தேவ அபிராவின் கவிதைகள்-தேவஅபிரா

அடியறல்

தேவஅபிரா

உறைந்த நாள்கள்.

குளிர்கால அம்மணத்தில் விரிந்து கிடக்கிறது வனம்.

கோறையான வனத்தை மூடுகிறது மரங்களின் கோபம்.

வெட்டப்பட்ட பெருமரங்களின் அடிக்கட்டைகளின் இரணம் பாசி.

நிணம் மண்.

வெட்டி அடுக்கப்பட்ட வட்டவரிகள் முடிவற்றுச் சென்று கணப்படுப்புகளிற்  கனன்றெரிகின்றன.

நரம்புகளெனத் திரிந்த கிளைகள்,

முதிர்ந்த கிழவனின் பாதமென வெடித்த பட்டைகள்,

தனித்த ஓற்றையடிப்பாதையில் புயலுக்குப்பாறிக்கிடந்த மரத்தின்

இறுதி மூச்சை வாங்குகிறேன்.

மூன்றாம் நூற்றாண்டு ரோம சாம்ராச்சியத்தின் காவற் கோபுரத்தின் சிதிலங்கள் கிடைத்த காட்டு மேட்டில் அடங்கா முடியுடன் தனித்தொரு பைன்(Pine Tree) நிற்கிறாள்.

ரோமர்கள் வெட்டிப்பொட்டலாக்கிய காட்டு வெளியிற் புதைந்திருந்த விதையில் முளைத்தவள்.

வேரோட முடியா ஆக்கிரமிப்பு விழுந்தழிந்து உக்கலாக,உறிஞ்சி எழுத்தவள்.

பெயர்ந்தும் வனமானவள்.

நானோ பெயர்ந்து தனித்தவன்.

அம்மா! நெடுமரத்தி!!

வெப்பம் தா!

தேவ அபிரா

2018 மாசி

00000000000000000000000

முதுமையின் வேர்

இரவின் மீது பனியென்தாடி.

கிளர்ந்த நினைவுகளைக் கோதியது நிலவு.

தனித்த சாளரச்சேலைகளை அலைக்கழிக்கத் துணிந்தது  குளிர்காற்று.

முதிர்ந்த இல்லங்களின் முன்றலில் காலடித்தடங்களைப்பதிக்கக் குழந்தைகள் வருவதில்லை.

வெளியிறங்கி நடக்கிறேன்.

அனல் பறக்கும் குடாவிற் பிறந்த பிள்ளையைக் குளிர் என்ன செய்யும்.

காண்டாவனத்தில் எரிந்த நிலத்தின் புழுதியைச்  சோளகம் அள்ளிச்சென்ற நாளிற் பிறந்தேனென்பாள் அம்மா.

ஓர் நாள்

நீ ஆழக்கிணற்றின் அமிர்தம் பருகிய குழந்தையெடா என்றாள்.

வைன் அருந்திச் சிவந்த கிண்ணம்  அன்று விழுந்துடைந்தது.

வாழ்வின் சூட்டைத் தணிக்கும் குளிரே மது.

அம்மாவின் வார்த்தையோ சூடு.

அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறேன்

காலங்கள் கடந்த கோடையிரவிருளின் புலத்தில் ஒளிர்ந்த வசிட்டரையும் அருந்த்தியையும் ஒருநாள் என்னவளுக்குக் காட்டிய போது அவள் சொன்னாள்: கேட்டபோது காட்டவில்லை போகும் போது காட்டுகிறாய்.

கோடானு கோடி நட்சத்திரங்களுடன் ஒளிர்ந்த விசும்பும் இங்கில்லை எதனையிழந்தேன் எதனைப்பெற்றேன்.

இலையிழந்த லிண்ட மரங்களுக்கும் குத்தீட்டியாகச் சிலிர்த்து நின்ற பைன் மரங்களுக்குமிடையிற் பனியுள் எதிலோ தடக்கி விழுந்தேன்.

எங்கள் முற்றத்தில் நின்றதே வேம்பு அதன் வேராகத்தானிருக்க வேண்டும்.

தேவ அபிரா-ஆடி 2018-ஹொலண்ட்

தேவ அபிரா

 

(Visited 104 times, 1 visits today)