காடுலாவு காதை-பாகம் 16-தமிழ்க்கவி

தமிழ்க்கவிபொங்கல் படையல் எல்லாம் முடிந்து இலையை வீசப்போன மலர் முதன்முதலாக கண்ட காட்சியில் விறைத்துப் போனாள். சுமார் ஆறடி நீளம் வரும் வெள்ளித்தகடு போல மின்னிய உடலுடன் அந்த நாகம் தலையை உயாத்தி இவர்களையே பார்த்தது. அவள்காட்டிய திசையில் அனைவரது பார்வையும் நிலைத்து நிற்க, கந்தப்பு ஒரு இலையில் பொங்கல் சோற்றை அள்ளிப் போட்டுக் கொணடு போய் அந்த கிணற்று மேட்டில் தள்ளி நின்றவாறே வைத்துவிட்டு வந்தான்.

அரவம் எந்த அரவமுமின்றி தலையை உயர்த்தியவாறே நின்றது. இவர்கள் பொருட்களை எல்லாம் கட்டிக்கொண்டு கிணற்றடியை விட்டு விலகிச் சென்றனர். கொட்டிலுக்குள் நுழையும்போது லெச்சிமி கேட்டாள்,

“அப்பூ…அது புக்கைய தின்னுமா ?” என்று.

“கட்டாயம் தின்னும்“ என்றான் கந்தப்பு.

“நான் போய் பாத்திட்டு வாறன்” எனறவாறே பதிலுக்கு காத்திராமல் லெச்சிமி கிணற்றடியை நோக்கி ஓடினாள்.

“எடியே நில்லடி நில்லு” என்று கத்திய பாக்கியத்தை அவள் சட்டை செய்யவில்லை. சற்று நேரத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தவள், பேசாமல் நின்றாள்.

“என்னடி திண்டிட்டுதே” என்ற மணியனின் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

கந்தப்பு வியப்புடன் அவளை நோக்க, “அதப்பூ…அதை காணேல்ல” என்றாள்.

“புக்கை கிடக்கே”

“அதையுங் காணேல்ல”

“அப்ப அது மனிசி பிள்ளையளுக்கு கொண்டு போயிற்றுதாக்கும்” என்றான் கந்தப்பு கொடுப்புக்குள் சிரித்தவாறே.

காடுகளை வெட்டி அழிக்கும்போது, மனிதர்கள் செவ்விந்தியர்களை அழித்த அமெரிக்கர்களைப்போல அங்கு பல காலமாக வாழ்ந்து கொண்டிருந்த சீவராசிகளையும் இரக்கமின்றி அழித்தாக வேண்டும். அதுதான் நியதி. ஆனால் இந்த நாகபாம்புகள் மட்டும் மனிதர்கள் வாழும் பகுதிகளிலேயே வாழ்கின்றன. அவை உணவுக்காகவும் மனிதர்களை சார்ந்து வாழ்வதை, கந்தப்பு லெச்சிமிக்கு சொன்னான். அது இரண்டு வளவுகள் தள்ளி புதிதாக காடுவெட்டி வீடுகட்டிய ராமசாமியின் வீட்டுக்குள் ஒரு நாகம் தினசரி வந்து விடுவதை கேள்விப்பட்ட போதுதான்.

“பாம்பை கலைக்க அது தலையை தூக்கி படம் எடுத்துதாம்.”

“நாகம் படம் எடுத்தா அது தாக்குதலுக்கு தயார் எண்டுதான் அர்த்தம். நாங்க சண்டைக்கு வரேல்லை எண்டதை காட்ட நாங்கள் விலகிப் போகோணும். அதுக்கு துரத்திற பழக்கமெல்லாம் இல்லை.  அதால அது போயிரும், அவ்வளவுதான்.”

“அது மனிசரோட இருந்து என்ன தின்னும்.”

“விரதம் வந்தா பாம்பு வரும் எண்டு சொல்லுவினமே. அதுக்கு தாளிக்கிற மணம் பிடிக்கும். அதோட மனிதக்கழிவுகளை அது விரும்பிச் சாப்பிடும். அதிகமான மனிதர்கள் மலசலம் கழிக்க போற இடத்திலதான்  நாகம் கடிச்சிருக்கு. அதோட கழிவு துணியளுக்க போய் படுத்திரும். ஆனா அது நல்ல பாம்பு எண்ட பெயருக்கு தக்க மாதிரி தன்னை தாக்காமல் ஆரையும் தாக்காது.”

“ஓ…அதுதான் எல்லாக் கோயில்களிலும் அதை வச்சு கும்பிடுறமோ ?”

“அதை கும்பிடுறதுக்கு வேற காரணம் இருக்கு அதெல்லாம் இப்ப சொன்னா உனக்கு விளங்காது”

கந்தப்பு அந்தக்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் கொடிய நச்சுப்பிராணிகளுடன் சேர்ந்தே வாழ வேண்டியிருந்தது. பாறைக்குள்ளேயே வாழும் பாம்புகளைம் பற்றைகளுக்குள் வாழும் பாம்புகளையும். ஈரமண்மணத்தால் வரும் பாம்புகளையும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வாழும் பாம்புகளையும். நாம் அவை வருகின்ற இடத்தில் சந்திப்போம். இவைதவிர சிலந்திகளில் கொடிய விசமுள்ள புலிமச்சிலந்தியும்  விதவிதமான முதலைப்பல்லிகளையும் பாம்புகளின் முட்டைகளையும் குட்டிகளையும் அவற்றின் இயல்புகளையும், காட்டு வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அவர்கள் கற்றார்கள்.

கிணற்றை வெட்டி வெளியே கொட்டிய மக்கி கிரவல் என்பவை இரு பெரும் மலைகளைப்போல கிணற்றின் இருபுறமும் நிமிர்ந்தன. இதற்கான மரங்களை வெட்ட பெருங்காட்டுக்கு போகவில்லை. இரு கெவட்டைமரங்களாக மூலை வேலிக்குள் நின்ற பெரிய ஆத்திமரத்தை வெட்டியாற்று. பார்மரம் எப்பவும் உறுதியானதாக வேண்டும் நேரே சுடலைப்பக்கமிருந்த முதிரை மரத்தை தறித்து ஒரு பார்மரமும். பாலை மரத்தில் ஒரு பார்மரமும் எடுத்தாயிற்று. இனி கைபிடிக்காக ஒரு காயாத்தடி. அவ்வளவுதான் உறுதியான கயிறொன்றை கெவட்டை வளையில் போட்ட உழண்டியில் மாட்டி அதில் கூடையை இணைத்து கிணற்றுக்குள் விட மேலே இருவர் நின்று நிரம்பிய கூடையை மேலே வரும்படி இழுத்துச் செல்வர். கூடை மேலே வந்ததும் உழண்டியின் அருகே நிற்பவர், “ஆறிவா’ என்பர் இப்போது இழுத்தவர்கள் சற்று இளக, கூடையை கரைக்கு இழுப்பார் உழண்டிக்காரர். வந்த மண்ணை தூக்கிச் சென்று குவியலில் சேர்க்க இருவர் இருப்பர்.

கிணற்றுக்குள் கந்தப்பு ஒரு வாரமாக வெட்ட வெட்ட லெச்சிமியும் மணியனும் சேர்த்து குவித்த மண் இன்று வெளியே வரும். இழுக்க இருவர், தூக்க இருவர், கிணற்றுக்குள் ஒருவர். ஆக மொத்தம் ஐந்து பேர். ஒருவர் கந்தப்பு. மீதம் நான்கு பேருக்கும் நாட்கூலி இரண்டரை ரூபா. எனவே அன்று கூலியாக பத்து ரூபா போய்விடும்

மீண்டும் தனியனாக கந்தப்பு நாலைந்து நாட்களுக்கு வெட்டுவான். வழக்கம்போல லெச்சிமியும் மணியனும் மண்ணை குவிப்பார்கள். மண் ஒரளவு சேர்ந்ததும் நான்கு கூலியாட்களை போட்டு மண்ணை வெளியே இழுத்துவிடுவான்.

கிணற்றுக்குள் இப்போது சலசலவென்று தண்ணீர் காலுக்குள் நின்றது. கோலுகின்ற மண்ணிலும் நீர் வடிந்தது. காலையில் கொஞ்சம் நீர் இறைக்க வேண்டியும் வந்தது. தோட்டக்கிணறு அகலமாகவே வெட்டிக்கொண்டிருந்தான். வேலைக்கூலியாக வந்தவர்களுக்கு பகல் தேநீர் கொடுப்பதற்காக அழைத்தபோது கறுப்பையா கந்தப்புவுக்கு ஒரு ஆலோசனை சொன்னான்.

காடு விரியும்

தமிழ்க்கவி

தமிழ்க்கவி

 

(Visited 71 times, 1 visits today)