பக்கியா-மொழிபெயர்ப்புச் சிறுகதை-கீதா மதிவாணன்

பின்னிரவில் கிராமம் முழுவதும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. நானும் தெமானாவும் எங்கள் பாய்களை சுருட்டியெடுத்துக்கொண்டு படகுத்துறைக்கு வந்தோம். நாலாபக்கமும் அடர்த்தியாக பனைமரங்களால் சூழப்பட்டிருக்கும் வீடுகளின் புழுக்கத்துக்கு நேர்மாறாய், வெட்டவெளியில் வீசும் கடற்கரைக் காற்று சில்லென்று இதமாய் இருந்தது.

தெமானா பூர்வகுடியைச் சேர்ந்தவன். மாநிறமும் நெடுநெடுவென்று உயரமும் வாளிப்பான தேகமும் கொண்டவன். அவனை என் வேலைக்காரன் என்பதை விட, என்னுடைய நல்ல நண்பன் என்று சொல்லலாம். அவனும் அவன் மனைவி மலேபாவும் என் கூடவே வசித்தார்கள். பல சமயங்களில் அவர்கள் தங்களை என்னுடைய வளர்ப்புத் தாய் தந்தையரைப் போல எண்ணிக்கொள்வார்கள். இவ்வளவுக்கும் இரண்டுபேருடைய வயதையும் கூட்டினால் கூட என்னுடையதை எட்ட இன்னும் ஒன்றிரண்டு தேவைப்படும்.

மலேபாவுக்கு குழந்தை பிறந்தபோது அவளும் தெமானாவும் எனக்கு தங்களால் ஏற்பட்ட தொந்தரவுக்காக மிகவும் வருந்தி மன்னிப்புக் கோரினர். வேலையை விட்டுப் போவதற்கும் தயாராயினர். மலேபா போவதில் எனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், தெமானாவை விட்டு என்னால் இருக்கமுடியாது. அதனால் அவர்களை என் வீட்டிலேயே தங்க அனுமதித்தேன். இரவு நேரங்களில் குழந்தையை அழவிடாமல் பார்த்துக்கொள்வதாக மலேபா உறுதியளித்தாள். ஆனால்.. பாவம். அவள் எவ்வளவோ முயன்றும் குழந்தை இரவுகளில் அழுதுகொண்டுதான் இருந்தது. இரவுகளில் மட்டுமல்லாது பகற்பொழுதுகளிலும் அந்த அழிச்சாட்டியக் குழந்தை, ஆம்புலன்ஸ் வண்டியின் அலாரம் போல உச்சத்தாயில் அலறிக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அழுகுரல் இங்கே கேட்காது என்பது கடற்கரையில் கூடுதல் வசதி.

நாங்கள் புகைக்குழாயைப் பற்றவைத்துக்கொண்டு மல்லாந்து வானத்தைப் பார்த்துப் படுத்திருந்தோம். மேகங்களற்ற வானத்தில் வெள்ளித்தட்டைப் போல் மிதந்துகொண்டிருந்தது நிலவு. எங்களுக்கு முன்னால் கடல் வளைத்துக்கிடக்கும் பாறைத் திட்டுகளுக்கிடையில் காயலின் பளபளக்கும் மேற்பரப்பில், அலைகடலின் அழைப்புக்கேற்ப அதிர்வுகள் உண்டாகிக் கொண்டிருந்தன.

படகுத்துறைக்குச் செல்லும் பாதையில் காலடிச்சத்தம் கேட்டது. நிர்வாண உடம்போடு புற்களாலான அரைக்கச்சு மட்டும் அணிந்திருந்த பெரியவர் பக்கியா வந்துகொண்டிருந்தார். நிலவொளியில் எங்களைப் பார்த்து தன் கரகரத்த நடுங்கும் குரலில் முகமன் கூறிவிட்டுக் கேட்டார்.

“அட, என் வெள்ளைக்கார நண்பா! நீயும் தெமானாவும் இங்குதான் இருக்கீங்களா?”

“அட, பக்கியாவா? வாங்க, உட்காருங்க. மணலில் வேண்டாம். பாயில் உட்காருங்க. உங்க புகைக்குழாயைக் கொண்டுவந்திருக்கீங்கதானே?” நான் கேட்டேன்.

அந்த முதியவர் கெக்கலித்தபடியே தோள்வரை தொங்கிய தன் தொள்ளைக்காதின் துளையிலிருந்து பருத்த, கரிய களிமண் புகைக்குழாயைத் திருகி எடுத்தபோது அவரது சுருக்கம் விழுந்த முகம் ஒளிர்ந்தது. அவர் புகைக்குழாயைத் தலைகீழாய்க் கவிழ்த்து இடது உள்ளங்கையால் தட்டினார்.

அவர் குரலைத் தணித்துக்கொண்டு கிசுகிசுப்பாக சொன்னார், “காலையிலிருந்தே இது காலியாக இருக்கிறது. நான் புகைப்பசியோடு இருக்கிறேன். உன்னிடம் வந்து கடன் வாங்கிப்போகலாமா என்றும் யோசித்தேன். ஆனால் வாங்கவில்லை. ஏன் தெரியுமா? என்னுடைய நண்பர்கள் சிலர் பேராசை பிடித்தவர்கள். அவர்கள் நான் எங்கே போகிறேன் வருகிறேன் என்று கவனித்துக்கொண்டே இருப்பார்கள். உன்னிடமிருந்து பகல் பொழுதில் வாங்கிச்சென்றால் கிராமத்தில் நான் என் வீட்டுக்குப் போய் சேர்வதற்குள் ஒவ்வொருவராக என்னை சூழ்ந்துகொள்வார்கள். ஐந்து வாங்கிய இடத்தில் கடைசியாக ஒன்றுதான் மிஞ்சும் எனக்கு.”

“பக்கியா, நீங்க ஒரு தீர்க்கதரிசி” என்று ஆங்கிலத்தில் சொல்லி புகையிலையையும் அதை நறுக்கும் கத்தியையும் அவரிடம் தந்தேன். நாங்கள் அதுவரை பக்கியாவின் தாய்மொழியான சமோய மொழியில் பேசிக்கொண்டிருந்தோம். அவர் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு, என் முழங்காலில் கைவைத்து, ஒரு குழந்தை தாயிடம் கேள்வி கேட்டுவிட்டு பதிலுக்காக அவள் கண்களை ஆராயும் ஆர்வத்துடன் என் முகத்தைப் பார்த்துக் கேட்டார், “அப்படியென்றால்…”

நான் அதற்கு இணையான வார்த்தையைத் தேடினேன். “அப்படியென்றால்… நீங்கள் ஒரு ஞானி என்று அர்த்தம்.”

கரிய விழிகள் களிப்பிலாட, தன் பழுப்பு நிற வழுக்கைத்தலையை சம்மதமாக ஆட்டினார்.

“ஆமாம்… ஆமாம்… இப்போது வேண்டுமானால் நான் வயதானவனாக எதற்கும் உபயோகமில்லாதவனாக இருக்கலாம். ஆனால் நானும் ஒருகாலத்தில் நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன். இப்போது நான் இறந்துபோனால் என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஒப்பாரி வைப்பார்கள். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொள்வேன். ஏனெனில் சிந்தப்படும் நூறு கண்ணீர்த்துளிகளில் தொண்ணூற்றொன்பது எனக்காக அல்ல, நான் போனால் என்னோடு போகவிருக்கும் புகையிலை, ரொட்டி, அரிசி இவற்றுக்காகத்தான் என்பது எனக்குத் தெரியும்.”

அவர் தன் புகைக்குழாயில் புகையிலையை அடைத்துப் பற்றவைத்தபின், பச்சை குத்தப்பட்ட தன் மெலிந்த கையை நீட்டி சொன்னார்.

“தெமானா, நீ எழுந்து போ. நாங்கள் இருவரும் இன்று நிறையப் பேசப்போகிறோம்.”

நான் சொன்னேன், “சரி, தெமானா வீட்டுக்குப் போய் நமக்காக கள் எடுத்துவரட்டும். நாம் முதலில் குடிப்போம். பிறகு நீங்கள் பேசுங்கள். உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது எனக்கு.”

பக்கியா என் கையை தட்டிக்கொடுத்தார். “ஆமாம், இன்றிரவு நாம் பேசுவோம். கள் குடிப்போம். கள் குடிப்பது சில சமயங்களில் நல்லது, சில சமயங்களில் கெடுதலானது. இளரத்தம் நரம்புகளில் ஓடும்போது கள்குடி மிகவும் ஆபத்தானது. ஒற்றை சுடுசொல் கூட கத்தியைத் தீட்டத் தூண்டிவிடும். கள்ளின் போதையோடு ஒரு பெண்ணின் மென்மையான தீண்டலும் சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான். எனக்குத் தெரியும்… ஆனாலும் பரவாயில்லை. தெமானா கள்ளை எடுத்துவரட்டும். உன்னோடு குடிப்பதில் எனக்கெந்த பயமும் இல்லை. நீ மற்ற வெள்ளைக்காரர்களைப் போல் இல்லை. அவர்கள் தாங்கள் குடிக்காமல் இந்த ஏழைக்கிழவனுக்கு ஊற்றிக் கொடுப்பார்கள். பிறகு இந்த நாக்கு ஏதாவது குளறுபடி செய்துவிட்டால்  ‘இந்த பக்கியா குடிக்கிறான். அது சரியில்லை’ என்று யாராவது புகார் செய்வார்கள். உடனே பாதிரிமாரிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வரும். அவன் உத்தமன் போல பதில் அனுப்புவான், ‘உண்மை, நற்செய்தி போதகரே! கள் குடிப்பது மிகவும் தவறு. எனவே பள்ளிக்கு மூன்று டாலர்கள் அனுப்பிவைக்கிறேன். என் விருந்தினனான பக்கியாவின் தவற்றை மன்னிக்கவேண்டுகிறேன்.’

நான் சிரித்தபடி அந்த முதியவரின் தளர்ந்த முதுகில் ஓங்கித்தட்டினேன்.

“இன்றிரவு உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடியுங்கள் பக்கியா. பாதிரியார் மிகவும் நல்ல மனிதர். முட்டாள்தனமான விஷயங்களில் கருத்தைச் செலுத்தமாட்டார்.”

பக்கியா தலையை ஆட்டினார். “இந்த சமோயா தீவைச் சேர்ந்தவன்தான் மரேகோ. அவன் சிட்னிக்குப் போய் அங்கிருக்கும் வெள்ளைக்கார துரைமார்கள், துரைசாணிகளுக்கு முன்னால் நின்று இந்த தீவுகளைப் பற்றி பேசினானாம். அதனாலேயே தன்னைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறான். அவன் ஒரு முட்டாள் கர்வி. சொந்த ஊரில் அவன் பெரிய மனிதனாக இருந்தாலும் சிட்னியில் அவன் ஒரு பன்றி போலத்தான் வாழ்வான். சிட்னி ஒரு அழகான ஊர், அழகான பெண்கள் நிறைந்த ஊர். ஆஹ்… நீ சிரிக்கிறாய். எனக்கு இப்போது வயதாகி கூன் விழுந்துவிட்டது. கூழாங்கற்களைப் போல என் உடம்புக்குள் எலும்புகள் கலகலத்துப்போயிருக்கின்றன. அப்போது நான் இளமையாகவும் திடகாத்திரமாகவும் இருந்தேன். கேள். லண்டன் திமிங்கலவேட்டைக் கப்பலில் மூன்று வருடங்கள் பயணித்திருக்கிறேன். சிலிக்கும் பெருவுக்கும் இடையிலான போரில் பங்கேற்றிருக்கிறேன். என்னால் நிறைய விஷயங்களை சொல்லமுடியும். உன்னால் அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியும். நான் ஏராளமான நாடுகளைப் பார்த்திருக்கிறேன்.”

தெமானா ஒரு புட்டியில் கள்ளும் சுரைக்குடுக்கையில் தண்ணீரும் மூன்று குவளைகளும் கொண்டுவந்தான்.

“முதலில் குடிங்க பக்கியா.. பிறகு பேசுங்கள். நீங்கள் பேசுவதைக் கேட்க நன்றாக உள்ளது.”

அவர் கள்ளைக் குடித்துவிட்டு அதற்கு மேலாக ஒரு குவளை தண்ணீரைப் பருகினார்.

“என்ன ஒரு சுவையான தரமான கள்! மேலே வட்டநிலா இருக்கிறது. இங்கே நாம் மூவர் இருக்கிறோம், இருவர் நல்ல வாட்டசாட்டமான இளைஞர்கள், ஒருவன், இரத்தம் சுண்டிப்போனவன். ஆஹ்… நான் பேசுவேன், அப்போதுதான் பக்கியா அசட்டுப் பெருமை பேசும் ஒரு கிழட்டுப் பொய்யன் இல்லை, உண்மையானவன் என்பது இந்தப் பொடிப்பயல் தெமானாவுக்குத் தெரியும்.”

மரேகோ பற்றிய பேச்சை அப்படியே விட்டுவிட்டு அவர் ஆங்கிலத்தில் பேசலானார்.

“நான் என்னுடைய தாய்மொழி தவிர ஆங்கிலமும் ஸ்பானிஷும் பேசுவேன்.” சொல்லிவிட்டு மறுபடியும் தன் தாய்மொழியில் தொடர்ந்தார்.

“நான் கர்வம் பிடித்தக் கிழவன் இல்லை. ஆனால் இங்கிருக்கும் மக்கள் முட்டாள்கள். ஞாயிற்றுக்கிழமையானால் வெள்ளைக்கார துரைகளைப் போல் நன்றாக உடுத்திக்கொண்டு தேவாலயத்துக்கு ஒன்றுக்கு ஐந்து முறை சென்றுவருவதாலும் ஆங்கிலத்தை எழுதப் படிக்கத் தெரிந்திருப்பதாலும் அவர்கள் வெள்ளைக்கார துரைகளைப் போல புத்திசாலியாகிவிட முடியாது. முட்டாள்கள்தான். முட்டாள்களேதான். என் இளமைக் காலத்திலிருந்த வலிமையானவர்கள் இப்போது எங்கே போனார்கள்? சருகுகளைப் போல மக்கி மண்ணோடு மண்ணாகப் போய்விட்டார்கள். ஒருமுறை எங்கள் இனத்தின் கூட்டத்தில் பேசும்போது  சொன்னேன், இப்போது இருப்பதை விடவும் பண்டைக்காலத்தில் நாங்கள் பெருமைக்குரிய மனிதர்களாக வாழ்ந்திருந்தோம் என்று. ஆனால் இன்று என் சொந்தப் பேத்தியாலேயே அடித்துத் துரத்தப்படுகிறேன். இது போன்ற விஷயங்களைப் பேசினால் பத்து டாலர் அபராதமும் இரண்டு மாதங்களுக்கு சாலைப்பணியாற்றும் தண்டனையும் விதிக்கப்படுகிறேன். ஆனால் உண்மை இதுதான். அந்தப் பெருமைக்குரிய மக்கள் எங்கே? எல்லோரும் செத்தொழிந்து போய்விட்டார்கள். என் அப்பாவின் காலத்தில் வாழ்ந்த ஆயிரத்து இருநூறு பேரில் இன்று முந்நூறு பேர்தான் மிச்சம் இருக்கிறார்கள். அவர்களும் எப்படி இருக்கிறார்கள்? பலவீனமாகவும் புதுப்புது நோய்களால் காவு கொள்ளப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். என் அப்பாவின் காலத்தில் இருந்த ஆண்களைப் போல் இன்றைய ஆண்களால் வேட்டையாடவோ மீன்பிடிக்கவோ முடியவில்லை. அப்போதிருந்த பெண்களும் ஆண்களைப் போலவே உழைத்தார்கள். ஆனால் இப்போது ஆண்கள் பெண்களுக்காக உழைக்கிறார்கள், பெண்கள் வெள்ளைக்கார துரைசானிமார் போல தொப்பியும் பூட்ஸும் ஆடைகளும் வாங்கி செலவழிக்கிறார்கள். எனக்கு இன்னும் கொஞ்சம் கள் கொடு. இது போன்ற விஷயங்களை நினைத்தாலே என் நெஞ்சு கசந்துவிடுகிறது. இனிமையான கள்ளால்தான் அந்தக் கசப்பை மாற்றமுடியும். இன்னும் உன்னிடம் நிறைய விஷயங்கள் பேசவேண்டும்.”

“பேசுங்க பெரியவரே. இப்போது குடித்திருப்பதால் கொஞ்சம் சாப்பிடவும் வேண்டும். தெமானா போய் நமக்கு உணவு எடுத்துவருவான். விடியும்வரை நாம் பேசிக்கொண்டே இருப்போம்..”

“ம். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. கடற்கரையில் விளையாடும் குழந்தைகள் ஏறி அமர்ந்து கதைபேசுகிற, கவிழ்த்துப்போடப்பட்ட படகைப் போல இப்போது இருக்கிறேன். என்னை அனைவரும் முட்டாள் என்றும் உதவாக்கரை என்றும் சொல்கிறார்கள். ஏனென்றால் நான் சில சமயங்களில் இறந்தகாலத்தைப் பற்றியும் இறந்துபோனவர்களின் காலத்தைப் பற்றியும் பேசுவேன்.” என்றவர் திடீரென்று தெமானாவைப் பார்த்துக் கேட்டார், “தெமானா, உன் மனைவி மலேபா ஒழுக்கமானவள்தானா?”

“எனக்குத் தெரியாது.” தெமானா அமைதியான முகத்துடன் சொன்னான்.

“ஆஹ்… உன்னால் சொல்ல முடியாது. இந்தக்காலத்தில் யாரால் சொல்லமுடியும்? என்றாவது அவளுக்கு ஐந்து டாலர் அபராதம் விதிக்கப்பட்டால் அன்று உனக்குத் தெரியவரும். என்னுடைய காலத்தில் திருமணமான ஒருத்தி நடத்தை தவறிவிட்டால் சுழன்றடிக்கும் கழியோ பாய்ந்துவரும் ஈட்டியோ அவள் உயிரைப் பறித்துவிடும். அதனாலேயே அந்தக்காலத்தில் மனைவிகள் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தனர். இப்போதோ அவர்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை. எத்தனைமுறை வேண்டுமானாலும் ஐந்து டாலர் அபராதம் செலுத்திவிடுகிறார்கள். அதையும் அவர்களுடைய கணவன்மார்களே செலுத்துகிறார்கள் என்பதுதான் வேடிக்கை.  அதை விடவும் வேடிக்கை, ஒருவன் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவன், அவனுடைய மனைவி, பழி சுமத்தப்பட்டவன் மூவருமாக சாலைப்பணிகளுக்குப் பணிக்கப்படுகிறார்கள். அவர்கள் மூவரும் துளியும் வெட்கமில்லாமல் நண்பர்களைப் போல ஒன்றாக உணவுண்டு, ஒன்றாக குடிக்கிறார்கள், இரவு நேரங்களில் ஒன்றாக பாட்டுப் பாடுகிறார்கள்.”

“மனிதர்கள் தவறு செய்யும்போது தண்டிக்கப்படத்தான் வேண்டும், பக்கியா.” நான் சுரத்தில்லாமல் சொன்னேன்.

“ஐந்து டாலர் என்பது ஒரு பெண்ணுக்கு எம்மாத்திரம்? அவள் தாண்டமுடியாத அளவுக்கு உயரமான குத்தீட்டிகளால் எழுப்பப்பட்ட வேலியா அது? ஒருவனிடம் ஐம்பது டாலர் இருப்பது அவன் மனைவிக்குத் தெரியுமானால், அவள் தன் காதலனிடம் சொல்லி பத்துமுறை அவளை சந்திக்கவைப்பாளே..”

சில நிமிடங்களுக்கு அந்த முதியவர் எதுவும் பேசாமல் அமைதியாகப் புகைத்துக்கொண்டிருந்தார். பிறகு மறுபடியும் நிலவைச் சுட்டி தலையசைத்து சிரித்தார்.

“ஆஹா… என்ன அழகான நிலவு. நான் மீண்டும் இளமைக்குத் திரும்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்னுடைய இளமைக்காலத்தில் இதுபோன்ற நிலவுப்பொழுதுகளில் அனைத்து இளைஞர்களும் இளம்பெண்களும் கடற்பாறைகளுக்கிடையில் மீன்பிடிக்கப்போவோம். நாளை புனித தினம் என்பதால் நாளை யாரும் தூண்டிலெடுத்துக்கொண்டோ படகு வலித்துக்கொண்டோ கடலுக்குப் போகக்கூடாது. இன்றிரவும் நள்ளிரவுக்கு மேலே கடலில் இருக்கக்கூடாது. அப்படி இருந்துவிட்டால் அவன் ஜென்ம ஜென்மமாய் நரகத்தீயில்தான் உழல்வான்.”

“அவற்றையெல்லாம் விட்டுத்தள்ளுங்க பக்கியா. நீங்கள் சிலிக்கும் பெருவுக்கும் இடையில் நடந்த போரில் பங்கேற்றதாகச் சொன்னீர்களே… அதைப்பற்றி சொல்லுங்க அல்லது திமிங்கலவேட்டைக் கப்பலில் பயணித்தீர்களே அதைப்பற்றி சொல்லுங்க.”

அவருடைய கண்கள் பிரகாசித்தன. “ஆம். அந்த நாட்கள் அற்புதமானவை. திமிங்கலவேட்டைக் கப்பலில் இரண்டுமுறை பயணித்திருக்கிறேன். பனிமலைகளுக்கு நடுவில் தெற்கு நோக்கிய நெடும்பயணம். காற்றின் வீச்சு கத்தி வீசுவதைப் போல் இருக்கும். கடல் கன்னங்கரேலென்று இருக்கும். ஸ்ஸ்ஸ்… அப்பா… குளிர்.. குளிரென்றால் கடுங்குளிர். பழுக்கக் காய்ச்சிய இரும்பு உடலுக்குள் ஊடுருவதைப் போன்றதொரு குளிர். ஆனால் நான் நல்ல திடகாத்திரமாக இருந்தேன். நாங்கள் நிறைய திமிங்கலங்களைக் கொன்றோம். ஒரு பயணத்தில் நானொருவன் மட்டுமே பதிமூன்று திமிங்கலங்களைக் கொன்றிருக்கிறேன். இங்கே பார்.” அவர் தனது தளர்ந்த கரத்தை உயர்த்தி பெருமிதத்துடன் என்னைப் பார்த்தார்.

“இந்தக் கை அப்போது பலம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் இப்போது உணவை வாய்க்குக் கொண்டுசெல்லவும், ஊன்றுகோலைப் பிடிக்கவும்தான் உதவுகிறது.” இந்தக் கடைசி வரிகளைச் சொல்லும்போது மிகுந்த வாட்டத்துடனும் விரக்தியுடனும் சொன்னார்.

“அந்த கப்பலின் தலைவன் மிகவும் நல்லவன். அவன் எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்தான். ஒருமுறை நாங்கள் கடுங்குளிரான கடற்பகுதியை விட்டு டோங்கா தீவுகளுக்கிடையில் பயணிக்கும்போது ஒருநாள் ஒரு திமிங்கலத்தின் மீது நான் எறிந்த ஈட்டி குறிதவறிவிட்டது. ஆத்திரமுற்ற கப்பல் தலைவன் என்னை அடித்துவிட்டான். அன்றிரவு நான் கப்பலின் பக்கவாட்டின் வழியே நழுவி, கடலில் குதித்து ஐந்து கிலோமீட்டர் தூரம் நீந்தி ஏதோவொரு தீவில் கரையேறினேன். விடியும்வரை அடர்ந்த புதர்க்காட்டில் கிடந்தேன். பிறகு எழுந்து ஒரு வீட்டுக்குச் சென்று சாப்பிட ஏதாவது தருமாறு கேட்டேன். அவர்கள் எனக்கு சேனைக்கிழங்கும் மீனும் தந்தார்கள். நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் யாரோ பின்னாலிருந்து என் மீது பாய்ந்து என் கைகளையும் கால்களையும் கட்டினார்கள். நான் கப்பலுக்கு கொண்டுசெல்லப்பட்டேன். எங்கள் கப்பலின் தலைவன், அந்த டோங்கா தீவுவாசிகளுக்கு ஐம்பது டாலர்கள் கொடுத்து என்னை மீட்டிருக்கிறான் என்பது பிறகு தெரியவந்தது.”

“அவர் உங்கள் நன்மைக்காகத்தான் அவ்வளவு பணம் கொடுத்து மீட்டிருக்கிறார், பக்கியா.”

அவர் ஆமோதித்தார்.

“ஆமாம். ஏனென்றால் நான் மிகவும் நல்லவன், திறமைசாலி. அவன் கொடுத்த பணத்தை விடவும் அதிகமான விலைமதிப்புடையவன். கப்பலின் தலைவன் எனக்கு நண்பனாக இருந்ததால் கசையடியிலிருந்து தப்பித்தேன். நான் ஒரு அதிர்ஷ்டக்காரனாகவே இருந்தேன். எல்லாம் அம்பாய்னா என்ற இடத்துக்கு வரும் வரையிலும்தான். அங்குதான் எங்கள் கப்பல் தலைவன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துபோனான். நான் அங்கிருந்து மீண்டும் தப்பியோடி தலைமறைவானேன். இந்தமுறை பிடிபடவில்லை. கப்பல் புறப்பட்டுச் சென்றதும், நான் ஒரு வெள்ளைக்கார துரையிடம் வேலை பார்த்தேன். அவர் ஒரு பெருவணிகர். அவருக்கு மாளிகை போன்ற வீடும், ஏராளமான வேலைக்காரர்களும், பல காதலிகளும் இருந்தனர்.

அங்கு நான் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன். என் முதலாளி நல்லவர். என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். கூலியாக வாரம் ஒரு தங்கக்காசு கொடுத்தார். அந்த வீட்டின் வேலைக்காரப் பெண்களுள் லிசி என்பவள், என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினாள். மெல்ல மெல்லப் பேசவும் பழகவும் ஆரம்பித்தாள். நான் அவளுக்கு நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள் நான் என் முதலாளியிடம் சென்று, அந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்டேன். அவள் என்னிடம் விளையாட்டு காட்டுவதாகவும் அதைப் புரிந்துகொள்ளாத நான் ஒரு முட்டாள் என்றும் கூறி அவர் சிரித்தார். நான் அதை அவளிடம் சொன்னேன். என்னிடம் ஐம்பது தங்கக்காசுகள் இருந்தால் அவள் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக கையடித்துச் சொன்னாள். ஆனால்… நான் இதையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது, ஒரு பெண் ஆணை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறாள்! நானும் ஏமாற்றப்பட்டேன். எனக்குக் கிடைத்த ஒவ்வொரு தங்கக்காசையும் எனக்காக அவளிடமே கொடுத்துவைத்தேன்.

அந்த வீட்டில் ஹாரி என்றொரு இளைஞனும் இருந்தான். முதலாளி செல்லுமிடத்துக்கு வண்டியோட்டிச் செல்வதுதான் அவன் வேலை. சில சமயங்களில் அவன் அந்தப் பெண்ணிடம் பேசுவதையும் பிறகு என்னைப் பார்த்தவுடன் தவிர்ப்பதையும் கவனித்தேன். நானும் அவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவள் தந்திரசாலி. அவள் எப்போதும் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம், “பொறுமையாக இருங்கள், நம்மிடம் ஐம்பது தங்கக்காசுகள் சேரட்டும், அதன்பிறகு நாம் இங்கிருந்து எங்காவது சென்று திருமணம் செய்துகொள்வோம்,” என்பதுதான்.

 ஒருநாள் நான் புல்வெளியில் படுத்துக்கொண்டு புகைபிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஏதோ பேச்சு சத்தம் கேட்கவே கவனித்தேன். சற்று தூரத்தில் ஹாரியும் லிசியும் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் சத்தமாகப் பேசியதால் என்னால் நன்றாக கேட்க முடிந்தது. “அவன் சரியான முட்டாள்” அவள் சொல்லிவிட்டு சிரித்தாள். “இன்னும் ஒரு மாதத்தில் அவனுடைய ஐம்பதாவது தங்கக்காசைப் பெற்றுவிடுவேன். அதன்பின் நீயும் நானும் சத்தமில்லாமல் இடத்தைக் காலிசெய்துவிடுவோம். அந்த பச்சை குத்திய ஜந்துவை நினைத்தாலே உவ்வே….” அவள் சிரிப்பது எனக்குத் தெளிவாக கேட்டது. அவனும் சேர்ந்து சிரித்தான். பிறகு என் காதில் விழுந்துவிடப்போகிறது என்று அவளை எச்சரித்தான்.”

“அவள் ஒரு மோசமான பெண், பக்கியா” நான் சொல்லத் தொடங்கியதும் ‘பொறு’ என்பது போல் அவர் சாடையால் என்னைத் தடுத்தார்.

“நான் மெதுவாக வீட்டிற்குள் சென்று ஒரு கத்தியை எடுத்துவந்து காத்திருந்தேன். அந்த காரிருளிலும் என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. குறுகிய பாதையொன்றின் வழியே அவர்கள் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். நான் சடாரென்று குதித்து அந்த இளைஞனின் மார்பில் இரண்டு முறை கத்தியால் குத்தினேன். அவளைக் கொல்ல முடியாமல் போயிற்று. மூன்றாவது குத்தில் கத்தியின் பிடி முறிந்துவிட்டது. அவள் இருளில் தப்பி மறைந்துவிட்டாள். என்னை முட்டாளாக்கியதோடு என்னுடைய நாற்பத்தாறு தங்கக்காசுகளையும் பறித்துக்கொண்டாள் என்பதால் நான் அவளையும் கொல்ல விரும்பினேன். ஆனால் நடக்கவில்லை. அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தேன்.

என்னுடைய முதலாளியின் வீட்டுக்கும் கடற்கரைக்கும் நடுவில் அடர்ந்த காடு இருந்தது. ஓடினேன், ஓடினேன்… தண்ணீர் கால்களுக்குத் தட்டுப்படும் வரையில் ஓடினேன். துறைமுகத்தில் வெகு அருகில் கப்பல்கள் நிற்பதைப் பார்க்க முடிந்தது. நீந்திச்சென்று எவரும் அறியாமல் ஒரு கப்பல் தளத்தில் ஒளிந்துகொண்டேன். கடலோடிகள் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. பின்பக்கத்தில் ஒரு படகை இழுத்துக்கொண்டு இரட்டைப்பாய்மரக் கப்பலொன்று புறப்பட்டு மெதுவாக கடந்துபோனது. நான் அதிக சத்தமெழுப்பாமல் நீந்தி அந்தப் படகை அடைந்தேன். விடியும் வரை அதிலேயே படுத்துக்கிடந்தேன். அப்போது காற்று குறைவாக இருந்ததால் கப்பல் வேகமாகப் போகவில்லை. நான் சட்டென்று தண்ணீரில் குதித்து படகின் பக்கவாட்டில் தொத்திக்கொண்டு என்னைக் காப்பாற்றுமாறு உதவி கோரி உரத்த குரலில் கத்தினேன்.

நான் கப்பலுக்குக் கொண்டுவரப்பட்டு உணவும் காஃபியும் கொடுக்கப்பட்டேன். நான் வேறொரு கப்பலிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகவும் பலமணி நேரங்களாக நீந்திக் கொண்டிருந்ததாகவும் சொன்னேன். கப்பல் தலைவன் மட்டுமே ஓரளவு ஆங்கிலத்தில் பேசினான். மற்றவர்கள் இத்தாலிய மொழியில் பேசினார்கள். அது ஒரு இத்தாலியக் கப்பல்.

நான் அந்தக் கப்பலில் வெகுநாட்கள் இருந்தேன். முதலில் ரியோவுக்கு போனோம். பிறகு கலாலோ. ஆனால் அந்த கப்பல் தலைவன் எனக்கு ஒருபோதும் கூலி தரவேயில்லை. அதனால் நான் அங்கிருந்து தப்பியோடினேன். ஊதியமில்லாத இடத்தில் ஒருவன் ஏன் உழைக்கவேண்டும்? அப்போது அமெரிக்க திமிங்கலவேட்டைக் கப்பல் கலாலோவுக்கு வந்தது. நான் அதில் தஞ்சம் புகுந்தேன். பலநாட்கள் பயணித்தும் திமிங்கலங்களைக் காணமுடியவில்லை. கப்பல் ஜுவான் ஃபெர்னான்டஸ் என்ற இடத்துக்கு வந்தபோது, நானும் பாப் என்பவனும் அங்கிருந்து தப்பியோடினோம். கப்பல் அங்கிருந்து புறப்படும்வரை காட்டுக்குள் பதுங்கியிருந்தோம். பிறகு அந்த ஊரின் ஆளுநரிடம் சென்றோம். அவர் திமிங்கல வேட்டைக்கப்பல்கள் கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணியில் எங்களை ஈடுபடுத்தினார். அந்த தீவுக்கு நீ போயிருக்கிறாயா?”

“இல்லை, ஆனால் அது ஒரு அழகான தீவென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“ஆமாம். பச்சைப்பசேலென்ற காடுகளும் சுவையான நீர்நிலைகளும் கொண்ட மிகவும் அழகான தீவு. மாலை முதல் விடிகாலை வரை நீலப்புறாக்கள் இசைத்துக்கொண்டிருக்கும். காட்டு ஆடுகள் பாறை பாறையாகத் தவ்விக்கொண்டிருக்கும்.”

“அங்கே நிறைய நாட்கள் தங்கியிருந்தீர்களா, பக்கியா?”

அவர் எதையோ யோசித்தபடி தன்னுடைய வெண்தாடியை நீவிக்கொண்டார். “ம்… ஒரு வருஷம்.. இரண்டு வருஷம் இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. காலம் ஓடிக்கொண்டேதான் இருக்கும். இளைஞனாய் இருக்கும்போது கால ஓட்டம் கவனத்துக்கு வருவதே இல்லை. அப்போது ஒரு கப்பல், வேலைக்கு ஆட்களைத் தேட, நான் அதில் சேர்ந்து பயணித்து நியூஸிலாந்து போனேன். அதுவும் ஒரு அழகான நாடு. அந்த நாட்டின் மக்களும் எங்களைப் போலவே பழுப்பு நிறத்தில் இருந்தார்கள். அவர்களுடைய மொழியும் எங்களுடைய மொழியை ஒத்து இருந்ததால் எளிதில் கற்றுக்கொண்டேன். நான் பெரும்பாலான நாட்கள் அந்தக் கப்பலில்தான் இருந்தேன். நியூஸிலாந்து மண்ணின் சொந்த மைந்தர்களான மாவோரிகள் வெட்டிக்கொண்டுவந்து கப்பலில் ஏற்றும் அந்நாட்டின் கவுரி மரக் கட்டைகளை சிட்னியில் சேர்ப்பது எங்கள் வேலை. அந்தக் கப்பல் மிகவும் அருமையான கப்பல் என்றாலும் எங்களுக்கு கூலியென்று எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் ஒருவனால் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம், எவ்வளவு புகைக்க முடியுமோ அவ்வளவு புகைக்கலாம், அந்தக் கப்பலிலேயே வசித்த இளம் மாவோரிப் பெண்ணொருத்தியையும் அனுபவிக்கலாம்.

ஒருமுறை கப்பல் நங்கூரமிட்டிருக்கும்பொழுது சில மாவோரிகள் அதைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட, பத்துக்கும் மேற்பட்டோரை சுட்டுத்தள்ளினோம். பிறகு நாங்கள் புறப்பட்டு சிட்னி போய்ச்சேர்ந்தோம். அங்கு நான் கைது செய்யப்பட்டு பல வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.”

“எதற்காக?”

“எனக்குத் தெரியவில்லை. இதற்குமுன் சிட்னி வந்திருந்தபோது எங்கள் கப்பல் தலைவன் செய்த செயலொன்று காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். சிட்னியின் ஆளுநர் கைது செய்து வைத்திருந்த இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் அவன் தப்பிக்கவைத்து  அழைத்துக்கொண்டுபோய் ஜுவான் ஃபெர்னான்டஸில் விட்டுவிட்டான்.  ஆனால் சிட்னியின் ஆளுநர் என்னிடம் நல்லவிதமாகவே நடந்துகொண்டார். நான் அவருக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டேன். அந்த தீவுகள் பற்றிய பல கேள்விகளை என்னிடம் கேட்டார். முடிவில் எனக்கு சில வெள்ளிக்காசுகளைத் தந்தார். மறுநாள் தஹிதி செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டேன். சரி, இப்போது என் நாக்கு கட்டுப்பாட்டில் இல்லை. கள்ளால் வயிறு நிறைந்துவிட்டது. மிதமிஞ்சிப் போனால், கள்ளை வெறுக்க ஆரம்பித்து உன் நட்பையும் இழந்துவிடுவேனோ என்று பயமாக உள்ளது.”

“இல்லை, பெரியவரே. அப்படியெல்லாம் கவலைப்படாதீங்க. காலைவரை இங்கேயே எங்களுடன் படுத்துறங்குங்க. தெமானா வீட்டுக்குப் போய் உங்களுக்கு ஒரு போர்வை கொண்டுவருவான்.”

“ஆஹா… இந்தக் கிழவனிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறாய். விடியும் வரை இங்கேயே இருக்கிறேன். உன்னைப் போல் ஒரு நண்பன் கிடைத்தது எனக்கு எவ்வளவு நன்றாயிருக்கிறது. உனக்கு சலிப்பு ஏற்படுகிறதோ, இல்லையோ, நான் சிலிக்குப் போன கதையையும் ஆங்கிலேய கப்பல் தலைவனுடன் சேர்ந்து நானும் போருக்குப் போன கதையையும் அவன் காதலித்தப் பெண்ணைப் பற்றியும், ஒரு தேவாலயத்தில் இருந்த இரண்டாயிரம் பெண்களை எரித்த கொடுந்தீயைப் பற்றியும் நாளை நான் உன்னிடம் சொல்வேன்.”

“என்ன? இரண்டாயிரம் பெண்களா?” நம்பமுடியாமல் கேட்டான் தெமானா.

“ஏய்… பயலே, நான் என்ன குடித்துவிட்டு உளறுகிறேன் என்று நினைக்கிறாயா? போ, போய் உன் பெண்டாட்டியைக் கவனி. உன்னைப் போன்ற அறிவிலிக்கு இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் எப்படிப் புரியும்?”

அவர் கோபத்தில் படபடத்தார்.

 “பெரியவரே. இவ்வளவு சடுதியில் கோபப்படாதீங்க. தெமானா உங்களை நம்பாமல் கேட்கவில்லை. இந்தாங்க போர்வை. படுத்துத் தூங்குங்க.”

அவர் எங்களைப் பார்த்து இயல்பாகச் சிரித்தார். பிறகு தன் முதிய உடலின் மேல் விழும் அதிகாலைப் பனித்துளிகளுக்கு போர்வையைக் கவசமாக்கி, விரைவிலேயே உறங்கிப்போனார்.

மூலக்கதை – Pakia

மூலக்கதை ஆசிரியர் – Louis Becke (1855 – 1913)

தமிழாக்கம் – கீதா மதிவாணன்-அவுஸ்திரேலியா

(Visited 103 times, 1 visits today)