வந்தேறி-சிறுகதை-அண்டனூர் சுரா

 

அண்டனூர் சுரா

‘ சண்முகம்……….’

அவரது முகம் சோப்பும் நுரையுமாக இருந்தது. நிமிர்ந்து பார்த்த சண்முகத்தின் கண்ணிற்கு அழைத்தவரின் முகம் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. அழைப்பு மாடியிலிருந்து வந்திருந்ததால் அழைத்தவர் மாடிக்கு புதிதாக குடிவந்திருப்பவர் என்பதாக யூகித்தார்.

கண்களிலிருந்த சோப்பு நுரையை இரண்டு ஆட்காட்டி விரல்களால் வழித்து கட்டை விரலுக்கு கொடுத்து நுரையை உதறினார் சண்முகம். நுரை நாலாபுறமும் தெறித்தது. கண்களை அகல விரித்துப் பார்த்தார். மாடிக்கு புதிதாக குடிவந்தவர் மாடியில் நின்றுகொண்டிருந்தார்.

‘ கொஞ்சம் மேலே வர…’

அவர் சொல்லாமல் விட்டிருந்த மிச்ச வார்த்தைகளை அவரது தலையாட்டுதல் சொல்லி முடித்திருந்தது. வரவேணும், வரமுடியுமா, வந்திட்டுப்போங்களே,,.. இவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அவர் சொல்ல நினைத்திருக்க வேணும். அவரது பிற்பகுதி தலையாட்டுதல் அப்படியாகத்தான் இருந்தது.

சண்முகத்திற்கு காலை குளியல் அது. அவர் குளிக்கையில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. வீட்டிற்கு வெளியிலிருந்த ஒரு திறந்தவெளி தொட்டியில்தான் அவர் குளித்துகொண்டிருந்தார். வீடு கட்டுகையில் தேவையானளவிற்கு தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள உதவியத் தொட்டியாக அது இருந்தது. தொட்டியையொட்டி இரண்டு வாழைமரங்கள் இலைப்பரப்பி நின்றன. அம்மரத்தின் ஓர் இலைத்தண்டில் அவர் உடுத்தியிருந்த கைலி தொங்கிக்கிடந்தது. அவர் இரண்டு முறை சோப்பிட்டு குளிக்கக்கூடியவர். இரண்டாவது சோப்பிடுதலில் அக்குள், முதுகு, கால், கை, மார்பகத்திற்கு சோப்பிட்டு முகத்திற்கு ‘ வ்….வ்…வ்…’ என்கிற சத்தத்துடன் சோப்பு போடுகையில்தான் ‘ சண்முகம்,…’ என்ற அழைப்பு சற்று சத்தமாகவும் ‘ கொஞ்சம் மேலே…’ என்கிற விளிப்பு தடித்தும் அவரது காதில் விழுந்திருந்தது.

நிமிர்ந்து பார்த்த சண்முகம் ‘ கூப்பிட்டீங்களா…?’ எனக்கேட்டார்.

மாடிக்கு புதிதாக குடி வந்திருந்தவர் மீசைக்காரராக இருந்தார். மீசை கறுப்பு , வெள்ளை தறித்திருந்தது. மீசை உதட்டின் மேல் சிறுத்தும் இரு பக்கக் கன்னங்களில் மொத்தையாகவும் சுருட்டிக்கொண்டிருந்தது. அழைத்தவர் பால்கனியில் நின்றுகொண்டிருந்தார். அவரது கைகள்  சில்வர் கம்பியைப் பிடித்துகொண்டிருந்தன. ‘ ஆமாம், மேலே கொஞ்சம்…’ மிச்ச வார்த்தையை தலைக்குப்பதில் அவரது விரல் சொல்லி முடித்திருந்தது.

சண்முகத்தின் ஒரு கையில் தண்ணீர் குவளை இருந்தது. மற்றொரு கை தலையின் சோப்பு நுரையைத் தேய்த்துகொண்டிருந்தது. ‘ எதுவும் அவசரச் சேதிங்களா..?’

‘ ஆமாம்…’

அதற்கு மேல் அந்த மீசைக்காரர் ஒன்றும் பேசியிருக்கவில்லை. மீசையை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டு தலையை உள்ளிழுத்துகொண்டார்.

சண்முகம் , அந்த பெரியவரிடமிருந்து பார்வையை எடுத்து குளியலில் இறங்கினார். தண்ணீரை முகர்ந்து தலையில் ஊற்றினார். ‘ ஏன் கூப்பிடுகிறார்…?’ என்கிற கேள்வி அவருக்குள் மெல்லத் துளிர்விட்டது. ஒரு நிமிடம் அப்படியே நின்று யோசித்தார். ‘என்னவாக இருக்கும்…?’ ‘டேங்கில் தண்ணீர் இல்லையோ…? இரவுதானே ஏற்றினேன். ஃபேன் ஓடவில்லையோ…? அத்தனை ஃபேனையும் ஓட விட்டு காட்டினேனே…! பாத்ரூம், டாய்லெட், கிச்சன்….ஒவ்வொரு அறையும் சண்முகத்தின் கண் முன் வந்து நின்று விலகிச் செல்வதாக இருந்தது.

சண்முகத்தின் கை , தொட்டிக்கும் தலைக்கும் செல்வதாக இருந்தது. முகத்தில் வழிந்த நீரை வாயில் ஏந்தி கொப்பளித்து பற்களுக்கிடையில் பீச்சினார். நாக்கு வழித்தார். ஜட்டியுடன் நின்றுகொண்டு துண்டை உருவி முறுக்கி முதுகு பக்கமாகக் கொடுத்து ஈரத்தைத் துடைத்தார். ஆனால்  யோசனை முழுக்கவும் மாடிக்கு புதிதாக குடி வந்திருக்கும் அந்த மீசைக்காரரைச் சுற்றியே இருந்தது.

அவர் பெயர் என்னவென்று சட்டென சண்முகத்தின் நினைவிற்கு வந்திருக்கவில்லை. ஊர் மட்டும் ஞாபகத்திற்கு வந்திருந்தது. மதுரைப்பக்கம் என்னவோ ஒரு பட்டி. உசிலம்பட்டியைப் போல. அப்படி சொன்னதாகத்தான் அவருக்கு ஞாபகம். மகள் ஆர்டிஓ ஆபிஸில் வேலை என்றார். மருமகனார் வெளிநாட்டில் இருக்கிறார். ஒரு பேரன். அவனும் கைக்குழந்தை. அக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்பொருட்டு தான் வந்திருப்பதாகச் சொன்னார். வாடகைக்கு வீடு வேண்டும் என்றார். அவர் கூட உள்ளூர் தரகரும் வந்திருந்தார். புது வீடு. இன்னும் கொஞ்சம் வேலையிருக்கிறதே என்றார் சண்முகம். வீட்டை திறந்து காட்டச் சொன்ன மீசைக்காரர் இவ்வீடு எனக்கு பிடித்திருக்கிறது என்றார். என் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வீட்டை எனக்கு வாடகைக்கு தந்தாக வேண்டும் என்றார். முன்தொகை எவ்வளவானாலும் பரவாயில்லை…என்றார்.

வீட்டுக்கடன் தலைக்கு மேல் இருந்தது. வீட்டை வாடகைக்கு விடுத்தால் கடன் அடைபடலாகாது என்பதாக யோசித்த சண்முகம், வீடு வாடகைக்கு விடுவதாக இல்லை; ஒத்திக்குத்தான்….என்பதாகச் சொல்லி மிச்சத்தை தொண்டைக்குள் அதப்பிக்கொண்டிருந்தார்.

‘ பரவாயில்லை… வச்சிக்கிறேன்….’ என்றார் மீசைக்காரர்.

‘ எவ்வளவு எதிர்ப்பார்க்கிறீங்க…?’

சண்முகம் ஒத்திக்கானத் தொகையைச் சொன்னார்.

‘ அவ்வளவா…!’

‘ மற்ற மற்ற இடங்களில் இவ்வளவுதான் வாங்குகிறார்கள்…’

‘ கொஞ்சம் பார்த்துச்சொல்லுங்களே…’

‘ அவ்வளவுதான், முடிஞ்சா சொல்லுங்கள்…முடியாதுனா நான் வேறு யாருக்கிட்டேயும் கொடுக்கிறேன்….’

நீண்ட இழுபறிக்குப்பின் பின் பணமும் சாவியும் கைமாறின.

சண்முகம் விலா புறத்து அழுக்கைத் தேய்க்கையில் அழுக்கோடு அழுக்காக அவரது யோசனைகளும் உருண்டன. ‘ ஒத்திப்பணம் கூட வாங்கிருக்கேனு நினைச்சிருப்பாரோ, எதற்காக என்னை அழைக்கிறார்….?’

ஒரு வாழை மட்டையில் அவரது கைலி தொங்கிக்கிடந்தது. அதை எடுத்து உதறி உடம்பை அதற்குள் நுழைத்துகொண்டார். துண்டால் முகத்தில் வழிந்த நீர்த் திவாலைகளைத் தொட்டு எடுத்தார். கைலி தொடையின் ஈரத்தால் தொடையோடு ஒட்டிப்போயிருந்தது. துண்டை கொடிக்கயிற்றில் காயவிட்டு வீட்டிற்குள் நுழைகையில் அவரது துணைவியார் கண்ணகி வீட்டிற்குள்ளிலிருந்து வெளியில் வந்திருந்தார். தலை முடியை விரல்களால் கோதிவிட்டுக்கொண்டே சொன்னார் சண்முகம் ‘ ஏன்னு தெரியல. மாடிக்கு குடிவந்தவர் கூப்பிடுறாரு….’

‘என்னவாக இருக்கும்…?’ அவரது யோசனைகள் அந்த இடத்தில் நிலைக்குத்தி நின்றன. அதே இடத்தில் நின்றுபோனார் கண்ணகி. ‘ ஒத்திப்பத்திரம் அவருடன் கொடுத்திட்டீங்க தானே…?’

‘ ம்…கொடுத்திட்டேன்…’

‘ கோயில், குளம், பொழுது போறதுக்கு உகந்த எடம் எங்கேயாவது இருக்கானு கேட்கிறதுக்காக இருக்கும்…’

சண்முகம், கொடியில் தொங்கிய பனியனை எடுத்து உதறி மாட்டியபடி சொன்னார் ‘ அவர் கூப்பிட்டத் தொனி அப்படியாகத் தெரியல….’

‘ சரி, சரி அதான் கேட்கப்போறீங்களே, அதற்குள்ள என்ன…?’

‘ என்னத்துக்காக இருக்கும்….?’ அவரது உதடுகள் துணுக்கிற்றன.

‘ அட விடுங்க, உங்க ஆபிசரா கூப்பிடுறாரு… இப்படி பம்முறீங்க. நம்ம வீட்டுக்கு குடி வந்தவர்தானே கூப்பிடுறாரு.. போங்க,பைப்ல தண்ணீ எதுவும் அடைச்சிக்கிட்டு வராம இருந்திறப் போகுது….’

‘ இருக்கலாம்….’ சீப்பால் மீசையை நீவிவிட்டுக்கொண்டார் சண்முகம்.

‘ சண்முகம்…’

திரும்பவும் அதே அழைப்பு வந்திருந்தது. சண்முகத்தை விடவும் பத்து வயது மூத்தவராக அந்த மீசைக்காரர் இருந்தார். அவரது குரல் வயதிற்கேற்ப  கரகரப்பைக் கொடுப்பதாக இருந்தது.

கண்ணகி சொன்னார். ‘ என்னங்க அந்த மீசைக்காரரு இப்படி சத்தம் கொடுக்குறாரு.புதுவீடு கட்டி இப்பதான் குடி வச்சிருக்கோம். ஏன் இப்படி கூப்பிடுறாரு….? ஒத்தி பணம் எதுவும் கூட கொடுத்திட்டேனு நினைச்சிருப்பாரோ..? ’

‘ நானும் அப்படியாகத்தான் நினைச்சேன்…’

‘ இருக்காது, வேறென்னத்துக்கோதான் கூப்பிடுறாரு….’

‘ ஒத்தி வாங்கின நீங்க , வேற யாருக்கிட்டேயும் வீட்டை வாடகைக்கு விடக்கூடாதுனு சொல்லிட்டீங்க தானே…’

‘ அதைச் சொல்லலையே…’

‘ இதையெல்லாமா சொல்லிக்கிட்டிருப்பாங்க. சொல்லாத வரைக்கும் நல்லதுதான். வேற என்னத்துக்காக இருக்கும்…?’ கண்ணகி இடுப்பிற்கு கையைக் கொடுத்து நிமிர்ந்து நின்று யோசிக்கலானார்.

‘ கரண்ட் பில் அவங்களோட.  செப்டிக் டேங்க் கிளினிங்க் ஆளுக்குப் பாதி, சுவத்தில எதையும் கிறுக்காமப் பார்த்துக்கிறது, இதெல்லாம்….’

‘ இம் சொல்லிட்டேன்…’

சண்முகம் சட்டையை மாட்டிக்கொண்டு மாடிக்கு ஏறினார். மாடிக்கு ஏறுகையில் வீட்டின் உரிமையாளர் என்கிறத் தொனியில் தொண்டையை செறுமிக்கொண்டு ஏறினார்.

மீசைக்காரர், வீட்டிற்குளிலிருந்து வெளியில் வந்தார். உனக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்….என்பதைப்போல அவரது முகமிருந்தது. முகம் பார்க்க அத்தனை இறுக்கமாக இருந்தது. தடித்த மீசை. பளிங்குக் கண்கள். சற்று வெளியே தள்ளியப் பற்களில் வெற்றிலைக் கரை.  திறந்த மார்பு. கொச, கொச மயிர்கள். மீசையைப் புறங்கையால் நீவி விட்டுக்கொண்டார்.

‘ என்னங்க….?’ என்றார் சண்முகம்.

மீசைக்காரர் சண்முகத்தை வெறிக்கப் பார்த்தார். அப்படியானப் பார்வையை அவர் இதற்கு முன் கண்டிருக்கவில்லை. ‘ காசுக்காக என்னனாலும் பண்ணுவீங்களா…..’ அவர் கேட்டிருந்த முதல் கேள்வியே சண்முகத்தின் முகத்தில் பீதியைக் கிளப்பியிருந்தது. மீசைக்காரரிடமிருந்து வந்து விழுந்திருந்த சொற்கள் வெந்து மட்டுமல்ல குழைந்துமிருந்தது.  மேற்சட்டை இல்லாத வெற்று உடம்போடு கேட்டு முடித்திருந்தார்.

உரத்தக்குரலைக் கேட்டு மாடிக்கு ஓடிவந்தார் கண்ணகி. இரண்டு கையையும் இடுப்பிற்கு கொடுத்து விடைத்து நின்றார். மெல்லப் பதுங்கி மீசைக்காரரைப் பார்த்து ‘ஏன், என்னத்துக்கு இப்படி சத்தம் போடுறீங்க, உங்களுக்கு என்ன வேணும்…?’ எனக் கேட்டு வைத்தார். அவர் அப்படிக் கேட்டதும் கண்ணகியின் தோள்மீது கை வைத்து கண்ணகியை அமைதிப்படுத்தினார் சண்முகம். அவரது பக்கமாகத் திரும்பிய கண்ணகி ‘ குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள ஏன் இப்படி கத்துறாரு…’எனக் கேட்டார்.

மீசைக்காரரின் உதடுகள் துடிக்க , கண்கள் வெறித்தபடி இருந்தன. கண்ணகி தன் கணவர் மீசைக்காரர் இருவரையும் மாறிமாறிப் பார்த்தார் பின் கணவன் பக்கமாகத் திரும்பி ‘ என்னதாங்க பிரச்சனை…’ என்றவாறு அலுத்துக்கொள்வதைப்போல கேட்டார். சண்முகம், கண்ணகி முகத்தைப்பார்த்து உதட்டைப் பிதுக்கியவாறு ‘ தெரியல…’ என்றார்.

‘என்னங்க உங்களுக்கு வேணும், ஏன் இப்படி சத்தம் போட்டு பேசுறீங்க…?’ கண்ணகியின் தடித்தக்குரல் மீசைக்காரரின் ஏதேனும் ஒரு மீசையை ஒரு வெண்டு வெண்டியிருக்கத்தான் வேணும். அவரது உரத்தக் குரல் சற்று சுணங்கச் செய்தது. அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை.‘பொம்பளைக்கிட்ட என்ன பேச்சு  வேண்டிக்கிடக்கு’ என்பதாக அவர் யோசிக்கலானார்.

சண்முகம் , கண்ணகி இருவரும் தன் சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தார்கள். சுவற்றை மெல்ல தடவிக் கொடுத்தார்கள். இத்தனை சிரமப்பட்டு வீட்டைக்கட்டி அதை கூடாத ஒருவரிடம் கொடுத்துவிட்டோமோ என்கிற குற்றவுணர்வு அவர்களைக் குறுகுறுக்க வைத்தது.

‘என்னதாங்க பிரச்சனை…? வீட்டிற்குள் நுழைந்து பார்த்துவிடலாம்,.. என நினைத்தார் கண்ணகி. புது வீட்டிற்குள் ஒரு குடும்பத்தை குடி வைத்ததன் பிறகு தன் வீடேயானாலும் அவ்வீட்டிற்குள் நுழைவது கூடாது என பின்வாங்கிக்கொண்டார். நிலைக்கதவு பாதி சாத்தப்பட்டிருந்தது. அத்திறப்பின் வழியே எட்டிப்பார்த்தார். வீட்டிற்குள் குழந்தை தொட்டியில் தூங்கிக்கொண்டிருந்தான். கொலுசு கால்கள் தொட்டிலுக்கு வெளியே தெரிந்தன.

கண்ணகியைத் தொடர்ந்து சண்முகம் இரு கைகளையும் நிலைக்கு கொடுத்து தலையை உள்ளே நுழைத்து இருபுறமும் எட்டிப்பார்த்தார். தரை, மேற்கூரை, கிச்சன், பாத்ரூம்,… என அத்தனையும் அவரது பார்வைக்கு சரியாக இருப்பதைப்போலிருந்தது.

ஃபேன் சுற்றிக்கொண்டிருந்தது. தண்ணீர் சொட்டிடும் அரவம்  கேட்டது. வெறென்ன குறை….? சண்முகம் நெற்றியைச் சுழித்து நெற்றியும் நாசியும் கூடு வாயிடத்தில் விரலைக் கொடுத்து ஒரு கணம் யோசித்தார்.

‘ என்னங்க, நாங்க கீழே வளர்க்கிற நாய் எதுவும் உங்கள கடிக்கப் பாய்ந்ததா….?’

மீசைக்காரர் ஒன்றும் பேசவில்லை. எல்லாம் என் தலை விதி என்பதைப்போல அவர் நாற்காலியில் சென்று உட்கார்ந்தார். இருவரையும் ஏற இறங்கப்பார்த்தார்.

‘ என்னதாங்க பிரச்சனை…?’  கண்ணகி கேட்டிருந்த அக்கேள்விக்கு அவரிடமிருந்து ஒரு பதிலும் வந்திருக்கவில்லை. அதேக்கேள்வியை சண்முகம் கேட்கையில்  ஓரளவு பதில் வந்திருந்தது. ‘ என்னப் பிரச்சனை! எல்லாமே பிரச்சனைதான்…!’

‘ கொஞ்சம் புரிஞ்சிக்கிறமாதிரி சொல்லுங்களே…’

‘ இனி புரிஞ்சி என்னத்துக்கு ஆகப்போகுது…எவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ பொருளையும் மேலே கொண்டு வந்து சேர்த்திருக்கேனு எனக்குத்தான் தெரியும்…’

‘ அதுக்கு என்னங்கிறீங்க…?’

‘ அதுக்கு என்னவா….! இனி எப்படி இத்தனையும் அள்ளிக்கிட்டு நா வெளியேறுறது….?. இந்த பீரோவைத் தூக்கிக்கிட்டு வர அத்தனை சிரமப்பட்டோம். இந்த கட்டில் என்ன, பண்டம் பாத்திரம் என்ன, இந்த சோபா,,… இத்தனையும் சொந்த ஊரிலேருந்து ஏத்தி வர கூலி ஆளு. மறுபடியும் இறக்கி அதை மேலே ஏத்த கூலி…..’ மீசைக்காரர் ரொம்பவே அலுத்துக்கொண்டார்.

கண்ணகி, தன் வீட்டிற்கு புதிதாக குடி வந்தவரென வைத்துப்பார்க்கவில்லை. ‘ பெரிய மனுசனெ பார்க்கிறேன். என்னங்க பிரச்சனை, இந்த வீட்ல என்னக் குறை…? புது வீட்ல குடி வந்திருந்துக்கிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறீங்க’

சண்முகம் , கண்ணகியின் தோள்மீது கையை வைத்து மனைவியை அமைதிப்படுத்தினார். ‘ சரி, விடு. நான் என்னென்னு கேட்டுக்கிறேன்….’

கண்ணகி  அமைதியடைவதாக இல்லை. கண்ணகி மீசைக்காரரை வெறிக்கப் பார்த்தார்.

‘என்னதான்க பிரச்சனை. வெளியே சொன்னாதானே தெரியும்….?’ முகத்தைப் பாவமாக வைத்துகொண்டு கேட்டார் சண்முகம்.

‘வீட்டுக்கு ஒத்தி இவ்ளோ வேணுமெனக் கேட்டீங்க, தந்தேன். அப்போதாவது சொல்லியிருக்கலாம். கரண்டு பில், செப்டிக் டேங்க் செலவுல ஆளுக்குப் பாதினு சொன்னீங்க. சரினு நான் ஒப்புக்கிட்டேன். அப்போதேனும் சொல்லியிருக்கலாம். சுவத்துல எதையும் கிறுக்கக்கூடாது, வீட்ல ஒட்டடை படிய விடக் கூடாது… இன்னும் என்னென்னவோ சொன்னீங்க, நான் ஒன்னும் சொல்லாமல் சரியென ஒப்புக்கிட்டேன். அப்போதேனும்  நீங்க சொல்லியிருக்கலாமே…அப்ப, உங்களுக்கு பணம்தான் பெரிசு. அப்படித்தானே…?’

‘ என்னங்க பேசுறீங்க. நாங்களா உங்களை எங்க வீட்டுக்கு வாங்க , வந்து எங்க வீட்ல குடியேறுங்கனு சிவப்பு கம்பளம் விரிச்சோம்…நீங்களா வந்தீங்க, வீடு பிடிச்சிருக்கெனச் சொன்னீங்க, தந்தாகணுமென ஒத்தக்காலில் நின்னீங்க, உங்க மகள் கர்ப்பினியாக இருந்தாங்க. கையில் குழந்தை வேறு. போனாப்போகுதென வீடு தந்தோம். வாடகைய மாசாமாசம் கேட்டுக்கிட்டிருக்க முடியாதென ஒத்திக்குத் தந்தோம். அக்கம் பக்கத்தில எவ்வளவு வாங்குறாங்க, கொடுக்குறாங்கனு விசாரிச்சிக்கிட்டுதான் கொடுத்தோம், வாங்கினோம். இத்தனை நாளு இருந்திட்டு இன்னைக்கு என்னென்னவோ பேசுறீங்க,….’ சற்றே வெடிப்பதைப்போலவும் அதே நேரம் வீட்டு உரிமையாளருக்கு இருந்தாக வேண்டிய பொறுப்புணர்வுடன் கேட்டு நின்றார் சண்முகம்.

‘ இந்த வீட்ட இவ்ளோ தொகைக் கொடுத்து நான் ஒத்தி வாங்கியிருக்க வேண்டியதில்ல…’

‘ அப்படியெல்லாம் சொல்லாதீங்க, அடுத்தடுத்த தெருவில நீங்க கொடுத்த ஒத்திப்பணத்துக்கு ஓட்டு வீடு கூட கிடைக்காது..  போனாப்போகுதென  புது வீடு, புது மனுசன்னு கொடுத்தேன்….’

‘ அந்த வீட்டுக்கு எவ்வளவு வேணுமானாலும் கொடுக்கலாம்.. இந்த வீட்டுக்கு நான் இவ்வளவு தொகை கொடுத்திருக்கக்கூடாது… என்ன நீங்க ஏமார்த்திட்டீங்க….’

‘ ஏன் இந்த வீட்டுக்கு என்னக் குறை…?’

‘ என்னக்குறையா! சொல்ல வேண்டியதைச் சொல்லாம, மறைக்க வேண்டியத மறைச்சில இந்த வீட்ட என் தலையில கட்டியிருக்கிறீங்க…?’

‘ என்னது, இந்த வீட்டை உங்கத் தலையில கட்டிட்டோமா….! புது வீட்டில உட்கார்ந்துக்கிட்டு என்னங்க பேசுறீங்க. உங்கக்கிட்ட நாங்க அப்படி என்னத்தங்க மறைச்சிப்பிட்டோம்…? பெரிய மனுசன், வெளியூருனு  விட்டா  ரொம்பத்தான் போறீங்க…ரெண்டுல ஒன்னு பார்த்தேயாகணும்….நான் விடப்போறதில்ல, என்னை யாரென நினைச்சீங்க, சொல்லுங்க, உங்கக்கிட்ட நாங்க எதை மறைச்சோம். ம்…?’

மீசைக்காரரின் மீசை துடித்தது. மீசையை புறங்கையால் தடவி விட்டுக்கொண்டு நாக்கை மடிக்கி பற்களால் கடித்து விழிகளை உருட்டித் திரட்டிக் கேட்டார் ‘ எதையும் நீங்க மறைக்கலையா, சொல்லட்டா, வீட்டைப்பத்தி என்னென்னமோ சொன்னீங்களே , நீங்க யாரென ஒரு வார்த்தைச் சொன்னீங்களா, சொன்னீங்களாங்கிறேன்….?’

கண்ணகி அவர் முன் போய் நின்றாள். அவரிடம் ஒரு கை விரலை நீட்டியவளாகக் கேட்டாள் ‘நாங்கதான் அதைச் சொல்லாமல் மறைச்சிட்டோம். நீயாவது சொல்லியிருக்கலாமே, ஆமா, நீ யாரு…?’

அண்டனூர் சுரா-இந்தியா

அண்டனூர் சுரா

(Visited 86 times, 1 visits today)
 

3 thoughts on “வந்தேறி-சிறுகதை-அண்டனூர் சுரா”

Comments are closed.