ஆச்சிக் கிழவி-சிறுகதை-மயூ

மயூ
ஓவியம் : தங்கேஸ் விக்கி

ஐஞ்சு நாளைக்கு முன்னால் ஆச்சிக் கிழவி செத்துப் போனாள். கிழவிக்கு இந்த செப்டெம்பர் வந்தால் தொன்னூற்றாறு. கிழவியெண்டால் அவளுக்குப் பிடிக்காது. “ஓ, இவை குமரி” எண்டு சிரிச்சுக் கொண்டு பொல்லால் அடிக்க வருவாள். அடிக்கிறதெண்டா அடி படாது. இங்காலும் அங்காலுமாய் விசுக்குவாள். கடைவாயில வெத்திலையும் சுண்ணாம்பும் கலந்த சிவப்பில் அவள் சிரிப்பு எச்சிலோடு தெறிக்கும்.

“ஆச்சி, ஆச்சி, நீ ஏன் செத்துப் போனாய் ? நான் வாறன் எண்டெல்லா சொன்னனான்?”

அவள் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள். வெய்யில் கசிஞ்சு கொண்டு பிசுபிசுப்பாய் வந்தது. கனடாவில் எதுவும் அதிகம். அது குளிரெண்டாலும் சரி வெக்கை எண்டாலும் சரி. இந்த வெக்கையை குளிர்காலம் முழுவதும் ஏங்கி ஏங்கித் தேடுவதும், பிறகு சினப்பதும் அவளுக்கு ஒரு பழக்கமாகப் போய்விட்டிருந்தது. அவளுக்கு இப்போது அழுகை வரும்போல் இருந்தது. வாரம் முழுவதும் பல்கலைக்கழக வகுப்புகளில் அலைந்த களைப்பு, பகுதிநேர வேலை, சேவை நேர வேலை மற்றும் சொந்த வேலைகள், இப்படி இத்யாதிகளால் மனமும் உடலும் சேர்ந்தே களைப்புற்று விட்டிருந்தன. இந்த நிலையில் ஆச்சி வேறு செத்துத் தொலைத்து விட்டிருந்தாள். போதாக்குறைக்கு ஆச்சியின் செத்த வீட்டு வீடியோவை நேற்று இரவு முழுதாய் பார்த்து விட்டிருந்தாள். படத்தில் இறுதியாய் ஒரு பாட்டு ஒலிக்கும். அம்மா ஆச்சிக்குக் கொள்ளி வைக்கிற இடத்தில தொடங்கும் அந்தப் பாடலை எத்தனை தரம் கேட்டாளோ எண்டு அவளுக்கே தெரியவில்லை. கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

ஆச்சிக்கு எவ்வளவு அதிர்ச்சியாய் இருந்திருக்கும் அம்மா கொள்ளி வைக்கிறதைப் பார்க்க, அந்த இரவு அவளுக்கு நீண்டு கொண்டே போனது. ஆச்சிக்கு எது கூட அதிர்ச்சியாய் இருக்கும் எண்டு அவளுக்குக் குழப்பமாய் வந்தது. கொள்ளி வைச்சது அம்மா எண்டதா, இல்லை தாங்கள் எல்லாம் வீடியோவில் தான் செத்த வீடடைப் பார்த்தம், பந்தம் பிடிச்சம் எண்டதா, எதைப் பார்த்து ஆச்சி தண்ட பூஞ்சை விழுந்த கண் கசியக் கசிய அழுதிருப்பாள். வீடியோ எடுக்கச் சொல்லி அம்மாவிடம் சொன்னதே அவள்தான். ஆச்சியின் கல்யாணம் நடக்கும் போது வீடியோ எடுக்கும் வசதியெல்லாம் இல்லை. ஆச்சியோட இருந்த காலத்தில் எப்போதாவது விழாக்களில் வீடியோ எடுக்கும் சமயங்களில் ஒரு நிமிடம், இல்லை இரு நிமிடங்களில் வந்து போவாள். கனடா வந்த பிறகு அதே பெரிய விடயமாக மீள மீள ஓட்டிப் பார்ப்பாள். ஆனால் இந்த வீடியோவின் கதாநாயகியே ஆச்சி தான். அவளுக்கு  இப்போது ஓவென்று அழவேண்டும் போல இருந்தது.

“ஆச்சி, ஐயோ எண்ட ஆச்சி”

இப்பவும் நினைவிருக்கு அவள் நர்சரிக்குப் போன கதை. ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது. அவளின் ஐந்து வயதில் காலமையே எழுப்பி அக்கா அண்ணாவுடன் உடுப்புப் போட்டு அவர்களுடனே அவளையும் கொண்டு போய் விடுவார் அப்பா. அவர்கள் இருவரும் படிக்கும் பாடசாலையிலேயே தான் அவளது நர்சரியும் இருந்தது. தெருவை குறுக்காகக் கடந்தால் அவர்களின் பாடசாலைக் கட்டிடம் வரும். அக்கா ஐஞ்சாம் வகுப்பிலும், அண்ணா மூன்றாம் வகுப்பிலும் இருந்தார்கள். அக்காவிற்கு புலமைப்பரிசில் சோதனை இருந்தது அந்த வருடம். விசேச வகுப்பிற்காக அவள் நேரத்திற்கே ஏழு மணியளவில் பாடசாலையில் நிற்கவேண்டும். அவர்களை ஒரு முறையும் அவளை மறுமுறையும் கொண்டு போய் விடுவது வீண் அலைச்சல் என்றபடியால் அப்பா மூன்று பேரையும் ஒன்றாகக் கொண்டு போய் விடுவார். அண்ணாவும் அவளும் முன்னால் இருக்க அக்கா பின்னால் இருக்க அப்பா சார்லி மோட்டாரில் கொண்டு போகும் வரை அவள் அழ மாடடாள். வகுப்பின் முன் விட்டு விட்டு அப்பா திரும்பும் போது உச்சஸ்தாயியில் தொடங்கும் அவள்ட  அழுகையில் அந்த வளாகமே அதிரும். அப்பா அவளுக்குத் துணையாய் அண்ணாவை விட்டுவிட்டுப் போவார். அண்ணா பாவம். அவள் அழுவதை கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டு நிற்பான். அடிக்கடி “அழாதயேன், ஒண்டும் நடக்காது. என் செல்லமெல்லே, குட்டி அழாத” என்பான். அவன் குரலே கேட்காதது போல பாவித்து கத்தும் அவள், குரல் அடைத்து காலையில் அம்மாவிடம் குடித்த பால் தந்த சக்தி வற்றி கேவலில் முடிப்பாள். வகுப்பறையின் பக்கமே திரும்பிப் பார்க்காமல் அண்ணாவின் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டு கதறுவாள். மூக்கால் சளி ஓடிக் கொண்டிருக்கும். அண்ணா அலுக்காமல் தன் கை லேஞ்சியால் துடைத்துவிடுவான். அவனுக்கு எட்டு மணிக்குப் போய் விடவேண்டும். அவளுக்கோ எட்டரைக்குத் தான் வகுப்புத் தொடங்கும். அரை மணித்தியாலம் தனியாக நின்று கத்திக் கொண்டிருப்பாள். விக்கி விக்கி கேவலில் முடிக்கும் அவளை நேரத்துக்கு வரும் சில மாணவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். வீட்டில் இருந்து வரும் போதே கேவலுடன் வரும் சிலபேர் அவளைக் கண்டதும் துணை கிடைத்ததாய் நினைத்துக் கத்தத் தொடங்குவர். அந்த இடம் கொலைக்களமாயும், அவர்களெல்லாம் பலியாடுகள் மாதிரியும் தோற்றம் பெற்றுவிடும். கொஞ்சம் அடங்குவதும் மீண்டும் அலறுவதுமாய் நிற்பாள் அவள், தேற்றுவார் யாரும் இன்றி.

வகுப்பறை செங்கல்லால் கட்டப்பட்டு வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்டு, அரை சுவர் உயரத்துக்கு கம்பி வலை கட்டப்பட்ட அமைப்பைப் பெற்றிருந்தது. அவளுக்கென்னவோ அதைப் பார்த்தால் சிறைக்கூடம் போல கற்பனை விரிந்தது. அதன் சுவரில் தொங்கிய சிறுவர்கள் செய்த கைவினைப் பொருட்களோ, அவர்களின் ஆக்கங்களோ மனதில் பதியவில்லை. மாறாக அவை அவளைக் கொல்லக் காத்திருக்கும் ஆயுதங்களாகக் கொண்டாள். வகுப்பைச் சூழ மரங்கள். மரங்கள் என்றால் சிறு கிளை பரப்பி நிற்கும் கெதியால் மரங்கள் இல்லை. அடர்ந்த காடாய் மாயையைத் தோற்றுவிக்கப்பண்ணிய மரங்கள். ஒரு புறம் புளியம் பழ மரம், அதன் அருகில் சற்றுத் தள்ளி புளிப்பு நெல்லி மரம். கொஞ்சம் தள்ளி அவற்றுக்கு எதிராய் சூட்டுக் காய் மரம். அதில் கொன்றை போல சிவப்புப் பூப் பூத்துக் குலுங்கியும், உதிர்ந்து தரையெங்கும் சிதறியும் கிடக்கும். அதற்கு சற்றுத் தள்ளி மஞ்சள் கொன்றை. ஆக சூழ்ந்த மரங்களின் இடையே ஏதோ காட்டில் தனித்திருக்கும் வனக்காவலர் அறை போல இருந்தது அவள் வகுப்பு. தனியே நிற்கும் போதெல்லாம் அம்மா புளியமரம் பற்றி சொன்ன கதைகளே நினைவிலாடும். ஊரில் புளிய மரத்தில் மதியம் பன்னிரண்டு மணிக்கும், நாடு சாமம் பன்னிரண்டு மணிக்கும் பேயாடும் என்று அம்மா சொல்லியிருந்தாள். அவள் தனியாக நின்று வீரிட்டுக் கத்த எங்கே பேய் அவளைக் கொலை செய்துவிடுமோ என்று பயந்திருந்தாள்.

அன்று அது தான் நடந்தது. வழைமை போல அண்ணா எட்டு மணிக்கு தன் வகுப்புக்குப் போகக் கிளம்பிய போது அவள் விடவேயில்லை. அவன் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டு அந்த மரங்களே அதிர்ந்து போகுமளவுக்குக் கத்தினாள். அவளை விட்டுப் போக அவனால் முடியவில்லை. அத்துடன் பாடசாலைக்குப் போகாமல் அவனால் இருக்கவும் முடியாது. ஆக அவன் அவளைத் தெருவிற்கு எதிரே இருந்த ஆச்சியின் அக்காவின் மகள் வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு தன் வகுப்பிற்குப் போனான். அவர்கள் பசும் பால் காய்ச்சி நிறைய சீனி போட்டு தந்தார்கள். அடிநாக்கில் இனிக்க இனிக்க பாணுடன் தொட்டு கௌசி அக்கா தீத்தி விட்டா. சாப்பிட்டு விட்டு அப்படியே உறங்கிப் போய் விட்டாள் அவள். பத்து மணிபோல குமார் அண்ணா அவளை ஏற்றிக் கொண்டு அவளது வீடு கொண்டு வந்து சேர்த்தான். அவளை அண்ணாவுடன் கண்டதும் அம்மா நிலைகுலைந்ததை அவள் பார்த்தாள். அம்மாவிற்கு தன் பிள்ளைகள் மேல் அளப்பெரிய நம்பிக்கை இருந்தது. வைத்தியர்களாகவோ, பொறியியலார்களாகவோ வந்து விடுவார்கள் என்று வயிற்றில் சுமக்கையிலேயே கனவு கண்டு விட்டிருந்தாள் என்பதை அந்த வயதிலும் அக்காவும் அண்ணாவும் படித்த தீவிரத்திலேயே அவளால் உணர முடிந்தது. அம்மா நிலை குலைந்து நின்றது ஐந்து நிமிடங்களே. அவளுக்கு நர்சரி விட இன்னும் ஒரு மணித்தியாலமே இருந்த நிலையில் விடுவிடு என்று சேலையைச் சுற்றிக் கொண்டு அடுத்த பத்து நிமிடங்களில் அவளுடன் நர்சரியில் நின்றாள் அம்மா. அன்று அவள் சந்தோசமாய்ப் படித்தாள். வகுப்பாசிரியையை அம்மா நன்கறிந்திருந்தாள். உண்மையில் அந்தக் கிராமத்தில் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. படிப்பிலே கெட்டிக்காரர் என்று அறியப்பட்ட அக்காவிற்கும் அண்ணாவிற்கும் இப்படியொரு தங்கை இருக்கும் என்பதையே ஆசிரியை நம்பத் தயாரில்லை. எங்கே வீட்டில் ஒரு மக்குப் பிள்ளையாகிவிடுவாளோ என்று அம்மா வேறு பயந்துவிட்டிருந்தாள். இந்த இடத்தில் தான் அவளது வாழ்க்கைக்குள் ஆச்சி வந்தாள்

அடுத்த நாளில் இருந்து பள்ளிக் கூடம் கொண்டு போய் சேர்ப்பது ஆச்சியின் பொறுப்பென்றானது. அவளைத் தயார் செய்து காலையில் கூட்டிப் போவாள். பாதித் தூரம் தூக்குவதும், பாதித் தூரம் நடத்தியும் ஆச்சி கூட்டிக் கொண்டு போகும் காட்சி அவளுக்கு இப்போதும் கண்களுக்குள் நிற்கிறது. போகும் வழியிலெல்லாம் கதைகள் சொல்லிக் கொண்டு வருவாள் ஆச்சி. அதிகமான கதைகள் அவளது ஊரைப் பற்றியதாக இருக்கும். ஆச்சியின் ஊர் எண்டால் அவளுக்குத் தாய் மண் தான். அவள் என்ன செய்ய, அதை அவள் பார்த்ததே இல்லையே. பிறந்து நினைவு தெரிய முதலே யுத்தம் அவளை அப்பாவின் ஊரில் சேர்த்துவிட்டிருந்தது. அவளது நான்கு வயதுக்கும், அதற்கு முன்னும் நடந்தவை பற்றி அவளால் சொல்ல இயலாது. ஆனால் எல்லோரும் சொல்வார்கள் அவளை எப்போதும் ஆச்சி இடுப்பில் தூக்கி வைத்திருந்த கதையை. தோடம்பழ இனிப்பு வாங்கித் தர கொளுத்தும் வெயிலிலும் அவளைத் தூக்கிக் கொண்டு சுடு மணலில் செருப்பும் இல்லாது கடைக்குப் போகும் சிவக்கொழுந்து ஆச்சியை. கதைகள் கடல் தாண்டும் தானே.

ஆச்சியின் கதைகளில் வரும் அவள் பிறந்த ஆனால் நினைவில் இழுத்துப்பிடிக்க முடியாத அந்த வீட்டை ஒருவாறு கற்பனை செய்து கொண்டிருந்தாள். அதனை சுற்றி ஆச்சியால் பின்னப்படும் கதைகள் அத்தனை சுவாரஸ்யமானவை. அவற்றுக்குள் அவள் வீட்டின் தென்கிழக்கு மூலையிலிருக்கும் மரத்தடி வைரவரும், பெரிய குளத்தடி ஐயனாரும், முருக மூர்த்தி கோவிலும் தவறாமல் இடம்பெறும். ஆச்சி வழி நெடுக தேவாரம் சொல்லிக் கொண்டு வருவாள். கணக்கு வாய்ப்பாடுகளையும், ஒருமை பன்மைகளையும், ஆத்தி சூடியையும் ஏன் பட்டினத்தார்பாடல்களையுங் கூட இப்படி போய் வரும் ஒற்றையடிப் பாதைகள் வழி அவளைக் காவித்திரிஞ்சு சொல்லித்தான் அவள் அறிந்து கொண்டாள். அவளுக்குப் பிடித்த வரிகளை இறங்கிக் கொண்ட சொற்களைப் போட்டு பூசி மெழுகி ஒப்பித்து சிரிக்கையில் ஆச்சியும் சிரிப்பாள். மத்தியான வெயிலில் சூடடங்கா மண்தெருக்களில் வெறுங் காலுடன் அவளை இடுப்பில் தூக்கிக் கொண்டு குடு குடுவென்று நடந்து கொண்டே ஆச்சி அவளுக்குள் இறக்குவித்த கதை சொல்லி அவளை ஆட்டுவிக்கத் தொடங்கியிருந்தாள்.

நர்சரி படிச்ச இரு வருடங்களும் ஆச்சி அவளைத் தூக்கி செல்வதும், பாலர் வகுப்புகள் நடக்கும் அந்த மூன்று மணித்தியாலங்களும் புளிப்பு நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்திருந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பதும், இடைவேளையின் போது அவளுக்கு சாப்பாடு தீத்தி விடுவதும், வகுப்பு முடிந்ததும் பள்ளிக்கூடத்தில் தூக்கும் அவளை வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிடுவதுமாய் ஆச்சி இயங்கிக் கொண்டிருந்தாள். ஆயிரமாயிரம் கதைகளையும், சம்பவங்களையும் அவளுக்குச் சொல்வதற்காக வைத்திருந்தாள். பின் வளவு ஈச்சம் மரமும், பறக்கும் பாம்புகளும், நடக்கும் ஐயனாரும், அடிக்கும் வைரவரும், பரந்து விரிந்த மிளகாய்த் தோட்டங்களும், புகையிலைக் காணிகளும் இன்னும் ஏராளம் ஏராளம், அவளுக்காகக் காத்திருப்பதாய் ஆச்சி எப்பவும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவற்றைப் பார்க்க அவள் தான் பிறந்த மண்ணுக்குப் போக வேண்டும் என்றும் ஆச்சி சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு அது அந்த அளவுக்கு விளங்கியிருக்கவில்லை, அது விளங்கியபோது வெகு தொலைவில் அவள் வெகு தொலைவில் சேர்ந்துவிட்டிருந்தாள். இப்போது கண்டங்கள் தாண்டி இருக்கிறாள். அவை அவளுக்காகக் காத்திருக்குமா? அவள் பிறந்த வீட்டை நான்கு சுவர்கள் அடையாளப்படுத்துகின்றன என்று யாரோ சொன்னதாக அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆச்சிக்கு அவளுக்குமான இந்தப் பிணைப்பு இத்துடன் தீரவில்லை. தொடர்ந்தது. பால்யம் தாண்டி பதின்மங்களின் இறுதிவரை ஆச்சி அவளுடனே வந்தாள். எல்லா ஆச்சிமாரும் இப்படித்தான். தம் பிள்ளைகளுக்குக் கொடுக்காத சுதந்திரத்தைப் பாசத்தை அப்படியே பொட்டலங்கட்டி பேரப்பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அவள் செய்யும் எல்லாமே ஆச்சிக்குச் சரியானதாகவும், நியாயமானதாகவுமே இருக்கும். அவள் கொலை செய்துவிட்டு வந்தாலும் அவளை கண்மூடித்தனமாய் ஆதரிக்கவும் ஆச்சி தயாராகவிருந்தாள். காய்ச்சல் என்றாலோ, இல்லை சிறிதாய் மூக்கை சீறிக் கொண்டு அவள் திரிந்தாலோ போதும். உடனே ஆச்சி அங்கர் மா, லக்ஸ்பிரே மா பைகளுக்குள் பொதித்து வைத்திருக்கும் வீபுதியை எடுத்து ஏதேதோ சொல்லி நெற்றியில் போடுவாள். பின் கொஞ்சம் வாய்க்குள்ளும். சிறுவயதில் மழை பெய்யத் தொடங்கியதும் அவள் வெளியிலோடி மண்ணள்ளி வாய்க்குள் அடைத்துக் கொள்ளுவாள். கலைத்துக் கொண்டு வரும் அம்மாவிடமிருந்து தப்பி ஆச்சியின் பின்னால் ஒளிவாள். அம்மாவைக் கலைத்து பின் அவளது வாய்க்குள் கை விட்டு மண்ணைக் கிண்டி வெளியில் எறிந்து குடிக்கத் தண்ணீர் தருவாள் ஆச்சி. பிறகு இப்படி ஆச்சி விபூதி போடத் தொடங்கிய பிறகு அவள் விபூதியை சாப்பிடத் தொடங்கினாள். சாமி மாடத்தில் விபூதி காணாமல் போகத் தொடங்கியது, கொஞ்சமாய் மேலேறி மேலேறி பரணிலேறி விட்டது. அதன் பிறகு அவள் அடிக்கடி மூக்கை சீறுவதும், ஆச்சியிடம்  வந்து நிற்பதும் வழக்கமாகிவிட்டது. ஆச்சியும் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அதிகமாகவே விபூதியை வாய்க்குள் போட்டு விடுவாள்.

“ஆச்சி, ஏன் நான் உனக்கு இப்படி செய்தேன் ? ஏன் உன்னை விட்டிட்டு வந்தன்?” அவளுக்கு இதயம் வெடிக்குமாப் போல பிசைந்து கொண்டு வந்தது.

ஆச்சி ஒரு ஆளுமை. ஒரு உலகம். அவளது தொன்மங்களின் அரசி. அவளது பதின்மங்களின் இறுதியில் குழந்தையாகிவிட்ட ஆச்சியை சுமக்க ஆரம்பித்தாள். அப்படி ஒரு பந்தம் இருந்தது அவளுக்கும் ஆச்சிக்குமிடையில். ஆச்சியை எதன் பொருட்டும், ஒருநாள் கூடவும் அவள்பிரிந்திருக்கவில்லை. பாடசாலையில் வரும் சுற்றுலாக்கள் கூட ஆச்சியின் பொருட்டு வேண்டாதனவாகின. அவளுக்காக ஆச்சியின் காத்திருப்புக்கள் மணித்தியாலங்கள் அளவே நீண்டதாகவிருந்தன. அதுவும் அவள் பள்ளிக்குப் போனாலோ இல்லை டியூஷன் போனாலோ தான். மற்றும்படி அவளும் ஆச்சியும் பிரிந்தது குறைவு. ஆனால் ஒரு காத்திருப்பு நாட்கணக்குகளாகி, மாதங்களாகி, ஆண்டுகளாய் நீண்டது. கண்டங்கள் தாண்டி அவள் பயணித்த அந்தப் பொழுதில் ஆச்சியை மீண்டும் வந்து அழைத்துச் செல்வேன் என்ற உறுதி மொழியிலேயே அந்தக் காத்திருப்பை அவள் ஆச்சிக்காய்த் தொடக்கி வைத்தாள்.

“நாங்க கனடா போனால் ஆச்சி என்ன செய்வா ?”

“அதுதான் என்ன செய்ய ? அவாவை இங்க யாரோடையும் விட்டிட்டுப் போவம், பிறகு மாறி மாறி வந்து பார்க்க வேண்டியதுதான். இப்ப அவவைக் கூட்டிக் கொண்டு போகேலாது தானே.”

அவளுக்கு விளங்காமல் இல்லை. ஆனால் என்ன செய்வதெண்டும் தெரியவில்லை. அவள் அப்பாவைப் பதினோரு வருடங்கள் பார்க்கவில்லை. அவளது அம்மா தனது துணையைப் பதினோரு வருடங்கள் பார்த்ததில்லை.  விசா வந்தும் போகவும் மனமில்லாமல் விடவும் முடியாமல் நாட்கள் கடந்து கொண்டிருந்தன. அவளுக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கவில்லை. ஏனென்றால் அவளுக்கு பதினெட்டு வயது முடிந்துவிட்டிருந்தது. அப்பாவுக்கும் மூன்றுதரம் கேஸ் தள்ளுபடி செய்துவிட்டிருந்தார்கள். அதனாலோ என்னவோ வந்தால் வா, போனால் போ என்ற மனநிலையில் ஆச்சிக்கு ஒரு வழி செய்யும் எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. விசா கிடைத்ததும் ஆச்சியை என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை.

“ஆச்சி பாவம், அவ வருவன் எண்டு எப்படி நம்பிக் கொண்டிருந்தா, இப்ப நீங்க மட்டும் வந்தா அவ எப்படித் தாங்குவா ? அவவுக்கு பாஸ்போட் எடுக்கப் போனோம் நினைவிருக்கா? அப்ப அவ நினைச்சிட்டா தான் கனடாதான் போறன் எண்டு. அப்ப பக்கத்தில இருந்தவைக்கு நான் கனடா போறன் எண்டு சொல்லிக் கொண்டிருந்தா” அண்ணாவும் அழுதான், கனடாவிலிருந்து.

ஆச்சிக்கு எல்லாரும் சுத்தி சுத்தி அழுவதைப் பார்க்க தாங்க முடியாமல் இருந்திருக்கலாம்.

“நீ எனக்காகப் பார்த்து என்ன செய்யப் போறாய், குமர்ப் பிள்ளையோட நீ இங்க. மற்றப் பிள்ளையளோட அவர் அங்க. கடைசில இப்படியே இருக்கவேண்டியது தான். என்னை எங்கயும் விட்டிட்டுப் போங்களேன். நானென்ன கோழியும் கறியுமே கேட்கப் போறேன். எண்ட பாட்டுக்கு இருக்கப்போறேன். நீ போய்ட்டு வந்து வந்து பார். நான் இருப்பன்”

இதைச் சொல்லி முடிக்க ஆச்சிக்கு ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. ஆனால் அவளது காதுக்குள் “நீ போய்ட்டு வந்து வந்து பார்” எண்டது மட்டும் எப்பவும் கேட்டுக் கொண்டேயிருந்தது, இப்பவும். நிறையப்பேரிடம் கேட்டு கடைசியில் ஒரு டாக்டர் நடத்தும் முதியோர் இல்லத்தில் ஆச்சியைக் கொண்டுப் போய் விட்டிட்டு வீடு வந்ததும் தான். “ஆச்சி அங்கிருக்கும் நாய்க்குட்டிகளுடனும் பூனைக்குட்டிகளுடனும் பேசிக் கொண்டிருக்க அவள் டாக்டரிடம் கதைக்கப் போனாள். போனவள் ஆச்சியிடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து ஆட்டோவில் ஏறினாள். ஏறினவள் ஏறினவள் தான், அடுத்தநாள் பிளைட் ஏறி கனடாவில் வந்து தான் இறங்கினாள். இது நடந்தது இப்பதான் போல இருக்கு. ஆனால் இரண்டு வருஷம் எப்படிப் போனதென்று தெரியாமல் போய்ட்டு. ஒரு வருசத்துக்கு முதல் ஆச்சி கீழ விழுந்து முதுகெலும்பு உடைந்து போனதாய் தகவல் வந்தது. அதுவரைக்கும் போனில் பார்த்த, கேட்ட ஆச்சியையும் அவள் தொலைத்தாள். அடுத்த பிளைட் பிடித்துப் போன அம்மா என்ன செய்தும் ஆச்சிக்கு ஒன்றும் நினைவுக்கு வரவுமில்லை. ஆச்சிக்கு அம்மாவையும் மறந்து போனது. நாட்டு நிலவரம் இவளை ஊருக்குப் போகவிடவும் இல்லை. அம்மாவும் கோயில் குளமெல்லாம் ஏறி இறங்கினாள். சாத்திரங்கள் கேடடாள். பசுவெல்லாம் தானம் பண்ணினாள். இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை.

அவளுக்கு ஆச்சியை விட்டு விட்டு வந்த அண்டைக்கே ஆச்சி செத்துப் போனாதுபோல தோன்றியது. அவளும் அண்டைக்கே தொலைந்து போனாள். தன் ஆயுளுக்குமாய் தெரிந்த ஆச்சியை, தன்னைப் பெற்ற தந்தையைவிட தன்னுடன் கூட இருந்த ஆச்சியை, எல்லாரையும்விட தான் கூட நேசிச்ச கிழவியை, அவளே கொலை செய்தது போல அவளுக்குத் தோன்றியது.

“ஆச்சி, ஐயோ எண்ட ஆச்சி. என்னை மன்னிச்சுடு. நான் செய்த இந்தப் பாவத்தை எங்க  போய்க் கழுவப் போறன்”

அவளுக்குத் தான் எங்கிருக்கிறோம் என்பதே மறந்து போனது. அவள் கேவிக் கேவிக் கத்தி அழ ஆரம்பித்தாள்.

மயூ-கனடா

மயூ

 

(Visited 193 times, 1 visits today)