கீறல்கள்-சிறுகதை-பூங்கோதை

பூங்கோதைமென் நீல நிறத்தில் உடை அணிந்த தாதியர்கள் கம்பீரமாக கூடவே நடக்க, தன் கழுத்து பட்டையை சரி பார்த்துக் கொண்டே வந்த நடுத்தர வயதை தாண்டிய அந்த வைத்தியரின் முகத்தில்  தெரிந்த அந்த அமைதியில் அவளுக்கு  தன்னையறியாமல் ஒரு வித நம்பிக்கை பிறந்தது.  அவருடன் கதைப்பதெற்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட  அறையினுள் வரும்படி தாதியர்களில் ஒருவர் மிகவும் பௌவியமாக அழைத்த போது அவளுக்கு  இதயத்தை யாரோ பிராண்டுவது போன்ற உணர்வில் கண்ணில் நீர் வருவேன் வருவேன் என எட்டி பார்த்தது.  அழுவது என்பது கோழைத்தனம் என்பதை நம்ப மறுத்த மனதின் மீது ஒரு நாளுமில்லாத கோபம் பட்டென வந்து போயிற்று.

“அம்மா வாங்கோ, உள்ளுக்கு போவம், எல்லாம் சரியாய் போயிடும்!” அம்மாவின் கையை ஒரு குழந்தையின் கையை தன் கைக்குள் கோர்த்துக் கொள்வது போன்ற அளவில்லா பாசத்துடன் இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.  அம்மாவின் கைகள் இதமான சூட்டோடு இலேசாக வியர்த்து நடுங்கத் தொடங்கியது.

“தெய்வமே ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை, யாருக்கு நான் என்ன செய்தனான்? ” அம்மா மிக மிக மெதுவாக முணு முணுத்தது அவளுக்கு மிகத் தெளிவாக கேட்டதில் அவளுக்கும் அந்தக் கவலை தொற்றிக் கொண்டது. வர வர அம்மாவின் கவலைகளுக்கு அளவேயில்லாமல் போனது ஏனென்று யோசித்து, அதுவும் புரிபடவில்லை.

“நான் உள்ளுக்கு வராமல் இந்த கதிரையில இருக்கவோ? ” அம்மா பக்கத்தில் இருந்த வைத்தியசாலை கதிரையைக் காட்டினாள்.

“என்னம்மா கதைக்கிறீங்கள், நீங்கள் இல்லாமல் நான் மட்டும் போய் டொக்ரறிட்ட   என்னத்தை கதைக்கிறது?”

அம்மாவும் தாதிமார்களும் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டனர்.  ஒன்றுக்கு மூன்று தாதிமார்கள் போதாதென்று எதிர் காலத்தில் வைத்திய சேவைக்கு தம்மை அர்பணிப்பதற்காக என தம் கல்வியை மேற்கொள்ளும் இருவரும் சேர்ந்து ஐவராக இருந்த அந்த வைத்தியக் குழு அம்மாவை மிகப் பொறுமையுடன் உள்ளே அழைத்து செல்ல முயல, நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அம்மா நிம்மதியாக பெருமூச்சு விட்டாள். தாதிமார்களும் அமைதியாகவே பின் தொடர்ந்தார்கள்.

0000000000000000000000000000000000

காயத்ரி  பாடல் ஒன்றை ஆசையுடன் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள்.  வெளியே படர்ந்திருந்த  பனிக்காலத்தின் குளிர் காற்று கதவின் இடுக்கினூடே வீடெங்கும் பரவுவது போல ஒரு உணர்வில் அவள் உறைந்திருந்த அந்த நிமிடங்களில் அவள் வீட்டுப்  பூனைக்குட்டி வழமை போலவே வெளிக்கதவை எட்டி எட்டி தட்டும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  எழும்பிப்  போய் என்ன ஏதென்று பார்க்க சோம்பல்  விடாத போது அம்மாவின் மீது கோபமாக வந்தது. வர வர அம்மாவுக்கு எல்லாத்துக்கும் ஒரு அசதியும் அழுகையும் தான். ஏன் திடீரெண்டு இப்படி ஆனாள் என்ற காரணத்தைக் கண்டறிந்து, மருந்துகள் எடுக்கச் சொல்ல வேணும் என மனம் அடித்துக் கொண்டது. பெரியம்மாவிடம் அம்மாவிற்கு தெரியாமல் விடயத்தை சொல்லியாயிற்று. இந்த வாரம் எப்படியாவது வருவதாகக் கூறியிருக்கிறா. பார்க்கலாம், காயத்ரி மனதை தேற்றிக்கொண்டாள் .

“அம்மா, கதவை திறந்து விடுறீங்களோ ? பாவம் குளிருக்குள்ள பூனைக்குட்டி விறைக்கப் போகுது !”

அம்மா விசும்பும் சத்தம் கேட்டது. அம்மா வர மாட்டாள், அவளுக்கு என்ன நடந்தது எண்டு யோசிச்சு யோசிச்சு எனக்கு தான் தலையிடி கூடுதேயல்லாமல் அம்மாவிடம் ஒரு மாற்றமும் தெரிந்த பாடில்லை. அப்பாவிடமும் கதைக்க முடியாது, அவருக்கும் அம்மாவுக்கும் தொடர்ச்சியான கருத்து மோதல்கள் வந்து கொண்டேயிருந்ததில் அம்மா சம்பந்தமான எந்த விடயங்களும் அவர் காதில்  போட்டும் பிரயோசனமில்லை என்பதில் அவள் தெளிவாகவே இருந்தாள். அவருக்கு அவர் குடியும் அதற்கான பணமும் உண்டானால் உலகில் வேறு எதுவுமே மனதில் பதியாது என்பதோடு அம்மாவுக்கு அவரால் உண்டான அவஸ்தைகள் ஆயிரம் என்பதையும் காயத்ரி அறிவாள். அம்மா பாவம், அவள் படும் துயரத்தை துடைக்கும் வழி தெரியவில்லை என்பதே ஒரு வித கீறலாய் மனதில் பதிந்து போனது. எதற்கும் நாளைக்கு பெரியம்மா வரட்டும், அவவோட கதைச்சு எப்படியும் ஒரு வழி பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்ததில் இருந்த இடத்திலேயே தூங்கிப்  போனாள்.

“அம்மாடி எழும்பம்மா !  காயத்ரி காயத்ரி………….!”

தூக்கி வாரிப் போட்டதில் அம்மா தன் முன்னே நின்று தன்  கால்களைப் பார்த்தவாறே நின்றது மலைப்பைத் தந்தது.

“எங்கயிருந்து இவ்வளவு கீறலும் வந்தது? இரத்தம் வரும் வரைக்கும் கீறித் துலைச்செல்லோ இருக்கு!”

காயத்ரியின் சிவந்த பாதங்கள் இரண்டிலும் கீறல்கள் ஒரு மென்மையான ரோஜா மலரின் இதழ்களை யாரோ கூரிய கத்தி கொண்டு பிராண்டிப் பார்த்தது போன்ற தோற்றத்தில் இருக்க, அம்மாவின் அழகிய முகம் மீண்டும் மூட்டம் கட்டி, அந்த அழகான முட்டைக் கண்களில் கண்ணீர் சேர்ந்து விழுவேன் விழுவேன் என அச்சமூட்ட, அவளுக்கு மீண்டும் அயர்ச்சி வந்தது.

” பூனைக்குட்டி கத்துது எண்டு கூப்பிடேக்கை வரத்தெரியேல்லை , இப்ப அழுது  என்னத்தைச் செய்யிறது ? அது பாவம், வெளியில ஒரே குளிர் எல்லோ ?”

“நான் தூக்க அதுக்கு என்னை பிராண்டிரது  தானே வேலை?”

காயத்ரி அம்மாவை சமாதானம் செய்ய முயல அம்மாவின் கண்களில் தயாராக நின்ற கண்ணீர் குபுக்கென்று அவவின் கன்னங்களில் வடிந்ததை தாங்க மாட்டாதவளாய் காயத்ரி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பூனைக்குட்டி செத்துப் போய் ஒரு வருடம் ஓடிபோச்சுதடி ராசாத்தி!” அம்மாவின் குரல் அடைத்துப் போய் அவளுக்கு கிணற்றுக்குள் இருந்து கதைப்பதை போல அசரீரியாய் விழுந்தது.

அம்மா ஏன் இப்படி எல்லாவற்றுக்குமே ஒரு புதுக்கதை புனைகிறாள் என்பது வேடிக்கையாக இல்லாமல் ஒரு வித பயத்தையே அவளுக்கு ஏற்படுத்தியது.

“அம்மா நாளைக்கு பெரியம்மா வாறா, நாளைக்கு ஒரு இடமும் போயிடாதேயுங்கோ !” காயத்ரிக்கு பெரியம்மா வாறா என்பதே பெரியதொரு ஆசுவாசத்தை ஏற்படுத்தியது.

எப்படியாவது அம்மாவை முன்பு போன வைத்தியரிடம் போவதற்கான ஆயத்தங்களை செய்து தரும்படி குடும்ப வைத்தியரைக் கேட்க வேண்டும். அவர்  ஒரு நல்ல சீவன், போன தடவையும் அம்மா வர மாட்டன் எண்டு அடம்  பிடிக்கேக்கை,  ஏதோ ஒரு மாதிரி மனுஷன் எனக்கெண்டு  சொல்லிக்கில்லி   என்னோடை  சேர்த்து இன்னொரு வைத்தியசாலைக்கு அனுப்பிப் போட்டுது.

காயத்ரி தன் கீறலை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். வலித்தது! இளவேனில்க் காலத்தின் ஆரம்ப காலத்தின் சூரிய உதயம் காயத்ரிக்கு மிகவும் பிடித்த விடயங்களில் ஒன்று. அவள் படுக்கை அறையோடு மெதுவாக பாடிக்கொண்டிருந்த பறவைகள் சிறகடித்துப் பறந்த ஒலி கேட்டு துயில் நீங்கி எழுந்து, சத்தமின்றி பாதங்களை நிலத்தில் வைத்த போது தான் அவளுக்கு அவள் வீட்டுப் பூனைக்குட்டியின் மியாவ் என்ற ரீங்காரம் காதில் விழுந்தது.

“அம்மாவின் காதுகளுக்கு கேளாமல் கீழே இறங்கிப் போக வேணும், பால் கொஞ்சம் வார்த்து வைத்து பூனைக்குட்டியின் சாப்பாட்டையும் வைத்து விட்டால் அம்மா நித்திரையால  எழும்ப முதல் அது தன்ர  வேலையை முடிச்சுக் கொள்ளும் !” காயத்ரி சந்தோசமாக  எண்ணிக்கொண்டாள் .

“காயத்ரி காயத்ரி, உங்க என்ன ராசாத்தி செய்யிறாய் ?”

அம்மாவுக்கு காது அநியாயத்துக்கு தேவை இல்லாத நேரத்தில பயங்கரமாய் வேலை செய்து விட்டிடுமே, அவளுக்கு சிரிப்பாய் வந்தது. வாய் விட்டுச்  சிரித்தாள். மனம் லேசாகியதில் விபரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சி உடல், உளம் எங்கும் பரவி அவளை ஆட்கொள்ள முயற்சித்த அந்தக் கணத்தில் பூனைக்குட்டி அவளைச் செல்லமாக உரசியது.

“நான் கூப்பிட்டது கேக்கேல்லையோ?”

அம்மா அதற்கிடையில் தன் படுக்கை அறையிலிருந்து கீழே எழும்பி வந்து விட்டா.

“இதென்ன திரும்பவும் கீறல் ? அதுவும் கையில………?”

காயத்ரிக்கு அம்மாவுக்கு விளக்கம் கொடுக்க விருப்பமில்லை, தேவை இல்லாமல் எதையாவது சொல்லுவாள், அழுவாள். அம்மா அழுவதை பார்க்க காயத்ரிக்கு அழுகை அழுகையாய் வரும்.

“அம்மா சும்மா சும்மா ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ, இண்டைக்கு பெரியம்மா வர நாங்கள் ஒருக்கால் எங்கட டொக்டரிட்ட போவம்!”

“பெரியம்மாவிட்ட ஒண்டும் சொல்லிப் போடாதை. அந்த மனுசிக்கு ஒரு கதையை சொன்னால் ஊரெல்லாம் சொல்லிப் போட்டு தான் மற்ற வேலை பார்க்கும் !” அம்மா எச்சரித்தாள்.

“சரி சரி நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. நான் ஒண்டும் பெரியம்மாவோட கதைக்கமாட்டன்.”

காயத்ரி வாக்கு கொடுத்தாளே தவிர மனம் முழுவதும் நாளைக்கு பெரியம்மா வந்ததும் எப்படியும் அம்மாவை டொக்டரிடம் கூட்டிப் போவதிலேயே குறியாக இருந்தது.

அம்மா காயத்ரியின் கையில் இருந்த கீறலைப் பார்த்தாள். காயத்ரிக்கு வலித்தது .

“பூனைக்குட்டி செத்து போச்சுது ராசாத்தி!”

அம்மா உறுதியாகச் சொன்னாள். காயத்ரிக்கு அம்மாவுடன் தர்க்கம் பண்ணுவதில் பிரயோசனம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. தன் மேல் சட்டையின்  நீண்ட கைகளை இழுத்து தன் கைகளில் இருந்த கீறல்களை மறைக்க முயற்சித்தாள்.

அடுத்த வீட்டில் புதிதாக வந்திருக்கும் மனிதர் கதவைத் தட்டிய போது ஓடி வந்து கதவைத் திறந்த அம்மா மீது காயத்ரிக்கு கோபமாக வந்தது. அவர் தான் அப்பாவின் வேலைக்கு உலை வைத்த பெரிய மனுஷன் என்பதை அம்மா நம்ப மறுத்தாள். இதற்கு மேல் விளக்கம் கொடுத்தாள் விசும்பி அழுவாள் என்ற நிதர்சனத்தில் காயத்ரி தன் வார்த்தைகளைக் கட்டுப்படுத்தினாள்.

“அவருக்கும் அப்பாவின்ர வேலை போனதுக்கு எந்த சம்பந்தமும் இல்லை காயத்ரி, இவர் முந்தி எங்கயோ தொலைவான இடத்தில வேலை செய்தவராம், நல்ல மனுஷன் …”

என்று அம்மா சொல்லியபடியே அவருடன் கதைத்து விட்டு கதவை சாத்தி விட்டு வந்தாள்.அந்த மனுஷனை நான் முந்தி கண்டிருக்கிறன் எண்டு சொன்னால் நம்ப மறுக்கிற அம்மாவை என்ன செய்வது ? ஏன் அம்மா இப்படி ஒரு விதமாக மாறிப்போனாள்?

இதோ பெரியம்மா சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்து விட்டாள். என்னை இருகக் கட்டிப் பிடித்து முத்தம் இட்டாள், மனதிற்கு  ஒத்தடம் கொடுத்த அந்த முத்தம் காயத்ரிக்கு மிகவும் பிடித்ததாய் இருந்தது .

“அம்மா பெரியம்மா வந்திட்டா, டீ வேணுமெண்டால் குடிச்சுப்போட்டு இரண்டு பேரும் வெளிக்கிடுங்கோ டொக்டரிட்ட போவம்!”

“ஏன் காயத்ரி இப்ப பெரியம்மாவைக் கரைச்சல் படுத்தினனீங்கள் ?” அம்மா சின்னதாகக் கோபித்தாலும் காயத்ரியின் சொல் கேட்டு உடை மாற்றி புறப்பட்டது அவளுக்கு நிறைய ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“சொன்ன நேரத்துக்கு ஊபர்காரன் வந்திட்டான்.”

காயத்ரியின் குரல் கேட்டு அம்மாவும் பெரியம்மாவும் ஏதோ குசு குசுத்துக் கொண்டிருந்ததை இடையில் நிப்பாட்டி விட்டு சமையல் அறையில் இருந்து வெளிப்பட்டார்கள்.

இவர்களுடைய கார் வைத்தியரின் பயிற்சிச் சாலையில் (Doctor’s Practice) வந்து நிற்கவும், ஒரு மருத்துவ அவசர ஊர்தி (Ambulance)  ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“ஹலோ காயத்ரி எப்பிடி இருக்கிறீங்கள் ? ”

என்று கேட்ட படியே வெளியே வந்த வைத்தியரின் முகத்தில் அவர் புன்னகையை மீறித் தெரிந்த ஒரு பதட்டம் காயத்ரிக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. முன்பும் இப்படிதான் ஒரு தரம் நடந்தது என்பது சின்னதாய் மூளையில் பொறி தட்டியது. சில ஞாபகங்கள் வந்து போயின.  பூனைக்குட்டி உண்மையாகவே இறந்து போனதும் பக்கத்து வீடு மாமாவுக்கும் அப்பாவின் வேலை பறி போனதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதும் கூடகூட திடீரென மின்னலாய் வந்து போனது. எல்லாமே குழப்பமாய் மனதில் வர, அம்மாவின் கவலைக்கும் நான் தான் காரணம் என்பதும் கூட வந்து தொலைத்த போது பழையபடி அவள் கைகளில் கீறல்களை அவள் விரல்களே ஏற்படுத்த தொடங்கின.

“நான் நீங்கள் வாறதுக்கு முன்னமே எல்லா ஏற்பாடும் செய்திட்டன், வழமையான இடத்துக்கு தான் போக வேண்டியிருக்கும். எல்லாம் சரியாகிடும்.” வைத்தியர் அமைதியாக அம்மாவிடம்  கூறினார்.

அம்மா நிர்ச்சலனமாக  நின்றிருந்தாள், ஆனால் அவள் கண்களில் வழமையான கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. பெரியம்மா அம்மாவை ஆதரவாகத் தாங்கிப் பிடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாள்.

அம்மாவும் பெரியம்மாவும் வைத்தியரின் பயிற்சி சாலைக்கு முன்  நின்றபடியே எனக்கு கையசைப்பது வண்டியின் சாளரத்தினூடே தெரிந்தது. வண்டியின் உள்ளேயிருந்த துணை மருத்துவர் (Paramedic)  ஒருவர்

ஆதூரத்தோடு என் கைகளில் இருந்த கீறல்களை பார்வையிட மனத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான கீறல்களோடு நான் வடித்த கண்ணீர் அவர் கைகளையும் நனைத்தது!

பூங்கோதை- ஐக்கிய இராச்சியம் 

(Visited 405 times, 1 visits today)
 

One thought on “கீறல்கள்-சிறுகதை-பூங்கோதை”

Comments are closed.