கண்இல் ஊமனும் காமன் நோயும்-கட்டுரை-அண்டனூர் சுரா

கண்இல் ஊமனும் காமன் ( Common ) நோயும் இப்படியொரு தலைப்பிற்காக வெள்ளிவீதியார் பொறுத்தருள வேண்டும். பெண் புலவரென்றால் பெண்ணைத்தான் பாட வேண்டும் என்பதை உடைத்தெறிந்த புலவர் இவர் . ஆணின்   காமம் குறித்து, களவு குறித்து, கலவிக் குறித்து பாடியப் பாடலின் ஒரு வரியை அரசுஇயல் குறித்து பேசும் கட்டுரைக்குத் தலைப்பாகச் சூட்டினால் பாடல் பொறுக்கும், பாடியவர் பொறுப்பார், படிப்பவர் பொறுப்பாரா? பொறுக்கத்தான் வேண்டும்.  பொறுத்தவர் இங்கு பூமி ஆள்கிறார்கள். பூமி ஆண்டு – நாட்டை ஆண்டு – குடும்பத்தையும் ஆள்கிறார்கள். ஆகவே,  பொருத்தருள்க தாயே.. இது தேர்தல் காலம். மொழி பற்று, இனப்பற்று உச்சத்திற்கு எகிறும் காலம். இந்நேரத்தில் கம்பரைக்கூட பாடாமல் இருப்பது திருவள்ளுவருக்கு நல்லது.

                அகமும், அரசியலும் ஒன்றுதான்! வயது பதினெட்டை நெருங்கிவிட்டால், உடன்போக்கு மீது மோகம் கொள்ளும். உடன்போக்கு என்பது இரு வேறு பொருள்களைத் தரவல்லது. காதலன் காதலியை இழுத்துக்கொண்டு ஓடுதல் ஒன்று. மற்றொன்று நியாயம் அநியாயம் பாராது தன் இனம் சார்ந்து, மொழி சார்ந்து, சாதி சார்ந்து ஒரு சார்பாக தன்னை நிறுத்திக் கொள்வது. நன்றெது, தீதெது பிரித்தறிய தெரியா வயது அது!

                தேர்தல் நெருங்கிவிட்டால், கோடை சூரியன் மிதமென எரிக்கும், ஒற்றை இலை  சாமரம் வீசும். மிக்சியும் குக்கரும் விசில் அடிக்கும். முரசு  தாளகதி வாசிக்கும். தாமரைப் பூவில் மாம்பழம் பழுக்கும். சூரியன் கைகளில் சங்கு, சக்கரம் கூடவே பம்பரமும் சுற்றும். சாதி ஜவ்வாதாக மணக்கும், மதத்தில் மரிக்கொழுந்து வீசும். நிரந்தர எதிரியுமில்லை, நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர கொள்கை இல்லை, இல்லை இல்லை! ஜனநாயகத்திற்கு சோதனைக் காலம், ஜனநாயவாதிகளுக்குப் போதாத காலம்! கிங்கிணி வித்துவம், ஜனநாயக தத்துவம்!

                அகம், அரசியல் இரண்டிலும் களவு உண்டு, கற்பு உண்டு. இரண்டிலும் கதவிற்கும் உள்ளே தழுவலும், வெளியே கிசுகிசுப்புகளும் உண்டு. என்னுடன் பேசினார் என்றால் அது கற்பு. என்னுடனும் பேசினார் இது களவு. யாரும் யாருடனும் பேசலாம். அதுவே அந்தரங்கம், அந்தரங்கம் வெடித்தால் அகம் சிரித்து, புறம் சிரித்து புறம்போக்கும் சிரிக்கும்!.

                இரண்டிலும் தலைவி , தலைவனை விடவும் தோழியருக்கே பெரும் பங்குண்டு. தலைவன், தலைவி இருவரில் ஒருவர் உடல் நோகினால் போதும், நலமாடச் சென்றதாகச் சொல்லி உரையாடி, உறவாடலாம். நெருங்க, தொட, கைக்குலுக்க, கட்ட, தழுவ,.. செய்யலாம். ஆனால் இரண்டிற்கும் கற்பு என்கிற ஒன்று, உண்டு உண்டு உண்டு!

                அகத்திணை பாடிய சங்கப் புலவர்கள் பலரும் தோழியரை செவிலிக்கும்,தாய்க்கும், தலைவிக்கும் நிகராக வைத்து பாடு பாடெனப் பாடியிருக்கிறார்கள். சங்கம் வைத்து சாதி வளர்த்த பிற்காலம்தான் பெண்ணுக்கு ஆகாத காலம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தக் காலத்தில் தலைவி என்ன, தாயென்ன, தோழிகளும் கூட கொடுத்து வைத்தவர்களே, சீதைக்கு –  நீலமாலை ; கண்ணகிக்கு – தேவந்தி ; மாதவிக்கு-  வசந்தமாலை ; மணிமேகலைக்கு – சுதமதி. இவர்கள் தலைவிக்கு அந்தரங்கமானவர்கள். கற்பு என்கிற சொல்லின் அர்த்தத்திற்குரியவர்கள்.

                சங்கப் பாடல்கள் தலைவியின் தோழியைப் பாடியதற்கு நிகராக, ஏறக்குறையவோ அல்லது குறைவாகவோ தலைவனின் தோழனைப் பாடவில்லையே, அது ஏனெனப் பலரும் கேட்டவண்ணமிருக்கிறார்கள். தோழியருக்கு நிகராக பாங்கனுக்கும் பங்குண்டு எனக் காட்டியவர்தான் வெள்ளிவீதியார். அது யார் பாங்கன்?, தலைவிக்குத் தோழி; தலைவனுக்குப் பாங்கன்.

                இடித்துரையா மன்னன் கெடுவான் என்கிறது வள்ளுவம். இடித்துரைக்காத தலைவன் கெடுவான் என்கிறார் வெள்ளிவீதியார்!. முன்னது புறத்திணை. பின்னது அகத்திணை. முன்னது நாட்டுக்குக் கேடு. பின்னது குடும்பத்திற்குக் கேடு. நாடும் குடும்பமும் வேறு வேறு அல்ல. இரண்டும் பலருக்கு ஒன்றுதான். விநாயகர் ஞானக்கனியைப் பெறுவதற்காகச் சிவன் பார்வதி தலையில் பனிக்கட்டியை வைத்தார் இல்லையா, என் பெற்றோரே என் உலகம், என் உலகமே என் பெற்றோர். இப்படியாக சிலருக்கு நாடே குடும்பம், குடும்பமே நாடு.

                வெள்ளிவீதியார் அகம் மட்டுமே பாடியிருக்கிறார். அகநானூறு இரண்டு, குறுந்தொகை எட்டு, நற்றிணை மூன்று, அவ்வளவேதான்! திணைகளில் மூன்றுதான், குறிஞ்சி, மருதம், பாலை. மொத்தமே பதிமூன்று பாடல்கள்தான். குறுந்தொகையில் இவர் பாடிய காமநோயை இவர் அளவிற்கு எந்த ஆண் புலவரும் பாடிடவில்லை. இத்தனைக்கும் அவர் பாடியது ஆணின் காமம். இதை மறுத்து பெண்ணின் காமம் என்று வழக்காடுபவர்களும் உண்டு. காமன் என்பதே ஆண், பெண் பேதமற்றதுதானே! அதனால்தானே அது காமன் என்றானது.

                வெள்ளிவீதியார் காமம் எப்படிப் பட்டது, அது எத்தகைய வதையை நடத்துகிறது என்பதற்கு அவர் சொன்னக் கதையை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம், இப்படி மட்டுமல்ல, எப்படியும் எடுத்தாளலாம். சங்கப்பாடலுக்கு இல்லாத விதிமீறல் நவீன கதையாடலுக்கு உண்டுதானே.

                ஒரு தலைவன் இருக்கிறான். அவன் கூட்டணிக்காக ஏங்குகிறான். கூட்டணி சுகமிருக்கிறதே அதன் சுகமே சுகம்தான்.  கூட்டணி சேர்ந்துவிட்டால் யாரும், யாரையும் விழுங்கலாம், யாரையும் எங்கேயும் செரிக்கலாம். என்ன ஒன்று, யாரும் தன்னை விழுங்கிவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும், அவ்வளவேதான்! காமத்திற்கு கண் இல்லை. அரசியலுக்கு கண் உண்டு. இரு கண்கள் இருக்கிறது என்பதற்காக ஒரு தலைவனோ, தலைவியோ இரு வேறு காட்சிகளைக் காண மாட்டார்கள். இரு காதுகள் இருக்கிறது என்பதற்காக இரு வேறு செய்திகளைக் கேட்க மாட்டார்கள். இரு கால்கள் இருக்கிறதென இரு திசைகளில் நடந்திட மாட்டார்கள், இரண்டு கைகள் இருக்கிறதென தலைவன், இரு கூட்டணியுடன் கை நீட்டி உறவாடுகிறான். ஒரு கையில் பழைய கூட்டணி, மற்றொரு கையில் புதிய கூட்டணி.

                தலைவன் நீட்டிய இடம் வலதாகவும் இருக்கிறது, இடதாகவும் இருக்கிறது. கைக்குலுக்கலில் தொடங்குகிறது கூட்டணி, பிறகு அங்கே இங்கே எனப் பிடித்து விரல் பிடிப்பதில் வந்து நிற்கிறது. ஆ…அஆ.இம்…உம்…ஊகூம்..கால் பிடிப்பதை விடவும் விரல் பிடித்தல் அத்தனை சுகமானதென்பதை தலைவன் அறிகிறான், தலைவி அறிகிறாள். முக்கல், முணங்கல், விக்கல். அதனால்தானே இதுவும் அதுவும் அந்தரங்கம்,

                தலைவன் தன்நிலை மறக்கிறான். எந்தக் கையை யார் பிடித்திருக்கிறார்கள், எப்படி பிடித்திருக்கிறார்கள்  தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலைவனுக்கு மயக்கம் வருகிறது. மதி மயக்கம் அன்று. மெய் மயக்கம். இப்பொழுதுதான் தலைவனுக்கு மனுஷீக பந்தமென பாங்கன் தேவைப்படுகிறான்.

                முந்துகிறவர்களுக்கு மட்டுமே சிறப்பிடம், என்பதை அறிந்தவனே பாங்கன்.  தலைவனிடம் ஆரஅமர்ந்து பேசுகிறான். எது  நல்ல கூட்டணி, யார் நமக்கான கூட்டணி, பேசி வர, பேசி முடித்து வர தலைவனின் பேரில் பாங்கன் தூது செல்கிறான். அகப்பொருளில் தூது ஆபத்தானது. யாருக்கு..?. சில நேரம் தலைவிக்கும், பல நேரம் தலைவனுக்கும். அகப்பாடலில் தலைவி கற்புள்ளவள். தன் தலைவனைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன். அரசியலில் தலைவிக்கு நிகர் தலைவன், தலைவனுக்கு நேர் தலைவி. அப்படியானவளிடம்தான் பாங்கன் தலைவனுக்காகத் தூது செல்கிறான். தலைவனின் ஆசை என்னவென்று பாங்கனுக்குத் தெரியாதா என்ன, அப்படித் தெரிந்தால் தானே அவன் பாங்கள். தலைவன் தலைவியிடம் பெரிதாக என்னக் கேட்டுவிடப் போகிறான். சில முத்தங்கள், அவ்வளவே!

                முத்தம் பல வகையானதாக இருக்கிறது, நா முத்தம், கடி முத்தம், இமை முத்தம், உதட்டு முத்தம், நாசி முத்தம், முகப்பரு முத்தம், ஆழ முத்தம், இதழ் முத்தம், காதுமடல் முத்தம், புலி முத்தம், தேன் முத்தம், மென்முத்தம், விரல் முத்தம், தோல் முத்தம், பாதமுத்தம், சப்த முத்தம், பறக்கும் முத்தம், தேவதை முத்தம், மன்மதன் முத்தம், புல்லுருவி முத்தம், சிம்பன்சி முத்தம்,…இப்படியாக. பாங்கன் தலைவியிடம்போய் முத்தம் கேட்டான் எனக் கேட்க முடியுமா?, கேட்டாலும் அவள் கொடுத்துவிட முடியுமா?. அப்படியே கொடுத்தாலும் அதைக்கொண்டுபோய் தலைவனிடம் கொடுத்துவிட மாட்டான். கொடுத்தாலும் தலைவன் அதை ஏற்றிட மாட்டான்.

                இங்கு தூது செல்கிறவன் அரசியல் பாங்கன். இவன் கேட்டுச் செல்வது முத்தம்தான். முத்தம் என்பதற்கு வேறொரு பொருளும் இருக்கின்றன. முத்துக்கொட்டை ( ஆமணக்கின் விதை )க்கு முத்தம் என்றே பெயர். மிக நெருக்கமான உறவினர்கள் விருந்தாளியாக வந்து செல்கையில் விதையென கொடுத்துவிடுவார்கள். மதிப்பற்ற கடல் முத்துகள் முத்தங்களே! ஒரு வீட்டின், ஒரு ஊரின், ஒரு மாநிலத்தின், ஒரு நாட்டின், ஒரு தொகுதியின் மையப்பகுதியை முத்தம் (முற்றம்) என்றழைப்பர். ஐவகைத் திணையில்  மருத நிலம் முக்கியமானத் திணை. விவசாய, பெருங்குடி, உழவ, குடியான, பஞ்சம, பாட்டாளி வர்க்க, ஆண்டான் – அடிமையான, நிலச்சுவான்தர, பண்ணையார், மேட்டுக்குடி, ஏழை, பங்காளர், சாதியர், வெறியர்,..என மக்கள் நெருக்கமாகவும் விரிசலாகவும் வாழும் பகுதி. இந்த மருதநிலத்திற்கு முத்தம் என்றொரு பெயருண்டு. (பார்க்க சூடாமணி நிகண்டு )இத்தகைய முத்தத்தைப் பெற்றுவரவே பாங்கன் தலைவியைத் தேடி தூது செல்கிறான்.

                தூது சென்ற பாங்கன் தலைவியைப் பார்க்கிறாள். தலைவி பாங்கனைப் பார்க்கிறாள். தலைவன்விடு தூது நான், என்றவாறு கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கிறான். ‘ உன் தலைவன் என்னக் கேட்டான்…?’ எனக் கேட்கிறாள் தலைவி. பாங்கன் சொல்கிறான், ‘ முத்தம் கேட்டான்’. இவள் அகப்பாடல் தலைவி அல்ல. அரசியல் தலைவி. அவளுக்கு முத்தத்தின் பொருள் தெரிகிறது, ஆனாலும் அவளுக்குக் குழப்பம் வருகிறது, பாங்கன் சொல்லும் முத்தம் முத்தா (பொன்), மருதநிலமா, முற்றமா,..? என யோசிக்கிறாள். பாங்கன் சொல்கிறான், ‘ முத்தம் கேட்டான், மொத்தமாகக் கேட்டான்…’. ‘ தருகிறேன்…’ என்றாள் தலைவி.

                ‘ எத்தனை தருவீர்?’, ‘ இரண்டு தருகிறேன்..’ , ‘ ஏழு வேண்டும்’ , ‘மூன்று தருகிறேன்’, ‘ ஒன்பது வேண்டும்’, ‘ நான்கு தருகிறேன்’, ‘ பத்து வேண்டும்…’.தலைவிக்கு கோபம் வருகிறது. ‘ போனால் போகிறது ஐந்துதான் தரமுடியும்…’ சொன்னவள், கூட்டணிக் கதவை இறுக அடைக்கிறாள். அவளது செய்கை பாங்கனுக்குக் கோபத்தை மூட்டுகிறது. பேசிக் கொண்டிருக்கையில் எப்படி அடைக்கலாம், என்பது அல்ல கோபம், ஐந்துதான், அதுவும் போனால் போகிறதென்று,  அதுவே கோபம்…!

                தலைவியைப் பார்த்தேன், முத்தத்திற்குப் படிந்தாள், ஆனால் எண்ணிக்கைக்கு படியவில்லை என்கிறான் பாங்கன். தலைவிக்கு ஒரு தலைவன், ஆனால் தலைவனுக்கு ஒரு தலைவி அல்ல. தலைவன் விடுத்த தூதின் பேரில் பாங்கன் இன்னொரு தலைவியை நோக்கி ஓடுகிறான். அங்கேயும் முத்தம் பற்றி பேசுகிறான். மொத்தமாக வேண்டும் என்கிறான். அங்கேயும் முத்தம்! இங்கேயும் முத்தம், அங்கே முத்தம் ஏறு வரிசை, இங்கே இறங்கு வரிசை!

                காலையில் இங்கு,மாலையில் அங்கு. மதியம் இங்கு, இரவு அங்கு. ஒரு நாள் பாங்கன் தெளிகிறான். தலைவனிடம்  தலைவியை ஏற்றி இறக்கிப் பேசி தாழ்த்தி வசைப்பாடுகிறான். நம் பலமென்ன, நம் தோளென்ன, நாம் கெஞ்சுவதா, அவர்கள் மிஞ்சுவதா, தலைவா, தாங்கள் கூடுவது கூடா நட்பு, இது சந்தர்ப்பவாத நட்பு,…

                ‘ பிறகு வழி…?’ தலைவனுக்கு பித்தம் தலைக்கு ஏறுகிறது. ‘ தனித்தே நிற்கலாம்…’ என்கிறான் பாங்கன். தலைவன் உடன்பட மறுக்கிறான். தலைவனின் நினைவுகள் தலைவியை நோக்கியும், அவளுடனான கூட்டணியையும் நோக்கியிருக்கிறது. தலைவியுடன் சேர்வதற்கு தலைவன் ஏங்குகிறான்.

                தலைவனை இடித்துரைக்கிறான் பாங்கன். கூட்டணி வேண்டாம், உன் பலத்திற்கும் , என் பக்க பலத்திற்கும் தனித்தே நிற்கலாம்,..என்கிறான். தலைவனுக்கு மதி மயக்கம் வருகிறது. இத்தனை நாள் கூடிய, தழுவிய, உறவுக் கொண்டாடிய கூட்டணியை இழப்பதா? , அப்படியாக இழப்பது தனக்குத் தகுமா ? அவனது மனம் அலை பாய்கிறது. பாங்கன், அடுத்தடுத்து இடித்த இடியில் தலைவன் , தனித்தே நின்றுவிடலாமென்கிற முடிவிற்கு வருகிறான். இத்தவிப்பு எப்படியாக இருக்கிறது என குறுந்தொகையில்  பாடுகிறார் வெள்ளிவீதியார்,

                இடிக்கும் கேளிர் எனத் தொடங்குகிறது அப்பாடல், இங்கு கேளிர் என்பது பாங்கனைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. இல்லைவே இல்லை, தோழியைத்தான் குறிக்கிறது என்பாரும் உண்டு. வெள்ளிவீதியார் பெண்பால் புலவர் என்பதால் பெண்ணைத் தான்  விளித்திருப்பார் என நினைக்கிறார்கள் போலும், ஏன்  பெண்புலவர் என்றால் பெண்ணைத்தான் பாட வேண்டுமா, 33 விழுக்காட்டிற்குள்தான் நிற்க வேண்டுமா,…?

                கூட்டணி இன்றி தனித்து நிற்கிறான் தலைவன். தனித்து நிற்கிறவனைத் தேடி தலைவி வந்துவிடமாட்டாளா, என ஏங்கியே நிற்கிறான். அவனால் நிற்க முடியவில்லை. எட்டி எட்டிப் பார்க்கிறான்…. தலைவனின் தவிப்பை பாங்கனால் புரிந்துகொள்ள முடிகிறது. தலைவனிடம் பாங்கன் கேட்கிறான், ‘ எப்படி இருக்கிறது இந்த தவிப்பு…?’

                தலைவன் சொல்கிறான், என்னை இடி, இடியென, இடித்துரைக்கும் பாங்கனே, என் குறையை உன் குறையாக கருதி என்னை ஆற்றுப்படுத்துகிறாய்,  நல்லது, ஏற்கிறேன். என் தனிமை எப்படி இருக்கிறது  தெரியுமா,

                ‘ எப்படியாக இருக்கிறது?

                ‘அதையொரு கதையாகச் சொன்னால்தான் உனக்குப் புரியும். ‘சூரியன் தன் பரிவாரங்களோடு தகதகவென எரிக்கிறது.  வெயில் சுடுநீரெனக் கொட்டுகிறது. ஒருவன் அந்த தகிக்கும் வெளியில் தனிமையில் நிற்கிறான். அவன் நிற்குமிடம் வெண்பாறையாக இருக்கிறது.   நிற்பவன் கைகள் இல்லாதவன், வாய் பேச இயலாத ஊமன், அவன் வெண்ணெய்க்கு காவலென நிற்கிறான். தகிக்கும் வெயிலில் , அக்னி வெப்பத்தில் வெண்ணெய் உருகி உருகி ஓடுகிறது. அய்யோ வெண்ணெய் உருகுகிறதே,  ஓடுகிறதே என வெண்ணெய்யை தடுக்க முடியவில்லை. கூட்டி அள்ளவும் முடியவில்லை. ஓடுகிறதே, உருகி ஓடுகிறதே எனக் கூப்பாடும்  போட முடியவில்லை. தடுக்கவும் முடியாமல், தக்க வைக்கவும் முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் காமநோயைப் போல நான் நின்றுகொண்டிருக்கிறேன்….எனச் சொல்லி நிறுத்திய தலைவன் பாங்கனைத் திரும்பிப் பார்க்கிறான், என்னே கொடுமை! பாங்கனைக் காணோம்!, வெண்ணெயோடு வெண்ணெயாக அவனும் ஓடிவிட்டிருந்தான்.

                பின்னே, தலைவனுடன் கடைசி வரைக்கும் நிற்க, பின்தொடர இவன் ஒன்றும் அகத்திணை பாங்கன் இல்லையே, கொடுக்கப்பட்ட பணியைக் கச்சிதமாக முடிக்கும் அரசுஇயல் பாங்கன் அல்லவே! . இந்தப் பாங்கன் யார், ‘ கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல’ கலங்கி நிற்கும் தலைவன் யாரென சொல்லித்  தெரிய வேண்டியது இல்லை!

                இதோ, குறுந்தொகை பாடிய, வெள்ளிவீதியாரின் பாடல் ( 58),

                இடிக்குங் கேளிர்! நுங்குறை யாக 

                நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல

                ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

                கையி லூமன் கண்ணிற் காக்கும்

                வெண்ணெ யுணங்கல் போலப்

                பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

அண்டனூர் சுரா-இந்தியா

அண்டனூர் சுரா

 1,369 total views,  1 views today

(Visited 438 times, 1 visits today)
 

3 thoughts on “கண்இல் ஊமனும் காமன் நோயும்-கட்டுரை-அண்டனூர் சுரா”

Comments are closed.