சோறு என்கிற பதன்-கட்டுரை-அண்டனூர் சுரா

அண்டனூர் சுராசொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் – சீவகசிந்தாமணி பாடல் வரி. நெற்பயிர் கதிர்விடுகையில் பச்சைப்பாம்பைப் போல நிமிர்ந்து நிற்கும். அதுவே கதிர்முற்றுகையில்,  தலை குனியும். கல்விசேர் மாந்தர்களுக்கான உவமை, இந்த ‘ சொல்’.

சொல் என்றால் நெல் என்று பொருள். சொல் என்பதே சோறு என்றானது. சொல் – சொன் – சொன்றி – சோறு எனத் திரிந்தது என்கிறார் புலவர் இரா.இளங்குமரன். நெல்லின் அரசியால் சமைத்த உணவு மட்டுமே சோறு அல்ல. பனஞ்சோறு, தென்னஞ்சோறு, ஈச்சஞ்சோறு, கற்றாழைச்சோறு, கள்ளிச்சோறு  என பல உண்டு.

ஔவை, ஒரு பாடலில் ‘சோழவளநாடு சோறுடைத்து பூமியர்கோன்’ எனப் பாடுகிறார்.  இவ்வரியால் காவிரி பாயும் சோழநாடு பெருமைக்கொள்கிறது. ஆனால் சோற்றைத் தன் பெயராகக் கொண்டவன் சேரனே. சேரமான் பெருஞ்சோறு உதியன், சேர மன்னர்களில் ஒருவன். புறநானூற்றில் முதல் பாடப்படுவோன் இவனே. பாரத போர் காலத்தவன். பாண்டவர் பக்கம் நின்று, அப்பெரும்போர் முடியும்வரை பாண்டவர்படைக்கு உணவளிக்கும் பெரும் கடமையைச் செய்தவன் இவன். ‘பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!’ என, புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவரால் புகழப்படுகிறான்.

கடனில் பெருங்கடன் செஞ்சோற்றுக்கடனே. சோறு அளித்த அரசனுக்கு வேற்று அரசனால் துன்பம் வருகையில், செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்க, அவர்கள் எதிர் அரசனிடம் போரிட்டு, அவன் கவர்ந்துசென்ற பசுக்களை மீட்டுவருகிறார்கள். ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா ’ என்பது திரைப்பட பாடல் வரி.

‘மருமகனுக்கு ஆக்கியச் சோத்தை மகனுக்கு கருமிப் படைச்சாளாம்’ என்பதாக ஒரு பழமொழி உண்டு. விருந்தில் மருமகனுக்கு முதல் இலை. முதல் இலையாகப் பரிமாறப்படுவதே பெருஞ்சோறு. வஞ்சித்திணையின் ஒரு துறை பெருஞ்சோற்று நிலை. பெருஞ்சோறு என்றால் விருந்து என்றுபொருள்.  ‘திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவர்எனப் பெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று’ அதாவது வஞ்சியரசன்,பகைவன் நாட்டைத் தனக்கும் கீழ் கொண்டுவர நினைக்கிறான். அதற்காக தன் படைவீரர்களுக்கு மிகுந்த சோற்றுத்திரளை முறையறிந்து கொடுக்கிறான்.

பாரதவ கதையில், கௌரவர்களிடம் கர்ணம் உண்டது செஞ்சோறு. பாண்டவர்கள் கண்ணனுக்கு அளித்தது பெருஞ்சோறு. பெருந்தலைவர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் என்பது பெருஞ்சோறு. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கொடுக்கும் பொட்டலச் சோறு செஞ்சோறு. இதுதவிரவும் சமச்சோறு, தீண்டாச்சோறு, தண்டச்சோறு, நொந்தச்சோறு என பல சோறுகள் உண்டு. சோற்றைப் பாத்திரத்தின் வழியே வழங்கினால் சமச்சோறு. அதையே கையால் வழங்கினால் தீண்டாச்சோறு. அவமரியாதையாக வழங்க, அதை வாங்கி உண்ணும்  சோறு நொந்தச்சோறு. உணவில் நஞ்சு ஏதேனும் கலந்து இருக்கிறதா, எனச் சோதிக்கும் பொருட்டு தண்டனைக் கைதிகளுக்குக் கொடுக்கும் சோறு தண்டச்சோறு.

சோறு, வாழ்வியலின் மிக உயர்வான சொல். சோறு பலரின் பசியைப் போக்கியிருக்கிறது. பலரின் வயிற்றிலும் அடித்திருக்கிறது. சாதியம் தலை விரித்தாடுகையில், ஆண்டான் அடிமை வேரூன்றி இருக்கையில், சோற்றைக் கஞ்சி என்றே கேட்டிருக்கிறார்கள். சோறு இடு, என்பது மேல் வர்க்கச் சொல்லாகவும், கஞ்சி, அடித்தட்டு சொல்லாகவும் பார்க்கப்பட்டது..

சங்கப்புலவர்கள் பல வகை சோறுகளைப் பாடியுள்ளனர். வெம்சோறு ( சிறுபாணாற்றுப்படை), பெரும்சோறு ( நற்றிணை ), வெண்ணல் வெண்சோறு ( பதிற்றுப்பத்து), வாஅல் வெண்சோறு, புளிவெம் சோறு ( அகநானூறு ), கறிசோறு, ஊன் சோறு, கொழும் சோறு ( புறநானூறு ).

புறநானூறு – 206 ஆம் பாடலில், அதியமான் நெடுமான்அஞ்சியின் கொடை வள்ளலைப் பாடும் ஔவையார், தன்னை அவமதிப்பதாகக் கருதி, வாயிலோயே வாயிலோயே என வாயிற்காவலனை அழைத்து பாடுகிறார். மரம் வெட்டும் தச்சனின் திறமை வாய்ந்த சிறுவர்கள் கோடரியுடன் செல்லும் காடு போன்றது இவ்வுலகம். நான் எங்கே சென்றாலும் அங்கே எனக்கு சோறு கிடைக்கும். இங்கு சோறு என்பது பரிசலைக் குறிக்கும்.  ‘ மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ என்பது அப்பாடல்.

சோற்றிற்கு மேலும் பல பெயர்கள் உள்ளன. அடிசில், போனகம், மூரல், அமலை, அயில், பொம்மல், மடை,மிசை, உணா, புழுக்கல், வல்கி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று,உண்டி, சொன்றி, புன்கம், சரு,அசனம், ஊண், கூழ், ஓதனம், புகா ( சூடாமணி நிகண்டு ).

ஊன் துவை அடிசில் , மாமிசம் கலந்த உணவு. இதுவே இன்று பிரியாணி. போனகம் என்கிற சொல்  மணிமேகலையில் கையாளப்பட்டுள்ளது. நால்வகை போனக மேந்தி. பெண் சமையலர் – போனகத்தி. புழுக்கல் என்கிற சொல் புழுங்கல் அரிசியுடன் தொடர்புடையது. அதாவது இரண்டாம் முறையாக வேக வைத்த சோறு. புழுக்கலா னிமிர்ந்த சோறு ( திருவிளையாடல் புராணம் ). பழஞ்சோற்றை புறநானூறு அயில் என்கிறது. பொங்கிய சோறு, பொம்மல். சரியாக வெந்த சோறு, பதம். கூழாக சமைத்தச் சோறு, மிதவை. மடை – சோறு. சோறு சமைக்குமிடம், மடை. ‘தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்’ என்கிறது திருக்குறள். இங்கு பாத்து என்பது பகுந்து உண்ணும் சோறு. இதையே உ.வே.சா பாத்து என்பதற்கு சோறு என்று பொருள் தருகிறார். இதுதவிரவும் கூட்டாஞ்சோறு, கம்பஞ்சோறு, பழஞ்சோறு, சிறுசோறு,பத்தியச்சோறு, வெறுஞ்சோறு,..என உண்டு.

வயிற்றுக்கு சோறு அளிக்காத எவ்வரசும் வீழும். அங்காடி வழங்கும் அரிசியை கையால் அள்ளிப் பார்க்கும் மக்கள், சைவ அரிசி என்றும் அசைவ அரிசி என்றும் பெயர்ச்சூட்டலை இன்றும் காணலாம். உமி, கல் இருந்தால் அது சைவம். புழு, பூச்சி, வண்டுகள் மொய்த்தால் அசைவம்.

அபிதான சிந்தாமணி, சோற்றில் எண்வகைத் தோஷங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறது. தண்ணீர் கோர்த்துக்கொண்ட சோறு – அஸ்திரிதம். கெட்டுப்போன சோறு – பிச்சிளம். சோற்றில் மயிர் கிடத்தல் – அசுசி. நருக்கு அரிசியால் சமைத்த சோறு – குவதிதம். வெந்தும் வேகாத சோறு – சுஷ்மிதம். காரமான சோறு – தக்தம். விறைத்த சோறு – விரூபம். பழைய நொசநொசத்த  சோறு – அநர்த்துசம்.

கேரளத்தினர் மூளையை ‘தலைச்சோறு’ என்கிறார்கள். உன் தலையில் மசாலா இருக்கிறதா, உனக்கு அறிவு இருக்கிறதா, என்பதைக் கேரளத்தினர் தலைசோறு இருக்கிறதா? எனக் கேட்கிறார்கள்.  மலையாளத்தில் மூளையைக் குறிக்கும் சொல் ‘தலைச்சோறு’. மலையாளத்தின் தலைச்சோறு எது? நம் தமிழ்தான் அல்லவா!

அண்டனூர் சுரா-இந்தியா

அண்டனூர் சுரா

(Visited 374 times, 1 visits today)