அருவியும் ஆஸ்மாவும்-கட்டுரை-இ.பா.சிந்தன்

(இரு மொழிகள், இருபடங்கள், இரு கதைகள், எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு நாயகி)

இ.பா.சிந்தன் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் அனுதினமும் எடுக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. அனைத்துத் திரைப்படங்களும் சுவாரசியமாகவும் மிகச்சிறந்த அழகியலோடும் இருப்பதில்லை. மிகச்சில திரைப்படங்களே நம்முடைய மனதை வருடிச்செல்லும் விதத்தில் அழகாக எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நல்ல படங்கள், மசாலா படங்கள், வெகுமக்கள் படங்கள், மாற்று சினிமாக்கள் என எல்லா திரைப்படங்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதோவொரு அரசியல் நிச்சயமாகப் பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றது. அந்த அரசியல் சமூகத்திற்கு சரியான கருத்தைச் சொல்லிச்செல்கிறதா இல்லையா என்பதனைக் கூர்ந்து கவனிப்பது அவசியம்.

கடந்த ஆண்டில் விமர்சகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற திரைப்படமாக அருவி இருந்தது. ‘தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா’ என்றெல்லாம் அருவிக்கு புகழாரம் சூட்டப்பட்டது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, நகரும் கதையினைக் கொண்ட படம் தான் அருவி. இதேபோன்று எகிப்திலும் ஆஸ்மா என்றொரு திரைப்படம் 2011 ஆம் ஆண்டில் வெளியானது. இரண்டிலும் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாயகியின் கதைதான் என்றாலும், ஒன்றிலிருந்து மற்றொன்று நகலெடுக்கப்பட்டதும் அல்ல; அச்சு அசலாக ஒரே திரைக்கதையினைக் கொண்ட படங்களுமல்ல. உயிரையே கொன்றுபோட்டுவிடும் ஒரு நோயினைக் கொண்ட பெண்ணின் வாழ்க்கையையும், அவளைச் சுற்றி நடக்கிற அரசியலையும் இவ்விரு திரைப்படங்களும் தர்க்கரீதியாக எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கின்றன என்கிற ஒரு சிறிய ஒப்பீட்டு அலசல் தான் இக்கட்டுரை.

ஆஸ்மாவின் கதை:

கதையின் நாயகியான ஆஸ்மா என்கிற 40 வயது மதிக்கத்தக்க பெண், கொடூரமான வலியுடன் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அறுவை சிகிச்சை துவங்குகிற நேரத்தில், தானொரு எயிட்ஸ் நோயாளி என்கிற விவரத்தை மருத்துவர்களின் தெரிவிக்கிறார். எயிட்ஸ் நோய் குறித்த அச்சம் மருத்துவர்களுக்கே இருப்பதனால், அவளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் மறுத்துவிடுகின்றனர். தாங்கமுடியாத வலியோடு அவள் வெளியேற வேண்டிய கட்டாயத்தத்திற்கு தள்ளப்படுகிறாள்.

அவள் வேலை செய்யும் நிறுவனத்தில், அனைவரும் மருத்துவ சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்கிற விதியின்படி, அவளது மேற்பார்வையாளர் ஆஸ்மாவிடன் மருத்துவமனைக்குச் சென்று சான்றிதழ் வாங்கிவரும்படி தினமும் வற்புறுத்திவருகிறார். ஒரு கட்டத்தில் வேலையே பறிபோய்விடும் சூழல் வருகிறபோது, மருத்துவ சான்றிதழை பணியிடத்தில் காட்டுகிறாள். ஆஸ்மாவின் மீது அவளுடன் பணிபுரிந்தவர்களுக்கு அன்பு இருந்தபோதும், எயிட்ஸ் நோயின்மீதிருக்கும் அச்சத்தின் காரணமாக அவளோடு தொடர்ந்து வேலை செய்யமுடியாது என்று கூறிவிடுகின்றனர். எதிர்பார்த்தது போலவே ஆஸ்மா தனது வேலையையும் இழக்கிறாள். உடன் பணிபுரிந்த ஊழியர்கள் அவளுக்காக தங்களால் இயன்ற பணத்தை சேகரித்து, அவளுக்கு முன்னால் தரையில் வைக்கின்றனர். நிராகரிப்பின் வேதனையில் அதனை எடுக்காமலேயே அங்கிருந்து வெளியேறுகிறாள்.

மருத்துவமனையிலும், பணியிடத்திலும் தன்னைத் தொடுவதற்குக்கூட அச்சப்படுகிறார்களே என்று வருந்துகிறாள். எயிட்ஸ் நோய் குறித்து இன்றும் சமூகத்தில் ஆழப்பரவியிருக்கும் தவறான பொதுப்புத்தியே அவளை எங்கும் நிராகரிப்பதற்கான காரணியாக இருக்கிறது. தகாத உறவினால் மட்டுமே எயிட்ஸ் நோய் வருகிறதென்றும், தவறான பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு தான் எயிட்ஸ் நோய் வருமென்றும் சமூகத்தில் இருக்கும் பொதுக்கருத்தே, ஆஸ்மா என்கிற கதாப்பாத்திரத்தை இந்நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது. அதனால், தானொரு எயிட்ஸ் நோயாளி என்பதை வளரிளம் பருவத்தில் இருக்கும் தன்னுடைய மகளுக்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் ஆஸ்மா.

அவளுடைய நிலையினை அறிந்த அவளது நண்பரொருவரின் உதவியோடு, ஒரு இலவச மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு நடக்கிறது. ஆனால், ‘ஆஸ்மாவுக்கு எயிட்ஸ் நோய் எப்படி வந்தது?’ என்பதை மட்டும் அவள் சொல்லவேண்டும் என்று மருத்துவமனையில் ஒரேயொரு நிபந்தனை விதிக்கிறார்கள். தனக்கு எப்படி எயிட்ஸ் நோய் வந்தது என்கிற உண்மையினை மட்டும், தன் உயிரே போனாலும் சொல்லமாட்டேன் என்று சண்டைபிடித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிடுகிறாள்.

எயிட்ஸ் நோயாளிகள் சிலர் இணைந்து அவ்வப்போது வந்து தங்களது பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு மனதைத் தேற்றிக்கொள்ளும் ஒரு தொண்டு நிறுவனத்தில் ஆஸ்மாவும் இணைகிறாள். நம்ம ஊர் ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்றதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உண்மையான ஒரு எயிட்ஸ் நோயாளியை பேசவைக்க ஆள்தேடி அத்தொண்டு நிறுவனத்தை அணுகுகிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குகொண்டால், அறுவை சிகிச்சை செய்வதற்கு வழிபிறக்கும் என்கிற வாக்குறுதியினையும் ஆஸ்மாவுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தருகிறார். தான் பங்குகொள்ள விருப்பப்படுவதாக ஆஸ்மா அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால் தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டே நிகழ்ச்சியில் பங்கெடுப்பேன் என்று உறுதிபட கூறிவிடுகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்குகிற வேளையில், முகத்தைக் காட்டினால் தான் தொலைக்காட்சியைப் பார்க்கும் நேயர்கள் நம்புவார்கள் என்றும், இல்லையென்றால் பொய்யான ஆளைக்கொண்டுவந்து எயிட்ஸ் நோயென்று கதைவிடுவதாக நேயர்கள் நினைத்துவிடுவார்கள் எனக்கூறி முகத்தைக் காட்டவேண்டுமென்று ஆஸ்மாவைக் கட்டாயப்படுத்துகிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

“நேயர்களுக்கு உன் முகத்தைக் காட்டவேண்டும் அல்லது உனக்கு எயிட்ஸ் எப்படி வந்ததென்று நேயர்களுக்கு சொல்லவேண்டும்”

என்று கட்டளையிடாத குறையாகக் கூறுகிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். அந்த உண்மையினை மட்டும் சொல்லமுடியாது என்று உறுதியாக மறுத்துப்பார்க்கிறார் ஆஸ்மா. ஆனால் வேறுவழியின்றி, தனக்கு எயிட்ஸ் எப்படி வந்ததென்கிற முகத்தை மறைத்துக்கொண்டு சொல்வதாக ஆஸ்மா ஒப்புக்கொள்கிறாள். தனது கடந்தகால வாழ்க்கையையும், அவள் எயிட்ஸ் நோயாளியானது எப்படியென்பதை விவரிக்கிறாள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில். அந்நிகழ்ச்சியில் பங்கெடுத்திருப்பது தனது தாய்தான் என்பதை அறிந்த அவளது மகளும்கூட, தனது தாய்க்கு எயிட்ஸ் நோய் வந்த விதத்தையும் அந்நோயோடு போராடிக்கொண்டிருப்பதையும் கண்டு மனமுருகிப்போகிறாள்.

நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரே ஆஸ்மாவுக்கு தன்னாலான நிதியினை பெயர்சொல்லாமல் வழங்குவதாகவும், அவளுடைய பித்தப்பை பிரச்சனையை தீர்ப்பதற்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதாகவும் படம் முடியும். ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமிது. உண்மை நிகழ்வில், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பின்னரும் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய யாரும் தயாராக இல்லாமல் போனதால், அவள் மரணித்துப்போனாள் என்பது தனிக்கதை.

அருவியின் கதை:

 

இ.பா.சிந்தன்ஒரு எளிய நடுத்தர வர்கத்து குடும்பத்தில் பிறந்த அருவி, எல்லோரைப்போலும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறாள். அன்பான அம்மா, அப்பா, தம்பி என அழகான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த அவளுக்கு, எதிர்பாராத நிகழ்வொன்றினால் எயிட்ஸ் நோய் வந்துசேர்கிறது. மிக மிக அபூர்வமாக பரவக்கூடிய ஒருமுறையில் அவள் எயிட்ஸ் நோயாளியாகிவிடுவதால், அவளது அந்த நிலைக்கு யாரைக் குறை சொல்வதென்றே தெரியாத சூழல் உருவாகிவிடுகிறது.

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதற்கு அவளே முழுமுதற்காரணம் என்று கூறி, அவளது ஒட்டுமொத்த குடும்பமும் அவளை நிராகரிப்பதோடல்லாமல், வீட்டைவிட்டே விரட்டிவிடுகிறது. எவ்விதத் துணையும் ஆதரவுமின்றி அவள் அங்குமிங்கும் பயணிக்கையில், மூன்று ஆண்கள் அவளை பாலியல் வன்புணர்வு செய்துவிடுகின்றனர் (அல்லது அப்படியான சூழலுக்குள் அவளைத் தள்ளி, எதிர்க்கமுடியாத நிலையினை உருவாக்கி, அவளைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்). ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைப் போன்றதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களை அணுகி, தன்னை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும், அவர்களிடமிருந்து நியாயம் கிடைக்கவேண்டுமென்றும் கேட்கிறாள். அந்நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அம்மூன்று பேரையும் நிகழ்ச்சிக்கு அழைத்துவந்து பஞ்சாயத்தைத் துவக்குகின்றனர். தாங்கள் தவரே செய்யவில்லை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் அவர்களிடம், தானொரு எயிட்ஸ் நோயாளி என்ற உண்மையினைக் கூறுகிறாள் அருவி. அவளுடன் உறவு கொண்டதினால், தங்களுக்கும் எயிட்ஸ் வந்திருக்குமோ என்று அஞ்சி அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்கின்றனர்.

அருவியை பாலியல் வன்புணர்வு செய்த மூவருக்கும் எயிட்ஸ் நோய்க்கான பரிசோதனை நடக்கிறது. அவர்கள் மூவருக்குமே எயிட்ஸ் நோய் இல்லையென்பது உறுதியாகிறது. பின்னர் அவர்கள் மன்னிப்புக் கேட்பதும், தனது அன்பின் மூலமாக அவர்களை அருவி மன்னிப்பதுமாக கதை நகர்கிறது. அதன்பிறகு எயிட்ஸ் நோயின் தாக்கத்தினால் அவள் அல்லலுறுவதும், இறுதியில் அவளைப் புறக்கணித்த அவளது அப்பா, அவளைப் பாலியல் வன்புணர்வு செய்த மூவர், அவளது நண்பர்கள் என அவளோடு பயணித்த அனைவரும் ஒன்றுசேர்ந்து அவளைச் சந்தித்து அவளிடம் அன்பு காட்டுவார்கள். அவளது அன்பையும், மன்னிப்பையும், துயரத்தையும், அவல நிலையையும் படம் பார்க்கிற பார்வையாளர்களுக்கும் கடத்திவிடுகிறாள் அருவி.

ஆஸ்மாவின் அரசியல்:

இ.பா.சிந்தன்தன்னுடைய கணவனுக்கு எயிட்ஸ் நோய் வந்துவிட்டதை அறிந்தபோதும், அவனுடைய குடும்பத்திற்கு ஒரு வாரிசைப் பெற்றுத்தர வேண்டும் என்கிற பிற்போக்குத் தியாக மனப்பான்மையால், அவனோடு உறவு கொண்டு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எயிட்சில்லாத ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆனால் அவள் கொண்ட உறவின் காரணமாக, அவளுக்கு எயிட்ஸ் தொற்றிக்கொள்கிறது. படத்தில் அவளுக்கு எயிட்ஸ் நோய் வந்ததற்கான காரணமாக சொல்லப்படும் இக்கதை, நிச்சயமாக முற்றிலும் புறக்கணிப்படவேண்டிய அரத்தல்ப்பழசான பிற்போக்குத்தனம் என்பது மட்டுமே ஆஸ்மா படத்தின் அரசியல் சறுக்கல். தனக்கு எயிட்ஸ் வந்ததற்கான காரணத்தை வெளியே சொல்லி ஆறுதல் தேடுவதைவிடுத்து, தனக்கான நீதியினை நிலைநாட்டுவதிலேயே அவள் கவனம் செலுத்துவாள்.

அதன்பிறகு ஆஸ்மா என்கிற படம் நகர்கிற புள்ளி ஒன்றே ஒன்றுதான். எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு, கிடைக்கவேண்டிய எந்த மருத்துவ உதவிகளும் கிடைக்காமல் போகிறபோது, அந்த உரிமைக்காகப் போராடுவது தான் படத்தின் மையக்கதை. எயிட்ஸ் நோயாளிகளும் மற்ற நோயாளிகளைப் போல நடத்தவேண்டும் என்கிற போராட்டக்குரல் அக்கதையின் நாயகியுடைய பாத்திரப்படைப்பில் அழுத்தம் திருத்தமாக பதிக்கப்பட்டிருக்கும். எந்த வழியில் எயிட்ஸ் வந்திருந்தாலும், எப்படியான தவறினை செய்து எயிட்ஸ் நோய் வந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் நோயாளிகளே என்பதையும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படவே கூடாது என்பதையும் ஆஸ்மா என்கிற கதையின் நாயகி தொடர்ந்து பேசுவாள்.

அருவியின் அரசியல்:

அருவி படத்தில் நிரம்பியிருப்பது அன்பும், அதனை எல்லோரிடத்திலும் செலுத்தவேண்டும் என்று விடாமல் வலியுறுத்தும் காட்சியமைப்புகளும் தான். அன்பு விலைமதிப்பற்றது தான் என்றாலும், அதனை அனைவருக்கும் வழங்கிடவேண்டும் என்பதிலும் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவேமுடியாது. இருப்பினும் அதிகாரத்தை எதிர்த்துக் குரலெழுப்பமுடியாமல் அபலைகளாக நிற்கிற மனிதர்களுக்கு எதிராக, தனக்கிருக்கும் மிகச்சிறிய அதிகாரத்தைக்கூட பயன்படுத்தி, சுரண்டி வாழ்கிறவர்களுக்கு சர்வசாதாரணமாக அன்பையும் மன்னிப்பையும் வழங்குதல் எப்படிச் சரியாக இருக்கமுடியும்?

ஏற்கனவே அவளுக்கு எயிட்ஸ் நோய் இருந்ததாலேயே, அவள் மூன்று பேரால் வன்புணர்வு செய்யப்பட்டதைக்கூட ‘அவள் சாகத்தானே போகிறாள். அதனால் இதுவொன்றும் பெரிய பிரச்சனையில்லை’ என்று மறைமுகமாகச் சொல்வதுபோல், வன்புணர்வினைக் குறித்து ஏதொன்றும் பேசாமல் திரைக்கதை நகர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

அதற்கு ஒருபடி மேலாக, மன்னிப்பு கேட்கவோ, தவறினை ஒப்புக்கொள்ளவோ கூட தயாராக இல்லாத ரேப்பிஸ்டுகளைக் கூட மன்னிக்கத் தயாராக இருக்கிற அருவி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பணியில் இருப்போரிடம் மட்டும் மிகக்கடுமையாக நடந்துகொள்வதும் அருவருப்பைத் தான் தருகிறது. இத்தனைக்கும் அவளுக்கு எயிட்ஸ் வந்ததற்கோ, அதற்காக அவளது குடும்பம் அவளைப் புறக்கணித்ததற்கோ, அவளை மூன்றுபேர் வன்புணர்ந்ததற்கோ பக்கம் பக்கமாக வசனம் பேசித்திட்டித் தீர்க்கும்  நுகர்வுவெறி காரணமாக இருக்கவில்லை. அவ்வளவு நீண்டநெடிய வசனத்தில் ஓரிடத்தில்கூட அவளது சூழலைப் பயன்படுத்தி வன்புணர்ந்தவர்களை விமர்சிக்கவே இல்லை. வெறுமனே கைத்தட்டு வாங்குவதற்காக வலிந்து திணிக்கப்பட்ட வசனமாகத்தான் அது இருக்கிறது.

எந்தக்காரணத்தாலோ, குடும்பத்திலிருந்து பிரிந்துவந்து தனித்துவாழ வேண்டிய சூழல் ஏற்படும் பெண்களுக்கு தொல்லை கொடுக்கத் தயாராக இருக்கும் ஆணாதிக்க சமூகத்தை மிகவன்மையாக சாடியிருக்கவேண்டிய இடங்கள் படம் முழுக்க இருந்தும், அருவியும் இதர கதாபாத்திரங்களும் அதில் மயான அமைதி காத்தனர்.

அதிகாரமற்ற மக்களுக்கு எதிராக அதிகாரத்திலிருப்பவர்கள் செலுத்தும் அதிகாரமும் வன்முறைகளும் தான் உலகத்தின் சமநிலையற்றத்தன்மைக்கு முழுமுதற்காரணமாக இருந்துவருகிறது. ஹிட்லர்களும், இராஜபக்சேக்களும், நரேந்திர மோடிக்களும் அதிகாரமற்ற யூதர்கள் மீதும், தமிழர்கள் மீதும், இசுலாமியர்கள் மீதும் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளை எப்படி எதிர்க்கிறோமோ, அப்படியாகத்தான் அருவிமீது அந்த மூவர் நிகழ்த்தும் பாலியல் வன்புணர்வையும் பார்க்கவேண்டியிருக்கிறது. இரண்டுக்கும் வேறுபாடில்லை. பணமோ, மதமோ, சமூக அந்தஸ்தோ, அல்லது வேறு ஏதோவொரு வகையில் சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாகவே அருவியின் மீது வன்முறையைப் பிரயோகித்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூவருக்கும் உள்ள ஒற்றுமையும் கூட அதிகாரத்திமிர் தான். இவளை என்னசெய்தாலும் யார் கேட்பார்கள் என்கிற அதிகாரத்திமிர்தான் அது.

தான் புறக்கணிக்கப்படுவதற்கும், சுரண்டப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் தன்னுடைய தவறுகள் எதுவுமே காரணமல்ல என்றும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பொதுப்புத்தியும் மனிதத்தன்மையற்றத் சூழலும்தான் காரணமென்று அருவி எப்போது புரிந்துகொண்டு குரலெழுப்பவே இல்லை. அனைவரிடமும் அன்பு செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதையே படம் முழுக்க செய்ய முனைகிறாள். ஆனால் உள்ளூர் அரசியல் முதல்  உலக அரசியல் வரை அலசிக்காயப்போடும் அருவியின் கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள், இதனை தெரியாமல் விட்டிருக்கமுடியாது.

அவளுடைய வாழ்க்கைப் பயணத்தில், யார்மீது கோபப்படவேண்டும், யாரிடம் அன்பு செலுத்தவேண்டும்,  எப்போது தண்டிக்கவேண்டும், எப்போது மன்னிக்கவேண்டும், எதற்காகக் குரலெழுப்பவேண்டும் என எதையுமே சரிவர சொல்லாமல், “எல்லோரிடமும் எப்போதும் அன்பு செலுத்து” என்று சொல்வது நிச்சயமாக சரியான வாதமாக இருக்கவேமுடியாது.

ஆஸ்மா படத்தில் எயிட்ஸ் நோய் வந்ததற்காக சொல்லப்படும் காரணத்தின் அரசியல் ஆபத்தானது. இருப்பினும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தனக்கான உரிமைக்காகவும் தன்னைப்போன்றவர்களின் உரிமைக்காகவும் இறுதிவரை போராடும் ஆஸ்மா போற்றுதலுக்குரியவள். அருவி பேசும் அரசியலோ முற்றுமுழுதுமாக ஆபத்தானது. அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் நிகழ்த்தும் கொடூரங்களைக் கண்டிக்காமலும், அதிகாரத்தை எதிர்த்துக் குரலெழுப்பாமலும், வெறுமனே “அன்பு செலுத்து, அன்பு செலுத்து” என்பதெல்லாம், “அமைதி, அமைதி” என்று ஷிங் சான் சொல்வதைப் போலாகிவிடும்.

இ.பா.சிந்தன்-பெல்ஜியம்

இ.பா.சிந்தன்

(Visited 60 times, 1 visits today)