மரணதேவதை-சிறுகதை-நொயல் நடேசன்

 

 

நொயல் நடேசன்ந்த வீட்டின் முன்கதவைத் திறந்தபடி உள்ளே சென்ற என்னைத் தனது வெள்ளைத்தாடியை ஒருகையால் தடவியபடி சிவந்த கலங்கிய கண்களுடன் மறுகையால் வீட்டின் கதவைத் திறந்து ‘நொயல்நன்றி’ எனச்சொல்லியவாறு மகிந்தபால உள்ளே அழைக்க, மிருகவைத்தியனாகிய என்னைப்பார்த்து ‘மரணதேவதை வருகிறது’ என்று திருமதி மகிந்தபால சொன்னார்.

நான் எதிர்பார்க்காத பழைய சுவிஷேச வார்த்தைகள்.

மெல்பனின் வசந்தகாலத்து மாலை நேரம். பசும்புற்கள் அழகாக வெட்டிவிடப்பட்டிருந்தன.வேலியோரத்து பொக்ஸ் செடிகள் இடுப்புயரத்தில் கத்தரிக்கப்பட்டிருந்தன. அவர்களது வீட்டின்முன்பகுதி புற்தரையின் விளிம்புகளின் இருபக்கங்களிலும் பல வர்ண ரோஜாச் செடிகள்அலங்கரித்திருந்தன. வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவர்களது வெள்ளைக் காரின் பின்னால் எனதுகாரை நிறுத்திவிட்டு ஊசிகள் மற்றும் தேவையான மருந்துகள் கொண்ட பெட்டி

சகிதம்வீட்டுப்படிகளில் நின்று மெதுவாக கதவைத் தட்டினேன்.
ஏனோ தெரியவில்லை. சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டின் முன்பகுதியில்ரோஜாச் செடி வளர்ப்பார்கள். பின்பகுதியில் அல்ஷேசன் நாய் வளர்ப்பார்கள். தமிழர் வீடுகளாயின்வாசலில் பித்தளை மாவிலைகளும் செருப்புகளும் எம்மை வரவேற்கும். அவை ஊரில் இருந்துஇவர்கள் கொண்டுவந்த சில அடையாளங்களாகும்.

ஒவ்வொரு முறையும் மகிந்தபால வீடு சென்றால் எனது வயிற்றுக்கு சிக்னல் விழுந்துவிடும்.பகலானால் உணவும். இரவானால் குடிப்பதற்கும் கொடுத்து உபசரிப்பார்கள். மகிந்தபாலவின்சமையல் பிரமாதமாக இருக்கும். அவர்கள் வீட்டு வாசலை எனது கார் அடைந்து அதன்கைத்தடுப்பைப் போட்டதும் வயிற்றில் மெதுவாக பசியோ இல்லை தாகமோ எடுக்கும். இதைத்தான்தன்னிச்சையான விடயங்கள் என ரஷிய விஞ்ஞானி பாவ்லோ மணியடித்து நாய்களில்செய்துகாட்டினார்.

எனது வைத்தியசாலையில் இருந்து பதினைந்து நிமிடங்கள் காரில் செல்லும் தூரத்தில் இருக்கும்வயதான தம்பதிதான் அவர்கள். இலங்கையைச் சேர்ந்த மகிந்தபால சிங்களவர். அவரது மனைவிதமிழர். காதல் திருமணம்.

வீட்டுக்குள் வந்த என்னைப் பார்த்து திருமதி மகிந்தபால ’மரணதேவதை’ எனக் கூறிய வார்த்தைகள்எனது இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. வார்த்தைகளுக்கு அர்த்தங்களை அறிந்தால் அவற்றின்கூர்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

நான் சிரித்தபடி எனது உணர்வுகளை முகத்தில் மறைத்துக் கொண்டு உள்ளே சென்றாலும் அந்தவார்த்தை ஏற்படுத்திய பாதிப்பை பல வருடங்களாகியும் என்னால் மறக்க முடியவில்லை.

வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு, வயோதிபத்தாலும் குணப்படுத்தமுடியாத நோயால்துன்புறும்போது அவற்றை அந்தத் துன்பத்திலிருந்து மிகவும் அமைதியாக இறப்பதற்காக நாங்கள்வழங்கும் விடுதலையே ’யூத்தனேசியா’ எனப்படும் கருணக்கொலை.

ஒவ்வொரு முறையும் இப்படியாக கருணைக்கொலையை செய்யும் முன்பாக அதனது சாதகபாதகங்களை விளக்கிவிட்டு அதைச் செய்வதற்காக பிராணியின் உரிமையாளர்கள் அந்த முடிவைஎடுப்பதற்கு நாங்கள் தூண்டுவது வழக்கம்.

முடிவை அவர்கள் தீர்மானிப்பார்கள். மிருகவைத்தியர்களான நாங்கள் செல்லப்பிராணியின்உடல்நிலை அதன் துன்பம் என்பவற்றைக் கருத்தில் கொள்வோம். அவற்றின் உரிமையாளர்கள்அதை ஏற்பார்களா இல்லையா அதற்குத் தயாரான மனநிலையில் உள்ளார்களா என்பது எமக்குஇரண்டாம் பட்சமே.

மகிந்தபால தம்பதியரின் பபி என்ற கறுப்பு வெள்ளையான ஆண் பூனை கடந்த பத்து வருடங்களாகஎனது வைத்தியப் பராமரிப்பில் இருந்தது. என்னிடம் வரும்போது ஐந்து அல்லது ஆறு வயதாகஇருக்கும். சில வருடங்கள் முன்பாக அதன் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தமை என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னால் என்னால் சிபாரிசிக்கப்பட்ட விசேட உணவில் வாழ்ந்தது. பபிஇறுதியில் சாப்பிட மறுத்தபோது மகிந்தபால என்னிடம் கொண்டு வந்தார் அப்பொழுது அதன்வாயைத்திறந்து பார்த்தபோது மேல் அன்னத்தில் புண்ணாகத் தெரிந்தது . அது கான்சர் எனமுடிவுவெடுக்க எனக்கு அதிக நேரமெடுக்கவில்லை. வாயில் வரும் கான்சரைக்குணப்படுத்தமுடியாது.

இலங்கையில் ஒப்சேவர் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த மகிந்தபாலவை நான்சந்தித்தது பபியின் உரிமையாளராக. அந்த நாள் இன்னமும் நினைவில் உள்ளது

ஒரு நாள் எனது கிளினிக்குக்கு பபியை இரத்தப் பரிசோதனைக்காகக் கொண்டு வந்தார். இரண்டுகைகளாலும் குழந்தையைப்போல் அணைத்து நெஞ்சருகே வைத்துக்கொண்டு எனக்காகக்காத்திருந்தார்.

‘பபியின் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்’என்றார்.

மகிந்தபாலவை அக்காலத்தில் தமிழ் தேசியவாதிகளுக்குக் கண்ணில் காட்டமுடியாது. சிங்களதேசியவாதிகளில் முக்கியமானவராக மெல்பனில் அடையாளப்படுத்தப்பட்டார்.

பபியின் பற்களைச் சுத்தமாக்கிய பின்பு எனக்கு நெருங்கிய நண்பரானார். எனது விடுதலைப்புலிஎதிர்ப்பும் அவரது நிலையும் ஒன்றாகிய போதிலும் பல விடயங்களில் மாறுபடுவோம். தான்சிங்களப் பயங்கரவாதத்தையும் எதிர்த்ததாகவும் இப்பொழுது தமிழ்ப் பயங்கரவாதத்தையும்எதிர்ப்பதாகவும் தனது நிலைமையை விளக்குவார். தனிப்பட்ட முறையில் பழகுவதற்குஇனிமையானவர்.

எனக்கு அவர் அறிமுகமான காலத்தில் மகிந்தபால தம்பதி 70 வயதானவர்கள். குழந்தைகள் இல்லாதஅவர்களது வாழ்க்கை பொபியைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் ஒரு நாள் பபிதொலைந்துவிட்டது என எனக்குத் தகவல் சொல்லியதும் நான் அவருடன் பல இடங்களில் தேடிக்கடைசியில் RSPCA நிறுவனத்தின் பிராணிகள் சரணாலயத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.நானும் மகிந்தபாலவுடன் அங்குச் சென்றேன்.
அங்கு உள்ளவர்களிடம் பபியைப் பற்றி விசாரித்தபோது அங்கு வந்து இரு நாட்களாகியும்கொடுக்கப்பட்ட உணவை உண்ண மறுத்து விரதமிருந்ததாகச் சொன்னார்கள். பூனைகளில்பொதுவாக இந்தக் குணமுள்ளது. அவைகளது சூழல் மாறினால் உணவு கொள்ளாமல் இருப்பது.வேட்டையாடும் மிருகங்கள் புதிய இடத்திற்குச் செல்லும்போது உணவைத்தேடி அலைய முடியாது.ஏற்கனவே புதிய இடத்தில் வாழும் வேட்டை மிருகங்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவேண்டியதும்அவசியமானது.

ஒவ்வொரு மிருகத்தின் உயிர்வாழ்விற்கான பரிணாமத்தில் இந்தத் தன்மை ஏற்பட்டிருக்கலாம்.மனிதர்கள் புதிய இடத்திற்குச் சென்றால் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் முதல்நாள் நித்திரைகொள்வது கடினமானது. புதிய இடத்தில் எதிரிகளிடம் இருந்து உயிர்ப் பாதுகாப்பு கருதி உருவாகியவிடயங்கள் எம்மை இன்னமும் தொடருகிறது.

வீடு வந்த பின்பே பபி மகிந்தபாலவின் கையால் வைக்கப்பட்ட உணவையருந்தி தனது விரதத்தைமுடித்துக்கொண்டது.

இப்படியான பபியை கான்சர் வந்த பின்பு எதுவித மருத்துவமும் செய்ய மறுத்துவிட்டேன்.மெல்பனில் பல பௌத்த சிங்களவர்களோடு எனக்குப் பிரச்சினை எழும். நோயைக் குணப்படுத்தமுடியாது போனால் கருணைக் கொலைக்கு முடிவெடுக்கும்படி சொல்லும்போது அவர்கள் பௌத்தமதத்தின் பிரகாரம் கொலை செய்யக் கூடாது என்று அது வாழும்வரையும் வாழட்டும் என அடம்பிடிப்பார்கள்.

விடயம் புரியாதவர்கள் மட்டுமல்ல, புரிந்தவர்களும் இவ்வாறு நடந்துகொள்வார்கள். எனதுமனைவியின் ஒரு சினேகிதி டொக்டர். அவர்களின் பூனைக்கும் சிறுநீரக வருத்தம் வந்தபோதுஇரண்டு முறை சேலைன் கொடுத்து தற்காலிகமாக குணமாக்கினேன். ஆனால், இறுதியில்மறுத்துவிட்டேன். அவர்கள் தங்களது வீட்டில் வைத்து சேலையினை கொடுக்கமுடியுமா ?எனக்கேட்டபோது, நான் எனது விசுவாசம் எனது தொழிலுக்கே எனச் சொல்லி மறுத்துவிட்டேன்.அவர்கள் என் மீது வருத்தமடைந்தார்கள். சில நாட்களில் அந்தப் பூனை அவர்கள் வீட்டில் இறந்தது.

மகிந்தபாலவும், அவரது மனைவி கத்தோலிக்கத் தமிழராக இருந்ததாலோ அல்லது என் மீதுகொண்ட நம்பிக்கையாலோ எனது வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். தங்களது வீட்டில் வைத்துகருணைக் கொலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.
கடைசிச் சில நிமிடங்களை அவர்கள் பபியோடு செலவழிப்பதற்காக நான் காத்திருந்தபோது,அவர்களுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அவரைப் பார்த்தால் கிறிஸ்துவமத போதகர்போல்தெரிந்தார்.

விருந்தாளியுடன் மகிந்தபால தம்பதி பபி இருந்த அறையுள்ளே பேசும்போது வெளியே ஹோலில்இருந்த எனக்கு ’மரணதேவதை’ என்ற விடயம் மீண்டும் உள் மனதின் தந்திகளை மீட்டியது.

மரணத்தின் தேவதை என்பதும் மரணதேவன் என்ற வார்த்தைப் பதம் இந்துமதத்தில் யமனைக்குறித்தாலும் மேற்கு நாட்டவர்களிடமும் ஆங்கிலத்திலும் பிரபலமானது. பலரைக் கொன்றவர்களைஅதாவது தொடர் கொலைகாரர்களை அப்படிப் பத்திரிகைகள் தலையங்கமிடுவது வழக்கம்.வைத்தியசாலையில் பலரைக் கொல்லும் வைத்தியர் அல்லது நேர்சையோ அல்லதுஇளம்பெண்களையோ கொல்லும் கொலைகாரனையோ இப்படி அழைப்பார்கள். இதனது மூலத்தைஆராய்ந்தால் பழைய சுவிஷேசத்தில் எக்சோடஸில் விபரம் உள்ளது.

யூத அடிமைகளை எகிப்தில் இருந்து வெளியேற அனுமதிக்காத மன்னனுக்குப் பல இடர்கள் வந்தன. உடல்களில் கொப்புளங்கள் வந்தன. நைல்நதி இரத்த நிறமாகியது. தவளைகள் நைல் நதியில்இருந்து புறப்பட்டு நாட்டுக்குள் மன்னனின் அரண்மனைக்குள் குவிந்தன. இவற்றுக்கெல்லாம்செவிசாய்க்காதபோது கடைசியாக பத்தாவதாக பிளேக் நோயாக மரண தேவதை வந்தது. அரசனதுமுதல் பிள்ளை மட்டுமல்ல அடிமையின் முதலாவது குழந்தையுடன் மிருகங்களின் தலைக்கன்றையும் காவு எடுத்தது. ஹொலிவுட் எடுத்த பத்துக் கட்டளைகள் போன்ற படங்களில் பெரியநிழலாகக் காட்டுவார்கள்.

இறைவன் யூதர்களிடம் ” உங்கள் வீட்டில் வளர்ந்த செம்மறியை அறுத்து இரத்தத்தை வாசல்நிலைக்கதவில் பூசி மரண தேவதையைத் தடுங்கள். அன்றைய நாளில் வீட்டுக்குள் இருந்துசெம்மறியின் மாமிசத்துடன் ஈஸ்ட் சேர்க்காத பாணுடன் உண்ணுங்கள். இந்த நாள் ’பாஸ்ஓவர்’தினமாக எதிர்காலத்திலும் கொண்டாடப்படும். மரணதேவதை உங்கள் வீடுகளை நெருங்காது”என்பார்.

இந்தத்தினத்திலேயே யேசு கிறிஸ்த்துநாதர் தன் சீடர்களுடன் கடைசி உணவருந்தினார். அன்றுயூதாஸால் காட்டிக்கொடுக்கப்பட்டு ரோமர்களால் கைதானார். இந்த ’மரணதேவதை’ என்றவாக்கியம் மற்றைய ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாத்திலும் உள்ளது.

எனது நேரம் வந்ததும் அறைக்குள் மெதுவாகச் சென்றேன். படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தபபியின் தலையை மெதுவாகத் தடவிவிட்டு கழுத்தில் மயக்க மருந்தை ஏற்றினேன். வழக்கமாகநான் அதன் தலையில் தடவும்போது உடலை நெளித்து வாலைமேல் உயர்த்தியபடி சென்று விடும்.ஆனால், இன்று எதுவித அசைவுமின்றிக் கிடந்தது பின்னர் நான் ஊசியை எடுத்தவுடன் தலையைநிமிர்த்தியது. ஆனால், நகரவில்லை. அதற்கான பலம் அதன் உடலில் இல்லை.

அதைப்பார்த்துக் கண்ணீர் மல்கியபடி இருவரும் நின்றனர். மகிந்தபாலவிடம் நான்கருணைக்கொலைக்கான மருந்து ஏற்றப்போகிறேன் என எனது சைகையால் காட்டிவிட்டுஏற்கனவே தயாராக இருந்த பச்சைத்திரவத்தை அதனது முன்காலில் உள்ள இரத்த நாளத்தில்ஏற்றினேன். சில நிமிடங்களில் சுவாசம் நின்றதும் ஊசியை எடுத்துவிட்டு எனதுஸ்ரெத்தஸ்கோப்பை வைத்து இதயத்துடிப்பு நின்றதை உறுதி செய்தேன். நிலைக்குத்தி நின்றஅதனது கண்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்த டவலால் தலையைத் தவிர மற்றைய பகுதிகளைமூடிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி ஹோலுக்கு வந்தேன்.

வீட்டின் பின்புறமான தோட்டத்தில் ஒரு குழி ஏற்கனவே தோண்டப்பட்டிருந்தது. ஒரு அடி மட்டுமேஆழம் – அகலமான குழியில் பபியை வைத்துவிட்டு அந்தப் போதகர் சுவிஷேசத்திலிருந்து சிலவார்த்தைகளை சில நிமிட நேரம் சொன்னார். அதன்பின் பபியின் மீது மண்ணைமூடி அடக்கம்பண்ணிவிட்டு அதில் ஒரு சிவப்பு ரோஜா மரத்தை நட்டுவிட்டுச் சென்றார். நானும் அந்த இடத்தில்இருந்து வெளியேறியபோது பபி ஒரு வெற்றிடத்தை அங்கு விட்டுச் சென்றிருப்பதை நானும்உணர்ந்தேன்.

நொயல் நடேசன்-அவுஸ்திரேலியா

நொயல் நடேசன்

(Visited 118 times, 1 visits today)