இம் மலைகள் எவை பற்றிச் சிந்திக்கின்றன-கவிதை-02-எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் பற்றிய குறிப்பு :

இஸ்மாயில் காதரே

அல்பேனிய தேசத்து எழுத்தாளரான இஸ்மாயில் காதரே, 1936 இல் பிறந்தார். தனது நாவல்களால் அறியப்பட்ட இவர், தனது கவிதைகள் மூலமாக எழுத்துலகில் பிரவேசித்தவர். 1960களில் கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்ட இவர், ‘The General of the Dead Army’ எனும் தனது முதல் நாவல், நூலாக வெளிவரும்வரை சிறுகதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். 1963 இலிருந்து இவர் ஒரு நாவலாசிரியராகவும் அறியப்பட்டிருக்கிறார். 1996 இல் பிரான்ஸின் ‘அரசியல் விஞ்ஞானம் மற்றும் நீதிக் கல்லூரி’யின் ஆயுட்கால உறுப்பினர் ஆனார்.

இவர் பெற்றுள்ள விருதுகள் :

Prix mondial Cino Del Duca (1992)
The Inaugural Man Booker International Prize (2005)
The Prince of Asturias Award of Arts (2009)

10 அல்பேனியா

ரிஷான் ஷெரீப்
அவளது இருண்ட புராண இரவுகளில் செய்ததைப் போன்று
மீண்டும் வெருண்டுபோய் குடிசைக்குள் ஒடுங்கினாள்
அவளது புரிந்துகொள்ள முடியாத ஆத்மாவோடு
ஒரு கிண்ணாரத்தின் தந்திகள்
எதையோ வெளிப்படுத்த சிரமப்பட்டு முயற்சித்தன
இதிகாச காவிய நிலத்தின் ஆழங்களிலிருந்து
உள்ளார்ந்த குரல்கள் ஊமையாக எதிரொலித்தன

அவள் எதையோ வெளிப்படுத்த
சிரமப்பட்டு முயற்சித்தாள்
எனினும் மூன்று தந்திகள் என்ன செய்யும்
பசித்த வெளிப்பாடுகளுடன் நடுங்கிக் கொண்டிருக்கும்
ஐந்து விரல்களின் கீழிருந்து?

பல நூறு மைல்களை விடவும் நீளமான பல தந்திகளும்
இலட்சக்கணக்கான விரல்களும் தேவைப்படும்
அல்பேனியாவின் ஆத்மாவை வெளிப்படுத்த !

11
மலைப்பகுதியில் ஒருவன் கொல்லப்பட்டதால்
பூமியின் வேறோரிடத்தில்
பூஞ்சை தேகத்திலான
இன்னொரு அல்பேனியன் முளைத்தான்
அவனது உடலுக்கு மேலே
இரும்பு உறுப்பொன்று போல
கறுப்பாக உதித்தது
அந்த நீண்ட துப்பாக்கி

கைகளில் நீள்துப்பாக்கியுடன்
இப் பிரதேசத்து மலைகளிலும் சமநிலங்களிலும்
சுற்றியலைந்தான்
நீள்துப்பாக்கி அடிக்கடி அவனது
வாழ்வைக் குறுக்கியபோதிலும்
அது அவனை உயரமானவனாகக் காட்டிற்று

12
புராணக் கற்பனைக் கதைகளை அசைபோட்டபடி
பட்டினியாகக் கிடந்த குளிர் இரவுகளில்
அல்பேனியா,
உனது பாடல்களை நீயே தின்றாய்
இருண்ட வானங்களின் கீழே கடின முயற்சியால்
உறக்கத்தால் விடியலில் தோற்கடிக்கப்பட்டாய்
யாரும் முன்பொருபோதும் கண்டிராத
சற்று மகிழ்வைத் தரும் கனவுகளையும் நீ கண்டாய்

இன்னுமொரு ரொட்டித் துண்டினை,
இன்னுமொரு கரண்டி நிறைய உப்புக் கலந்த தண்ணீரை
நீ கனவு கண்டாய்.
ரொட்டியையும் உப்புக் கலந்த நீரையும்
நீள்துப்பாக்கியுடன் பகிர்ந்து கொள்வதற்காக கொஞ்சம்,
கொஞ்சமே கொஞ்சமான கொழுப்பையும்
நீ கனவு கண்டாய்

உனது திருமணமானது
மத்தளங்களாலும் சச்சரவுகளாலும்
பிற்பட்ட விடியலில் நீ கனவு கண்ட
ஒரு சிறிய மகிழ்வாலும்
உனது துயரங்களுக்கு மத்தியிலிருந்து
உழுது புறப்பட்ட மின்னலெனப் பளிச்சிட்டது

13
இரவுகள்,
சாம்பல் நிறத்தில் மிகவும் பாரமான
காலைவேளைகளைப் பிரசவித்தன.
நாட்கள் இரவுகளைச் சபித்தன
இரவுகள் நாட்களைச் சபித்தன
அல்பேனியா,
தனது கரடுமுரடான உடலிலிருந்து
ஒவ்வொரு குழந்தையினதும் மனதில்
கனவொன்றும் எதிர்பார்ப்பொன்றும் பதியப்பட்ட
அழகிய பிள்ளைகளைப் பிரசவித்தாள்
பேணிக் காத்த தனது வற்றிப் போன மார்புகளால்
உயிர் கொடுத்த அல்பேனியா
இராணுவ வீரர்களையும் ஈன்றாள்
அவர்களோ, ஸஹாராவின் மணல்வெளிகளில்
கஃபாவுக்கான பாலம் பற்றிப் பாடிக் கொண்டே
மாண்டு போயினர்

14
அந்நியப் பேரானந்தங்களை அறிந்த
ஐரோப்பாவின் நகரங்களுக்கு நீயனுப்பிய புத்திரர்களோ
மஞ்சள் மழையால் சுமையேற்றப்பட்ட மேகங்களுடன்
துயருற்ற நிலத்தைத் தேடி
ஒவ்வொருவராகத் திரும்பி வந்தனர்
ஒரு ஏகாதிபதி அரசன்,
கல்லுடைக்குமொருவனைப் போல
அவர்களது கனவுகளை உடைத்துத் தகர்த்தான்
பயணப் பெட்டிகள் நிறைய,
நிஜம் என நம்பிய பொய்க் கனவுகளோடு
அவர்கள் வந்துசேர்ந்தனர்
அழிவுகாலத்தின் ஆரம்பத்தில்
ஸ்தூபிகளினதும் துறவிகள் மடங்களினதும் நிழலின் கீழே
ஏமாற்றங்களோடு அலைந்து திரிந்தனர்
பூமியானது அவளது அணைப்பினை மீளத் தரும்வரை
மழையின் சோர்வூட்டுகிற பாடலின் கீழே
அவர்கள் அழுகிப் போய் அழிந்தனர்

15
அதிகாலைக் கனிகள் விலைமதிப்பு மிக்கவை எனினும்
அடிக்கடி உறைபனியால் அழியும் அவற்றில் பெரும்பான்மை.
அவற்றைப் பொறுக்கி அல்பேனியா
தனது அணைப்புக்குள் மீளவும் வைத்தாள்
“இன்னும் நேரம் இருக்கிறது” எனச் சொல்லி
விடியலின் இறுதி இருளைப் பார்த்திருந்தாள்

16
அவளது துயர்மிக்க கண்ணீர்த் துளிகளை
விதைத்த நீண்ட பள்ளங்களில்
அவள் மீண்டும் வளைந்து கலப்பையால் உழுதாள்.
முடிவற்ற அறியாமையால் இருண்ட வானத்தின் கீழே
புயல்மழைகளும் சூறைக் காற்றுகளும் வருவதற்காக
அவள் தனது கண்ணீர்த் துளிகளை தூவி விதைத்தாள்.

17
ஆமென் !
மூதாதையர் பற்றிய கருத்துக்களை
உணர்ச்சியுடன் புகழ்ந்துபாடவென
மதகுருக்களும் சில சோம்பேறிக் கவிஞர்களும்
முன்னால் வந்தனர் எனினும்
அவர்களது கவித்துவ உருவங்களை உரித்தெடுத்த நீ
உனது வெற்றுக் கால்களால் அவர்களது
பாரம்பரிய விதிகளையும் நசுக்கினாய்

நட்சத்திரங்களெனக் கீழே புடைத்திருந்த
உனது மோசமான புண்களை உரித்தெடுத்து
ஆரோக்கியமற்ற அழகுடன் இருந்த உன்னை
காட்டிக் கொடுப்பவர்கள்,
“கடவுள் தேர்ந்தெடுத்த மக்கள் நாம்,
உனக்கு உணவேதுமற்ற போதிலும்
வருத்தப்பட வேண்டாம்” என
உன்னிலிருந்த சாதகங்களைப் பயன்படுத்திக் கொள்ள
கட்டுக்கதைகளை சத்தமாக உரைத்தனர்

18
ஒளிக்கீற்றுகளிலிருந்து
தம்மை விடுவித்துக் கொண்ட கவிஞர்கள்
இறைவனைத் துதிக்கும் பாடல்களை
தேவதைகளுக்கும், அழகிய இளம்பெண்களுக்கும் எழுதினர்
சில நாணயங்களுக்காக
தங்களது சம்மதத்துடனேயே வழங்கப்பட்ட
தேவதைகளினதும் அழகிய இளம்பெண்களினதும்
விலா எலும்புகளை
புதர்களிடையே உன்னால் எண்ண முடியும்

நிகழ்வின் போது,
தேவதைகளும் அழகிய இளம்பெண்களும்
அவர்களது வீரகாவிய மலைச் சமவெளிகளைக்
கைவிடும் எண்ணத்தை நிறைவேற்றினர்
ஒருவர் பின் ஒருவராக
அவர்களது கிராமங்களுக்கு இறங்கினர்
காயங்கள் போலவும்
ஏளனம் செய்வது போலவும்
உடல் வியாபாரத்தால் புள்ளியிடப்பட்டு
களைத்துப் போன மலையுச்சிகளோடு
ஒருவர் பின் ஒருவராக
உடல் வியாபாரத்தையும் நிறுத்திக் கொண்டனர்

19
தொன்மங்களை உதறிவிட்டு
அழகிய இளம்பெண்கள் புறப்பட்டுச் சென்றதும்
புராணங்கள் அர்த்தமற்றதாகின.
தேச மக்களின் இறுதிக் களஞ்சியமான
இதிகாசங்கள்,
கைவிடப்பட்ட தேவாலயங்களுக்கு மீண்டன

மனிதர்களைப் போலவே இதிகாசங்களும்
பசியுடன் இருந்தன
யாவரையும் விட
மிகப் பெறும் வறுமையில் உழன்றன
எவருமற்ற கற்பனைக் காவிய சமவெளிகளில்
காலங்களின் காற்று படிந்து
சீழ்க்கை சப்தமெழுப்பிற்று

20
அரசன் ஸொக்,
ஒவ்வொரு இரவும் அரண்மனையில்
நடனங்களை வழங்கினான்
இளவரசிகள் புன்னகைத்தனர்
நாட்டியக்காரர்கள் ‘வால்ட்ஸ்’ நடனமாடினர்.
அமைதியான சிறிய அறையாலான துறவிகள் மடத்தில்
மதகுருக்கள் விகுதிகளைக் கற்றனர்

அல்பேனியா கர்ப்பிணியாக இருந்து
கருச்சிதைவுற்ற நாட்களில்
மேகங்களின் சிறுதுணிகளில்
அக் குருதிக் கறை படிந்தபோது
குல்ஸால் உணவு விடுதியில்,
இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன
அவ் விடுதியின் மூத்த காப்பாளிப் பெண்கள்
தம் மூக்குகளில் பொடி தூவிக் கொண்டார்கள்

21
அத்தோடு மலைத் தொடர்கள்
குதிரை வண்டிகளைப் போன்று
அமைதியாக இருந்தன
ஓஹ், என்ன வண்டிகள்
இம் மலைத் தொடர்கள்!
அவை பல மணித்தியாலங்களாக
பல நாட்களாக,
பல மாதங்களாகக் காத்திருந்தன

தம்மை ஒரு பெரிய யுத்தத்துக்கு
எவரேனும் முன்னெடுத்துச் செல்லும்வரை
தம்மை ஓர் புதிய உலகத்துக்கு
எவரேனும் அழைத்துச் செல்லும்வரை
மேகங்களில் தம் சிரசுகளைப் புதைத்திருந்த
அம் மலைத்தொடர்கள் காத்திருந்தன

22
குதிரைகளை கடிவாளத்தால்
இழுத்துச் செல்வதைப் போன்று
மலைகளை இழுத்துச் செல்ல
முயற்சித்தவர்களும் அங்கிருந்தனர்
கீழ் வீதிக்கு சற்று அழைத்துச் சென்ற அவர்கள்
இருளில் தத்தம் பாதையைத் தொலைத்தனர்

குருட்டு இரவினதும் மூடுபனியினதும் ஊடாக
வட்டங்களாக சுற்றித் திரிந்த மலைத் தொடர்கள்
சமாளிக்க முடியாமல் அச்சமூட்டின.
அவர்களது கனவுகளில்
புராதனங்களின் துன்பத்தால்
வீறிடுமொரு சப்தம் அச்சுருத்துவதைப் போல
குதிரையின் கனைப்புக்களுடன்
வீரம் மிகுந்த மலைகள் அச்சுருத்தின

23
அவ்வாறு பாலைவனத்தில் குதிரை வண்டி போல
சூழ்நிலை பழகும் வரை
ஆரம்ப இடத்திலேயே வந்து நிற்கும்
வட்டமாகவே சுற்றிக் கொண்டிருந்தவை
பின்பு மீண்டும் அமைதியடைந்தன
வைகறையும் பசியும் இதிகாசக் கற்பனைக் கதைகளும்
அவற்றின் பின்னுதித்தன
அவைகளுடன் விலைமாதுக்களும் சேர்ந்தே இருந்தனர்

ஆனால் அமைதி ஏமாற்றப்பட்டது
நீண்ட மலை வண்டிகள் காத்துக் கொண்டிருந்தன
ஒரு தலைவருக்காக அவை காத்துக் கொண்டிருந்தன
அல்பேனியாவும் காத்துக் கொண்டிருந்தாள்
ஒரு பொது உடைமை வாதக் கட்சிக்காக

24
மிக உயர்ந்த இம் மலைகள்
எவை பற்றிச் சிந்திக்கின்றன
இம் மலைத் தொடர்களின் புதிர்கள்
மேலிருந்து கீழாகச் சுரண்டுகையில்
நீண்ட துப்பாக்கியின் நிழலுடன்
நான் எனது பாதையின் வழி நடக்கிறேன்
அந் நீண்ட துப்பாக்கி
அல்பேனியா, அதுவே உனது ஆக்கிமீடிஸின் நெம்புகோல்

அவனது நீள்துப்பாக்கியில் குறிபார்ப்பதனூடாக
அடிவானங்களையும் காலங்களையும்
அல்பேனியன் அவதானித்தான்
அவனது தனித்த புராதனத் துப்பாக்கியின் துணை கொண்டு
நூற்றாண்டுகளைப் புதைய வைத்தான்

அல்பேனியனின் முதுகின் மீதிருக்கும்
இந் நீள்துப்பாக்கியின் குழல்
விதிவசத்தால் அவனது
முள்ளந்தண்டாகவே நடப்பட்டு விட்டது
நீண்ட கூரிய எலும்பு போல வளர்ந்திருக்கும்
நீட்டப்பட்ட இம் முதுகெலும்பு
இந்த அற்புதமான இரும்பு அங்கம்
அவனது பெருமை மிக்க வரலாற்றுப் புதையல்

விதிவசத்தால்,
அவனது பழைய பாதணிகள்
அச்சமற்ற அல்பேனியனை உருவாக்கி
ஒரு போதும் முதுமையடையா நிலம்
தாங்கி நின்ற மூதாதையர்களின் கல்லறை வழியே
நூற்றாண்டுகளைக் கடக்கவைத்தது

தானியங்களை விடவும் அதிக வீர சாகசத்தை
யுகங்களினூடாக
பயிர் செய்வித்தது இந் நிலம்
இந் நிலம்…
அதைப் பற்றியேதான்
மிக உயர்ந்த இம் மலைகள் சிந்திக்கின்றன
நெடுஞ்சாலைக்கும் அப்பால்
வெகுதொலைவில் அந்தி சரிகையில்.

இஸ்மாயில் காதரே(1962 – 1964)

பி கு :
இந்தக்கவிதையின் முதல் தொடர்ச்சியை படிக்காதவர்கள் பின்வரும் சூட்டியை அழுத்தவும் .
https://naduweb.net/2016/07/09/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு

எம்.ரிஷான் ஷெரீப்,  இலங்கை 

ரிஷான் ஷெரீப்

(Visited 60 times, 1 visits today)