எள் இருக்கும் இடன்-இலக்கியக் கட்டுரை-அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா‘எள்நிறைந்த நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை ’.எள் மிகச்சிறியது. சிவனோ மிகப்பெரியவன். எள்ளைச் சிவனுக்கு உவமையாகப் பாடியுள்ளார் ஐயனாரிதனார். எள்ளினுள் எண்ணெயானது எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்து நிற்கும். அதனைப் போன்று அனைத்துப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்பவன் சிவபெருமான், என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.

எள், அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இரண்டையும் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் உவமையாகக் கையாண்டுள்ளார் தொல்காப்பியர். ‘ எள்ளின் றாகில் எண்ணெய் இன்றே எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல் இலக்கியத்தி னின்று எடுக்கப்படும் இலக்கணம்’.

எள், இலக்கிய, இலக்கணங்களில் மட்டும் அல்ல. வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒரு வித்து. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதைக்கு, சிறுமீனின் சினையை உவமையாகக் காட்டியிருப்பார் ஔவையார். தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட மிகச்சிறிய வித்து ஆலின் விதைதான். அதற்கு அடுத்தது, எள். ‘எட்பகவு அன்ன சிறுமைத்தே யாயினும்/உட்பகை உள்ளதாம் கேடு’ என்கிறது வள்ளுவம். எள் சிறியது. அதை இரண்டாகப் பகுந்தால் எத்தனை சிறியது, அந்தளவு சிறிய உட்பகையும் உறவைக் கெடுக்குமாம்.

எள் , எண், எட் என்பதற்கு ‘ மிகச் சிறிய’ என்று பொருள். எள், நீட்டல் அளவைக்கான குறியீடு. எள்ளைக் கொண்டே எள்ளினும் சிறிய பொருட்களை அளந்திருக்கிறார்கள். ஒரு மன்னன் ஒரு இலை வணிகப் பெண்ணைச் சந்தித்திருக்கிறான். அவளது இலை அறிவைச் சோதிக்கும் பொருட்டு, புதிர் விடுத்திருக்கிறான். ‘எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த இலை வணிகப் பெண்ணே, எள்ளினும் சிறிய இலை என்ன இலை?’ அதற்குப் பதிலாக அவளொரு புதிரை விடுத்திருக்கிறாள். ‘பூவிலே பிறந்து பூவிலே வாழும் பூவுலகு ராசாவே, பூவிலே மூவண்ணப்பூ பூக்கும் செடி எதுவோ, அதுவே உன் கேள்விக்கு விடை ’ என்றாள். வேடதழை செடி. இதன் இலை எள்ளைப் போன்றும் எள்ளினும் சிறியதாக இருக்கும்.

எள் – பல சொற்களுக்கு வேர்ச்சொல்லாக இருக்கிறது. எள்ள, எள்ளறு, எள்ளப்படு, எள்ளல், எள்ளலன், எள்ளலான், எள்ளார், எள்ளி, எள்ளிய, எள்ளினும், எள்ளீயும், எள்ளு, எள்ளுக, எள்ளுதல், எள்ளுநர், எள்ளுபு, எள்ளும், எள்ளுமார், எள்ளுவாய், எள்ளுற்று,..ஆகிய  சொற்கள் எள்ளை வேர்ச்சொல்லாகக் கொண்டவை.

நகைப்பில் நான்கு வகை உண்டு. எள்ளல், பேதைமை, இளமை, மடன். இதில், வள்ளுவர், உருவுக் கண்டு எள்ளாமை வேண்டும், என்கிறார். எள் மிகச் சிறியது. அதன் உருவத்தைக் கொண்டு நகையாடிவிடக் கூடாது. எள் நைந்து கிடக்கும் அதன் எண்ணெய் நகையாடியவரையும் வழுக்கி விழ செய்துவிடக்கூடியது.

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளைத் தின்ன வேண்டும், எள்ளுத் தின்று மலம் கட்டிக்கொண்டால், அதே எள்ளின் நெய் மலத்தை உடைக்கும் மருந்து. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் வரும், ‘அண்டகா கசம் அபூக குகும் திறந்திடு சீசேம்’ இங்கு சீசேம் என்பது எள்

எள்ளி ( நகைப்புரிதல், அவமானப்படுத்தல்) / ஏழைக்கேற்ற எள்ளுருண்டை ( மலிவு) / எள் போட இடம் இல்லை ( இட நெருக்கடி) /  எள்ளுப் போட்டால் எண்ணெய் ஆகிவிடும் ( கூட்ட நெரிசல்) / எள் என்றால் எண்ணெய்யாக இருக்கிறவன் ( அதிவேகம்) / எள் ஏன் காயுது, எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு / எள்ளில் நெல் கிடந்தால் நெல்லே பதர். / எள் போட்டால் எள் விழாது ( கூட்ட நெரிசல்) / எள் விதைத்த காட்டில் கொள் முளையாது / எள் விதைத்தால் துவரை விளையுமா?  / எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல ( இரகசியம்) இவை யாவும் எள்ளுடன் தொடர்புடைய சொற்றொடர்கள்.

சூடாமணி நிகண்டு எள், நூ, எண் ஆகிய மூன்று பெயர்களை எள்ளுக்குத் தருகிறது. சங்கக்காலத்தில், எள் கைம்பெண் வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட வித்தாக இருந்திருக்கிறது. கணவனை இழந்த பெண்களுக்கு எள் துவையலும் வேளைக்கீரையும் உணவுப் பொருளாக இருந்திருக்கிறது. வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை ( புறநானூறு). ஓலையூர் தந்த பூதப் பாண்டியன் இறந்தவுடன், அவனுடன் சேர்ந்து உடன்கட்டை ஏற முயல்கிறாள்  பெருங்கோப்பெண்டு. அவளைத் தடுத்து நிறுத்தும் மக்களைப் பார்த்துச் சொல்கிறாள் அவள்,  ‘ பல்சான்றீரே! என்னை எள்ளுத் துவையலும் வேளைக்கீரையும் சாப்பிடும் பெண் என்று நினத்துவிட்டீர்களோ?’.

சிதட்டுக் காய் என்றொன்று எள்ளில் உண்டு. அதிக மழை பெய்தால், காயாக இருக்கும் எள்  பதனழிந்து, உள்ளீடின்றிப் போகும். உள்ளீடில்லாத காய்களே  ‘சிதட்டுக் காய்’ . இக்காயைப் பாடும்  குறுந்தொகை பாடல் ஒன்றுண்டு. ‘பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய  / சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயற் கடைநாள்’.

 எள்ளுக்கு, கௌவை என்றும் கருங்காய் என்றும் பெயருண்டு. ‘கௌவை போகிய கருங்காய் பிடிஏழ் / நெய்கொள ஒழுகின, பல்கவர் ஈர் எண்’. எள் அறுவடைசெய்து, அதைத் தலைகீழாகக் கவிழ்த்து வைப்பர். வெயிலில் அதன்காய் வெடித்து, சிதறும். அதைக்கூட்டி ஒன்று சேர்த்ததன் பிறகு, மழை பெய்தால், வாசல் சோப்பு நுரையைப் போல பொங்குவதுடன் வழுக்கவும் செய்யும். அம்மண்ணை அள்ளி, தலையில் தேய்த்துக் குளிப்பர்.

ஆற்றுக் கரையோரங்களில் இன்றும் உவர்மண் கிடைப்பதுண்டு. அதை சவுக்கார மண்,உப்பு மண் என்று சொல்வர். சோப்பு வருகைக்கு முன் குளிக்க, ஆடைகள் துவைக்க உவர்மண்தான். அந்த மண் அழுக்கைப் போக்கும்.ஆனால் நுரை தராது. அதற்காக, அம்மண்ணுடன் எள்ளின் இலையைச் சேர்த்து, ஊற வைத்து, கரைத்து, குளிக்கையில் நுரையுடன் சேர்த்து அழுக்கையும் போக்கும். சோப்பு, சவுக்காரம் தயாரிப்புக்கு முன்னோடியானது எள்.

சனி நீராடு என்பதற்கு வாரத்திற்கு ஒரு நாள் எண்ணெய்த்தேய்த்துக் குளி என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. தொடக்கத்தில் எள்நெய் உடையோர் எண்ணெய்த் தேய்த்தும், இல்லாதோர் எள்ளின் இலைத் தேய்த்துக் குளித்திருக்கிறார்கள். எண்ணெய், என்கிற சொல் எள்ளிலிருந்து பிறந்ததே.

சங்கப்புலவர்களைத் தொடர்ந்து எள், கம்பரையும் விட்டுவைக்கவில்லை. கம்பராமாயணத்தில் இராமனின் அம்புக்கு இலக்காகி இராவணன் இறந்துகிடக்கிறான். அவரது மனைவி மாண்டோதரி கணவனின் உடம்பைப் பார்க்கிறாள். எள் விழ இடமில்லாத அளவிற்கு உடம்பெங்கும் இராமனின் அம்புத் துளைகள். வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த / திரு மேனி, மேலும் கீழும் /  எள் இருக்கும் இடன் / இன்றி, உயிர் இருக்கும் / இடன் நாடி, இழைத்தவாறோ?

எள் எள்ளும் நெல்லும் கலந்த திவசத்தில் எள்ளுக்குள் நெல் என்பது பதர். போர்க்களத்தில் எள் கிடந்தால், போர் புரிவதைக் காட்டிலும் எள்ளைப் பொறுக்குவதே சாலச்சிறந்தது. ஏனென்றால், நெல் பசியைப் போக்குவது, எள் பஞ்சத்தைப் போக்க வல்லது.

அண்டனூர் சுரா-இந்தியா

அண்டனூர் சுரா

 

 

(Visited 348 times, 1 visits today)