சளிக் கவிதை-சோலை கிளி

01 சளிக் கவிதை

சோலை கிளி

தலைமுடி வளர்கிறது
தாடி வளர்கிறது
நகங்கள் வளர்கின்றன
இன்னும் சிற்சிலவும் இந்த மண் திடலில்
வளருகின்றன
இதற்குள்
ஆடுகள் புகுந்து
அழிச்சாட்டியம் பண்ணுவதுமாதிரித்தான்
நோய் நொடிகள்
*
அன்புடையீர்
நீங்கள் சுகமா
நானும் என் பேனையும்
நல்ல சுகம்
என் வீட்டுக்கு மேலே
இரவுகளில் எரியும்
நட்சத்திரம்
மிக மிக நல்ல சுகம்
ஆடுகள் புகவில்லை
ஓர் ஆடு புகுந்து
ஒன்பது ஆடுகளைக் கூட்டி வந்ததாக
இருக்கின்ற என் தாய்தான்
பரிதாபம்
*
நேற்றும்
ஆடு துரத்தும் ஒரு வைத்தியரிடம்
கூட்டிச் சென்று காட்டினேன்
அவர் எறிந்து துரத்தத் தந்திருந்த
மாத்திரைகள்
எதற்கும் ஆடுகள் பயந்து ஓடவில்லை
*
வயதும் ஒரு காரணம்
நிலத்தில் நடந்தால் மலையில் ஏறுதல்போல்
களைப்பு வரும் வயது
குடித்த பால்
ஒரு நிமிடம் தங்காமல்
கொசுவுக்குத் தீனாகி வழிகிறது
*
குணம் மட்டும் மாறவில்லை
தான் மண்ணாகிச் சிறுத்தாலும்
இரக்கத்தில் பெருத்தே
என் தாயார் இருமுகிறார்
இருமலே அவருக்கு தற்போது வாய் மொழி
நானும் அதைப் படித்துக் கொள்கிறேன்
கருத்துகள் விளங்கும்
எந்த நவீனமும் சேர்ந்து
குழம்பாத
சளிக் கவிதை
*
இப்படி ஏரிகிறது என்னுடைய குப்பை
*
அவகாசம் இருந்தால்
இன்று மாலையே நீங்கள் வரலாம்
ஒரு சொட்டு வாழ்க்கைக்குள்
ஒரு சொட்டு நேரத்தை
உறவுக்காக செலவு செய்வோமே
வாழைக்காய் வாங்குவதைப் போன்றதா
மனித உறவுகள் ?
ரோஜாவை மணப்பதைப் போலல்லோ !
000000000000000000000
02 விரல் சொரியும் வாசல்

உன் வாசல்தான்
நான் கால் குளிர வரும் வாசல்
நான் வரும்போதெல்லாம்
வெயில் எனினும்
நிலா இருக்கும்
*
உன் வாசலில் நான் வந்து கால் தட்டினால்
என் தலையில் துளிர் கக்கும்
நான் தாவரமாகுகிறேன்
*
வீட்டில் இருப்பவன் மனம்
கனி என்றால்
வாசலும் புளிப்பிருக்காது
என்றுதான் உன் வாசலைப்பற்றி
நான் கண்டுபிடித்தேன்
*
அடிக்கடி வராது விட்டாலும்
உன் வாசலுக்கு
இடைக்கிடை வருவேன்
வராதுவிட்டால்
வந்து பழகிய என் கால்கள்
தொட்டு நக்க உனது வளவு மண் இல்லாமல்
வாடுகின்றன
சமைக்க
முறித்துப்போட்ட
பயற்றங்காய்கள்போல
விரல்கள்
வதங்குகின்றன
*
உன் வாசலுக்கு வந்தால்
என் விரலையே நான்
வளர்க்கலாம்
தேய்ந்த விரல்களால்
தேய்ந்த நகங்களால்
பாதம் உறுதி கெட்டு
நாம் மண்ணில் பதித்தாலும்
அதன் தடத்தில்
மண் அஞ்சி ஒதுங்குவதில்லை
*
எனது பாதத்தின் தடங்களுக்குள்
நான் விழுந்து கிடப்பதனையே
விரும்புகின்றவனாக இருக்கிறேன்
இன்னொருவன் காலடிக்குள்
நான் ஏன் விழவேண்டும் ?
என் சுயத்தை இல்லாமலாக்கி…
*
இதற்காகவேனும் என் விரல்கள் வளருகின்ற
உன் வாசலுக்கு வருவேன்
வந்து இடைக்கிடை
கால் தட்டி விரல் சொறிவேன்

03 சின்னக் கோழிக் குஞ்சுகளின் கண்கள்

ஓர் ஊருக்குப் போயிருந்தேன்
சின்னக் கோழிக் குஞ்சுகளின் கண்களைப்போன்று
மழைத்துளிகள் பெய்கின்றன
*
என்னை வியப்பாக்க நினைத்ததா இந்த ஊர் ஆகாயம் ?
பத்துப் பன்னிரெண்டு கோழிக் குஞ்சுகளின் கண்களைத்
தோண்டி எடுத்திருக்கும்
*
அந்தக் குஞ்சுகளெல்லாம் பார்வை கெட்டு
இந்த ஆகாயத்தைச் சபித்திருக்குமா ?
மின்னலைக் காணவில்லை தேய்ந்த ஓணான் குஞ்சொன்று
ஓடுகிறது
*
ஒருவன் ஒளி மங்குவது யாரோ சபித்து
மண் அள்ளி எறிந்தால்தான்
*
மனதுக்குள் ஒரு பயம் வந்து போக
பாவ புண்ணியங்களை நினைத்துக்கொண்டு
மழையை நோக்குகிறேன்
*
குருவி மழை
பலமாகக் கத்தக்கூட குடல் இல்லை
இங்குள்ள பையர்கள் தேன் உதிரத் தொட்டு நக்கி
ஓடித்திரிகிறார்கள்
கோடையில்
முறிந்து கிடந்த நாக்குகளில்
நீர் விட்டு
நிமிர்த்தி
தங்கள் பாட்டுகளை நாட்டுகிறார்கள்
துளிகள் கிடைக்காத பறவைகள்
சீலையால் கட்டிவைத்த ஆட்களாகி
எறிகின்ற பெருமூச்சு
தாவிச் செல்கிறது என்னிலும்
*
சின்னப் பாட்டொன்றை நாட்டிவிட்டு
ஒரு பறவை மட்டும்
பறக்கிறது
வளர்க்க முயற்சிக்கவில்லை
அந்தப் பாட்டை நான் எடுத்து
காதுக்குள் வைத்துக்கொள்கிறேன்,
ஓர் அனாதைப் பாட்டாக
*
இந்தச் சூழலைக் கண்டு தலை குனிந்து பொசுங்கிய வெயில்
சிறகு முறிந்த வெளவாலைப்போல மரங்களில்
தொங்குகிறது
*
செத்தாலும் சாகுவோம்
எவரின் தலையிலும் விழுந்து
இரத்தம் குடியோம்
இறைவா
என்று நெருப்பிலும் துளிர்த்து இருக்கின்ற மரங்களுக்காகவா
இந்தக் குரங்கு மூத்திரம்
*
மேய்கின்ற ஆடுகள் தும்மி
இலை குழைகள் சாப்பிட்டு
வானத்தாரும் நம்மைப்போன்றுதான் கழிக்கின்றார்
இனி அவரை அறுவைக்கு விடலாம்
சும்மா வைத்துக்கொண்டிருப்பது ஊருக்கு நட்டம்
மே என்று புல் இன்றி புழுதி முகர
*
மழைத்துளி பட்ட இலைகளைப்போல
எனக்கும் ஒரு யோசனை மின்னிற்று
*
இந்தக் கோழிக் குஞ்சுகளின் கண்களில் சிலதை
பொறுக்கிப் போய்
எங்களூர் தெருக்களில் உதிர்த்தவா
இந்த மழையின் தம்பியைப்போல

04 மிருகங்களின் தூண்டிலில்

இந்தக் காட்டுக்குள் எந்த மரத்தை
எப்படி இது நல்ல மரமென்று இனங்கண்டுகொள்வது ?
எல்லா மரத்திலும் இலைகளுண்டு
அனைத்து மரத்திலும் பறவைகள் நிற்கின்றன
முழு மரத்திலும் காற்று மேய்கிறது
அத்தனை மரத்திலும் கிளைகள் வெடித்து
காட்டைப் பிடிக்கும் ஆசைகளோடு
சீறுகின்றன
*
காட்டுக்குள் வந்தவன்
நான்
பசிக்கு
ஒரு பழம் பறித்து உண்ண
தெட்டத் தெளிவாக இது நஞ்சு இல்லாத
நல்ல மரமென்று
அறிய முடியாமல்
அலைந்து திரிகின்றேன்
காட்டுக்குள் கத்தும் பேய்களின்
ஓசைக்குக் காது கொடுத்து
நகங்களை நீட்டியபடி நிற்கின்ற
மரங்களில் மோதுண்டு
*
எல்லா மரங்களிலும் பழம்
இருந்துமென்ன
என் வயிறு நிறையவில்லை
மந்திகள் உண்ணுகின்றன
கடிக்கின்றன எறிகின்றன
எனது தலையிலும் வந்து விழுகின்றன
*
நான் பசியோடு
நாக்கு வரள
ஊரைத்தேடி ஓடுகிறேன்
நல்ல மரங்கள் பழுத்துச் சொரிகின்ற
இனிய நீர் நிலைகள் இருக்கின்ற
பேய்கள் சத்தம் போடாத
*
காணவில்லை காணவில்லை
காடு வளர்ந்து கடலையும் நிரப்பியதால்
மீன்களும் அழுகின்றன
மிருகங்கள்
தூண்டில் போடுகின்றன என்று
மிருகங்களின் தூண்டிலில் தொங்குகின்ற மீன்களை
நான் வாங்கித் தின்னலாமா ?
*
ஊரைத் தேடி இன்னும் போகின்றேன்
போகப் போகக் காடு
ஒரு ஊரான ஊர் எனக்கு
எப்போது தென்படுமோ ?

சோலை கிளி – இலங்கை

சோலை கிளி

(Visited 130 times, 1 visits today)