000000000000000000000
அல்பேனியா
உனது நெடிய கால்களோடும்
நீண்ட துப்பாக்கியொன்றோடும்
இப்படித்தான் எப்போதும் நீ கிளம்பிச் செல்கிறாய்
மிகவும் பாரமாகவும் சாம்பல் நிறத்திலும்
இரவுக்குப் பிறந்ததைப் போன்ற
மேகங்களும் மூடுபனியும் நிறைந்த காலைவேளை
எங்கு செல்வதெனத் தெரியாமல்
இலக்கற்று சுற்றித் திரிந்தாய் நீ

திடீரெனப் பெய்யும் அடர்மழைகள்
நிலத்தையும் செங்குத்து மலையடிவாரத்தையும்
தின்று வெளிப்படுத்தின
தசையும் விலா எலும்புகளும் வெளித் தெரியும்வரை
நூற்றாண்டுகளால் அரிக்கப்பட்டது உனது உடல்

தசையும் விலா எலும்புகளுமாய்
தேய்வுற்ற கற்களும் பாறைகளும் மலைகளும்
மாத்திரமேயான சிறிய சம தளம்
ஓஹ், எவ்வளவு சிறிய சம தளம்
நூற்றாண்டுகள் கடந்தன உன்னை !
வேட்டை நாய்களைப் போன்று
உன்னைக் கடித்துத் தின்றன அவை
எங்கெங்கு உன்னைப் பெற முடிந்ததோ அங்கெல்லாம்

நீ அவற்றைச் சந்தித்தவேளைகளிலெல்லாம்
அவை உன்னைத் தாக்கின
அந் நேரம் கூரிய பற்கள் கொண்டு
உன் தொடைகளைத் துளைத்தன
எனினும் நீ திரும்பவில்லை
விட்டுக் கொடுக்கவுமில்லை

நீண்ட துப்பாக்கியை ஒருபோதும்
நீ அகற்றுவதில்லை
உனது தோள்களிலிருந்து
காயங்களால் மூடப்பட்ட அத் தோள்களிலிருந்து
தோலாலும் எலும்பாலுமான அத் தோள்களிலிருந்து
ரொட்டியையும் உப்பு கலந்த தண்ணீரையும்
நீ உணவாகக் கொண்டாய்

உப்பு கலந்த நீரும், சோளமுமே
ஒவ்வொரு இரவுகளிலும் உணவாகின
அத்தோடு நீ கொஞ்சம் கொழுப்பினைச் சேமித்தாய்
ஓஹ், அந்த சொற்பக் கொழுப்பு
நண்பர்களுக்காகவும் நீண்ட துப்பாக்கிக்காகவும்
நீண்ட துப்பாக்கிக்கு எண்ணெய் மசகிடுவதற்காகவும்

பெண்கள் குழந்தைகளைப் பிரசவிப்பதைப் போல
ஒரு நீள்துப்பாக்கி ரவைகளைப் பிரசவிக்கிறது
அல்பேனியன் ஒருவனுக்கு
துப்பாக்கி ரவைகளும் குழந்தைகளும்
இரண்டுமே ஒன்றுக்கொன்று சமமாகப் புனிதமானது

குழந்தை கலப்பை தூக்கும் நாளில்
நீள்துப்பாக்கி, இரவுகளில் அவனைக் காக்கும்
மணப்பெண்ணின் தோள்களுக்கு அட்சதை தூவப்படுவதைப் போல
காலம் அல்பேனியாவின் தோள்களுக்கு ரவைகளைத் தூவும்

இரவுகளில் அடிக்கப்படும்
மணிகளின் பேரோசை
மலைச்சரிவுகளில் எதிரொலித்தன
அவர்களது உயர்ந்த தேவாலயங்களுக்காக
மணிகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தன
மதகுருக்கள், அவர்களது அந்நிய நாக்குகளால்
எதை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்?
நீண்ட துப்பாக்கியை பாடுபட்டு வளைக்க
நீண்ட வாக்கியங்களாலான லத்தீன் தர்க்க சாஸ்திரங்களை.

அத்தோடு அங்கு
கைகளால் செதுக்கப்பட்ட தளபாடங்கள் மீது
உன்னால் கவரப்பட்ட கவிகள் நிதானமாக அமர்ந்திருந்தனர்
உன் வனங்களில் இருந்த
மெருகேற்றப்பட்ட விறகுகளைப் பற்றியும்
அத் தளபாடங்களின் மூதாதையர்களான அம் மரங்களில்
முன்பிருந்து பாடிய
இரவில் பாடும் பறவைகள் பற்றியுமே அவர்கள் எழுதினர்

உன்னுடைய வனங்களில்
எங்கிருந்து தளபாடங்கள் வந்தனவோ அங்கு
இரவில் பாடும் பறவைகள் ஒரு சிலவும்
நிறைய ஓநாய்களும் இருந்தன என்பதை
அவர்கள் ஏனோ மறந்தனர்

புயல்களும், காய்ச்சலும், மலேரியாவும்
உனதுடலைச் சூறையாடின
மதகுருக்களும் முல்லாக்களும்
செவிடாக்கினர் உன்னை.
குருதி பீறிட்ட குடும்பக் கலகங்களின்போது
சனிக்கிரகத்தைப் போல கோபச் சிவப்புடன்
உனது பிள்ளைகளை நீயே விரைவாக விழுங்கினாய்
இக் குடும்பக் கலகங்களின் போது
உயர்ந்த ஸ்தூபிகளும் மணிக் கோபுரங்களும்
தமது வாழ்த்துக்களை வாரி வழங்கின

கொடூரமான எதிரிகள் எல்லைகளில் கிள்ளினர்
எமது தாய்நிலத்தின் வெளிறிப்போன
திறந்த தோள்களில் கிள்ளினர்
நிலம் தடுமாற்றத்தோடு எழுந்தது
அதன் விழிகள் பசியிலும் சுதந்திரக் காய்ச்சலிலும் மின்னின
பசியை மறந்து
எல்லைகளை அளவிடவென இரவிலேயே கிளம்பியது
ஒரு அடிமட்டத்துடன்?
ஒரு அளவுகோலுடன்?
இல்லை,
ஒரு நீண்ட துப்பாக்கியுடன்.

நாகரிகத்தின் புதிய தொழில்நுட்பத்துடன் இருந்த
புதிய ஆயுதங்களின் வகைகளும் சிறப்புக்களும்
ரவைகள் சல்லடையாக்கி வாடிப் போன
உனது மார்புகளின் மீது பரீட்சித்துப் பார்க்கப்பட்டன
கண்டுபிடிப்புகளுடனான உனது முதல் தொடர்பு அது

சண்டைக்குப் பின்னர்
மலையேறிகளின் தனித்த கல்லறைகள் தவிர
துக்ககரமான நிலையில் மண்குவியல்களும்
தனித்த ஓரசைப் பெயர்களும் அங்கு எஞ்சியிருந்தன
நீண்ட காலத்துக்கு
வேறெதுவும் இல்லை கற்குவியல்களைத் தவிர
அத்தோடு உச்சியில் பூக்களுக்குப் பதிலாக
சோர்வூட்டுகிற ஒரு பாடல்
பழங்குடி இனத்தில் பாடப்படும்
சோர்வூட்டுகிற ஒரு பாடல்

விளிம்புகளின் அருகே துப்பாக்கி தூர விழுந்தது,
அந் நீண்ட துப்பாக்கி.
அத்தோடு அந் நீண்ட விளிம்புகளைத் தாண்டி
மழையில் விழும் ஊசியிலை மரக் காய்களைப் போல
தன் எழுத்துக்களை உதிர்த்தவாறு
அச் சிறிய பெயரும் உடன் விழுந்தது
எல்லாவற்றுக்கும் பிறகு
இறுதியாக பாடல் முடிவுக்கு வந்தது
சோர்வூட்டுகிற அப் பழங்குடியினப் பாடல்

 

ரிஷான் ஷெரீப் – இலங்கை

ரிஷான் ஷெரீப்

(Visited 90 times, 1 visits today)