வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவள்-சிறுகதை-ஐ.கிருத்திகா

ஐ.கிருத்திகா‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடம் வாருங்கள். நான்  உங்களுக்கு  இளைப்பாறுதலைத்  தருகிறேன்.’

தேவாலய  சுவரில்  எழுதப்பட்டிருந்த  அந்த  வாசகங்களை  சுந்தரி  மெதுவாக  வாய்க்குள்  படித்தாள். தினந்தினம்  படித்ததில்  வாசகங்கள்  பாடம்  போட்டதுபோல்  மனதில்  பதிந்து  போயிருந்தன.

அந்த  வாசகங்கள்  தனக்காகவே  எழுதப்பட்டதுபோல்  அவளுக்குத்  தோன்றியது. ஏனெனில்  வருத்தப்பட்டு  பாரம்  சுமக்கிறவள்  அவள்தானே. ஆனால்  இளைப்பாறுதலுக்குதான்  நேரமேயில்லை.

சவத்துக்கு  வாழ்க்கைப்பட்டால்  மாரடித்துதானே  ஆகவேண்டும். சுந்தரிக்கு  பொழுதுக்கும்  மாரடிக்கிற  வேலைதான்.

சுந்தரி  தார்பாலின்  ஷீட்டை  விரித்தாள். பனியன், ஜட்டி  வகைகளை  வரிசையாக  அதில்  அடுக்கினாள். பறக்காமலிருக்க  ஷீட்டின்  நான்கு  மூலைகளிலும்  கற்களை  வைத்தாள். ஜட்டி, பனியன்  தவிர  கைலி, துண்டும்  விற்பனைக்கு  உண்டு.

நடைபாதையை  ஆக்கிரமித்து  கடைபோடும்  ஏராளமானோர்  காலை  நேர  இளமஞ்சள்  வெயிலை  முதுகில்  சுமந்தபடி  பொருட்களை  அடுக்கி  வைத்துக்  கொண்டிருந்தனர்.

சுந்தரி  ஓர்  ஓரமாக  அமர்ந்து  தூக்குவாளியைத்  திறந்து  சோற்றையள்ளி  விழுங்கத்  தொடங்கினாள்.

காலை  ஒன்பதுக்குக்  கடை  போட்டு   இரவு  எட்டுக்குக்    கடையடைப்பவளுக்கு  நடுவில்  ஏற்படும்  வயிற்று  உபாதைகளைத்  தீர்த்துக்கொள்ள  அருகில்   நகராட்சி  கழிப்பிடம்  இருந்தது.

தண்ணீர்  வசதியில்லாமல்  நாறும்  கழிப்பிடத்தில்  காலை  வைக்கவே  அவளுக்கு  கூசும். கண்ணை  மூடிக்கொண்டு  போய்வருவாள்.

அதிலும்  அந்த  நாட்களில்  அவளைப்போல  கடைபோடும்  பெண்களின்  நிலையைப்பற்றி   சொல்லவே  வேண்டாம். சுந்தரிக்குப்   பெரும்பாலும்  உடுத்தியிருக்கும்  புடவை  நனைந்து  போகும். மனதுக்குள்  அழுதபடியே  அமர்ந்திருப்பாள்.

வக்கற்ற  வாழ்க்கை   வாழ விதிக்கப்பட்டதை  எண்ணி  குமைபவள்  அந்த  வாழ்க்கையில்  வலிந்து  பொருந்திப்  போக  படாதபடுபட்டாள்.

அன்று  ஞாயிற்றுக்கிழமை. எதிரே  இருந்த  தேவாலயத்துக்குக்  கூட்டம்  வரத்துவங்கியது. பிரார்த்தனை  முடிந்து  வெளியே  வரும்  கூட்டத்தில்  ஒரு    சிலர்  நின்று  பிளாட்பார்ம்  கடைகளில்  விலை  விசாரிப்பார்கள்.

அப்படி  சுந்தரியின்  கடைக்கு  வரும்  ஓரிருவர்   ஏதாவது  வாங்குவதும்  உண்டு. இருபது  ரூபாய்க்கு  ஜட்டியும், இருபத்தைந்து  ரூபாய்க்கு  துண்டும்  கிடைத்தால்  மலிவுதானே…..

காலை  பத்துமணிக்கெல்லாம்  வெயில்  சுள்ளென்று  அடித்தது. நல்லவேளையாக  சுந்தரியின்  கடைக்கு  மேலே  குடை  விரிப்பதுபோல  ஒரு  சின்ன  மரம்  கிளை  பரப்பி  நின்றிருந்தது.

“நீ அதிஸ்டக்காரிடி. உன்  கட  துணிங்க  வெயிலு  படாம  பளிச்சுன்னு  கெடக்குங்க. நீயும்  நெழலுல  சொகமா  குந்தியிருக்க….எங்களுக்குதான்  அந்த  குடுப்பின  இல்லாம  போயிருச்சு” என்பாள்  வளையல்கடை  ராசாத்தி.

அவள்  கடையில்  கிளாஸ்  போன்ற  பிளாஸ்டிக்  டப்பாவில்  விதவிதமாக  வளையல்கள்  அடைபட்டு  கண்ணைப்  பறித்தன. ஒரு  டஜன்  விலை  ஐம்பதிலிருந்து  எண்பதுவரை  சொல்வாள். ஒன்று  வாங்கி  போட்டுக்கொள்ள  வேண்டுமென்று  சுந்தரிக்கு   வெகுநாட்களாக  ஆசை.

கையில்  காசு  தங்கினால்தானே. கடன்  வாங்கி  சரக்கு  எடுக்கவேண்டும், சரக்கை  விற்று  கடனை   அடைத்ததுபோக  மீதியில், நடைபாதையில்  கடை  போட  அனுமதித்த  போலீசுக்கும், தினமும்  குடிக்க  காசு  கேட்கும்  புருஷனுக்கும்  தண்டம்  அழவேண்டும்.

மிச்சம்  மீதியை  வைத்து   வயிறு  கழுவ  வேண்டும். தாலி  முடிந்து  கொண்டு  ஐந்து  வருடங்களாகிறது. ஒரு  புழு, பூச்சி  தரிக்கவில்லை.

“மாசாணியம்மனுக்கு வேண்டிக்க. பத்தாவதுமாசம்  புள்ள  பொறக்கும் ” என்று  பக்கத்துவீட்டு  ஊர்வசி  நச்சரிக்கிறாள். சுந்தரிக்குத்தான்  வேண்டிக்கொள்ள  தோன்றவில்லை.

‘புள்ள பொறந்து எந்த சீமைய ஆளப்போவுது’ என்று சலிப்பாயிருந்தது.

குடிகார  புருஷனுக்கு  முந்தானை  விரிக்கவே  அவளுக்குப்  பிடிக்கவில்லை.

ஒவ்வொருமுறையும்  குப்பென்று  வீசும்   சாராய  நாற்றத்தினூடே  சங்கமம்  நடந்தேறியது. சுந்தரி  சாக்கடையில்  புரண்டு  எழுவதைப்போல  அருவருத்துப்  போனாள்.

திருமணமான புதிதில்  சாமுண்டி  ஒழுங்காக  வேலைக்குப்  போய்க்கொண்டிருந்தான். குடிப்பழக்கம்  தொற்றிக்கொண்டதிலிருந்து  வேலைக்குப்போவது  குறைந்து  போனது. குடிக்க  காசில்லாத  நேரத்தில்  அவனுக்குப்  பைத்தியம்  பிடித்து  விடும்  போலிருந்ததில் சுந்தரியை  காசு  கேட்டு  வதைக்கத்  தொடங்கினான்.

ஆக்கிப்போட்டு  வீட்டோடு  இருக்கதான்  அவளுக்கு  ஆசை. அது  பகற்கனவாகிப்போனதில் வட்டிக்கு  விடும்   கந்தசாமியிடம்  கடன்  வாங்கி  கடை  போட்டாள்.

கந்தசாமி  ஒரு  மாதிரியான  ஆள். பார்க்கும்  பார்வையில்  காமம்  காந்தும். எப்போதும்  முகத்தைப்  பார்த்து   பேசமாட்டான். பார்வை  கழுத்துக்கு  கீழே  வெறித்திருக்கும். வேறுவழியின்றி  சுந்தரி  அவன்  காலில்  விழுந்தாள்.

“ஒங்கஸ்டம் எங்கஸ்டம்மாரி. ஒனக்கு  நான்  காசு  தாரேன் ” என்றவன்  பணத்தை  எண்ணி  அவள்  கையைத்  தடவியபடியே  தந்தான்.

சாமுண்டி  தொடும்போது  சுந்தரிக்கு  ஒருமாதிரி  எரியும். புருஷ  லட்சணமில்லாத  அவனை  அந்நியனைப்போல  எண்ணி  மனசு  கூசும். கந்தசாமி  தொட்டபோது  திராவகத்தை  ஊற்றியதுபோல்  எரிந்தது. பாழும்  உடலிலிருந்து  உயிரை  உருவிக்  கொள்ளலாம்  போல  மனசு  துடித்தது.

“கந்தசாமிட்ட கடன் வாங்குனா திமிங்கிலத்து வாயில சிக்குன மாரிதான். ஒரு  தடவயாவது  தொடாம  வுடமாட்டான்” என்றாள்   ஊர்வசி.

அவள்  சாப்பாட்டுக்கடை  வைத்திருக்கிறாள். பெரிய  அலுமினிய  இட்டிலி  குண்டானில்  இட்டிலி  ஊற்றுவாள். சட்னி, சாம்பாரோடு  அவள்  தரும்  இட்டிலிக்காக  ஒரு  கூட்டமே  காத்திருக்கும். அவளும்  கந்தசாமியிடம்  கடன்  வாங்கித்தான்  கடை  நடத்துகிறாள்.

அங்கு  கந்தசாமியைவிட்டால்  கடன்  கொடுப்பவர்  யாருமில்லை. அதுதான்  அவனுடைய  மிகப்பெரிய  பலம். பெண்கள்  கடன்  கேட்டால்  பாய்ந்து  சென்று  கொடுப்பான். கொடுத்துவிட்டு  அவர்களை  எடுத்துக்கொள்வான்.

உழைத்து  பிழைக்கவேண்டிய  கட்டாயத்திலிருக்கும்  கீழ்மட்ட  வர்க்கத்து  பெண்களின்  நிலை  அவனுக்குச்  சாதகமாக  இருந்ததில்  அவன்  உல்லாசமாக  வளையவந்தான்.

சுந்தரி, ஊர்வசியை  கேள்விக்குறியோடு  பார்த்துவிட்டு  கேட்டாள்.

“ஒனக்கு இதுல அனுபவமோ… ?”

“அது…அதுவந்து…”

“சொல்லுடி…எல்லாம் முடிஞ்சி போச்சா… ?”

ஊர்வசியின்  தலை  சுவாதீனமாய்  அசைந்தது.

“ஒரு தடவ, ரெண்டுதடவ இல்ல. ஏழெட்டு  தடவ….”

குரல்  உடைந்து  பிசிறிற்று. சுந்தரி  அவளை  வெறித்தாள். புருஷன்  சரியில்லாத  பெண்களுக்கு  விதிக்கப்பட்ட  வாழ்க்கையில்  மலிந்து  கிடக்கும்  வேதனைகளை  வார்த்தையால்  சொல்லிவிடமுடியாது  என்று  அவளுக்கு  அடிக்கடி  தோன்றும்.

“வேலியில கட்டுன வரிச்சிக்குச்சாட்டம் நமக்கெல்லாம் ஒத்தாப்ல வாழ்க்க அமைஞ்சி போச்சிடி. குடிச்சிட்டு  கூத்தடிக்கிற  புருசன், மூணுவேள  சோத்துக்கு  செம்மத்துக்கும்  ஒழைக்கவேண்டிய  அவலம், ஆசப்பட்டு  ஒண்ணு  வாங்கித்திங்கவோ, போட்டுக்கவோ  முடியாத  கேடுகெட்ட  நெலம…..  இதையெல்லாம்  நெனச்சி, நெனச்சி  வேதனைப்  புடுங்கித்  திங்குது” என்று  சுந்தரி  அடிக்கடி  பொருமுவாள்.

ஊர்வசியின்  நிலைபற்றி  அறிந்ததுமே  அடிவயிறு  பற்றி  எரிந்தது. கந்தசாமி  சரியான  வழிசல்  பேர்வழி  என்று  சுந்தரிக்குத்  தெரியும். ஆனால்  இவ்வளவு  மோசமானவனாக  இருப்பான்  என்று  சத்தியமாக  அவள்  நினைக்கவில்லை.

அவனை  விட்டால்  கடன்  தருவார்  எவருமில்லாததால்  சுந்தரி  வேறுவழியின்றி  அவனிடம்   கையேந்தினாள். கடன்  வாங்கியபிறகே  அவனுடைய  சுயரூபம்  தெரிந்தது.

“எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தா நான் வேணாம்னு சொல்லியிருப்பேனே. இப்ப  நீயா  போயி  மாட்டிக்கிட்டியே….” என்று  ஊர்வசி  புலம்பித்  தீர்த்துவிட்டாள்.

“அப்புடி, இப்புடி இருப்பான், வேறெந்த பழக்கமும் இருக்காதுன்னு நெனச்சேன். ஆனா  நீ  என்னென்னமோ  புதுசா  சொல்லுறியே…” என்ற  சுந்தரிக்குத் திகிலடித்தது.

முதல்முறை  கடனடைத்ததும், இனி  இவன்  பக்கம்  தலைவைத்துப்  படுக்கக்கூடாது  என்று  எண்ணியவளுக்கு  மறுபடி  சரக்கு  வாங்க  காசு  தேவைப்பட்டபோதுதான்  உறைத்தது, அவனிடமிருந்து  மீளமுடியாதென்று. விதியே  என்று  மறுபடி  அவன்  முன்  போய்  நின்றாள்.

அப்படி, இப்படி  என்று  எப்படியோ  மூன்று  வருடங்களை  சமாளித்து  நகர்த்திவிட்டாள். கந்தசாமி  வருவதற்குமுன்பே  பணத்தை  எடுத்து  வைத்திருப்பவள்  அவன்   வந்தவுடன் மேற்கொண்டு  பேச்சுக்கு  வேலை  வைக்காது  துணி  பண்டலின்மேல்  பணத்தை  வைத்துவிடுவாள். அப்படியிருந்தும்  அவன்  நாலுவார்த்தை  பேசாமல்  போகமாட்டான்.

“யாவாரம் எப்புடிப்போவது… ?” என்று  அவன்  ஒருமுறை  கேட்டபோது,

“ஏதோ பரவாயில்லீங்க…” என்று அவசரமாய் சொன்னவள் வந்து நின்ற மனிதரிடம் துணிகளைக் காட்டுவதில் முனைப்பானாள். அந்த  ஆள்  போகும்வரை  பொறுத்திருந்தவன்,

“ஒன்னையத் தவுர இங்க யாரும் சொன்ன தேதிக்கு காச திருப்பறதில்ல. காசு  விசயத்துல  நீ  ரொம்ப  கரீக்ட்டா  இருக்க…… காசு  விசயத்துல  மட்டுமா….” என்றான்.

சுந்தரி  எதுவும்  சொல்லாதிருக்க  கண்களால்  அவளை  விழுங்கிவிடுவதுபோல  பார்த்தவன் ,

“ஒம்புருசன் குடிச்சிபுட்டு கவுந்தடிச்சி கெடக்கான். அவனால  ஒனக்கு  என்னா  சொகம்  சொல்லு….?” என்று  புருவம்  உயர்த்திக்  கேட்டான். சுந்தரிக்கு  நாக்கு  உலர்ந்து  போனது. ராசாத்தி  பரிதாபமாக  அவளைப்  பார்த்தாள். அவளும்   பலியாடுதான்.

“என்னா ராசாத்தி அப்புடி பாக்குற…காசு என்னாச்சி… ?”

கந்தசாமியின்  கவனம்  ராசாத்தியின்மேல்  விழுந்ததில்  சுந்தரிக்கு  அப்பாடாவென்றிருந்தது. ராசாத்தி  மென்று  விழுங்கினாள்.

“ரெண்டுநாளா யாவாரமில்ல. கையில  கொஞ்சம்  காசு  சேந்ததும்  நானே  வூட்டாண்ட  வந்து  தந்துடுறேன்.”

“காசு எப்ப    சேர்றது, நீ எப்ப தர்றது. அது  கெடக்கட்டும், ரொம்ப  நாளாச்சி…… எப்ப  வரட்டும்…?”

தாடையை  சொரிந்துகொண்டே  கேட்டான்.  ராசாத்தி  மெல்ல  எழுந்து  நின்றாள். உடல்  மெலிதாக  நடுங்கியது.

“அ…அன்னிக்கு வந்தமாரி…அப்…அப்பதான் புள்ளைங்க பள்ளிடம் போயிருக்கும். புருசனும்  வூட்டுல  இருக்காது.”

“ஆமா, இவுங்க புருசன் என்னவோ கலெட்டர் உத்தியோகம் பாக்குறமாரி……பொழுதுக்கும் சரக்கடிச்சிட்டு மட்டையா கெடக்குறான். அவனுக்கு  என்னா  மரியாத……..”

சொன்னவன்  சுந்தரியிடம்  திரும்பினான்.

“ம்ஹூம்……நெனச்ச எதுவும் நடக்கமாட்டேங்குது. அதனால  என்னா, என்னிக்காவது  ஒருநா  கைவைக்காம  வுடமாட்டேன். வரட்டுமா…?”

தலையாட்டி  கேட்டுவிட்டு  கந்தசாமி  நகர, சுந்தரி  தொப்பென  அமர்ந்தாள்.

குழம்பு  தளபுளவென்று  கொதித்தது.  சுந்தரி  முருங்கைக்காயை  வெட்டி  அதில்  போட்டாள். சோறு  பொங்கிவர  அடுப்பை  நிறுத்தி  குண்டானை  கவிழ்த்து  கஞ்சியை  வடித்தாள். ஒரு குக்கர்  வாங்கவேண்டுமென்று  அவளுக்கு  வெகுநாட்களாக  ஆசை.

“மாசாமாசம் தவணை மொறையில பணம் கட்டி குக்கர் வாங்கிக்கலாம். ஒனக்கு  வேணும்னா  சொல்லு . நான்  அந்தக்கடைக்கு  கூட்டிட்டுப்  போறேன்.”

ராசாத்தி  சொன்னபோது  சுந்தரி  தலையசைத்து  மறுத்தாள்.

“வேணாம் ராசாத்தி. ஏற்கனவே  ஒருத்தன்ட்ட  கடன  வாங்கிட்டு  படாதபாடு  படுறேன். அவன்  பாக்குறததும், சிரிக்கிறதும்  வர்றியான்னு  கூப்புடுறாப்ல  தோணி  கூச  வைக்குது. இதுல  இன்னொருத்தன்கிட்டயும்  பொருள  வாங்கிட்டு  மானத்த  அடமானம்  வைக்கமுடியாது.”

“இல்லடி…இது அந்த மாரியில்ல…”

ராசாத்தி  எவ்வளவோ  சொல்லிப்பார்த்தாள். சுந்தரி  ஒத்துக்கொள்ளவில்லை.

சாமுண்டி  முழு  போதையிலிருந்தான். கோணல், மாணலான  அவனுடைய  நடை  அதை  ஊர்ஜிதம்  செய்தது. தள்ளாடியபடியே  வந்தவன்  சுந்தரியைப்  பார்த்ததும்  கிறக்கமாய்  சிரித்தான்.

“ஒக்காந்து சாப்புடு…”

சுந்தரி  தட்டெடுத்து  வைக்க, எட்டி  அவள்  கையைப்  பற்றியவன்  அவளை  ஒருவார்த்தை  பேசவிடவில்லை. புயல்காற்று  அடித்தது  போலிருந்தது  சுந்தரிக்கு.

சமைத்த  சோறு  அப்படியே  கிடந்தது. சாமுண்டி  களைப்பில்  கால்  பரப்பி  உறங்கிப்  போயிருந்தான். சுந்தரி  மெல்ல  எழுந்து  சோற்றில்  தண்ணீர்  ஊற்றினாள். பசித்த  வயிறு  கனத்து  போயிருந்ததில்  சாப்பிட தோன்றவில்லை. குழம்பை  டப்பாவில்  ஊற்றி  மூடி  வைத்தவள் விளக்கணைத்து  சுவரோரமாய்  ஒண்டினாள்.

நினைத்தது  எதுவும்  நடக்காத  வாழ்க்கையில், நீரில்  அடித்து  செல்லும்  துரும்பு  போல  அடித்து  செல்லப்படுவதை  எண்ணி  அழுகை  வந்தது.

சிறுவயதிலும்  அவளுக்குப்  பெரிதாக  சுகபோக  வாழ்க்கை  அமைந்துவிடவில்லை. பழங்குழம்பும், பழைய சோறும், அடுத்தவர்  உடுத்தித்  தந்த  பழைய  உடுப்புகளுமே  வாய்த்தன.

இருந்தும்  வானில்  ஒளிரும்  நட்சத்திரங்களை  எண்ணியும், வேப்பம்பழங்களை  பிதுக்கி  உள்ளிருக்கும்  கொட்டைகளை  சேகரித்து  எடைக்குப்  போட்டு  காசு  சேர்த்தும், பயத்தங்காய்  பறித்து  தின்றும், வைக்கோல்  பிரியில்  ஸ்கிப்பிங்  விளையாடியும், அவ்வபோது  டூரிங்  டாக்கீஸில்  மணல்  குவித்து  அமர்ந்து  சினிமா  பார்த்தும்  ஓரளவு  அவள்  சந்தோஷமாகத்தானிருந்தாள்.

சாமுண்டி  கையால்  தாலி  கட்டிக்கொண்டபோதுகூட  நகரத்து  வாழ்க்கையைப்  பற்றிய  கனவுகள்  கண்களில் மின்ன  மகிழ்ச்சியோடு  புதிய  ஊருக்குள்  அடியெடுத்து  வைத்தாள்.

சாமுண்டி  ஆரம்பத்தில்  ஒழுங்காக  வேலைக்குப் போனான். சம்பாதிக்கும்  காசை  அப்படியே  சுந்தரி  கையில்  தந்தான். சுந்தரி  திக்குமுக்காடாத  குறைதான். வெகு  சொற்ப  நாட்களே  அவளின்  சந்தோஷம்  நீடித்தது.

சாமுண்டியிடம்  தொற்றிக்கொண்ட  குடிப்பழக்கம்  சுந்தரியின்   கனவுகளை  சிதைத்துப்போட்டது.

சுந்தரிக்கு  அன்று  வெகு  சுமாரான  வியாபாரம்தான். மழைவேறு  நசநசத்துக்  கொண்டிருந்ததில்  சிலர்  கடை  போடவேயில்லை. ராசாத்தி  கூட  வளையல்  டப்பாக்களை  அடுக்கத்  தொடங்கிவிட்டாள்.

“வூட்டுக்குப் போவப்போறியா… ?”

“ஆமா சுந்தரி. இந்த  மழையில  எவ  வளையல்  வாங்க  வரப்போறா….வூட்டுக்குப்  போனா  ரெண்டு  வேல  பாக்கலாம். நீ  என்னா  செய்யப்போற…?”

“நான் வூட்டுக்குப் போயி என்னா பண்ணப்போறேன். அந்த  மனுசன்  தண்ணிய  போட்டுட்டு  தட்டுத்தடுமாறி  வூடு  வந்து  சேர  எப்புடியும்   பத்து மணிக்கு  மேல  ஆயிரும். ஏழு  மணிக்கு  கடைய  கட்டுனா  வூட்டுக்குப்போயி  எட்டுக்கெல்லாம்  ஆக்கி  எறக்கிருவேன். சீக்கிரமே  போயி  யாரு  மொகத்தப்  பாக்கப்போறேன்  சொல்லு.”

“அதுவுஞ்சரிதான்” என்ற ராசாத்தி கவனமாக டப்பாக்களை பெட்டிக்குள் அடுக்கினாள்.

“யம்மா, இந்தத் துண்டு எவ்ளோம்மா… ?”

ஒரு  பெண்மணி  வந்து  கேட்க, சுந்தரி  பரபரப்பானாள்.

“இருவத்தஞ்சு ரூவாய்ங்க…நல்ல அருமையான துண்டு. எடுத்துக்குங்க…”

அந்தப்  பெண்மணி  துண்டை  தடவிப்  பார்த்தாள். நீளம்  சரியாக  உள்ளதா  என்று  விரித்துப்  பார்த்தாள்.

“சன்ன இழைத் துண்டுங்க. ஒருதடவ  தண்ணியில  போட்டா  பூமாதிரியாயிரும். ரெண்டா  எடுத்துக்குங்க.”

“நாப்பது ரூவாய்ன்னா ரெண்டு எடுத்துக்குறேன்.”

“கட்டாதுங்க. வாங்குன  கைக்கு  அஞ்சு  ரூவாயாவது  லாபம்  இருக்கணுமில்ல. இதையே  கடையில  வாங்குனீங்கன்னா  நாப்பது, அம்பது  சொல்லுவாங்க. ”

“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். துண்டு  அலசலா  இருக்கேன்னு  யோசனையா  இருக்கு. அதனால  ஒண்ணு  போதும்.”

“அட என்னங்க நீங்க…தண்ணியில போட்டா இழை நெருக்கமாயிரும். ஒங்களுக்கும்  வேணாம், எனக்கும்  வேணாம். நாப்பத்தஞ்சு  ரூவா  குடுத்துட்டு  ரெண்டு  எடுத்துக்குங்க.”

அவள்  அரைமனதாய்  சம்மதிக்க, சுந்தரி  இரண்டு  துண்டுகளை  ஒரு  கவரில்  போட்டு  அவளிடம்  நீட்டினாள்.

அவள்  அகன்ற  வினாடி, கந்தசாமி  வந்து  நின்றான். சுந்தரிக்கு  திக்கென்றிருந்தது.

“என்னா சுந்தரி, எப்புடியிருக்க… ?”

“இ…இருக்கேங்க. இன்னும்  ரெண்டுநாள்ல   பணத்த  திருப்பி  தந்துடுறேங்க…..”

கந்தசாமி  சுண்டுவிரலால்  காது  குடைந்தபடி  அலட்சியமாக  அவளைப்  பார்த்தான்.

“ரெண்டுநாளெல்லாம் பொறுத்துக்க முடியாது. ஊர்ல  ஒரு  எழவாயிப்  போச்சி. அதுக்கு  ஒடனடியா  பணம்  தேவப்படுது. அதனால  இப்பவே  காச  குடுத்துரு.”

“அது…அதுவந்து…பதினஞ்சாந்தேதி திருப்பி தர்றதா சொல்லித்தான வாங்குனேன்.”

“நானென்ன பேங்க்கா வச்சி நடத்துறேன். ஏதோ  கையில  இருக்க  காச  ஒன்னமாரி  இல்லாதவங்களுக்கு  குடுத்து  ஒதவறேன். அதேசமயம்  என்  தேவையையும்  பாக்கணுமில்ல. நீ  பணத்த  எடு.”

“கையில காசில்ல…ரெண்டுநா கழிச்சி…”

சுந்தரி  முடிக்கவில்லை. அவன்   கோபமாய் அவளை  உறுத்தான்.

“ஒண்ணு காசக்குடு. இல்லாட்டி  ஒம்போது  மணிக்கு  வூட்டுப்பக்கம்  வாரேன். என்னைய  கவனிச்சிக்க. என்னா  சொல்ற…?”

அதட்டலாய்  கேட்டான். சுந்தரி  கூசிப்போய்  நின்றிருந்தாள்.

எந்தக்  கேள்வியை  கேட்கவேண்டுமென்று  வெகுநாட்களாக  மனதில்  திட்டம்  போட்டு  வைத்திருந்தானோ  அந்தக்  கேள்வியைக்  கேட்டுவிட்டு  அவன்  அமர்த்தலாய்  நின்றிருக்க, சுந்தரி  நிலைகுத்த  அவனைப்  பார்த்தாள்.

“சரியா ஒம்போது மணிக்கு வருவேன், தயாராயிரு…சுந்தரி நீயும், சுந்தரன் ஞானும்…….. ”

அவன்  விசிலடித்தபடியே  போனான்.

“சுந்தரி, அவனுக்கு தேவ காசு இல்ல, நீதான். இப்ப  என்னாடி  பண்ணப்போற…?”

ராசாத்தி  கேட்க, தேவாலயத்தின்  மணியடித்தது. கண்களிலிருந்து  வழிந்த  கண்ணீரைத்  துடைத்துக்கொண்ட  சுந்தரி,

“ஒரு நிமிசம் கடையப் பாத்துக்க, வந்துடுறேன்…” என்று கூறிவிட்டு சாலையைக் கடந்து தேவாலயத்துக்குள் பிரவேசித்தாள். அதுநாள்வரை  நுழைந்திராத  தேவாலயம் கனத்த  அமைதி  போர்த்தி, பரிசுத்தமாய், தென்றல்  தவழ  அவளுக்காக  காத்திருந்தது.  பிரேயர்  ஹாலில்  சிலுவையில்  அறையப்பட்ட  ஏசுபிரான்  மக்களின்  பிரார்த்தனைகளை  செவிமடுக்க  தயாராயிருந்தார்.

சுந்தரி  கைகள்  நடுங்க  அவரை  கும்பிட்டாள். சரம்சரமாய்  கண்களிலிருந்து  வழிந்த  கண்ணீர்  கன்னம்  வழியே  கீழிறங்கிற்று.

‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடம் வாருங்கள். நான்  உங்களுக்கு  இளைப்பாறுலைத்  தருகிறேன்’ என்ற  அந்த  வாசகத்தை  மனசு  அப்படியே  ஒப்பிக்க, மெழுகுவர்த்தி  உருகுவதுபோல்  உருகி  கரைந்த  சுந்தரி  ஐந்து  நிமிடங்களுக்குப்  பிறகு  கண்களைத்  துடைத்துக்கொண்டு  தேவாலயத்திலிருந்து  வெளியே  வந்தாள்.

ராசாத்தி  அவளிடம்  எதுவும்  பேசவில்லை. அவளின்  மனநிலை  புரிந்து  மௌனமாய்  கடையைக்  கட்டினாள்.

மாலை  ஆறுமணி…….

தூறல்கள்  கனமாய்  விழ, சுந்தரி  கடை  கட்ட  ஆரம்பித்தாள். மழைக்குத்  தப்ப  எண்ணிய  வண்டிகள்  சாலையில்  விரைந்தவண்ணமிருந்தன.

அது  குறுகலான  சாலை  என்பதால்  எப்போதும்  அந்நேரத்துக்கு  நெரிசல்  கூடுதலாகவே  இருக்கும். சுந்தரி  கடைகட்டி  முடித்தவேளை  கந்தசாமி  மறுபடி  வந்து  நின்றான்.

“மறந்துடாத சுந்தரி. ஒம்போது  மணிக்கு  வருவேன்.”

சொல்லிவிட்டு  அவள்  பதிலை  எதிர்பாராது  சாலையை  கடக்க  முனைந்தான்.

பாதிதூரம்  கையை  நீட்டியபடியே  சென்றவன்   மறுபாதியைக்  கடக்க  முயன்ற  வினாடி  எங்கிருந்தோ  புயலாய்  வந்த  இன்னோவா  கண்ணிமைக்கும்  நேரத்தில்  அவன்  மீது  மோதி  அவனை  வீசியெறிந்தது.

கந்தசாமி  ஒரு  பொட்டலம்போல்  தூரமாய்  போய்  விழுந்தான். விழுந்த  வேகத்தில்  உயிர்  உடலிலிருந்து  நழுவியோடியிருந்தது.

சுந்தரி  அவ்வளவையும்  பார்த்தபடி  நின்றிருந்தாள். ஏனோ  தேவாலயச்சுவரில்  எழுதப்பட்டிருந்த  அந்த  வாசகங்களை  உரக்க  சொல்லவேண்டும்  போலிருந்தது.

‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடம் வாருங்கள். நான்  உங்களுக்கு  இளைப்பாறுலைத்  தருகிறேன்.’

சொல்லிவிட்டு  தேவாலயத்தைப்  பார்த்து  கண்ணீர்வழிய  கும்பிட்டாள். கந்தசாமியைச்   சுற்றி  கும்பல்  கூடிவிட்டிருந்தது.

“ஆள் போயிட்டான். உசிரில்ல…”

யாரோ  சத்தமாகச்  சொன்னது  காதில்  விழ, சுந்தரி  நடக்க  ஆரம்பித்தாள்.

ஐ .கிருத்திகா-இந்தியா

ஐ.கிருத்திகா

(Visited 387 times, 1 visits today)
 

2 thoughts on “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவள்-சிறுகதை-ஐ.கிருத்திகா”

Comments are closed.