அலைவு-கவிதை-தாட்சாயணி

அலைவு

அலைவு

எல்லாம் முடிந்து விட்டது!
இனி ஆவதற்கென்ன…?
எதுவும் அறியாதிருந்த
அவர்களின் பச்சைப்பிள்ளைப் பருவத்தை
ஏதோ ஒரு கழுகு
தன் கால்களுக்கிடையில்
கிடாவிக்கொண்டு பறந்தது!
கழுகின் பிடி நழுவி
எந்த மலைச்சரிவில் அது தவறி வீழ்ந்து
பிஞ்சுத் தலை முட்டிச் சிதைந்ததோ?

எல்லாமே முடிந்து விட்டது!
எந்த உணர்ச்சியும் மீதமில்லை!
எல்லாவற்றையும்
ஒரு குட்டிச் சீசாவுக்குள் போட்டுக்
கடலுக்குள் வீசியெறிந்தாயிற்று!

இனி எப்போதாவது
ஒரு சிறுவன்
அதைத் திறக்கக் கூடும்!

அப்போது
அதற்குள் அடைபட்ட
ஏக்கங்கள், ஆசைகள்
பூதமாய் வெளிப்படும்!

நிறங்கள், மதங்கள்,இனங்கள்
பேதங்கள்
எல்லாம் கடந்து…
எங்கோ ஒரு மனிதன்,
எங்கோ ஒரு சிறுவன்,
ஏதேனுமொரு மணல் திட்டு
அங்கே
அந்த ஆசைகள், ஏக்கங்கள்
பரவிப் படர்ந்து…

அதுவரைக்கும்,
பச்சைப்பிள்ளைப்பருவத்தை
இழந்து போன
பலபேரின் ஆத்மாக்கள்
அந்தரித்து அலைந்து கொண்டுதானிருக்கும்!

0000000000000000000000

இடைவெளி

நீ நிராயுதபாணியாய்
இப்போது என் முன் நிற்கிறாய்!
எந்த வார்த்தை ஆயுதமும்
உன்னிடமில்லை!
நான் எப்பொழுதோ
ஆயுதங்களை இழந்தவள்!
இருவரும் சண்டை போடுவதற்கில்லை!
ஒருவரை ஒருவர் நெருங்குகின்றோம்!
நமக்கிடையில்
ஆயுதங்கள்
வானிலிருந்து வீழ்கின்றன!
எம் முன்
தாமே சண்டையிட்டுக் கொள்கின்றன!
நம்மை அவை ஒரு அடிதானும்
நெருங்க விடுகின்றதாயில்லை!
நீயும், நானும்
இன்னும்
நிராயுதபாணிகளாகவே நிற்கிறோம்!
நமக்கிடையிலான
இடைவெளி மட்டும்
இன்னும் கூடிக்கொண்டே போகிறது!

தாட்சாயிணி-இலங்கை

(Visited 155 times, 1 visits today)