ஒரு ஜோடி செருப்பும், நான்கு கால்களும்…(சிறுவர் இலக்கியக் கதை)-மொழிபெயர்ப்பு-இ.பா.சிந்தன்

பாக்கிஸ்தானில் இருக்கும் ஒரு அகதிகள் முகாமில் பத்து வயது லீனாவும் இருந்தாள். அகதி முகாம்னா எப்படி இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள். உலகில் பல இடங்களில் சண்டையும் போரும் நடக்கிறதில்லையா. அதில் இருந்து தப்பித்து வேறு ஒரு நாட்டுக்கு சிலர் போவார்கள். அப்படி வருகிறவர்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு சிறிய கூடாரங்கள் போட்டிருப்பார்கள். அதில் தான் அந்த மக்கள் தங்குவார்கள். அவர்களின் சொந்த நாட்டில் பிரச்சனை சரியாகிவிட்டால், அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிடுவார்கள். சில நேரம் வேறொரு நாட்டுக்கும் அனுப்புவார்கள்.

 அப்படி ஒரு அகதி முகாமில் தான் லீனாவும் வாழ்ந்து வந்தாள். அகதி முகாமில் இருப்பவர்களுக்கு துணிகள் வாங்க காசு இருக்காது. அதனால் அந்த நாட்டில் இருக்கும் பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்தி நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை அகதி முகாமுக்கு அனுப்பி வைப்பார்கள். அப்படியாக அகதிமுகாமுக்கு எப்போதாவது வரும் துணிகளை, மூட்டையாகக் கட்டி வைப்பார்கள். அகதிமுகாமில் இருப்பவர்கள் முதலில் வேகமாக ஓடிப்போய் தங்களுக்குத் தேவையான துணிகளை எடுத்துக்கொள்வார்கள். தாமதமாகப் போனால், நல்ல நிலையில் இருக்கும் உடைகள் கிடைக்காமல் போகலாம். அல்லது உடல்வாகுக்கு ஏற்ற சரியான அளவிலான துணிகளும் கிடைக்காமல் போகலாம். அப்படி அன்றொரு நாள் பழைய துணி மூட்டைகள் வருவதைப் பார்த்ததும் லீனா வேகமாக ஓடினாள்.

அந்த மூட்டைகளில் சரியான அளவு ஆடைகள் ஏதாவது கிடைக்கிறதா என பார்த்தாள். அந்த மூட்டைகள் அவளை விட பெரிதாகவும் அகலமாகவும் கிணறு போன்று இருந்தன. ஒரு மூட்டைக்குள்ளே தன் தலையையே உள்ளேவிட்டு தேடித் கொண்டிருந்தாள் லீனா. அவள் கண்ணுக்கு ஏதோ பளபளப்பாக தெரிந்தது. ஆனால் கைக்கு எட்டவில்லை. கையை நீட்டி எடுக்க முயன்றாள். அப்போதும் எட்டவில்லை. உடம்பை மூட்டைக்குள் திணித்து, கைகளை அந்த பளபள பொருளை நோக்கி மேலும் நீட்டினாள்.  அப்போது அந்த துணிமூட்டைக்கு உள்ளேயே விழுந்துவிட்டாள். அருகில் நின்று இருந்தவர்கள் சிரித்து விட்டார்கள். பிறகு மெதுவாக அவளைத் தூக்கி வெளியே எடுத்தார்கள். அவள் வெளியே வரும்போது கையில் அந்த பளபளப்பான பொருள் இருந்தது. அது என்ன தெரியுமா? ஒற்றைக் கால் செருப்பு. அந்த ஒற்றைக்கால் செருப்பினை தன்னுடைய ஒரு காலில் போட்டுப் பார்த்தாள். அளவும் சரியாக இருந்தது. மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த செருப்பின் நடுவே நீல நிறத்தில் பூ போட்டிருந்தது. அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

லீனாவின் சொந்த ஊர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. போர் நடப்பதால் அவள் வீடு இடிந்துவிட்டது. அவள் அப்பாவும் இறந்துவிட்டார். அம்மாவும் தம்பி தங்கையுமாக தப்பித்து பாகிஸ்தானில் இந்த அகதி முகாமுக்கு அவள் வந்துசேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரையில் அவள் செருப்பு போட்டதே இல்லை. இப்போதும் ஒரு காலுக்குதானே செருப்பு கிடைத்திருக்கிறது. இன்னொரு காலுக்கான செருப்பு கிடைக்கவில்லைவே. அதனால் லீனா சோகமாக அந்த ஒற்றைக்கால் செருப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள். திரும்பவும் அந்த மூட்டைக்கு உள்ளே போகவும் முடியாது. அதற்குள் அங்கே கூட்டம் அதிகம் ஆகிவிட்டது.

கொஞ்ச நேரம் அந்த மூட்டைக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தாள். கூட்டம் குறைந்ததும் மூட்டைக்கு அருகில் சென்றாள். அங்கே ஒரு சிறுமி லீனாவுக்குத் தேவையான இன்னொரு கால் செருப்பை வைத்திருந்தாள். அந்த சிறுமியிடம் அந்த செருப்பைக் கேட்கலாமா என லீனா யோசித்தாள். அதற்குள் அந்த சிறுமி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

மறுநாள் காலை பாத்திரம் கழுவுவதற்கான இடத்திற்கு சில பாத்திரங்களை எடுத்துக்கொண்டு லீனா சென்றாள். அகதிகள் முகாம்களில் வீடுமாதிரி எல்லா வசதிகளும் இருக்காது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறிய ப்ளாஸ்டிக் கூடாரம் தான் தருவார்கள். பாத்திரம் கழுவவேண்டும் என்றாலும் ஒரு பொதுவான இடத்திற்கு தான் எல்லாரும் போக வேண்டும். லீனாவும் ஒரு காலில் மட்டுமே செருப்பு போட்டுக்கொண்டு பாத்திரம் கழுவ சென்றாள். அங்கே அந்த இன்னொரு செருப்பை கையில் வைத்துக்கொண்டு இன்னொரு சிறுமியும் இருந்தாள்.

லீனாவின் அருகில் வந்து அந்த மற்றொரு கால் செருப்பை லீனாவிடம் கொடுத்தாள்.

“ஒரு காலில் மட்டும் செருப்பு போடக்கூடாதுன்னு எங்க பாட்டி சொன்னாங்க. இதையும் நீயே வச்சிக்கோ” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

இரண்டு செருப்புகளையும் கையில் எடுத்துக்கொண்டு, “நில்லு நில்லு” என்று கத்திக்கொண்டே அந்த சிறுமியிடம் ஓடிப்போனாள் லீனா.

“என் பேரு லீனா” என்றாள்.

லீனாவின் பக்கம் மெதுவாகத் திரும்பி, “என் பேரு பெரோசா” என்றாள் அந்த சிறுமி.

“இந்த செருப்பை நாம பகிர்ந்துக்கலாமா?” என்று கேட்டாள் லீனா.

“நம்மகிட்ட நாலு கால்கள் இருக்கு. ஆனா இரண்டு செருப்பு தானே இருக்கு. என்ன பண்றது?” என்று கேட்டாள் பெரோசா.

“இன்னைக்கு அந்த ரெண்டையும் நீ போட்டுக்கோ. நாளைக்கு நான் போட்டுக்குறேன். இப்படியே தினமும் மாத்தி மாத்தி போட்டுக்கலாம். சரியா?” என்றாள் லீனா.

“ரெண்டு செருப்பு, நாலு கால்கள்” என்று சொல்லி சிரித்துக்கொண்டே இரண்டு செருப்பையும் தன் இரண்டு கால்களில் போட்டுக்கொண்டாள் பெரோசா.

அடுத்த நாள் தண்ணீர் வாங்குவதற்காக லீனாவும் பெரோசாவும் வரிசையில் வந்து நின்றனர். அகதிகள் முகாமில் தினமும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பொது இடத்தில் சிறிய அளவு தண்ணீர் தருவார்கள். அது ஒரு குடும்பத்திற்கு போதவே போதாது. இருந்தாலும் வேறு வழியில்லையே. சில நாட்கள் அதுவும் கிடைக்காது. இன்றைக்கு அந்த ஜோடி செருப்புகளை லீனாவுக்குத் தந்தாள் பெரோசா.

இப்படியே தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த செருப்புகளை அணிந்துகொண்டனர். அகதிமுகாமில் இருக்கும் கூடாரங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்தன. கதவு என்று எதுவும் இல்லை. அதனால் தினமும் அந்த செருப்பை பாதுகாப்பதே அவர்களுக்கு கடினமாக இருந்தது. தூங்கும்போது தலைக்கு அடியில் வைத்துத் தூங்கினாள் லீனா. பெரோசாவோ கட்டிப்பிடித்துத் தூங்கினாள்.

அகதிகள் முகாமில் இருந்து வேறு ஏதாவது ஒரு நாட்டுக்கு நிரந்தரமாக செல்ல வாய்ப்பு கிடைக்குதான்னு பார்த்தார் லீனாவின் அம்மா. அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். ஏதாவது ஒரு நாடு இவர்களை ஏற்றுக்கொண்டால், அங்கே போய்விடலாம் என்று நினைத்தார் லீனாவின் அம்மா.

ஒரு நாள் லீனாவின் கூடாரத்திற்கு வந்த பெரோசா, “தனியாவா இருக்க நீ?” என்று கேட்டாள்.

“ஆமா. எங்க அம்மா, அதிகாரிய பாக்க போயிருக்காங்க” என்றாள்.

“சரி, நீ எப்படி இங்க வந்த?” என்று கேட்டாள் பெரோசா.

“எங்க வீட்ல குண்டு போட்டதுல என்னோட அப்பா செத்துப்போயிட்டார். நானும் அம்மாவும் தம்பியும் தங்கச்சியும் தெருவுல தான் படுத்து இருந்தோம். ஒரு நாள் நைட்டு நாங்க தப்பிச்சு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வந்துட்டோம். நான் தம்பிய தூக்கிட்டு வந்தேன். எங்கம்மா தங்கச்சிய தூக்கிட்டே வந்தாங்க” என்றாள் லீனா.

“நீ எப்படி வந்த?” என்று பெரோசாவிடம் கேட்டாள் லீனா.

“எங்க குடும்பத்துல யாருமே இல்ல. எல்லாரும் செத்து போயிட்டாங்க. நானும் பாட்டியும் மட்டும் தான் ஒரு லாரியில் ஏறி வந்துட்டோம் இங்க” என்றாள் பெரோசா.

அந்த அகதி முகாமில் ஒரு சின்ன பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது. ஆனால் அது ரொம்ப சின்னதாக இருந்ததால் எல்லா குழந்தைகளும் படிக்க முடியல அதனால் முகாமில் உள்ள குழந்தைகளை குழுகுழுவாக பிரித்தார்கள். ஒவ்வொரு குழுவும் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் தான் பள்ளிக்கூடம் போக முடியும். லீனாவும் பெரோசாவும் ஒரே குழுவில் சேர்ந்தார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கூடம் போனார்கள். அவர்களுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், பேனா என்று எதுவும் இல்லை. எல்லோரும் மண் தரையில் உட்கார்ந்து கையால் மண்ணில் தான் எழுதுவார்கள். இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தைக் கற்றுக்கொள்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி தான். அவர்களுடைய பெயரை எழுதக் கற்றுக்கொண்டதும், எல்லா இடத்திலும் அவர்கள் பெயர்களை எழுதிப்பார்த்தார்கள். தண்ணீர் எடுக்கப்போகும் இடத்திலும் எழுதினார்கள். பாத்திரம் கழுவப் போகும் இடத்திலும் எழுதினார்கள். சாப்பாடு வாங்கப்போகும் இடத்திலும் எழுதினார்கள்.

 “எல்லா நாளும் பள்ளிக்கூடம் போகமுடிஞ்சா நல்லா இருக்கும்ல” என்று ஏக்கத்தோடு சொன்னாள் லீனா.

“ஆமா, தினமும் பள்ளிக்கூடம் போனா நிறைய பேரோட பேரை எழுத சீக்கரமே கத்துக்கலாம்ல” என்றாள் பெரோசாவும்.

சில நேரம் வெயில் அதிகமா அடிக்கும். இரண்டு செருப்புகளையும் ஒருத்தரே போட்டால், இன்னொருத்தருக்கு கால் ரொம்ப சுடும். அதனால் ஆளுக்கொரு செருப்பாக பகிர்ந்து போட்டுக்கொள்வார்கள். செருப்பு இல்லாத ஒரு காலை எடுத்து செருப்பு போட்டிருக்கும் கால்மீது வைத்து நிற்பார்கள். அதைப் பார்த்து பலரும் சிரிப்பார்கள். ஆனால் லீனாவும் பெரோசாவும் அதற்கு கவலைப்பட்டதில்லை.

ஒரு நாள் காலையில் லீனாவும் பெரோசாவும் செருப்பை கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது பெரோசாவின் பாட்டி, “லீனா, உங்கம்மா கூப்புடுறாங்க. வேற நாட்டுக்குப் போறவங்க லிஸ்ட்டுல உங்க ரெண்டு பேர் பேரும் வந்திருக்காம். சீக்கரமா ஓடு” என்றார்.

செருப்பை கழுவிமுடித்து பெரோசா இரண்டு செருப்புகளையும் போட்டுக்கொண்டாள். இரு சிறுமிகளும் அகதிமுகாமின் அலுவலகத்திற்கு ஓடினார்கள்.

“லீனா, நாம அமெரிக்கா போறோம்” என்று லீனாவைக் கட்டிப்பிடித்து சொன்னார் அவளது அம்மா.

“என்னோட பேரும் அந்த பட்டியலில் இருக்கா?” என்று பரிதாபமாகக் கேட்டாள் பெரோசா.

“இந்த வாட்டி இல்லம்மா. கவலப்படாத, சீக்கிரமே உன்பேரும் வரும்.” என்று பெரோசாவுக்கு ஆறுதல் கூறினார் லீனாவின் அம்மா.

“நீ அமெரிக்காவுக்கு வெறும்காலோட போகக் கூடாது. இந்தா இந்த ரெண்டையும் நீயே போட்டுக்கோ” என்று இரண்டு செருப்புகளையும் லீனாவிடம் கொடுத்தாள் பெரோசா.

பெரோசாவும் லீனாவும் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

அடுத்த நாள் லீனாவும் அவளது அம்மாவும் அமெரிக்கா போகத் தயார் ஆனார்கள். அகதிமுகாமுக்கு ஒரு பேருந்து வந்தது. லீனாவை வழியனுப்ப பெரோசாவும் பேருந்தின் அருகே நின்றிருந்தாள்.

“எங்க அம்மா துணி தைக்கிற வேலை செஞ்சி சேத்துவச்ச காசில் எனக்கு புது செருப்பு வாங்கிருக்காங்க. இத போட்டுக்கிட்டு தான் நான் அமெரிக்கா போகப் போறேன்” என்று பெரோசாவிடம் தன் புதிய செருப்பைக் காட்டினாள் லீனா.

“புது செருப்பா… ரொம்ப அழகா இருக்கு லீனா” என்றாள் பெரோசா.

“நம்ம செருப்பை நீயே வச்சிக்கோ. இனிமேல் தினமும் நீயே போட்டுக்கலாம்.” என்று சொல்லி பழைய செருப்புகளை பெரோசாவிடம் கொடுத்தாள் லீனா.

பேருந்து கெளம்பப்போவதால் லீனாவும் அவளது அம்மாவும் பேருந்தில் ஏறினார்கள்.

“லீனா.. லீனா” என்று கத்திக்கொண்டே ஓடிவந்து பேருந்துக்குள் ஏறினாள் பெரோசா.

“இந்தா, இந்த ஜோடி செருப்பில் ஒன்னை நீயே வச்சிரு” என்றாள் பெரோசா.

“ஒன்னை வச்சி நான் என்ன பண்றது?” என்று கேட்டாள் லீனா.

“என்னைய நியாபகம் வச்சிக்கறதுக்காக ஒன்னு உன்கிட்டயே இருக்கட்டும்” என்றாள் பெரோசா.

கண்ணீரை அடக்கமுடியாமல் அழுதுகொண்டே ஒரு செருப்பை தன்னுடைய பையில் வைத்தாள் லீனா.

மற்றொரு செருப்பை தன் கையில் வைத்துக்கொண்டு, “பாய் பாய் லீனா” என்று கத்திக்கொண்டே பெருந்தின் பின்னாடி கொஞ்ச தூரம் ஓடினாள் பெரோசா.

பேருந்தின் சன்னல் வழியாக எட்டிப்பார்த்து, “சீக்கிரமா நீயும் அமெரிக்கா வந்திடு. அங்க நாம திரும்பவும் இந்த செருப்பை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திமாத்தி போட்டுக்கலாம்.” என்றாள் லீனா…

00000000000000000000

ஆசிரியர் பற்றிய குறிப்பு :

கரென் லின் வில்லியம்ஸ் உலகில் வாழ்கின்ற சிறுவர்களின் துன்ப வாழ்க்கையைப் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். கலிமோடோ (Lothrop, Lee & Shepard), டேப்-டேப்; (Clarion) மற்றும் சர்க்கிள்ஸ் ஓஃப் ஹோப் (Eerdmans) என்பனவும் அதில் அடங்கும். கரென் ஹெய்ட்டி மற்றும் மாலவி ஆகிய நகரங்களில் வசித்தவர். தற்பொழுது பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்கில் வசித்து வருகிறார். காத்ரா முகமட் பிட்ஸ்பர்க் அகதிகள் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணிபுரிகிறார். இவர் இருபதாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிலும் ஏனைய வெளிநாடுகளிலும் வசிக்கின்ற அகதிகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவஸ்தர். காத்ரா பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்கில் வசிக்கிறார்.

000000000000000000

Karen Lynn Williams has written several books about the difficult lives of children around the world, including Galimoto (Lothrop, Lee & Shepard), Tap-Tap (Clarion), and Circles of Hope (Eerdmans). Karen has lived in Haiti and Malawi, but now lives in Pittsburgh, Pennsylvania.

Khadra Mohammed is the executive director of the Pittsburgh Refugee Center and has worked with refugees in the United States and abroad for more than twenty years. Khadra lives in Pittsburgh, Pennsylvania.

காரென் வில்லியம்ஸ், கத்ரா முகம்மது

தமிழில்: இ.பா.சிந்தன்-இந்தியா

(Visited 245 times, 1 visits today)