ரங்கராட்டினம்-சிறுகதை-ஐ.கிருத்திகா

ஐ.கிருத்திகா
ஓவியம் : தங்கேஸ் விக்கி

பொழுது  விடிந்துவிட்டது. அதற்கு  அறிகுறியாக  உலகத்தின்  சலசலப்புகள்  ஆரம்பமாகிவிட்டன. பானு  எழுந்தமர்ந்தாள். தூக்கம்  கலைந்து  இயல்பாக  அல்லாமல்   யாரோ  தள்ளிவிட்டது  போல  வெடுக்கென  எழுந்தமர்ந்தாள்.

வெகுநேரம்  வரை  விழித்திருந்துவிட்டு  தன்னையுமறியாமல் உறங்கிப்போனதன் விளைவாக கண்கள்   சிவந்திருந்தன. தூக்கத்திலும் ஒரு விழிப்பு நிலை.

அசதி  உடம்பிற்குத்தான். மனதிற்கில்லை. அது சதா சிந்தித்துக்கொண்டேயிருந்தது. சிந்தனையின்  ஊடாக  கனவுகளின்  எச்சங்கள். இரண்டும்  கலந்து  மாறி, மாறி  படர்ந்து, அமுங்கி  ஒருவித  குழப்பத்தை  உருவாக்கியிருந்தன.

பானு  புடவையை சரிசெய்துகொண்டாள். கலைந்து  கிடந்த கூந்தலை  ஒழுங்குப்படுத்திக்கொண்டாள். இனி, அடுத்தது என்ன என்கிற  தீர்மானத்தை முன்பே யோசித்து வைத்திருந்ததில் மனம் கெட்டிப்பட்டுப்  போயிருந்தது.

மறுபடியும் அதை நீர்க்க செய்து இருப்பு நிலையிலேயே  குத்த  வைக்க அவளுக்கு விருப்பமில்லை. மனம்  சாதாரணமாக கெட்டிப்படவில்லை. களிமண் போல் குழைந்து கிடந்த மனதை சுற்றியிருந்தவர்கள் பாதியும், அவள் மீதியுமாக கெட்டித்தன்மைக்கு ஆளாக்கியிருந்தார்கள்.

“ஒரு புள்ள பெக்க வக்கில்ல. பேச்சப்பாரு….தலாக் பண்ணிட்டுப் போயிடுவான் எம்புள்ள…..” என்ற  மாமியாரின்  மிரட்டல் ஆரம்பத்தில் கிலியை உண்டாக்கினாலும் போகப்போக பழகிவிட்டது.

தினமும்  நான்கைந்து  முறைகளாவது மாமியார் அந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருக்கமாட்டாள். பத்து  வருடங்களில் அடிக்கடி கேட்டு, கேட்டு  சலித்துப்போய்விட்டது.

துபாயில் வேலை செய்யும் இப்ராஹிம் அந்த பத்து வருடங்களில் எட்டு முறை ஊருக்கு வந்திருக்கிறான். எட்டு, ஒரு  மாதங்கள்….. அப்போது  இயல்பாய்  இருக்க  முனைந்து, இந்த முறையாவது…….என்கிற  தவிப்பில்  உளைந்து, பானு  படாதபாடுபடுவாள். ஊருக்குப்போனதும்  இப்ராஹிம்  கேட்கும்  கேள்வி,

“வந்திருச்சா… ?” என்பதுதான்.

எவ்வளவு அடக்க முனைந்தும், இயற்கையின் உந்துதலில் அது நிகழ்ந்தேவிடும்.

ஒவ்வொரு  நிகழ்விலும் மரணித்துப்போகும் நம்பிக்கை வரவர அமிலம் பட்டு  தீய்ந்ததுபோல்  கருகியேப்போனது. இப்ராஹிம்  ஆரம்பத்தில்  சாதாரணமாக  எடுத்துக்கொண்டாலும்  நாளடைவில்  பொறுமையிழக்கத்  தொடங்கினான்.

“குடுத்தத பத்திரப்படுத்தி வச்சிக்கத் தெரியாதா …இதென்ன மூளைகெட்டத்தனம். ஒவ்வொருமுறையும்  இப்படியா  தவறவிடுவ…..” என்று  ஒருமுறை அவன் அலைபேசியில் இரைந்தபோது பானு உறைந்து போனாள். அவனுடைய பேச்சில் எதிர்காலம் ஒருவாறு புரிந்து போயிற்று.

“இனிமே என்னால பொறுத்துக்க முடியாது. எம்புள்ளைக்கு  நான் வேற நிக்காஹ் பண்ணப்போறேன். நீ  வெலகிரு….”

மாமியார் மிரட்டியதும், அந்த வார்த்தைகளை கடந்துபோக அவள் பிரயத்தனப்படவில்லை. அதற்காக அவள் ஏற்கனவே ஆயத்தமாகிவிட்டிருந்தாள்.

யாரிடம் குறை என்பதை தெரிந்துகொள்ளாமல் பெண்களையே ஆதியோடு அந்தமாக  குற்றம்சாட்டும் சமுதாயத்தில் பிறந்தது தன் குறைதான் என்றெண்ணியபடியே பானு அந்த  சாலையின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தாள்.

பெற்றவர்களிடம்  தஞ்சமடைய அவளுக்கு விருப்பமில்லை. அவர்களே அண்ணணைச்  சார்ந்து  நலிந்து  கிடக்கிறார்கள். பாரத்தை இறக்கி வைத்த தோளில் திரும்பவும் சுமையை  ஏற்ற அவளுக்குப் பிடிக்கவில்லை, அவர்களுக்கும் வலுவில்லை.

மழைத்தூறல்கள் விழ ஆரம்பித்தன. வெகுநாட்களுக்குப் பிறகான மழை தூசியை  கிளப்பிற்று. பானு முகத்திரையை விலக்கி பாட்டிலிலிருந்த தண்ணீரை வாயில்  சரித்துக்கொண்டபோது, அந்த கைனட்டிக் ஹோண்டா அவள்முன் வந்து நின்றது.

தலைக்கவசத்தை நீக்கிய அவள் பானுவைப்பார்த்து கன்னம்  குழிய சிரித்தாள்.

“பானு……”

பானு ஒருநொடி திகைத்து சட்டென முகம் மலர்ந்தாள்.

“ஹே…ஹேமா…”

“சாட்சாத் நானேதான்…பத்து வருஷங்கழிச்சு உன்னைப் பார்த்ததும் பக்குன்னு மனசுக்குள்ள    சந்தோஷம் ஒட்டிக்கிச்சு…நீ எப்படி இங்கே… ?” பானு தடுமாற்றத்தோடு  தலைகுனிய,

“பின்னால உட்காரு, போகலாம் ” என்றவள் அவளை வற்புறுத்தி அமரவைத்து டிராஃபிக்கில் கலந்தாள்.

ஹேமாவைப் பார்த்ததும் வேலைக்காரப்பெண் குழந்தையை அவளிடம்  தந்துவிட்டு  ஓடிப்போனாள்.

“என் செல்லம்…என் தங்கம்…அம்மா வந்துட்டேன்டா குட்டி…”

ஐந்து  நிமிடங்கள் குழந்தையை கொஞ்சிவிட்டு அதை பிராமில் விட்ட ஹேமா திரும்பி  கேட்டாள்.

“பிரச்சனைன்னு தெரியுது…ஆனா என்னப் பிரச்சனை… ?” பானு  எல்லாம்  கூற  பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்தவள்,

“கோவிச்சிக்கிட்டு வந்துட்டியாக்கும்…” என்க, பானுவின் தலை அசைந்தது.

“ஒரு வேகத்துல வெளியேறிட்டேன். ஆனா எங்கப்போறதுன்னு தெரியல. அந்த நேரத்துலதான்  நீ வந்து என்னெதிர்ல நின்னே.”

“எல்லாம் நல்லதுக்குதான். விடு…” ஹேமா சொல்லிவிட்டு எழுந்தாள்.

“பத்து நிமிஷத்துல வந்துடறேன்” என்று கூறி குழந்தையோடு உள்ளே சென்றாள். குழந்தை  உருவ அமைப்பில் வித்தியாசமாக இருந்தது.

சொன்னபடியே ஹேமா பத்து நிமிடங்களில் முகம் கழுவி, உடைமாற்றி வந்தாள். அந்த  இடைவெளியில் பானு வீட்டைப் பார்த்தாள்.

எங்கும் ஆணின் அடையாளம் இல்லை. வீடு சின்னதாய், ஒரு மலர்ந்த மலரின் புத்துணர்வில் பளிச்சென்றிருந்தது. ஒரு இடத்தில் தூசி, குப்பையில்லை.

தேவையற்ற, அனாவசிய அடைசலில்லை. சுவரில் ஒரு சதுர  சட்டகத்துக்குள் இரு பறவைகள்  வானில் சிறகடித்து  பறந்துகொண்டிருந்தன. ஜன்னல் திரைச்சீலையில் லாவண்டர் பூக்கள் சிதறிக்கிடந்தன. சுவர் கண்ணை உறுத்தாத நிறத்திலிருந்தது.

ஹேமா அருகில் வந்தமர்ந்தாள். இருவரும் பள்ளியில் பத்தாவதுவரை ஒன்றாகப் படித்தவர்கள். பத்தாவதோடு பானு முடக்கப்பட்டு திருமணம் செய்விக்கப்பட்டாள்.

“சரியான படிப்பில்ல, பொருளாதார பின்புலமில்ல. இப்ப வாழ்க்கையும் இல்லேன்னு  ஆயிடுச்சு. இது  முதல்  தலாக். நான் கிளம்பிவந்துட்டேன். மூணு  தலாக்குகளுக்கு  அவசியமில்ல. ஏன்னா காரணம் வலுவானது. ஆனா அந்தக் காரணத்துக்கு நான் மட்டுமே  காரணம்னு  சொல்றாங்க. அதைத்தான் தாங்கிக்க முடியல. எத்தனைநாள்தான் சிலுவை  சுமக்கறது. அதனாலதான் கிளம்பிட்டேன். இனிமே அடுத்தகட்டம்னு ஒண்ணு  கிடையாது.”

பானுவின் குரல் கம்மிப்போனது. ஹேமா ஆதரவாக அவள் கையை பற்றிக்கொண்டாள்.

புரிதலை ஸ்பரிசத்தில் உணரலாம். இளஞ்சூடான அவளுடைய கை பானுவுக்கு அதை  உணர்த்திற்று. கண்ணிலிருந்து இரு  நீர்மணிகள் பொட்டென்று ஹேமாவின் புறங்கையில்  விழுந்து  தெறித்தன . அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டு பானு கேட்டாள்.

“உன் வீட்டுக்காரர்… ?”

ஹேமா சிரித்தாள்.

“என் வீட்டுக்காரர் இருந்தார், இறந்தகாலத்துல. இப்ப  இல்ல. ”

“எ…என்னடி சொல்ற… ?”

“ஆமா…நானும் உன்னைமாதிரிதான். உனக்கு தலாக், எனக்கு விவாகரத்து. வார்த்தைகள்  வேறாயிருந்தாலும் பொருள் ஒண்ணுதான். நம்ம ரெண்டுபேருக்குமே  குழந்தைதான்  பிரச்சனை.”

“ஹேமா, உன் குழந்தைக்கு ஏதாவது………”

“டவுன் சிண்ட்ரோம்…கல்யாணமாகி ரெண்டுவருஷம் கழிச்சு பிறந்தான். ஏகப்பட்ட  எதிர்பார்ப்புகளோட இருந்த நாங்க அவனைப் பார்த்ததும் இடிஞ்சு போயிட்டோம். அழுதழுது  ஒரு கட்டத்துல நான் தேறிட்டேன். வருணால முடியல. குழந்தையைப்  பார்த்து, பார்த்து  வேதனைப்பட்டவர் நாளடைவுல எரிச்சல்  பட  ஆரம்பிச்சிட்டாரு. அது, இந்த குழந்தை  வேணாங்கற அளவுக்குப் போயிடுச்சு. ஒருநாள் திடீர்ன்னு வந்து, குழந்தையை ஆசிரமத்துல  சேர்த்துடலாம்னு சொன்னாரு” என்ற ஹேமா பிராமில் இருந்த குழந்தையை எடுத்து  நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

“கடவுள் தந்த பரிசை தூக்கி வீச எனக்கு எப்படி மனசு வரும்…முடியாதுன்னுட்டேன். அதுலேருந்து எப்பப்பார்த்தாலும் சண்டை, பிரச்சனைன்னு  வீடே ரெண்டுபட்டுச்சு. ஒரு  கட்டத்துக்கு மேல முடியாது போல இருந்துச்சு. பிரிஞ்சிட்டோம்.” அவள் சொல்லிவிட்டு  அமைதியானாள்.

இரவு மழை நின்று வானில் நட்சத்திரங்கள் துளிர்க்க தொடங்கின. கோடை  மழை  வருவதும்  தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை.

காற்று குளிர் வாங்கி சிலுசிலுத்தது. மொட்டை மாடியின் தரை ஜில்லிப்பாய் இருந்தது. ஹேமா இரவு உணவை முடித்துக்கொண்டு  பானுவை மேலே  கூட்டி வந்திருந்தாள்.

“ராத்திரியானா தீரஜோட இங்கே வந்து உட்கார்ந்துக்குவேன். போனதை நினைச்சோ, இனி  வரப்போற  நாட்கள்  எப்படியிருக்கும்னு நினைச்சோ கவலைப்பட மனசுக்கு இடம்  கொடுக்கமாட்டேன். அதுக்கு  பதிலா  குழந்தைகிட்ட  பேசிக்கிட்டேயிருப்பேன். அவனுக்குப்  புரியுதோ, இல்லையோ கதை சொல்றது, ரைம்ஸ் பாடறது இப்படித்தான் நேரம் கழியுது. ”

பானு, ஹேமாவை  ஆயாசத்துடன் பார்த்தாள். அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள்  தேவையில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

“பாரு பானு, இந்த பத்து வருஷமும் நீ நிறைவா வாழ்ந்தியா…இல்லேயில்ல. குழந்தை  இல்லேங்கற காரணத்துக்காக உன்னை விலக்கி  வச்சிட்டாருல்ல. இனிமே அவரைப்பத்தி  நீ  நினைக்காதே. உனக்கும், அவருக்குமான தாம்பத்யம் குழந்தையால அறுபட்டுப்போச்சுன்னா  அந்தாளு உன்மேல ப்ரியம் வச்சிருந்தாருன்னு எப்படி சொல்லமுடியும். ப்ரியம்  இல்லாத   இடத்துல  இன்னொரு  தலாக்குக்கு சந்தர்ப்பம் கொடுப்பானேன்னு  நீ  சொன்னேபாரு. வெரிகுட்……இந்த  தைரியம் பெண்களுக்கு வேணும். இருந்தாலும் உள்ளுக்குள்ள முணுக், முணுக்குன்னு  ஒரு  பயம்  ஒளிர்விட்டுக்கிட்டே  இருக்கும். அதுக்காகதான்  சொல்லிக்கிட்டிருக்கேன்” என்ற  ஹேமா பானுவின் தோளைப் பற்றினாள்.

“சினிமாவுல வர்றமாதிரி, நான் வாழ்ந்து காட்டறேன் பார்ன்னு வீராவேசமா கிளம்பவேண்டாம். ஆறு, தான் போற வழியில இருக்கற செடி, கொடிகளுக்கு ஊட்டமளிச்சு, கரையோரம் நிற்கற மரங்களோட  பூக்களை தரிச்சிகிட்டு அழகா, அமைதியா நகர்ந்து  போகும். அதேமாதிரி அழகா, அமைதியா வாழ்ந்துட்டு போகலாம். நம்மளை  ஒதுக்கினவங்களை நாமளும் ஒதுக்கணும்னு அவசியமில்ல. அவங்களை மறந்துடுவோம். அதுதான் புத்திசாலித்தனம்.”

ஹேமா சொல்ல, பானு மெதுவாக தலையாட்டினாள். தைரியமாய் கிளம்பிவந்துவிட்டபிறகு  மெல்லிய பயம் பற்றிப்படர்ந்தது போய் இப்போது சின்ன ஆசுவாசம்  வந்திருந்தது.

“இதுவும் கடந்து போகும். இதை சொல்லித்தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இந்த  வாழ்க்கையே ஒரு ரங்கராட்டினம் மாதிரி. சந்தோஷம், சங்கடம் மேல, கீழ…….கீழ, மேல……..மாறும், நிச்சயமா  மாறும். உனக்குப் புரியுதா……?”

ஹேமா கன்னம் தட்டி கேட்க, பானு மெல்லச் சிரித்தாள்.

“நல்லா இருக்கு. என் மனசு பூரா ஒரு அகல் விளக்கோட வெளிச்சம் பரவினமாதிரி  பளிச்சுன்னு  இருக்கு. உன் சிரிப்பு அந்த மாயாஜாலத்தை எனக்குள்ள நிகழ்த்திடுச்சு. இப்படியே  சிரிச்சிக்கிட்டே  இரேன். ப்ளீஸ்….”

“எனக்கு ஏதாவது ஒரு வேலை …”

“நாளைய விடியல் உனக்கான விடியலா இருக்கும். நிம்மதியா இரு. இப்போதைக்கு  உனக்கொரு  வேலை  இருக்கு ”

ஹேமா குழந்தையை அவளிடம் தந்தாள்.

“வச்சிக்கோ…”

குழந்தை பூப்பந்துபோல அவள் நெஞ்சில் சாய்ந்துகொண்டது. பானு குழந்தையை  அணைத்துக்கொண்டாள்.

ஐ.கிருத்திகா-இந்தியா

ஐ.கிருத்திகா

(Visited 189 times, 1 visits today)
 

2 thoughts on “ரங்கராட்டினம்-சிறுகதை-ஐ.கிருத்திகா”

Comments are closed.