அசைவம்-சிறுகதை-சசிலி தர்சன்

 

சசிலி தர்சன்விமானப்பணிப்பெண்  ஆங்கிலத்தில் கேட்டது புரியாமல் அசைவச்சாப்பாட்டை தெரிந்தெடுத்து,  அதைச்சாப்பிடமுடியாமல்  தவித்துக்கொண்டிருந்தான் மதுரன். விமானம் பாரீஸிலிருந்து  சிறீலங்கா நோக்கிப்  பறந்து கொண்டிருந்தது. ’‘போய்ச்சேர இன்னுங் கனநேரங்கிடக்கு’  என அலுத்துக்கொண்டே நேரத்திலிருந்து பார்வையை திருப்பி கைபேசியின் முகப்பிலிருந்த அம்மன் கோயிலில் நிலைநிறுத்தினான்.

000000000000000000000000000000

தண்டங்கை வடக்கின் சுப்பர் அப்புவின் பேரன்தான் மதுரன்.  தகப்பனின் தோள்களை விட பேரனின் தோள்கள்தான் இவனை அதிகம் சுமந்தன. அதனாலே இவனை பேரன்வழியில் அறிமுகப்படுத்தலாம்.  தண்டங்கை, தோப்பாய் ஆகிய ஊர்களையிடையறுக்கும் உப்பாறையை  அண்டியே இவர்களின் வீடிருந்தது. ஆடுமாடுகளை மேயச்சலுக்கு கொண்டு போவதும்,  தண்டங்கையில் விளையும் அநேக விளைச்சல்களை பெருவியாபாரிகளுக்கு அறிமுகப்படுத்தும் தரகராகவும் உழைத்துக்கொண்டிருந்தார் சுப்பர் அப்பு. இவர் போகுமிடமெல்லாம் அனேகமாக மதுரனையும் கூட்டிக்கொண்டு போவது வழமை.

பின்னேரங்களில் “எணேய் நான் இப்ப  ‘தவறணை’க்குப்போறன்……நீ அங்க வரவேண்டாமணை.” என்று சொல்லிப்  பேரனைத் தவிர்த்துவிடுவார்.

அதிகாலையிலேயே  தங்களது உருத்துக்கோயிலுக்கு விளக்கு வைப்பார். கோயில் என்றால் அது கொட்டில் போலத்தான் இருக்கும். அம்மனுக்கு ஒரு சிறிய விக்கிரகமும், கருவூலச் சுவர் மட்டும் மண்குந்திற்கு சீமெந்து பூச்சுமாயிருந்தது. வைரவருக்கு ஒரு சூலமும் அதற்கொரு கிடுகு கொட்டிலுமாயிருந்தது.  கோயில் உப்பாற்றுக் கரையில்  கலைமகள்   வித்தியாலய விளையாட்டு மைதானமருகே இருந்தது.   கோயில் சுவர் உப்புக்காற்றில்   உவனித்து, பெரும்பாலும் சிதிலமடைந்தே காணப்பட்டது.   சில இடங்களை சுப்பர் மண்ணை குழைத்து அப்பியிருந்தார்.

காலைமாலையென  ஒவ்வொரு நாளும் விளக்கு வைத்தாலும் திங்கட்கிழமைகளில் மாலையில் சிறப்பு வழிபாடு. சாமி கோயில் கழுவி, சந்தனம், விபூதி பூசி, சங்கூதி மணியடித்து  ஆரத்தி எடுத்து, நாலஞ்சு தேவாரம் பாடி, தேங்காயுமுடைத்து, பூமாலை வைத்து பூசை நடக்கும்.  அனேகமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும்   ஊரவர் யாராவது பொங்கல் வைத்துப்படைப்பதுண்டு.  பொங்கல் தின்பதற்காக நாங்களெல்லாம் பூவரசமிலையை கையில் வைத்துக்கொண்டு   பூசை முடியும்வரை காத்திருப்போம்.

வழமைபோல ஒருநாள் அதிகாலை சுப்பர் நாலஞ்சு பூக்கள் புடுங்கிக்கொண்டு,

“டேய் பொடியா…வா அம்மாளாச்சிக்கு   விளக்கு வப்பம்.” என்றார்.

“இல்லயணை அவனுக்கிண்டைக்கு சோதினையாம். அவன் இருந்து படிக்கட்டும். நீ போய் வச்சுட்டுவாவனணை.” என்ற சுப்பரின் மகள்.  பதிலுக்கு அவர் ஏதோ புறுபுறுத்தவாறு  வெளியேறினார்.

அவர் வீட்டு படலையிலிருந்து  கொஞ்சத்தூரம்தான்  நடந்திருப்பார். நாமகள்  வாசிகசாலைக்கும் கலைமகள்  பள்ளிக்கூடத்திற்கும் இடையிலுள்ள வீதிவளைவில் வேகம் குறைக்காமல்  தோப்பாய் நோக்கி வந்த வாகனம் ஒன்று சுப்பரை  அடித்துத் தூக்கியெறிந்தது.

விடிய வெள்ளெண  செல்லர் வீட்டுக்குத் தண்ணியள்ளவந்த பொம்பிளையள்தான் கண்டதுகள்.  விதானையார் வீட்டு மதில்கரையோடு  சுப்பரை சவமாத்தான் தூக்கினார்கள்.

0000000000000000000000000000

மதுரனே பேரனுக்கு கொள்ளி வைக்க பற்றிக்கொண்ட தீப்பந்தம் தீபமாகி கோயிலில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. 12 வயதினிலேயே கோயிலில் விளக்கு வைக்கும் பொறுப்பு வந்தது. காலையில் பள்ளிக்கூடம் போகும்போது வெள்ளைச்சேட்டை கழற்றி நீலக்காற்ச்சட்டைக்கு மேலே வேட்டி மாதிரி கட்டிவிட்டு விளக்கு வைப்பது இவனது வழமை.  மாலையில் ஆடுமாடுகளை சாய்த்துவந்து கட்டிவிட்டு இருட்டினாற்போல விளக்குவைப்பான். சிறப்பு வழிபாட்டு நாட்களில் மட்டும் இவன் வேட்டிகட்டி பட்டையடித்து பக்திப்பழமாக காட்சியளிப்பான். “ஆளப்பார்ர்ர்ரா… மனசுல பெரிய குருக்களெண்டு நினைப்பு…” என்று இவன் சினேகிதங்கள் நக்கலடிப்பார்கள்.  மதுரன் 15 வயதானபோது ஒவ்வொரு திங்களும் எப்போதுவருமென காத்திருப்பதற்கு பக்தி மட்டும் காரணமில்லை,  இவன் சாலங்கொட்டும்   பெண்களும்தான்.

திங்கட்கிழமைகளில் மதுரனோடு அவனது நண்பர்கள், “மதுரா… இண்டைக்கு நான் வீபூதி குடுக்கிறன்”.  “நான் தான் பஞ்சாமிர்தம்”.  “என்னட்ட தீர்த்தத்தை தா…” என போட்டி போடுவார்கள்.  சந்தனக்கிண்ணத்தை மதுரன் யாரிடமும் தரமாட்டான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.  தீபிகாவின் நெற்றியில் பொட்டு வைப்பதற்காக  கும்பிட வந்த எல்லாருக்குமே பொறுமையாகப்  பொட்டு வைப்பான். மற்றவர்களும் அவரவராளுக்கு விபூதி வழங்கும் சாட்டில் கைகளை தொட்டும்,  தீர்த்தம் வார்த்தும்  பரவசமடைவார்கள்.

சுப்பர் செய்தது போலவே வழமையான பூசைகள் நடைபெற்றாலும்   “டேய் அங்க தொடாத…”, “இஞ்சை வராதை…” போன்ற சுப்பரின் கட்டுப்பாடுகள்  பிடிக்காமல், அம்மனில் பக்தி இருந்தாலும் மடைதவிர்ந்த நாட்களில் ஊரவர் கோயிலுக்கு வருவது குறைவாகத்தான் இருந்தது. சுப்பருக்கு வேறு வாரிசு இல்லாததாலும் மதுரனின் தாராளமய பொதுவுடமை  நிலைப்பாட்டாலும்  ஊரவர் எல்லோருக்குமே பேச்சிம்மன்கோயில்   உருத்துக்கோயிலானது.

அம்மாளாச்சிக்கு வருடாந்த மடை வெகு சிறப்பாக இடம்பெறும்.  ஊரே கலகலப்படையும்.   மடைப்பண்டங்கள்  சுப்பரின் சொந்த வளவிலிருந்து ஒவ்வொரு தட்டுகளாக ஒவ்வொருவர் தோள்களில் சுமந்து போவார்கள். பழவகைகள் முதல் பலகாரங்கள் வரை எல்லாமே பெரிய பெரிய அளவுகளில் இருந்து எச்சிலூற வைக்கும்.  முன்னுக்கு தருமனும் சாந்தனும் உடுக்கு அடித்து தாளம் போட நாலஞ்சுபேர் சன்னதமாடிக்கொண்டு போவார்கள். சிங்கராசன் -அனுமர், செல்லம்மா -நாகதேவி, கந்தன்-வைரவர், பண்டாரி -முனியன் என ஆளுக்கொரு சாமி வந்து ஆடுவார்கள்.   இவர்களை ஓயவிடாது பறையும் உடுக்கும் மாறிமாறி அடித்திசைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.  கோயிலை வந்தடைந்ததும் வாழையிலைகள் பரவி  மடைப்பண்டங்கள் பரவப்படும்.

இரவிரவாக காத்தவராயன் கூத்து, வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், இசைக்குழு, குத்தாட்டம் என காலத்திற்கேற்ப நிகழ்வுகள் நடந்தன.  ஊர்முழுக்க கேட்கும்படி ஒலிபெருக்கிகள் கட்டி அலற விட்டிருப்பார்கள்.  இரவே பகலாகும் அளவுக்கு மின்விளக்குகள் வைத்திருப்பார்கள். வாழை, மாவிலை, தோரணம் கட்டி ஊரே பெருவிழாக்காணும்.

00000000000000000000000000

வேள்வியில் வெட்டப்படபோகும்  ஆடுகளை முதன்முதலாக ஊரவர் பார்வைக்கு வைப்பதில்   ஆடு வளர்ப்பவர்கள் பரபரப்பாக இருப்பார்கள்.  எட்டியெட்டித்தின்றால் விரைவில் வளருமென்று,   குழைகளையுயர்த்திக்கட்டி கொட்டில்களிலும்   கிடங்குகளிலும் மறைவாக வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாய்களை   பிரத்தியேக பந்தலமைத்து தோரணம் கட்டி மாலை போட்டு மாப்பிள்ளைகளைப்போல மக்கள் பார்வைக்கு விடுவார்கள். கோயிலில் கூடிய கூட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடுகள் பற்றி

“சின்னாண்டீன்ர  கிடாய்க்கு மூஞ்சேலை வெள்ளை இல்லையெண்டா நல்ல காசு போகும்.”

“மயிலற்றதான்  குதிரைமாரி  நிக்குது.”

“ஏன்ரா குணபாலின்ர  கிடாய்க்கு என்னகுறைச்சல்?”

என்றவாறு நாக்கில் எச்சிலூற ஆம்பிளைகள் பேசிக்கொண்டிருப்பார்கள். பாதிக்கூட்டம் ஆட்டுக்கொட்டில்களை மொய்க்கும்.

மாரிகாலத்தில் கோயில்  முற்றம்   சகதியாவதைப்போல் மடையன்றும் சகதியாகும். இம்முறை  இரத்தச்சகதி.

“வளத்த கிடா மார்ல பாஞ்ச மாதிரி”  என்று வசனம் பேசுபவர்கள்தான்  தலை வெட்டப்படுவதற்கு கயிறு பிடித்துக்கொண்டிருந்தார்கள்.   பத்துப்பதினைஞ்சு ஆடுகளும்  நிறைய கோழிகளும் பலியிடப்படுவது வழமை.   தலை வெட்டப்பட்ட ஆட்டிலிருந்து சீறிப்பாயும் சூடான இரத்தம் தங்கள் மீது தெறிப்பதால் தங்களுக்கான தத்துகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.  இதனால் கூட்டம் முண்டியடிக்கும்.   மதியப்பூசைக்கு  இறைச்சிக்கறிசோறு   படைத்து பந்தி வைப்பார்கள்.

0000000000000000000000

“ம்…அதெல்லாம்  ஒரு காலமப்பா…” என பெருசுகள் பெருமூச்சு விட்டுக்கொள்ளும்.  எண்பதுகளில்  இயக்கத்தினதும் வாசிகசாலைப் பொடியங்களினதும் தலையீட்டால்  தலைகள் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனாலும் சாமிகுத்தமென பயந்தவர்கள்,  ஆடுகளின் காதில் சிறு துண்டை வெட்டி இரத்தம் காட்டினார்கள்.  இரத்தச்சகதிதான் இல்லையே தவிர மற்றயவை எல்லாம் முன்போலவே தொடர்ந்தன.

மதுரன்  பேச்சியம்மனுக்கு பூசாரியாக இருந்தாலும் தண்டங்கை மஞ்சவண்ண முருகனுக்கு பக்தனாகவும் அந்தக்கோயில் தொண்டனாகவும் இருந்தான். இதனால் குருக்களுக்களோடு  நெருங்கிய பழக்கமுமிருந்தது.  அங்கே முருகனுக்கு பூசை செய்வதைப்பார்த்துத் தானும்   அதுபோலப் பேச்சியம்மனுக்கு பூசைசெய்வான்.  பூணூலும் மந்திரமுமில்லையே  தவிர பூசைகள்   நடந்தன.

“இவன் குமாரசாமி ஐயற்ற பொட்டய பாக்கத்தான் முருகன் கோயில்ல தொண்டு செய்யிறவன்” என்று சினேகிதங்கள் நக்கலடித்தால்  “டேய்…அவளோடை என்னைய  இழுத்துக்காட்டாதையடா…  ஐயருக்குத்  தெரிஞ்சா திரும்பவும் எங்கடையாக்கள்   கோயிலுக்கை   உள்ளடேலாது!” எனக் கெஞ்சுவான்.

முருகன் கோயில் ஏழாம் திருவிழாவென்றால் எல்லாருக்குமே எதிர்பார்பாகத்தானிக்கும்.  ஏனைய திருவிழாக்கள் குடும்பம் சார்ந்திருக்கும், 6ம் 7ம் திருவிழா முறையே   கோவியருக்கும்   பள்ளருக்குமானது.  பள்ளர் பரந்திருப்பதாலும்  பணவசதி கூடியவர்களாகவும்   இருப்பதனால் திருவிழா, சங்கர்  படப்பாட்டுக்கட்டம் போலிருக்கும்.

7ம் திருவிழா அன்னதானம் வெகு சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.  சாம்பார் வாளியோடு   மதுரன் வருவதை கண்ட வெள்ளாம் பெருசுகள் பந்தியிலிருந்து எழும்பிப் போக ,  நாலைஞ்சு கோவியரும் சேர்ந்தெழும்பினர்.

“வெள்ளாடனுக்கு தடிப்பு எழும்பினான். உந்த ஊத்தக் கோவியனுக்கென்னடா குண்டீல கட்டே”

என்று குலேந்திரன் குரலெழுப்ப,

“பரதேசிப்பள்ளன்  பந்திபோடேலுமே”  எனப்பதில்வர, அங்கே ஒரு கலவரத்திற்கான  அத்தனை  முன்னோட்டங்களும் நடந்தேறின.  இதைச்சாக்காக வைத்து பள்ளரில் படித்து முன்னிலையிலுள்ள   ஒரு சிலரையும், வெள்ளாளர்களின் சூழ்ச்சியினால் கலவரத்தை தூண்டியவர்கள் என்ற குற்றஞ்சுமத்தி  சிறைக்கு  அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

கலவர முடிவில்  இடம்பெற்ற ஒரு கூட்டத்தில்,

“ஏன்… எங்கள்டயும் காசு  வாங்கிறாங்கள்தானே,  எங்கட திருவிழாக்கு நாங்கள்தான் சவை நடத்தவேணும்.”

“அவங்கட கோயிலுக்கை  நாங்கள் உரிமை கேக்கேலாது.”

“எங்களுக்கெண்டு கோயில்  இருந்தால்,  அவங்கட கோமணத்திலயேன் கையை வைக்கிறம்?”

“இப்பென்ன  எங்களுக்கெண்டு  புதுசா கோயில்கட்டச் சொல்லுறியே”

“புதுசா இல்ல… இருக்கிறதை  பெருசா கட்டுவம்.  இப்பெல்லாம் அப்பிடித்தான் ‘கோவுரத்தை உசத்திக்கட்டீட்டுத்  தங்கட கோயில்சாமி சக்திவாய்ந்தது’ங்கிறாங்கள்.”

“உருத்துப்பிரச்சனையில்லாமல்   ஊரவர் கோயிலா இருக்கிறது பேச்சியம்மன்கோயில் மட்டுந்தான்.  வெளிநாடுகளில இருக்கிறவங்களிட்ட காசை வாங்கி பேச்சியம்மன் கோயிலையே பெருசாக்கட்டுவம்.”

என சிலபல விவாதங்களின் பின்னர் முடிவானது.

கூட்டம் கலைந்தபின் “நாங்கள் சவை நடத்தேலாண்டு உனாத்தெரியாதே. நீயேன்ரா சாம்பார் வாளியைத் தூக்கின்னீ……., மனசில ஐயற்ற மருமோனெண்ட நினைப்போ”   என்று குமார் கடிக்க,

“டேய்…, அந்த சாம்பார் வாளீக்கை பல்லி விழுந்துட்டுதெண்டு விதானையார்தான் சொன்னவர்.   அத ஊத்துறத்துக்கு வெளீல கொண்டுபோகையிலதான்  இவங்கள், நான் சவை நடத்திறனெண்டு  நினைச்சிட்டாங்கள்.”

“அவங்கள் எழும்பினதால,   நீ சாம்பாரை    ஊத்திப்போட்டாயெண்டுதான் பிரச்சனையே பெருசாச்சு.”

“ஏதோ… இப்ப எங்களுக்கெண்டொரு கோயில் வரப்போகுது. அம்மளவுங்காணும், ஆனால் சாமிக்கு  ‘சாம்பார்வாளியம்மன்’ எண்டு பேர்வைக்காமல் விட்டாச்சரி.”

உடனடியாகவே நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுத் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது. இது நிகழ்ந்த காலம் 2006ன் நடுப்பகுதி.  திருப்பணி தொடங்கி கொஞ்சக்காலத்திலேயே  மீண்டும் சண்டை தொடங்க, பொருட்கள் தட்டுப்பாட்டினால் வேலைகள் இடைநிறுத்தப்பட்டன.

000000000000000000000000000000000

இயக்கத்திற்கு  சின்னச்சின்ன  உதவிகள் செய்தவர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக சுட்டுக்கொல்லப்பட்டுவந்தார்கள்.  எந்தவித தொடர்பில்லாதவர்களும் கூட இந்த வேட்டையில் பலியாகினர்.  கோயிலுக்கு  உடுக்கு அடிக்கும் தருமனும் சுட்டுக்கொல்லப்பட,  பயந்துபோன மதுரன் நாட்டை விட்டு வெளியேற முடிவுசெய்தான்.

வெளிநாட்டிலுள்ள உறவுகள்   நண்பர்களின் உதவி பெற்று பயணமுகவரூடாக  ஐரோப்பா நோக்கி பயணப்பட்டான்.   ஆபிரிக்க நாடுகளூடான பயணத்தில் ‘செனகல்’ எனும் நாட்டில் தங்கிச்செல்லவேண்டியதாயிற்று.   அங்கே ஏற்கனவே எட்டுப்பேரை ஒரு வீட்டில் தங்கவைத்திருந்த முகவர், மதுரனையும் சேர்த்துவிட்டார்.

“ரெண்டு கிழமேல ஏத்திறண்டு சொல்லிப்போட்டு… வந்து ஒருமாசமாப்போகுது ஒரு கதையேங்காணேலை…”

என்று  மதுரன் புறுபுறுத்தான்.

“ரெண்டு கிழமையோ… இஞ்ச  நாங்கள்  வருசக்கணக்காய் காயுறம், இப்ப வந்திட்டு இவன்ர கதையப்பார்…”

“இந்தா…. இவன் பதினஞ்சுமாசம்,  மோகன் ஆறுமாசம்,  ரவி எட்டுமாசம்,  நான் ஒம்பதுமாசம்…” என தீபன் அடுக்கிக்கொண்டு போக,

“என்னடா புள்ளத்தாச்சியள் மாதிரிச்சொல்லுறாய்…”என்று சினந்தான்.

செனகலில் சாப்பாடு பெரும்பிரச்சனையாகவிருந்தது.  தமிழ்ச்சாப்பாடு இல்லை. சமைத்தாலும்  குழம்பென்றால் உறைப்பல்ல  அது எரிவாகத்தானிருந்தது. சமையல் அடுக்குகள் சீராக இல்லை. இருந்தாலும் கிடைக்கிறதைக்கொண்டு சமைத்தே உண்டனர்.   பெரும்பாலும் கோழிக்குழம்புதான்.

“திங்களும் வெள்ளியும்  நான் மச்சந்தின்னுறேலை.”

“ரெண்டுநாள்  எங்களால இருக்கேலா…, ஏதோ ஒருநாள் உனக்காக விடலாம். நாங்கெல்லாம் அசைவந்திண்டாத்தான் அசைவம்.  திங்கள விட்டுட்டு வெள்ளீல சைவஞ்சமைக்கலாம்.”

“இல்லையில்லை திங்கள்ளயே மரக்கறி சமைப்பம்” என்ற மதுரனின் விருப்பத்தை மற்றயவரகளும் ஏற்றுக்கொண்டார்கள். தோதான மரக்கறி கிடைக்காமல் போக நாளடைவில் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. திங்கட்கிழமைகளில் வெறும் மரவள்ளிக்கிழங்கை அவித்து அங்கே கிடைக்கும் காய்ந்த மிளகாயை இடித்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டான்.

ஏதோ ஒரு திங்களில் தெரியாத்தனமாக,  அசைவம் சாப்பிட்டதால்தான் அம்மனின் கோபத்திற்குள்ளாகித் தனக்கு அம்மை நோய் வந்ததெனப் பயந்தவன், அதன் பின்னரான  ஒவ்வொரு திங்களும் கவனமாக இருந்தான்.

ஆபிரிக்க கிழமைகள் அதிகரித்து மாதங்கள் பலவாகிக்கொண்டு செல்ல, தான் விரைவில் தடையின்றி ஐரோப்பா சென்றடைந்தால் கட்டப்படும் கோயிலுக்கு காண்டாமணியும்  அதற்கான கூண்டு அமைப்பதற்கான செலவையும் ஏற்றுக்கொள்வதென  நேர்த்தி  வைத்தான்.

000000000000000000000000000000000

“ஓமம்மா,  பேச்சியம்மன் என்னக்கைவிடேல… நேத்தி வச்ச ரெண்டு கிழமேலயே ஏத்திட்டாங்கள்.”

“அம்மனுக்கு காண்டாமணியும்  வேண்டிக்குடுத்து கூண்டும் கட்டவேணும்.”

“இண்டைக்குதான்  இஞ்ச வந்து சேந்தனான்.”

“சந்திரன் மாமான்ர கரனோடதான் இருக்கப்போறன். அவன்ர ரெலிபோனிலதான் கதைக்கிறன். சரி… காசுமுடியப்போகுது, நான் பேந்தெடுக்கிறன்.”

என்று தாயுடனான செல்பேசித்தொடர்பை துண்டிக்க  “இஞ்ச பார்றா……….. வந்திறங்கமுன்னம் மணி வாங்கிக்குடுக்கப்போறாராம் … முதல்ல இஞ்ச மணி சேர்க்கிற வழியப்பார்…” என்று துசி முறைத்தான்.

0000000000000000000000000000000

காலம் மெல்ல நகர்ந்தது. எட்டு வருடங்களின் பின்னர்   ஊரைப் பார்க்கப்போகிறேன்  என்ற ஆவலோடும் மகிழ்வோடும்   மதுரன் விமானத்திலிருந்து இறங்கினான்.  செல்பேசியில் விமானம் தனக்குப்பின்னால் தெரியுமாறு  தாமி (செல்ஃபி) எடுத்து ‘இலங்கையில் நான்’ என எழுதி  முகநூலில் பதிவேற்றி   இணையத்தை துண்டித்துக்கொண்டான்.   பேச்சியம்மனுடன் தாமியெடுப்பதென   பேரவாவும்  இருந்தது.

இவனை வரவேற்க விமான நிலையத்தில் ஏற்கனவே  கவி வாகனத்துடன் காத்திருந்தான்.   வாகனத்தை ஓட்டியவாறே கவி பேச்சுக்கொடுத்தான்.

“எப்படா  திரும்பிறா…”

“இப்பதான்  வந்திறங்கிறன்…அதுக்குள்ள  கலைக்கிறியே.. ஒருமாசத்துக்கு நிப்பன்டா.  திருவிழா முடிச்சுத்  தீவாளியும் கொண்டாடித்தான் போவன்.”

“அங்கயெப்பிடி மச்சான்… தீவாளி பொங்கலெல்லாம் கொண்டாடுறனீங்களே… எங்கட சாப்பாடுகளெல்லாம் கிடைக்குந்தானே?”

“ஓமோம்… எல்லாங்கிடைக்குந்தான். ஆனா, சில சாப்பாடுகள்  ஊர்ல சாப்பிட்ட மாரி வராதடா… ஆட்டிறைச்சியெல்லாம்  மணங்குணமில்லாமல் சும்மா சவசவெண்டிருக்கும்.

“முந்தியெண்டால் மடைக்கு போடுற  கிடாயை ஒருபிடி பிடிப்பாய்… இப்ப மடையுமில்ல.”

“ஏன் தீவாளிக்கு தின்னலாந்தானே?”

“தீவாளியும் இப்ப ஒருத்தரும் கொண்டாடுறேல”.

“ஏன்ரா…சீமான்ர  பேச்சைக்கேட்டு தீவாளி தமிழர் பண்டிகையில்லையெண்டு சனங்கள் கொண்டாடுறேலயோ… ?”

“இப்ப ஊர்ச்சனமெல்லாங் கந்தசட்டி விரதம் புடிக்குதுகள். அது தீவாளியையண்டி வாறதால ஒருத்தரும் மச்சஞ்சமைக்கிறேலை.   ஊரில இறைச்சி வேண்டேலாது. செல்லப்பாகூட    ஆடடிக்கிறேல்லயெண்டாப்பாரன்.”

“கந்தசட்டி விரதம் கேள்விப்பட்டிருக்கிறன். அது கடும் நேர்த்தி வைக்கிறவைதான் புடிக்கிறவை.   இப்ப எல்லாச்சனமும் புடிக்குதுகளே…?”

“உதுமட்டுமே… இப்ப வரலட்சுமி விரதம், விநாயகர்சதுர்த்தி,  கண்ணன் பிறப்பு

எண்டு சினிமாவிலயும்  ரீவிநாடங்கள்ளயும்   கேள்விப்படுற எல்லாவிரதங்களும் எங்கட சனமும் புடிக்கத்துவங்கீட்டுதுகள்.   அதுக்கு எங்களுக்கெண்டு கோயிலும் இருக்கிறது  வசதியாப்போச்சு.”

“அப்பிடியெண்டா……..  வருசம் முழுக்க விஷேசங்கள் வந்துகொண்டேயிருக்குமே.”

“பின்னையென்ன… உதாலதான்    மாரியார்    மீன்யாவாரத்தையே  விட்டுட்டார்………. வாங்க ஆக்களில்லைத்தானே…”

“அப்ப  பள்ளுகளெல்லாம்   பண்டாரமாயிட்டுதுகளோ…?”

“ம்ம்ம்…கோயில்   கொட்டிலாயிருக்கேக்கை   எங்கடையாயிருந்திச்சு…” பெருமூச்செறிந்தான்.

“ஏன்டா இப்பென்னாச்சு ?”

“முந்தி எங்கட சாமிக்கு நாங்களே   பூசைசெய்தம். இப்ப ஐயர்தானே… , எங்கட பூசைமுறையள்   கொஞ்சங்கொஞ்சமா அழிஞ்சிடும் போலகிடக்கு. பேச்சியம்மனைப்  பெருசாக்கட்டினதிலயிருந்து  ஊர்லயிருக்கிற கொட்டில் கோயிலெல்லாம்  போட்டீல     பெருசாக் கட்டத்துவங்கீட்டாங்கள். இனியெல்லாத்துக்கும்  ஐயர்தானே…”

பயணம் நெடுக கோயில்பற்றியே பேசிக்கொண்டு வந்தர்கள்.   2009இற்கு பின்னர் இங்கையின்  தோற்றம்  எப்படியான மாற்றங்களைக்கண்டுள்ளதென கதைகள் படங்களென பல வழிகளிலிலும் மற்றும் கூகுள் முப்பரிமாண வீதிக்காட்சிகளினூடும்  நீங்களும் மதுரனும்  தெரிந்துகொண்டதனால்  எதுவும் பெரியளவில் வியப்பைத்தரவில்லை.   அப்படியே வாகனத்தில் நித்திரையானான்.

00000000000000000000000

நீண்ட காலத்தின்பின் சேவல்கூவி பறவைகளின் இசையோடும் மலர்களின் நறுமணத்தோடும்  இனிய காலை விடிந்தது.  காகமொன்று தன் கூட்டில் முட்டையிட்ட குயிலை கரைந்தவாறு கொத்திக் கலைத்துக்கொண்டிருந்தது. அதனுடன் இன்னுஞ்சில காகங்களும் சேர்ந்து கரைந்தன.  கட்டிலிலிருந்து எழுந்தான் மதுரன். கொடியேற்றத்திற்கு  இன்னும் மூன்றுநாட்களிருந்தாலும் இப்பவே போய் பேச்சியம்மனுக்கு விளக்குவச்சு வழிபடவேணுமென நினைத்தான்.  கிணற்று நீரை ஆசைதீர அள்ளிமுழுகினான்.  நீண்டகாலத்திற்கு பின்னர் வேட்டிகட்டி   திறுநீறுபூசிக்கொண்டு  பழைய பூசாரி  மதுரனாக மாறினான்.  கொஞ்சம் பூக்களையும் கொய்து கொண்டு கோயில்நோக்கி நடந்தான். காற்று  அவன்  தொடைகளைக்  காட்சிப்படுத்த முயல,  ஒரு கையால் வேட்டியை  ஒதுக்கிக்கொண்டான்.

தூரத்திலேயே, தான் கட்டிக்கொடுத்த  மணிக்கூண்டுக்கோபுரத்தைக்காணப் பரவசமாயிருந்தது. கோயில் கிட்ட நெருங்க நெருங்க  பழைய காதலியை சந்திக்கச் செல்வதுபோன்றவொரு  உணர்வு.  கோயிலின் வாசலில் கிட்டத்தட்ட ‘யாழ்ப்பாணம் வரவேற்கிறது’ நுழைவாயில் வளைவு  போன்று வளைவு கட்டப்பட்டிருந்தது. வர்ணங்கள் பூசப்பட்டு  ‘தண்டங்கை வடக்கு பெயர்ச்சியம்மன் ஆலயம்’ என்று  அழகாக சீமெந்தினால் செதுக்கப்பட்டிருந்தது.  ‘உபயம் நாகன் சண்முகன்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நுழைவாசலிலேயே  குனிந்து பூமியைத்தொட்டு கண்களிலொற்றியபடி நுழைந்தான்.  கோயிற்கதவின் இடதுபுறமாக  கம்பீரமாக நிமிர்ந்து நின்றது மணிக்கூண்டுக்கோபுரம்.   அதனடியில்  ‘உபயம்:-வா.மதுரன்’ எனக்குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்ததும் மனதுக்கு மகிழ்வாயிருந்தாலும் கொஞ்சம்  குறுகுறுப்பாகவுமிருந்தது.  கோயில் பொளிகற்களால் அழகாக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது. சுவர்கள் அழகாக வர்ணங்கள் பூசப்பட்டு அங்கங்கே சில சாமிகளின் திருவுருவங்கள் வரையப்பட்டிருந்தன.  ஐயப்பன்,  வெங்கடேசுவரர் என்று ஊருக்கு புதிதான சாமிகளும் படங்களிலிருந்து  அருள்பாலித்தனர்.  ஒவ்வொரு சாமிப்படத்தின்மீதும்  அவற்றின்  உபயம் இன்னாரென்று எழுதப்பட்டிருந்தது. இந்தக்கதையில் உபயோகமின்றி வரும் பாத்திரங்களின் பெயர்கள் போன்று ஒவ்வொரிடத்திலும் உபயம் எனக்குறிப்பட்டிருந்தது.  கோயினுள் நுழைந்து இருகைகளையும்  தலைமேல் வைத்து அண்ணார்ந்து கும்பிடுகையில் அதிர்ந்தான்.  விதானத்தில் ‘உபயம்:- ச.இந்திரபாலன்’ என்றிருந்தது.

“தம்பி மதுரா……… வந்திறங்கினவுடனயே  அம்மாளாச்சீட்ட வந்திட்டியே…….எப்பிடியிருக்கு கோயில்?”  நிர்வாகத் தலைவராகவிருந்து தற்போது ‘தர்மகர்த்தா’வாகியிருந்த மணிகண்டன் மேல்முழுக்கச் சந்தனமும் வாய்நிறைய  பற்களுமாக  நின்றிருந்தார்.

“கோயில்ல என்னத்தக் குறைகாண…எல்லாம் நல்லாத்தானிருக்கு… ஆனா எல்லாரிட்டேம் காசு சேத்துத்தானே கட்டினது. உந்த முகப்பில பாலன்குஞ்சீன்ர பேர்தானே  உபயமெண்டெழுதிக்கிடக்கு”

“கெக்கெக்கெக்கே…” கொக்கரித்தார் தர்மகர்த்தா. “நீ மேல கொலுவிருக்கிற சுவர்மணிக்கூட்டை க்கவனிக்கேல… அதுதான் இந்திரபாலன்ர அன்பளிப்பு. மணிக்கூட்டில  பேரெழுதினா கீழநிண்டுபாக்க தெரியாதெல்லே… அதான் மணிக்கூட்டுக்கு கீழ பெருசாயெழுதியிருக்கு.”

“அதுசரி…பேச்சியம்மன்ர   பேர் பெயர்ச்சியம்மனெண்டு ஏன்மாறினது?”

“பேச்சியம்மனெண்டால் பட்டிக்காட்டுத்தனமாயிருக்கும். எங்கட சாதியும் வெளீலதெரியும்.  அதவிட கோயில் வேலை நடக்கேக்க  எடுத்துவச்ச அம்மன்சிலை கொஞ்சம்  அரங்கீருந்திச்சு. டீசென்டா இருக்கட்டுமேயெண்டு பெயர்ச்சியம்மன் எண்டு மாத்தீட்டம்.”

மதுரன் எதுவும் பேசாமல், அம்மன் காலில் விழுந்துவணங்க  கருவறையை நோக்கிச் சென்றான். மஞ்சள் சிவப்பு வண்ணங்கள் மாறிமாறி பூசியிருந்த இரும்புக்குழாய்களாலான கடவையை தாண்ட எத்தனிக்கையில் உள்ளிருந்து ஐயர் கத்தினார்…….

“தம்பி நில்லு…ஆர் தம்பி நீ… ? இந்தக்கடவைக்குள்ள குருக்களும் பண்டாரமும்தான் வரலாம்!”

சசிலி தர்சன்- பிரான்ஸ்

சசிலி தர்சன்

(Visited 101 times, 1 visits today)
 
சசிலி தர்சன்

நலம்-சிறுகதை-சசிலி தர்சன்

‘கருணைக்கொலை’ இந்த வார்த்தையை இண்டைக்குத்தான் கேள்விப்படுறன். என்னை கருணைக்கொலை செய்யவேணுமெண்டு கதைக்கிறாங்கள். ஆனா அப்பிடியெண்டா என்னெண்டு எனக்கு விளங்கேலை. என்னை உயிருக்குயிரா நேசமாப்பாத்த வவா தான் இப்பிடிக்கதைச்சவன். அவன் சொன்னபடியால் […]

 

2 thoughts on “அசைவம்-சிறுகதை-சசிலி தர்சன்”

Comments are closed.