காதலின் போதாமையும் இன்னும் பிறவும்..!-சிறுகதை-மயூ

மயூஎனது இருப்பத்திஐந்தாவது பிறந்தநாளன்று நான் கர்ப்பமாயிருந்தேன். அப்பா அந்தப் பிறந்தநாளை மண்டபம் எடுத்து கொண்டாடிக்கொண்டிருந்தார். புகைப்படங்களுக்கும், வீடியோவிற்கும் மையமாய்ப் புன்னகைத்து சோர்ந்து போயிருந்தேன். இனம்புரியாத களைப்பு என்னை சூழ்ந்திருந்தது. உண்மையில் நான் கர்ப்பமாயிருக்கிறேன் என்பதையே நான் உணர்ந்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் இருந்தன என்பதை நான் அறிந்திருந்தேன். நாட்கள் செல்லச்செல்ல இனம்புரியாத சோர்வும், களைப்பும், மன உளைச்சலும் அலைக்கழித்தன. கர்ப்பம் என்பதை சோதித்து அறிந்தவுடன் நான் உனக்கு அலைபேசினேன்.

“என்ன நர்மதா?”

“I think I am pregnant”

“what?”

“yeah”

“டெஸ்ட் பண்ணினியா?”

“யா, இப்பதான்”

“இப்ப என்ன செய்றது?”

“Can you marry me now?”

“நர்மதா”

“குழந்தை இருப்பதைக் காட்டி உங்களை நான் கேட்கவில்லை. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அறிந்து கேட்கிறேன். என்னை கல்யாணம் செய்றீங்களா? கல்யாணம் என்றுதான் இருக்க வேண்டும் என்றில்லை. நீங்களும் நானும் சேர்ந்து வாழறதை சொன்னாலே போதும்.  அப்பாவைக் கொண்டு உங்கட  வீட்டில் பேச என்னால் முடியும்.”

“ஐயோ, வேணாம். இது நடக்காது நர்மதா. நான் உனக்கு முதலே சொல்லியிருந்தனான் தானே. என்னால கல்யாணம் கட்டேலாது எண்டு. நான் சொல்லாமல் உன்னோட பழகேல. இப்படிக் கேட்டு என்னை சித்திரவதை செய்யாத” உன் குரல் அழுகையில் கரைந்து போனது.

எங்கள் உறவை எங்களைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை. அறிவிக்க வேண்டுமென்றும் எங்களுக்கு தோன்றவில்லை. இந்தப் படங்களில் வருமாய்ப் போல “I love you, Do you love me” என்று யாரும் யாரையும் ப்ரொபோஸ் பண்ணியும் இருக்கவில்லை. எல்லாமே இயல்பாய் நடந்து முடிந்திருந்தது. எங்கள் இருவரது நிறை குறைகள் என்று ஏராளம் இருந்தன. நாம் எதைப் பற்றியும் எப்பவும் கவலைப் படாதவர்களாக இருந்தோம். நடைமுறையில் உன் உலகம் இலங்கையின் தென்கரையில் இருந்தால் என் உலகம் வட அமெரிக்காவின் வடக்குக் கரையில் இருந்தது. இருந்தும் நாம் சந்தோஷமாகவே இருந்தோம். அப்போது நான் பரீஸில் படித்துக் கொண்டிருந்தேன்.யூனிவெர்சிட்டியின் மூன்றாமாண்டு எக்சேஞ் ப்ரோக்ராமில் வந்து  அறை எடுத்துத் தங்கியிருந்த என்னைப் பார்க்க வாரவிடுமுறைகள் எல்லாம் வருவாய். இரண்டு மாதங்களுக்கு ஒருக்கால் எண்டாலும் விடுமுறைக்கு மட்டுமாகவே கனடாவில் இருந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்த நான் அதையும் நிறுத்திவிட்டிருந்தேன். என்னை நம்பிய என் குடும்பம் இதை அதிக படிப்புபோலும் என்று ஏற்றுக் கொண்டுவிட்டிருந்தது. உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்துவதில் எனக்கு எந்தச் சிக்கல்களும் இல்லை. அவர்கள் இருகை நீட்டி உன்னை வரவேற்பார்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் உனக்குத்தான் பிரச்சினை இருந்தது. எனக்குப் பேச வரவில்லை. நான் எல்லாவிதத்திலும் யோசித்து மிகவும் சோர்ந்து போயிருந்தேன். குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான நிகழ்தகவுகளைவிட  குழந்தையை வளர்க்க முடியாமல் இருப்பதற்கான சாத்தியங்கள் கூடிக் கொண்டு போயின. என்னையும் குழந்தையையும் எப்போதுமே ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையிலேயே அப்போதும் நீ இருந்தாய். அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாய். என்னை மணந்து கொள்ளவோ இல்லை என் குழந்தைக்கு உரிமை கொண்டாடவோ உன்னால் முடியாதிருந்தது. எனக்கு என்ன செய்வதென்று யோசிப்பதைவிட தைரியமாக இருக்க வேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டிருந்தது. குழந்தையைத் தனியே வளர்க்க அரசாங்கத்தால் உதவித் தொகை தரப்படுவது சாத்தியம் என்ற  போதிலும் என்னால் அதை செய்ய முடியவில்லை. முடிந்திராத படிப்பும், நிரந்தரமற்ற வேலையும், அடிக்கடி வந்துபோகும் மன அழுத்தமும், எனதும் குழந்தையினதும் எதிர்காலம் குறித்த பயமும் என்னை சிதைத்துப்போட்டிருந்தன. எல்லாப் பலத்தையும் சேர்த்து குழந்தையைக் கலைத்துவிடும் முடிவை நான் எடுத்திருந்தேன். உன்னிடம் சொன்னபோது, என்னுடன் வருவதற்கும், அந்த நாட்களில் கூடவிருக்கவும் விருப்பம் தெரிவித்தாய். உன்னை மறுத்து ஐந்து கிழமைகளேயான அந்தக் கருவைக் கலைத்துவிட்டு வந்த அந்த இரவும் எப்போதும் போலவே மௌனமாக இருந்தது.

00000000000000000000000000000

பாரீஸ் விமான நிலையம். இன்னும் பதின்நான்கு மணித்தியாலங்கள் காத்திருக்கவேண்டும் நான். நண்பியின் திருமணத்துக்கு துபாய் போக வேண்டியிருந்தது. மீண்டும் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவில் வேலையில் சேரவும் வேண்டும். இடையில் கனடாவில் அம்மாவைப் பார்த்துவிடவேண்டும். இப்படி எல்லா வேண்டும்களுக்குமிடையில் அல்லாடி நொடிகளைக் கணக்கிட்டுப் பார்த்துப் பார்த்து கிளம்பியும் கனடாவுக்குப் போகும் எட்டுமணி ப்ளைட்டை தவறவிட்டிருந்தேன். இடையில் விமானம் மாறி ஏறுவதற்கு ஐந்து மணித்தியாலங்கள் இருந்தன. அந்த இடைவெளியில் உன்னை சந்தித்துவிடுமாறு நண்பி என்னை வற்புறுத்தியிருந்தாள். என்னுடைய விமான இலக்கமும் நேர விபரங்களும் அவளால் உனக்குத் தரப்பட்டிருந்தன என்றும் எனக்குத் தெரியும். நீ வருவாயா என்பதுதான் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அது தெரிந்திருக்காதபடியால்தான் அப்படியே தூங்கிப் போய் இப்போது இன்னும் காத்திருக்கப் போகிறேனோ என்றும் எனக்குப் புரியவில்லை. எது எப்படியிருப்பினும் நான் காத்திருக்கத்தான் வேண்டும். வீட்டுக்கு அழைத்தேன்.

“அம்மா”

“என்ன நர்மதா, என்ன நடந்தது?”

“அதில இருந்துகொண்டே நித்திரை கொண்டிட்டணனை, இப்ப இன்னும் 14 ஹவர்ஸ் வெயிட் பண்ண வேணுமாம்”

“ஐயோ கடவுளே, சரி நான் அப்பாட்ட சொல்றேன். நீ இறங்க முதலும் ஒருக்கா எடு.”

“சரி.”

பைகளுடன் அலையத் தொடங்கினேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை தேவைகள். யாருக்கும் நின்று பேசவோ, அமர்ந்து பார்க்கவோ நேரமில்லை. ஒரு கண்ணாடியோரம் பைகளை சாத்திவைத்துவிட்டு நானும் அமர்ந்து கொள்கிறேன். அருகிலிருந்த கடைகளில் கூடமில்லை. யாரவது ஒருவர் இருவர் தமக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் திரிந்தனர். வெள்ளை மாபிளும் கண்ணாடியும் கொண்டு செய்த பொம்மையில் ஒரு பெண்குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தான் ஒரு தகப்பன். கண்ணாடியிலான அந்த சுருபம் உன்னை எனக்கு நினைவு படுத்தியது. உனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பதை நான் அறிந்திருந்தேன். அதை வாங்கலாம் என்று போய் தொட்டுப் பார்த்தேன். அது ஏதேதோ நினைவுகளை எனக்குத் தந்ததுபோல வலிக்கத் தொடங்கியது. அதை வைத்துவிட்டு வந்து உனக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். உன்னை இன்னும் காணவில்லை. நீ வருவாய் என்றுமட்டும் ஏனோ தோன்றிக் கொண்டிருந்தது. உன்னைப் பார்த்தால்தான் என்ன என்பதும் ஒருவித மனநிலையில் சரியாய்தான் பட்டது.

குளிர் பூச்சியத்துக்கும் கீழே முப்பத்தைத் தொட்ட ஒரு நாளில் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்ட புது உறவு ஒன்றை நான் அறிந்து கொண்டேன். உன் முகப்புத்தகம் முழுக்க உங்கள் ரெண்டு பேரின் படங்களும் நிறைந்து வழிந்தன. சிரித்துக் கொண்டிருந்த உன் குடும்பத்தினர் படங்களும் தான். அப்போது நான் கனடாவில் இருந்தேன். ஏனோ உன்னை நேரில் பார்த்து இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் போல தோன்றியது. அம்மாவுக்கு இல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி இரண்டு நாட்கள் டிக்கெட்டில் உன்னிடம் வந்திருந்தேன். உன்னிடமே சொல்லிக் கொள்ளாமல் வந்து நான் முன்னம் என்னுடன் தங்கியிருந்தவளின் அறையில் நின்றேன். என்னைப் பார்க்க உன்னை வரச் சொல்லிக் கேட்பது அபத்தமாய்ப்பட்டது. இருந்தும் உன் அலைபேசிக்கு அழைத்தேன். அது செத்துப் போயிருந்தது. காரொன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குறிப்பாய் மட்டுமே தெரிந்த உன் இருப்பிடம் வந்து சேர்ந்தேன். இரவில் நீ பகுதிநேரமாய் வேலை செய்யும் காஸ் ஸ்டேஷனில் உன்னைக் கண்டு பிடிப்பது எனக்கு அவ்வளவு கஷ்டமாய் இருக்கவில்லை. என்னை நீ அந்த நேரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த நேரத்தில் என்றில்லை எப்பவும் நீ எதிர்பார்த்திருக்கவே இல்லைத்தான். பார்த்ததும் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி முழித்தது இப்பவும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு.

“நர்மதா, இங்க என்ன செய்றாய்?” அடுத்து என்ன கேட்பதென்றோ சொல்வதென்றோ ஒன்றுமாய் உனக்குத் தெரியவில்லை.

“கொஞ்சம் பேசவேணும்.”

“உனக்கென்ன விசரா? எல்லாம் தெரியும் தானே உனக்கு?”

“தெரியும், நேரிலேயே கேட்பமென்று தான்…..”

“ப்ளீஸ், இப்ப என்னால பேசேலாது, எத்தனை நாள் நிப்பாய்? எங்க நிற்கிறாய்?”

“நாளை பின்னேரம் பிளைட். ரேச்சலோடதான் நிற்கிறேன்.”

“நாளைக்கு காலம நான் பாரிஸுக்கு வாறன், தயவு செய்து போ.”

சொன்னது போல நீ வந்தாய். நீண்ட இரவுகளைத் தாங்கி வந்த குளிர் நாட்களைக் கடக்க வேண்டியிருந்தது பற்றியும் ஒரு நாள் ஒரே ஒரு நாள் எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு பகல் நீளும் நாட்களை வாழும் தூரம் போகக்கூடும் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன். நீ பெசாதிருந்தாய். நீ பேசாமலிருக்கும் போதெல்லாம் அடுத்து என்ன சொல்வதென்று நான் குழம்பிப் போய்விடுகின்றேன். சற்று முன் கொட்டிக்கொண்டிருந்த பனியை இப்போது காணவில்லை. பூச்சியத்துக்கு கீழ் குளிர். மதியம் பன்னிரண்டு மணிக்கே நடுச்சாம இருட்டைப் பார்ப்பது அவ்வளவு உவப்பானதில்லை. இந்தக் குளிர் என்னை உலகத்தின் உச்சியில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு முழம் சறுக்கி ஒரு சாண் எழுந்து என்னை வருத்திக்கொண்டு ஒவ்வொரு நாட்களையும் கடப்பது தாங்கொணா கவலையையும் அழுத்தத்தையும் தருகிறது. நான் உயரத்திலிருந்து விழுவது போல் விழுகிறேன். நீ என்னைத் தாங்கிப் பிடித்துக்கொள். அல்லது பிடித்துக்கொள்ள முயற்சி செய்வது போலாவது காட்டிக்கொள். அந்த நம்பிக்கையும் ஒரு பிடிமானமுமே எனக்கு இப்போது மிகவும் தேவையாகவிருக்கிறது என்றாவது சொல்ல விரும்பினேன். நீ பேசாது கண்ணாடிச்சுவர் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாய். என் கைப்பையை எடுத்துக்கொண்டு உனக்கு சொல்லாமலே வெளியேறி காரில் அமர்கிறேன். காரின் இருக்கைகள் முதல் கொண்டு ஸ்டீரிங் வரை உறைந்து போய்விட்டிருந்தன. காரை இயக்கிவிட்டு வெப்பம் ஏறும் வரை காத்திருக்கவாரம்பித்தேன். உன்னைக் காணவில்லை. இன்னொரு கதவால் வெளியேறி நீ போயிருக்கலாம். உன் காரை இந்த குளிர் இருட்டில் தேடுவது முட்டாள்த்தனம் என்பது மட்டுமல்ல எனக்குத் தேடவேண்டுமென்று தோன்றவுமில்லை. சாலையில் காரை இறக்கி சிக்னலில் நிற்கிறேன். எல்லா வீடுகளிலுமே இழவு நிகழ்ந்துவிட்டதைப் போல இருக்கும் இந்த நகரத்தின் பயங்கர அமைதி என்னை இன்னும் சிதைக்கிறது. பனியும் நிறையாத வறண்ட காற்றுடன் வீசும் குளிர் எல்லாக் கட்டிடங்களையுமே உறைய வைத்து சுழன்று திரிகிறது. ஒரு துரும்பு போல அடிபட்டுத் திரியவும் உறைந்து போய் கிடக்கவும் என்னால் முடியாதிருக்கிறது. நான் என்னதான் செய்ய? எனக்கு அழுகை வரும் போல தோன்றியது. எப்போதோ இறந்துவிட்ட எனது செல்ல நாய்க்காக, நான் வருவேன் என்று காத்திருந்து என்னைப் பார்க்காமல் இறந்துவிட்ட ஆச்சிக்காக, இதோ குளிரால் இந்த தலை சிறந்த நகரத்தில் தெருவில் கிடந்து இறந்துவிட்ட வீடற்ற, அன்பானவர்களைத் தொலைத்த மனிதர்களுக்காக.

நான் அன்று பின்னேரமே கனடா திரும்பிவிட்டேன். விசா இல்லாமல் அந்தரிச்சபடி இருந்த உனக்கு இது நல்ல வாய்ப்பாய் இருந்தது. எப்போது உன் வாழ்க்கையில் ஒரு உறவு வருகிறதோ அப்போதே என்னைவிட்டு நீங்கிவிடுமாறு உன்னைக் கேட்டிருந்தேன். நீ நீங்கிவிடுகிறாயோ இல்லையோ நான் தொலைவேன் என்று சொல்லியிருந்தேன். என்னைத் தொலைத்து நீ தேடியதை உன்னிடமேவிட்டு என்றைக்குமாக நான் பிரிந்து போகிறேன் என்று சொல்லிப் பிரிந்து போனேன் நான். அலைபேசியில் நீ அழுது கொண்டிருந்தாய். அன்று குளிர் உடல் உறையச் செய்தது. காற்று நாசி துளைத்து வழியும் கண்ணீர் காய்த்து அலைந்தது. கன்னமெங்கும் பிசுபிசுப்பு. மன ஆழத்தில் நினைவுகள் கீறிய வலி காயப்பட்ட பூனைக்குட்டி போல கத்திக்கொண்டிருந்தது. நீ தொலைந்து போனபோது அதுவாகவே வந்து சேர்ந்த நடுக்கம் தீர்ந்திருக்கவில்லை. ஒருவிதமான பதற்றமும், உடல் நடுக்கமும் என் நாட்களை கொன்று தின்றன. நான் சிதைந்தேன். சிதைந்தேன் என்பது வெகு சாதாரணமான வார்த்தை. சொற்களெல்லாம் கொல்லப்பட்ட என் காதலின் முன், நேர்மையின் முன் அர்த்தமிழந்து நின்ற நாட்கள் அவை. என்னை மரணம் மட்டுமே ரட்சிக்கும் என்று நான் சாவைத் தேடித்தரிய ஆரம்பித்தேன். பனி மீட்டர் கணக்கில் கொட்டி, ஊரே இருட்டிப்போன ஒரு நாளில் நெடுஞ்சாலையில் காரை மெகுவேகத்தில் ஓட்டி ஐந்து கார்களை மோதி, நெடுஞ்சாலையின் பக்கச்சுவர் உடைத்தும், என்னை எப்படியோ காப்பாற்றி விட்டிருந்தார்கள். காலநிலையால் விபத்து  என்று சொல்லி என் கேஸை முடித்தது காவல்துறை. உண்மைதான், காலநிலை. அந்தக் காலநிலையில் நான் என் உணர்வுகளை அப்படிப் பொழிந்தேன். காலநிலை போல் மாறிவிடும் உறவுகள் என்றால் எப்படிப் பொழிந்தும் என்ன பிரயோசனம். நான் கண்திறந்தபோது என்னிடம் என் உடல் முழுக்க காயங்களும், என் உயிரும், என் உறவுகளும் இருந்தன. நான் அவற்றுக்காக மீண்டேன். மீண்டதைவிட மீள முயற்சித்தேன்.

“நர்மதா, என்னைவிட்டிட்டுப் போறது சரி. ஆனால் என்னுடன் இரு. பேசு. என்ன செய்கிறாய் என்று சொல்லு. என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது”

“அது சித்திரவதை. துரோகம். அதை நான் செய்யமாட்டேன்.”

“இல்லை நர்மதா, நான் உன்னை விட்டிட்டுப் போகவேண்டுமெண்டு எப்பவும் நினைச்சதில்லை, எப்பவும் உன்னோட இருக்க வேணும் எண்டது தான் எண்ட விருப்பமும்.”

“வேற ஏதாவது சொல்லுங்க, இதை விட்டிட்டு,”

“நர்மதா……”

“Listen, எனக்கு எந்தக் கோபங்களும் இல்லை. நான் எப்பவும் எதிர்பார்த்ததும் எதிர்பார்க்கிறதும் நேர்மை மட்டும்தான். அதைத்தான் நான் விரும்பிறேன். எனக்கு எப்படி வலிக்கும் என்றதும், என்னை விட்டுப் போகேக்க எப்படி உங்களுக்கு வலிக்கும் என்றதும் எனக்குத் தெரியும். ஆனா நான் விலக விரும்பிறேன். விலகிறதுதான் நியாயம். என்னை விட்டிட்டுப் போயிடுங்க. திருமணம் செய்தால் தான் சேர்ந்து வாழ முடியுமென்று நான் உங்களை கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் சாதியின் பேரால் மட்டுமே என்னை விட்டுப் போக வேண்டுமென்ற உங்களை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. நான் உங்களுக்கு எதையும் எப்பவும் மறைச்சது இல்லை. இங்க பிறந்த போதும் எனக்கு சாதி பற்றி நல்லாவே தெரிஞ்சிருக்கு. அது உங்களுக்குப் பிரச்சினையில்லை எண்டுதானே பழக ஆரம்பிச்சோம். பிறகு அதுக்குள்ள எப்படி உங்கட அம்மா, அப்பா வந்தவை. இது பத்தாது என்று பிறகு உங்கட அக்காட புருசன் சண்டை பிடிப்பார். தம்பிக்கு எப்படி கல்யாணம் நடக்கும். ஒருத்தர் வீட்டையும் பிறகு போகேலாது அது இதெண்டு என்னவெல்லாம் சொன்னீங்க? நான் உங்களை ஏதாவது கேட்டேனா? என் காதலைக் காட்டி, குழந்தையைக் காட்டி உங்களை கெஞ்சிக் கூத்தாடி வாழுற வாழ்க்கை எனக்கு தேவைப்படேல.  ”

தொடர்ந்து வந்த நாட்களில் நான் உன்னைவிட்டு வெகு தூரம் போயிருந்தேன். உன் கண்ணீரும், கெஞ்சலும் என்னை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. என் நேர்மையையும், காதலையும் அடகு வைக்க என்னால் முடியாது போயிருந்தது. நினைவுகள் எல்லாம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து கொன்று போன நாட்கள் அவை. என் எல்லாத் தற்கொலை முயற்சிகளும் தோல்வியில் முடிந்து போது என் ஆயுள் மேல் நம்பிக்கை வரத் தொடங்கியிருந்தது எனக்கு. அதுவே என்னை எதையோ நோக்கி இழுத்து சென்றது.

உன்னை நான் சந்தித்த நாள் உனக்கு இப்போதும் நினைவிருகிறதா? அந்த நாளும் ஒரு கோடைகாலத்து முன்னிரவாய் இருந்தது. பார்த்து சில நொடிகளே பேசிக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது. எல்லாவிதங்களிலும் என் அப்பாவைக் கொண்டிருந்தாய் நீ. சிறுவயதிலேயே தனித்து, அன்புக்காய் அலைந்து எப்போதும் வலிகளையே வாங்கிக் கொள்ளும் எனக்கு உனது வார்த்தைகள் வாழச் சொன்னன. உனது அன்பு என்னை மீட்டெடுத்தது. எல்லாத் துயரங்களிலிருந்தும் எல்லாத் தனிமைகளிளிருந்தும் என்னை ரட்சித்து காப்பாற்றினாய். என்னுடன் அலைந்தாய். என்னை உன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு கொண்டாடினாய். உலகத்தை வேறு கண்ணால் பார்க்கத் தொடங்கியிருந்தேன். உனது காதல் என்னை இந்த உலகத்தின் உச்சியில் வைத்திருந்தது. நீ என்னை எல்லைகள் கடந்து நேசித்தாய், ஆரதித்தாய். ஆனால் என்னை மணம் முடிப்பதற்கு நீ தயாராகவில்லை. உன்னால் அது முடியாதிருந்தது. உனக்கு அதற்குள் ஒருத்தி வந்துவிட்டிருந்தாள். உன் குடும்பத்துக்காக, சாதிக்காக, சமூகத்துக்காக என்று, உனக்கென்று எல்லாருக்கும் முன்னாள் அறிமுகப்படுத்தப்பட.

எல்லா வார்த்தைகளும் தீர்ந்தபின்பு உன்னை நியாயப்படுத்த வார்த்தைகள் தேடியபடியே புறப்பட்டுப் போயிருந்தாய் நீ. உன்னைப் புறப்படும்படி நானே வழி அமைத்தேன் என்பதுதான் உண்மை. புறப்பாடுகள் தாமதப்படுத்தப் படக்கூடியவையல்ல. அவற்றை உரிய நேரத்தில் செய்துவிடுதல் கூட நிம்மதியையே தரக்கூடியன. தாழம் பூச்செடிக்குள் சரசரக்கும் பாம்பெனவும் காலையிலேயே வாசல் நிறைக்கும் முற்றத்து மல்லிகையின் வாசமெனவும் உருக்கொண்டு எழுகின்றன உன் நினைவுகள். ஒரு கைக்குழந்தையின் அறியாமையுடன் உன் கைகளைப்பற்றிக் கொண்டதும், என் கைகளை உதறி எறிந்துவிடும் கட்டாயத்தை நீ அடைந்ததும் ஒரு கணத்தில் நடந்தேறிப் போனது போல் இருக்கிறது எனக்கு. அணையாமல் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை ஒளித்து வைத்திருக்கும் அடுப்புச்சாம்பலாய் வாழ்நாளை சொட்டுச்சொட்டாய் எரித்தும் அடங்காத இந்த நினைவுகளை என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அம்மா சுற்றி சுற்றிக் கும்பிட்ட துளசிச்  செடியின் புனிதத்துடன் அவற்றை மாடத்துள் ஒளித்து வைத்து தினம் மூன்று தடவை மீள் வருகை என்று வரிசைப்படுத்தவா? இல்லை, கிளித்தட்டு விளையாட இடைஞ்சலாய் கழன்று விழுகின்றது என்று கழற்றி வேலியடியில் பாம்பே கைவிட்ட பாம்புப் புற்றுக்குள் ஒளித்துவைத்துவிட்டு பிறகு மறந்தே போய்விட்ட காற்சங்கிலி போல் மறந்து போய்விடவா? நான் என்னதான் செய்ய? சிறு சிறு குன்றென குவிந்தும், குவிக்கப்பட்டும் கிடக்கும் பனிக்குள்ளும், குளிருக்குள்ளும் உறைந்தும் மரத்தும் போய்விடும் உடலுக்குள் இருந்து எரிந்துகொண்டிருக்கும் இந்த நினைவுகளை எந்தப்பனியும் குளிரும் தணியவைக்கும்; அதுவும் தெரியவில்லை. மௌனமாய் கூடவே இருக்கிறது இரவு. தற்கொலை செய்து கொள்வதென்று நான் தேர்ந்தெடுத்த அந்த இரவும் இதே போலவே மௌனமாகவே இருந்தது. உன் மீள்வருகை இப்போதும் போல அந்த இரவும் சாத்தியப்பட்டிருக்கவில்லை. நான் இரவை துரோகித்திருந்தேன். என்னைச் செதுக்கிய இரவை காதலிக்க மறுத்து மறந்தோடியபோதும் அது மௌனமாகவே இருந்தது. உன் மீள்வருகையை அறிவிக்கும் அந்த இரவும் இப்படியே மௌனமாகவே இருக்கும் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அதை உனக்கு உணர்த்தக் கூடவே நானும் இல்லாது போயிருப்பேன் என்பதையும் நான் அறிந்தேயிருந்தேன். என் பிரசன்னம் இல்லாது போகப்போகும் அந்த நாளில் உன் வார்த்தைகளும், வாதைகளும் என்ன உணர்வு கொள்ளும் என்ற ஆச்சரியம் என்னை அலைக்கழித்தது. நான் காற்றைப்போல அந்த இரவைத் தழுவிச் செல்வேன்; உன்னை அறிவேன்; அந்த இரவின் மௌனத்தை சுகிப்பேன் என்று எனக்கு நானே சத்தியங்கள் செய்து கொண்டேன். என்னையழித்து உன்னை அழிப்பது எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சாத்தியம் என் பிரசன்னத்தால் நீ தொலைவது என்ற முடிவை நான் எடுத்திருந்தேன். உன்னில் தவறில்லை. என்னை எப்போதுமே ஏற்க முடியாத என்ற முடிவை தெளிவாகவே நீ எனக்கு சொல்லியிருந்தாய். நீயும் எட்ட முடியாத ஆழத்தை நோக்கி என் உணர்ச்சிகளும் நினைவுகளும் நீண்டிருந்தன. நாகம் காக்கும் வைரம் போல என் நினைவுகளைக் கொண்டு உணர்ச்சிகளைக் காப்பாற்றினேன். காலங்கள் பறந்தன.

பார், உன்னை இன்னும் காணவில்லை. என்னிடம் உனது இலக்கம் இல்லை. அழைப்பதென்றால் நீ தான் அழைக்கவேண்டும். எனக்கு காத்திருப்பதா வேண்டாமா என்றுகூடத் தெரியவில்லை. ஆனால் உன்னைப் பார்க்க என் மனதின் சிறு பாகம் விரும்பியிருந்தது உண்மைதான். காதலித்து, வாழ்ந்து நானாகவே தொலைத்த உன்னை, உன் காதலை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிடவேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். அதையே என் தோழியிடம் சொல்லியிருந்தேன். உனக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகின்றனவா? இருக்கும் என்று நினைக்கிறேன். உன் இந்தத் திருமணப் பேச்சு வந்து முற்றானபோதுதான் இறுதியாக நாம் பேசியது என்று நினைக்கிறேன்.

“நர்மதா”

“yeah.”

“Sorry, எடுக்க வேண்டாமெண்டு தான் சொன்னீங்க.”

“எடுத்தாச்செல்லா, சொல்லுங்க.”

“எனக்கு கல்யாணம்.”

“வாழ்த்துக்கள், எப்ப?” திகதி சொன்னாய்.

“Oh Sorry. என்னால வர ஏலாது. அண்டைக்குத்தான் நான் இங்க வேலை பொறுப்பெடுக்கிறேன்”

“பரவால்ல. நீங்க முடிந்தாலும் வர மாட்டீங்கள் எண்டு எனக்குத் தெரியும்.” நான் மௌனமாகவே இருந்தேன்.

“நர்மதா………”

“yeah, சொல்லுங்க.”

“நீங்க என்ன செய்யப்போறீங்க?”

“என்னுடைய பதிலை நான் எப்பவோ சொல்லிட்டேன். நான் என்ன செய்யப்போகிறேன் எண்டும் யோசிக்காதீங்க. I am fine, குற்ற உணட்ச்சிகளும், பாவங்கள் செய்திட்டம் எண்டு நினைச்சு அதுக்குப் பரிகாரம் தேடுறதும் வாழ்க்கை இல்லை.  எனக்கு இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் நடந்த விசயங்களுக்காக நான் கவலைப்பட மாட்டேன். அதுக்காக நினைவுகளும் வலிகளும் இல்லை எண்டு இல்லை. இருக்கு. அது எனக்கு வாழ்க்கையை சொல்லித் தருது. ஒவ்வொரு முறை உடையும் போதும் என்னை மீள மீள ஒட்டி ஒட்டி எனக்கு வெறுத்துப் போச்சு. அதுக்காக எனக்கெண்டு ஒரு வாழ்க்கையை நான் அமைக்க மாட்டேன் எண்டு இல்லை. அது எப்ப அமையுதோ, எப்ப என் உணர்வுகளும், உணர்ச்சிகளும் எண்ட சொல் கேட்காமல் தள்ளாடுதோ அப்ப நான் அதுக்கு தகுந்த முடிவை எடுப்பேன். எதைப்பற்றியும் யோசிக்காதீங்க. உங்கட வாழ்க்கையை வாழ வெளிக்கிடுங்க.”

உன் அழைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கலைந்து போன என் குழந்தைக்கு ஒரு வருடம் ஆகியிருந்தது. அந்தக் குழந்தை என்ன குழந்தை என்றும், அது பிறப்பதென்றால் எப்போது பிறந்திருக்கும் என்று நான் அப்போதும் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன். அந்த நொடியில் உன்னை பிடித்திருந்தது. என் முடிவுகளைத் தெளிவாக சொல்லி என்னை விட்டுவிலகிவிடு என்று நான் உன்னைக் கேட்டிருந்த போதும் நான் கேட்காமலே என் வாழ்க்கையில் ஒரு முடிவெடுத்து அதில் பயணிக்கும்வரை நீ காத்திருந்தாய். ஆனாலும் பார் என்ன நடந்தாலும் மனதால் உன்னை எட்டாத தூரத்துக்கு நான் சென்றுவிட்டிருந்தேன். என் வலிகளை, கவலைகளை நீ கேட்டாய். எனக்காக அழுதாய். எனக்கப் பிரார்த்தனைகளை செய்தாய். இருந்தும் உன்னிடம் மீண்டும் வரவேண்டுமென்று அவளுக்குத் துரோகம் செய்யவேண்டுமென்றும் எனக்குத் தோன்றவில்லை. நான் பிரிந்தேன். அன்று சொன்னது போலவே எப்போதைக்குமாகவே மீண்டும் தொலைந்தேன். அப்போது அது தேவையாகவிருந்தது.

பதின்நான்கு மணித்தியாலங்களும் கரைந்து போயிற்று. என் விமானத்துக்கான அழைப்பு வந்ததும், நான் திரும்பித் திரும்பி அலைபேசியைப் பார்த்தவாறே விமானம் ஏறி வந்து சேர்ந்ததும் இன்னொரு கனவு போல நடந்து போயிற்று. நீ ஏன் வரவில்லை என்ற கேள்வி என்னைத் துளைத்து, வலித்து அடங்கியும் போன ஒரு நாளில் உன்னிடமிருந்து வந்ததாக ஒரு பார்சலை அமெரிக்காவிற்கு அனுப்பியிருந்தாள் என் நண்பி. அதில் நான் விமான நிலையத்தில் பார்த்துக் கையிலெடுத்த குழந்தை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள். அத்துடன் உனது குழந்தையின் படமும். எனக்குத் தெரியும் நீ அங்கிருந்தாய் என்பதுவும், எனக்கு முன்னால் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உன்னுடையதாகத் தான் இருந்திருக்க வேண்டுமென்பதும். உன்னை இன்னும் நேசிக்கத் தோன்றியது. காதலெல்லாம் கரைந்து, காமமெல்லாம் வடிந்த நேசம் உன் மேலும் உன் குழந்தை மேலும். என் குழந்தையை ஒரு தேவதை உன்னிடம் சேர்த்த உணர்வு தோன்றியது. உன்னை அழைத்தேன்.

“கடவுளே, என்ன அதிசயம்”

“Thanks”.

“எதுக்கு?”

“என் குழந்தையைப் பெற்றெடுத்ததுக்கு, வளர்க்கிறதுக்கு.”

“நர்மதா……..”

“நான் பார்க்காத அந்தக் குழந்தை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த நிம்மதி இப்ப.”

“நர்மதா, உனக்கெண்டு ஒரு வாழ்க்கை தேடிக்கொள்ளு, உனக்கெண்டு குழந்தைகள்”

“தேவையில்லை. ஒரு குழந்தையை வளர்க்க ஏலாமப் போனது ஏலாமப் போனதாகவே இருக்கட்டும். என் உயிரை உருக்கித்தான் நான் உங்களைக் காதலிச்சனான். அப்படி இன்னொருத்தனைக் காதலிப்பேன் எண்டு எனக்குத் தெரியேல. துரோகமும் எனக்கு வரேல. அது முடியுமெண்டு தெரிஞ்சிருந்தா நீங்க கேட்கும் போது திரும்ப உங்களிட்டையே நான் வந்திருப்பேன். நீங்க  என்னுடன் இருக்கும் மட்டும் எனக்கு நேர்மையாத்தான் இருந்தீங்க, நானும்தான். நேர்மையாகவே பிரிய வேண்டுமென்றுதான் நான் பிரிந்து போனேன். எனக்கெண்ட வாழ்க்கையை இன்னொருத்தரில இப்ப தேட முடியாது. எனக்கு இப்போதைக்கு இது போதும். பிறகேதும் தோன்றினால், குடும்பம், சமூகம், அவையிவை எண்டு எதையும் பார்க்காமல் என்னை மட்டும் நேசிப்பவனைக் கண்டறிந்தால் அதைப்பற்றி யோசிக்கிறேன்.”

நீ மௌனமாக இருந்தாய். அப்பா அப்பா என்று உன் குழந்தை உன்னை அழைத்துக் கொண்டு வருவது கேட்டது.

“கதைக்கப் போறீயா?”

“இல்லை, தேவையில்லை”

“ஏன்?”

“என் குழந்தையைப் பார்க்கவில்லையே தவிர அவளது குரலைக் கேட்டிருக்கிறேன். உருவம் உங்களுடையதாகவும் குரல் எனதாகவும் இருந்துவிட்டு போகட்டும்.”

கண்களை மூடினேன். இந்த வாழ்க்கை அபூர்வமானது. எப்படியெல்லாம் உறவுகளை மாற்றிவிடுகிறது. எனக்கு இன்னும் இன்னும் வாழ வேண்டுமென்று தோன்றியது.  உனது பெண் குழந்தை வளர்ந்து என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக, இன்னும் சில மாதங்களில் பிறந்துவிடப் போகும் உனது இரண்டாவது குழந்தையைப் பார்ப்பதற்காக, எனக்காக, இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தத் தனிமைக்காக; வாழலாம். வாழவேண்டும். அப்போ, காதல், காமம்; அது கிடக்கட்டும். வாழ்க்கை அதையும் தாண்டியது.

மயூ-கனடா

மயூ

(Visited 229 times, 1 visits today)