அந்திப் பொழுது-மொழிபெயர்ப்புக் கவிதை-வாசுதேவன்

அந்திப் பொழுது-François COPPEE -1942-1948

வாசுதேவன்

ஒரு பிரியாவிடைபோல் அந்திக்கருக்கல் இதமானதாகவும்
கவலையுற்றதாகவும் இருக்கிறது
வீழும் இருள் தன்திரைகளை மெதுவாக விரிக்கும்
மந்தமானதும் நீலமானதுமான வானில்,
ஏற்கெனவே கிழக்கில் நாணும் ஒளிகளும்,
நட்சத்திரங்களின் தெளிவற்ற எதிர்பார்ப்புகளும்
இன்னமும் ஒளியுடனிருக்கும்மேற்கை
அங்கமிழும் அழகியவோர் ஆதவன் பற்றிய ரோஸ்நிற
ஞாபனத்தைத் தேடியவாறு ரசித்துக்கொள்கின்றன.

அந்திக்காற்று அமைதியுறுகிறது
காற்றுடனிசைந்து சிறுதுடிப்படையும் இலைகளுடைய
மரங்களிலும் அவற்றில் ஒன்றேனும் அசையவில்லை.
ஏரி தன்நீர்ப்பரப்புக் கண்ணாடியில் விம்பிக்கும்
நாணல்களில் அசைவின்மை குடிகொள்கிறது.
உணர்வுற்ற வாசனையாக ஒவ்வொரு மலர்களும்
புனிதமாக ஆவியாகின்றன
மைனாக்கள் இன்னமும் பாடவில்லை.

நீ விருப்புற்றால், அன்புக்குரியவளே,
நித்தியமான எம் ஒப்புவிப்புகளை
மென்குரலில் பரிமாறிக்கொள்வதற்காக,
மலையின் வளைபாதையில் செல்வோம்
சாயும் உன்நுதலை நோக்கி என்நுதல் சாயும்
எம்முத்தங்கள் முடிவுறா இசையாய் பரிணமிக்கும்
தம் கூட்டினுள் விழித்து, இந்நேரத்தில்
இவ்விசை நாணமற்றதெனப் பறைவைகள் கண்டு
எந்த மைனாவோ அன்றில் எந்த வண்ணப்றவையோ
சூரியன் உறங்கிவிட்ட இப்பொழுதில் கலவிகொள்ள
இத்தனை காம இச்சைகொண்டுள்ளதென வினவும்.

000000000000000000000000000000

பட்டப் பகலில் ஒரிரவிசை- Jules Supervielle (1884 -1960)

எம்மெளிமையான மேலங்கிகளுள் சூரியன்கள் உறங்குகையில்,
எம்முடலை வடிவமைக்கும் இருட்பிரபஞ்சத்துள்
எம்மில் எம் விழிகள் அறியாதவற்றை நோக்கும்
நரம்புகள் தம்மைவிடவும் மெதுவான எம் தசையின்
ஆழத்தில் எம்மை முந்திக்கொள்கின்றன,
நடுநடுங்கும் வைகறைகளை தசையிலிருந்து இடுங்கி
அவற்றின் மின்மினிப் புற்களால் எம் தொலைவுகளை
நிறைக்கின்றன.

எம்குருதியினாலாக்கப்பட்ட வெளியைக்
கொண்ட உலகமது.
எப்போதும் மீள்பிறப்பெடுக்கும் செம்பறவைகள்
அவற்றை முன்நடத்தும் இதயத்திற்கருகாமையில்
பறப்பதற்குக் கடினம் கொள்கின்றன
ஆனால் அதிலிருந்து விலகிச்செல்லல் என்பதோ அழிவாகும்
பொய்ச்சுனைகளின் அருகே தாகத்தால் அழிவுறுமிடமான
மிகக் கொடூரத் தட்டைவெளிகள் எம்மில்தானுள்ளன.
இவ்வாறுதான் நாம் மற்றைய மனிதர்களிடம் செல்கிறோம்
ஒவ்வொருவரும் சிலவேளைகளில் மற்றவரின் செவிகளுடன் பேசியபடி

மொழியாக்கம்: வாசுதேவன்- பிரான்ஸ்

வாசுதேவன்

 

 

(Visited 103 times, 1 visits today)