இரண்டு இல்லை மூன்றாம் உலகங்கள்-சிறுகதை-மயூ

மயூ

1.

ஆஸ்பத்திரியின் நுழைவாயிலில் இருந்து வெளியேறி நடைபாதையில் நுழைந்தேன். வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. இளவேனில் காலந்தான். காலம் தாழ்த்திய இளவேனில் பின் கோடை. மரங்கள் தளிர்க்கத் தொடங்கிவிட்டிருந்தன. சில மரங்களின் குட்டி இலைகளை மறைத்தவாறு பூக்கள் கொத்தாக மலர்ந்திருந்தன. பனிக்குள் ஊறிப் போயிருந்த அவை அத்தனை காத்திருப்பையும் இப்படி அழகால் காண்பிக்கின்றன என்று பட்டது. இன்னும் சொற்ப காலத்துக்குத் தான் இது, அல்லவா; நடைபாதையின் புற்தரை செப்பனிடப்பட்டிருந்தது. அங்கங்கே செம்மஞ்சள் நிறப் பூக்கள் பூத்திருந்தன. அது ஒரு வகைக் களையாம். அதனை எப்படி அழிப்பது என்ற புதுவகை மருந்து பற்றி சற்று முன் தான் விளம்பரம் பார்த்தேன். பஸ்சைக் காணவில்லை. தலை பாறையாய்க் கனப்பதான உணர்வு. கால்களுக்கு நடப்பதற்கான சக்தி இல்லை. அவை துவண்டு விழத் தயாராகிக் கொண்டிருந்தன. தண்ணீர் குடித்தால் நல்லம். வயிற்றுக்குள் இருந்து சங்கீதம் கேட்டது. சே, இன்றேதாவது சாப்பிட்டேனா என்ன. ஒரு மண்ணும் நினைவிலில்லை. கையைத் திருப்பி நேரம் பார்த்தேன். இரவு மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இளவேனிலின் சூரியன் மெல்ல மெல்ல இப்போது தான் மறைந்து கொண்டிருந்தான். என்ன ஒரு நீண்ட நாள். இன்றைய நாள் போல நீண்ட நாட்களை நான் கடந்திருக்கிறேன். இதை நீயும் அறிவாய். இப்படியான பல நாட்களைக் கடந்து போக நீயும் துணை நின்றிருக்கிறாய். இன்று உன்னை அங்கே விட்டுப் படியிறங்கும் பொழுதில் என்னில் இருந்தும் ஏதோ கலைந்து பறந்து வாசல்களிலும், சுவர்களிலும், கட்டிலிலும் படிந்து கொண்டதைக் கண்டேன். இருந்தும் நான் இறங்குவதையோ, இயந்திரமாய் பேரூந்தில் ஏறி வீடு வந்து சேர்வதையோ தடுமாறாமல் செய்து முடித்திருந்தேன். உன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு வந்தேன். நாம் முதன் முதலில் சந்தித்தது, பேசிக் கொண்டது, நட்புப் பாராட்டியது என்று எல்லாம் ஏதோ படத்தின் கதை போல ஞாபகத்தின் காட்சித் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. நீ அயர்ந்து தூங்குகிறாயா என் கண்ணே? இந்த இரவில், கொடுங்கனவுகளுடன் போராடும் உன்னை எந்த நட்சத்திரங்கள் தாலாட்டும்? எவை மீட்டுக் கொண்டுவரும்? நீ எங்குதான் போனாய்? நான் உன்னுடன் அங்கே நிற்கிறேனா? அந்த உலகத்துக்குள் எனக்கும் ஒரு இடம் இருக்கிறதா என்ன?அதை நான் எப்படி அறியக்கூடும்?

2.

சில வருடங்களுக்கு முந்திய செப்டம்பர் மாதம் அது. அப்போதுதான் உன் பாடசாலையில் வந்து சேர்ந்துவிட்டிருந்தேன். புலம்பெயர்ந்து இரு மாதங்களே கடந்த நிலையில் புதிய நாடு, புதிய சூழல், புதிய மனிதர்கள் என்னும் மிரட்சிப் பார்வை என் கண்களில் இருந்து இன்னும் நீங்கிவிட்டிருக்கவில்லை. ஏதேனும் உறுக்கிக் கேட்டால் உடைந்து ஊற்றிவிடுவேன் என்று கண்ணீர் சுரப்பிகள் மிரட்டிக் கொண்டிருந்தன. ஆங்கிலத்தைப் படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் பேச, பழக, புரிந்துகொள்ள எனக்கு அவகாசம் தேவைப்பட்டிருந்த நாட்கள் அவை. ஒரு மதிய இடைவெளியில் ஓரமாக மேசையில் அமர்ந்து கணக்கு வீட்டுப் பாடத்தை செய்து முடித்துக் கொண்டிருந்தேன். ஊரில் வீட்டுப் பாடமே செய்யாமல் போகும் என்னை வீட்டுப் பாடத்துக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்ற கண்டிப்பு செய்ய வைத்துக் கொண்டிருந்தது. என் மேசை அருகே நிழலாடியது. நிமிர்ந்து பார்க்கையில் நீ நின்று கொண்டிருந்தாய். மெலிதாய்ப் புன்னகைத்தேன். சீராக லேயர் கட் வெட்டப்பட்ட விரித்த கூந்தல் அலையலையாய் உன் தோளெங்கும் பறந்து கிடந்தது. வெள்ளை நிறத்தில் கோடைக்குப் பொருத்தமான ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தாய். அதற்குள் கருப்பு நிற டி-ஷேர்ட்டும் கீழே கருப்பு நிறத்தில் டெனிமும் அணிந்திருந்தாய். காதில் அதற்குப் பொருத்தமாக தோடு. பதினாறு அல்லது பதினேழு வயதென்று சொல்லலாம். ஆனால் வயதை நான் எப்போதுதான் சரியாகக் கணித்திருக்கிறேன். நீயும் புன்னகைத்தாய்.

“hi” என்றாய். பேசுவதற்கான ஆயத்தத்தில் வந்திருந்தாய் என்று தோன்றியது.

“hey. !” என்று சொல்லி மீண்டும் புன்னகைத்தேன்.

நீங்கள் தமிழா என்று ஆங்கிலத்தில் கேட்டாய். ஆம் என்றவாறு தலையசைத்தேன். பின் எமது உரையாடல் ஆங்கிலத்திலேயே நீண்டது.

உங்களைப் பற்றி என் தோழி எனக்கு கூறியிருக்கிறாள் என்றாய்.

ஆமாம், அவள் உங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறாள்.

அவளுடன் கணித பாடம் மட்டுந்தானே எடுக்கிறீர்கள்?

ஆமாம் என்று சொல்லி மௌனமானேன். ஆனால் உன் மேலிருந்த பார்வையை தாழ்த்தவில்லை. நீயுந்தான்.

நீங்கள் கணிதம் நன்றாக செய்வீர்களாமே. இப்போது இந்த இடைவேளையிலும் அதனை மீளப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் இப்படிப் படிக்க வேண்டும் என்று தோன்றும், ஆனால் நான் அவ்வாறு செய்வதில்லை. பிறகு படிக்கலாம் என்று அப்படியே கவனமற்று இருந்துவிடுவேன் என்றாய்.

உன்னை அருகில் இருத்தி உன் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றி மறைந்தது, ஆனால் நான் அதற்கும் புன்னகைத்தேன்.

நீங்கள் அழகாக புன்னகைக்கிறீர்கள். மிக சிறிய உதடுகள் உங்களுக்கு என்றாய். நான் அதற்கும் ஒரு புன்னகையையே பதிலாகத் தந்தேன். அப்போது தான் கவனித்தேன் நீண்ட உதடுகள் உனக்கு வாய்த்திருந்தன. நீண்ட அகன்ற மூக்கில் மூக்குத்தி அணிந்திருந்தாய். உன்னுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. உன்னருகில் அமர்ந்து ஏதேதோ சொல்ல மனது துடித்தது. எங்கே சிறு வயதில் வந்துவிட்ட உனக்கு என்னைப் புரிந்து கொள்ள முடியுமோ என்ற தயக்கமும், வந்த சொற்ப காலத்தில் பட்டறிந்த அனுபவங்களும் அதனை செய்யாதே என்றன. நாம் மௌனமானோம்.

உங்களுக்கு இங்கே நண்பர்கள் கிடைத்திருக்கிறார்களா?”

இல்லை, இன்னும் இல்லை’. (அதே புன்னகை)

எதற்குமே புன்னகைப்பீர்களா என்ன, கவலைப்படாதீர்கள், இனி இடைவேளையின் போது நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். சாப்ப்ட்டுவிட்டீர்களா?

இல்லை, நான் சாப்பாடு கொண்டு வருவதில்லை.

பரவாயில்லை, “Cafeteria” சென்று வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாந்தானே.

அது எங்கிருக்கிறது என்றே எனக்குத் தெரியாது. இந்தத் தளத்திலிருக்கும் எனது வகுப்பறைகளைக் கூட கண்டுபிடிக்க குறைந்தது மூன்று முறையாவது முழுத் தளத்தையும் சுற்றி வருகிறேன்.

அப்படியா? வாருங்கள், நாம் ஏதாவது வாங்கி சாப்பிடலாம். பின் உங்கள் வகுப்பில் நான் உங்களை சேர்த்து விடுகிறேன்.

இல்லை, தேவையில்லை. எனக்குப் பசிக்கவில்லை. இன்னொரு நாள் செல்லலாம். நன்றி..

உங்களிடம் “Facebook” இருக்கிறதா?

இல்லை, நான் அதனை வைத்துக் கொள்வதில்லை. சில வேளைகளில் MSN வருவேன். அதிலும் நிற்பது குறைவு.

அப்படியா? ம்ம், சரி அப்படியென்றால் என்னை அதில் இணைத்துக் கொள்ளுங்கள். எதேச்சையாக சந்திக்க முடிந்தால் பேசிக் கொள்ளலாம்.

தொலைபேசி இலக்கத்தையும், Hotmail Id ஐயும் பகிர்ந்து கொண்டோம்.

செய்வதற்கு ஏதேனும் இருந்தால் நீங்கள் தொடருங்கள். உங்கள் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

இல்லை, அப்படியொன்றும் இல்லை. வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தேன். முடித்து விட்டேன். நாம் பேசலாம்.

நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை நிற்கவைத்து நான் அமர்ந்திருப்பது எனக்கு சங்கடத்தைத் தந்தது. நீயும் அதனை உணர்ந்து கொண்டாய் போல் தோன்றியது. அருகில் இருக்கும் வகுப்பறையைக் காட்டி, நாம் அங்கே அமர்ந்து கொள்ளலாம். அந்த ஆசிரியர் எதுவும் சொல்லமாட்டார். வாருங்கள் என்றாய். நான் எனது புத்தகங்களையும் பையையும் எடுத்துக் கொண்டு உன்னைத் தொடர்ந்தேன்.

இப்போது நீ நிறையப் பேச ஆரம்பித்தாய். ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் உன்னைப் பற்றி உன் குடும்பம் பற்றி உன் நண்பர்கள் பற்றி, நிறைய நிறைய சொன்னாய். அவற்றில் நிறைந்திருந்த என் மேலான நம்பிக்கையை, அப்போது தான் ஆரம்பித்து விட்ட என் மேலான பாசத்தை நான் உணர ஆரம்பித்திருந்தேன். உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. நானும் என்னைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன். உன்னால் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்காது என்று நான் நினைத்துக் கொண்ட சிலவற்றைத் தவிர்த்து ஏனையவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.

உங்களுக்கு காதலன் இருக்கிறாரா? அவர் எங்கிருக்கிறார்? என்றாய்.

இல்லை, எனக்குக் காதலில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் காதல் செய்யும் அளவுக்கு நம்பிக்கை இல்லை என்றேன்.

இது உனக்கு விளங்கியிருக்காது என்று தோன்றியது. அப்படி நான் சொல்லியிருக்க வேண்டியிருக்கவில்லை. ஒரு மணித்தியால இடைவேளை எவ்வளவு சீக்கிரமாய் முடிந்து போனது.

3.

வீடு வந்து சேர்ந்துவிட்டிருந்தேன். மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது. உடை மாற்றி வீட்டிலிருப்பவர்களின் உன்னைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொள்கிறேன். மனமெல்லாம் நிறைந்து வழிகிறாய் நீ. யன்னலைத் திறந்து திரைச்சீலையை ஓரமாய்த் தள்ளுகிறேன். மழை தூறிக் கொண்டிருந்தது. தெரு விளக்குகளின் மங்கிய வெளிச்சத்துடன் போராடிக் கொண்டிருந்த முன்னிருட்டில் மழைத் துளிகள் மெலிதாய்ப் பளபளத்தவாறே மண்ணில் வீழ்ந்தன. குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.

நேற்றைக்கு முந்திய தினம், மதியம் என்னை நீ அழைத்தாய். பல்கலைக்கழக வகுப்பிலிருந்ததால் அதனை நான் தவற விட்டிருந்தேன். மீண்டும் உன்னைத் திருப்பி அழைத்தேன்.

“நான் நாளைக்கு வாறன், நாங்கள் வெளியில போகலாம். போய்ப் படம் பார்க்க வேண்டாம். எங்காவது கோவிலுக்கு, சேர்ச்சுக்குப் போகலாம். பிறகு டின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்ட வரலாம்” என்றாய்.

“sure, நான் வகுப்பு முடிந்ததும் அப்படியே நேராக உங்கட வீட்ட வாறன். சேர்ந்தே போகலாம். நான் இப்போது வரவா? எனக்கு அடுத்த பாடம் போக வேண்டியதாக இல்லை.”

“வேணாம், எனக்கு வேலையிருக்கு. நான் ஏற்கனவே Sunday போகவில்லை. அவர்கள் தவறாக நினைப்பார்கள்”

“எனக்கென்னவோ நீங்கள் வேலையிலிருந்து விட்டு எடுப்பது நல்லது போலத் தோன்றுகிறது. வீட்டில் நின்று ஓய்வெடுங்கள். நாம் நாளை சந்திக்கலாம். ஏற்கனவே திட்டமிட்டது போல இந்த வெள்ளிக் கிழமையை உங்களுடன் உங்கள் வீட்டில் கழிக்கலாம். சமைத்து சாப்பிடலாம். சனிக்கிழமையில் இருந்து நீங்கள் வேலைக்குப் போனால் நல்லது.”

“புரிகிறது, எனினும் இன்று வேலைக்குப் போகாதுவிட மனம் ஒப்பவில்லை. போய் வருகிறேனே.”

“ம்ம், சரி. எனக்குத் தொலைபேசுங்கள். நான் வீடு செல்ல இன்று இரவு பதினொரு மணியாகிவிடும். அதன் பிறகு நான் உங்களை அழைக்கிறேன். இல்லைஎன்றால் நாளை காலையே அழையுங்கள். எனக்கு வகுப்பு இரண்டு மணிக்குத் தான் ஆரம்பமாகும்.”

“சரி, அப்படியே செய்கிறேன். I love you chellam, Take care.”

“I love you too, kisses, Take care. Don’t forget to call me even if it is 1 am in the early morning.”

புன்னகைத்தாய், “Surema, Love you, miss you..”

“Bye then, Take care” – என்றவாறு போனை வைத்தேன்.

அடுத்தநாள் அழைத்திருந்தாய். நான் மீண்டும் அழைத்தபோது நீ போனை எடுக்கவில்லை. அன்றைய பின்னிரவில் நீ எங்கோ தொலைந்து போனாய்..

Yeah, I miss you… I have missed you somewhere…!!!!

“இந்த இரவில், கொடுங்கனவுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் உன்னை எந்த நட்சத்திரங்கள் காப்பாற்றும்? எவை மீட்டுக் கொண்டு வரும்?”

நான் மேசையில் அமர்ந்தேன். ஒன்றிலும் மனமில்லை. நீயே என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தாய். நீ என்னை அறிந்ததைப் போல வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை நானும் வழங்கியிருக்கவில்லை. எனக்குள் நீ நுழைந்ததைப் போல நான் உனக்குள் நுழைந்திருக்கவில்லையா? அப்படி நுழைவதற்கான சாத்தியங்கள் இனி இருக்கிறதா என்ன? உன்னை எந்தப் பொழுதில் நான் புரிந்து கொண்டிருக்கவில்லை? எங்கே தவறிழைத்தேன்? எந்தப் புள்ளியில் நீ பிறழ்ந்தாய்? உலகத்தின் நியமங்கள் என வகுக்கப்பட்டவைகள் ஏன் சிலுவைகளாக மாறிப் போயின? உயிர் நண்பி என்பதற்கு அர்த்தம் என்ன? அப்படி இருந்தாலும் கூட தனியாக உன்னால் என்னைவிட்டு பிறழ்ந்து போக முடிந்ததா? எப்படி அது? கேள்விகள், ஆயிரமாயிரம் கேள்விகள், என்னைச் சாட்டையால் அடிக்கின்றன. நான் என்ன செய்யட்டும், சொல்லேன்…!

4.

நீ ஓரளவுக்கு நன்றாகப் படிக்கக்கூடியவளாக இருந்தாய். இருந்தும் உனக்கு படித்துப் பட்டம் வாங்கிவிடுவதைவிட சித்திரங்களிலும், கைவினை செய்வதிலிலும் அதிக ஆர்வம் இருந்தது. வண்ணங்களில் நீ விளையாடினாய். உன் மனதின் ஆழங்களை நிறங்களால் அழகாக்கினாய். எண்ணவோட்டங்களை கதை கதையாய் கீறலில் காட்சிப்படுத்தினாய். உன்னைப் பள்ளிக்கூடமே கொண்டாடியது, உன் அன்புக்குரியவர்கள் தவிர. உன் சித்திரங்களை பள்ளி சுவர்கள் பெருமையுடன் காட்சிப்படுத்தின. உயிரியலில் அனைத்து உடற்தொகுதிகளையும் நீ வரைந்ததைப் பார்க்கப் பார்க்க படிக்கவேண்டும் போல தோன்றியது, அதனால் படித்தேன். பாஸ் பண்ணினேன் என்று சொன்ன வகுப்புத் தோழியையும் நான் அறிவேன். உனக்குள் பிறப்பிலேயே பதியமிடப்பட்ட இந்தத் திறனை நீ எந்தப் பொழுதில் தொலைத்தாய்?

“என் மகள் டாக்டரா வருவா எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறேன். நீங்க எல்லாரும் அவளை ரோட்டில கீறி சம்பாதிக்கிற ஆளாய் மாத்திடுவீங்க போல இருக்கு. இனி இப்படி பெயிண்ட்ஸ் ப்ரஸ் வாங்கிக் கொடுத்தா நான் மேலிடத்தில் கம்பளைண்ட் பண்ணுவேன்” உடைந்த ஆங்கிலத்தில் உன் தந்தை ஆசிரியையுடன் கத்திக் கொண்டிருந்தார் ஒரு நாள்.

நீ அவமானத்தில் தலை தாழ்த்தியிருந்தாய். உன் கண்கள் கலங்கவில்லை. சிவந்து போயிருந்தன. உன் மனமெல்லாம் கசியும் காயங்கள் பொத்து பொத்தென நொதிந்து போயிருந்தன.

“எனக்கு இந்த கல்குலஸ் (Calculus Math) கணக்குகளை சொல்லித் தாறீங்களா? விளங்குதே இல்லை. எப்படியும் 75 தாண்ட வேணும். அப்பதான் அவேரஜ் காணும்.”

“சொல்லித்தாறதில ஒன்றுமில்லை. ஆனால் என்ன அப்ளை பண்றீங்க?”

“Life Science”

“Are you sure? நான் நினைத்தேன் நீங்கள் Public Health படிக்க விரும்புகிறீர்கள் என்று.”

“எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. நான் ஒரு Fashion Designer ஆகவே ஆசைப்படுகிறேன். ஆனால் வீட்டில் சொல்ல முடியாது. சொன்னால் கேட்க ஆட்களில்லை. அம்மா ஊரில Veterinary Doctor. இங்கு கல்யாணம் செய்து கொண்டு வந்து படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்பாவுக்கு அவர்ர அண்ணாவின் மகன் டாக்டர்க்கு எடுபட்டிட்டார். அதால எங்கட வீட்டில நான் அதில வரவேணும் எண்டு நினைக்கிறார்.”

“ம், எனக்கு விளங்குது. ஆனால் உண்மையான ஆர்வம் இல்லாவிடில் இது சரிவராது. குறைந்தது மூன்று வருடங்கள் யூனிவர்சிட்டி டிகிரி முடித்திருக்க வேண்டும். அது மட்டுமில்ல, நல்ல GPA இருக்க வேண்டும். சில யூனிவெர்சிட்டிக்கு MCAT Exam வேறு செய்து, அதிலையும் நல்ல Marks இருக்க வேணும். Life Science படிச்சாலும் பிறகு வேலை வாய்ப்புக்கள் இருக்காது. திரும்ப மேல எதுவும் படிக்க வேணும். எதுக்கும் நல்லா யோசிங்க. Academic Counselor என்ன சொல்றா ?”

“அவ வேணாமெண்டா செய்யாதீங்க எண்டுதான் சொன்னவ. அம்மாவோடையும் கதைக்க கேட்டவ. அம்மா அண்டைக்கு counselor க்கு முன்னாலேயே என்னைக் கிழிச்சு தொங்கப்போட்டிட்டா. சரியான அவமானமாய் போட்டு.”

“I am sorry, I don’t know what to say”

உண்மையில் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீ என் கண் முன்னேயே சிதைந்து கொண்டு போனாய். உன்னை தெரிவிக்கும் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தன. இல்லையென்றால் அவமானப்படுத்தப்பட்டாய். போதாதற்கு உன் காதலைக் கேலி செய்தனர். அவன்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லி உன்னவனை அவர்கள் வதைத்தபோது அவர்களிடம் சரணடைவதைத் தவிர வேறு வழிகள் உனக்கு தென்படவில்லை. உன் காதலை காப்பாற்றவேணும் நீ அவர்கள் போக்கிற்கு ஓட தொடங்கினாய். யூனிவர்சிட்டி தொடங்கி முதல் வருடம் முடியவே உனக்கு மூச்சு முட்டிப் போய்விட்டது. நான் வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். உன்னை சந்திக்கும் நாட்களும் உன்னுடன் செலவழிக்கும் நேரங்களும் குறைந்து போயின. நீ தொலைவதை பார்க்க சகிக்காத உன் காதலும் உன்னை விட்டுத் தொலைந்து போனது.

5.

இன்று விடியற் காலை ஒரு மணியளவில் என் Facebook க்கு வந்த உன்னைப் பற்றிய செய்தியை போனுக்குள் நுழைத்து விட்டிருந்தது தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பந்தான் எம்மைப் பிரித்தும் வைத்தது இல்லையா. இப்படி ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் மற்றவர்களை இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குமா? வழக்கமில்லா வழக்கமாக நான் நேரத்துக்கே படுக்கப் போயிருந்தேன். செய்தியைப் படிக்கும்போது மூன்று மணியிருக்கும். அப்போது வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருக்கும் உன்னைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. பின் வந்த மணித்துளிகளை பிணங்களும், பிசாசுகளும், இரத்தத்தில் தோய்ந்த என் நிலமும் கனவுகளாய் வந்து நிரப்பின. நான் தூங்குவதும், பிசத்துவதும் எழுந்து படுப்பதுமாய் இருந்தேன்.

இப்போது இரவு மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. எங்காவது போக வேண்டும் என்று தோன்றியது. உன்னை நோக்கி என்னை அழைத்து வரக்கூடிய ஒரு பயணம். நான் போனையும் எனது மெட்ரோ பாஸையும், ஜிம் அனுமதி அட்டையையும் எடுத்துக் கொண்டு கதவைத் திறக்கிறேன். அம்மாவின் எங்கே போகிறாய் என்ற கேள்விக்கு எனது ஆடை பதில் சொல்லியிருக்கவேண்டும்.

“இந்த நேரத்திலையா?”

“Yeah, காலமை போகக் கிடைக்கேல,”

“நீ இப்ப ஓரிடமும் போகாத, கூட யோசிச்சுக் கொண்டிருக்கிறாய்” இது அப்பா.

“என்னை அங்க கொண்டுபோய் விடுவீங்களா? நான் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவன்; இல்லை, பஸ்சில போறன், வந்தேத்துவீங்களா?”

“சரி, நீ போ, நான் ஏத்த வாறன், போன் பண்ணு.”

“சரி, போயிற்று வாறன்.”

இரவுத்தெரு வெறிச்சோட ஆரம்பித்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலை விட்டு வந்து கொண்டிருந்தார்கள். சிலர் கூடி நின்று சிகரெட் பிடித்துக் கொண்டும் கதைத்துக் கொண்டுமிருந்தனர். போட்டிருந்த துணி ஜாக்கெட்டுக்கு உள்ளாக ஊடுருவி கூதல் காற்று உடல் தழுவியது. உரோமக் கால்கள் சிலிர்த்து எழுந்தன. இப்படி ஒரு இளவேனிற்கால இரவில் நாம் தூரமாக நடந்து போக வேண்டுமென்று நீ சொல்லியிருந்தாய். தலை சாய்த்து, தீர்க்கமான பார்வையுடன் நீ கேட்கும் எதையும் மறுக்கத் தோன்றாது. மறுக்கக் கூடிய எதையும் நீ கேட்டதுமில்லை. நீ கேட்பது எல்லாமே எனக்குப் பிடித்தவையும் கூட. இந்த இரவு, இந்த அமைதி எனக்குப் பிடிக்கும் என்று நீ அறிவாய். என்னுடன் பேசும் போதெல்லாம் இரவை நேசிக்கப் பழகுவதாக நீ சொல்வாய். அதை உனக்கு மிகவும் பிடிக்கிறது என்றாய். எனக்குத் தெரியும் நீ என்னை மட்டுமில்லை என் விருப்பங்களையும் என் குறைகளையும் நிறைகளையும் என் சார்ந்த எல்லாவற்றையும் நேசித்தாய். நேசிக்க முயற்சித்தாய். இல்லாவிட்டாலும் கூடவே அருகிலிருந்தாய்.

நான் இரவையும், குளிர் காற்றையும் ஊடறுத்து நுழைகிறேன். என் பின்னால் இருட்டும் குளிரும் குழைந்து இறுகி மூட்டமாய் மூடுகின்றன நான் வந்த வழியை. எனது மீளலின் போது இந்த பேரமைதியை, வழி தெரியா இந்த இருட்டை நான் எப்படித் துளைத்து நுழைவேன். புரியவில்லை. நீயும் இப்படித்தானே, எங்கோ ஒரு உலகத்துக்குள் நுழைந்து வழி தெரியாது களைத்துப் போனாய். கேட்கப்படாத கேள்விகள் உன் மனமெங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கான பதில்களும் யாராலும் அளிக்கப்பட்டிருக்கவில்லை. உன் குடும்பத்தின் போர் தின்ற கனவுகளை, அம்மாவின் வாழ்க்கையை நீ வாழப் பணிக்கப்பட்டிருந்தாய். அவற்றுடன் நானறியா, நான் நீக்கலின் ஊடாயும் எட்டியும் பார்க்கவியா அந்த உலகில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்து விட்டனவா? அந்த உலகம் நீ எதிர்பார்த்த அனைத்தையும் தந்துவிடக் கூடியதா? உன் மனமெல்லாம் அடைபட்டுக் கிடந்த கவலைகள் எல்லாம் இப்போது இல்லையா? உனக்கு கேட்டுக் கொண்டிருந்த குரல்கள் இப்போது என்ன சொல்கின்றன? உன்னைத் தற்கொலை செய்து இந்த உலகத்திலிருந்து மீண்டு தன்னிடம் வர சொன்ன உன் கடவுளை நீ பார்த்தாயா? அவர் இப்போது என்ன சொல்கிறார்? உன்னை திரைப்படம் கூடப் பார்க்க விடாமல் தொலைக்காட்சியில் வந்து உன்னை சாகச் சொன்ன சாத்தான்கள் என்ன செய்கிறார்கள்? அங்கு என்னை அழைத்துப் போகவாவது நீ வருவாயா? இல்லை, இனி உனக்கு என்னைத் தேவையாகவிருக்காதா? சொல்லேன், தயவு செய்து சொல்லேன்.

சில நிமிடங்கள் எடுத்த காத்திருப்பின் பின் பஸ் வந்தது. கூட்டமே இல்லை. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு ஜன்னலில் தலை வைத்து சாய்ந்து கொண்டேன். நான் எங்கே போகிறேன், எதற்காகப் போகிறேன் என்பதெல்லாம் மறைந்து வேறுமையாகியது இந்த உலகம். இப்படி ஒரு பயணத்தில் உன்னுடன் இணைந்து கொள்ள முடியுமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீ எங்கிருக்கிறாய் இப்போது? நாம் அருகிலிருப்பவர்களின் புன்னகைகளைக் கண்டு எப்படி ஏமார்ந்துவிடுகிறோம்?

6.

சற்றே வெளித்திருந்தது வானம். கோடை காலத்தின் ஆரம்பமாதலால் கருக்கலிலேயே விடிந்து விடுவதும், இரவு எட்டுமணிவரை அந்திமாலையின்

வெளிச்சம் விரவிக் கிடப்பதும் இயல்பு. எனினும் இந்தக் கோடை எம்மை ஏமாற்றிக் கொண்டு திரிந்தது. விட்டுவிட்டு தூறும் மழை, எதிர்பாரா கும்மிருட்டு, லேசான குளிர் என்று தன்பாட்டுக்கு கரைச்சல் தந்து கொண்டு அலைந்தது காற்று. நான் அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தேன். உன்னுடன் பேசும் அவசரம் என்னை எழுப்பி விட்டிருந்தது. ஆனால் எனக்குத் தெரியும், நேற்றிரவும் எங்கோ ஓர் தொலைவில் நீ உன் கனவுகளுடன் பேசியபடி நடந்து போயிருப்பாய். வைத்தியசாலையில் தூங்கி எழுவது உனக்கு சௌகரியப்பட்டிருக்காது. ஏனெனில் நீ உனக்கான ஒரு உலகை யாசித்தபடியிருந்தாய். அந்த உலகிலாவது உறவுகளுக்கு உண்மையாக இருந்து கொண்டே எல்லோரையும் துயரமற்ற பாதையொன்றின் வழி நடத்திச் செல்வதைப்பற்றியே உன் எண்ணமெல்லாம் குவிந்திருந்தது. அவற்றை செய்யச் சொல்லி உன்னை வழிநடத்தும் உன் கனவுகளையும், கற்பிதங்களையும் உருவம் கொடுத்துப் பிறப்புவிக்க நீ தினமும் துயரனுபவித்தாய். உன் துயரங்களில் நான் முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்று புரிகிறது. நான் எனக்கென்று வழங்கப்பட்ட உலகில் தப்பிப் பிழைத்தலை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டேனோ?

பெயர் தெரியா மரமொன்றில் இருந்து வாய்க்குள் நுழையாப் பெயர் கொண்ட பூவொன்று ஊதா நிறத்தில் கொத்துக் கொத்தாய் உதிர்ந்து கிடந்தது ஆஸ்பத்திரி நுழைவாயில் எங்கும். எனக்கு ஊர் நினைவு வந்தது. ஊரில் ஆஸ்பத்திரி என்றாலே இப்படி பூ, இலை உதிர்க்கும் சில பல பெரிய மரங்களும், டெட்டோல் மணமும், கூடவே துக்கம், வலி, பிரிவு, மரணம், பிறப்பு இத்யாதிகளை அடக்கிய ஒருவித அமானுஷ்ய அமைதியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஓரமாய் ஒதுங்கி சிலதினங்களுக்கு முன் பிறந்து இன்று வீடேகும் குழந்தையையையும் அந்தப் புதுவரவைக் கொண்டாடிக் கொண்டே நகரும் குடும்பத்துக்கும் வழி விட்டவாறே அப்படியே நின்றேன். குழந்தைகள் தம் பிறப்புடன் ஏதோ ஒரு செய்தியைக் கொண்டுவருகின்றன. அது சந்தோசமானதாகவோ, துயரமானதாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ, அப்படி இல்லை என்றோ அமைந்துவிடுவதை எங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அது எங்கள் தோல்வி. குழந்தைகளை எங்களுக்கு ஏற்றது போல செதுக்குவதையும் எங்களின் இன்னொரு பிரதிநிதியாக மாற்றுவதிலும் நாம் முழு மூச்சுடன் இறங்கிவிடுகிறோம். அதில் வெற்றி பெற்றதாக நாம் நினைத்துக் கொள்கிறோம், இல்லை அதில் ஏற்படும் சின்ன தளம்பலையும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவே இல்லை. அதை நினைத்து நினைத்து உள்ளுக்குள்ளேயே மறுகி எம்மைத் திட்டி சபித்துக் கொள்கிறோம்.

“என் குழந்தைகளை அவர்களாகவே வளர்ப்பேன்” – இது நீ,

“ஆமாம், நானும் தான்.; இப்படி பார்த்துப் பார்த்து ஒப்பிட்டபடியே வளர்க்கப்படுவது எரிச்சலாக இருக்கிறது இல்லையா,”

“yeah, அவை என்னவாக விரும்பினமோ நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். தங்கட திறமை என்ன எண்டு கண்டுபிடிச்சு அதில போகட்டும். அது தான் சரி. எங்களுக்கு கிடைக்காதது அவைக்கு கிடைக்கட்டும் எண்டு சொல்லி அவையளைக் கஷ்டப்படுத்திறது சரியில்லை, என்ன சொல்றீங்க?”

“Yeah, That’s true.” நான் மௌனமானேன். “என் குழந்தைகளை நீங்களே வளர்த்துத் தாங்களேன்; (புன்னகைத்தேன் என்று நினைக்கிறேன்) என்னால் முடியுமென்று நினைக்கவில்லை. நிறைய செல்லம் குடுத்து சீரழிச்சிடுவன் என்று எனக்கு நல்லாவே தெரியுது..”

“அதுதான் நான் முதல்லேருந்தே சொல்லுறன், பிறந்து கொஞ்சம் வளந்தோன்ன கொண்டந்து விடுங்கோ, நான் வளர்க்கிறேன்.” சொல்லிக் கொண்டே நீயும் சிரித்தாய்.

எம் கண்கள் முழுவதும் கனவுகள். கண்ணிமைகள் மூட எத்தனித்தால் அவை முடியாமல் திணறிப் போகும் அளவுக்கு கனவுகள். ஒரு நாள் முழுதும் கூடி அலைந்து பேசித் தீர்த்தாலும் வீடு வந்ததும் அலைபேசியை காதுக்குள் செருகிக் கொண்டே விடிய விடிய பேசிக்கொண்டிருக்கும் வரைக்குமான கதைகளும், சம்பவங்களும், திட்டங்களும் நிறைந்து கிடந்தன எம்மிருவருக்குள்ளும். உன் பெயரை நான் சொல்லி அழைப்பதில் நீ அடையாளம் கண்டு கொள்வாய் நான் எதைப் பற்றி அல்லது எந்த சூழ்நிலையில் உன்னை அழைக்கிறேன் என்று, அதேபோல் நானும். என் குரல் பலதடவைகள் விரக்தியாய், முறைப்பாடு செய்யும் தொனியிலேயே ஒலிக்கும்.

“சே, என்ன குளிர் ? சூரியனைக் கண்ணில காணவே இல்லை, கண்டாலும் சூரியனா இது என்றிருக்கு. என்னால இங்க காலந்தள்ள முடியாது. காய்ச்சல், தடிமன் என்று இந்த அவஸ்தை, முடியல…”

எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பதிலாய் ஆரம்பிப்பாய்,

“Yeahma, I understand. ஆனா கொஞ்ச காலந்தானேம்மா, அங்கால Summers. Everything will be simply fine.”

எல்லாம் சரியாக இருந்ததா உனக்குள்? இப்படி காலநிலை போலவே எல்லாம் சரியாகிவிடுமென்று எண்ணியிருந்தாயா?

7.

வெள்ளைப் போர்வைக்குள் அமைதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தாய். வெளியே துருத்திக் கொண்டிருந்த உன் கையில் இரத்தம் எடுத்தற்கான அடையாளமாய்ப் பஞ்சும், பிளாஸ்திரியும் ஒட்டப்பட்டிருந்தன. விரல்களைப் பிரித்து என் ஒரு கையுடன் பிணைத்துக் கொண்டு மறு உள்ளங்கையால் மூடினேன். வெதுவெதுப்பாக, கொஞ்ச நேரத்துக்கு முன்னே பிறந்து தாயின் மார்பில் போட்ட குழந்தையின் சூடு. நீ திடுக்கிடுவதாய் சரிந்து படுத்தாய். இப்படி நான் மட்டும் தான் செய்வதாய் நீ சொல்லியிருக்கிறாய். என் கைகள் எப்போதும் குளிர்ந்துகொண்டிருக்கும்.

சேர்ந்து நடக்கும்போது, அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் என் கைகளை இயல்பாக தேய்த்து கன்னத்தில் வைப்பதைக் காணும்போதெல்லாம் அதை செல்லமாய் குறிப்பிட்டபடி என் உள்ளங்கைகளை உன் கைக்குள் பதுக்கிக் கொள்வாய். நான் அதிகம் வெறுக்கும் குளிரை ஒதுக்கித் தர நீ இருக்கிறாய் என்பதாய் இருக்கும் உன் தொடுகையின் அர்த்தம். நான் வெறுக்கும் பலவற்றில் இருந்து என்னை வெளியேற்றினாய் இவ்வாறாக, நீ எதை மோசமாக வெறுக்கிறாய் என்பதை நான் அறியாமல் இருக்கத்தக்கதாகவே..

கண்விழித்து கண்களாலேயே புன்னகைத்தாய். ஒரு வாரமாய் நீ தொலைத்த தூக்கம் கண்களின் கீழே புகையாய்ப் படர்ந்திருந்தது. களைத்த சோர்வான பார்வை என் முகத்தில் படிந்து மழைத்துளிகள் ஒடுங்கி வழிந்து கொண்டிருந்த யன்னலில் ஒதுங்கியது. உன்னை இப்போது தான் உண்மையிலேயே தொலைத்துவிட்டதாய் உணர்ந்தேன். கலைந்து போயிருந்தாய். உன்னை அறிந்துகொண்டதாய் நான் எண்ணியிருக்கும் இந்த நான்கு வருடங்களிலும் உன்னை முழுதாய் அறிந்ததாய் நான் இறுமாந்திருந்தேன். அவையும் கூடவே கலைந்து போயின.

எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு உனக்கருகில் அமர்ந்தேன்.

“எப்ப வந்தீங்க.?”

“இப்பதான், நல்ல நித்திரை போல.”

“Yeah,” (மௌனம்)

“சாப்பிட்டாச்சா?”

ஏதாவது கதைத்து அந்த மௌனத்தை, அந்த இடைவெளியை, அந்த கனதியை அறுத்து எறிய வேண்டுமென்ற தீவிரம் என்னுள் கிளர்ந்து எழுந்தது. வார்த்தைகள் பின்னடித்தன. தொண்டைக்குழிக்குள் சிக்கி அமர்ந்து அழிந்தன.

“lunch சாப்பிட்டாச்சு, இனி இரவுக்கு தருவினம் என்று நினைக்கிறேன்.”

“பசிக்குதா? இங்க கீழ ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாம். Nurse இட்ட கேட்டனான், ஏதாவது வாங்கிக் குடுக்கலாமா எண்டு, ஓம் ; சாப்பிடலாம் என்றவ…”

“இல்லை, Thanks for asking, எனக்குப் பசிக்கேலம்மா, உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்திருக்கலாமே. இங்க வைச்சு சாப்பிட்டிருக்கலாம்..”

“நான் சாப்பிட்டுட்டேன்.” பொய் சொன்னேன். நீ நீயாக இருந்திருப்பின் இதைக் கண்டுபிடித்திருப்பாய். உள்ளுக்குள் ஏதோ இழை அறுந்ததாய்ப்பட்டது.

மீண்டும் மௌனம். நீண்டதாய் மௌனம். நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீயும், நீ ஏதாவது பேசவேண்டுமென்று நானும் நேர்ப்பார்வைகளைக் கவனமாகத் தவிர்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். நீ இந்த உலகத்தை, உன்னுடைய உறவுகளை மாற்ற முயற்சித்திருந்தாய். அந்த முயற்சி மனித இயல்பு என்றறிவிக்கப்பட்டிருந்தவற்றைவிட வித்தியாசமானதாக இருந்தது. உன் அனுபவங்களில் பல உவப்பூட்டுவனவாகவோ ஏன் சாதாரணமாய் மனித மனத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவோ இருந்திருக்கவில்லை. அவற்றிலிருந்து விலகிப் போக, அவற்றின் பிரகாரம் எழுதப்பட்ட உன் வாழ்க்கையை திருத்தி எழுதிப் பார்க்க நீ போராடிக் கொண்டிருந்தாய். உன் போராட்டத்துக்கான சூத்திரம் உன்னால் எழுதப்பட்டது. உன்னிடம் மட்டுமே அதன் வெற்றியும், தோல்வியும், முடிவும் கையளிக்கப்படும். போராட்டத்தின் நிலையை உன்னால் மட்டுமே உணரப்படக் கூடியதாய் இருக்கிறது இப்போது. என்னால் அதற்குள் நுழையவே முடியவில்லை. ஒரு நீர்க்குமிழிக்குள் உடலைக் குறுக்கி தாயின் கர்ப்பத்துக்குள் இருக்கும் குழந்தை போல நீயிருக்க, இப்போது உன்னை நான் காண்கிறேன். நீ தேடியவற்றை இந்த மெல்லிய படை தந்துவிடுமா? சொல்?

நீர்க்குமிழியை எப்படித் தொட்டால் உடையாது, அதே கணத்தில் உன் கைகளைத் தொட்டு என் கைகளுக்குள் புதைத்துக் கொள்ள முடியும் என்று யோசித்தவாறே நிற்கிறேன் நான். காற்றின் வேகத்தில் ஆடி, உரு மாறி மீண்டும் வளைகிறது உன்னைச் சூழ்ந்திருக்கும் மெல்லிய படை. உள்ளிருந்தே என்னைப் பார்க்கிறாய், புன்னகைக்கிறாய், கலைந்து போகிறாய், குமிழி அதிரா வண்ணம் மெலிதாய்க் கிசுகிசுக்கிறாய். நீ பேசுவது கேட்கிறது எனக்கு. உன் வேண்டுகோள்கள் நியாயமானவையாக, தேவையானவையாக இருக்கின்றன. உன்னைப் புரிந்து கொள்வதாய், உனக்குத் தேவைப்படும் அனைத்தையும் அப்படியே செய்து தருவதாய், உன்னுடனே பயணிப்பதாய் வாக்குறுதிகளை மட்டுமே வழங்க முடிகிறது. என் வாக்குறுதிகளை நான் காப்பாற்றுவேன் என்பதை சில சத்தியங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்கிறாய். என் சத்தியங்களைக் காப்பாற்ற எனக்கென்று இறுதியாய் கூடவாவது இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்க நீ இந்த உலகத்துக்கு வர வேண்டியிருக்கும் என் கண்ணே. வருவாயா? நான் இருப்பேன் என்று நம்புகிறேன். நீ வருவாயா?

‘பேசேன், ஏதாவது சொல்லேன்…Pelasse.’

உன் நெருங்கிய சில உறவுகள் உள் நுழைய அறுந்து தொங்கியது எமக்கிடையே பின்னப்பட்டிருந்த மௌனம். அதில் எனக்கானதையும் உன்னதையும் எடுத்து கண்களின் வழி உள்நுழைத்து சேமித்துக் கொண்டு பார்வையால் விடைபெற்றுக் கொண்டு அறையை விட்டு வெளியேறுகிறேன். உன் குரல் தேய்ந்து ஒலிக்கிறது.

அன்றிலிருந்து சரியாக ஒரு கிழமை, உனது பிறந்த நாளிலேயே கராஜில் தூக்குப் போட்டு இறந்து போயிருந்தாய். உன் பெருவிரல் நிலத்தில் பட்டும் படாததுமாய் இருந்ததாம். உன் தம்பி சொல்லிக் கொண்டிருந்தான். நீ படித்த விஞ்ஞான அறிவு குறைந்த உயரத்தில் தூக்குப் போட்டாலும் எப்படி சாவது என்று சொல்லிக் கொடுத்திருந்தது என்று பேசிக் கொண்டார்கள். நான் எப்போதும் போலவே மௌனமாக இருந்தேன்.

8.

உன்னைப் பார்க்கவென்று வீட்டிலிருந்து இறங்கினேன். வெளியே குளிர். பூச்சியத்தின் கீழே இருபதிலோ, இருபத்தைந்திலோ. தெரியவில்லை; குளிர் என்பது மட்டும் தெரிந்தது. உடலும் மனதும் அப்படியான மரத்த நிலைக்கு வந்துவிட்டிருந்தது. நீ மேப்பிள் மரத்தின் கீழ் மௌனித்திருந்தாய். கடல் கன்னி வடிவிலான உன் கல்லறையை எந்த இருட்டிலும் பனியிலும் இலகுவாகவே கண்டு பிடிக்க முடியும். நீ முதல் முதலாய் வரைந்த அந்த ஓவியம் இப்பவும் பள்ளியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எதைக் கேட்பதென்று எனக்கு தெரியவில்லை. ஒரு காலத்தில் எதை சொல்வதென்று உனக்குத் தெரிந்திராதது போல. உனக்குத் தெரிந்திராது என்றில்லை. மறந்திருந்தாய். எல்லா வார்த்தைகளும் அர்த்தமிழந்த நொடிகளை நான் சுவாசித்தேன். பொருத்தமில்லாமல் சொற்கள் வந்துவிழுந்தன. அவற்றை ஒழுங்குபட திரும்ப சொல்வதற்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. நீ அதைத் தந்து என்னை பேசச் சொல்லிப் பார்த்திருந்தாய். என்னுடைய நினைவுகள் பிறழ்ந்து போயின. தப்பித் தப்பி வரும் உன் நினைவுகளுக்குள் நான் அமிழ்ந்து கொண்டிருந்ததைப் போல. அதற்குள் மீண்டு திடுக்கிட்டு நீ கேட்கும் கேள்விகளுக்குள் எனது பெயரும் செருகப்பட்டு வந்துவிழுந்தது. நான் நீ தவறிப் போவதையும், மீண்டு வருவதையும் பார்த்திருந்தேன். உனது ஒவ்வொரு அசைவுகளும் எனக்குள் புதைந்துகொண்டன. பரீட்சயமாயின. ஆகவே நான் பேசாதிருந்தேன். என்னை எல்லைகளற்று நேசிக்கும் உனது இதயத்தின் மூலைகளின் மடிப்புக்களுக்குள் நான் தொலைந்து போகக் கண்டேன். இருந்தும் என்னால் பேசாதிருக்கவே முடிந்தது. நீ தூங்கவாரம்பித்தாய். நான் உன்னைவிட்டு விலகி நடக்கவாரம்பித்தேன். என்னைப் பின்தொடரும் கடந்த நொடிகளின் சுமைகளிலிருந்து பிரிந்து விலகிப் போய்விட வேண்டுமென்ற தீவிரம். நான் விரைவாகவே தனிமையும் அமைதியும் அடர்ந்துகிடக்கும் கல்லறைகளைத் தாண்டிக் கடக்கிறேன். முதன் முதலாக இந்த தனிமையும் அமைதியும் எனக்குள் அச்சத்தையும் சொல்லிவிடமுடியாத மனக்கிலேசத்தையும் தருகின்றன. பேரூந்தில் தடுமாறி ஏறி அலைபேசியை எடுத்து “miss You” என்று உனது எண்ணுக்கே அனுப்பிவிட்டு அலைபேசியை மௌனமாக்குகிறேன். இந்த மௌனத்தின் அடர்த்திக்கு என்னை மூழ்கடித்துவிடும் பலத்தை யார் கொடுத்தார்கள்?

பேரூந்து போய்க்கொண்டிருந்தது. அறுபத்தைந்து எழுபது வயது மதிக்கக்கூடிய ஒரு வயதான பெண்மணி தோளில் ஒரு பையுடனும் கையில் சில மடித்த காகிதங்களுடனும் பேருந்திலிருக்கும் அனைவரையும் நெருங்கி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். தன் மொழி பேசுபவர்கள் என்று தோன்றினால் தன் மொழியிலும் இல்லையென்றால் ஆங்கிலத்திலும் சொல்லிச் சொல்லிக் கடந்து வந்துகொண்டிருந்தார். அவரது கைப்பையில் ஒரு மார்க்கத்தின் பெயர் எழுதி அது நல்லது என்று ஆங்கிலத்தில் தொங்கப் போட்டிருந்தார். நான் பார்ப்பதும் பார்க்காததுமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவரிடமிருந்து கண்ணை எடுக்கவே முடியவில்லை. உடல் உறையவைக்கும் இந்தக் குளிரில் வயதான இந்தப் பெண் தனக்கு என்ன நேர்ந்துவிடக் கூடும் என்று தனது நம்பிக்கை சார்ந்ததை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தப் போராடிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அவர் எனதருகே வந்து அரைகுறையாக ஏதோ சொல்லவாரம்பித்தார். எனக்கு அவரை அமர்ந்து கொள்ளச் சொல்லவேண்டும் போல இருந்தது. அவர் சொல்லவருவதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. பொய்யாக ஒரு புன்னகை புரிந்து “இல்லை, பரவாயில்லை” என்று சொன்னேன். கண்டும் காணாதுமாய்த் திரும்பிய மற்ற முகங்களுக்கிடையில் எனது பொய்ப்புன்னகை அவரிற்கு எதையோ சொல்லியிருக்கலாம். அவர் தனது இரண்டு கைகளையும் உயர்த்தி தனது மொழியில் ஆசிர்வாதம் போல சொல்லி கன்னத்தைத் தடவிவிட்டு சென்றார். பேரூந்தில் இருந்தவர்கள் எல்லாரும் ஒருமிக்கப் பார்த்துத் திரும்பினார்கள். நான் தெரியாதது போல வெளியே வேடிக்கை பார்க்கவாரம்பித்தேன். அவர் எனக்கு இரு இருக்கைகள் தள்ளி அமர்ந்து கொண்டார். கையிலிருந்தவற்றைத் தனது கைப்பையில் வைத்துவிட்டு கண்ணாடியில் தலை சாய்த்துக் கண்களை மூடிக்கொண்டார். சுருங்கிய முகத்தசைகளில் அனுபவங்களும், சம்பவங்களும் ஒளிந்தோடின. என் மனதில் சொல்லவொண்ணாத இரக்கமும் கவலையும் வந்து அமர்ந்து கொண்டன. நான் அறிந்துகொள்ளாத, அந்தப் பெண் சொல்ல விரும்பிய மார்க்கம் அவர் தேடித்திரியும் அமைதியை கொடுத்துவிடவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவாரம்பித்தேன். இந்தப் பிரார்த்தனைகளை கடவுள் கேட்பார் என்று நீ சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. நான் எந்தக் கடவுளை நோக்கி என் பிரார்த்தனைகளை முன்வைக்க? நீ அதையும் சொல்லிவிடேன்;

ஏன் இந்த நாட்களை இந்தக் குளிர் இவ்வளவு நீட்டி வைத்திருக்கிறது? குளிர் மட்டுந்தானா நீட்டிவைக்கிறது? எனக்குப் புரியவில்லை. எனக்கு உன்னோடு இருக்கவேண்டுமென்று தோன்றியது. உன்னோடு இருந்தால் நேரம் போவதே தெரியவில்லை. எது பேசுகிறோம் என்பதும் தெரியாதது போல. இதை உனக்கு எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உனக்குத் தெரிந்திருந்தாலும் நீ அதைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பது போல இருக்கும் மனநிலையை நான் இன்னும் அடைந்துவிடவில்லை. உனக்கு சொல்லிவிட நிறைய செய்திகளைக் கொண்டுவந்தேன். அவற்றில் ஒன்றைத்தானும் நான் சொல்லிவிடவில்லை. இப்படி எழுதும் இந்தக் கடிதங்களைஎல்லாம் எப்படி நான் உன்னிடம் சேர்ப்பிக்கப் போகிறேன்? நீ எந்த உலகத்திலுறைகிறாய் இப்போது?

மயூ-கனடா

மயூ

(Visited 210 times, 1 visits today)