புள்ளி அளவில் ஒரு பூச்சி!-சிறப்பு எழுத்துகள்-மஹாகவி

புள்ளி அளவில் ஒரு பூச்சி

மஹாகவி

புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!
ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.
நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு
வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்’தாயே’
என அழுத சத்தமும் கேட்கவில்லை.
கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.
காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.
மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!
காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.

000000000000000000000000000000000000

தேரும் திங்களும்

 

மஹாகவி

“ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை”
என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்.
பெருந் தோளும்
கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை
உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.
வந்தான். அவன் ஒரு இளைஞன்;
மனிதன் தான்.
சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே
முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு
மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி!
“ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
வேண்டும்” எனும் ஒர் இனிய விருப்போடு
வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.
“நில்!” என்றான் ஓரான்
“நிறுத்து!” என்றான் மற்றோரான்.
“புல்” என்றான் ஓராள்
“புலை” என்றான் இன்னோராள்
“சொல்” என்றான் ஓராள்
“கொளுத்து” என்றான் வேறோராள்.
கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்று செந்நீர் தெறிந்து
நிலம் சிவந்து
மல் லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது!

மஹாகவி உருத்ரமூர்த்தி 1960

000000000000000000000000000

மஹாகவி கவிஞர் பற்றிய குறிப்பு :-

அளவெட்டியில் 1927 ஆண்டு பிறந்த துரைசாமி உருத்திரமூர்த்தி ‘மஹாகவி உருத்திரமூர்த்தி’ என்ற பெயரில் மரபுகவிதைகளுக்கு தனித்துவம் கொடுத்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். அரசகரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகக் கடமையாற்றிய மஹாகவி, பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்ற புனைபெயர்களிலும் பல ஆக்கங்களை தமிழ் எழுத்துப்பரப்புக்கு தந்துள்ளார். இவரால் , கல்லழகி, சடங்கு, தகனம், வள்ளி, மஹாகவியின் குறும்பா, கண்மணியாள் காதை, கோடை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வெளியும், கந்தப்ப சபதம், மஹாகவி கவிதைகள், புதியதொரு வீடு, முற்றிற்று, என்று மொத்தம் பதின்நான்கு க்கும் மேலான நூல்கள் இவரால் எமக்கு கிடைத்துள்ளன.மஹாகவி 20 ஜூன் 1971 ஆம் ஆண்டு காலமானார்.

(Visited 1,451 times, 6 visits today)