”அஉஸ்த் வோக்கொய் ”-மொழிபெயர்புக் கவிதை-கவிதா லட்சுமி

”அஉஸ்த் வோக்கொய் ”**

கவிதா லக்ஷ்மி

அவர்கள் எங்கள் காணிகளை எரித்தனர்
அவர்கள் எங்கள் ஆண்களை கொன்றனர்
சுத்தியால் அறையப்பட்டன எம் இதயங்கள்.
இதையே மீளமீள நிகழ்தினர்
கோரமான அழுத்தமான அடிகளால்
எங்கள் நெஞ்சைக் கொத்தினர்
எங்கள் காணிகளை அவர்கள் எரித்தார்கள்
இன்றும் அவர்கள் இதையே செய்தார்கள்
அவர்கள் எங்கள் காணிகளை எரித்தனர்
அவர்கள் எங்கள் ஆண்களை கொன்றனர்
மரணித்த எங்கள் ஒவ்வொருவரின் பின்னாலும்
ஆயிரம் பேர் எழுந்தனர்
பிடிவாதமிகுந்த பூரண நிர்வாணிகளாய்
இன்னும் ஆயிரம் பேர் தூண்களாய்க் கூடினர்.
ஓ… மரணித்த தோழர்களே!
எதுவாகினும்
எம்மை மேய்பதற்கில்லை அவர்கள்.

இன்ஜெர் ஹக்ருப் மார்ச் 1941 ( இராண்டாவது உலகமகாயுத்தம் நடைபெற்றபொழுது இந்தக்கவிதை இவரால் இயற்றப்பட்டது)

**: இரண்டாம் உலகயுத்தம் நடந்த ஓர் இடத்தின் பெயர்.

000000000000000000000000000000000000

நான் நம்புகிறேன்

கவிதா லக்ஷ்மி

பல விடயங்களை
நான் இப்படித்தான் நம்புகிறேன்
குருதியையும், தீயையும் நம்புகிறேன்.
தான்தோன்றித்தனமாய் ஒருவர் செல்லக்கூடியதற்கொரு வழியுண்டென
நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
ஒருவன் கொண்டாடக்கூடிய அந்தக் கனவுகளையும் நான் நம்புகிறேன்.
தன்னிச்சையோடு போய்க்கொண்டிருக்கும் என்னை
மீண்டும் அதே வீட்டிற்கு அழைக்கச் செய்யாதீர்
இரவுகள் என்னை எப்போதும் முன்னோக்கி அழைத்துச்செல்லுமென நம்புகிறேன்
ஆன்மாவும் உடலும் உரசிக்கொள்ளும் எல்லை இருக்கிறதே
அந்த இரவின் மத்தியிற்தான் ஒர் உன்னதக் கதவு
மெல்லத் திறந்திருக்கிறது
காலங்கள் தம்மைத் தாமே நிறுத்த்திக்கொள்ளும் ஒரு இடமுமிருக்கிறது
அங்குதான் என் இதயம் ஒளிர்வுடையதாகக்கூடுமென நம்புகிறேன்.
என் சொற்களைக் கேளாதிருங்கள். இந்தச் சொற்களெல்லாம்
அபத்தமான தீர்க்கதரிசனங்கள்
துரோகத்தின் வழிமுறைகள்
நீங்கள் நினைப்பவள் போலல்லாமல் வேறானவளாய் இருப்பவள் நான் .

இன்ஜெர் ஹக்ருப்

தமிழில் : கவிதா லக்ஷ்மி -நோர்வே

கவிதா லக்ஷ்மி

00000000000000000000000000000

கவிஞர் பற்றிய குறிப்பு :-

ரூபன் சிவராசாஇன்ஜெர் ஹக்ருப்:

நோர்வே நாட்டின் ‘பேர்கன்’ நகரில் 1904 ஆம் ஆண்டு பிறந்த இன்ஜெர்  ஹல்சொர் ஆசிரியையாகவும் சிறுவர் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும்  தன்னை இனம்காட்டிக்கொண்டார். தனது 5 ஆவது வயதிலேயே தந்தையைப்பறி  கொடுத்த இன்ஜெர்  ஹல்சொர் 1931 ஆம் ஆண்டிலே பிரபல்யமான எழுத்தாளரான அண்டர்ஸ் அஸ்க்வொல்ட்  ஹக்ருப் -ஐத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஓர் கலஸ் ஹக்ருப் என்ற பெயரில் ஓர் மகனும், ஹேல்க் ஹக்ருப் என்ற  மகளும் இருந்தனர் .நொஸ்க் மொழியின் தலைசிறந்த கவிதாயினியாக போற்றப்படும் இவரின் கவிதைகள் மானிட நேயத்தையும் போரின் அவலங்களையும் இயற்கையை நேசிக்கின்ற படிமங்களையும் தன்னகத்தே கொண்டவை.

இவர் தனது இளமைக்காலத்தில் கம்யூனிச அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.1943 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப் போரின் பொழுது ஸ்கண்டிநேவியன் நாடுகள் மீது படையெடுத்த ஜெர்மன் நாசிகள் செய்த அட்டுழியங்களை தனது கவிதைகளால் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தினார்.அதில் குறிப்பாக  “Aust Vågøy”– ”அஉஸ்த் வோக்கொய் ” என்ற கவிதை உலகப்புகழ் பெற்றதாகும் இந்தக்கவிதை 1943 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இவரால் இயற்றப்பட்டதாகும்.

1944 ஆம் ஆண்டு இவர் Gyldendal’s Endowment விருதையும் , 1955 ஆம் ஆண்டில் Sarpsborg பரிசையும் ,1955-62 ஆண்டுகளில் Dobloug பரிசில்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவரது கவிதையான Two tongues , 1972 ஆம் ஆண்டு ப்ரெட் அகர்ஸ்ட்ரோம் என்ற பாடகரால் இசை ஆல்பமாக வெளியாகியது . பின்னர் 2007 ஆம் ஆண்டு சோபியா கார்ல்சன் இவரது கவிதைகளை  Visor från vinden என்ற பெயரில் இசை அல்பமாக வெளியாகியது.

6 ஆம் திகதி பிப்ரவரி மாதம் 1985 ஆம் ஆண்டில் இன்ஜெர் ஹக்ருப் தனது 75 ஆவது வயதில் காலமானார்.

 

 

(Visited 83 times, 1 visits today)