அப்பம்மாவின் வீடு-மொழிபெயர்ப்புக் கவிதை-கவிதா லட்சுமி

கவிதா லக்ஷ்மி

உதடுகளை நினைவூட்டியபடி
புகைந்துகிடக்கும் ஒரு சுருட்டின் துண்டைப்போல
நிலத்தில் இன்னமும் இருக்கிறது அந்த வீடு

அசைவுகளை இழந்த மரங்கள் சுற்றி நிற்கின்றன
வீசும் காற்றின் வாசம் இப்படியாக இருக்கவில்லை
இந்த முற்றம் பல உயிர்களின்
வாசனைகளால் நிரம்பியது
சுவரின் பூச்சுக்களின் பின்னால்
ஓவிய அந்தஸ்துப்பெற்ற எனது கிறுகல்கள்
இன்னமும் இருக்கக்கூடும்
காலங்கள் கடத்திவிட்ட எனது தடயங்களை
உளவுபார்க்கிறது மனம்
மிக நேர்த்தியாக அடுக்கிவிடப்பட்ட பொருட்கள்
எதிலும் முந்தய உயிர்பில்லை
பொருட்களை மீண்டும் இடம்மாற்றிப் பார்க்கின்றன கண்கள்

சமயலறைப்பக்கம் திரும்பும்போதெல்லாம்
கந்தசஸ்டிகவசம் பாடும் ஒரு மூதாட்டியின் அழுங்குரல்
அது எனக்கு மட்டும்தான் கேட்டிருக்கக்கூடும்
அப்படியொரு குரலை இனி யாரும் கேட்கவேணடாம்

அந்தப் பொக்கைவாய்க்கிழவியின் உயிர் இங்குதான்
எங்கும் ஒட்டிக்கிடக்கிறது
அதோ அந்தச்சுவரில்
அந்த அறையில்
திண்ணைக் குந்துகளில்
அருகில் உள்ள மரத்தில்..
ஓ.. அந்த மாமரம் இப்போதில்லை
விம்பங்களை உரித்து உரித்து எரிக்கிறேன்
அதனோடு சேர்ந்தே பரவிப்புகைக்கிறது
இன்னும் பல உயிர்களின் வாடை
இப்போதுகூட கேட்கிறது அருகில் விழும்
அந்தத் துப்பாக்கிச் சத்தம்

பழைய கதவுகளை பிடுங்கி மாற்றியும்
சுவர்களை இடித்துப் புதிய பெரும்மதில்களை எழுப்பியும்
வாடைகளைப் போக்கிவிட்டிருக்கலாம் வீடு.
சுருட்டுக்கும் சிகரெட்டுக்கும் உள்ள வேற்றுமையாய்
இந்த வீடும் ஒருநாள் மாளிகையாகக்கூடும்
இருக்கட்டுமே

சுருட்டோ சிகரெட்டோ எப்போதும் அவை
எல்லா உயிரும் ஒன்றுபோல
எந்தச் சலனமுமற்று
புதிய உதடுகளை கண்டுகொண்டே இருக்கின்றன.

– நோர்வே

கவிதா லக்ஷ்மி

(Visited 81 times, 1 visits today)