பிணவாசனைக் கிராமம்-சிறுகதை-அண்டனூர் சுரா

அவ்வூரின் மழைக்குப் பிந்தைய மண் வாசனை, மண் சட்டியில் மனிதர்களைக் கொட்டி துடுப்புக்கொண்டு வறுத்தால் வரும் கருகிய பிணவாசனையை ஒத்திருந்தது. தானொரு தேசியப் பிறவி என்பதை நிரூபிக்க  அத்துர்நாற்றத்துடன் கூடிய வாசனையைச் சுவாசிப்பது தேவையான ஒன்றாக இருந்தது.

மனிதன் அழுகினால் வருவது துர்நாற்றம். அதேயே வறுத்தால் கிடைப்பது மணம் என்பதாக தேசியவாதிகள் பிணவாசனைக்கு குடைப்பிடிப்பதாக இருந்தார்கள். பிணம் வாசனையே நம் தேசத்தின் வாசனை என்கிற பிரசங்கம் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருந்தது. வாசனை மீதான உரிமை மாநிலப் பட்டியலில் இருக்கிற வரைக்கும்தான் அவ்வாசனைக் குறித்து யாரும் குரல் எழுப்பவோ,  கண்டனம் செய்யவோ இயலும். அதுவே தேசியப் பட்டியலில் சேர்த்துவிட்டால் குரலாவது, எழுப்புவதாவது…? மக்கள் மெல்ல பிணவாசனையை நுகர பழகியிருந்தார்கள்.

முத்துக்கருப்பன், பொசுங்கிய பிணநாற்றத்துடனாகக் காற்றை நாசியை இறுகப் பொத்தி சுவாசித்தவராக இருந்தார். அதை சுவாசிக்கையில் அவருக்கு மூச்சுத் திணறலும், நெஞ்சடைப்பும் வந்தது.  அக்காற்று அவருக்கு மெல்ல பழகிவிட்டிருந்தது என்றாலும் கண்களைப் பறிக்கும் ‘பளிச்’ வெளிச்சம் அவரைத் தொடர்ந்து நடுங்கச் செய்திருந்தது.

வெளிச்சம் என்றாலே அவர் தொடை நடுங்குவதாக இருந்தார்.  சூரிய ஒளியைக் கண்டு நடுங்கலாம், நெருப்பின் திவாலைகள் பார்த்து பதறலாம். நட்சத்திரங்களைப் பார்த்து  கண்டு நடுங்கினால், என்னவென்று சொல்வது…? வளர்பிறை வெளிச்சத்திற்குக்கூட அவர் நடுங்கவே செய்தார். அவர் வீட்டிற்குள் இடுங்கி , ஒடுங்கி இரண்டு மாதங்களாகி விட்டன. அவருடைய அன்றாட வாழ்வின் யாழ் நரம்பு அறுந்து , குறுக்கும் நெடுக்குமாகப் பயத்தை மூட்டியிருந்தது. சாவின் தவணையில் அவர் வாழ்பவராக இருந்தார்.

ஒரே ஒரு அறையுடையது அவருடைய வீடு. அதற்குள் கடைசி கடைசியாக நுழைந்தவர் அதற்குப்பிறகு அவர் அதற்குளிலிருந்து வெளியே தலைக்காட்டுபவராக இல்லை. அவருக்கான ஒரு வேளை சாப்பாடு அவரது குடிலுக்குள் வருவதாக இருந்தது. தாகம் எடுக்கையில் அவர் சாப்பிடுவார். பசிக்கையில் சுருட்டுக்குடிப்பார். மூக்கு ஒழுகினால் எச்சில் துப்புவார். ஒன்றுக்கு வந்தால் முழு வேட்டியையும் தூக்கிவிட்டுக்கொண்டு உட்காருவார். இப்படியாகத்தான் அவரது அன்றாடம் இருந்தது.

அவர் எவ்விடத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறாரோ அதே இடத்தில் வெற்றிலை எச்சிலைத் துப்புவராக இருந்தார். மலம் பேழவும், சிறுநீர் கழிக்கவும் கூட அதே இடம்தான். சாவின் மீதான பயத்தால் அவர் அப்படியாக செய்துகொண்டிருந்தார். ஒளியும், கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும் அவரை தன்னிலை மறக்கடித்திருந்தது.

அவரது கனிந்து விரிந்த வயோதிகம் முகத்தில் சுருக்கங்களாக ஓடிக்கிடந்தது. இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்த மீப்பெரும் வாழ்வில் ஒரு பெரும்புள்ளி கரும்புள்ளியாக விழுந்திருந்தது. பலரும் வாழ்வதற்குகந்த அக்குடிசையில் அவர் மட்டுமே வாழ்பவராக இருந்தார். தேங்காய் எண்ணைய் குளிர்காலத்தில் படிந்து அடியில் உறைந்துவிடுவதைப்போலதான் அவர் அக்குடிசையின் ஒரு  மூலையில் உறைந்துகிடந்தார்.

பனை மட்டையால் வேயப்பட்டக் குடிசை அது. அக்குடிசையைச் சுற்றிலும் பனை மட்டைகளே சுவராக இருந்தது. குடிசைக்குள் உள் நுழையவும், வெளியேறவும் ஒரு சணல் சாக்கு தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அக்குடிசைக்குள் பொட்டு வெளிச்சமில்லை. இருட்டு என்பது மிகக் குறைந்த ஒளி. ஆனால் மிக மெலிந்த ஒளியைக் கூட இருட்டை விரட்டும் வெளிச்சமாகவே பார்த்துப் பயங்கொள்பவராக இருந்தார். விடிகாலை ஐந்து மணி வெளிச்சம் கூட அவரை பயமூட்டவே செய்திருந்தது. அறுபதாயிரம் அடி ஆழ்க்குழாய்க் கிணற்றின் கும்மிருட்டு வகை இருட்டு ஒன்றே அவருக்கு அப்போதைக்குத் தேவையாக இருந்தது. அவ்விரட்டை அவர் கண்களை இறுக்கி மூடிக்கொள்வதன் மூலம், தனக்குத்தானே உருவாக்கிக்கொள்பவராக இருந்தார்.

முகவாய்க்கட்டையை முழங்கால்களுக்கு கொடுத்து கைகளால் இரண்டு கால்களையும் இறுக அணைத்து பூனைக்கு ஒடுங்கும் எலியைப் போல உறைந்துபோயிருந்தார். தன் இனத்தின் தேசிய வசிப்பிடமான மரணக்குழியைப் போல தன் குடிலை இறுக அடைத்து அதற்குள் பதுங்கிகொண்டிருந்தார்.

முத்துக்கருப்பனுக்கு வயது எழுபது. தேசிய சராசரி வயதை விடவும் ஒன்றிரண்டு வந்து கூடுதல். இந்த வயதிலும் அவர் உழைக்க, வியர்க்க, நட, உழ,..என இருந்தார். தேக்கு மரமாட்டம் இருக்கிற என் ஆகிருதியை நெருப்பிடம் கொடுக்க இருந்தோமே…என்கிற சமீபகால பயமே அவரை விடாமல் மிரட்டிக்கொண்டிருந்தது.

அவருக்கு மட்டுமா, அப்பயம்…? அவ்வூரிலிருந்தப் பலருக்கும் அப்பயம் இருக்கவே செய்தது. அப்பயத்தை போக்கிக்கொள்ள ஆளும் அரசு வாலிபர்களுக்கு இலவச இணையதள வசதிக் கொடுத்திருந்தது. அதன்வழியே பாலானப் படங்களைப் பார்த்து பயத்தைப் போக்கிக் கொள்பவர்களாக இருந்தார்கள். பெண்களுக்கு கிராமம் மீதானப் பயத்தைப் போக்க, குழந்தைகளைப் பேயாகவும், வில்லன் வில்லியாகவும் காட்டும் தொடர்கதைகளைப் பிரத்யேகமாக எடுத்து தொலைக்காட்சி திரையில் கட்டிப்போட்டிருந்தார்கள். அவ்வூருக்குள் ஒன்றுக்கு இரண்டு கடையென பிராந்திக் கடைகளைத்  திறந்து விட்டிருந்தார்கள். காலத்தின் ஓட்டத்தில் அவ்வூர் மக்களுக்குப் பிணநாற்றம் எது, பிராந்தி நாற்றம் எது எனப் பிரித்தறிய முடியாதளவிற்கு அவர்களின் நாசிகள் பழகி விட்டிருந்தன.

அவ்வூரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அவ்வூருக்குப் பெண் கொடுக்க முன்வரவில்லை. சம்மதம் போட்டவர்கள் கூட பந்தத்தை அறுத்துக்கொண்டு தெறித்திருந்தார்கள். இதற்கு முன்பு பெண் கொடுத்தவர்கள் போயும், போயும் அவ்வூர் மாப்பிளைக்கு தன் பிள்ளையைக் கொடுத்தோமே, என்று வயிற்றிலும், மார்பிலும் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலைபவர்களாக இருந்தார்கள்.

அவ்வூர் இளைஞர்கள் அதிகமாக ஒன்றுக்கூடுமிடம் அவ்வூரின் பேருந்து நிறுத்த நிழற்குடையாக இருந்தது. அவ்வூரைப் பார்வையிட பத்திரிகையாளர்கள் ஒரு நாள் வந்தார்கள். அவர்கள் கூடி, கலையுமிடம் பார்க்க முற்றுகை போலவும், போராட்டம் போலவும் தெரிய அவ்வாறு எழுதிச் சென்றார்கள். ஊரின் முக்கியஸ்தர்களிடம் பேட்டி எடுத்தார்கள். பேட்டிக் கொடுப்பவர்கள் நடுக்கத்துடன் கொடுப்பவர்களாக இருந்தார்கள். அந்நடுக்கத்தை பத்தரிக்கையாளர்கள் பேட்டிக் கொடுக்கையில் வரும் சராசரி நடுக்கம் என்பதாகவே எடுத்துக் கொண்டார்கள்.

ஒரு மாதக் காலம் ஒரே இடத்தில் உட்கார, கூட,..என இருந்தவர்கள் மெல்ல நடமாடத் தொடங்கினார்கள். பிறகு எத்தனை நாட்களுக்குத்தான் ஒரே இடத்தில் ஒடுங்கிக் கிடப்பதாம். கடைக்கன்னிகளுக்கு வேலைக்குச் சென்றால் தானே வயிற்றைக் கழுவ முடியும்…? அவர்களின் நடமாட்டத்தைப் பார்த்த பத்திரிகைகள் அவ்வூரின் பெயரைப் பெரிய எழுத்தில் தலைப்பிட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக செய்திகள் வெளியிட்டன.

கடை வைத்திருந்தவர்கள் கடையைத் திறந்து வியாபாரம் நடத்தவும், வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்கள் வேலைக்குச் சென்றுவர பழகியிருந்தாலும் அவர்கள் ஊருக்குள் திரும்பி வருகையில் அக்னிப்பிரவேசத்தின் போது சீதைக்கு இருந்த பதட்டம் அவர்களுக்கு வரவே செய்தது.

ஊர்வாசிகள் மெல்ல அவ்வூரிலிருந்து இடம் பெயரவும், சிலர் எப்பொழுது கிளம்பலாமெனத் தேதி தேடுபவர்களாக இருந்தார்கள். முத்துக்கருப்பன் ஒருவர்  மட்டும் அக்குடிசைக்குள் முடங்கி கிடப்பவராக இருந்தார். இதயம் தடதடக்க அவருக்கானப் பொழுது ரயில் பெட்டிகளைப் போல கடந்துகொண்டிருந்தது.

முத்துக்கருப்பன் வயதை ஒத்தவர்கள் அவ்வூரில் யாரும் இருந்திருக்கவில்லை. அவர், இருபது வருடங்களுக்கு முன்பே மனைவியை இழந்துவிட்டவராக இருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இரண்டு மகளையும் ஆற்றுப் பாசனம் ஊரில் கல்யாணம் முடித்து, பேரன் பேத்திகள் எடுத்திருந்தார். அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை ஒருவர் மாறி ஒருவரென அக்குடிசைக்கு வந்து அப்பாவிற்கு பணிவிடை செய்துவிட்டு செல்பவர்களாக இருந்தார்கள். அவருக்கானப் பணிவிடை என்பது அவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் கழிக்கும் மலத்தை அள்ளி சுத்தம் செய்வதும்; ஒரு நாளைக்கு மூன்று முறை கழிக்கும் சிறுநீரை சாணியைக் கொண்டு துடைத்து எறிவதுமாக இருந்தன. அவ்வூரின் பிணம் கருகல் நாற்றத்தின் முன் அவருடைய மலமும், சிறுநீர் நாற்றமும் பரவாயில்லை என்றளவில் இருந்ததால் அவர்கள் நாசியை பொத்தவோ, முகத்தைச் சுழிக்கவோ இல்லாமல் தந்தைக்குச் செய்யும் பணிவிடையில் அதீத ஈடுபாட்டைக் காட்டுவதாக இருந்தார்கள்.

அவருடைய ஒரே மகன் அடுத்த ஊரில் மனைவி , மக்களுடன் குடியேறியிருந்தான். அவனது இரண்டு மகன்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிசைக்குள் நுழைந்து இட்டலி, சோறு, பழையக் கஞ்சி இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தாத்தாவிற்கு அருகில் வைத்துவிட்டு ஓடிவிடுபவர்களாக இருந்தார்கள். அவர் பசி வந்தால் மட்டுமே அதை எடுத்து சாப்பிடுபவராக இருந்தார். அவரால் முன்பு போல சாப்பிட முடிந்திருக்கவில்லை. எந்நேரமும் வயலில் உழுதுக்கொண்டும், வரப்பு வெட்டிக்கொண்டும் இருந்தவர் வீட்டிற்குள் முடங்கிவிட்டதற்குப் பிறகு பசிக்க வேண்டிய வயிறு அதன் வேலையை அடியோடு நிறுத்தியிருந்தது.

அவரது குடிசையிலிருந்து பார்க்கையில் அவ்வூரை நடுங்கச் செய்யும் ஆழ்க்குழாய் கிணறு அவருக்குத் தெரிவதாக இருந்தது. ஆறாயிரம் அடிகள் கொண்ட கிணறு அது. அக்கிணற்றின் அதிர்வு பத்து கல்தூரம் வரைக்கும் இருந்தது. ஆழ்க்குழாய் கிணற்றையொட்டியுள்ள கிணறுகளில் குடிநீர் நிறமாறியிருந்தது. தண்ணீருக்குள் வாழ்ந்திருந்த தவளை, மீன், பாம்புகள் இறந்து மிதப்பவையாக இருந்தன. கிணற்று நீரின் நிறம் பார்க்க வெற்றிலை எச்சில் அளவிற்குச் சிவந்திருந்தது.

வெறும் சோதனையைத் தவிர வேறொன்றுமில்லை, எனச் சொல்லி துளைக்கப்பட்டிருந்த அக்கிணற்றில் அவசரம் அவசரமமாக இரும்புக் குழாய்களை இறக்கி அதன் மேல் பெரிய மூடியைக்கொண்டு இறுக மூடி சென்றுவிட்டதன் பிறகு அந்த இடம் யாராலும் நெருங்க முடியாத இடமாக மாறியிருந்தது. ஐந்தறிவு கொண்ட ஆடு, மாடுகளை அப்பகுதியின் வழியே மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு செல்கையில் மறந்தும் அக்கிணற்றுப் பக்கம் கால்களை வைக்காதளவிற்கு கால்நடைகள் எச்சரிக்கையாக  இருந்தன. நான்கறிவு கொண்ட காக்கைக் குருவிகள் ஆழ்கிணற்றின் வழியே பறந்து சென்று எத்தனையோ நாட்களாகி விட்டன. ஓரறிவு கொண்ட புல், பூண்டுகள் அவ்விடத்தில் முளைத்திருக்கவில்லை. வயோதிகரின் தலையில் விழும் வழுக்கை அவ்விடத்தில் விழுந்திருந்தது. ஆழ்க்குழாய் கிணற்றிலிருந்து நாசியை அடைக்கும் படியாக வந்திருந்த நாற்றம் சுடுகாட்டிலிருந்து வரும் பிணம் எரிந்த சாம்பலின் நாற்றத்தை ஒத்ததாக இருந்தது.

முத்துக்கருப்பனுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் ஆறாயிரம் அடி ஆழ்த்துளைக் கிணற்றையொட்டிதான் இருக்கிறது. ஐந்து தலைமுறை கால நிலம் அது. அந்நிலத்தைக் கொண்டுதான் அவரது மூதாதையர்கள் ஐந்து தலைமுறையாக வயிற்றைக் கழுவிக்கொண்டு வந்தார்கள். உயிர் வாழ்தலுக்கும், மானத்தோடு வாழ்வதற்கும், அடுத்தப்பட்டத்தில் தந்துவிடுகிறேனெனச் சொல்லி கடன் வாங்குவதற்கும் அந்த இரண்டு ஏக்கர் நிலம் போதுமானதாக இருந்தது.

முத்துக்கருப்பனின் பால்க்குடி வயதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் மிச்சச் சொச்சக் காலங்கள் அந்த இரண்டு ஏக்கர் நிலத்திற்குள்தான் அடைபடும். பனிரெண்டு வயதில் அவர் கையில் எடுத்திருந்த மண்வெட்டியை தள்ளாடும் எழுபது வயதிலும் அதை கீழே வைக்காதவராக  இருந்தார். இத்தள்ளாடும் வயதிலும் அவர் வயலுக்குச் செல்லவும், உழவு செய்யவும், வரப்பு வெட்டுவதுமாக இருந்தார்.  முத்துக்கருப்பன் வயதைப் பொருட்படுத்தாமல் நிலம் ஒன்றே கதியென்று இருந்தார். அந்நிலத்தை வைத்துதான் அவர் இரு மகள்களையும் திருமணம் செய்தும் முடித்தார்.

ஒரு நாள் விடிகாலை,  ஐந்து மணி வாக்கில், தலையில் பெரிய முண்டாசைக் கட்டிக்கொண்டு கோமணத்துடன் நின்றுகொண்டு ஒரு கொட்டு மண் வெட்டுவதும், வரப்பில் சாத்துவதும், பெருமூச்சு வாங்குவதும், கொஞ்ச நேரம் நிற்பதும், கையில் எச்சில் துப்பி கைகளை உராய்த்துக்கொள்வதும், திரும்பவும் வரப்பைக் கழித்து வரப்பில் சாத்துவதுமாக இருந்தார். அப்பொழுதுதான், நிலத்தைச் சுற்றியிருந்த மரங்களில் உட்கார்ந்திருந்த காக்கைகள் ஒரே மூச்சில் எழுந்து பறப்பதாக இருந்தன. இரண்டு காக்கைகள் செத்துக் கருகி கீழே விழுந்திருந்தன. காக்கையின் திடீர் பறத்தலும், கரைதலும், கருகலும் அவருக்குள் கலவரத்தை மூட்டியிருந்தது. நுரையீரலைப் பொசுக்கும்படியான ஒரு துர்நாற்றம் அவரது நாசியை அறுக்கத் தொடங்கியது. தலையில் கட்டியிருந்த உருமாக் கட்டை அவிழ்த்து நாசியை இறுகப் பொத்திக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தார். அடுத்தடுத்த வயலில் நின்றுகொண்டிருந்தவர்கள் நாசியை இறுகப் பொத்திக்கொண்டு வயலிலிருந்து தப்பிக்கப் பிழைக்க தெறித்து ஓடுவதாக இருந்தார்கள். முத்துக்கருப்பன் அவர்களைப் பார்த்ததும் பயம் அவருக்குள் தரைத்தட்டியது. அவரையும் அறியாமல் அவருடைய கால்கள் தானியங்கி உறுப்பாகி விட்டிருந்தது. மெல்ல தட்டுத் தடுமாறி நடக்க மட்டுமே முடிந்த அவர் கால்களை வெட்டி எறிவதைப்போல ஓட்டமெடுத்தார்.

மொத்த ஊரையும் எரித்து விடும்படியான தீ வட்டம் அந்த ஆழ்க்குழாய் கிணற்றிலிருந்து வெடித்து மேலே எழும்பி இருந்தது. கை, கால் முளைத்த பூதம் எழுந்து நடந்து வருவதைப்போலதான் அத்தீ படலம் சுற்றிலும் பரவியிருந்தது. மொத்த ஊரையும் மொத்தமாக துடைத்தெடுக்கும் படியாக  பெருக்கெடுத்த அப்பூதத்தீ அவரை ஒரே அறையாக அறைந்து கீழே சாய்த்து பொசுக்கி விடும்படியாக விரட்டிக்கொண்டு வந்தது.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு ஓடி நிறுத்தியிருந்த  ஓட்டம் அது. மறந்திருந்த ஓட்டத்தை மீட்டு திரும்பவும் ஓடி வருவதாக இருந்தார். அவர் வீட்டிற்குள் வந்து விழுகையில் பேச்சு அறுந்து, மூச்சு நாசிக்கும் மேல் நிலைக்குத்தி நிற்பதாக இருந்தது. அவரது அருணாக்கொடியில் தொடுக்கியிருந்த  கோமணம் அவரையும் அறியாமல் நழுவிவிட்டிருந்தது. நிர்வாணமாக ஓடி வந்த அவர் குடிசைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டதும் அவரைச் சூழ்ந்த அடர் இருட்டும், மூன்று பக்கம்  பனை மட்டைகளாலான சுவரும் அவருக்கு ஆடையாகியிருந்தது. அதற்குப் பிறகு அந்த இருட்டு மட்டும் அவருக்குத் தேவையான ஒன்றாக இருந்தது.

மறுநாளின் விடிகாலை வெளிச்சம், அவருக்கு ஆழ்க்குழாய் கிணற்று தீச்சுவாலைப் போலவே தெரிந்தது. கூரையின் வழியே உள் நுழையும் கதிர்கள், விளக்கொளி, மின் விளக்கு, சமைக்க பற்ற வைக்கும் நெருப்பு,…இவை யாவும் அவரைப் பயமூட்டவே செய்தது. இத்தகைய வெளிச்சத்தை யாரோ ஒருவர் தன் மீது ஏவி விடுவதாகவே நினைத்தார். அவர் பகலில் கண்களை மூடிக்கொண்டு, தரைக்குள் முகத்தைப் புதைத்துகொள்ளவும், இரவில் கண் விழித்திருப்பவராகவும் இருந்தார். அமாவாசைக்குப் பிறகான மூன்றாம் பிறை வெளிச்சம் கூட அவரை குடல் நடுங்கவே செய்தது. யாரேனும் அவரது குடியிருப்பின் வழியே டார்ச் விளக்கு அடித்துகொண்டு நடக்கையில் அவ்வெளிச்சம் அவரை திடுக்கிடச் செய்வதாக இருந்தது.

ஊரே அக்கிராமத்தை விட்டு வெளியேறியதற்குப் பிறகும், அவர் மட்டும் அக்குடிசையில் தனித்து வசிப்பவராக இருந்தார். அவரை நலம் விசாரிக்க வரும் உறவினர்கள் அந்த அடர் இருட்டு வீட்டிற்குள் நுழைந்து துருவிப் பார்த்து அவரைப் பயத்திலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குபவராக இருந்தார்கள். அவர்களின் முயற்சி ஏமாற்றத்தையே கொடுத்திருந்தது.

ஒரு நாள் அதிகாரி மட்டத்தினர் அவ்வூருக்கு வந்திருந்தார்கள். அந்த ஆழ்குழாய் கிணற்றைச் சுற்றியுள்ள சேதாரங்களைக் கணக்கெடுத்தார்கள். குறுக்கும் நெடுக்குமாக அளந்து அத்துக் குறித்தார்கள். நிவாரணமென இரண்டாயிரம் உரூபாய் சலவை நோட்டுகளை நீட்டினார்கள். அப்பணத்தை வாங்க அவ்வூர் மக்கள் நான், நீயென முண்டியடித்தார்கள். அத்தனைப் பேர் கைகளுக்கும் பணம் போய் சேர்ந்திருந்தது. முத்துக்கருப்பனின் நிவாரணம் மட்டும் மொத்தக் கணக்கில் தனியே துருத்திக்கொண்டிருந்தது. முத்துக்கருப்பன் கை ரேகைப்பேர்வழி.  அவருக்கான நிவாரணத்தை அவர் வாங்கினால்தான் உண்டு.

அதிகாரிகள், முத்துக்கருப்பனின் குடிசைக்கு வருகைத் தந்து அவரைத் தைரியப்படுத்தினார்கள். அதிகாரிகளின் வருகையின் பொருட்டு முத்துகருப்பனின் மகள்கள் அப்பன் தங்கியிருக்கும் குடிசையை மலம், சிறுநீர் அள்ளி கூட்டிப் பெருக்கி விசேஷமாகச் சுத்தம் செய்திருந்தார்கள். அவரை வாசல் வரைக்குமாக தூக்கிவந்து அதிகாரிகளின் முன் நிறுத்தினார்கள். அத்தனை நேரம் கண்களை இறுக மூடியிருந்த முத்துக்கருப்பன் மெல்ல கண்களைத் திறந்துபார்த்தார். மதிய நேரத்து உச்சி வெயில், உன்னைத் தீக்குளிக்கிறேன் பார், என்பதைப்போல கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அதைக்கண்டு மிரண்டுபோன முத்துக்கருப்பன், ஒரே ஓட்டமாக ஓடி, பழைய படி ஒரு மூலையில் ஒடுங்கி இரு கைகளாலும் கண்களை இறுகப் பொத்திக்கொண்டார்.

எப்படியேனும் முத்துக்கருப்பனிடம் நிவாரணத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் அதிகாரி மட்டத்தினர் குறியாக இருந்தார்கள். அவர்கள் பணத்தையும், கைரேகை வாங்க வேண்டியக் கோப்புகளையும் எடுத்துக்கொண்டு அவரது குடிசைக்குள் நுழைந்தார்கள். குடிசைக்குளிலிருந்து வந்திருந்த மலம், மூத்திர வாடை அவர்களை குடிசைக்கு வெளியில் துரத்தி அடித்திருந்தது. கைக்குட்டையால் வாயுடன் சேர்த்து நாசியை இறுகப் பொத்திக்கொண்டு குடிசைக்கு வெளியே ஓடி வந்தார்கள். குடிசைக்கும் வெளியே முத்துக்கருப்பன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு நேராக நின்றுகொண்டு அவரை உரக்க அழைத்தார்கள். நீண்ட அழைப்பிற்கு பிறகு முத்துக்கருப்பன் ‘ இம்…’ என்றிருந்தார்.

‘முத்துக்கருப்பன், கொஞ்சம் வெளியே வாருங்களேன். உங்களுக்கான நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்ளுங்கள் ’ என அதிகாரிகள் அவரிடம் கெஞ்சினார்கள்.

‘நான் வெளியில் வந்தால் ஆழ்க்குழாய் கிணறு வெடித்து என்னை விரட்டத் தொடங்கிவிடுமே.’ என்றார் முத்துக்கருப்பன்.

‘ நாங்கள் இருக்க உங்களுக்கு ஏன் இந்த பயம்… ? எங்களை நம்பி வெளியில் வாருங்கள்…’ என்பதாகக் கெஞ்சினார்கள்.

‘மாட்டேன், நான் வெளியில் வந்தால் அக்கிணறு திரும்பவும் வெடிக்கச் செய்யும். வெடித்து என்னை விரட்டச் செய்யும்…’ என்றார்.

‘ஆறறிவுடைய நீங்கள், இப்படி ஓர் அறிவுமில்லாத அத்தீய்க்கு போய் பயப்படுகிறீர்களே, எங்களை நம்பி வெளியில் வாருங்கள். எங்கள் படிப்பையும் நாங்கள் பயன்படுத்தும் தொழிற்நுட்பத்தையும் நம்புங்கள். அக்கிணறு இன்னொரு முறை வெடிக்காது. தயவுசெய்து எங்களை நம்புங்கள்….’ என்பதாகக் கெஞ்சினார்கள்.

‘சரிதான் அய்யா, அக்கிணறு இன்னொரு முறை வெடிக்காது என்று எனக்குத் தெரியும். இன்னொரு முறை வெடிக்கக் கூடாது என்று அக்கிணறுக்குத் தெரியுமா….?’ எனக் கேட்டார் முத்துக்கருப்பன்.

 குடிசைக்கு வெளியே நின்றிருந்த அதிகாரிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்வதாக இருந்தார்கள்.

அண்டனூர் சுரா-இந்தியா

(Visited 176 times, 1 visits today)
 

One thought on “பிணவாசனைக் கிராமம்-சிறுகதை-அண்டனூர் சுரா”

Comments are closed.