வெடிகுண்டு நாய் -சிறுகதை-மொழிபெயர்ப்பு-கீதா மதிவாணன்

கீதா மதிவாணன்அந்த சுற்றுவட்டாரத்தில் தங்கப்படிகப் பாறைகள் இருக்கிறதென்று கேள்விப்பட்டிருந்த டேவ் ரீகன், ஜிம் பென்ட்லி, ஆண்டி பேஜ் மூவரும் ஆங்காங்கே சுரங்கப் பள்ளங்கள் அமைத்துத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். தங்கம் தரைக்குக்கீழே இருப்பது உறுதி என்றாலும் எவ்வளவு ஆழம் என்பதும் எந்தத் திசை என்பதும்தான் விடை தெரியா கேள்விகளாக இருந்தன. தோண்டுமிடமெல்லாம் கற்பாறைகள்தாம் அகப்பட்டன. சில இடங்களில் தண்ணீரைச் சேந்தி வெளியேற்ற வேண்டியிருந்தது.

அவர்கள் புராதான முறைப்படி கற்பாறைகளைத் தகர்க்க, வெடிமருந்தும் எரிதிரியும் பயன்படுத்தினார்கள். மொத்தமான காலிகோ அல்லது கான்வாஸ் துணியில் வெடிமருந்தைச் சுற்றி அதன் வாயைத் தைத்து முனையில் எரிதிரியை இணைத்து அவர்களாகவே வெடிகுண்டுகளைத் தயாரித்தார்கள். நீர்புகாதிருப்பதற்காக, வெடிகுண்டு உறையை, இளக்கப்பட்ட மிருகக்கொழுப்பில் நனைத்தெடுப்பார்கள். துளி ஈரம் இல்லாது நன்கு உலர்ந்த குழிக்குள் வெடிகுண்டை இறக்கி அத்துடன் மண்,  காய்ந்த களிமண் கட்டிகள், சிறு கற்கள் இவற்றை இட்டு இடித்து நிரப்புவார்கள். இறுதியாக திரியில் நெருப்பு வைத்துவிட்டு சுரங்கப்பள்ளத்தை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று அது வெடிக்கும்வரைக் காத்திருப்பார்கள். விளைவென்னவோ பெரும்பாலும் பெரிய பள்ளமாகவும் அரை பாரவண்டி அளவுக்கு பாறையின் உடைந்த பொருக்குகளுமாகத்தான் இருக்கும்.

ஜிம், ஆண்டி, டேவ் மூவரும் மீன்பிடிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தனர். ஓடையில் நன்னீர் ப்ரீம், காட், கெளுத்தி, டெய்லர் போன்று ஏராளமான மீன்கள் இருந்தன. ஆண்டிக்கு அவ்வப்போது கொறிப்பதற்கு ஏதாவது இருந்தால் போதும்.. மணிக்கணக்காக அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருப்பான். அவர்களுடைய தேவைக்குப் போக அதிகப்படியாக கிடைக்கும் மீன்களை கசாப்புக்காரரிடம் கொடுத்து மாற்றாக இறைச்சி பெற்றுக் கொள்வார்கள்.

இப்போது குளிர்காலமாகையால் மீன்கள் தூண்டில் இரையைத் தொடுவதே இல்லை. ஓடையிலும் நீர் குறைந்து ஆங்காங்கே சேற்றுக்குட்டைகளாக காட்சியளித்தது. ஒன்றிரண்டு வாளி தண்ணீரே உள்ள சிறிய குட்டைகள் முதல் ஆறேழு அடி ஆழமுள்ள கொஞ்சம் பெரிய குட்டைகள் வரை இருந்தன. அவர்கள் சிறிய குட்டைகளிலிருந்து சேற்றுநீரை இறைத்தும் பெரிய குட்டைகளைக் கலக்கி மீன்களை மேற்பரப்புக்கு வரவைத்தும் மீன்பிடித்தனர்.

 டேவுக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. “பெரிய குட்டை ஒன்றில் வெடிவைத்தால் மீன்கள் எல்லாம் வெளியில் வந்துகொட்டாதா, என்ன? முயற்சி செய்து பார்ப்போமா?” என்றான். எப்போதும் டேவ் யோசனை சொல்வான்.. ஆண்டி அதை செயல்படுத்துவான். தவறு நேர்ந்தாலோ, நண்பர்கள் கேலி செய்தாலோ பழியைத் தான் ஏற்றுக்கொள்வான். இம்முறையும் டேவின் யோசனையை செயல்படுத்தத் தொடங்கினான் ஆண்டி.

பாறைகளைத் தகர்க்கும் வெடிகுண்டைப் போல மூன்று மடங்கு பெரியதாக ஒன்றை தயார் செய்தான். வெடிமருந்தை வைத்து மேலே கனத்த காலிகோ துணியால் சுற்றினான். ஆறடி நீளமுள்ள திரியின் ஒருமுனையை வெடிமருந்துத் தூளில் முக்கியெடுத்து அதை வெடிகுண்டோடு இணைத்துக் கட்டினான். ஓடையின் ஆழம் வரை வெடிக்கச் செய்யத் தேவையான அளவு பெரியதாக இருப்பதாய் ஜிம் நம்பிக்கை தெரிவித்தான்.

வெடிகுண்டை திரியோடு இணைத்து தண்ணீருக்குள் போட்டு, திரியின் மறுமுனையில் ஏதாவது மிதவையை இணைத்துப் பற்றவைப்பதுதான் அவர்கள் திட்டம். வெடிகுண்டுக்குள் நீர்புகாதபடி அதை இளக்கிய தேன்மெழுகில் நனைத்தெடுத்தான். ‘இதை உடனே வெடிக்கவிடக்கூடாது. கொஞ்சநேரம் தண்ணீரில் அப்படியே போட்டுவைக்கவேண்டும். அப்போதுதான் மீன்கள் பயம் விட்டு விலகி பக்கத்தில் வரும்’ என்றான் டேவ். அப்படியானால் தண்ணீர் புகாமலிருக்க மேலும் பாதுகாப்பு செய்யவேண்டும்.

அவர்களிடமிருந்த ஒரு பழைய பாய்மரத்துணியிலிருந்துதான் தங்களுக்குத் தேவையான தண்ணீர்ப்பைகளை அவர்கள் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். டேவின் யோசனையின் பேரில் காலிகோ துணி சுற்றப்பட்ட வெடிகுண்டின் மேல் பாய்மரத்துணியின் துண்டொன்றையும் சுற்றினான் ஆண்டி. வெடிகுண்டின் சக்தியை அதிகரிக்க மொடமொடப்பான பழுப்பு நிறத்தாள்களை பட்டாசுகளில் ஒட்டுவது போல மேலும் மேலும் ஒட்டி கனத்தை அதிகரித்தான். வெயிலில் நன்கு காயவைத்த பிறகு, அழுத்தமான கான்வாஸ் துணியால் சுற்றி, நல்ல மொத்தமான தூண்டில் நரம்பினால் தைத்துமுடித்தான்.

டேவும் ஜிம்மும் அன்று காலையிலேயே சுரங்க வேலைக்கு சென்றுவிட்டிருந்தனர். டேவின் யோசனைகள் ஆக்கபூர்வமானவை என்றாலும் செயல்படுத்துகையில் பல உருப்படாமல் போய்விடுவதுண்டு. அதனால் இந்த முறை சந்தேகத்துக்கு இடமில்லாமல் அதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினான் ஆண்டி. மறுபடியும் கொஞ்சம் கான்வாஸ் துணியைப் பயன்படுத்தி அடுத்த அடுக்கினைத் தைத்தான். பிறகு அதை இளக்கப்பட்ட மிருகக்கொழுப்பில் முக்கியெடுத்தான். எதற்கும் இருக்கட்டும் என்று அதற்குமேல் வேலிகட்டும் கம்பியைச் சுற்றி மறுபடியும் மிருகக்கொழுப்பில் முக்கியெடுத்தான். எங்கேயாவது வைத்துவிட்டு பிறகு தேடக்கூடாதே என்ற நினைப்புடன் கூடாரத்தை இழுத்துக்கட்டிய ஆணியில் அதை முட்டுக்கொடுத்து நிறுத்திவைத்தான். நீளமாக இருந்த திரியை வெடிகுண்டைச் சுற்றி லேசாக சுற்றிவைத்தான்.

பிறகு கூடாரத்தை விட்டு சற்று தொலைவிலிருந்த கல்லடுப்பை நோக்கிச் சென்றான். அவர்களுடைய குளிர் மேலாடை ஒன்றில் சுற்றப்பட்டு உருளைக்கிழங்குகள் தகரக்குவளையில் வெந்துகொண்டிருந்தன. சில இறைச்சித் துண்டங்களையும் இரவுணவுக்குப் பொறிக்க நினைத்திருந்தான்.

அவர்களிடம் ஒரு பெரிய கருப்பு ரெட்ரீவர் நாய் இருந்தது. அதன் பெயர் டாமி. அதை இளவயது என்பதை விடவும், நன்கு வளர்ந்த குட்டி எனலாம். விளையாட்டுத்தனமும் தோழமையும் நிறைந்த  அது,  நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எப்போதும் அவர்களைச் சுற்றிச்சுற்றி வரும். அது வாஞ்சையுடன் கனத்த வாலைச் சுழற்றும்போதெல்லாம் சவுக்கால் அடிப்பது போல இருக்கும்.

தன்னுடைய அபத்தங்களை தானே மெச்சிக் கொள்வது போல டாமியின் முகம் எப்போதும் ஒருவித இளிப்புடன் இருக்கும். அதற்கு இந்த உலகம், வாழ்க்கை, அதன் இரண்டுகால் நண்பர்கள், அதன் உள்ளோடும் சிந்தனை அனைத்துமே ஒரு வேடிக்கை போல இருக்கவேண்டும். எந்தப் பொருளையும் கண்டுபிடித்து மீட்டுவிடும் குணம் அதற்குண்டு. குப்பையென்று ஆண்டி எறிவதையெல்லாம் அது மறுபடியும் கூடாரத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும்.

ஒருமுறை அவர்கள் வளர்த்த பூனை வெயில் தாங்காமல் இறந்துவிட்டது. ஆண்டி அதை கூடாரத்தினின்று வெகு தொலைவில் புதர்களுக்கு அப்பால் எங்கேயோ எறிந்திருந்தான். இறந்து ஒரு வாரம் அல்லது அதற்கு மேலும் கூட ஆகியிருக்கலாம். ஒரு நாள் விடியற்காலை டாமியின் கண்களுக்கு அகப்பட்டுவிட,  பூனையின் சடலத்தை கூடாரத்தின் நடுவில் கொண்டுவந்து போட்டுவிட்டது.

அவர்கள் குளிக்கச் செல்கையில் எல்லாம் டாமியின் அட்டகாசம் தாங்க முடியாது. அவர்கள் தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பது போல எண்ணி அவர்களைத் தண்ணீரிலிருந்து மீட்க பெரும்பிரயத்தனம் செய்யும். அவர்கள் குளத்தில் குதிக்கும்போது பின்னாலேயே தானும் குதிக்கும். அவர்களுடைய கைகளை வாயில் கவ்விக்கொண்டு அவர்களை கரைசேர்க்க முயலும். அவர்களுடைய ஆடையற்ற உடலில் நகங்களால் கீறும். அதனுடைய நல்ல மனமும் முட்டாள்தனமும் அவர்களுக்குப் பிடித்திருந்தாலும் சுகமான நீச்சல் வேளைகளைக் கெடுப்பதால் அதன்பின் அவர்கள் அதைக் கூடாரத்தில் சங்கிலியால் பிணைத்துவைத்த பிறகே நீச்சலுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

அன்று காலையிலிருந்தே டாமி, ஆண்டியின் வெடிகுண்டு தயாரிப்பை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. இடையிடையே தானும் அவனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று இடைஞ்சல் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால் மதியத்துக்கு மேல் கிளம்பி டேவையும் ஜிம்மையும் பார்க்கப் போய்விட்டு மாலை அவர்களோடு திரும்பிவந்தது.

தொலைவில் அவர்கள் வருவதைப் பார்த்ததும் ஆண்டி, இறைச்சித்துண்டங்களை பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைத்தான். இன்றைய சமையல் பொறுப்பு ஆண்டியினுடையது. டேவும் ஜிம்மும் உணவு தயாராகும்வரை அடுப்புக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருந்தார்கள். உணவு தயாராவதை வேடிக்கை பார்ப்பது அநாகரிகம் என்பதால் தயாராகும்வரை அல்லது தயாராகிவிட்டது என்று அறிவிக்கும்வரை அடுப்பைப் பார்க்காமல் எதிர்த்திசை பார்த்திருப்பது புதர்க்காடுறை மனிதர்களின் வழக்கம்.

டாமி எதையோ தேடிக்கொண்டிருந்தது. ஆண்டியின் நினைப்பெல்லாம் வெடிகுண்டு தயாரிப்பிலேயே இருந்தது. வேறு எப்படியெல்லாம் வெடிகுண்டை இன்னும் சிறப்பாகத் தயாரிக்க முடியும் என்ற யோசனையிலேயே இருந்தான். புதர்களுக்கிடையில் கிடந்த காலி மண்ணெண்ணெய் டின் அவன் கவனத்தைக் கவர்ந்தது. வெடிகுண்டை இதற்குள் வைத்து சுற்றிலும் களிமண், மணல், சிறுகற்கள் போன்றவற்றால் அடைத்து வெடிக்கச்செய்தால் வெடிசக்தி இன்னும் அதிகமாகலாம் என்று எண்ணினான். விஞ்ஞான அடிப்படையில் இது சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன் எண்ணத்தின் அடிப்படையில் இது சரியே என்று எண்ணினான்.

அடுத்ததாக காலியான வெல்லப்பாகு டின் ஆண்டியின் கண்களில் பட்டது. வெல்லப்பாகை ஊற்றுவதற்கு வசதியாக அந்த தகர டின்னின் கழுத்து ஒடுங்கி வாய் சிறியதாக இருந்தது. இதைவிடவும் பொருத்தமான வெடிகுண்டு உறை இருக்கமுடியாது என்று நினைத்தான் ஆண்டி.

இதற்குள் வெடிமருந்தை நிரப்பி அதன் கழுத்தில் திரியைப் பொருத்தி தக்கையால் அடைத்து பிறகு தேன்மெழுகில் முக்கியெடுத்தால் வெடிகுண்டு தயார்.

இந்த யோசனையை டேவிடம் சொல்வதற்காகத் திரும்பியவன், டேவ் அடுப்பைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்துத் துணுக்குற்றான். எண்ணெய் தெறிக்கும் சத்தம் கேட்டு இறைச்சி கருகுகிறதோ என்று நினைத்துப் பார்த்ததாக டேவ் விளக்கம் சொன்னான். இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் திரும்பிய ஜிம்மின் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. ஆண்டி அவர்கள் இருவரையும் விதிமீறலுக்காய் முறைத்துக் பார்த்துக்கொண்டிருந்தான்.

  திடீரென்று இருவரும், “ஆண்டி.. ஓடு.. ஓடு”  என்று கத்தினார்கள். ஆண்டி ஒன்றும் புரியாமல் விழித்தான். “டேய் முட்டாள்.. உன் பின்னால் பார்… ஓடு” என்று மறுபடியும் கத்திவிட்டு ஓடத் தொடங்கினார்கள்.

ஆண்டி மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு வெகு அருகில் டாமி வழக்கமான இளிப்போடு நின்றிருந்தது. அதன் வாயில் வெடிகுண்டு. அது அடுப்பைச் சுற்றிக்கொண்டு ஆண்டியிடம் வந்ததால் பின்னாலேயே தரையில் புரண்டுவந்த திரியில் நெருப்புப்பொறி பற்றியிருந்தது. திரியின் முனையைப் பிரித்து தீயை அணைக்க நினைத்தான். ஆனால் அதுவோ திரியில் நன்றாகப் பற்றி சடசடவெனப் பொறிய ஆரம்பித்துவிட்டது.

ஆண்டியின் கால்கள் நடுநடுங்கின. அவன் மூளை வேலைசெய்யுமுன்பே கால்கள் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டன. டேவையும் ஜிம்மையும் தொடர்ந்து ஆண்டியும் ஓடினான். அவனைத் தொடர்ந்து டாமியும் ஓடிவந்தது.

டேவ், ஜிம் இருவருமே நல்ல ஓட்டக்காரர்கள். இருவரிலும் ஜிம் அதிவேக ஓட்டக்காரனாக இருந்தான். ஆண்டி கனத்த உடம்புடன் சற்று மெதுவாக ஓடினாலும் வலுவுடன் நிற்காமல் ஓடினான். அவர்கள் விளையாடுவதாய் நினைத்த டாமி துள்ளிக் குதித்துக்கொண்டு ஆண்டியை குஷியோடு வளைத்தது. டேவும் ஜிம்மும் பின்னால் பார்த்துக் கத்தினார்கள், “முட்டாள் எங்கள் பின்னால் வராதே.. மடையா..” அவர்கள் என்ன சொன்னாலும், எப்படிப் போக்கு காட்டினாலும் ஆண்டி பொருட்படுத்தாமல் அவர்கள் பின்னாலேயே ஓடினான்.

அவர்கள் ஏன் இப்படி ஒருவர் பின்னால் ஒருவர் ஓடுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை, ஆனாலும் ஓடினார்கள். ஜிம்மின் பாதையிலேயே டேவ் ஓடினான். டேவைத் தொடர்ந்து ஆண்டி ஓடினான்.  டாமி ஆண்டியை வட்டமடித்தபடி கூடவே ஓடிவந்தது. அது ஓடும் வேகத்துக்கேற்ப வெடிகுண்டின் திரி, நாலாபுறமும் புரண்டு நெருப்புப்பொறி பறக்க புஸ்ஸென்று சீறியபடி குறைந்துகொண்டே வந்தது.

“டேய்.. என் பின்னால் வராதே” என்று டேவ் ஜிம்மைப் பார்த்து கத்தினான். டேவ் ஆண்டியைப் பார்த்துக் கத்தினான். ஆண்டி நாயைப் பார்த்து “சனியனே..வீட்டுக்குப் போ…” என்று கத்தினான். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. ஸ்தம்பித்திருந்த ஆண்டியின் மூளை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தது. அவன் ஓடிக்கொண்டே நாயை ஒரு எத்துவிட முயன்றான். அது சாமர்த்தியமாய் நழுவிவிட்டது. அவன் கையில் கிடைக்கும் கற்களையும் குச்சிகளையும் அதன் மேல் எறிந்துவிட்டு மறுபடி ஓடினான்.

டாமிக்கு தான் ஆண்டியின் விஷயத்தில் ஏதோ தவறு செய்கிறோம் என்று தோன்றவே, அது ஆண்டியை விட்டுவிட்டு டேவை வளைத்துக்கொண்டது.  வெடிகுண்டு வெடிக்க இன்னும் சற்று அவகாசமிருப்பதை உணர்ந்த டேவ், சமயோசிதமாய் யோசித்து நாயின் மேல் பாய்ந்து அதன் வாலைப் பற்றி, ஒரு சுழற்று சுழற்றி பெரும்பிரயத்தனத்துடன் அதன் வாயிலிருந்த வெடிகுண்டைப் பிடுங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலத்துடன் தொலைவில் எறிந்தான். அடுத்த நொடியே டாமி பாய்ந்துபோய் மறுபடியும் அதைக் கவ்விக்கொண்டு வந்தது.

டேவ் பெரும் உறுமலுடன் தன்னைத் திட்டுவதைப் பார்த்த டாமி, டேவை கோபமூட்டிவிட்டதாய் எண்ணி அவனைத் தவிர்த்து, முன்னால் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஜிம்மை நோக்கி ஓடியது. டாமி தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஜிம், பக்கத்திலிருந்த ஒரு மரத்தில் கோவாலாவைப் போல கிடுகிடுவென்று ஏறினான். இளமரம் என்பதால் தரையிலிருந்து பத்துப்பன்னிரண்டு அடிக்கு மேலே உயரம் போகமுடியவில்லை. பூனைக்குட்டியை வைப்பது போல டாமி, வெடிகுண்டை மிக பவ்யமாக மரத்தின் கீழே வைத்துவிட்டு மிகுந்த உற்சாகத்துடன் ஜிம்முக்கு நேர் கீழே குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்தது.

அந்தப் பெரிய நாய்க்குட்டி தங்களுடைய விளையாட்டில் தன் பங்கை சரியாகவே விளையாடியிருப்பதாகவும் கடைசியாக மாட்டிக்கொண்டவன் ஜிம் என்றும் எண்ணியது. விடுவிடுவென்று திரியில் பொறி பரவிக்கொண்டிருந்தது. ஜிம் இன்னும் கொஞ்சம் மேலே ஏறத்துவங்க, பாரம் தாங்காமல் மரக்கிளை வளைந்து முறிந்தது. கீழே குதித்த ஜிம் மறுபடி ஓடத்தொடங்கினான்.

டாமி மறுபடியும் வெடிகுண்டைக் கவ்விக்கொண்டு அவன் பின்னால் ஓடியது. ஜிம் சற்றும் யோசிக்காமல் கண்ணில் தென்பட்ட ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள் குதித்தான். சுமார் பத்தடி ஆழம் இருக்கும். நல்லவேளையாக உள்ளே களிமண்ணும் சேறுமாக இருந்ததால் அடிபடாமல் தப்பித்தான். நாய் பள்ளத்தின் ஓரத்தில் வந்து நின்று பெரும் இளிப்போடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. வாயில் கவ்வியிருக்கும் பொருளை இந்தப் பள்ளத்துக்குள் ஜிம்மின் மேல் போடுவதுதான் விளையாட்டின் உச்சம் என்று நினைத்ததுபோலும்.

“தூரப்போ.. டாமி.. தூரப்போ…” ஜிம் அலறினான்.

டாமி சுற்றுமுற்றும் பார்த்தது. டாமியின் பார்வையில் இப்போது முன்னால் ஓடிக்கொண்டிருந்த டேவ் மட்டுமே தெரிந்தான். இப்போது அது அவனைக் குறிவைத்து ஓடத் தொடங்கியது. ஆண்டி ஒரு மரக்கட்டைக்குப் பின்னால் குப்புறப்படுத்தபடி பதுங்கியிருந்தான். அந்தக் காட்சி, ரஷ்ய-துருக்கி போர்ச்சித்திரமொன்றில் துருக்கியர்கள் ஒரு புதிய ஏவுகணையைச் சுற்றி தரையில் குப்புறப்படுத்திருக்கும் காட்சியை நினைவுபடுத்தியது.

சுரங்கப்பகுதியிலிருந்து கொஞ்ச தொலைவில் ஓடைக்கரை ஓரமாக பிரதான சாலையில் கொட்டகை போன்ற சிறிய விடுதி இருந்தது. நம்பிக்கையிழந்த டேவ் வேறுவழியின்றி விடுதியுள் புகுந்தான். வராந்தாவிலும் உள்ளே மதுக்கூடத்திலும் புதர்க்காடுறை மனிதர்கள் ஏராளமானோர் இருந்தனர். டேவ் மதுக்கூடத்துக்குள் நுழைந்து முன்கதவைப் படீரென்று சாத்தினான். புதிராய்ப் பார்த்த விடுதியின் உரிமையாளரிடம் “என் நாய்… அந்த முட்டாள் ரெட்ரீவர்… எரியும் திரியோடு வெடிகுண்டை வாயில் கவ்வியிருக்கிறது” என்று திணறியபடி சொன்னான்.

முன்கதவு அடைக்கப்பட்டுவிட்டதை அறிந்த நாய், விடுதியைச் சுற்றிக்கொண்டு பின்பக்க வாயிலை அடைந்தது. வாயிலிருந்த வெடிகுண்டுத் திரியில் நெருப்புப்பொறி சடசடக்க, இளிப்போடு உள்ளே செல்லும் பாதையைப் பார்த்தபடி நின்றது. மக்கள் மதுக்கூடத்தை விட்டு தலைதெறிக்க வெளியே ஓடினர். டாமி ஓடுகிற ஒவ்வொருவர் பின்னாலும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது. அது வளரிளம்பருவத்தில் இருப்பதால் எல்லோருடனும் சிநேகம் பாராட்ட விரும்பியது. ஆட்கள் சுற்றிச்சுற்றி ஓடிவந்தார்கள். சிலர் குதிரைலாயத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.

விடுதியின் பின்புறம் சமைப்பதற்கும் துணிகளைத் துவைப்பதற்குமான தகரக்கொட்டகை இருந்தது. தரையோடு அல்லாமல் சற்று உயரமாக மரத்தூண்களின் மேலே அமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் சில பெண்கள் அப்போது துணி துவைக்கும் பணியிலிருந்தனர். டேவும் விடுதி உரிமையாளரும் பாய்ந்துசென்று அந்த அறையின் கதவை மூடினர். உரிமையாளர் அவனை “அடிமுட்டாள், எங்கேயாவது போய்த் தொலைய வேண்டியதுதானே, என்ன இழவுக்கு இங்கே வந்தே?” என்று ஏற்ற இறக்கங்களோடு வசைபாடினார்.

டாமி சமையலறைக்குக் கீழே மரத்தூண்களுக்கு இடையில் சென்றது. உள்ளே இருந்தவர்களுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த மரத்தூண்களுக்கு இடையில்தான் வெகுமூர்க்கமான வெறிபிடித்த மஞ்சள் நாய் ஒன்று வசித்துக்கொண்டிருந்தது. திருடுவதும், பறிப்பதும், கடிப்பதும், சண்டையிடுவதுமாக இருக்கும் அந்த நாயை சுட்டுக்கொல்லவோ, விஷம் வைத்துக் கொல்லவோ பல வருடங்களாகவே அங்கிருப்பவர்கள் முயற்சி செய்துவந்தனர்.

டாமிக்கு ஏற்கனவே இந்த நாயுடன் ஒரு மோசமான அனுபவம் இருப்பதால், சத்தமில்லாமல் இடத்தை விட்டு பின்னாலிருந்த மைதானத்தை நோக்கி ஓட்டமெடுத்தது. ஆனால் வாயிலிருந்த வெடிகுண்டை இன்னமும் இறுக்கிப் பிடித்திருந்தது. மைதானத்தின் பாதி தூரத்தைக் கடந்த நிலையில் மஞ்சள் நாய் டாமியை எட்டிப்பிடித்து தன் கூரிய பற்களை டாமியின் மேல் பதித்தது. டாமி பெரும் ஓலத்துடன் வெடிகுண்டை கீழே போட்டுவிட்டு நாலுகால் பாய்ச்சலில் புதர்க்காட்டுப் பக்கம் ஓடிப்போனது. வேலிவரை பின்னாலேயே துரத்திச் சென்ற மஞ்சள் நாய், அது விட்டுச்சென்ற பொருள் என்னவென்று பார்ப்பதற்காகத் திரும்பிவந்தது.

இந்த களேபரத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் ஆங்காங்கே பதுங்கிவாழும் திருட்டு நாய்கள், பயமில்லாது கங்காருக்களை வேட்டையாடும் வேட்டை நாய்கள், கலப்பின மந்தை நாய்கள், இரவு வேளைகளில் மனிதர்களை சத்தமின்றிப் பின்தொடர்ந்து புறங்காலைப் பதம் பார்த்துவிட்டு நொடியில் மறைந்துவிடும் பயங்கரமான கருப்பு நாய்கள் என சுமார் பத்துப்பன்னிரண்டு நாய்கள் குரைத்துக்கொண்டே வந்து எரியும் பண்டத்தைக் குழுமிக்கொண்டன. ஆனாலும் மஞ்சள் நாயை விட்டு எச்சரிக்கையுடன் சற்றுத் தொலைவிலேயே மரியாதையாக நின்றுகொண்டுவிட்டன. மூர்க்கனான மஞ்சள் நாய்க்கு ஏதேனும் உண்ணத்தகுந்த பொருள் கிடைத்திருக்கையில் அதன் அருகில் செல்வதென்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதற்கு சமம் என்பதை அனைத்து நாய்களுமே அறிந்திருந்தன. மஞ்சள் நாய் வெடிகுண்டை இரண்டுமுறை முகர்ந்துபார்த்தது. எச்சரிக்கையுணர்வு மேலிட மூன்றாவது முறை முகர முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.

வெடிகுண்டு டொம்மென்ற பெரும் சத்தத்துடனும் மிகுந்த வீரியத்துடனும் வெடித்தது. சமீபத்தில்தான் சிட்னியிலிருந்து அந்த புதிய வெடிமருந்தை டேவ் வாங்கி வந்திருந்தான். உறையும் மிக அருமையாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. வெறும் ஊசியும், கெட்டியான முறுக்குநூலும், கான்வாஸ் துணியும், கயிறும் கொண்டு வெறுங்கைகளால் மிகப் பொறுமையுடனும் கஷ்டப்பட்டும் ஆண்டி அதைத் தயாரித்திருந்தான்.

விடுதியின் சமையலறை, மரத்தூண்களிலிருந்து குதித்தெழும்பி மீண்டும் கீழே வந்ததாக பார்த்தவர்கள் சொன்னார்கள். புகையும் புழுதியும் அடங்கியபிறகு பார்த்தபோது, போக்கிரி மஞ்சள் நாய் வேலிக்கம்பத்தின் ஓரம் கிடந்தது. குதிரையொன்றால் நெருப்புக்குள் உதைத்துத் தள்ளிவிடப்பட்டு, அதன்பின் ஒரு வண்டி புழுதியில் புரட்டப்பட்டு, கடைசியாக தொலைவிலிருந்து வேலியோரத்தில் வீசியெறிந்ததைப் போல சேதமுற்றிருந்தது அதன் சடலம்.

வராந்தாவின் ஓரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த சேணம் பூட்டப்பட்ட குதிரைகள் பலவும் கடிவாளங்கள் காற்றில் பறக்க, புழுதியைக் கிளப்பிக்கொண்டு சாலையில் தறிகெட்டுப் பாய்ந்தோடின. நாய்கள் ஊளையிட்டபடி திசைக்கொன்றாய் தெறித்தோடின. முப்பது மைல்களுக்கப்பாலுள்ள தங்கள் பிறந்த ஊரை நோக்கி ஓட்டம்பிடித்த சில நாய்கள் அதன்பிறகு திரும்பிவரவே இல்லை. மற்றவை மாலைப்பொழுது வரை தலைகாட்டவில்லை. பிறகு ஒவ்வொன்றாக மெதுவாகத் திரும்பி வந்து எச்சரிக்கையோடு விசாரணைகளைத் தொடங்கின. ஒரு நாய், இரண்டு காலால் நடக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. பெரும்பாலானவை சிறிய அளவிலோ.. பெரிய அளவிலோ.. தீக்காயமுற்றிருந்தன.

அடர்வால் கொண்ட சிறிய நாயொன்றுக்கு பின்னங்கால்களுள் ஒன்றை மட்டும் பயன்படுத்தி குதித்து குதித்து நடக்கும் பழக்கம் இருந்தது. இதுவரை பயன்படுத்தாமல் பாதுகாத்துவைத்திருந்த அந்த மற்றொரு காலை எண்ணி மகிழ்ச்சி கொண்டது. ஏனெனில் இப்போது அதற்கு அந்த மற்றொரு காலைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டிருந்தது. பல வருடங்களாக அந்த விடுதியை அண்டிவாழ்ந்த வயதான ஒற்றைக்கண் நாய், வெடிமருந்து நாற்றம் தாங்காமல் ஓடி ஒளிந்தது. மஞ்சள் நாய் அசந்த நொடிப்பொழுதில் வெடிகுண்டைக் கவரமுனைந்த நாய் இதுதான். அதன் அதிர்ஷ்டம், ஒரு பக்கப் பார்வையில்லாக் காரணத்தால் வெடிகுண்டுக்குப் பதிலாக பக்கத்திலிருந்த சிறிய இரும்புக்குழாயைக் கவ்விக்கொண்டுவந்தது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். நடந்தவற்றைத் தன் ஒற்றைக்கண்ணாலும் காண விரும்பாத அந்நாய், புதர்க்காட்டுக்குள் ஓடிப்போய், இரவு முழுவதையும் அங்கேயே கழித்தது.

வெடிகுண்டு வெடித்து அரைமணி நேரம் இருக்கும். அமர்ந்தும், குனிந்தும், சுவரோடு ஒட்டிநின்றும், மண்ணில் கிடந்தும் என பலவாறாக உறைந்திருந்த புதர்க்காடுறை மனிதர்கள் சத்தமின்றி மெல்ல சிரிக்கத் தொடங்கினார்கள். அந்த விடுதியில் இருந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகள் பீதியோடு நடுங்கிக்கொண்டிருந்தனர். பணிப்பெண் ஒருத்தி கையில் தண்ணீர்ப் பாத்திரத்துடன் தடுமாறியபடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். மதுவிடுதியின் உரிமையாளர், மனைவியை இறுகப் பிடித்தபடி அவளது அலறல்களுக்கிடையில் “நிறுத்து மேரி, இல்லையென்றால் கழுத்தை நெறித்துவிடுவேன்” என்று  அதட்டிக்கொண்டிருந்தார்.

அமளியெல்லாம் அடங்கி, நிலைமை சீரானதும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தவனாய் டேவ், தங்கள் கூடாரத்துக்குத் திரும்பினான். எல்லாவற்றுக்கும் காரணமான டாமி என்கிற அந்தப் பெரிய முட்டாள் நாய், எச்சில் வழியும் வாயோடு அவனை எதிர்கொண்டு சாட்டை போன்ற வாலால் அவன் கால்களில் மாறிமாறி விளாசியது.  இன்றைய மாலைப்பொழுதை வெகு சந்தோஷமாக விளையாடிய திருப்தியோடும், சிவப்பு ஈறுகள் தெரிய அகன்ற இளிப்போடும் அவன் பின்னால் துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தது.

ஆண்டி, முன்னெச்சரிக்கையுடன் நாயை சங்கிலியால் பிணைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் இறைச்சியை இரவுணவுக்காக சமைக்கலானான். சுரங்கப்பள்ளத்துள் விழுந்துகிடக்கும் ஜிம்மை மீட்டுக்கொண்டு வருவதற்காக டேவ் போனான்.

இது நடந்து பல வருடங்களான பிறகும் கூட, அந்த வழியே செல்லும் புதர்க்காடுறை மனிதர்கள் டேவின் இருப்பிடத்தைக் கடக்கும்போதெல்லாம் நின்று, “என்ன டேவ், உன் மீன்பிடி வேலையெல்லாம் எப்படிப் போகிறது?” என்று கேட்காமல் போவதே இல்லை.

0000000000000000000

மூலக்கதை (ஆங்கிலம்) – The Loaded dog

மூலக்கதையாசிரியர் – Henry Lawson (1867 – 1922)

தமிழாக்கம் – கீதா மதிவாணன்

கீதா மதிவாணன்

(Visited 90 times, 1 visits today)