ச(க)ர்ப்ப நிலம்-நூல் விமர்சனம்-தமிழ்க்கவி

தமிழ்க்கவிமிக சாதுரிமாக சில உண்மைகளை புனைவுக்குள் புகுத்தி உண்மைகளையும் பொய்யாக்கி துவழ்கிறது நாவல். “ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை”அந்த மட்டில் இது புலம்பெயர்நாடுகளில் சர்க்கரையாகலாம் என்றாலும,; அங்கும் சம்பவங்களுடன தொடர்புபட்டவர்கள் நிரம்பிவிட்டதால் கஸ்டம்தான்.

ஒரு காலத்தில் குணா கவியழகனின் எழுத்துக்களை விரும்பிப் படிக்க முடிந்தது. அவரது அரசியற் கல்வியானது திரு.மு. திருநாவுக்கரசு அவர்களின் அடியொற்றியது. அது அவரது மேடைப்பேச்சுகளிலும் அவதானிக்கப்பட்டது. எம்மைப்போல அது பல்கலைக்கழக பேராசிரியர்களின் கற்பித்தல், அனுபவம் என்பவற்றைக் கொண்டதல்ல. எனினும் அவர் இயக்கத்தின் கல்விப்பிரிவின் பொறுப்பாளராகவிருந்தார். இவரே சகல பிரிவினருக்குமான அரசியல் வகுப்புகளை நடாத்தும் பொறுப்பிலிருந்தவருமாவாh.; அது தவிர இறுதிக்காலங்களில் ‘விடுதலைப்புலிகள்’; என்ற இயக்கத்தின் முக்கிய பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் இருந்தார். மக்கள் இவரது அரசியற் பத்திகளையே பெரும்பாலும் பத்திரிகைகளில் படித்து வந்தனர் எனக்குத் தெரிய பெண்கள் பத்திரிகையான “சுதந்திரப்பறவைக்கும்”-கூட, இவரே தன் மனைவிக்காக ஆசிரிய தலையங்கம் எழுதினார் என்பது, எங்களில் பலருக்குத் தெரிந்து, அது பெரிய விவகாரமாக்கப்பட்டது என்றாலும் தமிழ்ச் செல்வனின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்.

இதனால்தான் அவர் துணிந்து ‘நஞ்சுண்டகாட்’டை அப்பவே எழுதினார். அது அப்பவே தடை செய்யப்பட்டது. அதிலுள்ள பயிற்சிமுகாம்பற்றிய செய்திகள் முன்பே வெளிவந்திருந்தால் புதிய போராளிகளை இணைப்பது முடியாமலே போயிருக்கும்.

குணா கவியழகனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒவ்வொரு விடயங்களையும் தத்துவபூர்வமாக விளக்கும் எழுத்துக்கள் எனக்குப்பிடிக்கும். அதுவும் நேராக சொல்லக்கூடிய ஒரு விசயத்தையும் மிக அழகாக புதிர்போட்டு விளங்கவைக்கும் தன்மை கொண்டது அவரது எழுத்து. அந்த பிரத்தியேக எழுத்து நடைபற்றி நான் பலமுறை வியந்து போயுள்ளேன். ஒரு ஒரேயொரு கருத்தைப்  பல கோணங்களில் ஆய்வு செய்து விபரிக்கக்கூடிய திறமை இவருக்குண்டு. அரசியல் ஆய்வாளர்களாக சிலரை இயக்கம் தேர்வு செய்தபோது இவரும் அதற்குள் கொண்டுவரப்பட்டார்.

“ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது” முது மொழி என்றாலும் இது இப்போது வழக்கொழிந்து விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. காரணம் ஏடுகளில் எழுதப்படுபவை பலருடைய சம்பாத்தியத்துக்கும் வாழ்க்கைக்கும் பெருமளவில் தொண்டு புரியக்கூடியதாக அமைகின்றன. இந்த வகையில் அண்மையில் வெளிவந்துள்ள குணா கவியழகனின் “ கர்ப்பநிலம்” என்ற புத்தகத்தை கூறலாம். புனைகதைகளின் ஒரு பெரும் தத்துவமாக இதை அவர் நகர்த்த முனைந்தாலும் அது மிக, மிகமிக வருத்தத்துடன் நகர்கிறது.  பெரும் சிரமங்களின் மத்தியில் இந்த புத்தகத்தைப் பெற்றேன்.

அதை பெற்றதும் கொஞ்சநேரம் ஆரத்தடவி மகிழ்ந்து கையில் பெருமையுடன்  வைத்திருந்து, வீட்டில் ஆரவாரமில்லாத ஒரு நல்ல பொழுதில் திறந்து படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் முன்னுரைகளை இறுதியாகவே படிப்பேன். காரணம் சில முன்னுரைகள் எம்மை சுதந்திரமாக எமது நோக்கில் புத்தகம் வாசிப்பதை திசை திருப்பி விடுகின்றன. பல புத்தக வெளியீடுகளில் விமர்சனத்திலேயே விமர்சகர் புத்தகத்தை பக்கம் பக்கமாக வாசித்து ஒப்பிப்பது போல முன்னுரைகளிலும் நடந்து விடுகிறது.

ஒரு வகையில் இதற்காகவே நான் வெளியீடுகளில் புத்தகம் கைக்கு வந்ததும் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி விடுகிறேன். நல்ல வேளையாக கர்ப்பநிலத்துக்கு முன்னுரை எதுவும் இல்லை. என்சொல் என்று ஆசிரியரின் சொல் மட்டும் ஒரு பக்கத்தில் அமைகிறது. வலு சுதந்திரமாக, புத்தகத்துள் இறங்கிவிட்டேன்.

மிகக் கடினமான பயணமாக அது இருந்தது. குடும்பங்களின் பின்னலில் மனம் ஒட்ட மறுத்தது. சம்பவங்களைத் தொகுப்பதில் கதாசிரியரியரின் திறமை வெளிப்படாது  ஒருவித அலுப்பே நிரம்பிக் கிடக்கிறது. சினிமாக்களில் திகைப்பான ஒருநிலையில் ரசிகர்களைக் கொண்டு வந்துவிட்டு ஒரு ‘டூயட’ போடுவார்களே அதுபோல, மனம் சம்பவக்கோர்வைகளில் லயித்துப்போகவில்லை. பாத்திரங்கள் ஒரு வாசகனைக் கட்டிப்போடும் திராணியற்றிருப்பதால் சம்பவங்களை கதை தனது பற்றுக்கோடாக கொண்டு செல்லமுனைகிறது. ( நல்ல வேளையாக குடும்ப வாரிசுநிலை பின்னால் தரப்பட்டுள்ளது. அது இல்லாது போனால் எல்லோரும் அநாதைகளே மிக முக்கியமாக நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்).

ஒரு காதல். கதைமுடிவில் அது காதலல்ல காமமே என்பது உறுதியானாலும் ஆரம்பத்தில் அது சித்தரிக்கப்படும்போது மிகக்கடினமான எண்ண ஓட்டங்களைக் கொண்டு விபரிக்கப்படுகின்றது. அந்த இரண்டு மனங்களுக்குமிடையே நடக்கும் போராட்டம் பின்னணியுடன் பத்துப்பன்னிரண்டு பக்கங்களில் வந்தாலும் ரொம்ப அலட்டலாக இருந்தமையால்  எனக்குப் பக்கங்களை கடக்க வெகு சிரமமாக இருந்தது.

கதை என்னவோ சூரியக்கதிர் நடவடிக்கைக்குள்தான் தொடங்குகிறது என்றாலும்  அந்த வைரமாளிகைக்கிழவர் எப்படி மறுஜென்மம் எடுத்தார் என்பது புரியவேயில்லை. நானும் யாழ்ப்பாணத்துக்கதான் அவரைக்காணாமல் திரிஞ்சனோ?! கவியழகனின் வயதுக்கு அந்தக்கிழவரை அவர் கண்டிருக்க வாய்ப்பே இல்லை. உயரமான வைரமாளிகை எனற பட்டியை அணிந்து கொண்டு

“வந்தா ஒருலச்சம் போனா அம்பேயம்”

என்று தேசிய ஆஸ்பத்திரி லொத்தர் டிக்கற் விற்ற அந்தக்கிழவருக்கு அறுபத்து ரெண்டாம் ஆண்டே… வயது அறுபதுக்குமேல இருக்குமே..

நாகமணி, கிளி குடும்பத்தைச்சுற்றி ஒரு பெருங்கதை சில உபகதைகளுடன் திரிகிறது. இதில் முக்கிய நிகழ்வு என்னவென்றால் நாகமணியர் காணுகின்ற கனவு, இருந்தாற்போல  சூரியக்கதிர் போர்க்களத்துள் இறங்கி ஒரு நீச்சலடித்துவிட்டுத்திரும்பி, கொழும்பு அரசியலுக்குள் நுழைந்து விட்டது. அங்கிருந்து அவர் செய்யும் விவகாரமான செயல்களாவன, மனிதர்களின் அந்தரங்கங்களை அருகிலிருந்தே குறிப்பெடுத்ததுதான். அவை கதைக்கு எவ்விதத்திலும் தேவையற்றதாயினும், கவர்ச்சிகருதி புகுத்தியிருப்பாரோ…?

நிலம் விட்டு வெளியேறிய சம்பவங்களும் மிக முக்கியமானது,  நாவற்குழி வீதியில் ஒரு பிரசவம் நிகழ்கிறது. போர்க்காலங்களில் இப்படி எத்தனையோ பிரசவங்கள் நடந்துள்ளனவாயினும். கண்டவரைக்கேட்டு கதாசிரியர் பார்க்கும் பிரசவம்‘நண்பன்’ படத்தில் விஜய் பார்த்த பிரசவத்தை விஞ்சி எங்கோ போய்விட்டது. யாராவது அத்தகைய கொலைமுயற்சியில் இறங்க வேண்டாமென இந்த நூல் விமர்சனத்தின் ஊடாக ஒரு மருத்துவ தாதியாக இருந்தவள் என்ற முறையில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சூரியக்கதிரின் மனிதப்பேரவலத்தை இப்படி கேலிக்கூத்தாக்கி  இருக்க வேண்டாம். அன்றைய நாளில் அந்த மக்கள் கூட்டத்துள் நானும் நடந்தேன் என்பதாலும் மட்டுவிலில் மட்டுமல்லாமல் தென்மராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் திரிகிற வேலையே செய்ததாலும் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். வேதனை சுமந்த மக்களின் வாழ்க்கையை நாகமணியர்  உறவுகளுடன் சுருக்கிவிட்டார்.

‘சைக்’ தொடங்கியது முதல் எதிர் கருத்துக்களையே எழுதுகிறேனே எதாவது நல்ல கருத்து இருக்காதா ? என மறுபடி மறுபடி புத்தகத்தை புரட்டுகிறேன். கடைசியில் வறுமை காரணமாக ‘காமென்ரு’களில் தைத்துப் பிழைக்கும் பெண்களையும்…கேவலமானவர்களாக்கி தன் சொந்த வரலாற்றை முடித்திருக்கிறார். இது கர்ப்ப நிலமல்ல தமிழர்கள் மீது ஏவப்பட்ட சர்ப்பநிலம்.  என்பதை அவரது என்சொல்லிலேயே அவர் குறித்துரைக்கிறார்,

“மனிதர்கள் தாம் ஏற்கிற பாத்திரம்போலதான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச்சிக்கலுக்குள் மாட்டிவிடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள்”

தமிழ்க்கவி- இலங்கை 

தமிழ்க்கவி

(Visited 66 times, 1 visits today)