கடைசி ஆசை-சிறுகதை-ஐ.கிருத்திகா

“என்னத்த  எதிர்பாத்து இவ இப்புடி பழியா கெடக்குறா… செய்ய  வேண்டியதையெல்லாம்  நெறைவா செஞ்சு  முடிச்சிட்டா. புள்ளைங்களும்  வந்து  சேந்துடுச்சுங்க. அப்புறமும்  எதுக்கு  உசிர  வச்சிக்கிட்டு  கஷ்டப்படுறா…..” என்று  விசனப்பட்டார்கள்.

“துளசி  தீர்த்தம்  குடுத்து  பாருங்க” என்றனர்  சிலர். கொடுக்கப்பட்டது. இன்னும்  என்னென்னவோ  சொன்னார்கள். செய்யப்பட்டது. ஆனால்  ஒன்றுக்கும்  பலனேதுமில்லாமல்  போனது.

“சொல்றேன்னு  தப்பா  நெனைக்காத தம்பி. இதுக்குமேல அவ கஷ்டப்படக்கூடாது. நான்  சொல்றத  செஞ்சா  சத்தமில்லாம ஆவி பிரிஞ்சிடும்” என்று  பெரிசு  ஒன்று  ராகவன் காதில்  கிசுகிசுக்க அவன் முகம்  கறுத்தது.

“வேணாம் மாமா. இருக்கவரைக்கும்  இருக்கட்டும். நம்ம  கையால  அந்த  பாவத்தை  செய்யக்கூடாது” என்று  ஒரேயடியாக  மறுத்துவிட்டான்.

“மாமா  என்ன  சொல்றாரு?” என்று  மாணிக்கம்   கேட்க,

“எண்ணெய்  தேய்ச்சுவிட்டு இளநி வெட்டி  குடுத்தா சட்டுன்னு  உசிரு பிரிஞ்சிடும்னு சொல்றாரு” என்றதும்  அவன்  கலவரமடைந்தான்.

“அதெல்லாம் வேணாம்ண்ணா. அந்த  கொடுமைய  செய்யிற  அளவுக்கு நம்ம மனசுல வலு  இல்ல.”

“நானும்  வேணாம்னு சொல்லிட்டேன்” என்ற  ராகவன்  திண்ணையில் கால்நீட்டி அமர்ந்தான். எல்லோரும்  வந்து  ஒருவாரத்திற்கு மேலாகிறது. அம்மாவின் உடல்நிலை  மோசமாகிவிட்டது  என்று வேலு சொன்னதும்  அனைவரும்  கைவேலையை  போட்டுவிட்டு  ஓடிவந்தனர். ராசாத்தியும்  அதோ, இதோ  என்று  ஏமாற்றி  கொண்டிருக்கிறாள்.

“என்னங்க, லீவை  எக்ஸ்டெண்ட்  பண்ணனும். ஒருவாரம்தான்  எழுதி  கொடுத்துட்டு  வந்தேன்.”

மாணிக்கத்தின் மனைவி சொல்லிவிட்டு போனாள். மாணிக்கம் தூணில் சாய்ந்து கண்களை  மூடிக்கொண்டான்.

“அம்மா இவ்ளோ கஷ்டப்படக்கூடாது. ஆண்டவன் ஏன் அவங்களை படுத்தறான்னு தெரியலை. ஒன்னு  நல்லபடியா  இருக்கணும். இல்லேன்னா  சிரமப்படாம  போய்  சேர்ந்துடணும். அவங்க  கஷ்டப்படறதை  பார்க்கிறப்ப மனசுக்கு வேதனையா இருக்கு” என்றவனின்  கண்கள்  கோவைப்பழமாய்  சிவந்திருந்தன.

“விருப்பப்பட்டது கிடைக்கலேன்னாலும், மனசுல  ஏதாவது  ஆசையிருந்தாலும் உசிர் போகாதுன்னு  சொல்லுவாங்க. நம்மளால  முடிஞ்ச  மட்டும் எல்லாம் செஞ்சுபார்த்துட்டோம். அப்படியும்  எதுவும்  நடக்கலேன்னா….காட்  ஒன்லி  நோஸ்…”

ஜெயாவின் கணவன் மோவாயில்  கைகளை தாங்கியபடி  சொன்னான். தூரத்தில் வேலு வியர்க்க, விறுவிறுக்க  நடந்து வருவது தெரிந்தது. உடன்பிறந்தவர்கள் நன்றாகப் படித்து வேலை  நிமித்தமாக  நகரங்களுக்கு  சென்றுவிட, படிப்பு  கிலோ என்ன  விலை என்று  கேட்ட வேலு  நிலபுலன்களைக் கவனிக்க  வேண்டியதாயிற்று. ராசாத்தி அவனுடன் கிராமத்தில் இருந்துவிட்டாள். ஒவ்வொரு வருடமும்  கோடைவிடுமுறைக்கு  அனைவரும்  இங்கு  கூடுவார்கள். வீடு  ரெண்டுபடும்.

“செல்வி, ஒரு  சொம்பு தண்ணி கொண்டா…”

உள்நோக்கி  குரல் கொடுத்தபடியே வேலு  திண்ணையிலமர்ந்தான்.

“விளைச்சல் எப்படியிருக்கு?”

ராகவன் கேட்க,

“போனவருசத்துக்கு இந்த வருசம் தேவலாம். போனவருசம் அவ்வளவா விளைச்சலில்லாம போனதுல  அம்மாவுக்கு ஏகவருத்தம். இந்த  வருச விளைச்சலை பார்த்தப்புறம்தான் அதுக்கு  நிம்மதியாச்சு. அறுவடை  முடிஞ்சதும் அம்மாவுக்கு ஒரு செயின் பண்ணி போடலாம்னு இருந்தேன். ரொம்பநாளா பழசையே  போட்டுகிட்டிருக்கு. போற காலத்துலேயாவது புதுசு போட்டுக்கட்டும்னு நெனச்சேன். ஆனா இப்புடி  ஆயிடுச்சு.”

வேலு  துண்டால் முகத்தைப் பொத்திக்கொண்டு குலுங்கினான். முப்பத்தைந்து  வருடங்களாக அம்மாவின்  அருகிலேயே இருந்துவிட்டவன். அம்மா போகப்போகிறாள்  என்ற  உண்மை அவனை பாதித்திருக்கவேண்டும். நினைத்துகொண்டாற்போல் திடீர், திடீரென அழுதான்,

“மனசை  தேத்திக்குங்க மச்சான். நீங்களே இப்படி இருந்தா எப்படி…”

ஜெயாவின் கணவன் அவனைத் தேற்றினான். உள்ளே ஜெயாவின் அதட்டும் குரல் கேட்டது.

“பசங்களா, சத்தம் போடாம சாப்பிட்டு எந்திரிச்சு போங்க. பாட்டி எவ்ளோ கஷ்டப்படறாங்க பாத்தீங்களா… நீங்க சத்தம் போட்டா அவங்களுக்கு கஷ்டமா  இருக்குமில்ல. சாப்பிட்டு ஒழுங்கா தெருவுக்கு போயிடணும்  சொல்லிட்டேன்.”

பிள்ளைகள்  சாப்பிட்டுமுடித்த  கையோடு தபதபவென்று  வெளியே  ஓடிவந்தனர்.

“மாமா, சீட்டுக்கட்டை எங்கே  வச்சீங்க? எங்களுக்கு  பொழுதே போகமாட்டேங்குது. எடுத்து  குடுங்க.”

ஜெயாவின்  பையன்  நிலைமை  புரியாமல் படுத்தினான். ஏனோ  ராகவனுக்கு  அவனைப்  பார்த்ததும்   நினைவுகள்  பின்னோக்கி  சென்றன. ராகவனும் இப்படித்தான். அவனுடைய  அம்மா  இறந்தபோது  அவனுக்கு  ஐந்து  வயதிருக்கும்.

“அம்மா ஏன் படுத்திருக்கு தாத்தா? என்று அவன் ஒரு பெரியவரிடம் கேட்க,

“உங்கம்மா  சாமிகிட்ட  போயிட்டாப்பா” என்று  கண்கலங்கினார்  அவர்.

அம்மா  திரும்பி  வருவாளா, வரமாட்டாளா  என்று  யோசிக்ககூட  அவனுக்கு  தெரிந்திருக்கவில்லை. கூடத்தில்  அம்மாவின் உடல்  கிடத்தப்பட்டிருக்க, அவன்  தெருப்பிள்ளைகளுடன்  சேர்ந்துகொண்டு  இதே  திண்ணையில்  ஓடிப்பிடித்து விளையாடி  கொண்டிருந்தான்.

அவ்வபோது யாராவது வந்து அவனை கட்டிபிடித்துக்கொண்டு அழுவார்கள். அவனும்  காரணம்  புரியாமல்  நின்றிருப்பான். ஆனால்  கூடிய  சீக்கிரமே  அம்மா  இல்லாத  ஏக்கம்  மனதை  பிறாண்டத்  தொடங்கியது. சொல்லத்தெரியாமல் படுத்தினான். ஊரிலுள்ளவர்கள் ராகவனின் அப்பாவை நச்சரிக்க  தொடங்கினர்.

“சின்னப்புள்ளைய வச்சிக்கிட்டு  தனியா கஷ்டப்படுறியே. ஒரு  கல்யாணத்த  பண்ணிக்கிட்டா  உனக்கும்  ஆறுதலா  இருக்கும். புள்ளைக்கும் மனசுல உண்டான ஏக்கம் போகும்” என்றனர். ராகவனின்  அப்பா  அவ்வளவு  சீக்கிரத்தில்  மசிந்துவிடவில்லை.

“வர்றவ எம்புள்ளைய எப்புடி வச்சிப்பாளோ. மூத்தாள்  மகன்னு  வெறுத்துட்டான்னா  என்ன  செய்யிறது? நான்  பொண்டாட்டி பக்கம் நிப்பேனா, புள்ளைக்காக  பேசுவேனா….? நமக்கு  அதெல்லாம் சரிப்பட்டு  வராது சாமி ” என்று  மறுத்துவிட்டார்.

ஆனால் விவரம் புரியாத சிறுவனை வளர்ப்பது சிரமமென்பது அவருக்கு போகபோகத்தான் புரிந்தது.

“இப்ப சரின்னு சொல்லு. நம்ம  சொந்தக்காரப்பொண்ணு ஒன்னு  இருக்கு. குடும்பத்துக்கு பாந்தமா இருக்கும். உம்புள்ளைய அன்பா கவனிச்சிக்கும். ஏழைப்பொண்ணுதான். ஆனா மனசளவுல தங்கம். நீ  கல்யாணம்  செஞ்சிக்கறியா…?”

ஒன்றுவிட்ட  மாமா வற்புறுத்தி கேட்க, ராகவனின் அப்பா ஒப்புக்கொண்டார். கல்யாணமும்  நடந்தது. அம்மாவின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த  ராகவனுக்கு புதிதாக  வந்தவளை அம்மா ஸ்தானத்தில் வைத்து  பார்க்க முடியவில்லை. அவளிடம் ஒட்டாமல் விலகி  நின்றான். ஆனால்  ராசாத்தி அவனை  தன்  மகன்  போலவே  பாவித்தாள்.

ராகவனுக்கு அவளை அம்மாவாக  ஏற்றுக்கொள்ளமுடியவில்லையே தவிர மற்ற எல்லா வகையிலும்  பிடித்திருந்தது. என்றாலும் இருவருக்குமிடையே  நூலிழையளவு  இடைவெளி  இருந்துகொண்டேயிருந்தது. அவன்  தவறிகூட ராசாத்தியை அம்மா என்று  அழைக்கவில்லை.

“பசிக்குது, சாப்பாடு  போடுங்க….” என்பான்.  ராசாத்தி மனம் குமைவாள்.

“பசிக்குதும்மா, சாப்பாடு  போடுன்னு  ஒருநாளாவது  சொல்லேன்டா” என்று  வற்புறுத்துவாள். ராகவன்  வாய்பேசாது அமர்ந்திருப்பான்.

“யார்கிட்டேயோ பேசறமாதிரி எங்கிட்ட பேசுறாங்க…” என்று  ராசாத்தி   கணவனிடம்  புலம்புவாள். ராகவனுக்கும்  அவளை அம்மாவாக பாவிக்ககூடாது என்று எந்த  வைராக்கியமுமில்லை. ஆனால்  அம்மா  என்றழைக்க மனம்  இடம்  தரவில்லை. வாங்க, போங்க என்று விளிப்பதோடு  நிறுத்திகொண்டான்.

“நான் உன் அம்மாப்பா. என்னை ஏன் தூரத்து உறவு மாதிரி  பாக்குற?” என்று  ஒருமுறை  ராசாத்தி  கேட்டபோது ராகவனின்  கண்கள்  அனிச்சையாக  சுவரில்  மாட்டியிருந்த   அம்மாவின்  போட்டோவை  வெறித்தன.

இதுதான்  காரணமா என்றெண்ணிய  ராசாத்தி போட்டோவை  மறைத்து  வைத்துவிட்டாள். அதனால்  அவனுக்கு கோபம் உண்டானதேயொழிய மனசு மாறவில்லை.

அடுத்தடுத்து வேலு, மாணிக்கம், ஜெயா  மூவரும்  பிறந்தபிறகும்  ராசாத்திக்கு  ராகவனிடத்தில்  இருந்த  அன்பு  குறையவில்லை. அவன் முதல் தாரத்து பிள்ளை என்று  தெரிந்தபோதும்  குழந்தைகள்  அவனிடம்  ஒட்டுதலாகவே  இருந்தனர்.

“ராசாத்தி  உன்னை  தன் சொந்த புள்ளையாத்தான்  நெனச்சிக்கிட்டிருக்கா. அவளை  நீ  அம்மான்னு  கூப்புடலேன்னாலும்  பரவாயில்ல. அவதான்  அடிச்சிக்கிட்டு  கெடக்காளேயொழிய  எனக்கு  உன் மனசு  புரியுது. அதனால நீ எப்பவும் போல இரு. ஆனா  வயசான  காலத்துல  நான் போயி அவ இருக்கமாதிரி  நெலமை வந்தா அவளை  நல்லபடியா  பாத்துக்க. நீதான்  வீட்டுக்கு  மூத்தவன். அதனால  அவளை  பாத்துக்க  வேண்டிய  பொறுப்பு ஒனக்குதான் இருக்கு” என்று  அப்பா  ஒருநாள்  சொன்னார்.

அவர் சொன்னதற்கு  தலையசைத்தவன்  வேலை  கிடைத்து வெளியூருக்கு  கிளம்பியபோது  ராசாத்தியையும்  உடன்  வருமாறு  வற்புறுத்த அவள்  மறுத்துவிட்டாள்.

“ஒங்கப்பாரு உசிர விட்ட  இந்த  வூட்டுலேயே என்  உசிரும் போவணும். அதனால்  நான் எங்கேயும் வரல” என்று  உறுதியாக  கூறிவிட்டாள் .

000000000000000000

“தம்பி, அம்மா எப்புடியிருக்காங்க…?”

மணியக்காரர் கேட்க, ராகவன் திடுக்கிட்டு  நினைவு  கலைந்தான்.

“மவ வூட்டுக்கு போயிருந்தேன். ராமசாமி வந்து சேதியை  சொன்னதும் எனக்கு  பக்குன்னு  ஆயிடுச்சு. போனவாரம்  ஊருக்கு கெளம்பறப்பகூட அம்மாகிட்ட  பேசிட்டுதான் போனேன். அப்ப  நல்லாத்தான்   நடமாடிகிட்டிருந்தாங்க. திடீர்ன்னு  ஒடம்பு  சரியில்லேன்னு  கேட்டதும்  மனசு  தாங்கல. உடனே  பஸ்  புடிச்சு  ஓடியாந்துட்டேன்” என்றவர் உள்ளே  சென்று  ராசாத்தியைப்  பார்த்துவிட்டு  வந்தார்.

“மனசுல  என்னத்தையோ வச்சிக்கிட்டு தவிக்கிறாப்ல தெரியுது  தம்பி. அதனாலதான்  உசிரு  இழுத்துகிட்டேயிருக்கு. அது  என்னன்னு  தெரிஞ்சு  நிறைவேத்திட்டா  நிம்மதியா ஆவி பிரிஞ்சிரும்.”

சொல்லிவிட்டு அவர்  கிளம்பிப்போக ராகவன் எழுந்து உள்ளே வந்தான்.

பிள்ளைகள்  குறுக்கும், நெடுக்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். ஜெயாவின் மகன் அந்த சிறிய  மரபீரோவுக்கு பின்னால்  ஓடிஒளிய, பீரோவின்  தலையிலிருந்த அந்த  போட்டோ பொத்தென்று கீழே   விழுந்தது. ராசாத்தி எடுத்து  மறைத்து வைத்திருந்த  ராகவனின் அம்மா  போட்டோ.  ராகவனுக்கு  பொறிதட்டினாற்  போலிருந்தது.

‘இதுதான்  காரணமா…?’

தோன்றிய மறுவினாடி வேக,வேகமாய்  ராசாத்தியின் அருகில் வந்தவன் மெல்ல அவளுடைய  மெலிந்த  கைகளைப்  பற்றினான்.

பஞ்சடைந்து போயிருந்த அவளது  கண்களிலிருந்து கண்ணீர்  வழிந்தது. மகனின்  ஸ்பரிசம்  உணர்ந்த  தாயின் ஆனந்த கண்ணீர்  அது. ராகவன் குனிந்து அவள் காதில்’

“அம்மா…..” என்றான். மூடிய  இமைகளுக்குள் விழிகள் அலைந்ததை பார்த்தவன்  மறுபடியும்,

“அம்மா…” என்றான்  அழுகையை  அடக்கியபடி.  இதுபோதும்  என்று  அவள் நினைத்தாளோ  என்னவோ, சட்டென ஆவியை கூட்டிலிருந்து  பிரித்துக்கொண்டாள்.

ஐ.கிருத்திகா-இந்தியா

(Visited 234 times, 1 visits today)