யாழ்ப்பாணம்-கவிதை-சேரன்

யாழ்ப்பாணம்

சேரன்

என்னுடைய பட்டினத்துக்கு
மீண்டுள்ளேன்.
பல்லாண்டு காலக்கண்ணீர்
என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

என் நெல்லி மரத்தை அவர்கள்
வெட்டி விட்டார்கள்
மலை வேம்புகளையும் கமுகையும் அவர்கள்
விற்று விட்டார்கள்.

என் கவிதைகளுக்கு மணற்றிடரையோ
கடலோரக் காணித்துண்டையோ பரிசளிக்க வேண்டாம்
ஒரு முள்முருக்கம் பூவைத்தான் கேட்டேன்.

முடிய மறுக்கும் கொட்டாவியிலும்
எரிய மறுக்கும் வாழைத் தண்டிலும்
உப்பு நீர்க் கிணறுகளிலும்
செயற்கை மருந்துகளால்
வீங்கி எழுந்த ஆண்குறிகள்
போன்ற கோவிற் கோபுரங்களிலும்
நாங்கள் தற்கொலை செய்கிறோம்

0000000000000000000000000000

பகல்

மேசையில் தூங்கும் அப்பிள்
அதன் மருங்கிலே உடைந்த கண்ணாடிக் கிண்ணம்
மூலையில் தூங்கும் பூனை
அதன் கனவிலே எப்போதும்
மீன் அல்லது புலி அல்லது பறவை
அல்லது இரவில் கொடூரமாகக் குரலெழுப்பும்
ஆந்தை.

வெய்யில் மேலெழுந்து அகன்று போக
புணர மறுக்கும் பழைய காதலியுடனும்
பழங்காலக் குகைச் சித்திரம் போன்ற
அவள் நினைவுகளுடனும்
மாலை வருகிறது

இன்னொரு மையல். இல்லையேல்
சமையல்.

சேரன்-கனடா

சேரன்

 

(Visited 131 times, 1 visits today)
 
சேரன்

வரலாற்றுக்கு இல்லாத குரல்-கவிதை சேரன்

வரலாற்றுக்கு இல்லாத குரல் நீங்கள் அனுப்பிய வீடியோவைப் பார்த்தேன் சீனாக்காரன் முகத்தில் மண்ணிறப் பூச்சு “அதில் என்ன சிக்கல்?” என்று கேட்கிறார் அமைச்சர் அவர் தமிழர். நிறம் என்ன நிறம்? […]