புளிப்பின் சுவை -சிறுகதை-தாட்சாயணி

“அம்மா சேலன் மாங்காயம்மா…” பக்கத்து இருக்கையிலிருந்த ஹரிணி கொஞ்சம் ஆர்ப்பரித்து அதைச் சொன்னபோது தான் சரண்யா அவற்றைக் கண்டாள். மென்சிவப்பு நிற வர்ணம் அடித்திருந்த மதிலுக்கு மேலாக உயர்ந்திருந்த மரத்தில் சற்றே செந்நிறம் படர்ந்த பச்சையில் சேலன் மாங்காய்கள் கொத்தாய் தொங்கிக் கொண்டிருந்தன.

தாட்சாயணி
ஓவியம் : டீன் கபூர்

பேரூந்திலேறி ஜன்னலோர இருக்கையில் ஏறியமர்ந்த போது அப்படியொரு மரத்தையும் காய்களையும் காண முடியும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. அதிலும் பத்து வயதாகிற ஹரிணிக்கு சேலன் மாங்காய் மீது எப்படி ஆர்வம் வரத் தொடங்கியது என்பதும் அவளைக் குழப்பியது.

“அது சேலன் மாங்காயெண்டு  உனக்கெப்பிடித்தெரியும்?”

“ஏன், எனக்குத் தெரியாதோ,  பள்ளிக்கூடத்திலை பிள்ளையள் கொண்டு வாறவை… நான் சாப்பிட்டிருக்கிறன்…., நல்லாயிருக்கும்…”  என எச்சில் கூட்டி விழுங்கிச் சொன்னாள் ஹரிணி.

இவளது விரல்கள் தன்னிச்சையாக ஹரிணியின் தலைமுடியைக் கோதின.

‘சேலன் மாங்காய்…’  மனது முணுமுணுத்தது.

அப்போது இவளுக்குப் பத்துப் பன்னிரண்டு வயது இருக்கலாம். இவள் வீட்டிலோ அல்லது அருகில் எந்த வீடுகளிலுமோ சேலன் மாமரம் இருந்திருக்கவில்லை. அந்த மாங்காய்களைப் பள்ளிக்கு யாரேனும் கொண்டு வந்திருந்தால் அவர்கள் தான் அந்த நாளின் கதாநாயகிகள். கூடுதலாக சுமி தான் சேலன் மாங்காய்க்கு உரிமை கோருபவளாயிருப்பாள்.

மாங்காயைக்  கொண்டு வரும்போதே சுமி ஒரு காகிதத்தில் மிளகாய்த்தூளும், உப்பும் சேர்த்துக் கொண்டு வருவாள். காலையிலேயே புத்தகப் பையிலிருக்கும் கொழுத்த மாங்காய்களைத் திறந்து காட்டி விடுவாள். எல்லோரும் இடைவேளையை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள்.

பாடசாலையின் பின் மைதானத்தில் இருந்த ஒரு வேப்பமரம் முதுகில் புடைப்புகளோடு இவர்களுக்கு காத்திருக்கும்.

அந்தப் புடைப்பில் இவள் சேலம் மாங்காயை ஒரு குத்துக் குத்துவாள்.

முதல் குத்து விழுந்ததும் பிய்ந்து உதிரும் சிறு துண்டை இவள் வாய்க்குள் போட்டு விடுவாள்.

“எனக்கு, எனக்கு…” எனச் சுற்றிக் கைகள் நீளும்.

தடித்த தோலுடன் உதிரும் அந்த மாங்காய்த் துண்டங்களில் அப்படி என்ன ருசி? கண்கள் சுருங்க, எச்சில் ஊற சப்புக் கொட்டித் தின்ற  அந்தக் காலம் ஒரு தேவாமிர்தக் காலம்.

அறுசுவைகளில் புளிப்புக்கென்று ஒரு இடத்தை இந்தச் சிறுபிள்ளைப்பராயம்தான் தீர்மானித்திருக்குமென்று தோன்றுகிறது. இவள் எப்போதும் ஒரு புளிச்ச வாய்க்காரி தான். அக்கா இவள் புளியென்றால்   வாயூறுவதைக் கண்டு அப்படித்தான் சொல்வாள்.

புளி என்றாலும்,  அதிலும் எத்தனை வகைப் புளி இருக்கிறது.

ரியூஷனுக்குப் போன காலங்களில் நடந்து தான் போவார்கள். இடைப்படும் வளவொன்றில் புளிய மரம் நிற்கிறது. அது வேலியோடணைந்து நின்றதனால், மரத்தில் பாதி வீதியில் தானிருக்கும்.

அது பூக்கின்ற காலம் இவளுக்கு கொண்டாட்டமாயிருக்கும்.

மெல்லிய அரும்புகளாய்த் துளிர்க்கும் புளியம் பூக்கள்  மெல்லிய துவர்ப்பு சுவையோடு கூடியவை. கைக்கு அகப்படும் கிளைகளைத் துள்ளிப் பாய்ந்து பிடித்திழுத்து சமயங்களில் குரங்குகள் போலத் தொங்கிக் கை நிறையப் பிடித்திழுப்பாள். புளியம் பூக்களை வாய்க்குள் அதக்கி வைத்துப் பொச்சடிக்கிற போது கண்களில் ஒரு சிரிப்பு வந்திறங்கும். அதைப் பார்த்து இவளுக்கு ‘குட்டிக் குரங்கு’ எனப் பெயர் வைப்பார்கள் தோழிகள்.

புளியம்பூ இல்லாவிட்டால், புளியந்துளிர் இருக்கும். அவற்றை நசுக்கி வாயில் போட்டாலே இவளுக்குத் தேவையான புளிப்பு நாவுக்கு கிடைத்து விட்டாற் போலிருக்கும். ஒரு நாளில் ஒரு பொழுதாவது, ஒரு புளிப்பினைக் காணாவிட்டால், நாவு தவனமெடுக்கத் தொடங்கி விடும்.

பூ முற்றி பிஞ்சாகும் கணத்தில் புளிக்கு வேறு சுவை வந்து விடும்.’நறுக், நறுக்’கென்று கடிக்கப் பல்லுக்கு இதமாயிருக்கும். கடித்துச் சப்பிச் சாறை உறிஞ்சுகிற போது,  மரத்தில் இருக்கிற குரங்குப் பிள்ளைகள் மீது,பொறாமை எழும்.

பிஞ்சு முற்றலாகி செம்பழமாகும் தருணம், முற்றிய புளியங்காய்கள் கடிக்கச் சற்றுச் சிரமமாயிருந்தாலும்,முழுப்புளி திரண்டிருக்கும். பிஞ்சிலிருந்த தோலின் துவர்ப்பு கொஞ்சம் குறைய ஆரம்பிக்க செம்பழப்    பருவம் தொடங்கும். யாரேனும் ஒருவருக்கு  செம்பழம் கிடைத்து விட்டால், “எனக்கு ஒரு செம்பழம் கிடைச்சிருக்கு…” என்று காட்டிக் காட்டி ஓட மற்றவர்கள் துரத்த அமளிப்பட்ட காலம் அது.

அம்மம்மா இருந்த போது, ஓட்டோடு புளியம்பழம் வீட்டுக்கு வரும். ஓலைப் பெட்டியில் போட்டு, நன்கு காய்ந்து ஓடு கழரும் பருவத்தில்  ஓட்டை உடைத்துப் புளியெடுக்கும் வேலை நடக்கும். இவள் போய்க் கூட மாட ஒத்தாசை செய்வாள்.

ஓடு கழன்ற புளிகளை, அரிவாளை வைத்துக் கொட்டை எடுக்கும் போது,  சாரி, சாரியாகப் புளியங்கொட்டைகள் குவியும். இன்னொரு சுளகு நிறைய மெதுமெதுவான பழப்புளி நிறையும். இவள் பார்வை பழப் புளிச் சுளகினை மொய்த்ததென்றால், அக்காவின் பார்வை புளியங்கொட்டைக் குவியலை  நோக்கியிருக்கும். புளியங் கொட்டைகளைச் சேர்த்துக் கழுவி, அவற்றில் சிறு பகுதியை விளையாட வைத்துக் கொண்டு, மிகுதியைத் தாச்சியில் போட்டு வறுப்பாள் அக்கா. நன்கு முறுகிய வாசனை வந்தவுடன், இறக்கிக் கோதுகளை கத்திப் பிடியால் தட்டி உடைத்து, கண்ணாடிப் போத்தலொன்றினுள் போட்டு வைப்பாள். மண் நிறத்தில் இருக்கின்ற அந்தக் கோது உடைத்த புளியங் கொட்டைகளை அவள் நிலக்கடலை போல வாய்க்குள் போட்டுக் கொறித்துக் கொண்டிருப்பாள்.  நிலக்கடலைகள் மாவாகக் கரைவது போலில்லாமல் இவை சற்றுப் பல்லுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வைரம் பாய்ந்திருப்பதால் எளிதில் தீர்ந்து போகாமல் பல நாள்களுக்கு நின்று பிடிக்கும். அடுத்த புளிக் காலம்  வரும் வரைக்கும் அக்காவின் வாய் ஆடிக் கொண்டிருப்பதற்கு இவை போதுமாயிருக்கும்.

அக்கா ஒரு புளுக்கொடியல் பிரியை. அவளுடைய பற்கள் வைரம் பாய்ந்திருக்க வேண்டும். அவளுக்கு எப்போதும் புளியங்கொட்டை, புளுக்கொடியல் போன்றவற்றைக் கடித்துத் தின்று கொண்டேயிருப்பது தான் வேலை. ‘கடக்கு, முடக்’ கென்று  அவள் பற்கள் கடிப்பதற்கென்றே பிறப்பெடுத்தவை போலிருக்கும்.

கொட்டை எடுத்த புளியம்பழங்களைப் போட்டு வைப்பதற்கென்று, அம்மம்மாவிடம் ஒரு மண் பானை இருந்தது. அந்தப் பானைக்குள் இருக்கும் புளி அடுத்த புளிக்காலம் வரும் வரைக்கும் போதுமானதாயிருக்கும். காலம் போகப் போக அந்தப் புளி கறுத்து அடர் நிறமாகும். செங்கட்டிச் சிவப்பாயிருக்கிற புளியை விட, கறுப்புப் புளியில் புளிச்சுவை அதிகமாயிருக்கும். எப்போதேனும் தவனமாயிருக்கையில் அம்மாவுக்குத் தெரியாமல் புளிப்பானைக்குள் கையை வைத்து எடுத்துத் தின்றிருக்கிறாள் இவள். அம்மா கண்டு பிடித்த காரணத்தினால், எத்தனையோ தடவை புளிப்பானை தன் இடம் மாற்றிக்  கொண்டிருக்கிறது.

“சும்மா புளியைத் திண்டு கொண்டிருக்காதை. புளி கனக்கச் சாப்பிட்டா,  குருதி உறையா நோய் வருமாம்.” என்பாள் அக்கா.

மாங்காய்களிலென்றால், பாண்டி, பச்சைத்தின்னி, சேலன் இவை தான் பச்சையாய் , பழுப்பதற்கு முன்னம் தின்ன உகந்தவை. புளி மாங்காய் கறிக்குத் தான் தோதாயிருக்கும்.  அதையும் அவள் தின்று பார்த்திருக்கிறாள்.

அக்கா இவளை ஒரு விசித்திரமான பிராணியைப் பார்ப்பது போல் பார்ப்பாள். பச்சைத்தின்னி காயைத் தின்பது போலவே  பழத்தையும் தின்னலாம். அக்கா பச்சையாய்ப் பிடுங்க விட மாட்டாள். குரங்குகள் வந்து அடித்துப் போடுகிற போது வீழ்ந்து  கொட்டுகிற மாம்பிஞ்சுகளைப் பார்த்து, எட்டி விரட்டுவாள் அக்கா. இவளுக்கு விரட்ட மனசு வராது. ஆகா, இந்த மாங்காய்களின் ருசியை அச்சு அசலாக ரசித்துத் தின்கின்ற அவற்றை விரட்டுவானேன்?

‘தன்னைப் போலவே அவற்றின் நாக்குச் சுவை’ என எண்ணிக் கொள்ளுவாள்.ஆனால், ஒன்றொன்றாய்க் கடித்து விட் டு அவை வீசியெறிவதைப் பார்க்கக் கோபம் வரும்., இத்தனை மாங்காய்களை வீணாக்குகின்றனவே என்று. அத்தனை ருசி குறித்த புலனுணர்வு கூடிய மிருகங்கள் அவையோ என்றும் தோன்றும். ருசியில் ஒரு சொட்டுக் குறைந்தாலும் அவைகளுக்கு வேண்டாமாமோ? என உச்சிக் கொப்பரில் இருக்கும் குரங்குகளுடன் அவள் சீண்டுவாள்.

பச்சைத்தின்னி அவளது வீட்டுக்கொல்லையில் நின்றது. முற்றத்தில் ‘விலாட்’ மரம் நின்றது. ‘விலாட்’டின் பழங்கள் சுவையானவை. அப்பிள் அளவில் இருக்கும் சிறிய பழங்கள். செங்கனிகள் ஆகிறபோது, அந்த மஞ்சளும், சிவப்பும் ஜொலிக்கிற அழகில் அப்பிள் கூடத் தோற்றுப் போகும். கனிந்து பழுப்பவற்றை விட முற்றல் காய்கள் சுவையானவை. அவற்றில் புளிப்பு இருப்பதில்லை. ஆனால், அப்பிளை விடச் சுவையாக இருக்கும். அக்காவுக்கும், இவளுக்கும் அந்த ‘விலாட்’ முற்றல் காய்கள் மீதான ஈர்ப்பு ஒன்று தான் பொதுவானதாக இருந்தது.

பாண்டி மாங்காய் அத்தை வீட்டில்  இருந்தது.  அத்தை வருகின்ற வேளைகளில் இவளைக் கண்டால் சொல்லுவா.

“பாண்டி காய்ச்சிருக்கு, வந்து ஆய்ஞ்சு கொண்டு போவன்”

இவள் அதற்கென்றே பிரத்தியேகமான ஆயத்தங்களோடு போவாள். அந்த மாதம் முழுக்க , மாங்காய்கள் தீரும் வரைக்கும் குழைச் சத்தகத்தைக் கொக்கத் தடியில் கட்டிக் கொண்டு இவள் திரிவாள்.

பாண்டி மாங்காய் நன்கு முற்ற முதல் அதை வெட்டுவதில் தான் ஒரு அழகு இருக்கிறது. சேலன் மாங்காயை மரத்தில் குத்திச் சாப்பிடுவது ருசி என்றால், பாண்டி மாங்காய்களைக் கத்தியால் பிளந்து சாப்பிட்டால் தான் இவளுக்குத் தவனம் அடங்கும்.

லேசாய் சாம்பல் படிந்த மென்பச்சைநிறக் காய்கள் சின்ன வளைவோடு கீழிறங்கியிருக்கும். காம்பில் இருந்து பால் வடியாமல், காம்புப் பகுதியை  சிறு வட்டமாய் வெட்டி விலக்கி லேசாய் கசியும் பாலைத் துடைத்து விட்டுக் குறுக்கே கத்தியால் இரண்டாக  வகிர்ந்து அரிய, உள்ளிருக்கும் பிஞ்சு விதை ‘நறுக்கென்ற மென் சப்தத்தோடு குறுக்காக,வெட்டப்படும். அதனை மேலும் குறுக்காக நாலு துண்டுகளாக ஆகும் வகையில்  வெட்டி உள்ளே துண்டாக்கப்பட்ட விதையைக் கத்தியால் விலக்கித் தட்டி விட அகத்திப்பூ நிறத்தில் வில்லைகளாக விதைக் கீலங்கள் விலகும். அந்த விதை உள்ளடங்கியிருந்த இடைவெளி மிக அழகாகத் தெரியும். நாலு துண்டங்களை எட்டாக ஆக்கி மெல்லிய கீலங்களாக்கி கடித்துச் சுவைக்கிற போது உச்சிக்கு ஏறுமே ஒரு புளிப்பான தித்திப்பு, அதை உணராதவர்கள் இந்தப் பிறப்பில் மனிதப் பிறப்பெடுத்து என்ன பலன்?

மாங்காய்க்கு அடுத்தபடி நெல்லிக்காய்கள். நெல்லிக்காயென்றால் சிறு நெல்லி தான். பெருநெல்லியில் சிறு கசப்பு இருக்கும். இறுதியில் இனிப்பதென்பது வேறு கதை.

சிறு நெல்லியும் முற்றத்தில் நின்றது. நெல்லி பூத்துப் பிஞ்சாகி, குறுணல் காய்கள் அரும்பும் போதே இரண்டு, மூன்று மாதங்களுக்குப் புளிப்பஞ்சம் இருக்காதெனத் தோன்றும். நெல்லிக்காய்க்குப், பக்கத்திலிருக்கிற வாண்டுகளெல்லாம் வந்து விடும். இவள் நெல்லிக்காயை எப்படி இன்னும் புளி கூட்டிச் சாப்பிடலாம் என்று அவர்களுக்கு வகுப்பெடுப்பாள். உப்பில் ஊறப் போட்டுச் சாப்பிடலாம் என்பதும், சிறு உப்புக்கட்டிகளை வாய்க்குள் உமிழ்ந்து கொண்டு நெல்லிக்காயைக் கடித்து இரண்டும் சம அளவு சேர ருசிக்கலாம் என்பதும் அவள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அவர்களுக்கு அவள் சொல்லிக் கொடுக்காத சில ரகசியங்களும்  இருந்தன.

நெல்லிக்காயை ஊறுகாயில் தோய்த்துச் சப்புக் கொட்டுவது, இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தால், அக்கம்பக்கத்து அம்மாக்களிடம்  வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.

சமயங்களில் பழப்புளியைக் கூட ஊறுகாய் தொட்டுச்  சாப்பிடுவாள் அவள்.

“இது ஒரு புளிப்பிசாசு…” அம்மா திட்டிக் கொண்டிருப்பா.

தேசிக்காய்களை நாலு கீறுக் கீறி,  ஊறுகாய்க்கெனக் காயப் போடுகிற போது அந்த ஜுரம் இவள் நாவுக்கு வந்து விடும்.

நன்கு  வரண்டு உலர்ந்திருக்கின்ற தேசிக கூறுகள் வெயில் சொரியும் முற்றத்தில் சுளகோடு காய்ந்து கொண்டிருக்கையில் ஓடிப் போய் எடுத்து  விரல்களுக்குள் மறைத்துக் கொண்டு, கதைப்புத்தகம் படிக்கிற சாக்கில், புத்தகத்தால் மறைத்துச் சப்புக் கொட்டிச் சாப்பிடுவாள்.

ஊறுகாய்க்கான சாடியில் ஊறுகாய் ஊறத் தொடங்கியதும், புளியோ, மாங்காயோ, நெல்லிக் காயோ இவள் கைக்கு வந்து விடும். சோற்றுக்கு ஊறுகாயைப் போட்டுத் தின்பதை விட, இந்தக் கூட் டுப் புளிச் சுவை தான் இவளுக்கு அருமையாகத் தெரிந்தது. மோரில் ஊறுகாயைக் கரைத்துக் குடிப்பதோ, பழஞ்சோற்றுக்கு ஊறுகாய் போட்டுச் சாப்பிடுவதோ அதெல்லாம் அக்காவுக்குத் தான் ஆகும். இவளுக்குப் பொச்சம் தீராது.

“சேலன் மாங்காய் நல்லாயிருக்குமம்மா…,நீங்களும் சாப்பிட்டுப் பாத்தா விருப்பம் வந்திடும் அம்மா….” ஹரிணியின் குரல் இவளை  உலுப்பிற்று.

“எனக்கோ,? விருப்பமோ…?” அவள் ஒரு வெற்றுச் சிரிப்பைச் சிரித்து விட்டு ஜன்னல் வழியே வெளியே நோக்கினாள்.

எப்போது அவள்  நாவினால் புளிப்பின் இனிமையை உணர முடியாமல் போனது?

எப்போது அவளது துடிப்பும், வேகமும் அடங்கிப் போனது…?

பன்னிரண்டு வயதில் ஒரு தரம் மாங்காய், மாங்காயாய்த் தின்று, வயிறு பாடாய்ப் படுத்தி வாந்தி எடுத்து முதல் உதிரத்துளி உடம்பிலிருந்து வெளியேறிய அந்த நாளுக்குப் பிறகு தான் அவள் நாவிலிருந்த புளிப்புச் சுவைக்கான சுவை அரும்புகளும் படிப்படியாக உதிர்ந்து போயிருக்க வேண்டும்.

அந்தத் துடுக்குத்தனம் அப்பிடியே பிறகு ஒடுங்கிப் போயிற்று.

மாங்காயோ, புளியங்காயோ கண்டவுடன் பல் மட்டுமன்றி உடலும் கூசத் தொடங்கிற்று.

யாரேனும், மாங்காயோ, புளியோ கொணர்ந்தால் ஒரு சிறு துண்டை வாயிலிட்டு அசை போட்டால் கூட எந்த உணர்ச்சியும் தோன்றாமல் போனது.

வயிற்றில் ஹரிணி ஒரு பூப் போலத் தங்கிய போது கூட மாங்காய் தின்னத் தோன்றவில்லை.

எவருமறியாத ஒரு ரகசியத்தை  அவள் தன் மனதுக்குள் அந்தப் புளிச்சுவையைப் போலவே ஒழித்துக் கொண்டாள்.

அவள் பூப்பெய்திய நாளின் காலைப்பொழுதில் காட்டில் சேலன் மாங்காய் காய்த்துக் கிடக்குதென்று, கூட்டிப் போனவன், மாங்காய் தின்ற அவள் உடம்பில் புளிப்பின் சுவையைத் தேடி உறிஞ்சிய போது, அவள் நாவிலிருந்த புளிப்பின் சுவையரும்புகள் யாவும் உதிர்ந்து போய் விட்டனவென்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்.

தாட்சாயணி-இலங்கை

தாட்சாயணி

(Visited 162 times, 1 visits today)
 

2 thoughts on “புளிப்பின் சுவை -சிறுகதை-தாட்சாயணி”

Comments are closed.