புன்னகை-சிறுகதை-பூங்கோதை

பூங்கோதைஅந்த சித்திரை மாத, வசந்த காலத்தின் ஆரம்பத்தில் அந்த வீதியின் இருபுறங்களிலும் கொத்துக் கொத்தாய் மலர்ந்து மரங்களை மூடியிருந்த வெள்ளையும் இளம் சிவப்புமான மலர்கள் அவளை வரவேற்றன. இன்று புதிதாய் மலர்ந்திருந்த ஒரு குழந்தையின் ஸ்பரிசத்தை அனுபவிக்கப் போகிறாள் என்பது அவள் மனத்தில் இன்னும் ஒருபடி கூடுதலான உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அவளுக்குள் தோற்றுவித்திருந்தது. வீட்டு முகவரியைச் சரி பார்த்து தன் வண்டியை மிக அவதானத்துடன் நிறுத்தியவளுக்கு தன் பின்னால் திடீரென்று வந்து, தன் கருநீல நிற பெண்ஸ் வண்டியை இடிக்குமாப் போல் கிறீச்சென்று நிறுத்தியவன் மீது லேசான கோபம் வந்தது. அதை உதாசீனம் செய்து விட்டு, இன்று தான் பராமரிக்கப் போகும் தாய்க்கும் சேய்க்குமான உத்தியோகபூர்வ ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டாள். பிடித்த பணியைக் கடமையாக்கி கொள்வது எல்லோருக்கும் இலகுவில் கிடைப்பதில்லை என்பது அவளுக்கும் தெரிந்தேயிருந்தது. அவள் பிறக்கும் போதே தாதியாய்த் தான் பிறந்திருப்பாள் போல என அவள் சினேகிதிகள் சொல்லும் அளவுக்கு பணிவும், கருணையும் அவளுக்கு இயல்பானதாயிருந்தது.

தன் வண்டியை விட்டிறங்கி அதன் கதவைச் சாத்தும் முன்னரே தனக்குப் பின் அவசர அவசரமாக நிறுத்திய பென்ஸ் வண்டியிலிருந்து அதே அவசரத்துடன் இறங்கிய கம்பீரமான ஒரு இளம் வாலிபன் ஒருவன் அதே அவசரத்துடன் தான் போக வேண்டிய வீட்டுக்கு சரியாக எதிரே இருந்த வீட்டுக்கதவைத் தட்டுவதையும், ஒரு அழகான கர்ப்பிணிப் பெண்ணொருத்தி முன் கதவைத் திறப்பதையும் பார்த்தபடி இவள் வீதியை கடந்தாள்.

இந்த தாயும் சேயும் பிரசவத்தின் போது சில மருத்துவ ரீதியான சிக்கலை அனுபவித்திருந்ததால், அவர்கள் இருவருக்கும் கட்டாயமாக சில கவனிப்புகளை வழங்க வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக இன்னும் இரண்டு வாரங்களுக்கேனும் வருகை தர வேண்டியிருக்கும். இவள் தான் போக வேண்டிய வீட்டுக்கதவைத் தட்டி, அவர்கள் அதைத் திறக்க முன்னரே தன் வண்டியின் பின்னுக்கு நிறுத்தியிருந்த பென்ஸ் வண்டி உறுமலுடன் பறந்தது அவளுக்கு சிறு ஆச்சர்யமாகப்பட்டது! அதன் பின் தொடர்ந்து வந்த இரு வாரங்களும் மதிய நேரத்தில் இந்த வீட்டுக்கு அவள் வருகையும், அதே நீல நிற பெண்ஸின் கிறீச்சிடலும் அவளுக்கு பழக்கமாகிப் போயின.

00000000000000000000000000

குழந்தை திரும்ப திரும்ப உதைத்ததில் வயிறு இதமாக வலித்தது. கர்ப்பமாகி அதற்குள் ஐந்து மாதங்கள் ஆகி விட்டதை பூசினாற் போலிருந்த அவள் வயிறு பறைசாற்ற தாய்மையின் பூரிப்போடு வயிற்றிலிருந்த குழந்தையை மெதுவாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அவள் துல்லியமாக உணர்ந்து பரவசமான போதும் அடிக்கடி ஏற்படும் அந்த தலைவலி அவளை துன்புறுத்தியது.

அது மட்டுமில்லாமல் கர்ப்பிணி என்றும் பாராது தன் காலில் விழுந்து வணங்கச் சொன்ன அவன் குரூரம் அவள் இடுப்பில் வலியைத் தோற்றுவித்திருந்ததில், வண்டியில் சரியாக இருக்க சிரமப்பட்டாள். விழுந்து வணங்கிய போது, அவன் காலில் இருந்த மண் நிறம் கலந்த சிவப்புத்தோல் செருப்போடு தானும் சேர்க்கப்பட்டதாய் உணர்ந்தாள். இந்த வைபவம் எங்காவது அவளை வீட்டிற்கு வெளியே கூட்டிச் செல்லும் போது வழமையாக நடக்கும் ஒரு திருவிழா தான்.

அவமானத்தில் பொங்கிய கண்ணீரை அழக்கூடாதென்ற இறுமாப்பு இறுக்கி வைத்தது. எதிலும் மனம் லயிக்கவில்லை, ஒவ்வொரு நிமிடமும் நெருஞ்சி முள்ளாய் மனத்தை தைத்தெடுத்தாலும் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த சீவனுக்காக தானும் வாழ வேண்டும் என்ற வேட்கையும் இடையிடையே அம்மாவாகப் போகிறேன் என்பது ஒரு அபரிமிதமான, விபரிக்க முடியாத ஒரு எண்ணக்கலவையையும் அவளுள்ளே தோற்றுவித்து, அவளை பெருமிதப்படுத்தியதில் எல்லா புறவலிகளும் அதனுடன் தோற்றுப் பின்வாங்கின.

இதோ இறங்குமிடம் வந்து விட்டது. வண்டிச் சாரதி அறிவித்தபடி இறங்கி, மரியாதையோடு வண்டியின் கதவுகளைத் திறந்து விட, அவன் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி தன்னோடு ஆதரவாய் அணைத்தபடி நடந்தான்.

செங்கம்பள வரவேற்பில், அவன் பிரபல்யம் பளீரிட, புகைப்படக்கருவிகளும் அதனுடன் சேர்ந்து கொண்டதை தன் கைகளை உயர்த்தி ஆமோதித்தபடி அவளை அனைத்தும் அணைக்காமலும் நாற்காலிகளை நோக்கி அவளுக்கேற்றாப்போல் மெதுவே நடந்த போது புகைப்படக்கருவிகள் மீண்டும் பளீரிட்டன. அவளை ஆதூரத்துடன் தோள் சாய்த்து, முதலில் அமரும்படி சைகை செய்த போது அவன் வாசகப்பெருமக்கள் பெருமை பொங்கி வழிய அவனைப் பார்த்துக்கொண்டதை அவன் எவருக்கும் தெரியாதபடி சரி பார்த்துக் கொண்டான்.

பெண்ணியவாதிகளாக மேடையில் ஏறி முழங்கியவர்கள் அவர்கள் இருவரையும் வாழ்த்திய போது, அவள் வலியோடு இருக்கச் சிரமப்பட்டதிலும் பலவிதமான கோணத்தில் இருந்து பார்த்ததிலும் கால்கள் தடுமாறி, புடவையில் சிக்கிக் கொண்டது. அத்தனை பார்வையாளர்களின் முன்னும் செய்வதறியாது, சாதாரணமாக இருப்பதற்கு பிரயத்தனப்பட்டு, வலி மறைக்கும் அந்த அழகான புன்னகையை அவள் சிந்த விட்ட அந்த நொடிப்பொழுதில் புகைப்படக்கருவிகள் அவர்கள் இருவரையும் ஆதர்சனத் தம்பதிகளாக்கிக் கொண்டன.

அவள் தன் வலியை மறைத்து, தன் முன்னே கடலாகத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தாள். பார்வையாளர்களில் ஒன்றாய் மேடையோடு, முன் வரிசையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் பார்வையை அவள் கண்கள் சந்தித்த போது, அதன் கண்களில் திடீரெனக் கண்ணீர் முட்டி, பட்டுப்பாவாடையில் பட்டுத்தெறித்தது. அவளுக்குள்ளிருந்த வலியும் வேதனையும் மீண்டும் பீரிட்டுக் கிளம்பி அவள் கண்களிலும் எட்டிப்பார்த்தது.

யாருக்காவது சொல்லியழ எந்த சந்தர்ப்பமும் கிடைக்காமலிருப்பது எல்லாவற்றையும் விடக் கொடுமையாகப்பட்டது அவளுக்கு. வாயைத்திறப்பதில் இருந்த சிக்கல்கள் தான் தனக்கு அடிக்கடி அழவேண்டும் போலிருக்கிறதா எனத்தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். நடப்பதெல்லாம் தலைக்குள் நம நமவென ஒரு வித எரிச்சல் கலந்த வலியைத் தோற்றுவித்ததில் நினைவுகள் அடிக்கடி தப்பி நழுவின. அவளிருந்த மேடைக்கு முன்னே கூடியிருந்த மக்களின் கரகோசத்தில் அவள் மீண்டும் தன்னிலை திரும்பி உடனடியாக தன் புன்னகையைத் தவழ விட்டாள். அவனும் சேர்ந்து புன்னகைத்தான்.

இனி வீட்டுக்குப் போகலாம் என்பதும் நடிக்க வேண்டிய அவசியமில்லாமல் மனதின் ஓட்டத்திலேயே இழுத்துச் செல்லப்படுவதும் அவளுக்கு வெளிப்புற செயற்கை வாழ்வை விட மிக இலகுவாகவிருந்தது. அது அவள் உலகம், அவள் தான் இளவரசி. மூச்சை ஆழமாக இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“என்னத்துக்கு இப்ப முகத்தை இப்பிடி வைச்சிருக்கிறாய்? “ அவன் காதோடு கர்ச்சித்தான்.

“ஒண்டுமில்லை, தலை லேசாச் சுத்துற மாதிரியிருக்கு!”

“சுத்தும், சுத்தும், அரைப்பைத்தியம் எண்டு தெரியாமல் கட்டினது எண்ட பிழைதான். “ மீண்டும் காதோடு உறுமினவனை அவள் புதினமாக நிமிர்ந்து பார்த்தாள். என்ன சொல்கிறான்? ஒன்றுமாய்ப் புரியவில்லை.

‘இப்ப கொஞ்ச காலமாய் இதே வேலையாய்ப் போச்சு உங்களுக்கு’ வாய் வரை வந்த வார்த்தைகள் அவன் முகத்தில் கொப்பளித்த கோபத்தில் கரைந்து போக அவளுக்கு மீண்டும் களைப்பாய் வந்தது.

சில மாதங்களாக இதே கதைதான். எவ்வளவு யோசித்தும் சில சம்பவங்களை அவளால் அலசிப்பார்க்க முடியவில்லை. எங்கோ ஒரு முடிச்சு விழுகிறது, அதை அவிழ்க்க முயற்சித்த போது அது இறுகுவது தெரிந்து விரக்தி ஏற்படுகின்றது.

மீண்டும் யோசித்துப் பார்த்தாள். ஒரு நாள் சமையலில் மூழ்கியிருந்தவளை கதவு தட்டும் சத்தம் திடுக்கிடப் பண்ணியது, ஓடிப் போய் திறக்க முடியாவிட்டாலும் போட்டது போட்டபடி, முடிந்தவரை துரித கதியில் இயங்கி, கதவைத் திறந்தவளை தள்ளி விழுத்தாத குறையாய் உள்ளே வந்தான். வந்தவன் நேரே சமையலறைக்குப் போய் அவளின் பாதியில் நின்றிருந்த சமையலை நோட்டம் விட்டவாறே,

“எனக்கு இண்டைக்கு இந்தக் கறிகளோடய் வெண்டிக்காயை வதக்கி குழம்பும், பப்படமும் பொரிச்சு வைச்சால் நான் பின்னேரம் வேலையால வந்து சாப்பிடுவன்!”

உத்தரவு பறந்து வர அவள்,

“அதுக்கென்ன நான் அப்பிடியே செய்யிறன்!” என்று பயத்தில் முணுமுணுத்து வைத்தாள்!

மொழி புரியாத நாடு, நட்புக்கள் இல்லா வாழ்க்கை, எழுதப்படாத சட்டமாய் வீட்டுக்காவல் ! வறுமைக்கு வடிகோலாய் அவள் அழகு திருமணச்சந்தையில் விலை போன போது அவள் எதிர்காலக் கனவுகள் எல்லாம் சுக்கு நூறாகியிருந்ததில் மனிதர்கள் யாருமற்ற வெறுமைதான் அவள் திருமண வாழ்வாகியிருந்தது.

அவன் உறுமுவது கூட அவளுடைய செவிகளுக்கு கேட்பதெற்கென்று ஒன்று இருப்பதாய் சந்தோசப்பட்டுக் கொண்டாள். அவன் உறுமிய கையோடு எதையோ தேடி எடுத்துக் கொண்டு கதவை அறைந்து சாத்தி, தன் காரை எடுத்துக் கொண்டு போவது அவளுக்கு கேட்டபோது அவள் அவன் கேட்டவற்றையெல்லாம் சமைக்கத் தொடங்கியிருந்தாள். அன்று மாலையிலிருந்து தான் இந்தக் குழப்பம் தொடங்கியிருந்தது. வேலை முடித்து வந்தவனுக்கு மேசையில் அவன் கேட்ட உணவைச் சூடாக்கி வைத்தாள்.

குளித்து விட்டு வந்தவன், தன் உணவுத்தட்டை வெறித்துப் பார்த்தான்,

“இதென்ன சாப்பாடு? இதையெல்லாம் சாப்பிட வேணுமெண்டு எனக்கென்ன தலையெழுத்தோ? “ மீண்டும் உறும அவள் பயத்தில் உறைந்து போனாள்.

“நீங்கள் தானே இதெல்லாம் சமைக்கச் சொன்னனீங்கள்? “ ஒரு ஒரு வார்த்தையாய் சொல்லி முடிய முதலே தட்டுப்பறந்து சுவரில் மோதி உணவெல்லாம் நாலாபக்கமும் சிதறி விழுந்தது !

“நான் எப்ப சொன்னனான்? “

“நீங்கள் மத்தியானம் வீட்டுக்கு வரேக்க இதெல்லாம் சமைச்சு வைக்கச் சொன்னனீங்கள்!” அவள் பயத்துடன் சொன்னாள்.

“நான் எப்ப வீட்டுக்கு வந்தனான்? உன்னை மாதிரி எனக்கும் தொழில் இல்லாமல் சும்மா இருக்கிறன் எண்டு நினைச்சியோ? “

தொடர்ந்தான், “ என்ர வேலை என்ன உதில கூப்பிடு தூரத்தில இருக்கே வீட்டுக்கு வந்து வந்து போறதுக்கு? போய்ச்சேரவே கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்துக்கு மேல எடுக்கும், உன்ர கொப்பரிண்ட கொம்பனியில தானே நான் வேலை செய்யிறன்? “

அவன் கோபத்தில் அவசர அவசரமாக கதிரையை விட்டு எழும்பி, தன் கோட்டையும் சாவிக் கொத்தையும் எடுத்துக் கொண்டு சூறாவளியாய் வீட்டை விட்டு வெளியேறினான்.

அவளுக்கு குழப்பம் அதிகரித்தது. சிலவேளை குழந்தை வயிற்றில் இருப்பதால் மனக்குழப்பம் வருகிறதோ என்று யோசித்ததில் அவளுக்கு தலைவலி தான் அதிகரித்தது. அப்போ மத்தியானம் அவன் வீட்டுக்கு வந்து போனது மனப்பிரமையா? இருக்காதே! கண்களால் கண்டு, காதால் கேட்ட விசயமெல்லோ? என்ன நடந்திருக்கும்? அவளால் அவன் வந்து போனதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமுமில்லை. குழப்பம் மட்டுமே விடுகதையாய்ப் போனது. யாருடன் பேசலாம்? வீட்டுத்தொலைபேசி கூட அவனுக்கடக்கமாய் உள்ளூர் தேவைகளை மட்டுமே நிறைவேற்றியது. அவன் எறிந்து விட்டுப் போன உணவெல்லாம் அகற்றி, நிலமெல்லாம் துப்புரவாக்கி அன்று தூங்கப் போகையில் அவள் களைத்துப் போயிருந்தாள்.

000000000000000000000000000000

அன்று நடந்ததைப் போல மீண்டும் மீண்டும் நடந்த போது அவள் அவன் கூறியது போல தனக்கு மனப்பிரமை அதிகரிப்பதாய் நம்பத் தொடங்கினாள். இவற்றை மறக்க முயற்சித்த போது மீண்டும் வீட்டுக்குள் வேறு வித குழப்பங்கள். அன்று ஒரு நாள் வார விடுமுறையன்று, அவன் ஆறுதலாக தூங்கி எழும்புவது வழக்கமாதலால், அவனுக்காக காலை உணவு தயாரிக்கையில் அவன் சமையலறைக்கு வந்தது அவளுக்கு ஆச்சர்யம் தந்தது.

“இண்டைக்கு மத்தியானம் கோயிலுக்குப் போவம், உனக்கொரு சாறி வாங்கி வந்தனான், இதைக் கட்டிக் கொண்டு வா!” என்றபடி கையிலிருந்த ஒரு புதுப் பெட்டியையும் காட்டி அதை சாப்பிடும் அறையிலிருந்த மேசையில் வைப்பதாகச் சொல்லிச் சென்றான். அவளுக்கு அவன் காட்டிய அன்பு புதிதாயும், ஆச்சரியமாகவும் இருந்தாலும் அதைக்காட்டிக் கொள்ளாமல் மெதுவாக நன்றி சொன்னாள்.

வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துக் கொண்டு குளித்துவிட்டு வந்து, மேசையிலிருக்கும் சாறியை எடுக்கப்போனவளுக்கு அந்த சாறி அங்கில்லாதது சற்றே அதிர்ச்சியாகவிருந்தாலும், அவன் அதை வேறு எங்கோ வைத்திருப்பான் என்றே யோசித்தாள். குளித்து முடித்து துவாயுடன் படுக்கையறைக்குள் நுழைந்தவளை அவன் வினோதமாகப் பார்த்தான். அவளுக்கு தன் சாறி எங்கேயென்பதைக் கேட்கக் கூச்சமாகவிருந்தது. தானே குனிந்து நிமிர்ந்து தேடி அலுத்துப் போனவளை அவன் குரல் நிறுத்தியது.

“என்ன தேடுறாய்? ஊரில இருந்து வரேக்க கொப்பர் ஏதோ பொக்கிஷம் தந்து விட்டவரே சீதனமாய்?”

அவள் தயங்கி தயங்கி சொன்னாள்,

“இல்லை நீங்கள் அப்போதை காட்டின சாறியைக் காணேல்ல, அது தான் தேடுறன்.”

“உனக்கென்ன பிரச்சனை எண்டுதான் ஒண்டுமாய் விளங்கேல்ல!

நான் எப்ப உனக்கு சாறியை காட்டினனான்? இப்ப நீ இங்க அறையுக்கை  வந்து தட்டிக் கொட்டின சத்தத்தில தான் எழும்பினனான்!”

அவன் அவளைக் கோபமாகப் பார்க்க அவள் அவமானத்திலும், குழப்பத்திலும் நத்தை போல சுருங்கி, ஒடுங்கிக் கொண்டாள்.

குழந்தை பேற்றுக்கு இன்னும் இரண்டே மாதங்கள் இருக்கையில் அவள் கர்ப்பிணிப் பெண்களுக்கான சுகாதார சேவைக்கு போக வேண்டி வந்தது அவள் செய்த புண்ணியம் என நினைத்துக் கொண்டாள்.

குழந்தை பிறப்புக்கு முந்திய (anti natel ) பராமரிப்புக்காக இப்படி பல முறை போயே ஆக வேண்டும் என்பதால் அவன் அவளை மருத்துவ பரிசோதனைக்கு வேண்டா வெறுப்பாய் கூட்டிச்சென்றான்.

இப்படியே விடுகதைகள் தொடர்கதைகளாக, அதை யாருடனும் பேசித்தீர்க்க முடியாத போது அவள் கும்பிட்ட கடவுள் அவளுக்கு பிள்ளைப்பேறு தாதியாய் இவள் போக வேண்டிய சுகாதார நிலயத்துக்கு வந்து சேர்ந்தாள். நீலக்கண்களும், கருணை பொழியும் முகமும், பொன்னிற முடியுமாய் வந்து சேர்ந்தாள் மேரி மாதா!

சுகாதார நிலையத்திலிருந்த அனைவரையும் அவன் தன் மொழி வளத்தாலும் புன்னகையாலும் சட்டென்று கவர்ந்தான். அவன் அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி தானும் அவளுடன் அறைக்குள்ளே வர முயற்சித்த போது தாதி மேரி அவனை புன்சிரிப்புடன் தடுத்து விட்டாள்.

“முகத்தை உம்மெண்டு வைச்சிருக்காதை!” புன்முறுவலுடன் அவன் சிடுசிடுத்தான். இவளும் தன் அழகான புன்னகையைத் தவள விட்டபடி தாதியைப் பின் தொடர்ந்தாள். தாதியும் புன்னகைத்தாள். மூவரும் புன்னகைத்தனர்.

அவளுக்கு மொழி குறுக்கே நின்றாலும் அவள் உடலும் கண்களும் பேசியதை தாதி மேரி புரிந்திருக்க வேண்டும். அவள் கைகளை மேரி எதுவும் பேசாமல் இறுகப் பிடித்துக் கொண்டாள். தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தாள். மேரிக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும் என்பது இவளுக்கு வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவுக்கு ஆறுதலைத் தந்தது.

திடீரெண்டு, அடக்கி வைத்திருந்த அத்தனை பயங்களும், வேதனைகளும் வலிகளும் ஒரு எரிமலையின் வேகத்தோடும் தகிப்போடும் அழுகையாய்ப் பீரிட்ட போது தாதி மேரி அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்து, அவளை அறைக்குள்ளேயே இருக்கும்படி சைகை செய்து, வெளியே போய் அவனிடம் இன்னும் சில பரிசோதனைகள் இருப்பதால் இன்னும் சில நேரமாகும் என்பதை அறிவித்தாள்.

தாதியிடம் அவனுக்கு தான் அவளுடன் கதைப்பது தெரிந்தால் தன்னை அவன் தண்டிப்பான் என்பதையும் அவனுக்கு எதுவுமே தெரியக்கூடாது என்பதையும் பாதி அழுகை, பாதி அரைகுறை ஆங்கிலம், மீதி சைகையாய்க் காட்டிய போது, தாதி மேரி அவள் முதுகை வருடி தான் அதை புரிந்து கொண்டதாய் சொன்ன போது தான் அவளுக்கு போன உயிர் மீண்டு வந்தது.

தாதி மேரியும் மொழி பெயர்ப்புக்கு மேரியின் கைத்தொலைபேசியிலிருந்த கூகிள் ஆண்டவரும் சேர்ந்து கொண்டபோது முதன் முறையாக பேசத் தொடங்கிய ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் அவள் குழப்பங்களும் கண்ணீரும் சேர்ந்து கொண்டன. அவள் உடலில் இருந்த நீலம் பாரித்த கண்டல் காயங்கள் மேரியிடம் ஆயிரம் கதைகள் பேசின!

இதற்கு மேல் தாமதிப்பது வீண் சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் என்பதால் மேரி இன்னொரு தடவை எதிர்வரும் வாரத்தில் சந்திப்போம் என்பதை அவளுக்கு சொல்லி, அதை அவனுக்கும் ஒரு புன்னகையுடன் தெரிவித்தாள். மூவரும் புன்னகைத்தனர்.

பிறக்க வேண்டிய திகதிக்கு இரு வாரங்கள் முன்னதாகவே குழந்தையைப் பிரசவித்தலில் தாய்மையின் பெருமிதமும் அசதியும் பூரிப்புமாய் இருந்தவளை பார்க்க வைத்தியசாலை தேடி, தாதி மேரி வந்திருந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்ட போது இவள் கண்களிலிருந்து சொரிந்த நீரில் குழந்தை நனைந்தது. கை நிறைய மலர்க்கொத்தோடு தன் குழந்தையைப் பார்க்க வந்தவனை சாதாரண உடையில் காத்திருந்த காவல் துறை விலங்கிட்ட போது இவளும் தாதி மேரியும் புன்னகைத்தனர். அந்த இருவர் மட்டுமே புன்னகைத்தனர்.

பூங்கோதை- ஐக்கிய இராச்சியம்

 

பூங்கோதை

(Visited 492 times, 1 visits today)