ஹொலிவுட் பார்வையில் அரபுலகம்- கட்டுரை-இ.பா.சிந்தன்

 

இ.பா.சிந்தன்திரைப்படங்கள் என்பது வெறுமனே பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல. நமது சுற்றுச்சூழலைத்தாண்டிய பலவற்றையும் எளிதாகக் கற்றுக்கொள்ளப்பயன்படும் ஒரு மாற்று வழிமுறையும் கூடத்தான். அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை முதல் அண்டைநாடுகளின் கலாச்சாரம், உணவுப்பழக்கம் வரை அனைத்தையும் மறைமுகமாக திரைப்படங்கள் வழியாக நாம் ஏராளமானவற்றைக் கற்கிறோம். பனிபடர்ந்த அழகான தேசம் சுவிட்சர்லாந்து என்றும், கண்ணாடிக்கு புகழ்பெற்ற தேசம் பெல்ஜியம் என்றும், உலக அதிசயங்கள் என்னென்ன என்பதையும், நடுங்கும் குளிர் கொண்ட தேசம்  ரஷியா என்றும் திரைப்படங்கள் நமக்கு நிறையவே சொல்லிக்கொடுத்திருக்கின்றன. அந்தளவிற்கு திரைப்படங்கள் நம்முடைய அறிவு வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மூன்றாமுலக நாடுகளில் வாழும் ஒவ்வொரு மனிதரும் மேற்குலகை அண்ணாந்து பார்த்து அதிசயிக்கவைக்கிற அளவிற்கு மாயத்தோற்றத்தை நமக்கெல்லாம் உருவாக்கிய பெருமையும் திரைப்படங்களைத்தான் சாரும். அதிலும், ஹொலிவுட் திரைப்படங்கள் நுழையாத மூலைமுடுக்கு உலகில் எங்கேயும் இல்லையென்கின்ற அளவிற்கான நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.

அவர்களின் கதைசொல்லும் நேர்த்தியும் பிரம்மாண்ட தயாரிப்பு உத்தியும் சேர்ந்து, ஹொலிவுட் சினிமாவில் சொல்லப்படுகின்ற எதுவொன்றும் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்புகிற அளவிற்கு உலகமக்களை தயார்செய்திருக்கிறார்கள். அமெரிக்கா என்றாலே பெரிய பெரிய கட்டிடங்களைக் கொண்ட சொர்க்கபுரி என்பதுபோலவும், உலகினைக் கட்டிக்காக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கும் சர்வவல்லமை படைத்தநாடு என்றும் நம்மிடையே கருத்துருவாக்கம் செய்துவருகின்றன அவர்களுடைய ஹொலிவுட் சினிமாக்கள். அமெரிக்காவை உயர்த்திப்பிடிக்கும் அதே ஹொலிவுட் சினிமாக்கள்தான், உலகின் மற்ற நாடுகள் குறித்தும், மற்ற இனக்குழுக்குள் குறித்தும் பொதுப்புத்தியை உருவாக்குதிலும் முக்கியபங்கு வகிக்கின்றன. அமெரிக்க அரசியலின் தேவையையொட்டியே அந்த கருத்துக்கணிப்புகள் இருப்பதைப்பார்க்கமுடியும். உலகப்போருக்கு முந்தைய காலகட்டத்தில் யூதர்களும், அதன்பின்னர் ரஷியர்களும் , எப்போதும் கருப்பின மக்களும் பூர்வகுடி செவ்விந்தியர்களும் ஹொலிவுட் சினிமாக்களின் இலக்காக இருந்துவந்திருக்கிறார்கள். அம்மக்களை நேரில் பார்த்தறியாத கோடிக்கணக்கானவர்களின் முளைக்குள் அவர்கள் குறித்த பார்வையை உருவாக்குவதுதான் ஹொலிவுட் சினிமாக்களின் மறைமுகநோக்கமாக இருந்துவருகிறது.

ஹொலிவுட்டின் சமீபத்திய  வரலாற்றிலேயே மிகமோசமாக சித்தரிக்கப்பட்டுவருபவர்கள் அரபுமக்கள்தான். நாஜிக்களின் ஆட்சியில் யூதர்களைக் கேவலப்படுத்துவதற்கு “உந்தர்மென்சென்” என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இரண்டாந்தர கீழான மக்கள் என்பதுதான் அதன் பொருள். அப்படியாகத்தான் ஹொலிவுட் திரைப்படங்களில் அரபுமக்கள் குறித்தும் காட்டப்படுகிறது. இப்படியான பார்வையை உருவாக்குவதினால், அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு பல நன்மைகள் உண்டு. மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்தும் ஒவ்வொரு போருக்கும் அமெரிக்க/உலக மக்களின் ஆதரவைப் பெற்றுவிட இது உதவும் என்பதே அமெரிக்க ஆட்சியாளர்களின் நம்பிக்கை.

“ரீல் பேட் அரப்ஸ்” என்கிற நூலிலும் அதேபெயரில் வெளியான ஆவணப்படத்திலும், 1000த்திற்கும் மேற்பட்ட ஹொலிவுட் திரைப்படங்களை சான்றுக்கு எடுத்துக்கொண்டு, அரபுமக்கள் ஹொலிவுட்டில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்று விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. “வேலண்டினோ’ஸ் கோஸ்ட்” என்கிற ஆவணப்படமும் அரபு மக்கள் குறித்து எவ்வாறெல்லாம் உலகமக்களின் பொதுப்புத்தியில் கருத்துத்திணிப்பு நடத்தப்படுகின்றது என்பதை விரிவாகப் பேசியிருக்கிறது. அவற்றை ஆதாரமாகக்கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த அரபுமக்களையும் அபாயகரமானவர்களாகவோ, திருடர்களாகவோ, கேலிக்குரியவர்களாகவோ, முட்டாள்களாகவோ, பயங்கரவாதிகளாகவோ, பெண்வெறியர்களாகவோ மட்டுமே தொடர்ந்து ஹொலிவுட் திரைப்படங்கள் காட்டிவருகின்றன. அமெரிக்கா என்றாலே நம்மையெல்லாம்  அண்ணாந்து பார்க்கவைக்கிற அதே ஹொலிவுட் திரைப்படங்கள்தான், மத்திய கிழக்கின் மக்கள் என்றாலே முட்டாள்களாகவும், பிற்போக்கானவர்களாகவும், தீவிரவாதிகளாகவும் பார்க்கவைத்திருக்கின்றன. உலகமக்களின் பொதுப்புத்தியில் இக்கருத்தைத் திணிப்பதில் அமெரிக்க அரசின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பதில் மிகப்பெரிய பங்காற்றிவருவது ஹொலிவுட் சினிமாக்கள்தான்.

அரபுலகம் குறித்த மாயைகள்

அரபுலகம் இப்படித்தான் இருக்கும், அங்கே வாழும் மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று பொதுமைப்படுத்தும் கருத்துக்களை 200 ஆண்டுகளுக்கு முன்பே பரப்பத்துவங்கியது பிரிட்டனும் பிரான்சும்தான். அவர்களில் பலருக்கு அரபுலகத்தின் வரைபடம்கூட சரிவரத்தெரிந்திருக்காது. பிரிட்டனைச் சேர்ந்த சைக்ஸ் மற்றும் பிரான்சைச் சேர்ந்த பிகோ ஆகிய இருவரும் இணைந்துதான்  மத்தியகிழக்கை இருதுண்டுகளாகப் பிரிக்கும் ‘சைக்ஸ்-பிகோ திட்டத்தை’  இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வகுத்தனர். ஆனால் அவர்களுக்கே மத்தியகிழக்கைப்பற்றிய அறிவு அதிகமிருக்கவில்லை. அவர்களைப்போன்ற இன்னும் சில மேற்குலக சுற்றுலாப்பயணிகள் தங்களை அறிவுஜீவிகளாகக் கருதிக்கொண்டு மத்தியகிழக்கைப்பற்றிய பொதுக்கருத்தை உருவாக்கிப் பரப்பினர். அதுவே பின்னர் மத்திய கிழக்கிலிருந்து பிரிட்டன் மற்றும் பிரான்சின் அதிகாரம் குறைந்து, அமெரிக்காவின் கை ஓங்கியபின்னரும் தொடர்ந்தது.

“மலைகளைத்தாண்டி அந்தப்பக்கம் போனால், ஒரு 2000 வருடங்களுக்கு பின்னோக்கி சென்றுவிடுவீர்கள்” ஹரும் ஸ்காரும்’ திரைப்படத்தில் ஒரு வசனம் பிரபல்யமானது.

அரபுலகத்தின் நிலப்பகுதி என்றாலே, சில பனைமரங்கள் சூழ ஒரு பாலைவனம் காட்டப்படும். பின்னர் ஒர் அரண்மனை, அதனுள்ளே ஏராளமான பணியாட்கள் சுற்றியிருக்க ஒரு மன்னர் அமர்ந்திருப்பார். அரண்மனையில் காட்டப்படும் எல்லாப்பெண்களும் முழுவுடல் தெரியுமளவிற்கு மெல்லிய ஆடைகள் அணிந்துகொண்டு பெல்லி நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். அரண்மனையின் அடித்தளத்தில் ஒரு சித்திரவதைக்கூடம், இவைதான் ஆலிவுட் திரைப்படங்கள் நமக்கு காலங்காலமாக வரையறுத்துவைத்திருக்கும் அரபுலகின் கூறுகள்.

டிஸ்னி தயாரித்த “அலாதீன்” படத்தை உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் பார்த்திருப்பார்கள். டிஸ்னியின் தயாரிப்பிலேயே மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடித்தீர்க்கப்பட்ட படமது. ஆனால், அரபுலகம் குறித்த பொதுமைப்படுத்தலை மிகத்தீவிரவமாக செய்த படம் அலாதீன்.

“ஓ! ஒட்டகங்கள் உலவும் தொலைதூர நிலத்திலிருந்து நான் வருகிறேன். அங்கே உங்களது முகம் பிடிக்கவில்லை என்றாலும், உங்களது காதை அறுத்துவிடுவார்கள். காண்டுமிராண்டித்தனம்தான், ஆனால் அது என் நாடு”அலாதீன் படத்தின் பாடல்

குழந்தைகளுக்காக எடுக்கப்படுகிற ஒரு படத்தில், உலகின் ஒரு பகுதி மக்களை இவ்வளவு கீழ்த்தரமான வரிகளை வைப்பதற்கு படத்தோடு தொடர்புடைய எவரும் சிறிதளவும் தயங்கவில்லை.

“தி ஹேப்பி ஹூக்கர் கோஸ் டு வாஷிங்டன்” என்கிற திரைப்படத்தில், அரபு ஆண்கள் குறித்து “சுன்னத் செய்த நாய்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

முட்டாள் பாத்திரமாக ஒருவரைக் காட்டவேண்டுமென்றால், உடனே ஹொலிவுட் தயாரிப்பாளர்களுக்கு அரபு மக்கள்தான் நினைவுக்கு வருவார்கள். “ட்ரூ லைஸ்” படத்தில்  ஒரு காட்சி,

முதலாமவர்: “நாம் எல்லோரும் இறக்கத் தயாராகிவிட்டோம். அந்த சாவியை ஒருமுறை திருப்பினாலே போதும். 20 இலட்சம் பேர் உடனடியாக இறந்துவிடுவர்”

இரண்டாமவர்: “எந்த சாவி?”

முதலாமவர்: “அந்த சாவி. ஆ! எங்கே அந்த சாவி? யாரந்த சாவியை எடுத்தது?”

முட்டாள் அரபு மனிதராக நடிப்பதற்கென்றே ஹொலிவுட்டில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஜேமி ஃபர்.

“தாடியில்லாத பெண்கள் என்றால் எனக்கு அலாதி பிரியம்”

அதிலும் மிகப்பெரிய பணக்கார, முட்டாள்தனமான, பணத்தின் அருமையே தெரியாத பாத்திரத்திற்கு அரபு மனிதரைத்தான் காண்பிப்பார்கள்.

“நான் தங்குவதற்கு எனக்கு ஒரு 12 வசதியான அறைகளை ஏற்பாடு செய்யுங்கள். பேசாம, ஒரு மாடித்தளத்தையே தயார் செய்யுங்களேன் எனக்கு” “கேனன்பால் ரன்-2” படத்தில் ஒரு காட்சி

அத்துடன் அரபு ஆண்கள் அனைவரும் அதீத செக்ஸ் விரும்பிகளாகவும், சிற்றின்பப் பிரியர்களாகவும், அமெரிக்கப் பெண்களின் மீதே ஆசை பெருக்கெடுத்து ஓடும் குணமுடையவர்களாகவுமே இருப்பார்கள் என்பதே ஹொலிவுட்டின் கருத்து.

“என்னுடைய பாலைவனப்பூவே, மீதி சில்லரையை நீயே வெச்சிக்கோ. என்னோட அந்தப்புரத்தில் சேருவது குறித்து யோசித்திருக்கிறாயா?”

“ஜுவல் ஆஃப் தி நைல்” என்கிற திரைப்படத்தில் கத்லீன் டுர்னரை அரபுலகத்திற்கு அழைத்துச்சென்று அங்கே சிறைப்பிடித்து வைத்துவிடுவார் ஷேக் ஒமர்.

அதே போன்ற காட்சிகள் தொடர்ந்து பல ஹொலிவுட் திரைப்படங்களில் பார்க்கமுடியும். “ப்ரோட்டாகால்” திரைப்படத்தின் கருவே அமெரிக்கப்பெண்ணை மயக்க நினைக்கும் ஒரு அரபு எமிரியைப் பற்றியதுதான். “நெவர் சே நெவர் எகெயின்” என்கிற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திலும், கிம் பாசிங்கரை அரபு ஆண்கள் கொடுமைப்படுத்துவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அவரை ஒரு கம்பத்தில் அரைநிர்வாணமாக கட்டிப்போட்டு அரபுலகின் பெடுவீன் பழங்குடியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு ஏலம்விடுவதாக அக்காட்சி தொடரும். “சஹாரா” என்கிற திரைப்படத்தில், ப்ரூக் ஷீல்ட்ஸ் கடத்தப்பட்டு ஒரு அரபு காமுகனிடம் ஒப்படைப்பார்கள்.

ஏறத்தாழ 25%த்திற்கும் மேற்பட்ட ஹொலிவுட் திரைப்படங்களில் அரபுமக்கள் குறித்த மோசமான சித்தரிப்புகள் இருப்பதாக “ரீல் பேட் அராப்ஸ்” என்கிற நூலில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர்.

“நாங்க மெக்கா நகருக்கு சென்றுகொண்டிருக்கிறோம். இந்த விமானம் முழுக்க அரேபியர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களோடு ஆடுகளும் கோழிகளும் பயணம் செய்கின்றன. நான் என்ன சொல்லவரேன்னா, அவங்கள்லாம் எங்க போனாலும் விலங்குகளோடத்தான் போவாங்க போல. கேபின், சீட்டு எல்லாத்துலயும் பிளாஸ்டிக் போட்டு வைக்க வேண்டியதா இருக்கு. ஏன்னா, அதுகள்லாம் பிளைட்டுலயே சிறுநீரும், மலமும் கழித்துவிடும்” “தி பான்ஃபயர் ஆஃப் தி வேனிட்டீஸ்” திரைப்படக்காட்சி.

நீல் சிமோனின் “சாப்ட்டர் டூ” என்ற திரைப்படத்தில் நாயகன் லண்டனில் இருந்து வருவார். அவருடைய தம்பி கேட்பார்,

“லண்டன் எப்படி இருக்கிறது?” என்று.

“ஒரே அரபுக்கூட்டம்” என்பார் நாயகன்.

எந்தெந்தத் திரைப்படத்திலும் “ஒரே யூதக்கூட்டம்” என்றோ “ஒரே வெள்ளையர்கள் கூட்டம்” என்றோ ஒரு வசனத்தை நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது.

அரபுலக வில்லன்கள் நிறைந்ததாகவே பெரும்பாலான ஹொலிவுட் திரைப்படங்கள் இருக்கின்றன. டேக்கன், டேக்கன்-2, அயர்ன் மேன், கில்லர் எலைட், ஜி.ஐ.ஜோ: ரிட்டாலியேசன் போன்ற பல படங்களை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். அதிலும் பல திரைப்படங்களில் அரேபியக்கதாபாத்திரம் இல்லாவிட்டாலும்கூட, அரபுலக மக்களை “ஷேக்குகள்” என்று சொல்லி கேலிக்கிண்டல்கள் செய்யும் நகைச்சுவைக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். “எ மில்லியன் வேஸ் டு டை இன் தி வெஸ்ட்”, “பிலேசிங் செடில்ஸ்”, “டல்லாஸ் பய்யர்ஸ் கிளப்“  போன்ற திரைப்படங்கள் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆஸ்கர் விருதெல்லாம் வென்ற “டல்லாஸ் பய்யர்ஸ் கிளப்” திரைப்படத்திலும் தேவையேயில்லாமல் அரபுலக மக்களை இழிவுபடுத்தும் வசனங்கள இடம்பெற்றிருக்கும்.

“நிம்ஸ் ஐலாந்து” என்கிற குழந்தைகள் திரைப்படத்தில், அலெக்ஸ் என்பவர் எழுதிய “மை அரேபியன் அட்வென்சர்” என்கிற நூலை ஒரு சிறுமி படித்துக்கொண்டிருப்பார். அதில் அலெக்சை ஐந்து ஆயுதம் தாங்கிய அரபுதீவிரவாதிகள் கடத்தி கண்ணைக்கட்டி வைத்திருப்பார்கள். நான் இப்போது எப்படிச் சாகப்போகிறேன்? அவர்களின் துப்பாக்கி குண்டுகளாலா? அல்லது தண்ணீர் கிடைக்காகாமல் தாகத்தாலா?” என்பார். உடனே அரபுத்தலைவன், “சிலந்திகளின் குழிக்குள் உன்னைவிடப்போகிறோம். கேள்விப்பட்டிருக்கிறாயா?” , அதன்பிறகு அரபுவில்லன்களை நையப்புடைந்து வெற்றிபெருகிறார் அலெக்ஸ். இக்காட்சியைப்பார்க்கிற குழந்தைகளின் மனதில் அரபுலகம் குறித்தும், அம்மக்கள் குறித்தும் என்னமாதிரியான எண்ணம் உருவாகும்?

டிஸ்னியின் “பாதர் ஆஃப் தி ப்ரைட்” என்கிற திரைப்படத்தின் முதல் பகுதியில் எந்த அரபு கதாபாத்திரமும் இருக்காது. ஆனால் சம்பந்தமே இல்லாமல், அதன் இரண்டாம் பாகத்தில் கொடூரமான அரபுக் கதாபாத்திரங்கள் நுழைக்கப்பட்டிருக்கும். “கிளாடியேட்டர்” திரைப்படத்திலும் அப்படித்தான். அரபுலகத்திற்கு எவ்விதத்தொடர்புமில்லாத கதைக்களமாக இருந்தாலும், ருசல் குரோவை கடத்திச்செல்பவர்கள் அரபு மக்களாக இருப்பார்கள். “பேக் டு தி ஃபூச்சர்” என்கிற எதிர்காலம் பற்றிய திரைப்படத்திலும், அழுக்கு ஆடைகளுடன் லிபியர்கள் துப்பாக்கிகளோடு சுட முயற்சிப்பதாகக் காட்சியிருக்கும். எதிர்காலம் பற்றிய திரைப்படமாக இருந்தாலும், அரபுமக்கள் பற்றிய பார்வைமட்டும் எப்போதும் நூற்றாண்டு பழமைவாய்ந்ததாகவே இருக்கிறது.

அரபுலகப்பெண்கள் இன்று சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்துவருகின்றனர். ஆனால், அரபுப் பெண்கள் பற்றியுமான ஹொலிவுட்டின் பார்வையும் மோசமாகவே இருந்துவருகிறது. அவர்கள் எப்போதும் பெல்லி நடன அழகிகளாக மட்டும்தான் காட்டப்படுகிறார்கள். சமீபகாலத்தில் கூடுதலாக மற்றொருவிதமாக குண்டுவெடிப்பாளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் அரபுப்பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். அரபுலகப்பெண்கள் ஒருபடி முன்னேறினாலும், அவர்களை பலபடிகள் பின்னோக்கித்தள்ளத்தான் ஹொலிவுட் படைப்புகள் முயற்சிக்கின்றன.

பாலஸ்தீனர்களைக் குறிவைத்து கேவலப்படுத்தும் ஹொலிவுட்:

இஸ்ரேல் உருவானகாலத்திலிருந்து பாலஸ்தீனத்திற்கு அமெரிக்க சாம்ராஜ்யம் தொடர்ந்து நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி வந்திருக்கிறது. பல இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் நாடற்ற அகதிகளாக வாழும் நிலைகுறித்து அமெரிக்க அரசு எவ்வாறு கவலைப்படவில்லையோ, அப்படித்தான் ஹொலிவுட் வருத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் பாலஸ்தீனர்கள் எப்போதும் வில்லன்களாகவே சித்தரிக்கப்பட்டனர்.

“எக்சோடஸ்” திரைப்படம், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்த திரைப்படமாக இருந்தாலும், பாலஸ்தீனர்கள் அந்நிலத்தில் வாழாதவர்கள் என்பதுபோலவும், நாஜிப்படையின் கைகூலிகளாகவுமே அத்திரைப்படம் சித்தரித்தது. கோஸ்ட் எ ஜெயன்ட் ஷேடோ” என்கிற திரைப்படத்தில் இஸ்ரேலியர்கள் அப்பாவிகள் என்றும், பாலஸ்தீனர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தின் பல வசனங்களை எழுதியது வசனகர்த்தாவா அல்லது இஸ்ரேலிய அரசின் அமைச்சர்களா என்கிற சந்தேகமே வந்துவிடும் அளவிற்கு பாலஸ்தீனவிரோதமானதாக இருக்கும்.

“இங்கே ஒரு நாடு ஐந்து அரபு நாடுகளால் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறது. துப்பாக்கிகளோ, பீரங்கிகளோ, வேறெந்த ஆயுதங்களோ, நண்பர்களோ இல்லாமல் தன்னந்தனியாக வெறும் கைகளால் சின்னஞ்சிறிய பாலைவன நிலத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர்” கோஸ்ட் எ ஜெயன்ட் ஷேடோ’ திரைப்படத்தில் இஸ்ரேல் குறித்த வசனம்

இப்படத்தில் பாலஸ்தீனர்கள் குறித்து மிகமோசமாக சித்தரித்திருப்பார்கள். எப்போதும், யாரை வேண்டுமானாலும், எந்தக் காரணமின்றியும் கொல்லும் குணம்படைத்தவர்கள்தான் பாலஸ்தீனர்கள் என்று சொல்லும் படமிது.

அதே படத்தில் ஒரு யூதப்பெண் பேருந்தோடு எரிக்கப்பட்ட காட்சியைக்காட்டுவார்கள். பேருந்தினுள் மாட்டிக்கொண்ட மற்றொரு பெண்ணை கொடுமைப்படுத்துவதாகவும் காட்டியிருப்பார்கள். ஒரு பத்தாண்டுகளுக்கு பின்னர் வெளியான “பிளாக் சண்டே” என்கிற திரைப்படத்தில் தீவிரவாதியாக ஒரு பாலஸ்தீனப்பெண் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். மியாமி அரங்கில் கூடியிருக்கும் அனைத்து அமெரிக்கர்களையும் அவர் கொல்ல முயற்சிப்பதாக காட்சி வரும். ஆக இதன்மூலம், தீவிரவாத நடவடிக்கைகளில் பாதிக்கப்படுபவர்கள் யூதப்பெண்கள் மட்டும்தான் என்றும், தீவிரவாதிகளாக இருப்பதோ பாலஸ்தீனப்பெண்கள்தான் என்றும் பொதுமைப்படுத்தும் நோக்கம் ஹொலிவுட்டுக்கு இருப்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும்.

1987இல் வெளியான “டெத் பிஃபோர் டிஸ்ஹானர்” என்கிற திரைப்படத்தில், பாலஸ்தீனர்கள் ஒரு வீட்டின் காவலாளியைக் கொல்வர். பின்னர் அவ்வீட்டில் இருக்கும் ஒரு இஸ்ரேலிய குடும்பத்தையே கொல்வர். ஒரு அமெரிக்க கப்பற்படைவீரரைக் கடத்திச் சித்தரவதை செய்வர். மற்றொருவரை கொன்றுவிடுவர். அமெரிக்க தூதரகத்தின் முன்னாலேயே அமெரிக்கக் கொடியினை எரித்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவர். இப்படித்தான் பாலஸ்தீனர்களை ஹொலிவுட் தொடர்ந்து உருவகப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் கேனன் என்கிற தயாரிப்பு நிறுவனம் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறது. பாலஸ்தீனர்கள் குறித்த மோசமான சித்தரிப்புகள் இல்லாத திரைப்படமே அவற்றில் இல்லை. அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் யார் தெரியுமா? மேனகம் கோலன் மற்றும் யோரம் குலோபஸ் ஆகிய இரண்டு இஸ்ரேலியர்கள் தான். அவர்களது “டெல்டா ஃபோர்ஸ்” திரைப்படத்தில் இஸ்ரேலியர்கள் பயணிக்கும் விமானத்தை பாலஸ்தீனர்கள் கடத்துவதுதான் கதை.

“யூதப்பெயர்கொண்ட பாஸ்போர்ட்களை மட்டும் எடுங்கள்” – டெல்டா ஃபோர்ஸ் திரைப்படக் காட்சி

வெகுமக்களிடம் பெரியளவிற்கு பிரச்சாரம் செய்வதற்கு மிகச்சிறந்து ஊடகம் சினிமாதான். அதனை ஹொலிவுட் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பாலஸ்தீனர்களை உலகமக்களிடம் வில்லன்களாக கொண்டுபோய் சேர்க்கின்றனர்.

“ஃபுளோரிடாவிலும் அணுகுண்டு வீசியது இதே குழுதான்”- ட்ரூ லைஸ் திரைப்படத்தில் பாலஸ்தீனர்கள் குறித்த வசனம்

இத்திரைப்படம் அடிக்கடி ஏதாவதொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.

பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அம்மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற துயரத்தையோ, அகதிமுகாம்களிலேயே சில தலைமுறைகளாக வாழும் அம்மக்களின் வாழ்க்கையையோ, வழக்குகூடப் போடாமல் காரணமெதுவுமின்றி பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதையோ, சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று பாலஸ்தீனக்குழந்தைகள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்படுவதையோ, தீண்டாமைச்சுவர் அமைத்து பாலஸ்தீனர்களைப் பிரித்துவைத்திருப்பதையோ, காஸா இனப்படுகொலை குறித்தோ ஹொலிவுட் படங்கள் எப்போதும் பேசுவதில்லை. இஸ்ரேலிய யூதர்களில் அப்பாவி மக்கள் இருப்பதைப்போல, பாலஸ்தீனர்களிலும் இல்லையா?

மத்திய கிழக்கின் அரசியலும் ஹொலிவுட் சினிமாவும்

அமெரிக்க அரசியலும், ஹொலிவுட் சினிமா உருவாக்கும் பிம்பங்களும் பிரித்துப்பார்க்கமுடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் பின்னான அமெரிக்க அரசியலில் மத்திய கிழக்குப்பகுதிகளின் ஏதாவதொரு நாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தே வருகிறது. பாலஸ்தீனப் பிரச்சனையில் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு, 70களில் பெட்ரோல் தரமறுத்த அரபுநாடுகளின் போராட்டம், அதன்பின்னர் வளைகுடாப்போர், ஈராக் போர், ஆஃப்கானிஸ்தான் போர், லிபியப்போர், தற்போதைய சிரியப்போர் வரை எல்லாவற்றிலும் அமெரிக்காவின் நேரடித்தலையீடு இருந்துகொண்டே இருக்கிறது. இவையெல்லாவற்றிலும் மத்திய கிழக்கின் மக்களுக்கு எதிராகவே அமெரிக்க அரசியல் நிலைப்பாடு இருந்தவருவதால், அம்மக்களை முட்டாள்களாகவும் வில்லன்களாகவும் அமெரிக்க மக்களிடத்தில் மட்டுமல்ல உலக மக்களிடையேயும் கருத்துருவாக்கம் செய்யவேண்டியது அவசியம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் கருதுகிறது. அமெரிக்க செய்தி ஊடகங்களும் ஆட்சியாளர்களும் ஒருபக்கம் அதனை செவ்வனே செய்துவந்தாலும், ஹொலிவுட் திரைப்படங்கள் அதில் பெரிய பங்காற்றிவந்திருக்கிறது. அரபுலகத்தினர் அமெரிக்காவை ஆக்கிரமிக்க எப்போது வேண்டுமானாலும் வந்துவிடுவார்கள் என்கிற அச்சத்தினை ஹொலிவுட் திரைப்படங்கள் தக்கவைத்துக்கொள்ள படாதபாடு படுவதை பல திரைப்படங்களில் நாங்கள் பார்க்கலாம்.

“அரேபியர்கள் அமெரிக்காவிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள். அதனை மீண்டும் இங்கே திருப்பித்தந்தாகவேண்டும்”-‘ நெற்வேர்க்’ திரைப்படத்தில் ஒரு காட்சி

“ நெற்வேர்க் ” திரைப்படத்தில் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் அரேபியர்கள் அமெரிக்காவை வாங்கத்திட்டமிட்டுருப்பதாகச் சொல்லி புகழ்பெறுவார். அத்திரைப்படம் அப்போது நான்கு ஆஸ்கர் விருதுகளையெல்லாம் அள்ளிச்சென்றது.

“இதனை வாங்குபவர்கள் சவுதி அரேபிய முதலீட்டுக்கழகத்திற்காகத் தான் வாங்குகிறார்கள். அரேபியர்களுக்காகத்தான் வாங்குகிறார்கள்”

“நன்றாக கவனியுங்கள். அரேபியர்கள் நம்மை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். உங்களால் மட்டும்தான் இதனைத் தடுக்கமுடியும்” – நெட்வர்க் திரைப்படத்தின் காட்சி

அரேபியர்கள் அமெரிக்கத் தொலைக்காட்சியை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் வெகுண்டு எழவேண்டும் என்று தொலைக்காட்சி தொகுப்பாளர் வேண்டுகோள் விடுப்பார்.

நிஜத்திலும் இது ஓரளவுக்கு உண்மை என்பது போல அமெரிக்க மக்கள் நம்பவைக்கப்பட்டனர். அமெரிக்க மக்களை இந்நிலைக்கு எதிராகக் கோபப்படவும் வைத்தது அத்திரைப்படம்.

ஹிட்லரின் நாஜி முகாமும் இதேபோன்ற பொருளாதார ரீதியான அச்சுறுத்தலையும் பயத்தையும்தான் பிரச்சாரமாகக் கட்டவிழ்த்துவிட்டது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். யூதர்களை நாஜிக்கள் எவ்வாறு சித்தரித்தார்களோ, அப்படித்தான் ஹொலிவுட்டும் அரபுமக்களை சித்தரிக்கிறது.

ஏராளமான ஹொலிவுட் திரைப்படங்கள் அமெரிக்காவின் இராணுவ உதவியோடு எடுக்கப்படுகின்றன. நேரடியான நிதியுதவியோ, இராணுவ உபகரணங்களைப் பயன்படுத்திக்கொள்கிற வசதியைப்பெற்றோ அவை தயாரிக்கப்படுகின்றன. “அயர்ன் ஏஜ்” என்கிற திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஏதோவொரு அரபு நாட்டில் புகுந்து குண்டுவீசித்தகர்ப்பான். சிறுவர்களின் மனதிலும் நாயகர்களாகவேண்டுமென்றால் அரபுலக வில்லன்களை வீழ்த்தவேண்டுமென்ற கருத்தை விதைக்க முற்படும் கதையிது.

“வாங்க சார் போவோம். அவங்களை அடிச்சு துவம்சம் பண்றோம்”நேவி சீல்ஸ்’ திரைப்படம்

“ரூல்ஸ் ஆஃப் என்கேஜ்மென்ட்” என்கிற திரைப்படத்தின் கதை, மத்திய கிழக்கின் ஏமன் நாட்டில் நடக்கும். அங்கே அமெரிக்க தூதகரத்தின் முன்னால் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் ஏமன் மக்கள் மீது அமெரிக்கப் படையினர் அதிரடித்தாக்குதல் நடத்தி அங்கு கூடியிருக்கும் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்படுவார்கள். அப்பாவி ஏமன் மக்கள் கொல்லப்பட்டார்களே என்று நாம் நினைப்பதற்குள்ளாகவே, அது குறித்த விசாரணை துவங்கும். அதன் முடிவில், ஏமனிய மக்கள் அந்த தூதகரத்தை வீழ்த்தமுடிவுசெய்திருப்பது தெரியவரும். இப்போது நம்முடைய ஒட்டுமொத்த பார்வையும் ஏமன் மக்கள்மீது திருப்பப்படும். அவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்களைக் கொல்வதில் தவறேதுமில்லை என்றும் நம்முடைய மூளைக்குள் கருத்துத்திணிப்பு நடத்தப்படும். விவரம் தெரியாத யாரோவொருவர் உருவாக்கிய திரைக்கதையல்ல இது. அமெரிக்கக் கப்பற்படையின் முன்னாள் தலைவராக இருந்த ஜேம்ஸ் வெப்தான் இத்திரைப்படத்தின் கதையாசிரியர். இன்றைய உண்மை நிலையென்ன? ஏமனில் சவுதி அரேபியாவுடன் இணைந்து தினந்தோரும் குண்டுவீசிக்கொண்டிருப்பது அமெரிக்கப்படைகள் தான். இலட்சக்கணக்கான ஏமன் மக்கள் உணவு, தண்ணீர்கூட கிடைக்காமல் நரகவாழ்க்கை வாழ்வதற்கு அமெரிக்காவின் அரசியல்தான் மிகமுக்கியக்காரணம். இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு அம்மக்களை தீவிரவாதிகளாகக் காட்டுவதைத்தான் ஹொலிவுட் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

அரபுமக்கள் குறித்த நேர்மையான பார்வையோடு சில படங்கள்…

“எ பெர்ஃபெக்ட் மர்டர்” என்கிற திரைப்படத்தில் அரேபிய வம்சாவளியைச்சேர்ந்தவர் துப்பறியும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். “த்ரீ கிங்க்ஸ்” திரைப்படத்தில் வளைகுடாப்போரில் பாதிக்கப்பட்ட அப்பாவி ஈராக்கிய மக்கள் குறித்து பேசப்பட்டிருக்கும். “கிங்க்டம் ஆஃப் ஹெவென்” திரைப்படத்தின் இறுதியில் சலாதின் என்கிற சுல்தான் ஜெருசலத்தினுள்ளே நுழைந்து ஆட்சியமைக்கிறபோது, இசுலாமிய-கிருத்துவ மதங்களுக்கிடையே சமத்துவம் நிலவுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். “சிரியானா” என்கிற திரைப்படத்தில் மத்திய கிழக்கின் எண்ணைவளத்தை சூறையாடுவதற்கு நடக்கிற சர்வதேச சதிகள் பேசப்பட்டிருக்கும். கேத் வின்ஸ்லெட் நடித்த “ஹைடியஸ் கிங்கி” என்கிற திரைப்படத்தில் அவர் மொரோக்கோவில் சில காலம் தங்கியிருப்பதும், அப்போது அங்கிருக்கும் ஒரு மொரோக்கர் அவருக்கு எவ்வாறு உதவுகிறார் என்பது அழகாக சித்திரிக்கப்பட்டிருக்கும். “ஆஃப் மெனி” என்கிற ஆவணப்படத்தில், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் யூதர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையிலான நட்புறவு குறித்து பேசப்பட்டிருக்கிறது. யூத ராபியான யெகுடா சர்னாவுக்கும் இசுலாமிய இமாமான காலித் லத்திப்பும் நண்பர்களாக மாறும் காட்சிகளும் சிறப்பாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கும். “ஃபொட்சன்: ஃபெயித், ஃபாஸ்டிங், ஃபுட்பால்” என்கிற திரைப்படத்தில் அமெரிக்காவில் அரபு இளைஞர்கள் நிறைந்த கால்பந்து அணிக்கு திறமையிருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் தவிப்பது குறித்து பேசப்பட்டிருக்கும். இப்படி விரல்விட்டு எண்ணக்கூடைய மிகச்சில திரைப்படங்களை மட்டுமே நம்மால் குறிப்பிட்டுச்சொல்லமுடிகிறது.

இறுதியாக…

“60 சதவீதமான அமெரிக்கர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு அரபுலக நபரைக்கூட சந்தித்ததில்லையாம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 30 இசுலாமிய எதிர்ப்பியக்கங்கள் அமெரிக்காவில் உருவாகியிருக்கின்றன.” – பத்திரிக்கையாளர் வில்லியம் ராபர்ட்ஸ்.

அரபுமக்களைப் பார்த்திராத அமெரிக்க மற்றும் உலக மக்களிடையே அவர்களைப்பற்றிய மோசமான பார்வையை ஏற்படுத்துவது மிகத்தவரான முன்னுதாரமில்லையா? அமெரிக்கத்திரைப்படங்கள் உலகெங்கிலும் பார்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளிலும் அவை பார்வைக்குக் கிடைக்கின்றன. தங்களைத் தீவிரவாதிகளாக மட்டுமே காட்டுகிற இதுபோன்ற திரைப்படங்களை பார்க்கிறபோது அம்மக்களுக்கு, அமெரிக்கர்கள்குறித்தும் உலகமக்கள் குறித்தும் எந்தவித மதிப்பு ஏற்படும்?

இ.பா.சிந்தன் இ.பா.சிந்தன் இ.பா.சிந்தன் இ.பா.சிந்தன் இ.பா.சிந்தன் இ.பா.சிந்தன் இ.பா.சிந்தன்

அரபுலக மக்களை வானுயர்ந்து புகழந்து படமெடுக்கவேண்டுமென்பதில்லை. ஆனால், அவர்களையும் சகமனிதர்களாகவும், அவர்களுக்குள்ளும் எல்லாவிதமான குணமுடைய மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதையும் நேர்மையாக பதிவுசெய்தாலே போதும்.

இ.பா.சிந்தன்-இந்தியா

இ.பா.சிந்தன்

 

(Visited 73 times, 1 visits today)