வரலாற்றுக்கு இல்லாத குரல்-கவிதை சேரன்

வரலாற்றுக்கு இல்லாத குரல்

சேரன்

நீங்கள் அனுப்பிய வீடியோவைப் பார்த்தேன்
சீனாக்காரன் முகத்தில் மண்ணிறப் பூச்சு

“அதில் என்ன சிக்கல்?” என்று கேட்கிறார் அமைச்சர்
அவர் தமிழர். நிறம் என்ன நிறம்?
நூற்றாண்டு காலமாக
நம் நிறத்தையும் அடையாளத்தையும் சொன்னவர்கள் வெள்ளையர்
ராஃபிள்ஸ் துரையின் வெள்ளைத் தோலை
விட்டு விடுங்கள்
அவரது கதையில் அல்ல நமது கதை

அவரது விதையில் எஞ்சி இருந்த
ஒரே ஒரு வெள்ளை மயிரில் இருந்துதான்
சிங்கப்பூர் உருவானது
அவர்கள் கட்டி எழுப்பிய பெருங்கதை.

நாங்கள் கூலித் தமிழர்
தமிழோ கூலித் தமிழ்.
காற்றை எதிர்ப்பவர்கள்
பெருங் கடலைக் கண்ணீரால் கடப்பவர்கள்

எங்களுடைய கூலிமையிலும் குருதியிலும்
பெருங் கோபுரங்களையும் பணில மாடங்களையும்
எழுப்பினார்கள்
அவை எந்தச் சுழல் காற்றுக்கும் ஆடாது என்கிறார்கள்

எல்லா அறிவிப்புக்களிலும் தமிழ் இருக்கிறதோ இல்லையோ
இங்கே குப்பை போடு
இங்கே மூத்திரம் பெய்யாதே
இங்கே துப்பாதே
என்பவற்றை மட்டும் தமிழில் எழுதினால் போதும்
என்பது துரை சொன்னது

கறுப்பும் மண்ணிறமும்
எமக்கு என்கிறார்கள்.

சிங்கமும் ஊரும் பெயர்ச் சொற்கள்
அவை சீன மொழிக்கல்ல. ஆங்கிலத்துக்கும் அல்ல.

யாருக்கும் இல்லாத சிங்கம் அது என்கிறார்
தம்பு. அவர் நல்ல ஹொக்கியன் தமிழர் அல்லவா?

ராஜரத்தினமும் ஜெயரத்தினமும் எழுப்பிய எதிர்க்குரல்களிலும்
எங்கள் எல்லோருடைய காரமற்ற எதிர்ப்புக் குரல்களிலும்
எஞ்சியது
தொட்டுக் கொள்ள ஒரு துண்டு ஊறுகாய்
என்கிறான் கவிஞன்

இது சரிதானா என மேதகு லீ குவான் யூ வைக் கேட்டேன்
அவர்
சாவின் விளிம்பில் மெய்சோர இருந்த
தன் மனைவிக்குக் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்த நேரம் அது
என் கேள்விகள் இடைப்பிறவரல் தான்

கவிதை என்பது உல்லாசம்
இப்போதைக்கு நாம் தாங்க முடியாத சுமை அது
என்றவர் அவர். அது முன்னொரு காலம்.
இரும்பையும் உருக்கையும் கொண்டாடிய காலம்

மனைவியின் சாப் படுக்கையில்
அவர் வாசித்தவை எத்தகைய கவிதைகள்
எனத் தெரியாது.
ஷேக்ஸ்பியரின் சொனற் ஆக இருக்கலாம்
கிரேக்கத் துன்பியல் மாகாவியங்களின்
சில அத்தியாயங்களாக இருக்கலாம்.
மயில்கள் பற்றியதாக இருக்கலாம்
வாத்துகள் பற்றியதாக இருக்கலாம்

நிச்சயமாக ஆற்றில் அலையும்
செயற்கை வாத்துகளைப் பற்றியதாக
அவை இரா.

அடுத்தமுறை சிங்கப்பூர் வாய்க்காலில் மஞ்சள் நிறத்தில்
ஆயிரமாயிரம் செயற்கை வாத்துக்களைக்
கொண்டாட்ட நாளில் மிதக்க விடும் போது
கறுப்பிலும் மண்ணிறத்திலும் கொஞ்ச வாத்துகளைச்
சேர்த்து விடலாமே என விண்ணப்பம் செய்கிறேன்.

00000000000000000000000

தோல்

சேரன்

நான் பிறக்கிறேன்
தோலைப் பார்க்கிறார்கள்
தோல் மேலானது அல்ல
மேலோட்டமானதும் அல்ல
ஒரே நேரத்தில் அது
ஆழ் கடலடி மண் தரையாகவும்
கலகலப்பும் ஆர்பரிப்பும்மற்ற அலை போலவும்
நெடுந்தூக்கத்தில் இருக்கிறது

மருத்துவப் பள்ளியில்
அறுவைக்கு கிடைத்த முதல் உடல்
கறுப்போ கறுப்பு
வெள்ளை மாணவர்களும்
என் நிறத்தை ஒத்திராத எல்லா மாணவர்களும்
அச்சத்தில்
வெளியே ஓடுகிறார்கள்
நான் தனியே .

அந்தக் கறுப்பு உடலின் தோலை அகற்றுகிறேன்
மற்ரவர்கள்
இன்னொரு உடலின் வெள்ளைத் தோலை
உரிக்கிறார்கள்

பிற்பாடு எல்லா உடல்களையும்
ஒரு பெருந் தட்டில் சுழல விடுகிறார்
எங்கள் பேராசிரியர்
“இதில் எது கறுப்பு ? எது வெள்ளை ?
கேட்கிறார்
சாம்பலுக்கு ஒரு நிறம்
ஒரேயொரு நிறம்

02-05-2020

சேரன்-கனடா

(Visited 254 times, 1 visits today)
 
சேரன்

யாழ்ப்பாணம்-கவிதை-சேரன்

யாழ்ப்பாணம் என்னுடைய பட்டினத்துக்கு மீண்டுள்ளேன். பல்லாண்டு காலக்கண்ணீர் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. என் நெல்லி மரத்தை அவர்கள் வெட்டி விட்டார்கள் மலை வேம்புகளையும் கமுகையும் அவர்கள் விற்று […]