‘சான்றோர் பாலர் ஆப, சாலார் சாலார் பாலர் ஆகுபவே’- கட்டுரை 02 -அண்டனூர் சுரா

அண்டனூர் சுராவடக்கிருத்தல், வடக்கிற்காகிருத்தல் – இரண்டும் இரு வேறு சொற்கள். முன்னது பண்டையப் பண்பாடு. மானம் பெரிதென்று உயிர்விடுவான், என்கிற நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனாரின் வரி இதிலிருந்தே எழுதப்பட்டிருக்க வேண்டும். இழிச்சொல், இழிச்செயல், தோல்வி, இதனால் மானம் போகிறதென்று உண்ணாமல், தண்ணீர் அருந்தாமலிருந்து உயிர்த்துறப்பது! இதேபோன்று, ஆனால் இஃதெல்லாத ஒரு நெறி சமணர்களிடம் இருந்தது, ‘சல்லேகனை’, வீடுபேறு அடைதல் என்று சொல்லலாம். இதுவும் வடக்கிருத்தல் போன்றதுதான். ஆனால் மானத்திற்காக உயிர்விடுதல் அன்று. தீராப்பிணிக்காக, தாங்காவொண்ணா ஒவ்வாமைக்காக வடக்கிருந்து இன்னுயிரைத் துறப்பது.

‘வடக்கிற்காகிருத்தல்’, இன்றைய அரசியல் அரிச்சுவட்டின் புதுச்சொல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் எல்லா சாலைகளும் டெல்லியை நோக்கியே செல்கிறது என்பது இந்திய அரசியல் தத்துவம். All roads lead to Rome : All roads lead to New Delhi இரண்டும் ஒன்றல்ல. முந்தையது எம்மதமும் சம்மதம். இது, காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணியின் தாரகக் கொள்கை. பிந்தையது, இந்துமதம் ஒன்றே எமக்குச் சம்மதம். இது, ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியின் கோட்பாடு. கொள்கை என்பது கடைப்பிடிப்பது. கோட்பாடு என்பது பரப்புவது. இங்கு டெல்லி என்பதை வடக்கு என்றே பொருள் கொள்க. டெல்லியை என்ன விலைக்கொடுத்தேனும், அடைந்தாக வேண்டும் எனக் கோவிலுக்குப் போகாதவர்கள் கோவிலுக்குப் போவதும், சேரிக்குள் நுழையாதவர்கள் சேரிக்குள் நுழைவதும் வடக்கிற்காகிருத்தல் ( Ahead Delhi ).

கண்ணகனார் என்றொரு புலவன், கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் காலத்தவன். மூவரில் கோப்பெருஞ்சோழன் சிறப்புடையவன். சங்கக் காலத்தில் பாடுபவனாகவும், பாடப்படுபவனாகவும் இருந்தவன். சங்கப்பாடலில் பொருநன் என்றொரு சொல் உண்டு. அதற்கு இரண்டு பொருள். ஒன்று பாடுநன். மற்றொன்று பாட்டுடைத் தலைவன். அத்தகைய பெருமைக்குரியவன் அவன். காதல் பாடல்கள் (குறுந்தொகை ) நான்கும்; வீரப்பாடல்கள் ( புறநானூறு ) மூன்றும் பாடியுள்ளான்.

 வெறும் ஏழு பாடல்கள் மட்டுமே பாடிய கோப்பெருஞ்சோழனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஐவர் பாடியிருக்கிறார்கள். பாடியவர்கள் முறையே, கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், நத்தத்தனார், பிசிராந்தையார், புல்லாற்றூர் எயிற்றியனார், பொத்தியார் முதலியோர். இவர்கள் கோப்பெருஞ்சோழனை நேரடியாக ஆதரித்தவர்கள். கண்ணகனார் என்கிற புலவன் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன். இவன் கோப்பெருஞ்சோழனின் அவைப் புலவன். இசையின் மீது அதீத மோகம் கொண்டவன். புறநானூற்றில் ஒன்று, நற்றிணையில் ஒன்று, பரிபாடலில் ஒன்றென அவன் பாடியது, அவ்வளவேதான். ஆனால் மூன்று பாடல்களிலும் சந்தம் சரமாடும்.  கோப்பெருஞ்சோழன், உறையூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன். முற்காலச் சோழத்தவன். அவனுக்கு இரு மக்கள். அன்றும் சரி, இன்றும் சரி, மக்கள் என்பவர்கள் முதலில் தாம் பெற்றவர்களே!  தந்தைக்கு மகன்கள் மீது பிணக்கு வருகிறது. பிணக்கு வாய்ப்போராகி, வாள் போரில் வந்து நிற்கிறது.

தந்தைக்கும் மகனுக்குமிடையே போர் வருமா, ஏன் வருவதில்லையா? பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்றொரு கட்சி. யாதவர் கட்சியென அடையாளப்படுத்தப்படும்  கட்சி. அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ். அவருக்கு இரு மகன்கள். தேஜ் பிரதாப் , தேஜஸ்வி. லாலு வீட்டுக்கும் சிறைக்குமென சாலைப்போடுகிறவர். ஒரு முறை சிறைக்குச் செல்கையில் தனக்குப் பிறகு தலைவன் தன் மனைவி ராப்ரிதேவியென அறிவித்துவிட்டுச் சென்றார். அடுத்த முறை சிறைக்குச் செல்கையில் என் இளைய மகன் தேஜஸ்வி கட்சியின் தலைவனெனப் பிரகடனம் செய்தார். மூத்தமகன் தானிருக்க இளையவன் மகுடம் சூடுவதா, மூத்தமகன், தந்தைக்கு எதிராக போரில் குதித்து விட்டார். கடலில் குதித்தால் கூடக் குதிக்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். அரசியலில் குதித்தால் கூடக் குதிக்க இலட்சமோ இலட்சம் பேருண்டு. ஆதரவாளர்கள் கரம் கொட்டி ஒரு கட்சியைத் துவக்க வைத்துவிட்டார்கள். கட்சியின் கொள்கை விநாயகர் தத்துவம். தந்தையும் தாயுமே என் உலகம், உலகம் என்பது தந்தையும் தாயும். கட்சியின் பெயரைப் பாருங்கள், ‘லாலு ராப்ரீ மோர்சா ’

  இன்னொரு உதாரணம், வடக்கிற்காகிருத்தலின் மையம் டெல்லி. இது அரசியல் இலக்கியக் கட்டுரை என்பதால் மையம் என்பதை இடதும் அல்லாது, வலதும் அல்லாது மய்யம் என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும். டெல்லி மய்யம் கொண்டிருக்கும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி என்றொரு கட்சி. அதன் தலைவர் முலாய்சிங் யாதவ். இவர் முன்னாள் தலைமை அமைச்சர். இவரது மகன் அகிலேஷ் யாதவ். இவரும் முன்னாள் முதலமைச்சரே! முலாயம்சிங் யாதவ் 16 ஆவது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர். மகன் முதலமைச்சர் பதவியிலிருந்து கீழிறங்கிய சட்டமன்ற உறுப்பினர்.  இருவருக்குமிடையில் அவ்வபோது போர் மூழ்வதும், சமாதானத்தில் மூழ்குவதுமாக இருந்தன. தீடீரென இருவருக்குமிடையில் போர் மூண்டது. தந்தை முலாயம் சிங், 16 ஆவது மக்களவையில் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றினார், ‘ Want to see Modi become PM again ’ நாடாளுமன்ற மக்களவை அதுநாள் வரை இல்லாது அதிரதிரென அதிர்ந்தது. தந்தை நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் அவரது மகன் அகிலேஷ், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு உரையாற்றினார், ‘நரேந்திர மோடி காலாவதியானவர், அவர் எங்கள் கூட்டணியால் தோற்கடிக்கப்படுவார்…’. இப்படியானப் போர்தான் கோப்பெருஞ்சோழனுக்கும், மகன்களுக்கிடையில் நடந்தேறியிருக்க வேண்டும்.! மகன் மீது போர்த்தொடுக்க வாளினை எடுத்துவிடுகிறான் சோழன். எடுத்தக் கணமே குற்றவுணர்வு அவரை வதைக்கிறது. மகனுக்கு எதிராகப் போரிட்டு தான் வாகைப்பூ சூடுவதா? வெட்கம் – அவமானம். அடுத்தவர்கள் பழிக்கும் படியான கீழ்செய்கையில் இறங்கிவிட்டேனே, மானமே பெரிதென்று உயிர்விட வடக்கிருக்க துணிகிறான் கோப்பெருஞசோழன். அவனின் வடக்கிருத்தலை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுகிறான் அவைப்புலவன் கண்ணகனார்.

 கண்ணகனார், இயல்பிலேயே இசை மீதும், சுதி மீதும் பேரார்வம் கொண்டவன். அவனுக்குள் கோப்பெருஞ்சோழன் மீதான துக்கச்சுதி பாடலாக எழுகிறது. அவன் பாடிய புறநானூற்றுப் பாடலின் கடைசி வரிகள் இவை,

 ‘ சான்றோர் பாலர் ஆப, சாலார் சாலார் பாலர் ஆகுபவே’.

வடக்கிருத்தல் மொழியில் இதன் பொருள் சான்றோர் சான்றோர் பக்கம். அறிவிலிகள் அறிவிலிகள் பக்கம் ! இதையே வடக்கிற்காகிருத்தல் மொழிதலில் சொல்வதாக இருந்தால், ‘ கொள்கைக் கட்சிகள் கொள்கைக் கட்சிகளுடன்;  மதக்கட்சிகள் அதன்சார்பு கட்சிகளுடன்’ இதைச் சற்று வேறு மாதிரியாகவும் சொல்லலாம், ‘கொள்கையுடையவர்கள் கொள்கைக் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். சாதி உணர்வு கொண்டவர்கள் அவரவர் சாதியினருக்கு  வாக்களிக்கிறார்கள்…’ சுத்தம் – சுபம் ; பித்தம்- கபம். ஜனநாயகம் – சாதிநாயகம்.

வடக்கிருத்தல், வடக்கிற்காகிருத்தல்  இரண்டும் தற்கொலை முயற்சிகளே! இதை மறுக்கிறவர்களும் உண்டு. வடக்கிற்கானத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் உத்தேசச் செலவு 15 கோடி என்கிறது ஒரு புள்ளி விபரம். வாக்கிற்குப் பணம் கொடுத்தல் என்கிற சம்பிரதாயச் செலவைச் சேர்க்காமல்! தேர்தலில் வெற்றிப் பெற்றுவிட்டால் பதினைந்து கோடியும் உண்டு. இல்லையேல், தற்கொலை செய்துகொள்வது போன்றதுதானே.

வடக்கிருத்தல், எத்தனையோ பேர் தமிழர் பண்பாடென கருதி உட்கார்ந்து உயிர்த்துறந்திருக்கிறார்கள். சேரமான் பெருஞ்சேரலாதன் அப்படியாக உயிர்த்துறந்தவன்தான். இவன் கரிகால்வளவன் உடனான போரில் போரிட்டு மார்புப்புண் , முதுகுப்புண், இரண்டையும் ஒரு சேரப்பெற்றவன். முதுகுப்புண்ணால் அவனது மானம் போய்விட்டதென வெட்குறச் செய்கிறான். அதற்காக வடக்கிருந்து உயிர்த்துறக்கிறான். பாரியின் நண்பன் கபிலர் அப்படியாக உயிர்த்துறந்தவனே. ஆனால் வடக்கிருத்தல் என்றதும் முதலில் நினைவுத் தட்டுவது கோப்பெருஞ்சோழன்தான். காரணம், மற்றவர்கள் தனியே உட்கார்ந்தார்கள். கோப்பெருஞ்சோழன் அவனுக்கும் பக்கத்தில் நண்பனுக்கென ஒரு இடத்தை ஒதுக்கிவைத்துவிட்டு உட்கார்ந்தான்.

 ‘இன்னே வருகுவன் ; ஒழிக்க ;அவற்கு இடமே!’

இந்த புறநானூற்று வரிகள், அவனது மரண வாக்குமூலம்.

‘இன்னே வருகுவன்’ என்று சோழன் சொல்வது, பிசிராந்தையாரை. இன்றைக்கே அவன் வருவான் என உறுதிபட பாடுகிறான். இவன் சோழன். பிசிராந்தையார் பாண்டியன். பிசிர் என்கிற ஊரினைக் கொண்ட ஆந்தையார் என்பதன் சுருக்கமே பிசிராந்தையார். சோழன் – பாண்டியன் என்பவர்கள் கீரியும் பாம்புமானவர்கள். பகை மறந்து நீளும் இருவரின் நட்பு பெருநட்பாகிறது. பிசிராந்தையாரின் நட்பை கோப்பெருஞ்சோழன் பெருமைப்பாடுகிறான். அவனுக்கு நிகராகப் பிசிராந்தையாரும் பாடுகிறான். எதிரும் புதிருமானவர்கள் வடக்கிருத்தலில் ஒன்றுகூட வாய்ப்புண்டா, கண்ணகனார் மெய்மயக்கம் கொண்டு இதையும் பார்த்துவிட வேண்டுமென்று காத்திருக்கிறான். ஐயம் கொள்ளாதீர், பாரும், இன்றே வருவான்,.. என்கிறான் சோழன். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு  பாமக வருமா, திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா, என தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருந்ததைப் போலதான் கண்ணகனார் காத்திருந்தான்.

அதிமுக – பாமக இரண்டும் எதிரும் புதிருமான கட்சிகள். அதைக் காட்டும் முகத்தால் அரங்கேறிய காட்சிகள், கண்டன உரைகள் நிறைய உண்டு.  அதிமுக தலைமையை எப்படியெல்லாமோ கழுவிக்கழுவி ஊற்றியக் கட்சி பாமக. ஆனால் கூட்டணி கைகூடியதே!

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பிற்கு ஈடாக வடக்கிற்காகிருத்தலில் யாருடைய நட்பைச் சொல்லலாம்?, நரேந்திர மோடி – ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி – அன்புமணி ராமதாஸ், அமித்ஷா – விஜயகாந்த் ; ராகுல் – ஸ்டாலின் , ஸ்டாலின் – திருமாவளன், ராகுல் – வைகோ, வைகோ – கம்யூனிஸ்ட்,…

வாசகர்களின் கோபம் எனக்குப் புரிகிறது, பிசிராந்தையார் – கோபப்பெருஞ்சோழன் நட்பு எங்கே, இவர்களின் நட்பு எங்கேயென வாளெடுத்து வாகாக வீசிவிடாதீர்கள். நட்பு என்பதே முரணில் முட்டிக்காலிட்டு கைக்கோர்ப்பது தானே! அவரவர் கூட்டாளிக்கு அவரவர் இடம் பிடிக்க, பரப்புரை என்கிற பெயரில் கூவுக்கூவெனக் கூவுகிறார்கள். தேர்தல் அறிக்கை, வாக்குறுதியென அள்ளி வீசி மக்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்.  மக்களின் வாக்குகளால் வேட்பாளர்கள் தேறுவார்களா, டெல்லி போய்ச் சேர்வார்களா? சேர்ந்துவிட்டால் நன்நட்பு, இல்லையேல் கூடாநட்பு.

 கண்ணகனார், கோப்பெருஞ்சோழன் ஒதுக்கியிருக்கும் இடத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். என்னே அதிசயம்! சோழன் சொன்னதைப்போலவே அன்றே வந்துவிடுகிறான் பிசிராந்தையார். வந்தவன் சோழனின் வடக்கிருத்தலைக் கலைக்காமல் அவன் ஒதுக்கிய இடத்தில் வந்தமர்கிறான். கண்ணகனாரின் கண்ணை அவனால் நம்ப முடியவில்லை.  வியப்பிலாழ்ந்த வியப்பு அவனுக்கு.  தன் அரசனின் வாக்குறுதி கூட அவனுக்குப் பெரிதெனத் தெரியவில்லை. அவனது நண்பன் பிசிராந்தையாரின் செய்கையே பெரிதே பெரிதெனத் தெரிகிறது. பிசிராந்தையாரை நினைத்து ஒரு பாடல் எழுதுகிறான். பாடல் பொதுவியல் திணையில் , கையறு துறையாக எழுதப்படுகிறது.

பொன், துகிர் (பவளம்), முத்து, மணி  என நான்வகை செல்வங்களும், வேறு வேறு தொலைவிடத்தில் கிடப்பவை. பொன் – கடற்கரையில் ; மணி – குறைந்த ஆழத்தில் ; முத்து – பெரும் ஆழத்தில் ; பவளம் – ஆழ்கடலில் கிடைப்பவை. இவை நான்கும் ஒரே நூலில் கோர்க்கப்படுகையில் அது நல்ல மாலையாகிறது என்கிறார் கண்ணகனார். பொன், பவளம், முத்து, மணி நான்கும் இன்றைய தேர்தலுடன் தொடர்புடையவை. ஆமாம், தேர்தலில் நான்வகை வாக்காளர்கள் உண்டு. அவர்கள் பொன், மணி, முத்து, பவளம் போன்றவர்கள். ஒரு கிராம் நகைக்காவும், தட்டு முட்டுச் சாமான்களுக்காகவும் சடுதியில் விலை போகிறவர்கள் பொன் வாக்காளர்கள். உங்களின் பொன்னான வாக்குகளைச் சிந்தாமல் , சிதறாமல்…என்பதன் பொருள் இதுதான். மணி வாக்காளர்கள் – பணத்திற்கு தன் வாக்குகளை விற்றுத் தொலைப்பவர்கள். மணி – MONEY. முத்து வாக்காளர்கள் – சாதியாக ஒன்று திரள்பவர்கள். முத்துஅரையர், முக்குலத்தார், வன்னியர்,  தேவேந்திர குல வேளாளர், கோணார், பறையர், நாடார், பிள்ளைமார்… என. வன்னியர் ஓட்டு வன்னியருக்கே இது நேற்றைய அரசியல். முக்குலத்தார் வாக்கு முக்குலத்தாருக்கே, என்பது இன்றைய வாக்கு அரசியல்.

பவள வாக்காளர்கள் – இவர்களே பெரும் நம்பிக்கைக்குரியவர்கள். இவர்கள் ஆழமான சிந்தனைக்குரியவர்கள். பரந்த மனம் படைத்தவர்கள். இவர்கள் படித்த, நல்ல, சரியான வேட்பாளர்களைத் தேடி வாக்களிப்பவர்கள். இவர்கள் நான்வரின் வாக்கும் யாருக்கு அதிகமாக விழுகிறதோ, அவர்களே வடக்கிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.              தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நரேந்திர மோடி , எடப்பாடி – ஓபிஎஸ் அணியினர்  தனக்கும் அருகில் எப்படியும் இடம் அமர்வார் என எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவர் இராகுல்காந்தி, ஸ்டாலின் தன் சகாக்களுடன் வந்துவிடுவாரென வலம் வருகிறார். பொன், மணி, முத்து, பவளம், வாக்குகள் யாருக்கானதோ..?

 கண்ணகனார் பாடிய வரிகளில் தலையானது ‘சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ என்பதுதான். சான்றோர் என்பவர் யார்? படித்தவர்கள், எது சரி, யாது சரி, யாவர் சரியானவரெனை ஆராய்பவர்கள். அத்தகையவர்கள் சான்றோர் பக்கமே சேர்கிறார்கள். சாலார் என்பவர், சல்லடை போன்றவர்கள். அறிவிலிகள். எதையும் எதிர்காலத்தோடு ஒப்பிட்டு ஆராயத் தெரியாதவர்கள். இவர்கள் அத்தகையவர்களின் பக்கமே சாய்கிறார்கள், என்பதே பாடலின் பொருள். ஆனால், அப்பாடல் சொல்லவரும் செய்தி அது அன்று.

கோப்பெருஞ்சோழன் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன். அவன் காலத்தில் ஏது சாதி, ஏது மதம்…? தன் மக்களுக்கு கெடுதல் நினைத்துவிட்டேனே, மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டேனே, மக்கள் துன்புறும்படியான நிலைக்கு நான் ஆளாகிவிட்டேனே என கவலையுறுகிறான். அதனால் அவனது மானமே போய்விட்டதைப் போலத் துன்புறுகிறான். இதற்கு மேலும் தான் உயிர் வாழ்வதா, என வடக்கிருத்தல் கொள்கிறான்.

 சோழ நாடும் பாண்டிய நாடும் வேறு வேறாக இருக்கலாம், எதிரும் புதிருமாக இருக்கலாம். ஆனால் இரண்டும் மக்களுக்கான நிலம் என்பதை இருவருக்கும் தெரிந்து வைத்திருந்தார்கள். அவன் இறந்து நான் வாழ்வதா, அவன் ஜனநாயம், நான் மக்களாட்சி, ஜனநாயகம் இறந்து மக்களாட்சி பிழைக்குமா, சமயச் சார்பின்மை மழிந்து சமத்துவம் நிலைக்குமா, மடிந்தால் இரண்டும் ஒரு சேரத் தானே மடியும். கோப்பெருஞ்சோழனும் நானும் வேறுவேறு அல்லவே, மக்களை அரவணைப்பதில் இருவரும் ஒருமித்தவர்கள்தானே. ஒருவருக்கொருவர் உவமையாகவும், உதாரணமாகவும் இருந்தவர்கள்தானே. நண்பன் வடக்கிருக்க, நான் தெற்கைப் பார்ப்பதா, என நண்பன் கோப்பெருஞ்சோழனுக்கும் அருகில் உட்கார்ந்துவிடுகிறான் பிசிராந்தையார். அவனது செய்கை கண்ணகனாரை வதைக்கிறது, வியப்பில் ஆழ்த்துகிறது.  பாடுகிறான்,  சான்றோர் சான்றோர் பக்கம் சேர்கிறார்கள்!, ஆனால் சாலார், சாலார் பக்கம் அல்லவா சேர்கிறார்கள்? முந்தைய வரி பெருமைக்கொள்ளவும், பிந்தைய வரி உயிர்க்கொல்லவும் செய்கிறது. சாலார் என்பவர் அமைதியற்றவர்கள். பிறர் அமைதியைக் கெடுப்பவர்கள்.

கண்ணகனாரின் பாடலை அப்படியாக நேரடி பொருள் கொள்ளுதல் கூடாது. அவன் வெளிப்படையாகச் சொல்லாது விட்டுச்சென்ற செய்தியை உள்வாங்கி மனமாற வேண்டிய தேவை, மன்னர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, மன்னர்களைத் தேர்வு செய்யும் வாக்காளர்களுக்கு இருக்கிறது. சான்றோர்,சான்றோர் பக்கமும்; சாலார், சாலார் பக்கமும் சேர்வது வழக்கமாக இருக்கிறது. இது ஆரோக்கியமானது அன்று. ஜனநாயகமும் அன்று. சாலார் சான்றோராக வேண்டும். சான்றோராகி சான்றோருடன் சேர வேண்டும். அப்படியாகச் சேர்ந்துவிட்டால், நாடு எந்நிலை எய்தும் தெரியுமா, ‘அருவிலை நன்கலம் அமைக்கும் காலை, ஒருவழித் தோன்றியாங்கு’

அண்டனூர் சுரா-இந்தியா

அண்டனூர் சுரா

 2,981 total views,  1 views today

(Visited 2,116 times, 1 visits today)
 

2 thoughts on “‘சான்றோர் பாலர் ஆப, சாலார் சாலார் பாலர் ஆகுபவே’- கட்டுரை 02 -அண்டனூர் சுரா”

Comments are closed.