சுட்ட மண்-சிறுகதை-மெலிஞ்சி முத்தன்

மெலிஞ்சி முத்தன்அண்ணாவி ராசமுத்துவின் பேரன் ஆனந்தராசா விண், விண்ணென உடுக்கில நாதவினோதம் செய்துகொண்டிருக்க சரித்திரகாரன் துரைசிங்கம் பாடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலதான் குசு,குசுவெண்டு அந்தக் கத அவர்களிடம் வந்து சேர்ந்தது. கூத்து ஒத்திகை  பார்த்துக்கொண்டிருந்த ஆக்கள் மெதுமெதுவாக ஒராள், மற்றாளப் பார்த்து கடைசியாக ஒத்திகைய நிப்பாட்டுவதாய் முடிவானது.

துரைசிங்கம் அடவு போட்ட களைப்பில வந்து கதிரையில அமைதியாகக் குந்தியிருக்க உடுக்கு மட்டும் எதையெதையோவெல்லாம் சொல்லி நாதமெழுப்புது. கண்ணால கண்ணீர் தெறிக்கத் தலையை ஆட்டி உடுக்கால அழுதுகொண்டிருந்தான் ராசமுத்துவின் பேரன் ஆனந்தராசா. அது தன்ர பேரனுக்கு தான் செலுத்திற அஞ்சலியெண்டு நினைச்சான் அவன்.

00000000000000000

பழய நாடகப் புட்டிக்கு வடக்கால நிண்ட வேம்போட ஒட்டிய காணி அப்புவழியாக ராசமுத்துவுக்கு உரித்தாகியது.  அந்த வேம்பு ஒருக்கால் வந்த புயலில சரிஞ்ச மூட்டத்திலதான் அந்த வேம்பின்ர உடம்பில அந்த உடுக்க வார்த்து எடுத்தார் ராசமுத்து. அவர் பிறக்கிறதுக்கு முந்தியே பல வருசங்களாய் அந்த வேம்புக்குக் கீழதான் இவையட மூத்த ஆக்களெல்லாம் கூத்துப் பழகுவாங்களாம். காட்டுக்க நிக்கிற வேம்பவிட சன நடமாட்டமிருக்கிற பகுதியில நிக்கிற வேம்பில உடுக்குச் செய்தால் நல்லாய் நாதம் பேசுமெண்டு சொல்வார்கள். அத மனசில வைத்துக்கொண்டு இந்த வேம்பில உடுக்குச் செய்ய விரும்பினார் ராசமுத்து.

அந்த வேம்பு பல மூத்த கலைஞர்களின் இசையைக் கேட்டு வளர்ந்த வேம்பு.  வேம்புக்கு முன்னால கிடந்த ‘றோட்டுக் கிறவலத்தான்’ முகத்துக்குப் பூச்சாகப் பூசுவாங்களாம் அந்த நாளைய கூத்துக்காரர். ராசமுத்துவின்ர சின்ன வயசிலேயே அவரின்ர அப்பு செத்துப் போனார். அப்புவின்நினைப்பு வரும்போதெல்லாம் அந்த உடுக்கத்தான் எடுத்து வாசிப்பார் ராசமுத்து. ‘அந்த உடுக்குக்கு அப்பிடியே அப்புவின்ர குரல்’ எண்டு ராசமுத்து நம்பினார். எண்டைக்கு நம்பத் தொடங்கினாரோ அண்டையில இருந்து அத விட்டுப் பிரிய மனசில்லாதவராக உடுக்கும் கையுமாகவே திரிஞ்சார்.

அப்பு செத்ததுக்குப் பிறகு மாமன்காரன்தான் ராசமுத்துவ வளர்த்தார். எப்ப பாத்தாலும் உடுக்கும் கையுமாகத் திரியிறானே எண்டு கையில புத்தகத்தத் திணிச்சு வெளியூருக்கு அனுப்பினார். படிக்கப் போன பெடியன் படிக்கிறது மட்டுமில்லாம கூத்து, நாடகம், பக்கவாத்தியமெண்டு சுத்திப்போட்டு ஒரு கட்டத்தில வீட்டுக்கு வர மாமன்ர ஒரேயொரு மகள் அன்னம்மாளும்  கலியாணத்துக்குத் தயாராக இருந்தாள்பிள்ள. முதன் முதலாக அந்த ஊருக்குள்ளேயே தவிலடிச்சு நடந்த கலியாணம் ராசமுத்து அன்னம்மாளின்ரதுதான். அப்பயெல்லாம் தவில் ஊருக்குள்ள வாறது ஒரு பெருமையாக இருந்திச்சு. உடுக்கு எண்டாலே ஏதோ குறைவான சாமான் எங்கிற மாதிரி ஒரு நினைப்பும் ஊருக்குள்ள இருந்திச்சு. ஆனால் அந்த உடுக்க ஊருக்குள்ளேயே படிச்ச ராசமுத்து எடுத்துப் பாவிச்சபோது சனம்  ‘ஓஹோ உடுக்கிலயும் கொஞ்சம் விசயம் இருக்கு’ எண்டு நம்பத் தொடங்கீற்றாங்க.  அட திரும்பையும் இவன் உடுக்கோட மினக்கெடப் போறானே எண்டு யோசிச்ச மாமன்காரன்தான் ராசமுத்துவுக்கு ஒரு அரசாங்க வேலையும் எடுத்துக் கொடுதார். ‘கோழிப்பீ அள்ளுற வேலையாக இருந்தாலும் கவுண்மெந்து வேலையா இருக்கோணும்’ எண்டு ஊரில சொல்லுவாங்க. ராசமுத்துவுக்கு கவுண் மெந்து வேலையும் கிடைச்சாப்பிறகு மாமனார் சீதனமாகக் கொடுத்த வீட்டிலேயே செகச்சோதியாக வாழத் தொடங்கினார்.

திண்ண வச்ச அந்த வீடு எண்டைக்கு ராசமுத்துவுக்குக் கிடைச்சிதோ அந்த வீட்டில இருந்த பழக்கங்களும் அப்பிடியே அந்த வீட்டோடையே கைமாறி ராசமுத்துவின்ர நடவடிக்கைகளிலும் தாக்கம் செலுத்திச்சு. ஊருக்குள்ள ஒரு கெளரவமும் கிடைச்சிற்று. அன்னம்மாளுக்கும் ராசமுத்துவுக்கும்,  நாலு புள்ளையள் மூத்ததும், மூண்டாவதும் பொடியள், மிச்ச ரெண்டும் பெட்டையள். மூத்தவனுக்குப் பேர் சேனன். அவனுக்கு எப்படிப் படிப்பிச்சாலும் படிப்பு மூழைக்க ஏறேல்ல புடிச்சு வெளி நாட்டுக்கு அனுப்பி வச்சார். போனவன் அதே போக்குத்தான். முடிச்ச வழியாரோட ஒட்டின ஒட்டு கடைசி வரைக்கும் கழரேல்ல. ஆனாலும் முதன் முதலாக வெளிநாடு போன பெருமையும் ராசமுத்து குடும்பத்துக்குத்தான் சேர்ந்திச்சு. மூத்தபெட்ட ரெத்தினா படிச்சு ஒருமாதிரி கூப்பன் கட மனேச்சர் ஆகீற்றாள். ஆனால் ரெண்டாவது பெடியன் இருக்கிறானே படு சுள்ளான். வளவன் எண்டு அவனுக்குப் பெயர் வச்சிருந்தார் ராசமுத்து.

எவ்வளவு சுள்ளானா இருந்தாலும் பெயருக்கு ஏற்றாப்போல அப்பரோட சேர்ந்து வளவு வேலியடைக்கிறது, தோட்டத்தப் பாக்கிறது எண்டு கொஞ்சம் வேலைகளையும் கவனிக்கக் கூடியவனாகத்தான் இருந்தான். அனால் அந்த சுறுக்கன் இவையள் எல்லாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில பக்கத்து ஊர்ப் பெட்டையொண்டக் கூட்டீற்று ஓடீற்றான். அவ்வளவுதான் ராசமுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த கவுறவத்தில ஒரு கீறல் விழுந்திற்றுது. ரெண்டு,மூண்டு வருசம் வளவனோட தொடர்பு இல்லாமல் இருந்தார். பிறகு  மூத்த பேரன்  ஆனந்தராசா பிறந்ததுக்குப் பிறகுதான் புளங்கத் தொடங்கினார்.

பெட்டையள் ரெண்டுக்கும் நல்ல சீதன,வாதனத்தோட படிச்ச மாப்பிளையளாப் பாத்துக் கலியாணத்தக் கட்டிக் கொடுத்திற்று வீட்டிலேயே இருந்து சாப்பிடும் அளவுக்கு பென்சனும், தோட்டக்காணியளால வாற வருமானமும் இருந்திச்சு. எல்லாத்தையும் விட பழயபடி கூடுதலான நேரம் தன்ர உடுக்கோட மினக்கெடவும் முடிஞ்சது ராசமுத்துவால்.  இப்படியே போய்க்கொண்டிருக்கும்போதுதான் நாட்டில யுத்தமும், இடப்பெயர்வுகளும் வந்திச்சு. இடம்பெயர்ந்து வெவ்வேற ஊர்களுக்குப் போய் கடைசியில கொழும்புவில ஒரு வீடெடுத்து அங்கேயே ராசமுத்துவும், அன்னம்மாவும் தங்கீற்றாங்க. ஒருநாள் கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலடியிலதான் ஆட்டோவில ஏறுவமெண்டு போய்க்கொண்டிருக்கும்போது ‘ஐயாச்சி’ எண்டு யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார் ராசமுத்து. மெலிஞ்சு அச்சுவேலித் தென்னம்பிள்ளையள்போல நெடு,நெடெண்டு நெடுத்த வாடலாக ஒரு பெடியன். பாக்கிறதுக்கு சின்ன வயசில இருந்த தன்ர ரெண்டாவது மகன் வளவன்ர சாயலில இருந்தான். ராசமுத்து இவன் தன்ர பேரனெண்டு கண்டுகொண்டார். ஆனந்தராசாவையும் கூட்டிக்கொண்டு தன்ர கொழும்பு வீட்டுக்குப் போனார். போகப் போக தன்ர ரெண்டாவது மகன விசாரிச்சுக் கொண்டே போனார். பேரன் ஆனந்தராசா தங்கள் குடும்பம் மடுவில இருக்கிற இடம்பெயர்ந்தோர் முகாமில இருக்கிறதாகவும், வருத்தங்களும், தொழிலின்மையும் தங்கள் குடும்பத்த வாட்டிக்கொண்டிருக்கிறதாகவும்  சொன்னான்.

தாய் வழியால் யாரோ வெளிநாடு போக உதவி செய்வதாகக் கூப்பிட்டதாகவும், பிறகு பயணம் குழம்பிச்சு எண்டும், தான் திரும்பவும் மடுவுக்குப் போகப்போறதாகவும் சொன்னான். வயசான பருவத்தில் தளர்ந்திருந்த ராசமுத்துவுக்கு மகன நினைக்கக் கவலையாக இருந்திச்சு. அன்னம்மாளோடையும் கதைச்சு யோசிச்ச பிறகு பேரனெட்டச் சொன்னார், “உங்கப்பனெட்டச் சொல்லு உங்களையும் கூட்டீற்று அகதிமுகாம்களுக்குத் திரியாம ஊரில அந்தக் காணியும் வீடும் சும்மாதானே கிடந்து அழிஞ்சுகொண்டிருக்கு அங்க போய் இருக்கச் சொல்லு”. அன்னம்மாள் பேரனுக்கு சாப்பாடு கொடுத்தார். அந்த வீட்டில் இருந்த சாப்பாட்டு அட்டவணைகளைப் பார்த்துக்கொண்டே அவன் சாப்பிட்டான். கன நாளைக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டிருந்தாலும் அந்த வீட்டில் பாவிக்காத நிலையில் இருந்த உடுக்கைக் கண்டதும் வேக,வேகமாய் சாப்பிட்டுவிட்டு கைகழுவி அந்த உடுக்கை எடுத்து வாசித்தான். அன்னம்மாள் கோபத்தோடு ‘இது கொழும்பு’ அய்யாச்சிகூட வாசிக்கிறேல்ல’ என்று அதட்டினார். ஆனால் ராசமுத்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு ‘ நீ வாசிப்பாயா? உனக்கு வேணுமெண்டா கொண்டுபோ என்றார். பேரனும் புழுகோடு அந்த உடுக்கைக் கொண்டுவந்து மடுவுக்குப் போக இருக்கும் தன் உடுப்புப் பையினுள் பத்திரப்படுத்திக்கொண்டான்.

000000000000000000

ஆனந்தராசா மடுவுக்கு வந்ததுக்குப் பிறகு வளவன் தன் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு தகப்பனின் வீட்டுக்குப் போனார். அங்கே வளவனின் தங்கை பவளராணியின் குடும்பம் இருந்தது. ‘அப்பாடா வருத்த துன்பங்களிலிருந்து ஒருமாதிரி என்ர குடும்பத்தக் காப்பாற்றி என்ர சொந்த ஊருக்கு வந்திற்றன்’ என்று பெருமூச்சு விட்டார் வளவன். சகோதரியின் குடும்பத்தோடு சில மாதங்கள் ஒன்றாயிருந்தவர்களுக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரத் தொடங்கின இறுதியில் வளவனின் குடும்பம் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்களைப்போல வெளியேற வேண்டியிருந்தது. வளவன் தன் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு திரும்பவும் இடம்பெயர்ந்து திரிந்தார் பிறகு தன் மனைவியின் கிராமத்துக்கே சென்று குடியேறினார். ஊரில் ஏதாவது விசேசமென்றால் ஆனந்தராசாமட்டும் வருவான். அவ்வாறு கூத்து ஒத்திகைக்கு வந்திருந்தபோதுதான் தன்னுடைய ஐயாச்சி மரணப் படுக்கையில் இருப்பதால் கொழும்பிலிருந்து அவரின் வீட்டுக்கு கொண்டுவந்திருப்பதாக அறிந்தான். அவன் அந்தச் செய்தியைக் கேட்டு சில மணி நேரத்தில் அவரின் மரணச் செய்தியும் அவனை வந்து சேர்ந்தது துயரம் தாங்க முடியாதவன் உடுக்கின் வழியாய் அழுதுகொண்டிருந்தான்.

00000000000000000

இவையெல்லாம் நடந்தது 2002 ஆம் ஆண்டில். அதன் பின்னர் வாழ்க்கை எத்தனையோ விதமான தருணங்களைக் கடந்துபோனது இப்போ 2019 ஆம் ஆண்டு வளவனுக்கு எழுபத்தைந்து வயது இப்போ. பிள்ளைகளும் வளர்ந்து கலியாணம் கட்டி வெளிநாடுகளுக்கும் போய்விட்டார்கள். இந்த நாளில்தான் பவளராணியின் மகன் வந்து ‘மாமா அம்மா உங்களெட்ட குடுக்கச்சொல்லித் தந்தவ’ என்று ஒரு உறையைக் கொடுத்துவிட்டுப் போனான். வளவன் அந்த உறையைத் திறந்து பார்த்தபோது அதிலே இவர்களின் வேம்படிக் காணியின் உறுதியிருந்தது. 2002 ஆம் ஆண்டு ராசமுத்து போட்ட கையொப்பமும் அதில் இருந்தது.

அந்த உறுதியையும் கொண்டு வளவன் தான் பிறந்த ஊருக்குப் போனார். ராசமுத்துவின் வீடு பூட்டப் பட்ட நிலையில் புறாக்களின் குடியிருப்பாக மாறியிருந்தது. அந்த வீட்டின் முன்னால் நின்றபடி தன் இளமைக் காலத்தையும், தன் பெற்றோரையும் நினைத்துப்பார்த்தார் வளவன். அவரின் கண்ணில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தலையைக் குனிந்தபடி வேம்படிக் காணிக்குப் போனார். அந்தக் காணி இப்போ ராணுவத்தினரின் குடியிருப்பாக மாறியிருக்கிறது. அவர்களுடன் பேசிப்பார்த்ததில் அவர்கள் இப்போதைக்கு எழும்பும் நோக்கம் இருப்பதாய் தெரியவில்லை.

வளவன் அந்த வளவைச் சுற்றி நடந்தார். ‘ஒரே ஒரு நல்ல விசயம் நடந்திருக்கிறது. ராணுவம் காணியைப் பிடித்திருப்பதால் பக்கத்துக் காணிக்காரர் கூட்டி அடைக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள்’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார். திடீரென்று அவர் எதையோ கண்டு அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். அவர் அதைப் பார்த்து விம்மினார் சன்னதம் வந்தவரைப்போல தன் பையிலிருந்த உடுக்கை எடுத்து அடித்தார். அவரின் அந்தக் கோலத்தை புதிதாய் அங்கு முழைத்திருந்த அந்தச் சிறுவேம்பு தனக்குள் உள்வாங்கிக்கொண்டிருந்தது.

மெலிஞ்சி முத்தன்-கனடா

மெலிஞ்சி முத்தன்

 

 

 

(Visited 180 times, 1 visits today)
 
மெலிஞ்சி முத்தன்

கொரோனா நாட்களின் இலக்கிய பதிவுகள்-பாகம் 06-மெலிஞ்சி முத்தன்

வணக்கம் நடு வாசகர்களே, பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு இணைய சிற்றிதழ் முன்னெடுக்கும் ‘கொரோனா நாட்களின் இலக்கியப்பதிவுகள்’ பாகம் 06-ல் உறைபனி தேசமான கனடாவில் இருந்து பிரண்டையாறின் நூலாசிரியர் மெலிஞ்சி […]