இப்படியாக அவளின் சில காதலர்கள்-சிறுகதை-லக்ஷ்மி சரவணகுமார்

இன்ன நிறமெனத் தெரியாமல் மங்கிப்போன சுவர்களுடைய இந்த குடியிருப்பில்  ஒவ்வொரு தொகுப்பிலும் இருபத்து நான்கு வீடுகள். மொத்தம் பணிரெண்டு தொகுப்புகள். மனிதர்கள் உறங்குவதற்கும் சமைப்பதற்கும் குளிப்பதற்கும் அளவெடுத்து கட்டப்பட்ட அறைகள். படுக்கையறையின் சுவற்றிலிருந்து விலகினதும் கழிவறையின் சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும், அத்தனை சிக்கனம். புறாக்கூடுகளை விடவும் சற்றே பெரிதான  இந்த வீடுகளைத் தேடி மனிதர்கள் வந்தபடியேதான் இருக்கிறார்கள். நெருக்கடியில் வாழப்பழகியபின் மனிதர்கள் அடிப்படைத் தேவைகளில் புகார் கொண்டிருப்பதில்லை.  பெருநகரின் மையத்தில் அரசாங்கத்தின் பொறுப்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த குடியிருப்பின்  வயது இரு தசாப்தங்களைக் கடந்துவிட்டது. சுற்றிலும் போகன் வில்லா மரங்களும் மஞ்சள் நிறக் கொன்றை மரங்களும்  அடர்திருந்தாலும் ஆங்காங்கு தேங்கிய குப்பைகளால் பகலில் கூட கொசுக்கள் மொய்க்கும். கோடை காலத்தின் இறுதி நாட்களில்  இந்தப் பகுதி முழுக்க உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிறக் கொன்றைகளை  மனிதர்களுக்கு இயற்கை தந்த ஆறுதலெனச் சொல்லலாம். அதிகாலைகளில்  அந்த மலர்களைக் காணும் ஒருவனுக்கு உலகின் மீதான அத்தனை வெறுப்புகளும் மறைந்து நித்தியமானதொரு புன்நகை முகத்தில் தோன்றும்.

ஈஸ்வரனின் வீடு  முதல் தொகுப்பின் இரண்டாவது தளத்திலிருந்தது. படுக்கையறையின் ஜன்னலிலிருந்து   பக்கத்து வீதியைக் காண முடியும். விசாலமாக எல்லா வசதிகளுடனும் கூடிய தனி வீடுகள்.  அமைதியில் ஆழந்து கிடக்கும் அந்த வீதியிலிருக்கும் வீடுகளைப் பார்க்கையில் ஈஸ்வரனுக்கு ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. ஆனால் காலை நேரங்களில் அந்த வீதியின் முனையிலிருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வரும் பெண்களைப் பார்க்க பிடிக்கும். தொடர்ந்து பெண்களின் உடலை தாபத்தோடு பார்க்கும் கண்களுக்கு அளவுக்கதிகமான ஒரு திருட்டுத்தனம் வந்துவிடும் போல, ஈஸ்வரனின் கண்களில் குறுகுறுப்பும் திருட்டுத்தனமும் பெருகி வழியும். ‘இந்தக் கண்ணு ஏன் ஒரு இடத்துல நிக்க மாட்டேங்குது. ஒரு நாளைக்கு எவளாச்சும் அப்டியே நோண்டி எடுத்துட்டுப் போகப் போறா பாரு.’ என சாந்தி கோவமும் எரிச்சலுமாய்  சொல்வதை அவன் பொருட்படுத்துவதில்லை.  அவன் வாழ்வின் ஆகப்பெரிய பொழுதுபோக்கும் சந்தோசமும் அதுதான். யாரிடமும் நெருங்கிச் சென்று பேசவோ  இச்சையை வெளிப்படுத்தவோ துணிச்சலில்லை என்பதோடு தன்னை மற்றவர்கள் நல்லவனாய்ப் பார்க்க வேண்டுமென்பதில் கவனமாய் இருப்பான். அதனாலேயே மனதில் தோன்றுவதை பிறரிடம் வெளிப்படுத்துவதில்லை. ஜன்னலுக்கு அருகாக நின்று தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனிடம் ‘ஏங்க, ஊர்ல இருந்து மாமா வாராரு. எக்மோர் போயி கூட்டிட்டு வாங்க.” என சலனப்படுத்தினாள். ‘எந்த மாமா?” என இவன் புரியாமல் கேட்க, குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டிருந்த கையோடு சாந்தி அவனை முறைத்தாள். “அன்பு மாமா. கோமதி அக்கா வீட்டுக்காரரு.”  ’ அவன் எதுக்கு வர்றான்?’ என தனக்குள்ளேயே முனகிக் கொண்டான். அந்த மனிதரோடு பெரிய பழக்கமோ நட்போ எதுவுமில்லை. விசேச தினங்களில் அரிதாக ஊரில் பார்த்தால் பொதுவாக பேசிக் கொள்வதோடு சரி. வேண்டாவெறுப்பாக உடையணிந்து  கிளம்புகையில் வெய்யிலேறாத அந்த நாள்  மந்தமாய்த் துவங்கியிருந்தது. மண் சாலையெங்கும்  விரவிக் கிடந்த மஞ்சள் நிறக் கொன்றைகளில் எப்போதும்போல் அவன்  லயிக்கவில்லை.

அவனை அழைத்து வருவதற்கு ரயில் நிலையத்திற்கு சென்றபோது  மழை காலத்தில் உறங்காத  நுணலின் இரைச்சலைப்போல் ஈஸ்வரனின் எண்ணங்கள் வானுக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்தன.  இதற்கு முன்பு அன்பு ஒருமுறை இங்கு வந்திருந்தபோது இரண்டு நாட்கள் தங்கியிருந்தான். சாந்தியை போ வா என ஒருமையில் அழைத்தது இவனுக்கு உறுத்தலாக இல்லை. இரண்டு பேரும் மணிக்கணக்காக ஊர்க்கதைகளை பேசிக்கொண்டிருந்த பகலில் இவன் வேலைக் களைப்பில் அயர்ந்து உறங்கிப் போயிருந்தான். அன்புவின் மீது ப்ரியங்களோ அக்கறைகளோ இருக்கும் எந்த சாயலையும் சாந்தியின் முகத்தில் கவனித்திருக்கவில்லை. அவன் உறங்கியெழுந்து எப்போதும் போல் வேலைக்குச் சென்றான்,  அடுத்த நாள் இரவு தான் வீடு திரும்பினான். அன்றிரவு இவனும் அவனும் ஒன்றாக மதுவருந்தினார்கள்.  ஒரு சகோதரனின் இணக்கத்தை மது நிரம்பிய வேளைகளில் அன்புவிடம் உணர்ந்திருந்தான்.  மது  மனிதர்களுக்கு இடையிலிருக்கும் அந்தரங்க மனத்தடைகளை மிக எளிதில் உடைத்தெறிந்து விடுகிறது.  அந்த இணக்கம் இன்று அவனிடத்தில் இல்லையோ என ஐயப்பட்டான். ‘என்ன பங்காளி போன தடவ பாத்தப்போ லார்ஜ் சைஸ் ல இருந்தீங்க இப்ப டபுள் எக்ஸல் சைஸுக்கு ஆயிட்டீங்க’ என அன்பு உரிமையோடு கேலி செய்தது தன் தோற்றத்தின் மீதான அவமானமாக இவனுக்குத் தோன்றியது.  சிரித்தபடியே ‘அட நீங்க வேற, சரியா தூக்கமில்லாம அலைச்சல். அதான் கொஞ்சம் வெய்ட் போட்றுச்சு. நீங்க குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க, நான் போயி கறி எடுத்துட்டு வரேன்.’ என்று சமாளித்தான்.

காற்றே இல்லாத  பகலின் வெக்கையை விடவும் அன்புவின் வருகை  ஈஸ்வரனுக்கு எரிச்சலூட்டியது. அரசு போக்குவரத்து கழகத்தில் நீண்ட தூர பேருந்திற்கு ஓட்டுநராக பணி செய்யும் அவனுக்கு ஒருநாள் வேலை ஒருநாள் விடுமுறை என்பதாக அலுவல். இன்று  வேலை நாள், இந்த மாதத்தில் முன்னமே இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டதால் அவசரமென காரணமும் சொல்ல முடியாது. ஈஸ்வரனின் பதட்டமான கண்கள் வீடெங்கும் சந்தேகத்தைத் விதைத்தபடியே இருந்தன. திருமணமான இத்தனை வருடங்களில்  எத்தனையோ இரவுகள் சாந்தி தனியாக உறங்கி இருக்கிறாள். அப்பொழுது உறவினர்கள் வந்து தங்கிப் போனதில் அவன் எந்தவிதத்திலும் தொந்தரவிற்கு உள்ளானதில்லை. குழந்தைகளுக்கும் மனைவிக்குமான இடமாகவே வீட்டை அவன் நினைத்திருந்ததால் உறவினர்களின் வருகை அவனுக்கு  உவகையானதே. இன்று தெரிந்த மனிதனின் வருகையால் இனம் புரியாத தொந்தரவிற்குள்ளான தனது இயலாமையை நினைத்து கழிவிரக்கம் கொண்டான்.

சாந்தியின் கண்களில் எப்போதுமிருக்கும் நிதானம். எதற்காகவும் ஏங்கி வியர்த்துப்போன கழுத்தோ அச்சத்தின் காரணமாய் நடுங்கின விரல்களோ இன்றி  தனக்குப் பழக்கப்பட்ட சுவர்களுக்குள் அங்குமிங்குமாய் அலைந்து வேலை செய்து கொண்டிருந்தாள். எப்போதும் போலவே இருக்கிறாள். ஆனால் ஏன் தன்னால் முடியவில்லை?  தன்னால் இயல்பாய் இல்லாதபோது அவளால் மட்டும் எப்படி இருக்கமுடியுமென்கிற கேள்வியும் சந்தேகங்களும் முகத்திலறைந்த ஒவ்வொரு நொடியும் அவள் கள்ளத்தனம் செய்கிறவளாகவே தெரிந்தாள். அந்த உடலின் மதர்ப்பில் கூடலுக்கான அழைப்பு  அதீதமாய் வெளிப்படுவதாய் உணர்ந்தான். அது தனக்கானதாக இல்லையென  யோசிக்கும் நேரமெல்லாம் வெறுப்பும் கூடவே ஓர் ரகசிய கிளர்ச்சியும் வருவதைத்தான் அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

0000000000

சில மாதங்களுக்குமுன்  ஈஸ்வரனும் சாந்தியும் உதயம் திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றிருந்தனர். இந்த நகரில் எழுபது ரூபாய் கட்டணத்தில் படம் பார்க்க முடிகிற ஒரே இடம் இதுதான். நடுத்தர வர்க்கத்தினரின் மீதான திரையரங்கத்தினரின் இந்தக் கருணையினால்,  குடும்பத்தோடு படம் பார்க்க பெருவாரியான மக்கள் இங்கு வருவதுண்டு.  அசோக்நகர், கே.கே.நகர், கிண்டி,ஜாஃபர்கான் பேட்டை, வடபழனி, கோடம்பாக்க பகுதி இளைஞர்களுக்கும் உதயம் தியேட்டர் முக்கியமானதொரு புகலிடம்.அதனாலேயே  வார நாட்களில் கூட இங்கு கூட்டம் குறைவதில்லை. மாதத்தில் இரண்டு முறையாவது ஈஸ்வரன் அவளை இங்கு  கூட்டி வந்துவிடுவான். குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வது ஒரு காரணமென்றாலும் இன்னொரு காரணமிருந்தது.  பொது இடங்களில் ஈடுபடும் சின்ன சின்ன விளையாட்டிலும் சீண்டலிலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. ஈஸ்வரன் அதைப் பெரிதுமே விரும்புவான். அவளும் சிரித்தபடியே அனுமதிப்பாள்.  இவனின் வினோதமான விருப்பங்களை திருமணமான இத்தனை வருடங்களில் பார்த்து பழகிவிட்டது. இவன் மட்டுந்தான் இப்படியா? இல்லை எல்லா ஆண்களும் இப்படித்தானா?  பசி தீர தீர சாப்பிடக் குடுத்தாலும் போதாமையோடு  திரும்பத் திரும்பத் தேடியலைவது. அதிலும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு இடங்களில்.  வாழ்வின் சின்ன சின்ன சாகசங்களென்று  அவன் இதை நம்புவதால் விருப்பமில்லாத போதும் அவள் அனுமதிப்பதுண்டு.  கடற்கரை, கோவில், திரையரங்கமென இடம் எதுவாக இருந்தாலும் கூட்டத்தின் நடுவில் அவன் கைகள் திருட்டுத்தனமாய் இவளுடலில் அலையத் துவங்கிவிடும்.

அவள் அவனின் தோள் உயரம் தான், கொஞ்சமும் தளராத மாரும் மடிப்புகளற்ற இடையும் எப்போதும் கவர்ச்சியானவளாகவே வைத்திருக்கிறது. அதுகுறித்த பெருமிதங்களும் அவளுக்கு இல்லாமல் இல்லை. திரையரங்கின் கதவுகள் திறந்து கூட்டமாய் மக்கள் நுழைகையில்  ஒரு பக்கமாக குழந்தைகளை அணைத்துக் கொண்டு இன்னொருபுறம் அவளின் இடையை இறுகப்பற்றினான். அந்தக் கைகளில் இருந்த சூட்டின் காரணத்தைப் புரிந்து அவள் திரும்பி சிரித்தாள். அவர்களோடு நடந்த வந்த இளைஞர்களில் ஒருவன் யதார்த்தமாக படுவதுபோல் தனது வலது கையால் அவளின் பின்புறத்தை தடவிக் கொண்டு சென்றான். சாந்தியும் ஈஸ்வரனும் ஒரே நேரத்தில் அதனைக் கவனித்தபோதும் சூழல் கருதி கடந்து சென்றனர். திரையரங்கின் குளிர்ச்சியை மீறி இன்னும் ஈஸ்வரனுக்கு சட்டைக்குள் வியர்த்துக் கொண்டிருந்தது. காற்றில் முகம் தெரியாத அந்த இளைஞனின் கைகள் தன் முன்னால் அலைபாய்ந்தபடியே இருப்பதாக நினைத்தான். தற்காலிகமாக அந்தச் சிந்தனையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.   வாட்ஸப்பில் அமெரிக்காவின் ஒரு மாகானத்தில் மக்கள் சிவனை வழிபடுகிறார்கள் என்கிற செய்தி வீடியோ ஆதாரங்களுடன் வந்திருந்தது. ஆர்வமாக அதை ஓடவிட்டவனின் தோளில் சாந்தி தட்டி ‘லூசு தியேட்டர்ல வந்துட்டு எதுக்கு ஃபோன நோண்டிக்கிட்டு இருக்க.?’ எனக் கேட்டாள். ‘அமெரிக்காவோட ஆதிக் கடவுள் சிவனாம்? இப்பத்தான் வாட்ஸப் ல வந்திருக்கு.’ என முகத்தை தீவிரமாக வைத்தபடி சொன்னான். ‘நீவேற போனவாரம் ஒரு நியூஸ் வந்துச்சு சிவன் ஒரு ஏலியனாம். எவனாச்சும் லூசுக்கூதித்தனமா அனுப்பினா அப்பிடியே நம்புவியா? பேசாம படத்தப் பாரு.’ என்று சிரித்தாள். ஈஸ்வரனுக்கு சிவனைப் பற்றி யோசிப்பதா சற்றுமுன் கடந்துபோன இளைஞனைக் குறித்து யோசிப்பதாவெனக் குழப்பம்.  அச்சமும் தடுமாற்றமும் நிறைந்த அந்த இளைஞனின் கைகள் ஒரு பெண்ணின் அருகாமையை அறிந்திராத கைகள். மைதுனத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் உடலின்பத்திற்கான சாத்தியங்கள் இல்லாத இப்பெருநகரின் ஏராளமானோரில் ஒருவன். சில வருடங்களுக்கு முன் இப்படியான கூட்டங்களில் உரசிய பெண்கள் தந்த கிளர்ச்சியெல்லாம் அவன் நினைவுக்கு வந்தன. “என்ன யோசிக்கிற?” அவள் தான்  அமைதியைக் களைத்தாள். திரும்பிப் பார்த்து இருளினூடாக “ம்.. ஒன்னுமில்ல.” என சிரித்தான்.

அவனுக்கு படம் பிடிக்கவில்லை. இடைவேளையிலும் படம் முடிந்து வெளியே வந்தபோதும் அவன் கவனமெல்லாம் சாந்தியை பார்வையால் தழுவிச் செல்லும் ஆண்களின் பக்கமாகவே அலைந்தது. அந்தப் பார்வைகள் அவள் குறித்தான இவனின் கிளர்ச்சியை வேறெப்போதும் இல்லாதபடி அதிகமாக்கின. அவனின் முகபாவனைகளில் இருந்து அவனது எண்ணத்தை ஒருவாறாக புரிந்து கொண்ட சாந்தி முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தாள். வழியில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சிக்னலில் அவன் ப்ரேக் அடித்து நிறுத்தியபோது இன்னும் அடங்காத வெக்கையில் உடல் வியர்த்துக் கொட்டியது. சுற்றிலும் அவனைப் போலவே வியர்த்து வடிந்த முகங்கள். தற்செயலாக கண்களை சுழல விட்டபோது தனக்கு அருகிலிருந்த வண்டிக்காரன் திருட்டுத்தனமாய் சாந்தியைப் பார்ப்பது தெரிந்தது. அவள் சேலையை மீறி அளவாய் திமிறிக் கொண்டிருந்த இடையையும், ஜாக்கெட் மூடிய ஒரு பக்க முலையையும் கண்டு அவன் கண்கள் விரிவதைக் கவனித்தபோது சிக்னலில் பச்சை விளக்கிற்கு மாறியிருந்தது. வண்டியை வேகமாக செலுத்தினான். ஏனோ இன்று வீடு தூரமாய்த் தெரிந்தது.

குழந்தைகள் உணவருந்தச் சென்ற இடைவெளியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுவை எடுத்துக் குடித்தான். சில இரவுகளை நிதானமாக கடப்பதென்பது எளிதானதல்ல. ”சாப்பிட வா..” சாந்தியின் குரலில் களைப்பு மிகுந்திருந்தது. சட்டையில்லாத உடலுடன் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு எழுந்தான். குடித்த பிராந்தி  வியர்வையாய் உடலெங்கும் பூத்திருந்தன. அவள் கண்களை பார்க்க முடியாமல் பார்வையை தாழ்த்தியபடி சாப்பிடத் துவங்கினான். சாப்பிடும் போதே திரும்பி குழந்தைகள் உறங்குவதை கவனித்தான். ”ரொம்ப நேரமா என்ன யோசிச்சுட்டு இருக்க?” அவன் கள்ளத்தனம் செய்வது  தெரிந்து கேட்டாள். ‘அதுவா, அது ஒன்னுமில்ல வுடு.” சோற்றைப் பிசைந்து சாப்பிடத் துவங்கினான். “ம்ஹும், என்னவோ இருக்கு. ஒழுங்கா சொல்லிடு.” சாப்பிட்டுக் கொண்டிருந்தவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள். அவனுக்கு சொல்வதா தவிர்ப்பதாவென்று குழப்பம். ஆனால் இப்போது சொல்லாமல் போனால் இன்னும் கொஞ்ச நேரத்திற்குப் பிறகான போதையில் வேறு மாதிரியாக உளறிவிடுவோமென்கிற பயம்.  தயங்கியபடியே “சொல்லுவேன் திட்டக் கூடாது.” என்றான். ‘ம்ம்ம்’ என தலையசைத்தாள். ”தியேட்டர்ல அந்தப் பையன் உன்னத் தடவினான் ல அத யோசிச்சு பாத்தேன். பாவம் ல.” முகத்தை அப்பாவியாகக் கேட்டான்.  அவம் போதையில் உளறவில்லை, தெளிவாக நீண்ட நேரம் யோசித்துதான் இதைச் சொல்கிறானெனத் தெரிந்துகொண்ட சாந்தியின் முகம் மாறியது. அவள் முகத்தின் கோணலைக் கண்டதும் ஈஸ்வரன் அசட்டுத்தனமாய் சிரித்தான். “த்தூ, நீயெல்லாம் ஒரு ஆம்பள. வயசு ஆக ஆக உனக்கு மூள மங்கிப் போகுமா?” இவன் தலையைத் தூக்கி அவளைப் பார்த்து சிரித்தான். “வெக்கமில்லாம சிரிக்கிற. தாயோலி அவன இழுத்து நாலு அறவிடாம, பாவமாம்.” எனத் திட்டியபடியே கோவமாக எழுந்து கொண்டாள். “நா என்னடி தப்பா சொல்லிட்டேன். எவ்வளவு பேர் உன்னய பாக்கறாங்க தெரியுமா?” அவனுக்கு சாப்பாட்டிலிருந்து ஆர்வம் இவள் பக்கமாய்த் திரும்பியது. “அதுக்கு?” முறைப்போடு அவனைப் பார்த்தாள். தடுமாறி நின்ற வார்த்தைகளை கேட்க துணிவில்லாமல் நான்கைந்து பருக்கைகளாய் எடுத்துச் சாப்பிட்டான். “வேணாம் விடு, சொன்னா கோவப்படுவ.”  என்றவாறே சோற்றைப் பிசைந்தான். “கோவம் வரும்னு தெரியுதில்ல. அப்ப அத யோசிக்கவே கூடாது.” அவளிடம் முன்னளவிற்கு கடுமையில்லை. “யோசிக்க வேணாம்னு தான் இருந்தேன். ஆனா இது நம்மளுக்குள்ளதான. அதனால கேக்கறேன். கோச்சுக்காம சொல்றியா? .” அவள் அவனுக்கு பதில் செல்ல விரும்பாதவளாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சாப்பிட பிடிக்காமல் அவன் உணவுப் பாத்திரங்களை எல்லாம் எடுத்துவைத்துவிட்டு புகைப்பதற்காக வீட்டிற்கு வெளியில் வந்தான்.  பிரகாசமான சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் அந்தப் பகுதியிலிருந்த வீடுகள் துர் சம்பவம் நடந்து முடிந்த இடமாய்க் காட்சியளித்தன. காமத்தைத் தொடர்ந்து வரும் பேராசையின் வினோதங்களை எல்லாம் முதல் முறையாய் எதிர்கொண்ட படபடப்பு அவனிடம்.  நரம்புகளில் புதுவிதமான ஆர்வங்கள்   பரவியோடிக் கொண்டிருந்ததால் புகைத்தல் ஆசுவாசமாகவும் களிப்பாகவும் தோன்றியது. சாந்தியின் வனப்பையும் ஸ்பரிசத்தையும் தன்னுடல் தீவிரமாய் எதிர்பார்ப்பதை உணர்ந்து கொண்டவன் பாதியிலேயே சிகரெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு உள்ளே சென்றான். துருப்பிடித்த தாழ்ப்பாள் கதவை சாத்த விடாமல் சிரமம் கொடுக்க எரிச்சலோடு முழங்காலால் நகர்த்தி தாழிட்டான். வீடு முழுக்கவே இரவு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் ஆழ்ந்திருக்க, நைட்டிக்கு மாறியிருந்த சாந்தி குழந்தைகளிடமிருந்து விலகி விரிக்கப்பட்டிருந்த பாயில் படுத்திருந்தாள்.

கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டால் உடல் வியர்வையைத் துடைத்துக் கொண்டவன் சிகரெட் வாடை தெரியக் கூடாதென்பதற்காக வாயைக் கொப்பளித்தபின் படுக்கையறைக்குள் நுழைந்தான். அவள் உறங்கியிருக்கவில்லை. வெறுமனே தனது அலைபேசியில் நோண்டிக் கொண்டிருந்தாள். லுங்கியைத் தளர்த்தியபடி அவளருகில் படுத்தவன் தன் பக்கமாய் இழுத்தணைத்தபடியே அவளது அலைபேசியைப் பார்த்தான். முகநூலில் எப்போதோ அவள் மாற்றியிருந்த ஒரு புகைப்படத்திற்கு  சிலர் பின்னூட்டமிட்டிருந்தார்கள்.  அவளுடலெங்கும் தடவியவனைத்  திரும்பி  பார்த்தவள் “தூக்கம் வரலையா?” என சிரித்தாள். மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடுவில் அவளுக்கு வியர்த்திருந்தது. ஈஸ்வரன் அவளின் கழுத்துக்குள் முகம் புதைத்து முத்தமிட்டபடியே கீழிறங்க அவளும் அலைபேசியைக் கீழே வைத்துவிட்டு அவனோடு ஒத்துழைத்தாள். தனக்குக் கீழிருந்தவள் வெவ்வெறு பெண்களாய் மாறினாள், நினைவில் சேகரித்திருந்த அத்தனை பெண்களின் உடல்களையும் ஒருசேர நினைத்தபடி  சீரான வேகத்தில் முயங்கினான். நான்கு நாட்களுக்குப் பிறகு நிகழும் இந்த புணர்ச்சியில் அவனிடம் வெளிப்பட்ட புதிய ஆர்வங்களால் திக்குமுக்காடிப் போனாள். திருமணமான நாட்களில் இருந்த உற்சாகத்தை  திரும்பவும் வெளிப்படுத்துகிறான். நீண்ட கலவிக்குப் பிறகு எழுந்து கொள்ள மனமில்லாமல் களைத்துப் போய் படுத்திருந்தார்கள்.

கண்கள் திறந்த நிலையிலேயே சாந்தி விட்டத்தைப் பார்த்து மெல்லிய ஒலியில் சிரித்தாள். அவன் ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொண்டிருந்தான். ”எதுக்கு சிரிக்கிற?” சாந்தி எதுவும் சொல்லாமல் தொடர்ந்து சிரித்தாள். எழுந்து உடலின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அவளைத் தன்பக்கம் இழுத்தபடி திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டான். ‘எதுக்கு லூசு சிரிக்கிற?”  தன் சிரிப்பு உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்பிவிடக் கூடாதென்கிற கவனத்தோடு சாந்தி  சன்னமான குரலில் “உண்மையச் சொல்லு எவள நினைச்சிட்டு இவ்ளோ நேரம் செஞ்ச?” எனக் கேட்டாள்.  நேரடியான அந்தக் கேள்வியில்  ஒருநொடி துணுக்குற்றாலும் அதுதான் உண்மை என்பதை சொல்லாமல் சிரித்து மழுப்பினான். “மழுப்பாம உணமையச் சொல்லு.”  விடாப்பிடியாய் திரும்பவும் கேட்டாள். “இன்னிக்கி பாத்த படத்துல ஹீரோயினுக்கு அக்காவா ஒருத்தி நடிச்சிருந்தாளே  பொசு பொசுன்னு..” அந்த நடிகையின் பெயரை யோசித்தான் தெரியவில்லை, அவளுக்கும் தெரியவில்லை. ஆனால் ஆச்சர்யப்பட்டு . “அவளையா?” எனக் கேட்டாள். “ஆமா ஆரம்பிக்கும் போது அவ, அப்பறம் மதியானம் புஹாரில சாப்பிடும் போது பக்கத்து டேபிள் ல பாத்தமே ஒரு பொண்ணு.” சாந்திக்கு அந்த இன்னொரு பெண்ணின் முகம் நினைவிற்கு வரவில்லை. “ரெண்டு பேர நெனச்சுட்டா எங்கூட இருந்த?” அவளின் முகம் சுருங்கியது. “இல்லடி கடைசியா முடிக்கும் போது…” என அவன் இழுத்தான். “ஓ ஒரு நேரத்துல மூணு பேர் கேக்குதா உனக்கு? சரி மூணாவது யாருன்னு சொல்லு.” அவன் தயங்கினான். “முழுங்காம  சொல்லிடு.” அவள் அதட்டும் தொனியில் கேட்க, “நம்ம எதிர்வீட்ல இருக்கால்ல கீதா. அவ.” என  சிரித்தான். அவ்வளவு நேரமும் பொறுமையாக படுத்திருந்த சாந்தி ஓங்கி அவன் வயிற்றில் உதைத்தாள். “த்தூ. தாயோலி, எந்திரிச்சுப் போடா.” அவள் ஆத்திரமாகக் கத்தியதைப் பார்த்ததும் பயந்து போய் ஈஸ்வரன்   “நீதான கேட்ட அதான் சொன்னேன். அதுக்கு ஏன் திட்டற?” என்றான். “உனக்கெல்லாம் வெக்கமா  இல்ல, அவள மூஞ்சிக்கு நேராப் பாக்கறப்பல்லாம் தங்கச்சி தொங்கச்சிங்கறது… ராத்திரி எங்கூட படுக்கறப்போ அவள நெனச்சுட்டு படுக்கறது… நீயெல்லாம் மனுஷனா. வெளில போ மொதல்ல.” படுத்திருந்தவள் தலையை வாரிச் சுருட்டிக் கொண்டு வேகமாக எழுந்து கொண்டாள். எளிதில் தன்னை அவள் வீழ்த்திவிட்டாளோ என்ற இயலாமையும் கோவமும் சேர, “ஏன் நீ மட்டும் என்னவாம் தியேட்டர்ல  உன்னத் தடவுன பையன நெனச்சுட்டுதான இவ்ளோ நேரம் படுத்திருந்த.” என்றான். ”அடச்சை. உன்னமாதிரி சில்ற புத்தி இல்ல எனக்கு. எவன் கூடயாச்சும் படுக்கனும்னா நேரா போயி அவன்கூட படுப்பேன். அவன நெனச்சுக்கிட்டு உங்கூட படுக்க மாட்டேன். நீயெல்லாம் ஒரு ஆம்பளன்னு. போடா வெளிய.”. அவளை எதிர்கொள்ளத் துணிவின்றி  அந்த அறையிலிருந்து வெளியேறிய நொடியில் படுக்கையறையின் கதவுகளை இறுக சாத்தி தாளிட்டாள்.

00000000000

இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வருகையில் பேருந்தில் நல்ல கூட்டம். பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்வதற்காக வந்த  பக்தர்கள். நான்கு பேருந்துகளில் ஏற வேண்டியவர்களை  ஒரே பேருந்துக்குள் அடைத்தது போல் இடைவெளியில்லாமல் மனிதர்கள். எல்லா பெளர்ணமியிலும் அப்படித்தான். ஓட்டுநர் இருக்கையைத் தவிர்த்து கிடைக்கிற இடத்திலெல்லாம் ஆட்கள் உட்கார்ந்தும் நின்றும் வருவார்கள்.  ஈஸ்வரனுக்கு அண்ணாமலையாரின் மீது அலாதியானதொரு பக்தியுண்டு. சரியான வயதில் வேலை கிடைத்து திருமணம் குழந்தைகளென தன் வாழ்க்கை ஆரோக்கியமாய் அமைந்தது அண்ணாமலையார் தந்த வரமென நம்புவான். அதனாலேயே இந்த வழித்தடத்தில் ஓட்டுநராய் இருப்பது அவனுக்கு எப்போதும் உற்சாகமானதொன்றாக இருக்கும். நெடுஞ்சாலையின் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் மனிதர்கள் ஒருவிதத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். யாரோடும் பேசத் தேவையில்லாமல் விழித்திருக்கக் கூடிய நீண்ட இரவுகள் கிடைக்கப்பெற்றவர்கள்.  இவன் நடத்துநரோடுகூட அதிகம் பேசுவதில்லை. சன்னமான ஒலியில் ரேடியோவில் பாடலை ஒலிக்கவிட்டு சாலையை வேடிக்கை பார்த்தபடியே வண்டியை ஓட்டுவதில்தான் உற்சாகம்.

அன்று  வண்டியக் கிளப்புவதற்கு முன்பாகவே கவனித்திருந்தான் முன் இருக்கையில் ஒரு பெண் தன் குழந்தையோடு அமர்ந்திருந்தாள்.  சரியாக இவனின் இருக்கைக்கு எதிர் இருக்கை.  காலையிலிருந்து விரதமிருந்தது, அண்ணாமலையாரின் மீதிருந்த பக்தியெல்லாம் காணாமல்போய் அந்தப் பெண்ணையே மேய்ந்து கொண்டிருந்தான். யாரோ தன்னை நீண்ட நேரமாக கண்கானிப்பதுபோன்ற அச்சமெழ திரும்பிப் பார்த்தான். இருளில் திருவண்ணாமலையின் வெக்கை நிரம்பிய மலையின் கண்கள் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தன.  மனதின் பதட்டங்களைக் காட்டிக் கொள்ளாமல் தனது இருக்கையில் ஏறி அமர்ந்துகொண்டான்.  பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க கண்ணாடியைப் பார்க்க வேண்டுமென்றால் அவளையும் பார்த்துதான் ஆக வேண்டும். பேருந்து கிளம்பியதிலிருந்து சாலையைக் கவனிக்கும் பாவனையில் அவளைக் கவனித்தபடி  வந்தான்.  அருகில் பேருந்தின் இந்த மங்கலான வெளிச்சத்தில் அவள் அசாத்தியமான உயரமும் இடுங்கிய கண்களும் கொண்டவளாய்த் தெரிந்தாள். போதையூட்டும் அத்தனை அம்சங்களும் மிகுந்து கிடந்தவள் அவனை முதல் தடவையாய்ப் பார்த்தபோது இயல்பாய்ச் சிரித்தாள். பேருந்துச் சூட்டில் தாமதமில்லாமல் அவன் குறி விறைத்தது. இந்தப் பசிதான் எத்தனை வக்கிரமானது, கொடுமையானது.  எல்லாமிருந்தும் எதுவுமில்லாத தவிப்பை ஒரே நொடியில் உருவாக்கி மனம் பதைபதைக்க வைத்துவிடுகிறது. நாவினடியிலும் விரல்களிலும் மாதுளையின் சுவையையும் கொதித்த பாலின் சூட்டையும் உணர்ந்தான். மாதுளையின் சுவை அவனை வண்டி ஓட்டவிடாமல் சூழ்ந்து தொந்தரவு செய்தது. பசியில் கால்கள் நடுங்கின. அரை போத்தல் நீர் குடித்தான். பசி வியர்வையாய் வெளியானதே தவிர குறைந்திருக்கவில்லை. ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த கைகள்  உதறலெடுக்க, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.  வாகன நெரிசலில் ஊரைத் தாண்டவே இரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டிருந்தது. பேருந்துக்குள் பயணிகள் புழுக்கம் தாளாமல் புலம்பினர். ஒவ்வொரு நான்கடி  நகர்வதற்கும் சில நிமிடங்கள் ஆனதால்  தன்னையும் மீறி அவளைப் பார்த்தான்.  அந்தப் பார்வையின் குறுகுறுப்பு அவளுக்கு எரிச்சலூட்டினாலும் எழுந்து வேறு இடம் செல்ல வழியில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பொறுத்துப் பார்த்து முடியாமல் அந்தப் பெண் இரண்டு முறை ஜன்னலுக்கு வெளியே காறித் துப்பிவிட்டு இவனைப் பார்த்தாள். இவனுக்கு அவமானமாய்ப் போனது. ‘என்ன கருமம் இது, சற்றைக்கு முன்னர் வரை இந்த தலையில் எந்த சிந்தனையுமில்லை. அருணாச்சலேஸ்வரனை தரிசித்த நிம்மதியில் பூரிப்பில் வேலையைத் துவங்கினால் இப்போது இந்த மனமும் உடலும் ஏன் முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்காக இப்படி அலைந்து அவமானப்படுகிறது? அந்த உணர்ச்சியிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டுமென நினைத்து தோற்றுப் போனான். அவன் மனம் கட்டளைகளை ஏற்க மறுத்தது.

தேநீருக்காக நெடுஞ்சாலையோர தேநீர்க்கடையில் பேருந்தை நிறுத்திய போது சிறுநீர் கழிக்கச் சென்றவனை மறித்து நிறுத்திய அந்தப் பெண் ‘பாத்தா டீசண்ட்டா இருக்க, பொம்பளையவே பாக்காத மாதிரி இப்பிடி பாக்கற. வெக்கமா இல்லியா உனக்கு?’ என்று கேட்டாள். அப்போதும் கூட அவள் சொல்வதை விடுத்து அவன் மனம் அவன் உடலையே யோசித்துக் கொண்டிருந்தது. பிரச்சனையை வளர்க்க விரும்பாமல், ‘தெரியாம தொந்தரவு பண்ணிட்டேம்மா. மன்னிச்சுக்கோ’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான். திரும்ப பேருந்தைக் கிளப்பிய போது வலிய வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தோடு நடத்துநரிடம் பேசியபடியும் பாடல்களைக் கேட்டபடியும் அவள் மீது தன் கவனம் திரும்பாமல் பார்த்துக் கொண்டான். உடல் ஒன்றைத் திட்டமிட்டுச் செய்தாலும் மனம் அனிச்சையாய் ஒன்றை செய்து கொண்டுதான் இருந்தது.

புத்தியை மீறின இச்சையை முற்றிலுமாகத் துறக்க நினைத்தான். ஒருவேளை உணவை மட்டுமே தினமும் எடுத்துக் கொண்டான். ஆனால் பசி இச்சையை அதிகமாக்கியது. இது வலிந்து உருவாக்கிய பசி.  அதனால் மனதின் குரூரங்களையே துப்ப முனைந்தது. ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டால் மனம் சமாதானமாகுமெனத் தோன்றியது. ஆனால் இது கார்த்திகை மாதமில்லை. இதிலிருந்து விடுபட என்ன வழி?  காமத்தின் பிடிக்குள் உழல்வதை வெறுத்தான். ஒவ்வொரு நாளும் அதன் பிடி இறுகி இவனை அச்சுறுத்தியது. அவனின் போக்குகளை கண்டும் காணாமல் சாந்தியும் அமைதியாக இருந்தாள்.  மனிதன் ஆக இறுதியில் தன் இச்சைகளிடம் தோற்றுவிடும் இயற்கையின் நியதியே இறுதியில் வென்றது.   ஒரு வாரகால போராட்டத்திற்குப் பெண் சாந்தியை சமாதானம் செய்துவிடலாமென அவளிடமே சரணடைந்தான்.  பெண்களிடம் தன் தோல்வியை ஒப்புக் கொள்வதுபோல் சரணடையும் ஆண்கள் சாதுர்யமாக காரியம் சாதிக்கத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்.  அன்று அவள் அனுமதித்த போது கூடலில் மட்டுமே கவனமாய் இருந்தான். அவளுக்கு அவனை நினைக்க ஆச்சர்யமாகவும் ஆயாசமாகவுமிருந்தது. ஒரு பள்ளிக்கூட மாணவன் பொறுப்போடு தேர்வெழுதும் கவனத்தோடு அவளுடலில் கரைந்திருந்ததால் முடியும்வரை எதும் சொல்லக்கூடாதென பொறுமையாய் ஒத்துழைத்தாள். நீண்ட கலவிக்குப் பிறகெல்லாம் பெருங்கடலை நீந்திக் கடந்துவிட்ட முக பாவனைகளோடு அவன் ஒதுங்கி படுப்பதை இன்றும் கவனித்தாள். ‘இந்தா, என்ன வயசாவுது உனக்கு. இன்னும் இடுப்புக்கு கீழதான் உலகம்னு இருந்துட்டு இருக்க. வேற நெனப்பே இருக்காதா?” உடைகளை சரி செய்துகொண்டபடி கேட்டாள்.  கடந்த சில நாட்களாக நடந்த மனப்போராட்டத்தை அவளிடம் சொல்லலாமா? வீண். அவன் யோசித்துப் பார்த்தான். அவள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் எதை நினைக்க? இந்த வீட்டிற்கு வெளியிலான அவன் உலகம் அவன் ஓட்டுகிற பேருந்தும், பனிமனையும்தான். பத்து வருடங்களுக்கும் மேலாக சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும் ஒரே வழிப்பாதை. பார்த்து பழகிப்போன அதே சாலை அதே மனிதர்கள். நாற்பது வயதுகளில் வாழ்க்கை எத்தனை சலிப்பாகிறதென்பதை இவளுக்கு எந்த விதத்தில் சொல்லி புரியவைப்பது? தன் கற்பனைகள் சந்தோசங்கள் சாகசங்கள் எல்லாவற்றையும் அவளிடம் மட்டுமே முயற்சித்து பார்க்க முடியும். ”வேற எதடி நான் நெனைக்கிறது? வேலைக்கிப் போறேன். சம்பளம் குடுக்கறாங்க. புள்ளைங்கள நீ பாத்துக்கற. இந்த வீடு, நீ, டிப்போ இவ்வளவுதான் எனக்கு உலகம். யோசிக்கிறதுக்கு எனக்கு வேற என்ன இருக்கு? நாலு நாளைக்கி ஒருதடவ படுக்கற இந்த சந்தோசமும் இல்லன்னா என்ன மாதிரி உலகம் தெரியாம வாழ்றவனெல்லாம் பைத்தியக்காரனா போயிருவான்.” தன்னைப் பற்றியான மரியாதைக்குரிய அபிப்பிராயங்கள் நிச்சயமாக அவளுக்கு வந்திருக்ககூடுமென நினைத்து சிரித்தான். “இப்பயும் நீ பைத்தியக்காரந்தான். அன்னிக்கி அவ்வளவும் செஞ்சுட்டு திரும்பவும் எதிர் வீட்டுக்காரிய தங்கச்சின்னு கூப்டற”  பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்துவிட்டோமென நினைத்த அடுத்த நொடியே மீண்டும் எளிதாக அவனை வீழ்த்தினாள்.  கோவப்படுவதால் எந்தப் பலனுமில்லை என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்திருந்த ஈஸ்வரன் சரணடையும் தனது யுக்தியையே மீண்டும் பயன்படுத்தினான். ”ஊர்ல பாதிப்பேர் இப்பிடித்தான் இருக்காங்க. ஆனா வெளில தெரியறதில்ல. பொண்டாட்டி இல்லாம மத்த பொம்பளைங்க மேல ஆசப்படாம வாழ்றதுக்கு மனுஷன் ஒன்னும் கல்லு இல்ல. நாலு பேருக்குத்  தெரிஞ்சா அசிங்கமேங்கற  காரணத்துக்காகத்தான் 90 சதவிகிதம் பேர் அத வெளில சொல்லாம இருக்கான். உங்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது உனக்கு உண்மையா இருக்கனும்னு நெனைக்கிறன் ல நீ இதும் கேப்ப இன்னமும் கேப்ப.” என தழு தழுத்த குரலில் அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டாள்.  மனைவியின் முகத்தைப் பார்க்க முடியாமல்  அறையிலிருந்து வெளியேறி  சமயலறை விளக்கைப் போட்டான்.   நைட்டியின் திறந்த ஸிப்போடு சாந்தியும் அவனுக்குப் பின்னால் சென்றாள். பின்னிரவுகளில் அவன் மதுவருந்தினாலோ பால் கலக்காத கருந்தேநீர் அருந்தினாலோ அந்த இரவிற்கான அவன் பசி அடங்கவில்லையென்பதை அவள் நன்றாகவே அறிவாள்.  “டீ எனக்கும் சேத்து வெய்யி.” கலைந்த தன்  கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள். கைகளைத் தூக்கும் போது களைப்பை மீறின அவள் முகத்திலும் உடலிலும் இரவின் மகத்துவங்கள் நிரம்பிக்கிடந்தன. அமைதியாய் தேநீரில் ஏலக்காயும் இஞ்சியும் தட்டிப்போட்டவனைப் பார்க்க அவளுக்கு சிரிப்பு வந்தது. இந்தத் தேநீர் அவனுக்கானதல்ல, இவளுக்கானது. சமாதான காலங்களில் அவன் இதுபோல் ஏராளமான ஆயுதங்களைப் பயன்படுத்துவதுண்டு. ஆண்கள் சமையல் செய்யக் கற்றுக்கொள்வதற்குப் பின்னால் தான் எத்தனை சுயநலங்கள் மிகுந்திருக்கின்றன?

அவன் தந்த தேநீரை உறிஞ்சியபடியே தனது அலைபேசியில் முகநூலை நோண்டிக் கொண்டிருந்தாள். அந்தப் பின்னிரவிலும் உறக்கம் வராத சிலர் கடமையுணர்ச்சியோடு அவள் உள்பெட்டியில் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அலட்சியமாக எதையும் திறந்து பார்க்காமல் செய்திகளைக் கடந்தவளின் பின்னாலிருந்து அணைத்தபடி ஈஸ்வரனும் அவளின் முகநூலைப் பார்த்தான். வரிசையாக வந்த உள்பெட்டி செய்திகளையும் அவளையும் பார்த்தவன் “மேலமெனக்கெட்டு இத்தன பேர் உனக்கு மெசேஜ் அனுப்பறானுங்க ல திறந்து படிக்கவாச்சும் செய்யேன்.” உள்பெட்டியில் வந்திருக்கும் செய்திகளை வாசிக்க அவன் ஆர்வமாய் இருந்ததைப் புரிந்து கொண்டு தனது அலைபேசியை அவனிடமே கொடுத்தவள், “நீயே படி, நான் போறேன். எல்லாமே ஒரே மாதிரிதான். ஹாய்.. தூங்கலையா… ஹலோ.. இருக்கீங்களா? … செக்ஸியா இருக்கிங்க. உங்க வாட்ஸப் நம்பர் கெடைக்குமா?” இவ்ளோதான் இவனுகளுக்குத் தெரியும். என்னவோ இப்ப நான் வாட்ஸப் நம்பர் குடுத்துட்டா மட்டும் நேரா என் வீட்ல வந்து நிக்கப் போற மாதிரி. பைத்தியக்காரனுங்க.” அலட்சியமாக அவன் கைகளில் அலைபேசியைக் கொடுத்துவிட்டு  செல்ல மெசஞ்சரை திறந்து பார்த்தான். அவள் சொன்னது சரிதான். கற்பனையில் மட்டுமே  பெண்ணுடலின் அருகாமையைப் பார்த்து ஏங்கிப் போனவர்களின் அதே வழக்கமான செய்திகள். அவனுக்கு சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. இதற்குமுன் முகநூலில் தன்  படங்களுக்கு  வரும் பின்னூட்டங்களை  இவனிடம் காட்டிச் சிரிப்பாள். ஆனால் எவருக்கும் நன்றி சொல்லிக்கூட பின்னூட்டமிடமாட்டாள். ஒருமுறை ஈஸ்வரனின்  பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி ஒரு டப்மாஷ் போட்டிருந்தாள். முகபாவனையோ நடிப்போ எதுவும் சிறப்பாக இல்லாத போதும் அதற்கு நானூறுக்கும் அதிகமான பின்னூட்டங்களும் ஆயிரம் வரை விருப்பக்குறிகளும் வந்திருந்ததை இவன் நம்பமுடியாமல் பார்த்தான். பாதி குடிக்காமல் விட்டிருந்த தேநீர் ஆறிப்போயிருந்தது. சாந்தியின் புகைப்படங்களில் இருந்த பின்னூட்டங்களையும் மெசஞ்சரில் அவளுக்கு வந்து செய்திகளையும் தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருந்தான். ‘இவனுக்கு என்னதான் பிரச்சனையென புரியாமலேயே  அவளும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  மற்றவர்கள் சாந்தியைக் குறித்து எழுதியவை ஒரே நேரத்தில் இவனுக்கு கோவத்தையும் கிளுகிளுப்பையும் எரிச்சலையும் உருவாக்கியிருந்தது.  தன்னை அவள் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது உரைக்க தேநீர்க் கோப்பையை கழுவி வைத்துவிட்டு மீண்டும் அவளுக்கு அருகில் சென்று படுத்துக் கொண்டான்.

அவளை இப்போது நெருங்குகையில் முகம் தெரியாத பெண்களிடம் முகம் தெரியாத ஆண்கள் கொள்ளும் கூட்டுக் கலவியைப் போல் சுவாரஸ்யம் தரக்கூடியதாய் அவனுக்குத் தோன்ற அவளின் அபூர்வத் தளங்களில் விரல்களை அலையவிட்டான். “நீயும் தூங்க மாட்ட, என்னியும் தூங்க விடமாட்ட.” சாந்தி  சிரித்தாள். பேசுவதில் ஆர்வமில்லாமல் அவளுடலோடு வேகமாக தன்னைப் பிணைத்துக் கொள்ளத் துவங்கினான். அவனின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கான காரணங்களைப் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடலை அவனுடைய விருப்பங்களுக்கு ஏற்றதுபோல்  பயன்படுத்திக் கொள்ள நினைப்பதை அனுமதிக்க அவள் மனம் மறுத்தது. எதிலெல்லாம் கிளர்ச்சியும் சந்தோசமும் காண்கிறானோ அதையெல்லாம் சீண்டி அவனை பலவீனப்படுத்த நினைத்தாள். ’இவ்ளோ பேர் உன் அழக புகழ்றாங்க. உனக்கு ஒருத்தன் மேல கூட ஆச வரலியாடி?’ என அவளின் காதுகளுக்குள் கேட்டான்.  ‘ஏன் வராம நிறைய பேர் மேல வருமே. நீ ஊர்ல இருக்கவள-லாம் நெனச்சுக்கிட்டு எங்கிட்ட படுப்ப. நான் மட்டும்  புருஷனே பொக்கிஷம்னு நெனைக்கனுமா? என்றாள்.  தனது முகநூல் பக்கத்தை பார்த்துவிட்டு அவன் எதையெல்லாம் யோசிக்கக் கூடுமென ஓரளவு யூகித்திருந்ததால் எப்போதும் இல்லாதபடி சத்தமாக முனகினாள்.  உணர்ச்சி மிக்க ஒலிகளை போலியாக எழுப்பினாள். அவள் தன்னை சீண்டுகிறாள் என்பது புரிந்து  அவள் மீதான ஆர்வத்தை இழந்தவன் பாதிக்கு மேல் என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே அவள் மேல் படுத்திருந்தான். அவள் இப்பொழுதும்  ஒலி எழுப்புவதை நிறுத்துவதில்லை. காமம் தலையிலிருந்து இறங்கியதால் விலகிப் படுத்தான். மனம் வேகமாய் அடித்துக் கொண்டது. ‘ஓத்தா அவுசாரி முண்ட. வேணும்னே செய்றா.’ உதடுகள் சத்தமே இல்லாமல் முணுமுணுத்தன. உடைகள் களைய விட்டத்தைப் பார்த்தபடி கால்களை விரித்த நிலையில் சாந்தி இப்பொழுதும் காமத்தின் வினோத ஒலிகளை எழுப்பியபடி இருந்தாள். அருகில் கிடந்த அவன் கைகளை எடுத்து தன் மீது போட்டுக் கொள்ள அவன் வேகமாய் விலக்கினான். ”யார நெனச்சுட்டு எங்கூட படுக்கற சொல்லு.”  பொறுமையை மீறி வார்த்தைகள் கொப்பளிக்க அவள்  நிதானமாக நைட்டியை சரி செய்து கொண்டு எழுந்து அமர்ந்தாள். ‘எதுக்கு இப்ப  கோவப்படற? நான் முன்னயே உங்கிட்ட சொல்லிட்டேன். எவன்கூடயாச்சும் போகனும்னா நேரா அவங்கிட்ட போவேன். உங்கிட்ட சொல்லனும்னு கூட எனக்கு அவசியம் இல்ல. ஆனா இன்னொருத்தன நெனச்சுக்கிட்டு உங்கூட படுக்க மாட்டேன்.” அவள் சிரிப்பும் பார்வையும் அவனுக்குள்ளிருந்த ஆத்திரத்தை மிகுதியாக்கியது. ஆனால் அவள் யாரோ ஒருவனை அல்லது சிலரை மனதில் நினைக்காமல் இதைச் சொல்லமுடியாதென உறுதியாய் நம்பினான். யாராய் இருக்கும்?  பதில் தெரிந்து கொள்ளாமல் அவனால் இயல்பாக முடியாது. “சரி அப்பிடி போறதுன்னா யார்கிட்ட போவ?” விடாப்பிடியாய்த் திரும்பவும் கேட்டவனைப் பார்க்க இவளுக்கு பாவமாக இருந்தது. அவனைப் பார்க்க பிடிக்காமல் தண்ணீர் குடித்தவள் ‘நம்ம குவார்ட்டர்ஸ் வாசல்ல இஸ்திரி கட போட்ருக்காரே முத்து. அவருதான் முதல் சாய்ஸ்.’ என்றாள். ‘அடச்சீ போயும் போயும் அவனா?’ தலையில் அடித்துக் கொண்டான்.  அவனின் இந்தக் கோலத்தை வீடியோ எடுக்கலாமாவென குதர்க்கமாக ஒரு நொடி யோசித்தாலும் பிழைத்துப் போகட்டுமென விட்டவள், ‘ஏன் நீ எதிர்வீட்டுக்காரி கிட்ட என்னத்தக் கண்டன்னு அவள நெனச்சு எங்கூட படுத்த? அவனுக்கென்ன உயரமா ஒல்லியா நல்லாத்தான் இருக்கான்.”  அவள் குரலில் இருந்த கேலியில் ஈஸ்வரன் மொத்தமாக வீழ்ந்து போனான். அவளோடிருக்க பிடிக்காமல் அவன் வெளியேற, சாந்தி நிம்மதியாக உறங்கினாள்.

0000000000000

தோற்றத்தை மாற்றிக் கொள்வதன் வழியாய் மனம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுமென  தொலைக்காட்சியில் ஒரு ஞானி சொல்வதை கேட்டு அடுத்தநாளே முடிவெட்டி சவரம் செய்துகொண்டு தோற்றத்தை மாற்றத் துவங்கினான்.  ஒரு மனிதனின் தோற்றமென்பது என்ன தின்று கொழுத்த உடலும் அவன் உடையுமா? மனம் சிந்திப்பதை தேடுவதை வெளிப்படுத்துவதுதானே. அவன் சிந்திப்பதற்கும் வெளிப்படுத்துவதற்குமான  இடைவெளியை  அவனைத் தவிர எல்லோரும் கண்டுகொண்டனர். புதிதாக அலைபேசி வாங்கினான்.  தனக்கு முகநூல் கணக்கு துவங்குவதை விடவும் சாந்தியின் முகநூல் கணக்கைத் தொடர்வது அவனுக்கு முக்கியமானதய் இருந்தது. அவனே அவளின் புதிய புகைப்படங்களை மாற்றினான். நகைச்சுவைத் துணுக்குகள், சாய்பாபா படம், சினிமா செய்திகள் போதாக்குறைக்கு தனக்கு பின்னூட்டமிட்டவர்களுக்கெல்லாம் பதில் பின்னூட்டமிடுவதென நாளின் பெரும்பகுதியை அதில் செலவிட்டான். எரிச்சலான சாந்தி ‘ஏ எரும உனக்கு ஏதாச்சும் செய்யனும்னு அரிப்பு இருந்தா உன் பேர்ல ஐடி ஆரம்பிச்சு செய்யி. எதுக்கு என் பேர்ல செய்ற?’ என ஏசினாள். ’ சரி சரி இனிமே எதும் போஸ்ட் பண்ணல.’  என அவளுக்கு சமாதானம் சொல்லிவிட்டாலும் அவனால் அமைதி காக்க முடியவில்லை.

பண்டிகை நாள். திறந்து கிடந்த எதிர்வீட்டிற்குள் உற்சாகமாக கீதாவின் குடும்பத்தினர் கொண்டாடிக் கொண்டிருந்தனர். வேலைகளுக்கு நடுவே ஈஸ்வரனின் கண்கள் அவ்வப்போது கீதாவைத் தேடின. சாந்தி இரண்டொருமுறை பார்த்துவிட்டு ‘ஏ லூசு, தலைல எண்ண வெச்சு முக்கா மணி நேரம் ஆச்சு, போயி குளிச்சுட்டு வா. பண்டிக முடிஞ்சிரப் போகுது’ என அடுப்படியிலிருந்து கத்தினாள். ஈஸ்வரன் அவசரமாக குளியலறைக்குள் நுழைந்தான். எண்ணையில் ஊறிய உடலில் வெதுவெதுப்பான தண்ணீர் படுவது இதமாக இருந்தது.

நேற்றைய தினம் காலையில் வேலை முடிந்து திரும்புகையில் கீதா ரகசியமான ஒலியில் சாந்தியிடம் பேசுவதைக் கவனித்தான். தன்னைப் பற்றிதான் இருக்குமோ என நினைத்தபடியே அவளைப் பார்த்து சிரித்தான். ‘என்னண்ணா இப்பத்தான் வாரீங்களா?’ என கீதா எப்போதும் போல் விசாரித்தாள். ‘ஆமா தங்கச்சி’ என பதிலுரைத்த நொடியில் திரும்பி சாந்தியைப் பார்த்தான். அவள் முகத்திலிருந்தது அருவருப்பா? கோவமா? கூடுதலாக எதுவும் பேசாமல் வீட்டிற்குள் சென்றான். ஆனாலும் மனதை அரித்த குறுகுறுப்பு அடங்கவில்லை.  மாலை அவளோடு சேர்ந்து சமையல் செய்யும் போது ‘அப்பிடி என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருந்தீங்க.?” என்று கேட்டான். “பொம்பளைங்க என்னமோ பேசிக்கிறோம், நீ எதுக்கு அதையெல்லாம் கேக்கற?” என கடுகடுப்பாக சொன்னாள். ”அவ ரொம்ப நெருக்கம் தான உனக்கு. எனக்காக பேசிப் பாக்கலாம்ல?” அசட்டு தைரியத்தில் கேட்டதுமில்லாமல் அவள் அதற்கு சம்மதிப்பானென்றும் நம்பியவனின் மீது ஆத்திரத்தோடு கையிலிருந்த அரிசிப் பாத்திரத்தை தூக்கி எறிந்தாள். ’உனக்கு அரிப்பு எடுத்தா நீ போயி கேளு. துப்பில்லன்னா மூடிக்கிட்டு இரு. என்னய எதுக்கு மாமி வேல பாக்க சொல்ற. எந்திரிச்சு போடா மொதல்ல.” என எரிச்சலோடு கத்தினாள்.  ஒவ்வொரு முறையும் இப்படி எதாவது ஒன்று நினைத்து அதற்கு நேரெதிராய் நடப்பதில் நொந்து போனான். அவள் அத்தோடு விடவில்லை. ‘சைக்கோ தாயோலி குடிச்சு குடிச்சு நீ சைக்கோவா மாறப்போற. பேசாமப் போயி நல்ல டாக்டராப் பாரு.’ என்றபோது அவனுக்கு கோவத்தில் உடல் துடித்தாலும் அவளிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அடித்தால் வாங்கிக் கொண்டு அடங்கிப் போகிறவள் இல்லை அவள். திரும்ப அடிக்க முடியாவிட்டாலும் தான் எத்தனை அருவருப்பானவன் என்பதை ஊரைக் கூட்டிச் சொல்வாள்.  அந்த ஒன்று போதும் இவனைக் குத்திக் கிழிக்க. பணிந்துபோவதுதான் புத்திசாலித்தனமென ஆறாம் அறிவு உணர்த்தியது.

இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகும் அவள் தன்மீது கோவப்படுகிறாளே தவிர, ஒதுக்கி வைப்பதில்லை. சாந்திக்கு தன் மீது இருப்பது அன்பா, அல்லது இரக்கமா அல்லது சகித்துக் கொள்கிறாளா? தன்னையே புரிந்து கொள்ளத்  துப்பில்லாதவனால் அவளை எப்படி புரிந்து கொள்ள முடியும். ’சாந்தியக்கா இன்னும் பூஜ பண்ணலியா?’ என கதவுக்கு வெளியே கீதாவின் குரல் கேட்டதும் அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் அவசர அவசரமாக குளியலை முடித்தான். ஈரம் சொட்டும் உடலோடு வெளியில் வந்தவனின் பார்வை கீதாவை மேய்வதை சாந்தியும் கவனித்தாள். அவளின் பார்வையிலிருந்த அருவருப்பு ஈஸ்வரனுக்குள்ளிருந்த உணர்ச்சிகளை சடாரென உடைத்துப் போட்டது. கீதா கிளம்பும் வரை அவன் படுக்கையறையிலிருந்து வெளியேறியிருக்கவில்லை.

000000000000000

வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்தே அவன் மனம் இயல்பிலில்லை. எதையெல்லாம் சுவாரஸ்யமென்றும் தவறில்லையென்றும் இத்தனை நாட்கள் யோசித்திருந்தானோ அதுவெல்லாம் அச்சங்களாய் மாறியிருந்தன. இதற்குமுன்  கிளர்ச்சியடைந்த தன்னால் ஏன் இந்த நாளை இய்ல்பாய்க் கடக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் அப்பால் உடல் தானே.  அவள் தன்னை எத்தனை நேசிக்கிறாள் என்பது தெரிந்தும் சமாதானமாக முடியாமல் புழுங்கி நோவதற்கு காரணம் யார்? நானே தானே. எந்தவொன்றிலும் கவனம் செலுத்த முடியாமல் பனிமனையில் இங்கும் அங்குமாய் நடந்து கொண்டிருந்தான். பணி  துவங்க முக்கால் மணி நேரமிருந்தது. வந்ததிலிருந்து குடித்திருந்த இரண்டு மூன்று தேநீரால் நா முழுக்க பித்தச் சுவை. வாட்டர்  சர்வீஸ் முடிந்து டீசல் அடிப்பதற்கு ஒரு பேருந்து நகர்ந்து செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தவனை யாரோ தோளில் தட்டிக் கூப்பிட திரும்பிப் பார்த்தான். மெக்கானிக் முருகன். ‘என்னய்யா இப்பிடி உக்காந்திருக்க, உடம்பு சரி இல்லயா?” கேட்டவாறு அமர்ந்தான். உடலுக்கென்ன எப்போதும் போல்தான் இருக்கிறது. ஆனால் இந்த மனசு… இதை எப்படி அவனிடம் சொல்வது? ‘ஆமாய்யா தலவலிக்கிது. கண்ணெல்லாம் எரியுது.’ என்றான். முருகன் சிரித்தபடி. ‘டூட்டி முடிஞ்சு வீட்ல போய் ரெஸ்ட் எடுக்காம அங்கியும் டபுள் டூட்டி பாத்தா இப்பிடித்தான்.’ என்றான். ‘அட ஏன்யா நீ வேற. வீட்டுக்கு ஒறமொற வந்திருக்காங்க. அதான் வேல. சரியா தூக்கமில்ல.’ என்று  சமாளித்தான். ‘அப்ப பேசாம ரெஸ்ட்ட போட்டுட்டு காலை வந்து  டூட்டி எடுக்க வேண்டிதான?’ முருகன் சொல்லியபடியே பணி நேரத்திற்கான பதிவேட்டை எடுத்துப் பார்த்தான். ஈஸ்வரனுக்கும் அதுவே சரியென்றே தோன்றினாலும் இப்போது வீட்டிற்குச் சென்றால் சாந்தி என்ன நினைப்பாளென சங்கடமாய் இருந்தது. இத்தனை வருடங்களில் ஒருபோதும் பணிக்கு வந்து பாதியில் திரும்பியதில்லை.  இன்று பாதியில் திரும்புவதற்கான காரணம் இருவருக்குமே அப்பட்டமாய்த் தெரியுமென்றாலும் அவள் மீதான இத்தனையாண்டு கால நம்பிக்கையையும் தானே பொய்யாக்கியதாகிவிடுமே என்று யோசித்தான்.  வீட்டிற்குமில்லாமல் வேலைக்கும் போகாமல் எங்காவது சென்றுவிட்டால் என்ன? தன் மீது அவள் வைத்திருக்கும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் தான் தகுதியானவனில்லை என்கிற குற்றவுணர்ச்சி அவனை பைத்தியம் பிடிக்க வைத்தது. ஒரே மனதாக விடுப்பு எடுத்துக் கொண்டு, பனிமனையிலிருந்து கிளம்பினான்.

பிரபா ஒயின்ஸின் வெள்ளிக்கிழமைக் கூட்டம். போர்  நிலத்தின் மனிதக் கழிவுகளுக்கு நடுவில்  மேசைகளைப் போட்டதைப் போல் அருவருப்பாய் இருந்தது அந்த மதுக்கூடம்.  இதுபோன்ற மதுக்கூடங்களில் தனித்து மது அருந்துகிறவனின் நிலை துயரமானது. தனக்கென இடத்தைத் தேடி கண்டடைவது சிரமம். அப்படியே இடம் கிடைத்தாலும் அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து குடிக்க முடியாது. அதனாலேயே அவன் பெரும்பாலும் வெளியில் குடிப்பதில்லை. இன்று வேறு மார்க்கமில்லை என்பதால் சகித்துக் கொண்டான். வழக்கமாக மதுவருந்துகையில் இருக்கும் உற்சாகமில்லை. மனதின் போராட்டத்திலிருந்து ஓய்வெடுக்க ஒரு இடைவெளியாய் குடியை தேர்வு செய்தான். குடிக்கத் துவங்கிய சில நிமிடங்களிலேயே மழை வலுத்துப் பெய்யத் துவங்கியது. முக்கால் வாசிப்பேர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். சிலர் ஒதுங்கி ஒரு தகரக் கூரையின் கீழ் குடித்தார்கள். கடை அடைத்தபிறகும் பரிசாரகனிடம் கூடுதலாக செலவிற்கு பணம் குடுத்துவிட்டு அங்கு நின்றபடியே குடித்தான். போதை அமைதிக்குப் பதிலாக போராட்டத்தையே கொண்டு வந்தது. குழப்பமான நாட்களில்  குடிக்கும் மனிதன் போதையின் உச்சத்தில் மிருகமாகிறான். அவனுக்குள்ளிருந்த மிருகமும் விழித்துக் கொண்டது.  நேசம் அன்பு எல்லாம் ஒழிந்து போய் இனம் புரியாததொரு வன்மம் வெகுண்டெழுந்தது. அதிகம் நேசிகும் மனிதர்களிடம் மட்டுமே வரக்கூடிய வெறுப்பது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமே ஒளிந்து கிடக்கும் அந்த மிருகம் இப்பொழுது அவனுக்குள் விழித்துக் கொள்ள தன்னை அவள் உதாசீனப்படுத்திய தருணங்கள் அவ்வளவையும் நினைத்துப் பார்த்தான். நிச்சயமாக அவள் கள்ளத்தனம் செய்கிறாள் தான். அவளே சொன்னது போல் யாரிடமாவது படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் சொல்லாமலே தானே போயிருப்பாள். இன்றும் கூட அவளின் உறவினன் வந்திருப்பது அதற்காகத்தான் இருக்கக் கூடும். தான் நம்பும் எல்லாமே உண்மை அதுமட்டுமே நியாயமென உறுதியாய் இருந்தவனின் தலைக்கு மேல் இடியும் மின்னலுமாய் மழை இன்னும் ஓயாமல் வலுத்துப் பெய்து கொண்டிருந்தது.

மழையில் நனைந்த தெருநாய்கள் பெரிய குடியிருப்புகளின் வாயில்களில் உடலைக் குறுகிப் படுத்துக் கிடந்தன. வீட்டிற்கு செல்லும் சாலைகளுக்கு பழக்கப்பட்ட கால்கள் தானாகவே வேகவேகமாய் நடந்தன. எதையும் எதிர்கொள்ளும் முரட்டு தைரியத்தோடு வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு நொடி கூட பொறுமையில்லாமல் திரும்ப திரும்ப தட்டிக் கொண்டிருந்தான். திறக்கப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் அன்பு லுங்கி பனியனோடும் தூக்க கலக்கத்தோடும் நின்றிருந்தார். ‘என்னாச்சு பங்காளி டூட்டிக்குப் போகலியா?’ எனக் கேட்டவரைத் தாண்டி ஈஸ்வரன் அவசரமாக வீட்டிற்குள் சென்றான். படுக்கையறையில் சாந்தி குழந்தைகளோடு உறங்கிக் கொண்டிருந்தாள். முன்னறையில் ஈஸ்வரனின் நின்ற இடத்தில் அவன் காலுக்கடியில் அன்புவின் படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. ஈஸ்வரனுக்கு தலை சுற்றியது போதையிலா, அல்லது யதார்த்தம் என்னவென்பதைப் புரிந்து கொள்ளாமல் போனதிலா என்று தெரியவில்லை. தடுமாறியபடியே சாந்தியைப் பார்த்தான். ‘உடம்பு கிடம்பு சரி இல்லியா பங்காளி. சாந்திய எழுப்பட்டுமா?” எனக் கேட்டபடியே அன்பு அவனுக்கு தலையை துவட்டிக் கொள்ள துண்டை எடுத்துக் கொடுத்தார்.  ஈஸ்வரனின் கைகள் நடுங்கின. வாங்கி தலையைத் துவட்டிக் கொண்டவன், ‘ஒடம்புக்கு ஒன்னுமில்லண்ணே. நல்லாத்தான் இருக்கேன். நீங்க படுங்க.’ என எங்கோ பார்த்தபடி சொல்லிவிட்டு உடை மாற்றிக் கொள்ள படுக்கையறைக்குள் நுழைந்துகொண்டான்.

லக்ஷ்மி சரவணகுமார்-இந்தியா 

 5,463 total views,  2 views today

(Visited 1,818 times, 1 visits today)
 

கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்-பாகம் 04-லக்ஷ்மி சரவணகுமார்

பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 04-ல் இந்தியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான லக்ஷ்மி சரவணகுமார் தனது வாசிப்பு […]

 

One thought on “இப்படியாக அவளின் சில காதலர்கள்-சிறுகதை-லக்ஷ்மி சரவணகுமார்”

Comments are closed.