காடுலாவு காதை- பாகம் 19-தமிழ்க்கவி

தமிழ்க்கவிஊரெல்லாங் கடன் பட்டிட்டு என்னய விட்டிட்டு போயிராதண்ணை” என்று கெஞ்சிய ராமசாமிக்கு வழியில் யாராவது விசாரித்தால் இதுதான் பெயர் என்று அண்ணனும் தம்பியும் மாற்றிக் கொண்டார்கள். இவர்களை காண்பவர்கள் ஊர்ப்பக்கம் போனாலும் அவர்கள் பெயரை சொல்லி விசாரிப்பவர்களுக்கு தகவல் போகாது என எண்ணிக் கொண்டனர். கால்கள் சலித்தன. அண்ணனின் குழந்தையை இப்போது அவன்தான் சுமந்து நடந்து கொண்டிருந்தான்.

“என்னங்க பக்கத்தில எதனாச்சும் சத்திரம் இருக்கா பாருங்க ஒரு நா தங்கிக்கிரலாம்” சுப்பம்மா இரந்தாள் சின்னஞ்சிறு பிள்ளைகள் வாடிப்போய் நின்றன. நல்லுசாமி ஏற்கெனவே நொந்து போயிருந்தான். அவன் ஒரு தொய்வு நோயாளி தொடர்ந்து நடக்க நடக்க அவனது மூச்சு மூசிக் கொண்டிருந்தது. இந்தாப்பா ராமசாமி சித்த பாருப்பா கோயில் மடம் எதுனாச்சும் இருக்கும்.” என சத்தமிட்டான். அண்ணியின் அருகே பிள்ளையை இறக்கி விட்டவன். பாதைக்கு ஓடிப்போனான்.

ராமசாமி இருபது வயதை நெருங்கிக் கொண்டிருந்தான். மெலிந்த தோற்றம் பூஞ்சை உடம்பு பாதையோரம் நின்று போவோர் வருவோரிடம் விசாரித்து ஒரு மடத்தை கண்டு பிடித்தான். முதலில் ஓடி அதை பார்த்தபின்  மரநிழலில் தங்கவைத்த அண்ணனிடம் வந்தான்.

“அண்ணிகூட கொழந்தைங்களையும் கூட்டிட்டுப் போப்பா நா பொறண்டுக்கே வார்றேன்.” என்றான் நல்லுசாமி

பிள்ளைகளையும் அண்ணியையும் மடத்தில் விட்டபின், திரும்பி நடந்தான் ராமசாமி. ஒரு பூவரசு மரத்தில் சாய்ந்து கிடந்தான் நல்லுசாமி. ஒவ்வொரு மூச்சுக்கும் அவன் உடல் முன்னும் பின்னும் வளைந்தது. கீர் கீரென்று அவன் சுவாசிப்பதை பார்க்க இக்கட்டாக இருந்தது. அவனைப்போலவே மேலும் இருவர் அவனை நின்று பார்த்தனர்.

“யாருப்பா தெரிஞ்சவங்களா?” என்று கேட்டார் ஒருவர்.

“ஆமாண்ணே என் அண்ணனுங்க. சித்த கை குடுத்தீங்கன்னா. அதோ அந்த மண்டபம் வரைக்கும் அங்கதான் அண்ணியும் பிள்ளைங்களும் இருக்காங்க.”

வந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக நின்று “எழும்புப்பா” என்று அசைத்து எழுப்ப முயன்று தோற்றார்கள். ராமசாமியைப் பரிதாபமாகப் பார்த்ர்கள். பின் நல்லுசாமியின் கமக்கட்டுக்குள் கைகளைக் கொடுத்து அவனை தூக்கியும் மணலில் இழுத்தும் ஒரு வழியாக மடத்தில் கொண்டு வந்து போட்டார்கள்.

யாரோ ஒருவர் கொஞ்சம் வெந்நீர் கொண்டுவந்து கொடுத்தார்கள். மடத்தில் அவர்களுக்கு உணவு கிடைத்தது. அவர்கள் படுத்திருந்த போது பக்கத்தில் இருவர் சிலோனுக்கு போவதாக பேசிக் கொண்டார்கள். ராமசாமி அவர்களிடம் போய் தங்களையும் அழைத்து செல்ல முடியுமா என்று கேட்டான். சற்றே தன் மழிக்கப்படாத முகத்தை தடவிக் கொண்டவன்…

“ஓடக்காரன் சும்மாவா கொண்டுபோய் விடுவான் தலைக்கு ரெண்டுரூவாக் கேப்பானே” என்றார்.

“குடுத்திரலாண்ணே கூட்டிட்டு போங்கண்ணே”

“செரி எத்தினிபேரு?”

“பெரியாளுங்க மூணுபேரு கொழந்தைங்க நாலு.”

“கொழந்தைங்களா பெரிய பயலுங்கள கணக்கில போட்டுருவான் கைக்கொழந்தையையும் மத்ததையும் விட்டிரலாம்.”என்றான்.

ராமசாமி உடனேயே அண்ணியிடம் போய் தான் அறிந்ததை சொன்னான்.

சுப்பம்மா யோசிக்கவில்லை. காதில் கிடந்த பாம்படத்தை திருடர்களுக்கு பயந்து கழற்றி சேலையில் முடிந்து வைத்திருந்தாள். ரெண்டும் ரெண்டு பவுணுக்கு குறையாது.

“ஒண்ணைக் குடுத்திரலாம்’ மத்தது அக்கரைக்கு போனப்பறமா தேவைப்படும்.” என்றாள்.

நல்லசாமியின் மூச்சு இன்னமும் மோசமாக கீசிக்கொண்டிருந்தது . மடத்திலிருந்த பெரியவர் ஒருவர் ஏதோ பச்சிலைகளைக் கசக்கி அவன் மூக்கில் பிழிந்தார். அன்று மாலை புறப்பட இருந்த படகில் நல்லுசாமியின் குடும்பமும் கெஞ்சிக் கூத்தாடி இடம்பிடித்தது. சொல்லும்படியாக ஒன்றுமில்லை. படகோட்டி,

“நாலு பக்கமும் பாத்திட்டே வாங்க நேவி வருவான் கவனம்” என்றான்.

சின்னவன் வரதன் படகின் ஆட்டம் தாங்காமல் வாந்தியெடுக்க ஆரம்பித்தான் மூத்தவன் அவனை படகிலிருந்து வெளியே சாய்த்துப் பிடித்திருந்தான். சின்னராசு தகப்பனின் கால்களை தேய்த்தவாறிருந்தான். சுப்பம்மாவுக்கும் குளிராக இருந்தாலும் கணவனின் உடலிலிருந்து வீசும் அனல் அவளுக்கு போதுமானதாக இருந்தது.

ஒருமணிநேரமோ பலமணிநேரமோ காலம் இவ்வளவு என்று சொல்ல முடியாதபடிக்கு இரவு நீண்டது. எனினும் தேய்பிறைச் சந்திரனின் மெல்லிய ஒளியில் கடலின் அலைகள் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

துரத்தே தொடுவானில் கரை கருமை போர்த்து தெரிந்தது. படகில் இருந்தவர்கள் ‘கரை கரை தெரியிது.’ என அங்கலாய்த்தனர். இன்னும் இரண்டு மூன்று மைல்கள்தான். என நினைத்தனர் நல்லுசாமி உறங்கி விட்டிருந்தான். படகு ஒரிடத்தில் கரை தட்டி நின்றது. படகோட்டியும் அவனுடைய உதவியாளனும் தொம் தொம்மென நீரில் குதித்தனர்.தண்ணீர் கழுத்தளவுகூட இல்லை. படகு ஒரு தீடையில் மோதி நின்றது.

“ம்…ம்…இறங்கிக்கங்க அம்பிட்டுதா” என்றான் படகோட்டி இறங்கிய போதுதான் அருகிலேயே ஒரு மணற்றிட்டு தெரிந்தது. ராமசாமி பிள்ளைகள் இருவரை இழுத்துக்கொண்டு அந்த மணற்றிட்டை நோக்கி நடந்தான் சின்னராசுக்கு கால்லகள் எட்டுமள நீர்நின்றது. அவர்களை தீடையில் நிறுத்திவிட்டு திரும்பி படகைப் பார்த்தான் தொலைவில் சுப்பம்மாவும் வரதனும் நல்லுசாமியை இறக்க முயன்றுகொண்டிருந்தனர். கூட வந்தவர்களுடன் பிள்ளைகளை விட்டுவிட்டு ராமசாமி படகை நோக்கி விரைந்தான். அதற்குள் படகோட்டி தனக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறி அவர்களை வலிந்து இறக்கி நிற்குமளவு ஆழமான இடத்தில் நிற்க வைத்துவிட்டு படகை கிளப்பிக்கொண்டு வேகமாக  ஒடி மறைந்தான்.

காடு விரியும் 

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 89 times, 1 visits today)