நலம்-சிறுகதை-சசிலி தர்சன்

சசிலி தர்சன்‘கருணைக்கொலை’ இந்த வார்த்தையை இண்டைக்குத்தான் கேள்விப்படுறன். என்னை கருணைக்கொலை செய்யவேணுமெண்டு கதைக்கிறாங்கள். ஆனா அப்பிடியெண்டா என்னெண்டு எனக்கு விளங்கேலை. என்னை உயிருக்குயிரா நேசமாப்பாத்த வவா தான் இப்பிடிக்கதைச்சவன். அவன் சொன்னபடியால் ஏதோ எனக்கது நல்ல விசயமாத்தான் இருக்குமெண்டு நினைக்கிறன். ஆனா அவனும் இப்ப முந்திமாதிரி அன்புபாசமில்லை. என்னவா இருந்தாலும் என்னால தொடர்ந்து உயிர்வாழ ஏலாது, இப்பிடிப்பட்ட மனுசங்களோட வாழ விருப்பமுமில்லை. என்ர தேகம் மெலிஞ்சு வயிறு ஒட்டிப்போச்சு. எதையும் தின்ன மனம்வருகுதில்லை. கண் இடுங்கி தொடந்து கண்ணீர் வந்துகொண்டேயிருக்குது. மயிரும் அங்கங்கை திட்டுத்திட்டா கொட்டிப்போச்சு. உடம்பெல்லாம் கடியும்புண்ணும். இந்த நிலமேல ஆர்தான் எனக்கு கிட்ட வருவீனம்?  என்ர வருத்தம் முத்திப்போச்செண்டு எனக்கே விளங்குது. கிழண்டக்க முன்னமே இப்பிடி ஆயிட்டன். துவக்கத்திலயே வைத்தியம் பாத்திருந்தா நல்லா இருந்திருப்பன். வவாவும் வீட்டோட இல்ல, என்னை ஏனெண்டு ஆரும் கேக்கவுமில்லை. வவான்ர குடும்பத்தில எல்லாரும் என்னோட நல்லமாரித்தான் பழகினவை. ஆனா அவை இப்ப என்னை கிட்டவும் அண்டுறேலை.

000000000000000000000

வவாவை நான் ரமணி வீட்டுக்கு முன்னாலதான் முதன்முதல் பாத்தன். ஆனா அவன் நான் கவனிக்க முதலே என்னை பாத்திருக்கிறான். நாங்கள் நெருங்கிப்பழகி கொஞ்ச நாள்ளயே வவா தன்ர வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்திட்டான். இனி என்ர வாழ்க்கை இஞ்சதானெண்டு முடிவாச்சு.

வவான்ர முழுப்பேர் வானவராயன். இவன்ர தேப்பன் ரயனி ரசிகன். ரயனீன்ர எயமான் படம் வந்தபோதுதான் இவன் பிறந்தானாம். அதில ரயனீன்ர பேரத்தான் இவனுக்கு வச்சவராம். “ஏனன்ரி வாணணுக்கு இப்பிடி பெரிய பேர் வச்சனீங்கள்” எண்டு ரமணி ஒருநாள் வவான்ர தாயிட்ட கேக்கேக்கை நானும் தெரிஞ்சுகொண்டன். எல்லாரும் இவனை ‘வாணன்’ எண்டுதான் கூப்புடுவாங்கள். எனக்கு ‘வவா’ தான்.

வவாவை பாத்தால் சூரியாமாரி இருப்பான். நாஞ்சோதிகாமாரி இல்லையெண்டாலும் ‘ச்சில்லு’ எண்டு என்னை கூப்பிட்டானெண்டா ச்…சும்மா உடம்பெல்லாம் ஏதோ செய்யும். உடன அவன்ர காலுக்குகீழை நிப்பன். அவன்ர கைகள் என்ர உடம்பில வளைவு நெளிவெல்லாம் தடவ, நான் முனகி நெளிவன்.

வவா விடிய வெள்ளென வேலைக்குப்போனா திரும்பிவர பின்னேரமாகீடும். அம்மட்டும் எனக்கு பொழுதுபோகாது. வவான்ர தாய் தேப்பன் தமக்கை எண்டு இருந்தாலும் அவையள் பெருசா என்னோட மினக்கடுறேலை. அவன் வருமட்டும் நான் பூனையோடயும் ரெண்டு கோழியளோடையும் கொஞ்சம் விளையாடுவன். ஒருநாள் வவான்ர தாயின்ர அறேக்கை எலிக்குஞ்சொண்டு உள்ளட்டுட்டுதெண்டு அதைத்தேட நானும் உள்ளட்ட நேரம் பாத்து வெளீலை எங்கையோ போயிருந்தவா வந்து கண்டுட்டா. மனுசிக்கு நான் அறேக்கை உள்ளட்டது ஏனெதுக்கெண்டு யோசிக்காமல் பயங்கரகோவம். சிடுசிடுவெண்டு மூஞ்சய வச்சிருந்தா. அண்டிலயிருந்து இம்மட்டும் நான் அவான்ர அறேக்கை உள்ளடுறேலை. இனியும் ம்கூ…ம்.

வவா வேலையால வந்தானெண்டால் படலையடிக்கே போய் நிப்பன். வந்தவுடனயே என்ர கன்னங்களை தடவி உச்சிமோந்து  காதுதடவி  கழுத்துக்குப்போய் கழுத்துக்கும் கீழ மெதுமையான இடத்தில அவன்ர கை வர, என்ர முனகல் கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும். பகல்லயும் நாங்கள் ஒரே விளையாட்டுத்தான். முனகுற சத்தம் கேட்டால் வவான்ர தாய்மனுசி “தம்பீ… கைகாலைக் கழுவீட்டு சாப்பிட வா…” எண்டு கத்தும். இவன் ஒரு ‘தாய்க்கு பயந்தவன்’ சிலநேரம் தொடந்தாலும் பெரும்பாலும் குறேலை எழும்பி போயிடுவான். எனக்கு ஏக்கமா இருக்கும். என்ன துணிவிலை என்னை இஞ்சை கூட்டியந்தானோ தெரியேலை.

என்னதான் இருந்தாலும் வவான்ர நேசபாசம் நிறைய கிடைக்கிறதால வீட்டில இருக்கிற எல்லாருக்குமே நான் அடிமையா உணர்ரதோட எனக்கிந்ந வாழ்க்கை கிடைச்ச நன்றியுணர்வோடையும் இருக்கிறன்.

திடீரெண்டு வேலை அலுவலா வவா வெளிநாட்டுக்கு போவேண்டியதாகீட்டுது. என்னைப்பிரிஞ்சு போறது அவனுக்கு பெருசா பாதிச்சமாரி தெரியேல, ஆனா என்னை நல்லாப்பாதிச்சுது. சாப்பிட மனமில்லாமலும் ஒரு பஞ்சி பிடிச்சமாரியும் ஆகீட்டுது. இவ்வளா பேர் இருந்தும் வீடே வெறிச்சோடியிருந்தது. ஆனா இந்தப்பிரிவில ஒரு நல்லவிசையம் நடந்தது. வீட்டில இருக்கிற எல்லாரும் என்னோட கொஞ்சம் நெருங்கிப்பழகத்துவங்கிச்சினம். அது கொஞ்சம் ஆறுதலாத்தான் இருந்தது. ஆனாலும் என்ர சாப்பாடு படுக்கை தனியத்தான்.

எனக்கிஞ்சை சாப்பாடு வேளாவேளைக்கு கிடைச்சாலும் நான் என்ன தின்னவேணும் எவ்வளவு தின்னவேணும் எண்டு நானே முடிவெடுக்கேலாது. எனக்கெல்லாம் கனக்க தின்னவேணும்மாரி இருக்கும் ஆனா இஞ்சை தாறதை திண்டு திறுத்திப்பட்டு பழகீட்டுது.

நான் கக்கினதை நானே தின்னுற மாரி எனக்கு விருப்பமில்லாததை வெறுத்து விலத்துறேலை. நானே பழக்கப்படுத்திக்கொண்டிடுவன்.

படலையடில ஆரும் வாற சத்தங்கேட்டால், வவாதான் வாறாணோண்டு உடன படலையடிக்கே ஒடத்தோணும். ஆர் வந்தாலும் “வவ்…வா…” எண்டுதான் கத்ததோணும். அனேகமா அப்பிடி கத்தியுமிருக்கிறன்.

வீட்டில இருக்கிறவை என்னோட நெருங்கிப்பழகினாலும் என்ர உணர்ச்சிகளை முக்கியமா காம உணர்ச்சிகளைக் கொட்டித்தீர்க்கேலாமல் தவிச்சேன்.

என்ர நலத்தை பறிச்சிட்டாங்கள். இதிலயிருந்துதான் எனக்கு வருத்தம் வரத்துவங்கிச்சுது. வெளீலை சொல்லேலாத ‘அந்த’ இடத்தில ஒரு சின்னப்புண் இருந்தது. இது வவான்ர தமக்கைக்கும் தெரியும். ஆனா அதுக்கு அவா ஒண்டுஞ்சொல்லோமில்லை செய்யோமில்லை. சின்னதா இருந்த புண்ணில ஏதோ கிருமி ஏறி உடம்பு முழுக்க கொஞ்சம் கொஞ்சமா பரவீட்டுது. அதுவே வைத்தியஞ் செய்யாமல் விட்டு இப்பிடி பெருசாகீட்டுது. ஏதோ கொஞ்சம் கைவைத்தியம் செய்தவைதான் ஆனா நோய் முத்தினாப்பிறகு செய்ததால ஒரு பலனுமில்லை.

0000000000000000000000000000

நேற்று இரவுதான் வவா வெளிநாட்டால திரும்பிவந்தவன். என்னைப்பாத்தவனுக்கு வார்த்தை வரேல்லை எனக்குந்தான். நான் அனுங்கிக்கொண்டு கிடந்தன். அவன்ர கண்ணைப்பார்க்க எனக்கு பரிதாபமா இருந்துது. அவனுக்கு என்னைத்தொட விருப்பமா இருந்தாலும் அருவருப்பாக இருக்குமெண்டு எனக்கு விளங்கினாலும், அவன் என்னை அணைக்கவேணும் போல ஏக்கமா இருந்திச்சு.

இப்ப காலமைதான் “இப்பிடியே விட்டால் நல்லதில்லை, கருணைக்கொலைதான் செய்யவேணும்.” எண்டு எனக்கு கேக்கத்தக்கனயே வவா தன்ர தேப்பனுக்கு சொல்லிக்கொண்டிருந்தவன்.

பொறுங்கோ… படலையடிலை சத்தங்கேக்குது. ஆரெண்டு பாப்பம். என்னால முந்தியமாரி சத்தம்போடேலாமல் கிடக்கு. இப்ப உங்களுக்கு பெருமூச்சு வந்தா நீங்களும் வவான்ர குடும்பத்திலை ஒராள்தானே… ?

வவாவோட ரெண்டுபேர் வாராங்கள். ஒராளைப்பாத்தா மிருக வைத்தியர் மாதிரியும் மற்றாளைப்பாத்தா நாய்புடிக்கிறவன் மாதிரியும் இருக்கு.

சசிலி தர்சன்-பிரான்ஸ்

சசிலி தர்சன்

(Visited 82 times, 1 visits today)
 
சசிலி தர்சன்

அசைவம்-சிறுகதை-சசிலி தர்சன்

  விமானப்பணிப்பெண்  ஆங்கிலத்தில் கேட்டது புரியாமல் அசைவச்சாப்பாட்டை தெரிந்தெடுத்து,  அதைச்சாப்பிடமுடியாமல்  தவித்துக்கொண்டிருந்தான் மதுரன். விமானம் பாரீஸிலிருந்து  சிறீலங்கா நோக்கிப்  பறந்து கொண்டிருந்தது. ’‘போய்ச்சேர இன்னுங் கனநேரங்கிடக்கு’  என அலுத்துக்கொண்டே நேரத்திலிருந்து […]

 

3 thoughts on “நலம்-சிறுகதை-சசிலி தர்சன்”

Comments are closed.