தையல்துண்டு-சிறுகதை-தமிழ்க்கவி

தமிழ்க்கவி
ஓவியம் : டீன் கபூர்

மோன் பெட்டி போட்டிருக்கிறானாம், போனில கூப்பிட்டுச் சொன்னான். ‘ஏன்ரா இப்ப இருக்கிற சீலையள் கட்டவே போக்கிடமில்லை. கொரனாவுக்குள்ள என்னடா நடக்குது ஒரு கோயில் திருவிழா இல்லை சாமத்தியவீடு கலியாண வீடில்ல. ஒரு கூட்டம் கொமிட்டி இல்ல, முகட்டைப்பாத்துக்கொண்டு கிடக்கிறம் இதுக்க …உதுகளெல்லாம் ஏன்ரா …சரிசரி அனுப்பு.”

“ணேய்……… கிளிநொச்சி சந்தைக்க ஊத்தைச்சிலையோட நிண்டியாம், என்ர சிநேகிதப் பொடியன் சொன்னவன்.”

‘ஸ்பை’வச்சிருக்கிறியளோ எண்டாலும் எனக்கு ஒரு சிரிப்புத்தான். ‘அடபோடா. வாழுற காலத்தில ஒண்டையும் அனுபவிக்கயில்ல. இப்ப கிழண்டின பிறகுதான் எல்லாம்…ஹஹ’

அப்பக்க இவன் பிறந்து ஒரு வயது வரும். கூப்பன் அரிசி திங்கக்கிழமை வாங்கினா ஒரு ரெண்டு நாளைக்கு வயிறார சோறு தின்னலாம். கூப்பனுக்கு ரெண்டு கொத்தரிசி. ஒரு கொத்து சும்மா மற்றக் கொத்துக்கு இருவத்தைஞ்சுசேம். அந்த சும்மா அரிசிய வாங்க திங்கக்கிழமையே போயிரும் சனம். நானும் போகோணும் சங்கக்கடைக்கு, ரெண்டு கட்டை போகோணும். என்னட்ட உள்ள ஒரேயொரு வொயில்சீலைய தோச்சு கொய்யா மரத்துக்கும் கமுகுக்கும் இடையால கட்டித் தொங்க விட்டு, காயவிட்டிட்டு மேலுக்கு ரெண்டு வாளி தண்ணியூத்திக் கொண்டு அரை ஈரத்தோட அந்த சீலையச் சுத்திக் கொண்டு நடக்க அது காஞ்சுபோம். கையில பைய எடுத்துக்கொண்டு விறுவிறெண்டு நடக்கிறன். சவக்காலைச்சந்தி கடக்க முதுகில அரிக்குது. எட்டிக் கையால சொறிய இத்துப்போய்க் கிடந்த ரவுக்கை கிழிஞ்சு போச்சு. கடவுளே ரவுணுக்கும் கிட்ட வந்திட்டன். திரும்பிப்போனாலும் விட்டில வேற சட்டை இல்லை. என்ன செய்யிற தெண்டு யோசிச்சுப்போட்டு தாவணிய எடுத்து தோளால சுத்தி மூடினன். அப்பிடிக்  குடும்பக் குத்துவிளக்கா கியூவில நிண்டு அரிசிய வாங்கிக் கொணந்திட்டன். ஆனா, இனி போட சட்டை? வீட்டில் கிடந்து மறுகி மறுகி யோசிச்சாலும் ஒண்டுமா விளங்கேல்ல. ஒருரூவா அம்பத்தைஞ்ச சேம் ஒருயார் துணி. நாள்கூலி ரெண்டுரூவா. அதை பிள்ளையளும் நானும் சாப்பிடறதா துணி வாங்கிறதா?

அதுக்குள்ள நாங்கள் வேலை செய்யிற முதலாளி வீட்டில கூப்பிட்டு விடுகினம், லூத்தக்காதான் வரட்டாம். வேற வழி, அந்தச் சட்டைக்கு ஒரு ஒட்டு வச்சு தச்சு போட்டுக்கொண்டு போறன்.

“அக்கா சட்டை கிழிஞ்சிட்டுதக்கா தைச்சு போட்டுக் கொண்டு வர சுணங்கீட்டுது” அவா ஒண்டும் பறையாம,

“இஞ்ச வாடி…. உந்த பெட்டகத்துக்கு மேல கிடக்கிற ரங்குப் பெட்டிய எடு எண்டா, எடுத்தன். திற எண்டா, திறந்தன்..பெட்டி நிறைய ரவிக்கையள். உனக்கு தேவையானதை எடு. உதுகள் எனக்கு இனி தேவைப்படாது அதுகளுக்கு சாரி இல்லை எண்டா? நான் யோசிச்சன் எனக்கு பிறந்ததிலயிருந்து இந்த துணியளால நான் பட்ட வேதனையள.

“இல்லக்கா, வறுமையிலும் செம்மையா வாழ அம்மா சொல்லி தந்திருக்கிறா. இந்த துணிய ஒரு விலை போட்டுத்தாங்கோ. வேலை செய்ய செய்ய காசில கொஞ்சங் கொஞ்சமா கழியுங்க, நான் இரவைக்க தைச்சு எடுக்கிறன்.”

எழுவத்தைஞ்சுயெம். அதுக்கே வழியில்லாம….ஒவொரு நாளும் தையல்பாட நேரத்தில ரீச்சர் வகுப்புக்கு வெளியால பிடிச்சு விட்டிருவா.  பிடிக்காத பாடமெண்டாலும் பரவாயில்ல. தையலெண்டா எனக்கு உயிர்.

வகுப்புக்குள்ள ரீச்சர் வரக்குமுன்னம் நான் கடைசி வாங்கில போய் இருந்திட்டன். அவாவும் வந்த உடன என்னை ‘ம்கும்’ எங்கள கவனிக்கேல்ல. பணக்காற வீட்டுப்பிள்ளையள் அவவச் சூழ்ந்து கொண்டினம். அவைஅவை வாங்கின துணியளக்காட்டி பாராட்டு பெறுகினம்.

நான் பக்கத்தில இருந்த பிச்சையையும் ரத்தினத்தையும் பாத்தன். அவளவையின்ர தலையில சோடி சோடியா பேன் இளையுது. பேன்புழுத்த பிள்ளையள் எண்டபடியாத்தான் அவையள் கடைசி வாங்கெண்டில்ல, அவயட பாட்டி பிச்சைக்காறி. அதுக்காக பேத்திக்கு பிச்சை எண்டு பேர் வைக்கேல்ல அது அவயட சாமிப் பேராம். நேத்தி வைச்சு பிறந்ததால அந்தப்பேர் வச்சவையாம். அவளுக்கு கிட்ட இருக்கேலாது. ஏனெண்டா எப்ப பாத்தாலும் காதில சிதல் வடியும். அது பொல்லாத நாத்தம்.நான் கடைசி வாங்குக்கு முதல் வாங்குதான். ஆனா, என்ன செய்யிறது? எனக்கு இன்னும் வீட்டில தையல் துணி வாங்கித்தரயில்ல. அம்மாவக் கேட்டா அப்புவெட்ட இப்ப காசில்லயாம். அப்பு,

“தையல் பழகத்தானே என்ர பழைய வேட்டியில ஒரு துண்டக்கிழிச்சுக் கொண்டு போ” எண்டிட்டார். வகுப்பு பிள்ளையளெல்லாம் சிரிக்குங்கள் என்ன மனிசர்? கேட்டா… ‘பள்ளிக்கூடத்தை விட்டிட்டு மந்து கொத்த வா’ எண்ணுவார்.

அண்டைக்கு என்ர வகுப்பு தோழி. ஓம் தோழிதான். அவள் பணக்காறிதான். அவளின்ர தமையனுக்கு பஜாருக்கு பெரிய புடவைக்கடையிருக்கு. ஆனா, அவள் கணக்குப்பாடத்தில மக்கு. இங்கிலிசும் வராது. ரெண்டு பாடத்திலும் என்னைப்பாத்துத்தான் எழுதுறவள். அதால சிநேகிதமாப் போனம். நான் அவளுக்கு எங்கட வீட்டில  காத்துக்கு விழுற மாங்காயள கொணந்து குடுப்பன். அவள் எனக்கு பூந்தி கொணந்து தருவாள். வாத்தியாருக்கு தெரியாம பாடநேரத்திலயே பகிர்ந்து திண்டிருவம். பிடிபட்டதும் உண்டு. அவள் அண்டைக்கு ரோஸ் நிறத்தில வாங்கிக் கொண்டு வந்த தையல் துணி அவளுக்கே பிடிக்கேல்லயாம் . நான் அண்டைக்கும் ரீச்சரால வகுப்புக்கு வெளியால துரத்துப்பட்டதை கண்டிட்டு என்னட்ட சொன்னாள்.

“நீர் கவலைப்படாதையும் நான் வேற துணி வாங்கப்போறன் நாளைக்கு இதை உமக்குத்தாறன்” எண்டு. எனக்கா குண்டியில தட்டின புளுகம். நாளைக்கு எனக்கு துணி கிடைச்சு நான் வகுப்புக்குள்ள இருக்கப்போறதை நினைச்சு வெகுவா சந்தோசப்பட்டன்.  ம்….. அம்மாவுக்கும் அப்புவுக்கும் இதை சொல்லிக்காட்டி பெருமைப்படுவன். ‘என்ன என்ன வேட்டியக்கிழிச்சுக் கொண்டே தையோ.! எனக்கு குணமணி துணி தரப்போறாள் ஆண்டுத்தையல்ல நான் ஒரு தலகாணி உறை தைச்சு அதில பூப்போட்டு காட்டுறன்.’ அப்ப அப்பு கேப்பார்தானே அதை எனக்குத்தாம்மா எண்டு..

அம்மா ராச்சாப்பாட்டுக்கு மா வறுத்துக் கொண்டிருக்கிறா. நான் அவாக்கு பின்னால போய் நிண்டு கையையும் காலையும் முன்னுக்கும் பின்னுக்குமா நீட்டிநீட்டி பைலாப்போடுறன்,

“ஒண்டு ரெண்டு மூண்டு நால அஞ்சாந்நம்பரடா அஞ்சாந்நம்பர் வீட்டுக்குள்ளே ரெண்டு பெட்டியா ஹேய்..”

“இப்ப என்னத்துக்கடி நெளிக்கிறாய்?” அம்மாதான் நக்கலா கேக்கிறாவோ…நான்

“ணேய் நீங்க துணிவாங்கித்தராட்டி நான் நெடுகிலும் வகுப்புக்கு வெளியாலயோ நிப்பன் நோ மோர்”

“என்னடி மோரும் பாலும்? இஞ்ச விலத்து நான் மாவிறக்க.” அம்மா தன்ர அலுவல்.

“ணேய் நாளைக்கு எனக்கு துணி கிடைக்குதெணை”

“எங்கத்தையால?”

“என்ர வகுப்பு பிள்ளை குணமணி தாறண்டிருக்கிறாள்.”

அம்மா நிதானமா என்னைப்பாத்தாள் பிறகு,

“பஞ்சம் போம் பசிபோம் பஞ்சத்தில பட்ட வடுப் போகாது”எண்டாள்.

கொதிக்கிற பால்ல தண்ணி தெளிச்ச மாதிரி என்ர உற்சாகம் வடிஞ்சு போச்சு.

ஆனா அந்த வார்த்தை நிலைச்சுப்போச்சு.

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 152 times, 1 visits today)
 

4 thoughts on “தையல்துண்டு-சிறுகதை-தமிழ்க்கவி”

Comments are closed.