கிரகணம்- சிறுகதை-வித்யா அருண் (அறிமுகம்)

வித்யா அருண்
ஓவியம் : தங்கேஸ் விக்கி

கீழ்நோக்கி செல்லும்  நகரும் மின்படிக்கட்டுகளில்  முகக்கவசம்  அணிந்து நின்றபடியே, அந்த படிக்கட்டுகளோடு, தன் மனமும் கீழ்நோக்கி முடிவின்றி நகர்வதாக உணர்ந்தாள் ரம்யா.

கொவிட் 19 கிருமித்தொற்றின் பரவலைத்தடுக்க ரயிலில் பயணம் செய்யும்போது மற்றவர்களிடமோ, தொலைபேசியிலோ பேசவேண்டாம் என்ற அறிவிப்பு, தனிமை உணர்வை மேலும் அதிகப்படுத்தியது.

சிங்கப்பூரில் பொதுப்போக்குவரத்து பயணங்களில் இருக்கும் அமைதி, இப்போது பேரமைதியாக உருவெடுத்து விட்டது.

பிஷானில் இருந்து கெண்ட்ரிட்ஜ் வரையிலான அரை மணி நேரப்பயணம் முகமூடிக்கூட்டத்தின் நடுவே, கண்களால் கூட யாரும் உடன் பயணிப்பவர்களைப் பார்க்காதது, மனிதகுலம் இப்படியே போய்விடுமோ என்பதான அயர்ச்சியை அதிகம் தருகிறது.

வேறு வழியில்லாமல், கிடைத்த இருக்கையில் அமர்ந்த ரம்யாவின்  கைபேசி மின்னியது. அப்பா தான்!

வாட்சப்பில் சுபஸ்ரீ தணிகாசலம் நடத்தும் QFR நிகழ்ச்சியில் அவர் ரசித்த ராஜாமகள் பாடல். ஊரில் பலருக்கும் பகிரும்போது எனக்கும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வாய்ப்பு இல்லை. பகுத்து செய்திகள் தான் பரிமாறப்படுகின்றன. உணவை போல!

பிப்ரவரி 2020 ல் அப்பா வரும்போது, கோவிட் 19 சிங்கப்பூருக்கு கூப்பிடுதூரத்தில் கூட இல்லை. அது எங்கோ சீனாவை மட்டும்  ஆட்டுவிக்கும் மர்மம் என்றே அறியப்பட்டது.

“இப்ப ஏன் நீ சிங்கப்பூருக்கு வர சொல்ற ? நான் பாட்டுக்கு இருக்கேன்.”

என்று சில ஆண்டுகளுக்கு பிறகு தான் மட்டும் தனியாக வருவதால் சொல்லிக்கொண்டே  இருந்தார்.

அம்மா போன பிறகு, அவருக்கு எங்கும் போகப் பிடிக்கவில்லை. அம்மாவின் கைப்பைக்குள் பயணசீட்டு, விசா, சண்டூ பாம், நார்த்தங்காய், என்று அடக்கமாய் எடுத்து வந்த லாவகம் தான் தனியாகச் செய்யும் பயணங்களில் அவருக்கு இல்லவே இல்லை.

சென்னையில் தங்கை பக்கத்துத்தெருவில் இருந்தாலும் தனியாக அப்பாவுக்கென்று  ஒரு குடித்தனம். அம்மாவின் வீடு என்ற கைச்சூடின்   கதகதப்பு மாறி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த வீட்டுக்குள் நிரந்தரமாகவே இருக்கும் விபூதி, குங்குமம், மைசூர் சந்தன சோப்பு என்று இருக்கும் அம்மாவின் வாசத்தோடு வாழவே விரும்புகிறார்.

நினைத்தபடி அடுத்த தெருவின்  சாகர் ஹோட்டலில் இட்லி சாம்பார். மதியம் தங்கையின் சமையல், இரவில் முடிந்தால் சபா கச்சேரி; இல்லையென்றால் கையால் பிசைந்த தயிர் சாதம் என்று அப்பா  தன் மிச்சம் மீதி வாழ்க்கை சிந்திவிடாதபடி உள்ளங்கைக்குள் மூடி வைத்துக்கொண்டிருக்கிறார்.

அப்பாவின் இயல்பாக கோபமும் அவ்வப்போது மின்னலிடும் பளீர் சிரிப்பும் மாறி மாறி வரும். அமாவாசை பௌர்ணமி போல.

தனியாக எப்போதும் அறைக்குள் கைப்பேசிக்குள் கச்சேரி என்றே மூழ்கி இருந்தவரை, அவர் சிங்கப்பூருக்கு வந்த வாரத்தில் வூட்லண்ட்ஸ் நூலகத்துக்குள் நடக்கும்  கம்பராமாயண வகுப்புக்கு அழைத்து சென்றேன்.

அப்பா சிவப்பு நிற பெரிய சோபாவில் அமர்ந்திருந்தார்.

வகுப்பு ஆசிரியர் சார் வந்தவுடன் அறிமுகப்படுத்தினேன்.

“நீங்க சென்னைல இருக்கேளா ?”

“ஆமாம்.”

“சென்னைல எங்க ?”

“மந்தைவெளி”

“மந்தைவெளில எங்க ?”

“மந்தைவெளினா மந்தைவெளி தான்”

வாயடைத்து போய் நின்றேன். எழுபது வயதுக்கு மேற்பட்ட அவர்கள் இருவருக்குமான உரையாடல் ஒரு நிமிடம் கூடத்தாண்டாமல்  நூலறுந்த இழையாக நின்றது.

வெட்டிய என் அப்பா  கண்ணுக்கு தெரியாத வாளோடு, மதுரை வீரன் போல முகத்தைக்கூர்மையாக்கி வைத்திருந்தார்.

அப்பாவின் உலகின்  ஒரு பெரும்பங்கு கர்நாடக இசை மற்றொரு பங்கு உணவின் ருசி. பின்னதை மட்டும் தான் என்னால் மீட்டெடுக்க முடிந்தது.

ஊரிலிருந்து அவர் கொண்டு வந்த மாகாளிக்கிழங்கு, பச்சை மிளகு, சாதி நார்த்தங்காய் என்று ஊறுகாய் செய்து அடுக்கினேன்.

அம்மாவின் சுவையில் மிளிரும் ஓலன், மிளகூட்டல், வத்தக்குழம்பு என்று சமைத்தேன். சாப்பிடும்போது மட்டும் தெரியும் முகமலர்ச்சியைப் பார்க்க என்றே பரிமாறினேன்.

சில நாட்களில், “அம்மா பண்றமாரியே இருந்துது”  என்றார்.

சில நாட்களில் உணவு சரியாக இருந்தாலும், பெருத்த ஏப்பமும், ஈனோ பாக்கெட்டுமாக அலைகிறார். ஆழ்ந்த உறக்கம் என்பதை பல்லாண்டுகளாகவே தொலைத்திருந்தார்.

ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரைப்பற்றி, தமிழ் ஊடகங்கள் சொன்ன செய்திகள் எல்லாம் எதிர்மறையாக இருந்தக்காலம். எப்பொருள் யார் யார் சொன்னதாகக் காணொளியில் கண்டாலும், அதை எல்லாம் மெய்ப்பொருள் என்றே நம்பிவிட்டார்.

யாரும் இல்லாத பகல் பொழுதுகளில் தன் கைபேசியில் பாடல்களை முழுஒலிஅளவில் ஒலிக்கசெய்தவருக்கு, இப்போது குறைந்த ஒலியில் கேட்கவேண்டிய நிர்பந்தம்.

தீடீரென முழுநேர அலுவலகமாகவும், பள்ளியாகவும் மாறிய எங்கள் வீட்டுக்கூடம், ஒரு வித அசௌகரியத்தை அவருக்கு உண்டாக்கியது.

எப்போதும் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டோ, காதில் ஒலிக்கடத்திக்கான  இணைப்பைச்  சொருகியபடி வேலை பார்த்துக்கொண்டோ என் நாட்களின் பெரும்பொழுதுகள் செல்கின்றன.எப்போது நான் அலுவலக வேலை சந்திப்பில் இருக்கிறேன் என்று அவரால் கணிக்கமுடியவில்லை.

உலகுக்கே ஊரடங்கான மாதங்களான ஏப்ரல் மே மாதங்கள், கிரிக்கெட் ஸ்கோர் போல, எத்தனை பேருக்குத்தொற்று என்று பேசியபடியே கடந்தன.

என்ன தான் அரசாங்கம் நல்லபடியாகப் பார்த்துக்கொண்டாலும், கிராமங்களிலிருந்து வந்து சிங்கப்பூரில் வேலைக்கு வந்து அன்றைய சூழலில் அறையைவிட்டு வெளியே செல்லமுடியாமல் சிக்குண்டவர்களின் கதைகளும் சேர்ந்து அவரைப்பிசைந்தன.

இந்தியாவிலும் ஏப்ரல் மே முழு ஊரடங்கு, தெரிந்த சிலருக்கு கொரோனாத்தொற்று என்று அறிந்ததும், மேலும் தூக்கமின்றி ஆனார்.

திரிசங்கு சுவர்க்கம் போல, இங்கிருக்கவும் பிடிக்காமல், ஊருக்குப் போகவும் பிடிக்காமல் ரெண்டுகெட்டான் மனநிலையிலேயே மாதங்களை கடத்தினார்.

வேலையில் ஆழ்ந்திருக்கும் போது இருக்கும் என் முக இறுக்கத்தை, கோபம் என்று அர்த்தப்படுத்திக்கொண்டார்.

“நீ எப்போவும் கோபமாவே அலையறே. கொஞ்சம் சிரிப்போட இருக்கலாம்.” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. வேலை தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நான் உலகம் முழுக்க இருக்கற நாடுகளுக்கு சரக்கு அனுப்பவேண்டிய பொறுப்புலே இருக்கேன். “

“உனக்கு நான் சிரமமா இருக்கேன்னு தோண்றது.”

“ஒரு சிரமமும் இல்லப்பா. இப்போ நீ இங்க இருக்கறது ரொம்ப நல்லது. உனக்கும் தான். இந்தியால இப்போ நிலைமை ரொம்ப மோசம்.”

சிங்கப்பூரில் இருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு வகையில் நம்மை பாதுகாக்கத்தான் என்று பொறுமையாக சொல்லி வைத்தேன்.

வி.பி.எம்(VBM) என்னும் இந்திய அரசாங்கத்தின் பிரத்யேக விமானங்களில் ஜூன் மாதம் அவருக்கு இடம் கிடைத்தாலும், அப்பாவை ஊருக்கு அனுப்பாமல், விசா நீட்டிப்பு செய்ய, தூதகரத்துக்கும், குடியேற்ற அலுவலகத்துக்கும் அலைந்தோம். ஒரு வழியாக ஈராண்டு விசாவைப் பார்த்ததும், அதிஷ்டகுலுக்கல் பரிசு வந்த மாதிரி மகிழ்ந்து போனோம்.

பங்குனி உத்திரத்திற்குப்பிறகு இங்குள்ள கோயில்கள் ஓரிரு மாதங்களுக்கு யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியின்றி மூடப்பட்டன. அவர் கடந்த எழுபது ஆண்டுகளில், காலரா வந்தபோதுகூட இப்படி மாதக்கணக்கில் யாரும் கோயில்களை மூடவில்லை.

தினமும் பத்து சென்ட் நாணயத்தை படியில் வைத்து, பிரார்த்தனை செய்துவிட்டு வந்தார். கோபுரத் தரிசனத்தைப்போல, எங்கிருந்து பார்த்தால் வெளியில் நின்றுகொண்டே, முருகனைத்தரிசிக்கலாம் என்று அவருக்குத்தெரியும்.

எப்போதும் கைபேசி அவர் கையைவிட்டு பிரிவதே இல்லை. தொலைக்காட்சி, புத்தங்கங்களில் அத்தனை ஈடுபாடு இல்லை. அப்பாவின் பிள்ளைப்பருவதில் ஒரு டஜன் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய ரேடியோ இருந்ததாம். இன்று ஆளுக்கு ஒரு யூடுப் போன்ற காணொளிகளைப்பார்க்க முடிந்த நவீனக்கைபேசி.

பல தாத்தாக்களுக்கு அவர்களின் பேரப்பிள்ளைகள் தான் அவர்கள் வாழ்க்கையின் பெரிய அர்த்தம்.

“ஏ அய்யாசாமி” என்ற வருஷம் பதினாறு திரைப்படப்பாடலை, QFR நிகழ்ச்சியில் தாத்தாவும் பேரனும் பார்த்தார்கள். பக்கவாத்தியம் வாசிக்கும் வெங்கட் என்பவர், வீ.கே.ராமசாமி அவர்கள் சொல்லும் “அத்தை மக ராசாத்திக்கு நெத்திலி மீனு வேணாமா?” என்பதை என் மகன் வெகுவாக ரசித்தான். இருவருக்கும் அந்த அபிநயம் எப்போதும் குபீர் சிரிப்பைக்கொண்டு வந்தது.

என் மகனோடு சிறு சிறு கொஞ்சல்களும், சீண்டல்களுமாக இருக்கும் பொழுதுகளை, ஜூம் வழி பாகவதம், ஆன்மீக சொற்பொழிவு போன்றவை அதிகமாக எடுத்துக்கொண்டன.

கைபேசிப்பயன்பாட்டை கஷ்டப்பட்டுக் கற்றுக்கொண்டு விட்டார். ஆனால் கைபேசி முழு கொள்ளளவை எட்டும்போது, என்ன செய்வது என்றுத்தெரியாமல் கொண்டுவந்தார்.

எடுத்து என்னவென்று பார்க்க ஆரம்பித்தேன்.

“கையால மூடிக்காதே ! ஏன் நான் கத்துக்கக்கூடாதா?”

தன் குடும்பத்தினர் மீதே அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை.

அவ்வப்போது தாடை வரை இறங்கிவிடும் முகக்கவசத்தைப் பற்றி யாராவது நினைவூட்டினால், அதற்கும் எதிர்வினை கோபம் தான்.

யாரும் வராத கொலு, பலவகை தின்பண்டங்களோடு ஐந்து பேர் கூட சேராத தீபாவளி, ஜூம் வழி ஆசீர்வாதம் செய்த அவரது அக்கா மகள் திருமணம் என்று  அப்பாவின் மறதியை மீறி நினைவுகொள்ளும் ஆண்டு தான் 2020.

இரண்டாம் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், அக்டோபர் மாதம் ஒரு  ஞாயிற்றுக்கிழமை , ஜூ கூன் வட்டாரத்தின் நந்தனாஸ் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தோம்.

பக்கத்துக்கு மேசையின் சீன மூதாட்டி, என் அப்பாவைப்பற்றி ஆங்கிலத்தில் விசாரித்தார். இந்நாளில் சிங்கப்பூரில் பெரும்பாலும் இளைஞர்கள் மூத்தவர்களோடு வெளியே வருவதில்லை என்று அங்கலாய்த்தார்.

உணவகத்தில் சிரித்தபடி உணவை ரசித்து சாப்பிட்ட அப்பா, வீட்டுக்கு வந்தபிறகு அதிகம் பேசவில்லை என்பதைக் கவனிக்க விட்டுவிட்டேன்.

அன்றைய இரவின் இயல்பை மீறிக்கொண்டு அவரது அறையிலிருந்து சாம்பிராணி வாசம் வந்தது.

“என்னப்பா. இந்நேரத்துக்கு சாம்பிராணி?” என்றேன். வயிற்றை புரட்டிய மாதவிடாய் வலியோடு.

“பூச்சி நிறைய இருக்கு இங்க. கை காலெல்லாம் ஊறுது. சாம்பிராணி சாமிக்கு மட்டுமில்ல. வீடு முழுக்க போடணும். புகை நல்லது.” என்றார் கண்ணோடு கண் பார்க்காமல்.

மரத்தரையில் வைக்கப்பட்டிருந்த சாம்பிராணி தீவிபத்தை ஏற்படுத்திவிடும் என்பதைக்கூட அவரால் யோசிக்கமுடியவில்லையா?.

அரை மணிநேர ரயில் பயணம் அப்பாவை அசைபோடும் பயணமாகவே ஆகிவிட்டது.

கெண்ட்ரிட்ஜ் நிலையத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

அம்மாவின் மூன்றாவது திதி இந்த டிசம்பர் மாதத்தில் இன்னும்  இருவாரங்களில் வருகிறது. ஏற்பாடுகளை செய்துவருகிறோம்.

அப்பா எப்போதும் சீக்கிரம் எழும் பழக்கம் உள்ளவர். இந்த வாரம் முழுவதும், அவரது காலை சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் போன்றவற்றை, ஐந்து மணிக்கே முடித்துவிடுகிறார்.

சில நேரங்களில் அம்மாவைப்பற்றி தப்பித்தவறி ஏதாவது சொன்னாலும், எதுவும் காதில் விழவில்லை என்பது போல இருந்தார்.

நாற்பதாண்டு காலம் அவர்களின் மணவாழ்க்கை. அசைபோட அவருக்குள் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.

தினமும் அம்மாவை பற்றி ஏதோ ஒன்றைப் பகிர்கிறார்.

அன்றைய கனவாக ” சமையல் பண்ணிண்டே என்னவோ பேசிண்டே இருந்தா. மடியில கைக்குழந்தையோட உக்காந்திருக்கேன். திடீர்னு குழந்தை மடியை நனைச்சுடுது !” என்றார்.

மெளனமாக தலையசைத்தேன்.

குளிரான மழைமாதம். அவர் கனவுகளின் பிடியிலாவது இளைப்பாறட்டும் என்று இன்னும் சுகமான போர்வையாக மாற்றிக்கொடுத்தேன்.

அம்மாவின் நினைவுகள் எனக்கும் இல்லாமல் இல்லை. சீனர்களைப்போல, முழுதாக சிரித்தால், தெரியாத அளவுக்கு சிறிய கண்கள்.பளீரென்ற நிறத்தில், பெரிய பொட்டு. எப்போதும் திருநீறும், குங்குமமும் துலங்கும் முகம்.

அம்மா மனதால் மிகத்திடமானவள். நடக்க நடக்க பாதை என்று எல்லாக்கஷ்டங்களையும் கடந்தவள்.

நாளைக்காலை திதிக்கு தேவையானவற்றை இரண்டு கட்டைப்பைகளில் நிரப்பி வைத்தேன். சமையலுக்கான காய்களை நறுக்கி வைத்துக்கொண்டேன்.சில்லறையாக அய்யருக்குத்தர வேண்டிய தட்சணையை எண்ணி வைத்தேன்.

அம்மா  எனக்கு நம்பிக்கையூட்டிய என் பள்ளி இறுதி பரீட்சை நாட்கள், என்னை வெளிநாட்டு வேலைக்கு வழியனுப்பிய பொழுதுகள், என் திருமணத்தில் அவள் கண்ணில் வழிந்த கண்ணீர், என் குறைமாதப்பிள்ளைக்காக அவள் தினமும் படித்த நாராயணீயம் என்று அத்தனையும் மனதுக்குள் வந்துப்போய்க்கொண்டிருக்கின்றன.

அவள் கர்ப்பப்பை புற்றுநோய் என்று அவதிப்பட்டபோது, அப்பா அம்மாவிடமிருந்து நகர்ந்துவிட்டார் என்பது எனக்குத்தாங்க முடியாத வேதனை.

எத்தனை பிறவியிலும் அம்மா புடவை முந்தானையை பிடித்தபடி அலையும் மகள் தான் நான்.

மாலை ஆறுக்கு அப்பா எப்போதும் ஒரு சுற்று நடந்துவிட்டு வருவார்.

” தாத்தா ரூம்ல தான் இருக்காங்கம்மா ” என்றான் என் மகன்.

“அப்பா ! இந்தாங்க” என்று காபியை நீட்டியபடியே உள்ளே நுழைந்தேன்.

கண்ணோடு கண் பார்க்கவில்லை. புன்னகையுமில்லை.

ஏதோ சொல்லப் போகிறார் என்று என் மனம் சொல்ல காபியை வைத்துவிட்டு பேசாமல் நின்றேன்.

தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தவர்

“நீ அம்மாவும் நானும் தனியா இருக்குற பெட் ரூம் விடீயோவை யூடூப்பில பார்த்திருக்கே. அதனால தான் என்கிட்டே ஒழுங்கா பேச மாட்டேங்கற” என்றார்.

அவரது கண்களில் தெரிந்த அந்நியத்தனமும் வெறுப்பும் இதுவரை நான் அறியாதது.

வித்யா அருண்- சிங்கப்பூர்

00000000000000000000000000

எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு :

வித்யா அருண்தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்த திருமதி வித்தியா அருண் தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். எழுத்துத்துறை மற்றும் சமயற்கலையில் ஆர்வமுள்ள இவரது எழுத்துகள் இதுவரையில் சொல்வனம், தமிழ் முரசு, செராங்கூன் டைம்ஸ் போன்ற இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. முதன்முதலில் ஐரோப்பிய தேசமொன்றில் வெளியாகும் இணைய சிற்றிதழ் ஒன்றில் வெளியாகும் இவரது சிறுகதைக்கு எமது பாராட்டுக்கள்.

நடு குழுமம்

(Visited 124 times, 1 visits today)
 

2 thoughts on “கிரகணம்- சிறுகதை-வித்யா அருண் (அறிமுகம்)”

Comments are closed.