காடுலாவு காதை-பாகம் 14-தமிழ்க்கவி

தமிழ்க்கவி
ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

பிள்ளை செத்த துயரம் மாறி கண்ணில் ஈரம் காயுமுன் அவன் கிணற்றில் இறங்கி வேலை செய்தாலும் அவனுக்குள் ஒரு ஓர்மம் குடி கொண்டிருந்தது. ‘ச்சைக், ஒவ்வொரு நாளும் இந்த பாடு பட்டு  வேலை செய்தாலும் தண்ணி காணாதவரை ஓயுறதில்லை’.

அவன் உச்சியிலிருந்து ஒரு இளக்கயிற்றை தொங்க விட்டிருந்தான். அதில் முழத்துக்கு முழம் முடிச்சிட்டிருந்தான். எத்தனை முழம் வெட்டியிருக்கிறேன் என்பதை அடிக்கடி அளந்து திருப்திப் பட்டுக்கொண்டிருந்தான். (ஒரு வேலிக்கட்டை போடவே கிடங்கு வெட்ட முடியாத இளைஞர்கள் வாழும் இந்தக்காலத்தை அவன் நினைத்தும் பார்த்திருப்பானா) பதினாலுமுழம் முற்றாகி பதினைந்தாவது முழம் வெட்டிக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் மண்வெட்டி மண்ணையும் மக்கியையும் குவிக்க மட்டும்தான். மற்றப்படி வெட்டு பிக்கான் வெட்டுத்தான்.

கிணற்றை அளந்துவிட்டு நெற்றி வியர்வையை வழித்து விட்டு பிக்கானை ஆவேசமாக போட்டு நெம்பினான். கறக்கென்று இறங்கிய பிக்கான் சறுக்கி உள்ளே பாய்ந்தது. அப்படியே அதை நெம்பி மேலே இழுக்க ஒரு கொத்தரிசி வேகக்கூடிய பானையளவு ஒரு போளைக்கல் உருண்டு வெளியே வந்தது. அதிர்ச்சியில் திகைத்த கந்தப்பு தொடர்ந்தும் அருகருகாக பிக்கானைப் போட்டு நெம்ப சிறுதும் பெரிதுமாக போளைக்கற்கள் உருண்டு கிளம்பின.

பாறைகள் சின்னாபின்னமாக உடைந்து தெறித்தாலும் அவை உருளை யாவதில்லை. நீரோட்டத்தில் சிக்கி ஓடியோடித்தான் இவை உருளையாகும். இந்த உருளைகள் இந்த மட்டத்தில் நீரோடியதற்கான அறிகுறி.

“ஐயா! வைரவரே தண்ணி கிட்டத்தான் கிடக்கு. பெருமானே அருள் குடய்யா…” என்று மனமார கைகூப்பி வேண்டிக்கொண்டான். சிறு சிறு பானை அளவினதான போளைக் கற்களின் கீழ் மண்ணில் ஈரலிப்பு தெரிந்தது. ஆவலை அடக்கமாட்டாமல் கையை வைத்துப் பார்த்தான். மண் சில்லிட்டிருந்தது. மேலும் அவ்விடத்தை அகலமாக்கி ஒரு ஆள் படுக்கக்கூடிய அளவு தொட்டிபோல ஆழப்படுத்தினான். மண்ணை இழுத்து ஒரு புறமாகவும் கற்களை ஒருபறமாகவும் குவித்தான். அந்த தொட்டியில் சம்மணமிட்டு அமர்ந்தான். உடல் பூரித்தது. கோவணத்தை இறுக்கிக் கொண்டு தவளைப் பாச்சலில் கிடந்து மண்ணில் கன்னத்தைப் பதித்தான். காதுக்குள் கிசுகிசுவென ஊரும் சத்தம் தெளிவாகக் கேட்டது. முடிச்சிட்டு வைத்திருந்த இளக்கயிற்றை எடுத்துமேலிருந்து அளந்தான். பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதினாலு, பதினாறு, …இன்னும் கொஞ்சம்…நேரம் மாலை நான்கு மணியாகிவிட்டது.

இன்று பூரணை. மண்வெட்டியையும் பிக்கானையும் மாறி மாறிப்பாச்சினான். போளைகள் இப்போது சலனமின்றிப் பிரிந்தன. ஒரு தட்டைப்படை குறுக்கிட்டது. பிக்கானுக்கும் அசைய மறுத்து எதிலோ மாட்டிக்கொண்டுநின்றது. கந்தப்பு வெறியோடு தயாராக இருந்த ஆப்பு ஒன்றை எடுத்து மாட்டிய இடத்தில் வாகாக வைத்து சுத்தியலால் இறுக்கி ஆப்பு நிலைப்பட்டதும் பதினாலு றாத்தல் சிலக்ஸை எடுத்து ஓங்கி அடித்தான். ஒன்று, ரெண்டு, மூன்று, பாறை நெக்குவிட. தண்ணீர் சீறி எழுந்து அவன் முகத்தில் பாய்ந்தது. நெஞ்சடைத்தது. மகிழ்ச்சி தாளாமல் பிக்கானையும் சிலக்ஸையும் தூக்கி வீசிவிட்டு துள்ளி ஆடினான்.

“வாறாளாம் வாறாளாம் முத்துமாரியம்மன்.”

“மடைதிறந்தோ வாறாளாம் முத்துமாரியம்மன்.”

ஆடி அடங்கி குவித்தமண்ணில் அமர்ந்தவன் ஒரு நிமிடத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு, இரண்டு மூன்று போளைக்கற்களை உருட்டி ஊற்றை மறைத்தான். பின்னர் மேலேறி தன் காவல் குடிலுக்குப்போய் ஒரு மண்குடத்தை எடுத்துக் கொண்டு வந்தான். மெதுவாக உடைந்த கற்களை விலக்கி ஊற்றைத் திறந்து இரு கைகளாலும்  நீரைக்கோலி குடத்தை நிறைத்தான். அதை ஒரு இலைக் கொப்பை கொண்டு மூடி பக்குவமாக கிணற்றின் உள்ளேயே வைத்துவிட்டு, ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மேடேறியபோது இரவு எட்டுமணியாகிவிட்டது. பூரண நிலவு தன் பாலொளியை பாரெங்கும் படர விட்டிருந்தது. கந்தப்புவின் மனதும் அந்த ஒளி நிறைந்திருந்தது.

“சின்னையாண்ணை…சின்னையாண்ணோய்” பாக்கியம்தான் பதற்றமாக கூப்பிட்டாள். ஒரு ஏக்கருக்கு அப்பால் குடியிருந்த சின்னையா இந்த அழைப்புக் கேட்டு குடிலுக்கு வெளியே வந்தார்.

“என்ன பாக்கியம்”? அங்கிருந்தே வினவினார் அவர்.

“இன்னும் இவரக்காணேல்லயண்ணை. எங்கயும் மான் கூப்பிட்டுக் கேட்டா போயிருப்பார். அதுக்கும் லையிற் இஞ்ச கிடக்கண்ணை பயமாக்கிடக்கு”

அ…அ…வருவான் ஆரோடும் கதை எம்பிட்டா கதைச்சிக் கொண்டு நிப்பான்.” சின்னையா அவளை நோக்கி வந்து கொண்டே சொன்னார்.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

 

(Visited 73 times, 1 visits today)