இரவை வாசிப்பவர்கள்-சிறுகதை-எஸ்.ராமகிருஷ்ணன்

அண்ணாசாலையில் அப்படியொரு புத்தகக் கடை இருக்கிறது என்பதே ஆச்சார்யா சொல்லி தான் ரகுவிற்குத் தெரியும்.

பலமுறை அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறான். சிவப்பு நிற கட்டிடத்தைப் பார்த்தவுடன் ஏதோ அரசாங்க அலுவலகம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

எத்தனை புதிய கட்டிடமாக இருந்தாலும் அரசு அலுவலகங்கள் ஒன்று போலவே இருக்கின்றன. ஒன்று போலவே செயல்படுகின்றன.

அந்தப் புத்தகக்கடையின் பெயர் நைட்ஸ். இரவு ஒன்பதரை மணிக்குத் தான் திறப்பார்கள். விடியும் வரை கடை உண்டு. சில நாட்கள் காலை ஏழு மணி வரை கூடத் திறந்திருக்கும். ஆனால் பகலில் பூட்டிவிடுவார்கள் என்றான் ஆச்சார்யா

கேட்கவே வியப்பாக இருந்தது.

எதற்காக ஒரு புத்தகக் கடையை இரவில் மட்டுமே திறந்து வைத்திருக்கிறார்கள். பகலிலே புத்தகக் கடைகளுக்கு ஆள் வருவது குறைந்துவிட்டிருக்கிறது. இரவில் யார் வரப்போகிறார்கள்.

ஆனால் மாநகரில் விசித்திரமான விஷயங்களுக்குக் குறைவான என்ன.

ஒரு முறை ஆச்சார்யா ரகுவை நள்ளிரவில் நீலாங்கரை பீச்சிற்கு அழைத்துப் போயிருந்தான். மணி பனிரெண்டைக் கடந்திருக்கும். அப்போதும் கடற்கரையில் பைக்கும் கார்களும் நிறைந்திருந்தன.

எதற்கோ காத்துகிடப்பவர்கள் போல ஆட்கள் தொலை வெறித்தபடியே இருந்தார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் மணிச்சப்தம் கேட்கத்துவங்கியது. காத்திருந்தவர்கள் முகத்தில் சந்தோஷம் வெளிப்பட்டது. ஒரு கிழவர் தள்ளுவண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அருகில் வந்த போது தான் அது குல்பி ஐஸ் விற்கும் வண்டி என்பது தெரிந்தது.

ஆச்சார்யா சொன்னான்

இந்தக் குல்பி ஐஸ் பகலில் கிடைக்கவே கிடைக்காது. நைட் பதினோறு மணிக்கு தான் இவரோட வியாபாரம் ஆரம்பம். ஒவ்வொரு இடமா வித்துட்டு இங்கே வர பனிரெண்டரை ஆகிரும். இவருக்குனு கஸ்டமர் நிறைய இருக்காங்க. வெயிட் பண்ணி சாப்பிட்டு போவாங்க. அதுவும் சண்டேன்னா ஸ்பெஷல் குல்பி. அதுக்கு நிகரே கிடையாது

ஆச்சார்யா சொன்னது உண்மை. அது போன்ற குல்பி ஐஸை ரகு தன்னுடைய வாழ்நாளில் சாப்பிட்டதில்லை.

இவ்வளவு ருசி மிக்க ஐஸை பகலில் விற்றால் என்ன எனக்கேட்டான் ரகு.

ஆச்சார்யா சொன்னான்

சில விஷயங்களுக்கு ருசியே நைட்ல கிடைக்கிறது தான். பகல்ல இப்படிப் பீச்சில உட்கார்ந்து கடலை ரசிச்சிகிட்டு குல்பி சாப்பிட முடியுமா. இது ஒரு சுகம்

ஆச்சார்யா சொன்னது உண்மை.

நகரம் தனக்கான புதுப்புது சுவைகளைக் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறது. பகலில் காணும் நகரம் வேறு, இரவில் காணும் நகரம் வேறு. இரவில் இந்த மாநகருக்கு நூறு புதிய தலைகள் முளைத்துவிடுகின்றன. உண்மையில் நகரம் பகலில் உறங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இரவில் நகரம் விழித்துக் கொள்கிறது. மனிதர்கள் உறங்கப் போய்விடுகிறார்கள்.

கிராமத்தை போல மாநகரம் முற்றாக உறக்கத்தினுள் ஆழ்ந்து போவதில்லை. இரவிலும் ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வாகனப் போக்குவரத்து இருக்கிறது. மெட்ரோ ரயில்பாதை அமைப்பவர்கள் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

முழுமையாகத் துயில் கொள்ளும் ஒரு வீதி கூட மாநகரில் கிடையாது தானோ

நைட்ஸ் புத்தகக்கடையைப் பற்றி ஆச்சார்யா சொன்னதில் இருந்து அங்கே போய் வர வேண்டும் என்ற ஆசை ரகுவிற்கு உருவானது.

ஆச்சார்யா புத்தகம் படிப்பவன் இல்லை. ஆனால் இது போன்ற விசித்திரமான விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவன்.

அவன் சொல்லி தான் நிறைய உணகவங்களை, துணிக் கடைகளை ரகு அறிந்து கொண்டிருந்தான்.

வார இறுதியில் நைட்ஸ் கடைக்குப் போய்வரலாம் என்று தான் ரகு முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் ஞாயிறு செங்கல்பட்டு போகவேண்டிய வேலை உருவானது. ஆகவே சனிக்கிழமை இரவு நைட்ஸ் போகலாம் என்று முடிவு செய்து கொண்டான். ஆச்சார்யாவிடம் சொன்ன போது அவன் ஒஎம்ஆரில் உள்ள ஒரு கிளப்பில் இரவு கற்கால மனிதர்கள் போல இலைகளை உடையாக அணிந்து கொண்டு ஆடிப்பாடும் பார்ட்டி இருக்கிறது. அங்கே போகிறேன். சுவாரஸ்யமாக இருக்கும் என்றான்.

கற்காலத்திற்குத் திரும்பி போக மரவுரி ஒன்று தான் வழி போலும். மனதில் இன்னமும் குகைகாலத்தின் நினைவுகள் இருந்து கொண்டு தானே இருக்கின்றன.

ரகு பைக்கில் போய் நைட்ஸ் கடையிருந்த சிவப்பு கட்டிடத்தின் முன்னால் நின்ற போது அந்தக் கட்டிடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கலைப்பொருள் விற்பனை செய்யும் அங்காடிகள் இருப்பதைக் கண்டான். அதில் ஒன்று ஈரானைச் சேர்ந்த கலைப்பொருட்கள் விற்கும் கடை. இன்னொன்று பழைய துப்பாக்கிகள் சர்வீஸ் செய்து தரும் கடை.

கட்டிடத்தினை ஒட்டிய சிறிய சந்துக்குள் பைக் நிறுத்துமிடம் இருந்தது. தனது பைக்கை அங்கே நிறுத்திவிட்டு நைட்ஸ் எங்கேயிருக்கிறது என்று காவலாளியிடம் விசாரித்தான். அவன் கீழே என்று விரலைக்காட்டினான்

ரகுவிற்கு அவன் தெரியாமல் சொல்கிறானோ என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் அவன் விரல்காட்டிய திசையை நோக்கியே நடந்தான். அவனுக்கு முன்னால் கைத்தடியை ஊன்றியபடி ஒரு வயதானவர் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தார்

நைட்ஸ் புத்தகக் கடை என அம்புக்குறி காட்டிய திசையை நோக்கி ரகு நடந்தான் தரைமட்டத்தில் இருந்து கீழாகச் செல்லும் படிக்கட்டுகள் வழியாகச் சென்றபோது பாதி இருளாகயிருந்தது. தடுமாறி விழுந்துவிடுவோமோ என்று ரகுவிற்குத் தோன்றியது

தட்டுதடுமாறி கிழே இறங்கினான். அரண்மனை கதவுகள் போல அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரட்டைக்கதவுகள். சித்திர எழுத்துகளால் நைட்ஸ் என எழுதப்பட்டிருந்தது. கதவைத்தள்ளி உள்ளே சென்ற போது அரைவட்டமேஜையொன்றில் ஒரு பெண் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார். மேஜைவிளக்கொளி போலச் சிறிய வெளிச்சம். அவரது மேஜையில் ஒவியப்பின்புலம் கொண்ட கம்ப்யூட்டரின் திரை ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறியதொரு பிரிண்டர். மற்றும் பெரிய பூமி உருண்டை காணப்பட்டது. அந்தப் பெண்ணின் பின்னால் சுவரில் வான்கோவின் நைட் கபே என்ற ஒவியம் காணப்பட்டது. அந்தப் பெண்ணிற்கு அறுபது வயதிற்கும் மேலாக இருக்கும். ஆங்கிலோ இந்தியப் பெண்மணி போன்ற தோற்றம். பெரிய பிரேம் போட்ட கண்ணாடி. வெண்ணிற தலைமயிர்.

ரகு உள்ளே வந்ததை அவள் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்து புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

ரகு கடையின் உள்ளே நடந்தான். மிகப்பெரிய ஹால். ஒட்டுமொத்த  கட்டிடத்தின் அடித்தளமது. ஒருபக்கம் முழுவதும் புத்தக அடுக்குகள் வரிசை வரிசையாக இருந்தன. இன்னொரு பக்கம் வட்டவடிவ மேஜைகள். தனித்த ஒற்றை மேஜைகள். மரநாற்காலிகள், சிறியமேடை போன்ற அமைப்பு. எப்படியும் அதற்குள் ஐநூறு பேருக்கும் மேலாகவே அமரலாம். இவ்வளவு பெரிய புத்தகக்கடை ஏன் இரவில் மட்டுமே இயங்குகிறது என்று அவனுக்குப் புரியவேயில்லை.

புத்தக அடுக்குகளை நோக்கி ரகு நடந்தான். இலக்கியம், வரலாறு, சமூகம், நுண்கலை, தத்துவம் எனத் தனித்தனி பிரிவுகள். ரகு நிறைய வாசிக்கக் கூடியவன். குறிப்பாக ஐரோப்பிய இலக்கியங்களை விரும்பி வாசித்தான்.

அறிவுலகத்தின் வளர்ச்சி ஐரோப்பாவில் தான் துவங்கியது என்று ரகு நினைத்துக் கொண்டிருந்தான். கட்டிடக்கலையில், சிற்பக்கலையில் இந்தியா அடைந்த உச்சத்தை இலக்கியத்தில் அடையவில்லை என்பதே ரகுவின் எண்ணம்.

ரகு அமெரிக்க மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தான்.. அவனது வேலைக்கும் இலக்கியத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. ஆனால் இலக்கியம் அவனது அலுவலக நெருக்கடிகளில் இருந்து ஆற்றுப்படுத்தியது. ஒருவகையில் வாசிப்பதை தப்பித்தலாக நினைத்துக் கொண்டிருந்தான். ஆகவே மாதம் ஒருமுறையோ, இருமுறையோ புத்தகக் கடைகளுக்குப் போய் இரண்டு மூன்றுமணி நேரம் செலவிட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வருவான்.

காரில் அலுவலகத்திற்குச் செல்லும் நேரம் புத்தகம் படிப்பதற்கானது. அவனது வீட்டில் இருந்து அலுவலகம் போக எப்படியும் ஐம்பது நிமிசமாகிவிடும். டிராபிக் இருந்தால் ஒன்றரை மணி நேரம் ஆகும். காரில் ஏறியவுடன் ரகு புத்தகத்தைத் திறந்துவிடுவான். அதன் பிறகு நகரமோ, வாகன நெருக்கடியோ எதுவும் தெரியாது. கற்பனையின் நிலவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருப்பான்.

நைட்ஸ் கடையில் அவன் கேள்விபட்டிராத பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருந்தன. அரிய வகைப் புத்தகங்களைத் தேடுபவர்களுக்கு இக்கடை ஒரு பொக்கிஷம் என நினைத்துக் கொண்டான்.

புத்தகங்களை விலைக்கு வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. விருப்பமான புத்தகங்களை எடுத்துக் கொண்டு அங்கேயே படிக்கலாம் என்ற ஒரு அறிவிப்புப் பலகை காணப்பட்டது. இப்படி ஒரு வசதி எத்தனை புத்தகக்கடைகளில் இருக்கிறது என நினைத்தபடியே ஒரு கவிதை தொகுப்பை கையில் எடுத்துக் கொண்டு  மேஜையை நோக்கிச் சென்றான்.

அப்போது தான் கவனித்தான். அங்கே இருந்த பொருட்கள் யாவும் மரத்தால் மட்டுமே செய்யப்பட்டிருந்தன. ஒரு இரும்புப் பொருளில்லை. புத்தகம் படிப்பதற்கு ஏற்ப விளக்குகளை மாற்றி அமைத்துக் கொள்ளும்படியாக மேஜை விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

எங்கோ தண்ணீர் சரசரத்து ஒடுவது போன்ற ஒரு சப்தம் மெலிதாக கேட்டபடியே இருந்தது. ஆற்றின் சப்தம் போன்றிருந்தது.  அந்த சப்தம் நினைவை கொப்பளிக்க செய்வதாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரத்துவங்கினார்கள். யாரும் யாருடனும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. விருப்பமான புத்தகங்களுடன் தேர்வு செய்த இடங்களில் போய் அமர்ந்து கொண்டார்கள். அப்போது தான் ரகு கவனித்தான்.

ஒரு மூலையில் காபி தயாரிக்கும் இயந்திரம் இருந்தது. தேவைப்படுகிறவர்கள் இலவசமாகக் காபியும் பெற்றுக் கொள்ளலாம் என்பது தெரிந்தது.

சென்னை போன்ற மாநகரில் இப்படிக் கடை இருப்பது அதிசயம் என்று நினைத்துக் கொண்டான்.

நடந்து சென்று ரகு ஒரு கப் நிறையக் காபி தயாரித்துக் கொண்டுவந்தான். காபியோடு திரும்பி வருகையில் பல்வேறு மேஜைகளில் படித்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டான். இளம்பெண் ஒருத்தி. இரண்டு வயதான கிழவர்கள் நாலைந்து நடுத்தரவயது ஆண்கள். சில வட இந்திய முகங்கள். ஒரு வெள்ளைக்காரன்.

ரகு சீனக்கவிதைப்புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான். கவிதையில் மனம் கூடவில்லை.

மாறாக இந்த இடம் ஏன் இப்படியிருக்கிறது. எதற்காக இப்படியொரு புத்தகக் கடை நடத்தப்படுகிறது என்று யோசித்துக் கொண்டேயிருந்தான்.

நள்ளிரவிற்குள் அந்தக்கடையில் இருநூறு பேர்களுக்கும் அதிகமிருந்தார்கள். அவர்களில் சிலர் நின்றபடியே புத்தகம் வாசித்தார்கள்.. யாரும் யாருடனும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை என்பது தான் புதிராக இருந்தது.

கடையின் உரிமையாளராக இருந்த பெண்  அங்கிருந்தவர்களைத் தனது புன்னகையின் வழியே வரவேற்றபடியே நடந்தாள். சிலர் அவளுடன் கைகுலுக்கிக் கொண்டார்கள். சிலர் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை. சிலர் ஏதோ பரிட்சைக்குப் படிப்பது போலக் குறிப்பு நோட்டுகளுடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் புத்தகக்கடை முழுவதும் எங்கிருந்தோ அபூர்வ நறுமணம் கசிந்து கொண்டிருந்தது. அப்படியொரு வாசனையை ரகு அதன்முன்பு அறிந்ததேயில்லை

புத்தகக் கடையினுள இருப்பது நிஜமாகவே கற்கால குகையொன்றினுள் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. நிசப்தமாக எறும்புகள் சுவரில் செல்வது போல இரவு கடந்து சென்று கொண்டிருந்தது.

 திடீரெனக் கையில் வைத்திருந்த புத்தகம் எடை கூடிவிட்டதைப் போல உணர்ந்தான். தண்ணீருக்குள் மூழ்கியபடியே படிக்கமுடிந்தால் என்னவொரு உணர்வு ஏற்படுமோ அது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

அந்த அறையில் அமர்ந்திருப்பவர்களைக் காணும் போது இரவின் வேறுவேறுபடிக்கட்டுகளில் அமர்ந்தபடியே அவர்கள் தியானித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. வெளியே முடிவற்ற நதியை போல இரவு ஒடிக் கொண்டிருந்தது.

பின்னிரவிலும் ஆட்கள் அக்கடைக்கு வந்தபடியே இருந்தார்கள். ஒன்றிரண்டு ஆட்களைத் தவிர வேறு எவரும் கடையை விட்டு வெளியே போனதாகத் தெரியவில்லை.

புத்தகம் வாசிக்க வந்தவர்களைப் போலின்றித் தியான மண்டபத்தில் இருப்பவர்களைப் போலப் பலரும் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தார்கள். புத்தபிக்குகள் கையில் மந்திரநூலை வைத்திருப்பது போலவே அவர்கள் தோற்றமிருந்தது.

திடீரெனக் கடையின் எல்லா விளக்குகளும் அணைக்கபட்டன. இருட்டு. முழுமையான இருட்டு. ஒருவரும் தனது இடத்தை விட்டு எழுந்து கொள்ளவேயில்லை. ரகுவிற்குத் தான் யாரோ தன்னைப் பிடித்துத் தள்ளுவது போலிருந்தது.

இருட்டிற்குள்ளிருந்து மெல்லிய சங்கீதம் கசிந்து வரத்துவங்கியது. யாரோ பாடுகிறார். முகம் தெரியவில்லை. புத்தகக்கடையில் ஏன் பாடுகிறார். அந்தக்குரலின் சோகம் அவனை அழுத்தியது. மெல்ல நீலவிளக்கு ஒன்று எரியத்துவங்கியது. பின்பு ஒன்றிரண்டு விளக்குள் ஒளிர ஆரம்பித்தன. பாடியவர் யாரென கண்டறிய முடியவில்லை.

ஒவ்வொருவராக வெளியேற துவங்கியிருந்தார்கள்.

ரகு அப்போது தான் மணியைப் பார்த்தான். காலை நாலரையாகியிருந்தது. புத்தக் கடையினுள் வந்த பிறகு நேரம் போனதே தெரியவில்லை. வெளியேறும் வாசலை நோக்கி நடந்த போது ஊன்றுகோலை ஊன்றியபடியே வந்த ஒரு கிழவர் அவனிடம் மெல்லிய குரலில் முதன்முறையாக வருகிறானா என்று கேட்டார்

ஒருவழியாக ஒரு ஆள் பேசுவதைக் கேட்டுவிட்டோம் என்பது போல ரகு திரும்பி பார்த்துத் தலையாட்டினான்

எத்தனை ஆண்டுகளாக இந்தப் பிரச்சனையிருக்கிறது என்று கிழவர் கேட்டார்

என்ன பிரச்சனை என்று கேட்டான் ரகு

உறக்கமின்மை என்றார் கிழவர்

எனக்கு அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லை. படுத்தால் உடனே உறங்கிவிடுவேன் என்றான் ரகு

பின் ஏன் இந்தக்கடைக்கு வந்தாய் என்று கேட்டார் கிழவர்

ஏன் வரக்கூடாது என்று பதிலுக்குக் கேட்டான் ரகு

இந்தப் புத்தகக் கடை உறக்கம் வராதவர்களுக்காக நடத்தப்படுவது. இந்நகரில் பலநூறு மனிதர்கள் உறக்கமில்லாமல் தவிக்கிறார்கள். வீட்டின் படுக்கையில் எவ்வளவு நேரம் தான் புரண்டு கொண்டு கிடப்பது. கடைகள். உணவகங்கள் என எங்கேயும் இரவில் போக முடியாது. இதற்காகத் தான் இந்தப் புத்த கடை நடத்தப்படுகிறது. இங்கே வருகிறவர்கள் எல்லோரும் உறக்கமின்மையால் பாதிக்கபட்டவர்கள். அவர்களுக்கு இக் கடை ஒரு புகலிடம். கடையை நடத்தும் பெண்ணிற்கு இப்பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. அவள் உறக்கத்தைக் கடந்து போகவே படிக்கிறாள். அவள் முகத்தை நீ பார்த்தாயா என்று கேட்டார் கிழவர்

இல்லையே என்றான் ரகு

பல ஆண்டுகளாக அவள் இரவில் உறங்கியதேயில்லை. பகலில் கோழித்தூக்கம் மட்டுமே சாத்தியம். உலர்ந்த திராட்சைப் பழத்தை போல அவள் முகம் சுருக்கிப் போய்விட்டது. உறக்கம் ஒரு அபூர்வமான பரிசு. அது எங்களைப் போன்றவர்களுக்குக் கிடைப்பதில்லை

இளவயதில் நீங்கள் உறங்கியிருப்பீர்கள் தானே என ரகு கேட்டான்

நேற்றைய உறக்கத்தைப் பற்றி இன்று நினைத்து மகிழ முடியாது. ஒவ்வொரு நாளும் உறக்கம் நம்மை அணைத்துக் கொள்ள வேண்டும். அதன் அரவணைப்பை போல இதமானது வேறில்லை

நீங்கள் தூக்கமாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியது தானே எனக்கேட்டான் ரகு

அதை எல்லாம் கடந்துவிட்டேன். எதிர்பாராத மழையைப் போலத் தூக்கம் பற்றிக் கொண்டால் தான் உண்டு

இப்படியொரு புத்தக்கடை வேறு எங்காவது இருக்கிறதா எனக்கேட்டான் ரகு

இல்லை.. உண்மையில் இந்தப் புத்தக்கடை ஒரு மருத்துவமனை. புத்தக வாசிப்பின் மூலம் உடலை புத்துணர்வு கொள்ள முயற்சிக்கிறார்கள். இங்கே வந்து போகத்துவங்கினால் தூக்கத்தின் தேவையில்லாமல் வாழ முடியும். ஆம். மௌனமாக வாசிப்பதன் வழியே கனவுகளை அடைய முடியும். நான் விழித்தபடியே நிறையக் கனவு கண்டிருக்கிறேன்.

உலகம் எங்கள் பிரச்சனையைக் கண்டுகொள்வதில்லை. வீட்டில் உள்ளவர்களால் எங்களைப் புரிந்து கொள்ள முடியாது ஆனால் இந்தப் புத்தக்கடை எங்களைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆற்றுப்படுத்துகிறது. நாங்கள் ஒரு சமூகம். பகலில் வாழுபவர்களால் எங்களைப் புரிந்து கொள்ளமுடியாது.

அந்தக் கிழவரின் குரலையும் அதிலிருந்த ஆதங்கத்தையும் கேட்டபோது ரகுவிற்கு வருத்தமாக இருந்தது.

தூக்கம் எளிதான விஷயமில்லை தானோ

அந்தக்கிழவர் தனது காரை எடுப்பதற்காக அவனுடன் நடந்து வந்தார். தனது வெள்ளை நிற இனோவா காரின் முன்னால் வந்து நின்றபடியே சொன்னார்

இரவில் உறங்கி முப்பத்திரெண்டு வருஷங்களாகிவிட்டது. பகலில் தான் உறங்குகிறேன். அதுவும் குட்டிக்குட்டித் தூக்கம். கடலை கடந்து செல்ல முற்படும் வண்ணத்துப்பூச்சி போல இரவை கடந்து போய்விடத் தவிக்கிறேன். இரவு நீண்டது. ஆழமானது. விசித்திரமானது. பகலில் வசிப்பவர்களால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.

கிழவரின் கார் கிளம்பி போகும்வரை பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு தனது பைக்கை தேடி நடந்தான்.

ரகு பைக்கை எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்தபோது தூக்கம் கண்களை அழுத்தத் துவங்கியது. வீடு போய்ச் சேரும்வரை தூங்கக்கூடாது என முடிவு செய்து கொண்டான்.

விடிகாலையின் குளிர்காற்று இதமாக இருந்தது. பைக்கை ஒட்ட முடியவில்லை. தூக்கத்தில் கண்கள் சொருகின. டீக்கடையில் நிறுத்தி டீ குடித்தால் தான் தூக்கம் போகும் என நினைத்துக் கொண்டான். சட்டெனக் கிழவரின் உறக்கமற்ற முகம் அவனது நினைவில் வந்து போனது

எஸ்.ராமகிருஷ்ணன்-இந்தியா

 3,412 total views,  1 views today

(Visited 656 times, 1 visits today)
 

4 thoughts on “இரவை வாசிப்பவர்கள்-சிறுகதை-எஸ்.ராமகிருஷ்ணன்”

Comments are closed.