பழைய நண்பர்கள்-சிறுகதை-மொழிபெயர்ப்பு-கீதா மதிவாணன்

கீதா மதிவாணன்பல வருடங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வரும் ஆவலோடும், அவருடைய வருகையால் பெரிதும் மகிழக்கூடிய யாரையோ அங்கே எதிர்பார்த்தும் அந்தப் புதியவர் அந்த தெருமுனைக் கடையினுள் பிரவேசித்தார். தனது முதுகுச்சுமையை சுவரையொட்டி பொறுமையாக இறக்கிவைத்தவர், முழங்கையை கல்லாவில் ஊன்றிக்கொண்டு, தாடியை நீவியபடி, கடைக்காரரைப் பார்த்து புதிராய் அகலப்புன்னகை பூத்தார். கடைக்காரரும் பதிலுக்கு மையமாய்ப் புன்னகைத்தார்.

“மதிய வணக்கம்!” என்றார் கடைக்காரர்.

புதியவரும் பதில் வணக்கம் வைத்தார். பிறகு எதுவும் பேசவில்லை.

“இந்த நாள் இனிய நாளாகட்டும்” என்றார் கடைக்காரர்.

புதியவரிடமிருந்து பதில் இல்லை.

“உங்களுக்கு என்ன வேண்டும்?” கடைக்காரர் கேட்டார்.

“உங்கள் வீட்டுக் கிழவரை சந்திக்க ஒருவன் வந்திருப்பதாக சொல்” என்றார்.

“கிழவரா.. யார்?”

“ஹேக்..தான் வேறு யார்? முதியவன் பென் ஹேக்.. அவன் இல்லையா?”

கடைக்காரர் புன்னகைத்தார்.

“இப்போது இந்தக் கடையின் முதலாளி ஹேக் இல்லை. நான்தான் இந்தக் கடையை நடத்திக்கொண்டிருக்கிறேன்.”

“அதெப்படி?”

“அவர் இந்தக் கடையை பத்துவருடங்களுக்கு முன்பு என்னிடம் விற்றுவிட்டார்.”

“ஓ.. அப்படியானால் அவனை ஊருக்குள் எங்காவது பார்க்க முயற்சிசெய்கிறேன்.”

“உங்களால் முடியாது. அவர் கடையை விற்றதுமே ஆஸ்திரேலியாவை விட்டுப் போய்விட்டார். இப்போது அவர் இறந்துவிட்டார் என்றும் தகவல்.”

“என்னது? பென் ஹேக் இறந்துவிட்டானா?”

“ஆமாம், இறந்துவிட்டார்.”

அந்த புதியவர் நம்பிக்கை அறுந்த நிலையில் காணப்பட்டார். மேசையில் கை ஊன்றியபடி முன்வாசலுக்கு வெளியே, தான் கடந்துவந்த பாதையை வெறித்துப் பார்த்திருந்தார்.

“எனக்கு அரை பவுண்டு ஆணிகள் கொடு” என்றவர், சுரத்திழந்த குரலில் கேட்டார், “ஹேக்கின் மகன் ஊரில்தானே இருக்கிறான்?”

“இல்லையில்லை.. மொத்தக் குடும்பமுமே போய்விட்டது. மகன்களில் ஒருத்தன் மட்டும் சிட்னியில் இருக்கிறான் என்று நினைக்கிறேன்.”

“மெக்லாக்லென்ஸ் தம்பதியினர் ஊரில்தானே இருக்கிறார்கள்?”

“இல்லை.. அவர்களும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பே அந்த வயதான தம்பதியர் இறந்துவிட்டார்கள். மகன்கள் குவீன்ஸ்லாந்தில் என்று நினைக்கிறேன். மகள்கள் இருவரும் திருமணமாகி சிட்னியில் வசிக்கிறார்கள்.”

“ஓ.. நல்லது. இப்போது ஊருக்கு ரயில் வர ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறதே..”

“ஆமாம். ஆறு வருடங்களாகிறது.”

“காலம் நிறைய மாற்றிவிட்டது.”

“ஆமாம்.”

“முதியவன் ஜிம்மி நோலெட் எங்கிருக்கிறான் என்று சொல்லமுடியுமா?”

“ஜிம்மி நோலெட்டா.. ஜிம்மி நோலெட்… இந்தப் பெயரை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே.. யார் அவர்?”

“அவன் ஒரு மாட்டு வண்டியோட்டி. ரயில்பாதை வருவதற்குமுன் மலைப்பகுதியிலிருந்து சாமான்களைக் கொண்டுவர அவன்தான் வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.”

“எல்லாம் நான் வருவதற்கு முன்பாக இருக்கலாம். இப்போது அந்தப் பெயருடையவர் யாரும் இங்கு இல்லை.”

“அப்படியானால் உனக்கு டக்கன் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”

“ஆங்.. அவர்களை எனக்குத் தெரியும். அந்த வீட்டுப் பெரியவர் இறந்துவிட்டார். அவர் குடும்பம் எங்கேயோ போய்விட்டது. எங்கே போனது என்று கடவுளுக்குதான் தெரியும். கடன்தொல்லையால் மகன்களுக்குப் பெரும் பிரச்சனை. சீரழிந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஊருக்குள் அவர்களுக்கு மோசமான பெயர்.”

“அவர்களா அப்படி? ஆனால் நல்ல மனதுக்காரர்கள்.. முக்கியமாக.. பெரியவர் மலாக்கி டக்கனும் அவரது மூத்த மகனும்.. சரி. எனக்கு இரண்டு பவுண்டு சர்க்கரை கொடு.”

“நீங்கள் இந்த ஊருக்கு வந்துபோய் வெகுகாலமாகிவிட்டது என்று நினைக்கிறேன்.”

“ஆம். பதினைந்து வருடங்கள்.”

“நிச்சயமாக இருக்கும்.”

“நான் விசாரிப்பவர்கள் யாரையும் உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.”

“இ..இல்லை… என்னால் அப்படி உறுதியாக சொல்லமுடியவில்லை.” கடைக்காரர் புன்னகைத்தபடி சொன்னார்.

“அப்படியானால் நல்லது. வைல்ட் குடும்பத்தார் இப்போதும் அதே இடத்தில்தானே வசிக்கிறார்கள்.. அவர்களைப் பார்த்துவிடுவேன்.”

“வைல்ட் குடும்பத்தாரா.. இல்லை.. அந்த பெரியவர் இறந்துவிட்டார்.”

“அவர் மகன் ஜிம்? ஜிம் எங்கே போனான்.. அவன்  இறந்துவிடவில்லைதானே?”

“இல்லையில்லை.. அவன் திருமணம் செய்துகொண்டு சிட்னியில் குடியமர்ந்துவிட்டான்.”

நெடிய அமைதிக்குப் பின் புதியவர் மெதுவாக தயங்கித் தயங்கிக் கேட்டார்.

“உனக்கு மேரியைத் தெரியும் என்று நினைக்கிறேன்.. வைல்டின் மகள் மேரி?”

“மேரியா?” கடைக்காரர் புன்னகைத்தபடி சொன்னார். “என் மனைவிதான் அவள். அவளைப் பார்க்க விரும்புகிறீர்களா?”

“வேண்டாம் வேண்டாம்.. அவளுக்கு என்னை நினைவிருக்காது.”

புதியவர் மறுத்துவிட்டு விடுவிடுவென முதுகுச்சுமையை இறக்கி வைத்திருந்த இடத்துக்குச் சென்று அதை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டார்.

“சரி.. நான் கிளம்புகிறேன்.”

“நீங்கள் கிறிஸ்மஸ் முடியும்வரை இந்த ஊரில் தங்குவீர்கள் என்று நினைத்தேன்.” கடைக்காரர் சொன்னார்.

“இல்லை.. என்னை இங்கே நிறுத்திவைக்க எதுவுமே இல்லை. நான் போயாகவேண்டும். நான் கிறிஸ்துமஸை என் பழைய நண்பர்களோடு கொண்டாடுவதற்காகத்தான் அவ்வளவு தொலைவிலிருந்து வந்தேன். வந்தபிறகுதான் தெரிகிறது அவர்கள் ஊரில் இல்லை.. அல்லது உலகத்திலேயே இல்லை என்பது. பழைய புதர்க்காட்டுப் பள்ளிக்கூடம் கொஞ்சம் கொஞ்சமாக தன் மூச்சை நிறுத்திக்கொண்டிருக்கிறது.”

அவர் கண்களில் புன்னகை ஒளிர்ந்தது. ஆனால் தாடிக்கிடையில் அவர் உதடுகளில் பிதுக்கம் தெரிந்தது.

“எல்லாமே மாறிவிட்டது. பழைய வீடுகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. ஆனால் பெயர்ப்பலகைகளும் வழிகாட்டுப் பலகைகளும் எழுத்துகள் மங்கி பெயிண்ட் உதிர்ந்துபோய் முன்பை விடவும் மோசமாக இருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன் நான், பென்ஹேக், ஜிம்மி நோலெட் என நாங்கள் எல்லோரும் சேர்ந்து போட்ட கம்பிவேலி இன்னமும் நின்றுகொண்டிருக்கிறது. நெடுங்காலத்துக்குப் பிறகு இப்போதுதான் வருகிறேன். எல்லாம் மாறிவிட்டது.. மக்களும் கூட.. சரி. நான் போயாக வேண்டும். என்னை பிடித்து நிறுத்த இங்கு எதுவுமே இல்லை. நான் என்னை இங்கிருந்து விடுவித்துக்கொண்டு என் வழியில் போயாகவேண்டும். இரவுநேரத்தில் பயணித்தால்தான் வெப்பம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.”

“ஆமாம். இன்று பகல்பொழுது நல்ல வெக்கையாக இருந்தது.”

“சரி.. நான் வருகிறேன். வாழ்க வளமுடன்.”

“இந்த நாள் இனிய நாளாகட்டும். கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.”

“ஆங்? என்ன? ஓ… ஆமாம் ஆமாம்.. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.”

“இந்த நாள் இனிய நாளாகட்டும்.”

பதிலில்லை. புதியவர் சோர்ந்தவராய் கண்முன்னால் விரிந்த நெடிய பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தார்.

மூலக்கதை (ஆங்கிலம்) – Drifted Back

மூலக்கதையாசிரியர் – Henry Lawson

கீதா மதிவாணன்

தமிழாக்கம் – கீதா மதிவாணன்-அவுஸ்திரேலியா 

கீதா மதிவாணன்

 682 total views,  1 views today

(Visited 155 times, 1 visits today)