கசப்பு-சிறுகதை-சுரேஷ் பிரதீப்

பேருந்து புறப்பட்டது. வியர்த்திருந்த உடலில் ஒரு குளிர்மை கடந்து சென்றது. பாரதி மிக மிக ஆனந்தமாக உணர்ந்தாள். மனம் நெருக்கும் சமயங்களில் தான் இதுபோன்ற சிறிய சிறிய ஆசுவாசங்கள் பொதிந்து வைத்திருக்கும் இன்பங்கள் தெரிகின்றன. ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக அவள் இந்த தடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருக்கிறாள். ஆறு ஆண்டுகளும் முதலில் ஐந்து ரூபாயை பின்னர் ஏழு ரூபாயை மிச்சம் பிடிப்பதற்காக தன் அலுவலகத்தில் இருந்து முக்கால் கிலோமீட்டர் உடல் வியர்க்க நடந்து வந்து இந்தப் பேருந்தில் ஏறுவாள். அப்போதெல்லாம் இந்த ஆசுவாசத்தை உணர்ந்ததில்லை. இனி இதனினும் சிறிய இன்பங்களைக்கூட தவறவிடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.  உடல் ரொம்பவும் நசநசத்தது. வீட்டிற்கு சென்றதும் குளிக்க வேண்டும் என்று தோன்றியது.

மணமாவதற்கு முன்பு அம்மா சொல்வாள்.

“ஏன்டி தெனமும் நடந்து வர்ற. பஸ்ஸூக்கு பத்துரூவா கொடுத்தா கொறஞ்சாப் போயிடுவ”

பாரதி பதில் சொல்லமாட்டாள். ஆனால் தினம் அந்த முக்கால் கிலோமீட்டருக்கு பேருந்தில் வந்தால் இப்படிக் கேட்கும் அம்மாவின் குரலில் கொஞ்சம் சுரண்டினால் கிடைக்கக்கூடிய பிரியம்கூட இல்லாமல் போய்விடும். சம்பளப் பணத்தில் சில நூறுகளை குறைத்துக் கொடுத்தால் ஞாயிறுகளில் வீட்டு வேலைகளை செய்யாமல் சற்று அலுத்துப் படுத்தால் அலைபேசியில் உரையாட மாடிக்குச் சென்றால் தன்னை தன் வீடு கைவிடும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். வீட்டுக்கு வெளியே நண்பர்களை அமைத்துக் கொள்ளும் அளவு அவளுக்கு தைரியம் கூடவில்லை. வீட்டில் அப்பாவோ அம்மாவோ தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றால் பாரதிக்கு அனைத்தும் சுவையற்றுப் போய் வாய் கசக்கத் தொடங்கிவிடும்.

இந்த வாய்க்கசப்பு அவளுக்கு மணமாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிகழ்வுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. காலையில் எழும்போது வாயில் ஊறியிருக்கும் எச்சிலை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்கும் போது இந்த கசப்பினை உணரத் தொடங்கினாள். முதலில் வீட்டுத்தண்ணீரின் குணம் மாறிவிட்டது காரணமாக இருக்கலாம் என்று நினைத்தாள். பின்னர் சாப்பிடும்போது அலுவலகத் தண்ணீர் குடிக்கும் போது என்று எப்போதுமே இந்தக் கசப்பு நீடிக்கத் தொடங்கியது. அந்தக் கசப்பினை உணரத் தொடங்கிய பிறகு பாரதியின் உருவத்திலும் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எப்போதும் தன்னிறைவு கொண்டவளாக யார் கவனத்தையும் ஈர்க்காத முகமும் உடல் தோற்றமும் கொண்டிருந்தவளிடம் பிறர் பார்த்து பரிதாபம் கொள்ளும்படி ஏதோவொன்று கூடிவிட்டது. அது என்னவென்று அவளால் உடைமாற்றும் போதும் குளிக்கும் போதும் எவ்வளவோ நேரம் கண்ணாடி முன் நின்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி அதனை முதுமை என்று வகுத்துக் கொண்டாள். அவளுடைய பழைய புகைப்படங்களையும் தற்போது எடுக்கும் தற்படங்களையும் ஒப்பிடும்போது தன் உடலிலும் முகத்திலும் ஒரு மாற்ற முடியாத அழகின்மை குடிகொண்டுவிட்டதாக பாரதி நினைத்தாள்.

கடந்தகாலம் அவளுக்கு ஏக்கம் தரத் தொடங்கியது. கசப்பு இப்போது சுவையின்மையாக மாறியிருந்தது. எதை சாப்பிடவும் பிடிக்கவில்லை. காரம்கூடிய அசைவ உணவுகளையே கொஞ்ச காலத்துக்கு உண்டு வந்தாள். அதுவும் சலித்துவிடவே சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாள். எந்நேரமும் கண்களில் தூக்கமும் எரிச்சலும் வயிற்றில் பசியும் இருந்தது. ஆனால் அவள் ஆச்சரியப்படும் விதத்தில் அவள் உடல் எடை குறையத் தொடங்கியது.

மணமாகவில்லை என்ற கவலையில் மெலிகிறாள் என்றும் மணக்களை கூடுவதால் மெலிந்து பொலிவுறுகிறாள் என்றும் இரு தரப்புகள் அவள் தோற்றம் குறித்து பேசப்பட்டாலும் இரண்டுமே அவளது மணம் என்ற புள்ளியில் முட்டி நின்றன. பாரதிக்கு அப்போது வாழ்க்கையில் ஏதாவது விபரீதமாக நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மொத்த சம்பளத்தையும் வீட்டில் கொடுக்க வேண்டியிருந்தது. எந்த விடுமுறையிலும் வெளியூர்களுக்குச் செல்ல முடிந்ததில்லை. விடுமுறை நாட்களில் கல்யாணம்,சடங்கு என்று அம்மா எங்காவது இழுத்துச் சென்று விடுகிறாள். அன்றாடம் தண்டவாளத்தில் தலையை வைத்து அதனை சம்மட்டியால் அடித்து ஆசுவாசம் தேடிக்கொள்ளும் அளவு சகிக்க முடியாததாக இருந்தது. வாய்க்கசப்பும் கூடிக்கொண்டே இருந்தது.

மணமானதின் நற்பலன்களின் ஒன்று கணவனின் வாயில் தன் வாயைப் பொருத்தி உறிஞ்சும் நேரங்களில் இந்த வாய்க்கசப்பு தெரிவதில்லை. ஒருவேளை இந்த வாய்க்கசப்பு இல்லையென்றால் அந்த முத்தங்களை பாரதியால் சகித்துக் கொண்டிருந்திருக்க முடியாது. முதன்முறை பார்த்துக் கொண்டபோது நிர்மல் மீது பாரதிக்கோ பாரதியின் மீது நிர்மலுக்கோ பெரிய அபிப்ராயமெல்லாம் இருக்கவில்லை. அவளைப் போலவே நிர்மலும் ரொம்பவும் சலித்துப் போயிருந்தான். மணமாகி பதினைந்து நாட்கள் வரை நன்றாக இருந்தது. நிர்மலின் அம்மா பாரதியிடம் இரண்டு வாரங்கள் பெரிதாக வேலை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. இவளும் இரவு நீண்ட நேரம் வரை அவனுடன் ஒட்டிக்கிடந்தாள். ஆனால் மண விடுப்பு முடிந்த பிறகுதான் தொல்லை தொடங்கியது. மருமகளின் தேநிலவுக்காலம் முடிவுக்கு வந்தது. அவள் செய்ய வேண்டிய வேலைகள் நாசூக்காக பிரிக்கப்பட்டன. நிர்மலும் இரவு மூன்று மணிவரை தூங்க விடுவதில்லை. சில சமயம் பன்னிரண்டு மணிக்கெல்லாம் ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்விடுவான். நிம்மதியாக திரும்பிப்படுத்தால் ஒரு மணிக்கு எழுப்புவான். பின்னர் நான்காகிவிடும். அதனாலேயே சற்று தாமதமானாலும் பரவாயில்லை என்று இரவு ஒரு மணிவரை அவனை இழுத்து சோர்வடைய வைத்துவிட்டு பின்னர் உறங்குவாள். அலுவலகத்தில் இவளுக்கு மேற்பார்வையாளராக இருந்தவர் பாரதியின் துயில் படிந்த கண்களை வேட்கையுடன் கவனிப்பார். பாரதிக்கு அது அருவருப்பாக இருக்கும்.

இரவுத் துயில் நீப்பினைத் தவிர மணமான பிறகும் பெரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. அவளது புது வீடும் அவள் பழைய வீட்டிக்கு பக்கத்திலேயே இருந்ததால் மணமான பிறகும் தினம் இரண்டு பேருந்துகள் மாற வேண்டியிருந்தது.

மூன்று மாதங்களில் பாரதி கருவுற்றாள். அதன்பிறகு வீட்டு வேலைகளில் இருந்து சற்று ஓய்வு கிடைத்தது. வினய் பிறந்த பிறகு நிர்மல் உடலுறவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதது சற்று ஆசுவாசமாகவும் இருந்தது. எனினும் அவன் அவனுடைய அலுவலகத் தோழிகளுடன் வெகுநேரம் உரையாடுவது சற்று சங்கடத்தை கொடுக்காமலில்லை. நிர்மல் இவளுடைய அந்தரங்கங்கள் எதிலும் தலையிடமாட்டான். அவன் அப்படித் தலையிடாதிருப்பதும் பாரதிக்கு எரிச்சலையே கொடுக்கும்.

வியர்வை காய்ந்தபிறகு உடலில் நீடித்திருந்த மெல்லிய இனிய குளிர் நீங்கியது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்ததால் அடித்த காற்றில் கேசம் பறக்கத் தொடங்கியது. பாரதியின் இப்போதைய வீடிருக்கும் நிறுத்தத்துக்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கினால் அவள் முன்பிருந்த வீடு வந்துவிடும். அவளது பழைய வீட்டை நினைக்கும் போது சற்று துக்கமாகவும் எரிச்சலாகவும் இருக்கும் அவளுக்கு. பாரதி வேலைக்குச் சேர்ந்த வருடமே அவள் பெயரில் வீட்டுக்கடன் வாங்கி இந்த வீட்டை அவள் அப்பா கட்டத் தொடங்கிவிட்டார். இவள் பிறந்த போது பாரதி என்று பெயர் வைக்கும் அளவுக்கு வாசிப்பிலும் வாழ்க்கையிலும் நாட்டம் கொண்டவராகத்தான் இருந்தார் அப்பா. பாரதிக்கு அடுத்துப் பிறந்த அவள் தம்பி ஒரு வயதில் இறந்துபோன பிறகு அப்பா வாழ்க்கை மீது பற்றிழந்துவிட்டார். அல்லது பற்றிழந்து விட்டதான ஒரு நம்பிக்கையை தன் சுற்றத்தில் ஏற்படுத்தி தம்பியின் மரணத்தை ஒரு காப்பாக்கி அந்த வட்டத்திற்குள் பிறர் வராதபடி பார்த்துக் கொண்டார் . தம்பி இறந்த பிறகும் அப்பா வாரத்தில் மூன்று நாட்களில் மாமிசம் உண்டார். இரண்டு நாட்கள் குடித்தார். இவளுக்கு விவரம் புரியத் தொடங்கிய பிறகும் இவள் உணரக்கூடிய தடங்கள் எஞ்சியிருக்கும்படியே அம்மாவுடன் உடலுறவு கொண்டார்.  சம்பளப் பணத்தில் பாதியைத்தான் வீட்டுக்குத் தந்தார். படிப்பதையும் பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதுவதையும் மட்டும் விட்டுவிட்டார். அப்பா நிலையாக இருந்தவரை தன் பால்யம் மகிழ்ச்சியாக இருந்ததாக பாரதி நினைத்துக் கொண்டாள். பால்ய நினைவு மனப்படலங்களை தேய்த்து மென்மையாக்கியது.  நிகழ்காலத்தின் எந்த நினைவு அந்த படத்தில் பட்டாலும் தாங்க முடியாத வலியெடுத்தது.

முதல் நிறுத்தத்திலேயே பாரதி இறங்கிவிட்டாள். அவள் கடன் வாங்கி கட்டிய வீட்டின் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அப்பா கைகளைத் தலைக்கு பின்னே கோர்த்து அண்ணாந்த வாக்கில் அமர்ந்திருந்தார். பாரதி வந்ததும் “வாம்மா” என்று சொல்லிவிட்டு “லதா புள்ள வந்திருக்கு பாரு” என்று வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தார். பாரதி பேருந்திலேயே நகரில் வாங்கியிருந்த பழங்களையும் இனிப்பையும் பிரித்துவிட்டிருந்தாள்.

“வாடி டீ போடவா?” என்று கேட்ட அம்மாவிடம் சரியெனத் தலையசைத்துவிட்டு அவர்களுக்கான தின்பண்டங்களை கொடுத்துவிட்டு அறையில் சென்று அமர்ந்து கொண்டாள். யாருடைய பால்யம்தான் மகிழ்ச்சி அற்றதாக இருந்திருக்கும் என்று பேருந்தில் நின்றதும் நிறுத்தியிருந்த சிந்தனை தொடர்ந்தது. ஆனால் தன்னுடைய அப்பா இன்னும் சற்று பொறுப்பானவராக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. நிர்மலின் வீட்டுக்கு மாத சம்பளத்தில் பத்தாயிரம்தான் கொடுக்கிறாள். அவள் மாமியார் இது குறித்து நிர்மலிடம் நிச்சயம் புகார் சொல்லி இருப்பாள். ஆனால் நிர்மல் இதுபோன்ற விஷயங்களை அவள் கவனத்துக்கு கொண்டுவருமளவு இங்கிதம் தெரியாதவன் அல்ல. வீட்டுக்கடன் தொகைக்கு மேலாக மாதம் பத்தாயிரம் செலவுக்கென்று வேறு தன்னுடைய பழைய வீட்டுக்கு கொடுக்கிறாள்.

அடுத்த வருடம் வினயை ப்ளே ஸ்கூலில் சேர்க்க வேண்டும். மிருதுளா தன் மகளை இந்த வருடம் ப்ளே ஸ்கூலில் சேர்த்திருக்கிறாள். மிருதுளா குறித்த ஒப்பீடு தோன்றியதுமே பாரதி சங்கடமாக அசைந்து அமர்ந்தாள். அப்போதும் அவளைப் பற்றிய எண்ணம் மனதில் ஒட்டியிருக்கவே எழுந்து கொண்டாள்.

மிருதுளாவுக்கும் இவளுக்கும் சமவயதுதான். வேலைக்குச் சேர்ந்தபோது பாரதி அளவுக்கு கூட மிருதுளாவுக்கு விவரம் போதவில்லை. பாரதிக்கு மணமாவதற்கு முதல் வருடம் மிருதுளாவுக்கு மணமானது. அதன்பிறகு அவளது இடம் அலுவலகத்தில் முன் செல்லத் தொடங்கியது. அதுவும் அவளுக்கு மகள் பிறந்த பிறகு ஆண்களுடன் அவள் காட்டிய இணக்கம் அவளுக்கு மிகப்பெரிய அதிகாரம் ஒன்றை அலுவலகத்தில் உருவாக்கியது. எப்போதும் புடவையில்தான் அலுவலகம் வருவாள். அந்தப் புடவையையே அவள் உடுத்தத் தேவையில்லை என்பதைப் போல அதற்கு பின் ஜாக்கெட்டிற்குள்ளிருக்கும் முலையின் முழுப்பரிணாமத்தையும் நிர்வாண வயிற்றையும் அந்தப் புடவை அப்பட்டமாகக் காண்பிக்கும். அவள் மார்பிலிருந்து அடிவயிறு வரை ஆண்களின் பார்வை சென்று கொத்தக் கொத்த இவளுக்குக் கூசும். ஆனால் மிருதுளா அதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டாள். ஆண்களால் தனக்கு ஏதேனும் வேலை ஆக வேண்டும் என்றால் அவளது மூச்சும் நறுமணமும் அந்த வேலையை இயற்றும் திறனுள்ளவனை தாக்கும் அளவு நெருங்கிச் செல்வாள். கொஞ்சம் அசைந்தாலும் அவன் தன் உடலில் வந்து முட்டிக்கொள்ளும்படி ஆக்கிரமிப்பாள். அப்படிக் கிறங்கியே அவளுக்கு செய்து கொடுத்து விடுவார்கள்.

புடவை உடல் பரிணாமத்தை காண்பித்துக் கொடுக்கிறது என்பதற்காகவே பாரதி சுடிதாரில் அலுவலகம் செல்கிறவள். மிருதுளாவுடைய குடும்பத்தின் வெற்றிகளை நினைத்து பெருமூச்சுதான் விடமுடிகிறது. சென்ற வருடம் வேலைக்குச் சேர்ந்த ஒரு சிறுவன் பாரதியை மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறான். அது பாரதிக்கு நன்றாகத் தெரியும்.

தினம் “குட்மார்னிங் மேம் குட்நைட் மேம்” என்று செய்தி அனுப்புகிறான். காதலால் நெக்குருகித் தவிக்கும் மை ஸ்டேட்டஸ்கள் வைக்கிறான். அவன் தொல்லை தாங்காமலேயே பாரதி தன்னுடைய “ரீட் ரெசிப்ட்ஸை” அணைத்து வைத்தாள். ஆனால் அவனுடைய நிலைத்தகவல்களை பார்க்கத் தவறுவதில்லை. அவன் அவ்வாறு நிலைத்தகவல் வைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு கர்வமும் குறுகுறுப்பும் வரத்தான் செய்கிறது. எனினும் அவனுக்கு சீக்கிரம் மணமாக வேண்டும் என்று ஒவ்வொரு நாள் காலையிலும் சாமி கும்பிடும்போது வேண்டிக் கொள்கிறாள்.

அம்மா டீயுடன் அறைக்குள் வந்தபோது பாரதி சிரித்தாள்.

“என்னடி சிரிக்கிற” என்று கேட்ட அம்மா அவள் முகத்தை அவதானித்ததும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் நிறுத்திக் கொண்டாள்.

“டீ சூடா இருக்கு ஆத்திக்குடி” என்று இன்னொரு டம்ளரை கொடுத்துச் சென்றாள். பாரதி கொதிக்கும் டீயை வாயில் வைத்து உறிஞ்சினாள். நாக்கு வெந்தது. இரு தினங்களுக்கு இந்த வெந்த நாக்கின் திருப்தி மனதில் நீடிக்கும்.

மிருதுளா தன் மகளைச் சேர்த்திருப்பதைவிட சற்று பெரிய பள்ளியில் வினையைச் சேர்க்க விசாரித்து வைத்திருந்தாள். வருடத்திற்கு நாற்பதாயிரம் கட்டணம். அந்தப் பணத்தை ஈடு செய்ய வேண்டும் என்றால் பழைய வீட்டுக்கு கொடுக்கும் பணத்தில் பாதியை குறைத்துக் கொள்ள வேண்டும். நிர்மலிடம் பணம் கேட்க முடியாது. கேட்டால் வேறு பள்ளியில் சேர்க்கலாம் என்று சொல்லி விடுவான். அவனையும் குறை சொல்ல முடியாதுதான். மூன்றுவேளையும் அவளுக்கு அவள் இப்போதிருக்கும் வீட்டில் சாப்பாடு போடுகிறார்கள். எந்த வரவு செலவு கணக்குகளும் பார்ப்பதில்லை. மாமியாரும் வினய்க்கு செலவு செய்கிறார். நிர்மலும் அவ்வப்போது ஏதாவது புடவை நகை வாங்கிக் கொடுக்கிறான். தேனிலவுக்கோ வேறு விஷயமாகவோ வெளியூர் சென்றதில்லை என்பது மட்டுந்தான் குறை.

அப்பா இறந்துவிட்டால் வினயை அவள் நினைத்திருந்த ப்ளேஸ்கூலில் சேர்ப்பதற்கு சிக்கல் இருக்காது. அம்மாவை தன்னுடைய இப்போதைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம். மாமனார் சென்ற வருடம் இறந்துவிட்டதால் இன்னும் இளமை முழுமையாகத் தீர்ந்துவிடாத அம்மா பாரதியின் இப்போதைய வீட்டில் தங்குவதில் எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை. நிர்மல் எல்லை மீறுவான் என்பது போலத் தோன்றவில்லை. ஆனால் அப்பா இறப்பது போலத் தெரியவில்லை. நல்ல திடகாத்திரமாகவே இருக்கிறார். அவருக்கு ஒரு சொற்பத் தொகை பென்ஷனாகவும் வருகிறது. அம்மாவும் மாய்ந்து மாய்ந்து அவருக்கு பணிவிடை செய்கிறாள். அம்மாவை அந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டு இந்த வீட்டை வாடகைக்கு விட்டால்   ஒன்றுக்கு இரண்டென வருமானம் பெறலாம். அந்த வீட்டுக்கு அவள் சம்பளத்தில் பாதியை வாடகையாகப் பெறலாம். ஆனால் அப்பா இறக்க வேண்டும்.  ஆனால் அவள் அப்பா இப்போது சாகப் போவதில்லை என்பதை நினைத்து பாரதிக்கு அழுகையாக வந்தது.

மிருதுளாவுக்கும் அப்பா அம்மா இருவரும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவளிடமிருந்து பணம் பெறுவதில்லை. அவ்வப்போது மிருதுளாவை அலுவலகத்துக்கு அவள் அப்பாவும் கணவனும் பார்க்க வருவார்கள். அவள் கணவனைப் பார்த்து பாரதிக்கு பொறாமையாக இருக்கும். சில நாட்களில் மிருதுளாவின் முகத்தில் தெரியும் மிளிர்வைப் பார்க்கும்போது அவளது முன்தின இரவை நினைத்து அடிவயிறு நெருப்பள்ளிக் கொட்டப்பட்டது போல துடித்துக் கொதிக்கும்.

‘இந்த பசப்புக்காரிக்கு வேசிக்கு எப்படி எல்லாமும் நல்லதாகவே நடக்கிறது’ என்று நினைத்துப் பொங்கிப் போவாள். மற்றொரு பெண்ணை தன்னால் எப்படி வேசி என்று நினைக்க முடிகிறது என்ற எண்ணம் அவளுக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் மிருதுளாவை வேசியாக எண்ணிக் கொள்ளாமல் மனதை சமநிலையில் பேண முடியவில்லை. ஆனால் வேசிகளுக்கு நிகழக்கூடிய எந்த அவமானமும் மிருதுளாவுக்கு நிகழவில்லை. புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் மிருதுளாவின் இடப்பக்கத்தில் முன்வந்து கிடந்த முடியை அவ்வளவு உரிமையுடன் எடுத்து முதுகில் போட்டாள். அப்பெண்ணுக்கும் மிருதுளாவுக்கும் சேர்க்கை இருக்குமென பாரதி நினைத்தாள்.

அவர்கள் கழிவறையிலும் உணவறையிலும் முத்தமிட்டுக் கொண்டனர். பாரதி அவற்றை தன் அலைபேசியில் பதிந்து கொண்டாள். அப்படங்களை மிருதுளாவுக்கும் புதுப்பெண்ணுக்கும் காட்டி அவர்களை நடுங்கச் செய்தாள். மிருதுளா பாரதிக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினாள். பாரதி சொல்லும்படி உடுத்தினாள். அவள் மகனை ஒரு மட்டமான ப்ளேஸ்கூலுக்கு மாற்றினாள். அவள் கணவனுடன் சண்டையிட்டாள். அவள் பெற்றோர்களை பாரதியின் வற்புறுத்தலின் பேரில் துன்புறுத்தினாள். அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மிருதுளாவின் கணவன் அவளை விவாகரத்து செய்தான். மிருதுளா வற்றிச் சுருங்கி சாகக்கிடக்கும் போது பாரதி அவளை பார்க்கச் சென்று கொண்டிருக்கும் போது “நம்ம ஊருக்கு டிரான்ஸ்பர் இப்போ கெடைக்காதாம்மா” என்று கேட்டபடி அப்பா அறைக்குள் வந்தார்.

மிருதுளாவினை தொட்டுத் தொட்டு உரையாடும் அந்தப்பெண் இன்று வேலையை விட்டுச் சென்றாள். செல்லும் போது அலுவலகத்தில் அனைவரும் பார்க்கும்படி மிருதுளாவை கட்டிக்கொண்டு அப்படி அழுதாள். தாயின் ஆதுரத்துடன் மிருதுளா தன்னுடைய பரந்த மார்பில் யுகம் புதைத்து அழுதவளைத் தேற்றினாள். பாரதி உள்ளுக்குள் புழுவெனத் துடித்தாள். அவள் மனம் மீண்டும் மீண்டும் ‘வேசிகள் வேசிகள் வேசிகள் வேசிகள் வேசிகள் வேசிகள்’ என்றே உச்சரித்துக் கொண்டிருந்தது.

அப்பா சாகப் போவதில்லை என்ற ஏமாற்றத்துடன் தன்னுடைய இப்போதைய வீட்டை நோக்கி பாரதி நடந்து கொண்டிருந்தாள். திடீரென்று  இதுவரை இல்லாத அளவுக்கு வாய்க்கசப்பு பெருகியது. வாயில் ஊறிய கொழகொழப்பான எச்சிலை சாலையோரத்தில் துப்பினாள். யார் மீதாவது அந்த எச்சில் தெறித்தால் செத்துப் போவார்கள் என்று நினைத்து சிரித்துக் கொண்டாள். திடீரென ஜட்டி தொடையை அருப்பதை உணர்ந்தாள். ஒரு மாதத்துக்கு முன்னதாகவே புது ஜட்டி வாங்க நினைத்திருந்தாள். இது இன்னும் சற்று நைந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்ததற்கு இப்போது தொடையை அருக்கிறது. அவளது மென்மையான உட்புறத் தொடையில் உரசும் ஜட்டியின் நைந்த விளிம்பால் தடிப்புகள் தோன்றுவதை பாரதியால் உணர முடிந்தது. மீண்டும் வாய் கசந்து எச்சில் ஊறியது.

வினயை மாமியார் வாசலில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

“அவன் வர பத்து மணியாகும் பாரதி. நீ குளிச்சிட்டு சாப்பிடு” என்று மகனை வாங்கியபோது மாமியார் சொன்னார். பாரதி வினயை கொஞ்சநேரம் கொஞ்சிவிட்டு மீண்டும் மாமியாரிடம் கொடுத்துவிட்டு பாத்ரூமுக்கு ஓடி பாட்டமை கழட்டினால். ஜட்டியை அவிழ்த்துப் போட்டபிறகு தொடையில் அது ஏற்படுத்தியிருந்த சிவப்புக் கீறலில் மெலிதாக விரல்களால் வருடினாள். உடல் வலியில் சிலிர்த்தது. வாய்நிறைய எச்சிலும் விழிகள் நிறைய கண்ணீரும் பெருக்கெடுத்தன. வாய்க்கசப்பினை போக்கிக் கொள்ள இன்று நிர்மல் தேவைப்படுவான் என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் தொடைக்கீறலை வருடியபோது வழிந்த கண்ணீரும் எச்சிலும் கலந்து ஊட்டிய கிறக்கத்தில் நிர்மல் தேவையில்லை என்று முடிவு செய்து கொண்டாள்.

ஆனால் சாப்பிட்டு முடித்து சற்று மனம் மந்தப்பட்டபோது மீண்டும் வாய்க்கசப்பு மெல்ல ஊறி வந்தது. வினயை தூங்கச் செய்து மாமியாரின் அறைக்குத் தூக்கிச் சென்றாள். அப்படி தூக்கிச் செல்லும் போதெல்லாம் அவள் உடல் சற்று குன்றித்தான் போகிறது. உள்ளாடைகள் எதுவும் அணியாமல் நிர்மலின் வருகைக்கென குளித்துவிட்டு நைட்டியோடு காத்திருந்தாள். அவன் கார் சத்தமும் மாமியார் கேட்டினை திறக்கும் சத்தமும் கேட்டதும் ஆணுடல் அறியாத பெண் போல பாரதிக்கு உடல் பரபரத்தது. அதேநேரம் வாய்க்கசப்பும் பெருகியது. ஆனால் அடிவயிறு நமைச்சல் கொடுக்கத் தொடங்கியது. கழிவறைக்கு ஓடினாள்.

குறியில் இருந்து குருதி கொட்டத் தொடங்கியது. ‘இதை எப்படி மறந்தோம்?’ என்று எரிச்சல் பட்டுக் கொண்டாள். வாயில் ஊறிய எச்சிலை கருஞ்சிவப்பாக மாறிய கழிவறைக் குழியில் ஓங்கித் துப்பிவிட்டு நைட்டியை கழட்டிப்போட்டு மீண்டும் குளிக்கத் தொடங்கினாள்.

சுரேஷ் பிரதீப் -இந்தியா

 1,705 total views,  4 views today

(Visited 513 times, 1 visits today)