‘பாரதப் புராணமும் புராணப் பாரதமும்’-இலக்கிய அரசியல் கட்டுரை 03 -அண்டனூர் சுரா

அண்டனூர் சுராஆசு, மதுர, சித்திர, வித்தார எனக் கவிஞர்களை நான்வகைப் படுத்துகிறது கவிகூறும் நல்லுலகு. ஆசு என்கிற சொல் தமிழிலும் உண்டு, வடமொழியிலும் உண்டு. தமிழில் இதன் பொருள் குற்றம், அற்பம், நுட்பம், ஆதாரம். வடமொழியில் ‘விரைந்து தருதல்’.

புலவர்களில் ஆசு கவி காளமேகப்புலவர் என்பர். பெய் என்றதும் பெய்யும் மழை போல பாடுக என்றதும் உடனே பாடி விடுகிறவர். தமிழ்நாட்டில் நிறைய காளமேகப்புலவர் உண்டு. சிலர் தன்னை காளமேகப்புலவரென நினைத்துக்கொண்டு கவிபாடும் திறத்தால் காலமேகமாகி விடுவதுண்டு. காலம் என்பதற்குப் பொய் என்றொரு பொருளுண்டு. ஆசு கவி என்பதற்கு விரைந்து பாடுதல் என்பதைப் போல  குற்றமாகப் பாடுதல் என்றும் பொருந்தும். பிழையாக, தவறுதலாக, தப்புத்தப்பாக, எகணைமொகணையாக,தப்புத்தாளமாகப் பாடுதல்…இப்படியாகப் பாடுதல் இன்றைக்கு ஒரு வகை கலை தானே!

மதுர, சித்திர, வித்தார இம்மூன்று சொல்லையும் இவ்வாறே வட மற்றும் தமிழ்மொழியின் வழியே பொருள் கண்டு ரசிக்கலாம், சிரிக்கலாம். மதுர என்பதற்கு இனிமை என்றும் மது என்றும் பொருள் கொள்ளலாம். மதுர – நமூர் மதுரையைக் குறிக்கும். மதுர மரிக்கொழுந்து வாசம், இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர – வெங்கலத்திரைப் பாடல்கள். ( இன்றைக்கு வெள்ளியை விடவும் வெங்கலத்தின் விலை கூடி வருகிறது). அரசியல் அகராதியில் மதுர என்றால் திருமங்கலத்தைக் குறிக்கும். திருமங்கலம் பார்முலா என்றொரு சூத்திரம் தேர்தல் கணக்கில் உண்டுதானே. பணத்தால் வாக்கை வாங்குவதற்கு மாறாக, பணத்தால் வாக்காளனை வாங்குவது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவ்விடத்தை ஆர்.கே. நகர் பிடித்தது. நாளை நாங்குநேரி பிடிக்கும். மறுநாளுக்கும் மறுநாள் எதுவோ….?

அரசியலில் திருமங்கலம் என்றால் தேர்தல். கவியில் திருமங்கலம் என்றால் நக்கீரர். கீரர் என பலரால் அழைக்கப்படும் நக்கீரர் பிறந்தது திருமங்கலம். இவரது தந்தையார் மதுரைக் கணக்காயனார் என்பதாக ஒரு குறிப்புண்டு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பேரூர் மதுரை, இன்று சாதி சங்கம் நிறைந்த சிற்றூராக குன்றியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க மதுரையின் இன்றைய பெயர் மதுர. பெண் கூந்தலுக்கு மணம் உண்டு எனப்பாடுவது  மதுர கவி ( மதுர – போதை ). இதை மறுத்து கவி சாடியவர் மதுர கவி,  நக்கீரர். ஒரு சொல் இரு பொருள். இரட்டுற மொழிதல். இது சிரிக்கும்படியாக அமைந்துவிட்டால் சிலேடை.

ஒரு வடமொழி அகராதி ‘ புலமையோர் ’ என்பதற்குக் கவி என்றும் ஆசு,மதுரம்,சித்திரம்,விஸ்தாரம் எனவும் வகைப்படுத்தியுள்ளது. எதையும் நான்காக வகைப்படுத்துவது வடமொழி. நான்கு வர்ணம். நான்கு புலமையோர். இது தவிரவும் கமகன், வாதி, வாக்கி என்கிற சொற்ப்பிரயோகங்கள் உண்டு. கமகன் -அறம் பொருளைச் செம்மையாக விவரிப்பவன். வாதி – தக்க உதாரணம் காட்டி பிறரின் கருத்தை மறுத்துத் தம் கருத்தை நிறுத்துவோன். வாக்கி – அறம்,பொருள் , இன்பம் வீடு இவற்றை விரித்து உரைப்போன். ‘வாதி’ என்கிற அரைச்சொல்லின் முற்சேர்க்கையைப் பாருங்கள். கவிவாதி, மிதவாதி, தீவிரவாதி, உளறல்வாதி, மென்வாதி, வன்வாதி, பெண்வாதி…இந்த வரிசையில் ஒரு சொல் ‘அரசியல்வாதி’.

கவி என்பதற்கு கவிதை, கவிஞர், பாடல்,பாடகன்  என்பதாக மட்டும் பொருள் கொள்ள வேண்டியதில்லை. செப்புவோன், உரைப்போன்.ஆற்றுபவன்,…என்பதாகவும் பொருள் கிடைக்கப்பெறுகின்றன. இன்றைக்கு இந்துயாவை அல்லது இந்தியாவை இரண்டாம் முறையாக ஆள்பவர் ஒரு கவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதாவது உரைப்போன்.

நான்கின வகைப்பாடு சபையில் கவிபாடுபவர்களுக்கு மட்டுமானது அன்று, மேடையில் பரப்புரை செய்யும் உரைப்போனுக்கும் பொருந்தக் கூடியதே. அங்கு அவன் ‘கவி’ஞன், இங்கு இவன் ‘காவி’யன். பாடுபவனாக இருந்தாலென்ன, உரைப்போனாக இருந்தாலென்ன, நான்கிலும் சிறந்து விளங்குவர், சிறந்தோங்குவர் அரிதிலும் அரிது. இத்தகையர் தமிழ் மண்ணை ஆண்டிருக்கிறார்கள். இந்தியாவை ஆண்டிருக்கிறார்களா,..?

விரைந்து பேசுதல் – ஆசு. போதை வரும்படியாகப் பேசுவது – மதுர. மதம், ஒரு வகை போதை என்பதைக் கவனத்தில் கொள்க. பழமைவாதம், புராணவாதம் பேசுவது – சித்தர. நீட்டி, மடக்கி விரித்துப் பேசுவது – விஸ்தார. இந்நான்கு பேச்சுக்கலையையும் ஒருங்கே பெற்ற ஆளுமையால் பாரதம் இரண்டாம் முறையாக ஆளப்படுவது இதுவே முதல் முறை.

கவிதையில் இரண்டாம் முறையாக ஒரு சொல் இடம்பெறுவதற்கு மடக்கு என்று பெயர். பாடலுக்கு அழகு சேர்க்கும் ஒரு வகை அணி அது. வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்ப்பது. ஒரு கிராமத்தை, மாநிலத்தை, தேசத்தை, நாட்டை இரண்டாம் முறையாக ஆட்சி செய்வதற்கு மடக்கு என்றே பெயர். வடநூல் புலவர்கள் இதை ‘ யமகம்’ என்கிறார்கள். மாட்டு அரசியல் – மடக்கு அரசியல் என்னே பொருத்தம்!. இந்த மடக்கு அரசியலின் மடக்கு சொல் ‘காவலர்’. இந்தியில் ‘சௌகிதார்’.

மடக்கு – பலகாரங்களில் ஒன்று. கடித்தால் நறுநறுக்கும். மாவும், பாகும் கலந்து பொரித்தெடுக்கும் பலகாரம். மடக்கு கடிக்கப்போய் நாக்கைக் கடித்துக்கொண்டவர்கள் பலருண்டு. இது பலகாரத்தாலும் நடந்திருக்கிறது. பரப்புரையாலும் நடந்திருக்கிறது. தேர்தல் பிரச்சார மேடையில் ஒரு கட்சியின் தலைவர் ‘நான் சௌகிதார்’ என்றார். அவருக்கு எதிர்முகமானவர், ‘ஆமாம் கோடீஸ்வரன்களின் சௌகிதார்’ என்றார். இதற்குப் பெயர்தான் மடக்கு. இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். தமிழகத்தை ஒரு தலைவர் ஆண்டார். அவர் மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி கொள்கையைக் கொண்டவர். அவர் கடைசியாக ஆண்டது பெரும்பான்மையில்லாத ஆட்சியாகி விட, எதிர்க்கட்சி தலைவராக முன் வரிசையில் வந்தமர்ந்தவர் முன்னாள் முதலமைச்சர்.  அவர் சட்டப்பேரவையில், விவாதத்தின் போது ‘ நீங்கள் நடத்துவது மைனாரிட்டி ஆட்சி’ என்றார். ஆட்சி கட்டிலிருந்தவர் சொன்னார். ‘ ஆமாம், இது மைனாரிட்டு ஆட்சிதான். சிறுபான்மை மக்களுக்கான ஆட்சி..’ இதுதான் மடக்கு. ஜிஎஸ்டி – குட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸ் என பத்ம தலைவர்கள் சொல்ல, கரம் தலைவர் கப்பர் சிங்க் டாக்ஸ் என்றாரே. இங்கு கப்பர் சிங்க் என்பது இந்தி சொல். வழிப்பறி கொள்ளையன். இதுவும் மடக்குதான்.

‘மடக்கு’  – அரசியல், கவிதையியல் இரண்டிலும் தேர்ந்தவர்களால் மட்டுமே சால் மூட்டி, விளா நீட்ட முடியும். சால், விளா, மடக்கு மூன்றும் உழுதலின் வகைகள். மொழியில் ஆழ உழுபவர்களால் மட்டுமே மடக்கில் உழ முடியும். தேர்ந்து சொன்னால் மடக்கு என்பது  ‘வெல்லும் சொல்’. இல்லையேல், ‘கொல்லும் சொல்’.

சேந்தன் பனையவயல் சிவகவிராயர் என்றொரு புலவர். சங்கக்காலப் புலவர் அவர்.  தனிப்பாடல்களாக இயற்றியவர். இவரது பல பாடல்கள் மடக்கு அணி வகையைச் சார்ந்தது. இவர் பெண்ணைப் பாடினாலும், பொன்னைப்பாடினாலும், சிவன் இல்லாமல் பாடமாட்டார். ஆகையால் அவருக்கு சிவகவிராயர் என்று பெயர். சிலர் மேடையில் முழங்குகையில் அடிக்கடி ‘மாதாகி ஜே’ என்கிறார்களே, அப்படி. மடக்கு மீது சிலருக்கு அதீத ஈர்ப்பு உண்டு. சிலருக்கு அதன் மீது அதிக வெறுப்பு. சொல்பவரைப் பொறுத்தே அச்சொல் எள் அல்லது முள்.  ஆனால் சிவகவிராயரின் மடக்கு அப்படியான ஒன்றன்று.

முதல் முற்று, ஈற்று ஏகார மடக்கு அணியில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். நான்கே வரிகள்தான். அப்பாடலில் நாரதர் வருகிறார். திருமால் வருகிறார். பிரமன் வருகிறார். சிவனுக்காகப் போர் புரிந்த வீரபத்திரன் வருகிறார். கோடிகள் வருகின்றன.. இவர்கள் அத்தனைப் பேருமே இன்றைய மடக்கு அரசியலிலும் உண்டுதானே.

தேர்தல் வந்துவிட்டால் நாட்டில் நாரதர்களுக்கு ஏது பஞ்சம்?. இந்தத் தேர்தலிலும் நாரதர்கள் வரவே செய்தார்கள். அவர்கள் வழக்கம் போலவே மாநிலத்திலும் தேசிய அளவிலும்  மூன்றாம் அணியை வகுத்தார்கள். தலைக்கும் வாலுக்குமாக தேசத்தை அளந்தார்கள். நாரதர் சண்டை நல்லதில் முடியும், முடிந்தால்…!. இந்தியத் தேர்தல் என்றால் திருமால் இல்லாமலா…? அவர் வந்து போனார், இராமன் அவதாரத்தில். அவனுடைய பக்தன் அனுமன், தலித் பட்டியல் இனத்தவராக வந்து சேர்ந்தார். பிரமனுக்கு கோவிலில் ஆலயம் ஏது, பஜனை, மகுடம், ஆராதணை ஏது…?. தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கே இடம் இல்லாத இடத்தில அரசியல் பிரமன்களுக்கு இடம் கிடைத்துவிடுமா என்ன..? வயது முதிர்வு காரணத்தைக் காட்டி பத்ம பிரமாக்களின் நாற்காலிகள் பறிக்கப்பட்டன. அரசியலில் வீரபத்திரன்களுக்குச் சொல்லவா வேணும்..? வீரபத்திரன்கள், இன்று மாண்புமிகுக்கள்.

நாரதர் புராணம் என்றொரு புராணம் உண்டு. அதில் , நாரதர் இசை கற்றுக்கொள்ள விரும்புகிறார். அதற்காக ஒவ்வொரு நபராகச் சென்று கைக்கட்டி நிற்கிறார். அவரது இசைகள் வெறும் சொய்ங், சக்.. என்றளவிலேயே இருக்கிறது. கடைசியாக கானபந்து முனிவரிடம் சென்று இசையைக் கற்க, ஒரே நாளில் ஞானியாகி விடுகிறார். தமிழக நாரதருக்கு இப்படியான கொடுப்பினைக் கிடைத்திருக்கிறது. எத்தனையோ தேர்தலில்  தவறான தாளங்களை வாசித்து வந்தவர், இந்தத் தேர்தலில் சேருமிடம் சேர்ந்து சரியென  இசைந்து விட்டார்.

மற்றொரு கதை சிவமகா புராணம். சிவனின் திருவடியைக் கண்டு வருகிறேனென, திருமாலும், பிரமனும் பயணிக்கிறார்கள். நீண்ட நாட்கள் பயணம் செய்து செய்தென செய்து வெறுங்கையோடு திரும்பி வருகிறார்கள், சிவனின் அடியையும் காணோம், முடியையும் காணோமென. அரசியல் என்பது இரண்டேதான். ஒன்று அடியைத் தொழுவது. மற்றொன்று முடியைத் தொடுவது. தொட்டால், தொழுதால் பதவி, பவுசு, பணம், படை எல்லாம். அரசியல் களத்தில் இனி நாங்கள்தான் திருமால், பிரமன் என வாய்ச்சவாடல் வீரர்கள் அவர்களின் குடும்பத்து வாக்கைக் கூட பெறாமல் நெற்றியில் இராமத்தையும்,  பட்டையையும் ஏற்று வைப்புத்தொகையை இழந்தக் கதை வேடிக்கை மட்டுமல்ல. விநோதமும் கூட.

சிவனின் பக்கம் நின்று தக்கனை எதிர்த்து போர் புரிகிறான் வீரபத்திரன். தக்கன் பல ‘கை’களைக் கொண்டவன். வீரபத்திரன் – தக்கன் போரினை முப்பெருந்தேவிகள் தூரத்தில் நின்று பார்க்கிறார்கள். போர்க்களத்தில் நாங்களுமே உண்டு என்றார்கள். மூவரில் ஒருவர் வடகிழக்கைத் திசையாகக் கொண்டவர். இன்னொருவர் மத்திமம் பகுதிக்காரர். மூன்றாம் தேவி வட, தென், கிழக்கு, மேற்கென நான்குத் திசைகளையும் கொண்டவர். போர் நடந்தது, நடந்து முடிந்தது. முப்பெருந்தேவியரும் பெரிதாக சுடர்விடவில்லை.

பாரதம் ஒரு புராணம். புராணம் ஒரு பாரதம். ஏன்…? இரண்டிலும் ஓம், ராம் என்பதே பிரதானம். ஆம், இன்றைய பாரதத்தில் ராம், இந்தியாவின் தலைமை. ஓம், மக்களவையின் தலைமை. இந்தியா – இந்துயா. ஆனாலும் புராணம் , பாரதம் இரண்டும் ஒன்றல்ல. புராண பாரதத்தில் கோடிகள் பக்தர்கள். இவர்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள். பாரதப் புராணத்தில் கோடிகள் வாக்காளர்கள். வேடிக்கைக் காட்டுபவர்கள். சிவகவிராயரின் பாடலைப் பாருங்கள்,

பாடிப் பாடிப் பாடிப்பாடி பாடியவர் ஒருவரே !
தேடித் தேடித் தேடித் தேடித் திரும்பியவர் இருவரே!
ஓடி ஓடி ஓடி ஓடி  ஒளிந்தவர்வர்கள்  மூவரே!
நாடி நாடி நாடி நாடி நத்தியவர் கோடியே!    

அண்டனூர் சுரா-இந்தியா

அண்டனூர் சுரா

 326 total views,  1 views today

(Visited 161 times, 1 visits today)